2.9.12

சில விழாக்கள்.

க.நா.சு.

சென்னையின் ம்யூஸிக் அகாதமியில் ”கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது” சிறந்த அறிமுக இயக்குனருக்காக வருடா வருடம் வழங்கப்படும் உருப்படியான நிகழ்ச்சி. போன வருடம் அழைப்பிருந்தும் போக முடியவில்லை. இந்தமுறை அழைப்பிதழை நண்பர் சிவகுமார் ஞாபகமாய் மறந்து  வீட்டிலேயே வைத்துவிட உள்ளே நுழைய கொல்லப்புடி சகோதரர்களின் சிபார்சை நாடவேண்டியிருந்தது.

கும்மிருட்டில் நான்கு பேரின் கால்களை நன்றாக மிதித்து தட்டுத் தடுமாறி தொப்பென்று ஓரிருக்கையில் அமர ”சாரி சார்! இந்த ரோ பூரா ரிசர்வ்டு சார்!” என்று ஒரு நண்பர் எல்லா இருக்கைகளிலும் ஒரு பறவை போல் பறந்து படுத்துக்கொள்ள, இருட்டில் அவர் முகத்தை உற்றுப்பார்க்க பற்கள் மட்டும் பளிச்சென்று மின்னலடித்தது. அவர் உபயோகிக்கும் பற்பசையில் உப்பு இருக்ககூடும் என்று நினைத்தபடியே முன்வரிசைக்கு நகர்ந்த என்னிடம் மேலும் சிலரின் கால்கள் மிதி வாங்கின. இந்திய இருக்கை வரிசைகளின் இடைவெளியை முதன் முதலில் வடிவமைத்த கலைஞனுக்கு ஒரு முத்தம்.

யார் வந்திருக்கிறார்கள்? யார் யாரெல்லாம் சென்னையின் சாலை நெருக்கடியில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலை கிஞ்சித்தும் இல்லாமல் சுந்தர்ஜி வந்தாச்சா? என்பதை மட்டும் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு நெற்றியடியாக ஆறு மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி விட்டார்கள்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பார்வதிக் குட்டனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ஆளினிகளும் வரிசையில் நின்று குருதக்ஷிணை கொடுத்துக் கற்றுக்கொள்ளலாம். அதிகப்படியான ஒப்பனைகள் எதுவுமின்றி தன் அறிவின் துணையுடன் அழகாய்த் தோற்றமளித்தார். சதாசர்வ காலமும் போலியாக சிணுங்கிக் கொண்டும், சிரித்துக்கொண்டும், எந்தத் தயாரிப்பும் இல்லாமல் உளறிக்கொட்டும் ஆளினிகள் அவரின் கம்பீரத்தையும், நினைவுத் திறனையும் கைகட்டித் தெரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த பதினான்கு வருடங்களாக கொல்லப்புடி விருது பெற்ற திரைப்படங்களையும், அவற்றின் இயக்குனர்களையும் எந்தக் குறிப்பும் இல்லாமல் அனாயாசமாக ஒரு தடங்கல் கூட இல்லாமல் சகட்டு மேனிக்கு ஒப்புவித்தார். அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. கட்டுண்ட பார்வையாளர்கள் கைதட்டிப் பாராட்டவே சிறிது நேரம் ஆனது. சுதாரித்துக்கொண்டு தட்டினார்கள்.

திடீரென்று மேடையில் மழை பெய்யப் போவது போன்ற தோற்றம். ஒரே புகை மண்டலமும், யார் யார் மேடையில் இருக்கிறார்கள் என்று தெரியாதபடி ஒளிக்குழப்பமும். அப்புறம் எல்லோரும் சேர்ந்து உச்சஸ்தாயியில் பிளிற மேடையைப் பிடித்துக்கொண்டார் 40 வயது சோனு நிகம்.

நம்ப மாட்டீர்கள். மாலை 6.15 முதல் இரவு 8 மணி வரைக்கும் இடைவெளியில்லாமல் ஒரே பாடகராக மேடையையும் ரசிகர்களையும் தன் வசீகரத்தால் கட்டிப்போட்டார். எனக்குள்ள சோட்டா அனுபவத்தில் இவ்வளவு நேரம் பாடிய ஒரே பாடகர் இந்தத் தலைமுறையில் சோனுதான்.

இளசுகளையும், பெரிசுகளையும் ஒன்றாகக் கவர்ந்து அந்தாக்ஷரி போல ஒரு நீள சரவெடியைக் கொளுத்தி விட்டார். இரண்டு கைகளையும் அக்குள் தெரியும்படிக்கு தலைக்கு மேல் உயர்த்தி இளசுகளும் பெரிசுகளும் வல இடமாக ஆடியது.பாடி முடிக்கும் வரை தன் இடப்பக்கமிருந்த சகல தண்ணீர் பாட்டில்களையும் குடித்துத் தீர்த்தார்.

பாடலுடன் ஆட்டமும் அற்புதமாக இணைய, பார்வையாளர்களுடன் சோனுவுக்கு -அதென்ன?-ம்.. நல்ல கெமிஸ்ட்ரி. ஒண்ணேமுக்கால் மணிநேரம் சளைக்காமல் சோனு நிகம் பாடி முடித்து டாட்டா சொன்னபின் அநேக வடமாநிலத்தவர்கள் கம்பி நீட்டிவிட அரங்கம் இளைத்துப் போனது.

                                                               மேல் விலாஸம்

விழாவில் பேச சிறப்பு விருந்தாளியாக ரிஷிகபூரும், ஏனைய பேச்சாளர்களாக ப்ரகாஷ்ராஜ், கௌதம் மேனன் மற்றும் விருது பெறும் இயக்குனர் மாதவ் ராமதாஸன் ஆகியோர்.  ரிஷி கபூர் ஆங்கிலமும், அங்கங்கே ஹிந்தியுமாக வெளிப்படையான பேச்சால் அரங்கத்தை மகிழ வைத்தார்.

பேசி முடிக்கும் வரை ”தன் மூக்குக் கண்ணாடியை அதிகம் கழற்றி மாட்டியவர்” விருதை ரிஷிக்குக் கொடுக்கலாம். கபூர் குடும்பத்திற்கும், நவ சினிமாவுக்குமான தொடர்பை அக்கு வேறு ஆணி வேறாக அவரால் கழற்ற முடியாததால், அவருக்குத் தெரிந்த பாணியில் கழற்றினார். கபூர்களின் உடல்வாகுக்கும், சாப்பாட்டின் மீதான அலாதியான காதலுக்கும் தன் இடுப்பே சாட்சியென போடியத்தை விட்டு விலகி இடுப்பைக்காட்டி ஆனந்தமளித்தார்.

                                                              மாதவ் ராமதாஸன்    

கிட்டத்தட்ட 23 அறிமுக இயக்குனர்களின் படங்களில் மலையாளத்தின் ”மேல் விலாஸம்” விருதை வென்றது. தமிழின் பார்த்திபன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோரும், மலையாளத்தின் அசோகன், சுரேஷ் கோபியும் நடித்திருக்கிறார்கள். ஒரு ராணுவ நிர்வாகத்தின் உட்புற அரசியலைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் படம். ஒரே அறையில் ஒரு வாரத்துக்குள் எடுத்து முடிக்கப்பட்ட படம். இதைப் பார்த்துவிட்டேன். தனியாக அதைப் பின்னால் எழுதுகிறேன்.

                                                       கொல்லப்புடி மாருதி ராவ்

எல்லோருக்கும் ஐந்து கிலோவுக்குச் சற்றும் குறையாத புத்தர் தலை- ஸாரி- சிலை அளிக்கப்பட்டது. ஏற்கெனவே என்னிடம் இதுமாதிரியான சிலைகள் அதிகம் இருப்பதால் வேண்டாம் ப்ளீஸ் என நாசூக்காக மறுத்துவிட்டேன்.

ஒரு மாறுதலுக்கு பாராட்டப் படவேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன.

தன் மகனை இழந்த வருத்தத்தை மறந்து, வருடா வருடம் அவர் பெய்ரில் நிறுவப்பட்ட விருதின் மூலம் ஒரு கொண்டாட்டமாக நினைவு கூறும் கொல்லப்புடி மாருதி ராவின் பண்பு. (கொல்லப்புடி மாருதி ராவும் ஒரு எழுத்தாளர்-நடிகர் என்று பன்முக குணச்சித்ரங்கள் கொண்ட ஒரு ஆளுமை.)

நிகழ்ச்சியைக் குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடித்த கனகச்சிதமான நிர்வாகம். பேசிய அத்தனை பேருமே ரத்னச் சுருக்கமாக சுவாரஸ்யமாகப் பேசியமை.

ரிஷிகபூர் பேசி முடித்த அடுத்த நிமிடம் அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசோடு அவரின் பேச்சு பதியப்பட்ட வீடியோத் தொகுப்பும் சுடச்சுட வழங்கப்பட்ட வேகம்.

ஒரு விழா எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸின் பெயரில் நிறுவப்பட்டு புதுமுக இயக்குனர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தஞ்சாவூரில் க.நா.சு.வின் ( இவர் யார் என்று கேட்கும் மாண்பு கொண்டவர்கள் இதை வாசிக்காவிட்டால் பரவாயில்லை. நகரவும்.அல்லது கூகுளில் தேடிப்படித்துவிட்டு வரவும்.) நூற்றாண்டு விழா ஸ்ரீ.பெஸண்ட் அரங்கத்தில் ஆகஸ்டில் நெருஞ்சி இலக்கிய முற்றத்தின் சார்பில் நடந்தது.

கந்தாடை நாராயணஸ்வாமி சுப்ரமண்யத்துடன் 1985 முதல் அவரின் மறைவு -1988- வரை பழகும் வாய்ப்பு ப்ரகாஷால் எனக்குக் கிடைத்தது. அவருடன் பழகிய காலத்திலேயே அவருடைய அசுர கணம், பொய்த்தேவு, அவரவர் பாடு, அவதூதர், கோதை சிரித்தாள், தாமஸ் வந்தார், பித்தப்பூ போன்ற நாவல்களை வாசித்திருந்தேன். ப்ரகாஷ் வெளியிட்ட “பித்தப்பூ” நாவலுக்காக தினந்தோறும் பித்தப்பூவின் நாவலை ஃப்ரூப் பார்த்துப் பார்த்து தூக்கத்திலும் க.நா.சு.வின் ஓமப்பொடி பிழிந்தது போன்ற எழுத்து என்னை மிரட்டியது

அப்போது ட்ரெடில் ப்ரெஸ். முதல் நாள் சரியாய் இருந்த சொற்கள் அடுத்த நாள் பிழையாய் மாறிவிடும். பெரிய சோகமான அனுபவம் பித்தப்பூவுக்காகக் கையில் காசில்லாத நிலைமையில் ப்ரகாஷ் அதை வெளியிட்டதும், எல்லோரும் அதை இன்று வரை கிண்டலடித்துப் பேசுவதும்.என் பிற மொழி இலக்கிய ஆர்வத்துக்கு அவர் மொழிபெயர்த்த எல்லா நாவல்களும் துணையாய் இருந்தன.குறிப்பாக மதகுரு, குறுகிய வழி மற்றும் பசி.

ஆல்பெர் காம்யுவின் ”தி கெஸ்ட்” சிறுகதையை அவர் மொழிபெய்ர்த்திருக்கிறார் என்பது தெரியாமலே நானும் மொழிபெயர்த்தேன். பின்பு அவரிடம் காட்டியபோது அதனால் பாதகமில்லை. நன்றாகவே மொழிபெயர்த்திருக்கிறாய் என்று பாராட்டினார். அவர் மைலாப்பூரில் டி.எஸ்.வி.கோயில் தெருவில் வாழ்ந்த இறுதி நாட்களில் அவர் வீட்டிற்குச் சென்று காண்பித்த கவிதைகளை நன்றாக இருப்பதாகக் கூறி ”முன்றில்” இதழில் ப்ரசுரித்தார்.

தஞ்சாவூருக்குக் கடைசியாய் காந்திக்ராம் பல்கலைக் கழகம் போய்விட்டு, தஞ்சாவூரில் ஏற்பாடு செய்திருந்த ”பித்தப்பூ” வெளியீட்டு விழாக் கூட்டத்தில்  பேசக் கொட்டும் மழையில் வந்திருந்தார். அவருக்காக லித்தோ ப்ரஸ்ஸில் அச்சடித்த பெரிய போஸ்டர்களை ஊர் முழுதும் ஒட்டி ஆர்ப்பாட்டமான விளம்பரம் கொடுத்திருந்தார் ப்ரகாஷ். தன்னால் இதை நம்ப முடியவில்லை என்றும், தன் மனைவியிடம் காட்ட ஒரு போஸ்டர் தரச் சொல்லியும் கேட்டார் க.நா.சு. அவர் கடைசி முறை தஞ்சைக்கு வந்த ஒரு கட்டுரையை நானும், ப்ரகாஷுடன் சேர்ந்து எழுதியது காவ்யா தமிழ் இரண்டாவது இதழில் வந்திருந்தது. அடுத்த ஒரு இடுகையில் தனியாக அதைப் பதிவிடுகிறேன்.

நினைவுகள் இன்னும் சுழல்கின்றன. அசோகா லாட்ஜில் இறுதியாய் நானும், தஞ்சாவூர்க்கவிராயரும் க.நா.சு.வை எடுத்த பேட்டிதான் அவர் அளித்த இறுதி பேட்டி. ஆனந்தவிகடனுக்கு இதை அனுப்புகிறோம் என்று சொன்ன போது அதை அவர்கள் ப்ரசுரிக்க மாட்டார்கள் என்றார் க.நா.சு. ஆனால் அது நாங்கள் கேட்ட கேள்விகளின் பாணியிலேயே சில வாரங்களுக்குத் தொடர்ந்து வேறு பல ப்ரபலங்களோடு பேட்டிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

க.நா.சு. வின் பேட்டியும் - அவரின் மறைவிற்குப் பின் அஞ்சலி செலுத்தும் வடிவத்தில் - நிறைய எடிட் செய்யப்பட்டு ப்ரசுரமானது. ஒரு விதத்தில் க.நா.சு சொன்னது போலவே அவர் உயிரோடு இருக்கும்போதே அந்தப் பேட்டி ப்ரசுரமாகாது போனது

க.நா.சு. பற்றி சுந்தரராமசாமி, மா.அரங்கநாதன் மற்றும் அவருடைய மாப்பிள்ளை பாரதிமணி ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் மிகவும் தரமானதும், சுவாரஸ்யமானவையும் கூட. கிடைத்தவரை சுட்டிகளை இங்கே இணைத்திருக்கிறேன்.மற்றவை கிடைக்க நேரும்போது.

 http://azhiyasudargal.blogspot.in/2012/03/blog-post_8372.html

http://balhanuman.wordpress.com/2011/01/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81-2/

http://balhanuman.wordpress.com/2011/09/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/

நான் ”க.நா.சு.வும், மொழிபெயர்ப்பும்” என்ற தலைப்பில் பேசும்படி அழைக்கப்ப்ட்டிருந்தேன்.விழாவில் அவரின் நட்பு கொண்டிருந்த எழுத்தாளர் காதம்பரி வெங்கட்ராமன், நாடகத்துறைப் பேராசிரியர் சே.ராமானுஜம், எழுத்தாளர்.நா.விச்வநாதன், தேநுகாவும் கலந்துகொண்டிருந்தனர். செல்லத்துரை வரவேற்றார். முன்னாள் அமைச்சரும், அதீத இலக்கிய ரசிகருமான சி.நா.மீ.உபயதுல்லா தன் சுகமின்மையையும் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியின் பெரும் நேரம் பங்கெடுத்துக்கொண்டார்.

நிகழ்ச்சியின் பெரிய குறை நேரம் கருதாமல் அவரவர் இஷ்டத்துக்குப் பேச்சாளர்கள் பேசியதுதான். ஒருவர் அரை மணி நேரம் என்றால் இன்னொருவர் ஒன்றரை மணி நேரம். மிகச் சிலரைத் தவிர அனைவரும் க.நா.சு.வுக்கு ஜாங்கிரி பிடிக்கும்.க.நா.சு மூக்குப்பொடி போட மாட்டார் என்ற ரீதியிலேயே பேசினார்கள். அவரின் கடும் உழைப்பில் உருவான நாவல்கள் பற்றியும், சிறுகதைகள் பற்றியும், அவரின் ரசனையில் பிறந்த பல்வேறு கட்டுரைகள் பற்றியும் வெகு சொற்பமாகவே பேசப்பட்டது.

க.நா.சு. தன்னுடன் பகிர்ந்து கொண்ட வெளியில் தெரியாத அபூர்வமான சில சம்பவங்களைச் சுவையாக காதம்பரி வெங்கட்ராமன் பேசினார். நானும் க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு உலகத்தின் பல்வேறு சாகசங்கள் பற்றியும் ஒரு வாரமாகக் குறிப்புகள் எடுத்தும், முடிவு செய்தபடி பேசமுடியாது போனது.

பேச அழைக்கப்பட்டவர்கள் தங்கள் நினைவுத் திறனை மட்டும் நம்பினால் போதாது. நிகழ்ச்சிக்கு முன்னால் தங்களைத் தயார் படுத்திக்கொண்டு வாசிக்க வேண்டும். தேவையானால் குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த விழா ஒரு உதாரணம். ஒரு பெரிய ஆளுமையுடன் தன்னை இணைத்துப் பேச எல்லோருக்கும் ஆசை இருப்பது தவறல்லதான். அதற்காக சகட்டுமேனிக்கு வரலாற்றை மாற்றி எழுத முயல்வது ஆபத்தானது மட்டுமல்ல. அவரது ஆளுமையின் மீதே ஒரு குழப்பத்தையும், அவநம்பிக்கையையும் உண்டாக்கிவிடும்.

க.நா.சு. பாரதிக்குப் பின்னால் கவிதை எழுதியவர்களில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர். அவரின் கவிதைகள் பற்றி முத்தமிழ்விரும்பி தக்க குறிப்புக்களுடன் பேசுவதற்கு இருந்தாலும், நேரமின்மையால் தகுந்த விதத்தில் பேசமுடியாது போனது.

1988ல் என் 23 வயதில் க.நா.சு.வின் அஞ்சலிக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு அவரது ”உயில்” கவிதையை வாசித்தேன். கரிச்சான்குஞ்சு, எம்.வி.வி, ஸ்வாமிநாத ஆத்ரேயன், டி.எஸ்.கோதண்டராமன், பேராசிரியர்.ராமானுஜம் ஆகியோரும் கலந்துகொண்ட கூட்டத்தைப் ப்ரகாஷ் ஏற்பாடு செய்திருந்தார்.

2012ல் என் 46வயதில் மறுபடியும் அதே ஊரில், அதே மேடையில் க.நா.சு.வின் நூற்றாண்டு விழாவில் பேச சாத்தியமானது எனக்குப் பெருமையளித்தாலும், என் ஆச்சர்யமெல்லாம் நல்ல எழுத்து காலங்களைக் கடந்து நிற்கும் என்பதற்கு மற்றுமொரு சமீபத்திய உதாரணம்- மறைந்து 24 வருடங்களானாலும் -க.நா.சு. என்பதுதான்.

நடு நடுவே க.நா.சு.வின் கவிதைகளை-உயில், எட்கர் ஆலன் போ-  கவிஜீவனும், சாந்தாராமும் வாசித்தார்கள். ஆறு மணிக்குத் துவங்க வேண்டிய நிகழ்ச்சி ஆறறைக்குத் துவங்கி இரவு பத்தேமுக்காலுக்கு முடிந்தது. மறுநாள் ரம்ஜான் ஆக இருந்தமையால் அன்றிரவு முழுவதும் தூங்காமல் க.நா.சு.வின் எழுத்துக்களைப் பற்றிப் பேச விடுபட்ட விஷயங்களைப் பேசித்தீர்த்து, விடிந்து போனதால் காஃபி பேலஸ் போய் காஃபி சாப்பிடக் கிளம்பினோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                                                                 பெருங்காய டப்பா

                        

8 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

மணிக்கொடிக்காரர் என்ற அளவில் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவருடைய எழுத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விவரமான கட்டுரை. நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்களைப் படிக்க முயற்சி செய்கிறேன்.

பொதுவாக ஒரு நபரைப் பற்றிப் பேசும் பொழுது (குறிப்பாக இலக்கிய ஒளிவட்டத்துக்குள் இருப்போர் பற்றி) நிறைய உழைக்க வேண்டும். படிக்க வேண்டும். சுயமாகவும் தெரிந்திருக்க வேண்டும். அதெல்லாம் சிரமம். ஜாங்கிரி பிடிக்கும் என்ற ரீதியில் பேசுவது சுலபம். ஓரளவுக்கு "மனித" கோணத்தில் பேசுவது போலவும் இருக்கும். ஜாங்கிரி பேச்சாளர்களே அதிகம் என்று தோணுது சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

தன் மகனை இழந்த வருத்தத்தை மறந்து, வருடா வருடம் அவர் பெய்ரில் நிறுவப்பட்ட விருதின் மூலம் ஒரு கொண்டாட்டமாக நினைவு கூறும் கொல்லப்புடி மாருதி ராவின் பண்பு. (கொல்லப்புடி மாருதி ராவும் ஒரு எழுத்தாளர்-நடிகர் என்று பன்முக குணச்சித்ரங்கள் கொண்ட ஒரு ஆளுமை.)

ஆஹா ..


விகடனில் ப்ரசுரமாகி, நாங்கள் கேட்ட கேள்விகளின் பாணியிலேயே சில வாரங்களுக்குத் தொடர்ந்து வேறு பல ப்ரபலங்களோடு பேட்டிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது விகடன்.

சபாஷ்..

மனம் விட்டு சிரிக்க முடிந்தது நிறைய இடங்களில்

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி-

மிக்க நன்றி.உங்களது இடுகையைப் படித்தேன்.

கூட்ட விவரணைகளுக்குத் தனி சாமர்த்தியம் வேண்டும்.
உங்களிடம் அது நிறைய உண்டு.
இரண்டு விழாக்கள் பற்றிய பதிவுகள் அருமை.

நன்றி

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி அவர்களே! மதுரை அழகப்பன் அரங்கத்தில் 70களின் ஆரம்பத்தில் வாசகர் வட்ட கூட்டத்தில் பேச க.நா.சு வந்திருந்தார். இடது சாரி எழுத்தாளர்களை கடுமையாக விமரிசிப்பார்! கூட்டமோ இடது சாரிகள் நடத்துவது. டாகடர் கனகசபாபதியிடம் க.நா.சு அவர்கள்வருவார்களா என்று கேட்டேன். :"கண்டிப்பாகவருவார்.அதுதானவருடைய சிறப்பு!" என்றார். வந்து பேசினார்! நவீன தமிழ் இலக்கியத்தை பிற இந்திய மொழி எழுத்தாளர்களூக்கு அறிமுகப்படுத்தியதில் அவரின் பங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்று! விழாக்களைப்பற்றிய உங்கள் இடுகை தூர தேசத்தில் இருக்கும் என்போன்ரவர்களூக்கு மிகவும் பயன் தரும் ஒன்று.---காஸ்யபன்

சே. குமார் சொன்னது…

அருமையான பகிர்வு ஜி.

பெருங்காய டப்பா சூப்பர்.

சக்தி சொன்னது…

கொல்லப்புடி விழா பற்றி இதுவரை படித்து வந்த வர்ணனைகளிலிருந்து
வித்யாசமான ரசிக்கும்படியான பதிவு.மாருதிராவ்காருவோடு சென்ற
ஆண்டின் சந்திப்பு என் மனதை நிறைத்த ஒன்று.விவரித்தால் சுந்தர்ஜி
க நா சு, மூக்குப்பொடி , ஜாங்கிரி...வகையறாவில் சேர்க்கும் அபாயம்
உள்ளதால் தவிர்க்கிறேன்,.விழா வர்ணனைக்கு இவ்வளவு முக்கியத்துவம்
தந்ததற்காக சிறப்பு நன்றி.கடைசி வரியில் குறிப்பிடப்படுவதே
பெரிய விஷயம்.(அனுபவம்)

கிருஷ்ணப்ரியா சொன்னது…

அன்பின் சுந்தர்ஜி,
அந்த விழாவுக்கு வந்து சூழல் காரணமாக வாசலோடு திரும்பிப் போனேன். உங்கள் பதிவு விழாவுக்கு வர முடியாத எனக்கு ஆறுதலைத் தந்தது...

சரி, கவிராயர் எப்படியிருக்கிறார்? என் அன்பான விசாரிப்புகளைக் கட்டாயம் சொல்லுங்கள் ஜி.

vasan சொன்னது…

அன்று, ந‌டேச‌ன் பூங்காவில் ... மீதான உங்க‌ள் கோப‌த்தின் (திரைந‌டிக‌ர்க‌ளுக்கு முக்கிய‌த்துவ‌ம்) உண்மைக் கார‌ண‌ம் புரிந்துவிட்ட‌து சுந்த‌ர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...