யாத்ரா-II ன் தொடர்ச்சியான இடுகைகளை மனதில் எழுதி முடித்துவிட்டேன். ஆனால் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் எழுத முடியாத அளவு வேலைகள் ஒரு வாரமாக.
எருமேலியை அடைந்து வர்ணங்களை உடலில் பூசிக்கொண்டு பேட்டை துள்ளிக் குதிக்கக் கிளம்பினோம். எருமேலியில் வாவர் வழிபாடு என்பது பிற்காலத்தில் செருகப் பட்ட ஒரு இடைச் செருகல் என்பதை மோகன்ஜி மூளையில் செருகினார். எல்லாப் புறமும் மூடப்பட்டு கண்ணாடிக் கதவுகளுடன் இருந்த மசூதியைச் சுற்றி எல்லோரும் வலம் வந்தார்கள்.
பக்தர்கள் ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பி உள்ளே நுழைந்தபின் மூடப்பட்ட மசூதியின் உட்புறம் தரைப் பரப்பில் பாய்கள் விரிக்கப்பட்டு ட்யூப் லைட்கள் வெளிச்சம் போட உருவங்கள் வேறேதும் இல்லாத வெறுமையை விழுங்கி சமனப் படுத்திக் கொண்டார்கள் . இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கும் இந்துக்களின் வழிபாட்டுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் தென்பட்ட விளிம்பில் நான் கவனமாக மசூதியைச் சுற்றி வந்தேன்.
வெளியில் வந்தால் தெருவையடைத்து அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் நடைபெற்றபடி இருந்தது. மகர விளக்கு வழிபாட்டில் ஒவ்வொரு வருடமும் இவர்களின் பாரம்பர்யமான பேட்டை துள்ளும் நிகழ்ச்சியோடு பேட்டை துள்ளல் முடிவுக்கு வரும். உருவத்தில் பெரிய மூன்று யானைகள் முகபடாத்துடன் அலங்கரிக்கப்பட்டு ஐயப்பனின் திருஉருவப் படத்துடன் பவனி வர முன்னால் வெள்ளை வேட்டியுடன் அம்பலப்புழா இளைஞர்கள் செண்டை துந்துபி முழங்க ஒத்த ஜதியுடன் நடனமும் பேட்டை துள்ளலுமாய் வந்தார்கள். அற்புதமான நடனம். அருமையான ஒத்திசைவு.
நானும் நடனமாடிக் கொண்டிருந்தேன். யானைகளும் ஒரே மாதிரியான அசைவுடன் வருவது கண்டு குனிந்து பார்த்தேன். கொடுமை. கால்களுக்கு சங்கிலி போட்டுக் கட்டியிருந்தார்கள். சங்கிலியின் குறைந்த இடைவெளியில் யானை தத்தித் தத்தி நடந்துகொண்டிருந்தது அந்த நிகழ்ச்சியையே ஒதுக்க வைத்தது.
வருத்தமும் வண்ணமும் பூசிய முகத்துடன் மணிமாலா ஆற்றில் குளிக்கச் சென்றேன் நண்பர்களுடன். அங்கு குளித்த பின் இருமுடியுடன் எரிமேலி சாஸ்தாவை வணங்கிவிட்டு எருமேலியிலிருந்து 48 மைல் தொலைவு மலைப் ப்ரதேசங்களைக் கடந்து பம்பையை அடைய வேண்டும். எங்கள் குழுவோடு எரிமேலியிலிருந்து கிளம்ப யத்தனித்துக் கொண்டிருந்தோம்.
இந்த முறை எருமேலியில் அதிக தமிழகப் பதிவு கொண்ட பேருந்துகளோ கார்களோ இல்லையென அங்குள்ள வியாபாரிகள் சொன்னார்கள். ஒன்றிரண்டு மினி வேன்கள் நின்று கொண்டிருக்க கைகளில் கழிகளுடன் வண்டிகளை முரட்டுத்தனமாக தட்டியபடி நுழைவு வரியை மிரட்டலான குரலில் கேட்டுக்கொண்டிருந்தார்கள் எரிமேலி நகராட்சியின் இளைஞர்கள். முல்லைபெரியாறு எததனை தூரம் பொதுஜனங்களின் மனதில் உண்மை நிலை தெரியாது துவேஷத்தை வளர்த்திருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

சபரிமலை யாத்திரையின் கடுமையான உடற்சோர்வூட்டும் அனுபவம் கரிம்லை ஏற்றமும் இறக்கமும். மேலும் மேலும் ஏற்றம் தரும் ஏற்றம், இரக்கம் இல்லாத இறக்கம். இருந்த பெரிய பாதையின் வழியே பயணிக்க முடிவான 60 சொச்சம் பேர்களும் தனித் தனியே 6 சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 6 தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். குழுக்கள் தனித் தனியே கிளம்பின. கிளம்பியது முதல் வேறெதுவும் தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாது ஐயப்பனை மட்டுமே மனதில் நினைத்து அவருடைய நாமங்களைச் சொல்லியபடி நடக்கத் துவங்கினோம். மாலை விடைபெற்று இருள் வரவேற்றது.
3 கருத்துகள்:
நான் மூன்று முறை சபரிமலைக்குச் சென்றிருந்தாலும் , பெரிய பாதையில் சென்ற அனுபவம் இல்லை. இனி அந்த அனுபவம் பெறுவது இயலாத காரியம். இதுதான் உங்கள் முதல் சபரிமலை யாத்திரையா. ?
யானைக்குக் கட்டிய சங்கிலி.... வருத்தம் தான் மிஞ்சுகிறது....
பயணக்கட்டுரை தங்கள் வார்த்தைகளில் மிளிர்கிறது.... தொடரட்டும் யாத்ரா....
சுந்தர்ஜி...
தொடர்ந்து பயணத்தில் இருக்கிறேன் வகுப்புகள் எடுத்தபடி. இடைவேளையில் இது நலம் விசாரிப்பு. விரைவில் பதிவுகளைப் படித்துவிட்டு எழுதுவேன்.
கருத்துரையிடுக