19.9.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம்- III - இசைக்கவி ரமணன்


முந்தைய இரு அத்யாயங்களின் இணைப்பு கீழே:

http://sundargprakash.blogspot.in/2012/09/blog-post_4.html

http://sundargprakash.blogspot.in/2012/09/ii.html

3.

கங்கைக் கரையில் நிற்கிறேன்.
தவத்தில் எழுந்த நெருப்பில் பிறந்த செந்தமிழ்க் கவிதை போலே,
கட்டறுந்து விரைகிறாள் கங்கை!
காணக்காண, உள்ளச் சிமிழ் உடைந்து
வெள்ளமென எண்ணங்கள் விம்மி வருகின்றன.

நதி, பெண்தான், ஐயமே இல்லை.
இந்த நளினமும்,
ஓயாமல் கறையைக் கழுவி,
ஒருவரின் நன்றிக்கும் காத்திராமல் விரையும் கருணையும்,
சுமையைச் சுவையாய்க் கருதும் தயையும்,
மாறிமாறித் தோற்றமளித்தும் மாறாத பேரழகும்,
இந்தப் பிரபஞ்சத்தில் பெண்ணைத் தவிர யாருக்குண்டு?

கங்கை என் தாய், என்னைக் கழுவும் போது.
என் தோழி, என் கால்களைக் கிசுகிசுத்தபடிப் பலப்பல வண்ணக் கதைகள் சொல்லும்போது.

குளியல் வேறு; முழுக்குப் போடுவது வேறு.
குளித்துவிட்டுத்தான் புனித நதிகளில் இறங்க வேண்டும்.
இறங்கி, பாவங்களுக்கு முழுக்குப் போடவேண்டும்.
கங்கை முக்திக்கு, வினை இடையூறாக வராமல் பார்த்துக்கொள்வாள். ‘கங்கையில் எத்தனை மீன்கள்! அவையும் முக்தி பெறுமோ?’ என்று வினவுகிறார் கபீர்தாஸ்.
பெறாதுதான்! முழுக்குப் போட்டால்தான் முக்தி!
“இனி, அறத்திலிருந்து சற்றும் பிறழேன். இந்த முடிவு இனிதே நிறைவேறத் துணைபுரிவாயாக” என்று முழுக்குப் போடவேண்டும்.
அப்போது, போனவினை போனவினையாய்ப் போகும்.

சரி, பாவம் எது?
ஊட்டிய கரத்தைக் கடிப்பது,
நாட்டை, தாய்மொழியை, அன்பு மனைவியை, அருமைக் குழந்தைகளைப் பழிப்பது,
கையில் பொருளிருக்கக் கைநீட்டிய ஏழைக்குக் கஞ்சி கூட வார்க்காமல் விரட்டுவது,
பொய்மை, திருட்டு, பொறாமை இவை போன்றவையே!
இவற்றுக்கு முழுக்குப் போட்டு, முழு மனிதனாய் எழுந்து
கரைக்கு வரக் கங்கை அற்புதமான வாய்ப்பு!

ஆ! கங்கை!

காலைக் கதிரொளியில் தங்கச் சரிகை விரிக்கிறாள்.
கரையருகே கைவீசுகிறாள்.
நடுவே, சிறகு முளைத்துப் பறக்கிறாள்.
பலப்பல மகத்தான நாகரிகங்களின் மலர்ச்சிக்குத் தோதாயிருந்தவள். மாமுனிவோர் தவம் சத்திய தரிசனங்களில் முடிந்து அற்புதக் கவிதைகளாக வெளிப்பட்ட போது காது குளிரக் கேட்டவள்.
சாம்ராஜ்யங்களின் சரிவுகளுக்குச் சாட்சியாய் இருந்தவள்.
சீதையின் பாதம் பட்டுச் சிலிர்த்தவள்.
இன்றும் நாட்டின் விளக்கைக் காத்துவரும் ஏழைகளின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு வணங்குகிறவள்.
மட மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டும் புனிதம் மாறாதவள்.

வானில் மந்தாகினியாய், வழியே ஜான்வியாய்,
பகீரதன் தவம் பலித்தபோது பாகீரதியாய்,
இதோ மலையை விட்டுச் சமவெளியில் புகும்போது
கங்கையாய்ப் பொங்கி வருகிறாள்.
நாம் காணும் நீருக்குக் கங்கையே மூலம்.

கரையோரம் கூடச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டுதான் குளிக்க வெண்டியுள்ளது.
அப்போதும் பறப்பது போல் உடலை விசைக்கிறது அவள் வேகம்.
என்னென்ன நம்பிக்கைகளுடன், எங்கெங்கிருந்து, எத்தனை எத்தனை மனிதர்கள்!
கங்கை, காதல் போல், காந்தம்.
அழகுக்கும் ஈர்ப்புக்கும் காரணமுண்டோ?
விளக்கத்தான் முடியுமோ? விலகத்தான் ஒண்ணுமோ?!

சின்னஞ்சிறிய சிறுமி, கையில் சிறு தட்டுடன் எதிரே நிற்கிறாள்.
என்னைச் சாய்வாகப் பார்த்து, ‘ திலகமிடவா?’ என்று இனிமையாகக் கேட்கிறாள்.
பதிலுக்குக் காத்திராமல் பிஞ்சு விரலால் சிந்தூரம் குழைத்து பற்றிய நெற்றி குளிரக் குளிர இடுகிறாள்.
லஹரியில், அவளது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.
அசையாமல் ஏற்கிறாள். நெகிழ்ந்து கிடந்தவனின் மீது ஒளிப்பார்வை வீசிவிட்டுக் கூட்டத்தில் மறைகிறாள்.

(தொடரும்)

1 கருத்து:

கீதமஞ்சரி சொன்னது…

வாசிக்கும்போதே சிலிர்க்கவைக்கும் அனுபவ வரிகள். உடலை விட்டு மனம் மட்டும் பறந்துபோய் இமயமலையின் அடிவாரத்தில் இறங்கிவிட்டதுபோன்றதொரு பரவச உணர்வு எழுகிறது.

படிப்பவரை ஆட்கொள்ளும் அழகுத் தமிழும் தாம் அனுபவித்துய்ந்த உணர்வுகளை அச்சிலேற்றவியன்ற ஆழ்ந்த புலமையும் கண்டு நெகிழ்வுற்றேன். தங்கள் முன்னுரை அழகு.

\\”இமயம்-அந்தரங்கத்தின் பகிரங்கம்” வாயிலாக ரமணனின் குரல் ஒலிக்கட்டுமே! நான் சொல்லவிடுபட்டதை அது சொல்லிவிடும்.\\

ஆம். சொல்லிக்கொண்டிருக்கிறது.


தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...