15.6.11

பாட்டி(க்கு) வைத்தியம்



இன்று காலை தஞ்சாவூர்க்கவிராயரோடு அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இன்று அதிகாலை எழுந்து எழுதிய ஒரு சிறுகதையைப் பற்றிச் சொன்னார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு நான் சொன்னேன் “இதை நீங்கள் எழுதியிராவிட்டால் நான் எழுதியிருப்பேன்” என.

பேச்சு தொடர்ந்தது. அது இந்த இடுகையானது.

1993ல் படுக்கையில் இருந்த என் பாட்டியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். என் மேல் அதீதமான ப்ரியம் எல்லாப் பாட்டிகளுக்கும் பேரன்கள் மேல் இருப்பதைப் போல். அவருக்கு கிட்டத்தட்ட எழுபது வயதாகிய வேளை.

வயதின் சுமை தாளாமல் கால் பின்னக் கீழே விழுந்தார். அதுதான் அவரின் கடைசி நடமாட்டம். அதன் பின் தான் இறந்துபோய்விடுவோம் என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமானது.

ஒரு காரடையான் நோன்பு முடியும் வரை காத்திருந்தார். அது முடிந்து என் அம்மா அவர் வாயில் நைவேத்யம் செய்யப்பட்ட கொழுக்கட்டையை ஊட்டிவிட்டு அதை ருசித்தபின்  ”நன்னாப் பண்ணியிருக்கே. தீர்க்க சுமங்கலியா இரு” என்று ஆசீர்வதித்துவிட்டு இறந்துபோனார்.

இப்போது போலெல்லாம் முணுக்கென்றால் டாக்டரிடம் ஓடும் பழக்கமும் கிடையாது. (இப்போதும் அப்படித்தான்).பாட்டி ஒரு நாளும் டாக்டரிடம் போனவர் இல்லை. எல்லாமே கைவைத்தியம்தான். ஒரு நாளும் உடம்பு முடியவில்லை என்று படுக்கிற ஜாதியும் இல்லை. ஆனாலும் கடைசி நாட்களில் பாட்டிக்கு வீட்டுக்கு டாக்டரை வரவழைத்து தன்னை அவர் பார்த்துவிட்டுச் சென்றால் மனசுக்கு கொஞ்சம் தேவலையாய் இருப்பதாய் உணர்ந்தார்..

பாட்டிக்குக் கண்ணும் தெரியாது. காதும் கேட்காது. இரவுகளில் பெருங்குரல் எடுத்து ராத்திரி 11 மணிக்கு மேல் தனக்கு என்னவோ செய்கிறது என்று ஆரம்பித்தால் அன்றைக்கு சிவராத்திரிதான். இது அடிக்கடி நடப்பது பழக்கமாகியிருந்தது.

ஒரு நாள் ராத்திரி நல்ல மழை. பாட்டியின் படுத்தல் ஆரம்பித்தது. கரண்ட் வேறு இல்லை. இன்வெர்ட்டர் வசதியெல்லாம் கிடையாது. லாந்தரின் அல்லது சுவாமிஅறை குத்துவிளக்கின் வெளிச்சம் வீடெங்கும் பரவியிருக்கும். அந்த வெளிச்சத்தில் பாட்டியை விட பாட்டியின் படுத்தலை விட அவரின் நிழல் சுவற்றில் ஆடுவது இடி மின்னலுக்கு நடுவில் பயங்கர பீதியைக் கிளப்பும்.

நான் படுக்கையறைக்குப் போய் என் அப்பாவின் தொளபுளா சட்டையைப் போட்டுக் கொண்டு பாட்டியை மெல்லத் தொட்டேன். சுருட்டி வாரி எழுந்து கொண்டு ”வாங்கோ டாக்டர்! ரொம்ப நேரமா என்னமோ பண்றது! மூச்சு விட முடியல. மாரெல்லாம் ஒரே வலி” என்று சொல்லிவிட்டு வந்திருப்பது டாக்டர்தானா என்று மேல்க்கோட்டின் உயரத்தைக் கையால் தொட்டுப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.

அதன் பின் கையில் எழுதிக்காட்டித்தான் வைத்தியம். நாடி பிடித்துப் பார்த்துவிட்டு ”எல்லாம் சரியாகிவிடும். மாத்திரை தருகிறேன்” என்று கையில் எழுதிக்காட்டிவிட்டு சமையலறையிலிருந்து ராத்திரி வேளையில் பாட்டிக்குக் கொடுக்கக் கூடாது என்று என் அம்மா மறைத்து வைத்திருக்கும் சூட பெப்பர்மிண்ட்டை (அதற்குப் பெயர் இப்போதைக்குப் போலோ) பாட்டியின் வாயில் மாத்திரை என்று சொல்லிப் போட்டதுதான் தெரியும். அவ்வளவுதான்! வியாதி பறந்துவிட்டது. ”என்னதான் அதிசய மாத்தரையோ? வலியெல்லாம் போன எடம் தெரியலை. நன்னாயிருக்கணும். நீங்க படுத்துக்கோங்கோ டாக்டர்” என்று தான் ஏதோ மருத்துவமனையில் இருக்கும் நினைவோடு அன்புக் கட்டளையிட்டார்.

அதற்குப் பின் திரும்பவும் என்னைக் கூப்பிட்டார்.”டாக்டர்! தப்பா எடுத்துக்காதீங்கோ. எனக்கு ரெண்டாவது பேத்தி ஒருத்தி இருக்கா. இன்னும் கல்யாணம் பணணலை. கவர்ன்மெண்ட் உத்தியோகம்.ஆனா கொஞ்சம் வாய் நீளம். நீங்க பண்ணிக்கறேளா? மெதுவா யோசிச்சுச் சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டுப் போர்த்திப் படுக்க காலை விடியும் வரை இடைஞ்சல் இல்லாத தூக்கம் எல்லோருக்கும்.

இது அடிக்கடி நிகழ அடிக்கடி சூட பெப்பர்மிண்ட் வழங்கப்பட்டு பாட்டி சொஸ்தமாயிருந்தார்.

தன் மரணத்துக்கு முந்தைய கடைசி ஒரு மாதமும் அடிக்கடி நினைவு தப்பியவராகவும் சம்பந்தாசம்பந்தமில்லாது எப்போதோ  நடந்தவற்றையும் சொல்லிப் புலம்பியபடியும் இருப்பார்.

“மேஸ்திரி வரலைன்னா எப்பிடி இன்னிக்கு வேலை நடக்கும்? மொதலாளிக்கு என்ன பதில் சொல்றது?”

”கிட்டக்கப் போகாதே. புலி அடிச்சுடும். சொன்னாக்கேளு”.

”பண்டரிபுரத்துல யாருக்கும் தெரியாம என்ன விட்டுட்டு வந்தா எனக்கென்ன வீட்டுக்கு வழி தெரியாதுன்னு நெனச்சியா?

இதெல்லாம் பாட்டியின் இறுதி நாட்களில் அடிக்கடி உதிர்த்த வாக்கியங்கள்.

ஒவ்வொரு நாளும் அநேகமாக இரவு ஒன்பது மணிக்கு-அவருக்கு நேரம் யாராவது சொன்னாலொழியத் தானாகத் தெரியாது-என்னைக் கூப்பிட்டு ”ஜன்னலைத் திறந்து வை. மசூதில தொழறாங்க. உனக்குக் கேட்கலயா?”என்று கேட்டபடியிருந்தார்.

காதுக்கும் கண்ணுக்கும் எட்டும் தொலைவில் மசூதியெதுவும் என் வீட்டருகே கிடையாது என்பதும்- என் இத்தனை நாள் பாட்டியின் வாயிலிருந்து மசூதி என்ற சொல் வந்து நான் கேட்டதில்லை என்பதும் தான் இந்த இடுகையின் கடைசி வரிகள்.

(பாட்டியின் படம் என் கணிணியின் கோப்பில் இல்லாததால் எல்லோருக்கும் பிடித்த கே.பி.சுந்தராம்பாளின் நிழற்படத்தைப் பொருத்தமின்றியும் பொருத்திவிட்டேன். பொறுத்தருள்க.)

18 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தங்கள் பாட்டிபற்றிய கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மிகுந்த அக்ஞானம் உள்ளவர்கள். அந்தக்கால சூடப்பப்ரமிட்டு எனக்கும் இப்போது ஞாபகம் வந்து விட்டது. உடனே சாப்பிடணும் போல ஆசையாக உள்ளது. ஆனால் கிடைக்காதே, என்னதான் போலோ சாப்பிட்டாலும் அந்தக்கால சூட பப்ரமிட்டு போல ஆகுமா?

நல்லதொரு சுவையான பதிவு, சார்.
பாராட்டுக்கள்.

மிருணா சொன்னது…

பெரும்பாலும் பெண்கள் அவர்களுடைய உடல் வலிகளை வெளியே காட்டிக் கொள்வதில்லை. பொறுத்துக் கொள்ள முடியும்வரை பேசாமல் இருந்துவிட்டு முற்றின பிறகு சொல்லும் இறுக்கமான சூழல். பாட்டியின் அழுத்திவைக்கப்பட்ட மன அழுத்தங்கள் எல்லாம் கடைசிக் காலங்களில் வெளிவந்தது போல் தோன்றுகிறது. நீங்கள் சமயோசிதமாகக் குடுத்த பெப்பெர்மின்ட் மனவியல் ரீதியாக அவரை ஆறுதல் படுத்தியிருக்கிறது. பாட்டியையும், அவர் போன்ற எண்ணற்றவர்களையும் நினைக்கும்போது வலியாக இருக்கிறது.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

பாட்டியுடனான தங்களின்
பரிபூர்ண பந்தத்தை
பதிந்த விதம் அருமை
அதே நேரத்தில் உங்களின்
சமயோசிதமான
செயலையும் நினைத்து
அதிசயித்து போனேன்
அண்ணா

G.M Balasubramaniam சொன்னது…

எவருக்கும் மரணத்தை எதிர் நோக்க பயம்தான்.அதிலும் டாக்டரிடமே போய் அறியாதவர் டாக்டரிடம் சிகிச்சை பெற விரும்பினார் என்றால் மிகவும் பயந்திருக்க வேண்டும். உங்கள் சமயோசித சிகிச்சை அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும்.சிகிச்சையை விட வேண்டியது அன்பும் பரிவும்தான். வயதானவர்களுக்கு வரும் அல்ஜிமர் என்ற நோயின் துவக்கமாயிருந்திருக்கலாம். கஷ்டப் படாமல் யாருக்கும் கஷ்டம் தராமல் போய்ச் சேருவது வேண்டப் பட வேண்டியதே.

G.M Balasubramaniam சொன்னது…

நான் எழுதிய ஒரு பின்னூட்டம் காணாமல் போய் விட்டதோ. அதுவும் ஒரு விதத்தில் நன்மைக்கே என நம்புகிறேன். படித்து மன உளைச்சலால் ஏதோ எழுதியிருந்தேன். உங்கள் பரிவும் பாசமும் சமயோசித சிகிச்சையும் பாராட்டத் தக்கது. நெகிழ்ச்சியான பதிவு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பாட்டியின் கதையை நீங்கள் சொல்லிய விதம் அருமை.... உங்களுக்குப் பாட்டி போல எனக்கு என் அம்மாவின் அத்தை... அவர்கள் என் நினைவில் என்றுமே நின்றிருப்பவர்.... அவர்களுக்கு இருந்த தைரியமும், தன்னம்பிக்கையும்... அப்பா சொல்லி மாளாது.....

எல் கே சொன்னது…

நெகிழ்ச்சியான பதிவு

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.

RVS சொன்னது…

பாட்டி! ஐ லவ் யூ!!! ;-))
நான் எப்போதும் பாட்டிகளின் பேரன். ;-))

ரிஷபன் சொன்னது…

”டாக்டர்! தப்பா எடுத்துக்காதீங்கோ. எனக்கு ரெண்டாவது பேத்தி ஒருத்தி இருக்கா. இன்னும் கல்யாணம் பணணலை. கவர்ன்மெண்ட் உத்தியோகம்.ஆனா கொஞ்சம் வாய் நீளம். நீங்க பண்ணிக்கறேளா? மெதுவா யோசிச்சுச் சொல்லுங்கோ”
பாட்டியின் துலாக்கோல் ஸ்மரணை தப்புகிற நேரங்களில் கூட சம ஸ்திதி.. கூடவே தலைவிக்கே உரிய டெசிஷன் மேகிங்!

Ramani சொன்னது…

நானும் என் பாட்டிக்கு தாத்தாவுக்கு
அவர்களது கடைசி நாட்களில்
இதுபோல் உடன் இருந்து பணிவடை
செய்திருக்கிறேன்
அந்த ஞாபகங்கள் தங்கள் பதிவைப் படிக்க
அதிகம் நினைவில் வந்து போனது
மனந் தொட்ட பதிவு

நிலாமகள் சொன்னது…

நிதான‌ம் கெட்ட‌ நேர‌த்திலும் டாக்ட‌ர் கோட்டின் நீள‌த்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட‌ நிதான‌ம் ...!!ரிஷ‌ப‌ன் சார் சொன்ன‌தும் மிக‌ச் ச‌ரி. அப்புற‌ம், அந்த‌ ம‌சூதிப் பேச்சு ம‌ர‌ண‌த் த‌றுவாயில் முன் ஜென்ம‌ வாச‌னையோ...! எங்க‌ம்மா பேச்சு நின்று உயிர் பிரியும் நேர‌ம் விள‌க்கேற்றி சாமி கும்பிடுங்க‌ என‌ சைகை செய்தாங்க‌. த‌மாஷாக‌ ப‌திவைக் கொண்டு சென்றிருந்தாலும் கிள‌ற‌ப்ப‌ட்ட‌ நினைவுக‌ளால் இற‌ந்த‌வ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளின் இருப்பின் இழ‌ப்பும் மீட்க‌ முடியாதென்ற‌ மென்சோக‌ம் க‌விகிற‌து ம‌ன‌செங்கும்

vidivelli சொன்னது…

நல்ல பதிவு.
நண்பா உங்க பக்கம் இதுதான் முதல் வருகை..
நல்ல பதிவு தொடர்ந்து வருவேன்


!!நம்ம பக்கமும் காத்திருக்கு உங்க வரவுக்காக!!

மோகன்ஜி சொன்னது…

பிரிய சுந்தர்ஜி !உங்கள் பாட்டிக்கு வைத்தியம் பண்ணின விவரம் சுவாரஸ்யமாய் இருந்தாலும், படித்துமுடித்த பின்னர், வயோதிகத்தின் இரக்கமில்லா பிடியின் இறுக்கத்தைப் பற்றின சிந்தனை சலனப் படுத்துகிறது. பாட்டியின் மசூதி பற்றின சுட்டல் நீங்கள ஆராய்ந்து ஒரு பதிவாய் வெளியிடல் வேண்டும்.

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

எனக்கு அன்பான பாட்டி ஞாபகம் இல்லை... அன்பான பாட்டி என்ற அறிமுகம் இல்லை. அம்மாவைப் பெற்றவள், அம்மா சிறுவயதாய் இருக்கும்போதெ இறந்துவிட்டதால், அம்மா சித்தியின் அச்சந்தரும் கருநிழலில் வளர்ந்தாள்.

எனக்கு மூணு நாலு வயது இருக்கும்போதே என் பாட்டிக்கு நினைவு தப்பிவிட்டது. அவள் எல்லா காரியங்களும் எனக்கு வெறுப்பாய் இருக்கும்... அல்லது அவள் அப்படி நடந்து கொள்வாள்... கருத்த பேரன் என்னை அவளுக்கு பிடிக்காது, தம்பி தான் ஒசத்தி அவனுக்கு... பாஸ்கர சேதுபதி ராஜா கணக்கா இருக்கான் என்பாள். அது எல்லாம் சேர்ந்து எனக்கு அவள் மேல் வெறுப்பு தான் வளர்ந்தது. அதைச் சரி செய்ய வீட்டில் யாருக்கும் போதுமான விஷயஞானம் அல்லது வேறு ஏதாவது ஒரு ஞானம் இல்லை.

பாட்டியின் மனச்சிக்கல்கள் எனக்கு புரிந்ததே இல்லை... குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும் அவளுக்கு எப்போதும் தவறுவதில்லை... நெத்தியில் திருச்சூர்னம் இட்டுக் கொண்டு, குளிர்மாமலை வேங்கடவா! என்று சொல்லக் கேட்டது தவிர வேறு ஏதும் எனக்கு ஞாபகமில்லை... அதனால் எனக்கு யாராவது பாட்டியின் அன்பை பற்றி பேசுகையில் எதையோ இழந்து விட்டோமென்று தோன்றும், திரும்பச் சென்று கொண்டு வரமுடியாத ஒன்றை விட்டு விட்டு வந்து விட்டோம் என்று தோன்றும்...

துணியில்லாமல் தெருவில் ஓடியவள், வண்டியில் அடிபட்ட பிறகு, முழுதும் வாதம் வந்து படுத்துவிட்டாள். எங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளமுடியாத சூழ்நிலை காரணமாய், என் அத்தை வீட்டில் விட்டு சிறிது நாட்களில் இறந்து விட்டாள்.

நல்லா எழுதியிருந்தீங்க சுந்தர்ஜி!

அன்புடன்
ராகவன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பாட்டி வைத்தியம் கேள்விப் பட்டிருக்கேன்..அந்த பாட்டிக்கே வைத்தியமா? பலே!
என்னவோ தெரியவில்லை..எனக்கும் என் பாட்டி ஞாபகம் வந்து விட்டது..

பத்மா சொன்னது…

naam ithu patri pesiirukkom ...naanum en paatti patri ondru thayaar panni vaithirukkum pothu intha idukai ..nekuzhchi thaan ...many things cannot be explained ..paattinna paatti thaan

Matangi Mawley சொன்னது…

"....பாட்டியின் வாயிலிருந்து மசூதி என்ற சொல் வந்து நான் கேட்டதில்லை..."

இந்த வரி படித்த போது- அப்பா வோட நடத்திய ஒரு discussion நினைவிற்கு வருது. அப்பா சொன்னார்- எண்ணங்கள், வார்த்தையாக உருவாக்கி- அந்த வார்த்தைகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கும்... எந்த ஒருவர் அந்த வார்த்தைக்கு உவந்தவர் என்று பார்த்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கும். அந்த வார்த்தை உபயோகிக்க ஒருவருக்கு நேரம் உவந்ததா என்று கணித்துக் கொண்டிருக்கும். அந்த 'தருணத்தில்' அவை- அந்த வார்த்தைக்கு உரியோரை வந்து அடையும்- என்று...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...