26.2.12

சிரிக்காமல் படிங்க பாப்போம்- ஒரு சவால்!



எனக்குச் செல்லமாக கோபாலியேவிச் அல்லது கோபாலி.
அவரோடு 27 வருட நட்பு என்னைப் பலவிதங்களில் செழுமைப் படுத்தியிருக்கிறது.
ப்ரகாஷ் எனும் நதியின் இரு கரைகள் நாங்கள்.
அவரின் அளவு ஆளுமை உள்ள- பரந்த வாசிப்பனுபவம் உள்ள- அகந்தை அற்ற எழுத்தாளர்கள் வெகு சிலரே. 
எல்லோரையும் இவருக்குத் தெரியும். என்றாலும் இவரை எல்லோருக்கும் தெரியாது என்பதுதான் சமரசமற்ற இவர் எழுத்தின் பெருமை. 
ஒரு ஆழ்ந்த தேர்ந்த கவிஞர். 
மொழிபெயர்ப்பாளர். 
கீழைத் தத்துவங்களின் ஆர்வலர்.
சிறுகதாசிரியர்- 
இவருக்கும் எனக்கும் பல விஷயங்களில் ஒத்த அலைவரிசை என்பதால் பல கேள்விகளுக்கும் புதிர்களுக்குமான எங்கள் இருவரின் விடைகளும் ஒன்றாகவே இருக்கும். 
அவர் என் நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையும் நான் அவருடைய நண்பன் என்று அவர் என்னைக் கைகாட்டுவதில் கர்வமும் உண்டு. 
எழுத்துக்காரத் தெரு என்ற கவிதைத் தொகுதி இவரின் கடந்த காலம்.
வளையல் வம்சம் என்ற அடுத்த கவிதைத் தொகுதி வரும் வாரம் வெளியாகிறது.
தஞ்சாவூர்க்கவிராயர் என்ற காலாண்டுச் சிற்றிதழ் வெளியிட்டு வருகிறார்.
எல்லாப் பத்திரிகைகளிலும் பல வருடங்களாக எழுதி வரும் கவிராயர்   
ஒரு நாவல் எழுதிவருகிறார். 

எங்களுக்குள் பொதுவான பல ஆர்வங்களில் ஹாஸ்யமும் ஒன்று. ஹாஸ்யம் கரை புரண்டோடும் எங்கள் உரையாடல்களில். 
நல்ல நகைச்சுவைக்கு இந்தச் சிறுகதை ஒரு உதாரணம். நகைச்சுவையாய் சிறுகதை எழுதுவதாய்ச் சொல்பவர்கள் இந்தக் கதையை படித்த பின் அந்த அபிப்ராயத்தை மாற்றிக் கொள்வார்கள்.

சென்னை வாசி.
என் நண்பனின் கைகளைச் சிரித்தபடிக் குலுக்குகிறேன்.

அவரின் வலைப்பூ "பெரிய எழுத்து". www.thanjavurkavirayar.blogspot.in

இனி சிறுகதை. 


-நான் ஜிப்பா தரித்த முதல் தினம்- 
-சிறுகதை- 
-தஞ்சாவூர்க்கவிராயர்


நான் ஜிப்பா தரித்த முதல் தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

25 வருஷங்களுக்கு முன்னால்- அன்று என் கவிதை “தாழம்பூ” இலக்கிய இதழில் பிரசுரமாகியிருந்தது. கருந்தட்டாங்குடியில் ஒரு கவிஞன் உதயமாகியிருப்பதை அறியாமல் உலகம் தன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருந்தது.

நான் தெற்கு வீதியில் இருந்த காதிக்ராஃப்டில் ஒரு கதர் ஜிப்பா ரூ. 50க்கு வாங்கினேன். டைப்ரைட்டிங் பரீட்சை ஃபீஸ் கட்ட அப்பா கொடுத்த பணம். வீட்டுக்கு வந்து முகம் அலம்பி, தலைசீவி, சந்தனப் பௌடர் பூசிக் கொண்டு, ஜிப்பாவைத் தலைவழியாக நுழைத்தபோது ஆனந்தமாக இருந்தது.

“ஐயோ! அண்ணா! இது என்ன வேஷம்?” என்றார்கள் என் தங்கைகள் கோரஸாக.

கண்ணாடியில் பார்த்தேன். அவர்கள் சொன்னது உண்மை போலத் தெரிந்தது.

ஏதோ நாடகக் கம்பெனியில் இருந்து தப்பித்து வந்தவன் போல்தான் இருந்தேன்! ஆனால் ஜிப்பா என்பது கவிஞர்களின் தேசிய உடை அல்லவா?

இதெல்லாம் இந்த மண்டூகங்களுக்கு எப்படிப் புரியும்?

நான் ஜிப்பாவை அணிந்து கொண்டு வேட்டியைத் தழையத் தழையக் கட்டிக்கொண்டு “அம்மா! காலைச் சிற்றுண்டி என்ன தயாரித்திருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“பழையது இருக்கு. சாப்பிடு போ” என்றாள் அம்மா, என் ஜிப்பாவால் பாதிக்கப்படாதவளாக.

“பழையமுது என்று சொல்” என்ற என்னை அம்மா பயத்துடன் பார்த்தாள்.

நான் ஜிப்பாவுடன் வெளியே கிளம்பினேன்.

எப்போதும் என்னைப் பார்த்து வாலாட்டும் தெருநாய் “வள்” என்றது. பிறகு முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு “ஸாரி” என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டது.

குழாயடியில் பெண்கள் கூட்டம். அதில் பரிச்சயப்பட்ட ஒரு பெண் வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பது போல் பட்டது. நடையை எட்டிப்போட்டேன்.

தெருமுனை இஸ்திரி வண்டிக்காரன், என்னைப் பார்த்து ஏதோ சொல்லவந்தது போல் தயங்கினான். ஆடைகளின் பெருமை தெரிந்தவன். அணிபவர்களின் அழகை உணர்பவன். அவன் சொன்னான்.

“ஸார்! உங்க ஜிப்பா பின்பக்கம் கசங்கியிருக்கு”.

நான் பதில் பேசாமல் உள்ளுக்குள் கத்தினேன்.

“முன்னே பாரடா முட்டாள்! கவிஞனின் ஜிப்பா கசங்கித்தான் இருக்கும்! க்ஞ்சி போட்டு விறைப்பா நிற்கும் கதர்ச்சட்டை போட நான் என்ன அரசியல்வாதியா?”.

தெருவைக் கடந்துவிடலாம். ஜிப்பாவைக் கடப்பது கஷ்டம் என்று தோன்றியது.

குதிரை கட்டித் தெருவில் நுழைந்தேன். அங்கேதான் என்னைக் ’கவிஞன்’ ஆக்கியவள் இருந்தாள். பச்சை பெயிண்ட் அடித்து கம்பி அடித்து வைத்த வீடு. பார்வையை விலக்கினேன். என் இதயம் அந்தக் கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொள்ளும்.

நெஞ்சை நிமிர்த்தி, வேஷ்டியின் ஒரு முனையைத் தூக்கிப் பிடித்தபடி நடந்தேன்.

பாரதி இப்படித்தான் நெஞ்சை விடைத்துக் கொண்டு நடப்பாராம்! பாரதிக்குச் சரி. எனக்கு? எனக்கே இந்த நடை விபரீதமாகப் பட்டது.

கிளை நூலகம். தாழம்பூ இங்கு வருகிறதா? என்று கேட்டுப் பார்க்கலாம். நூலகர் இனிய நண்பர். நேராக உள்ளே நுழைந்து “வணக்கம்” என்றேன்.

“இந்த ஜிப்பா உங்களுக்கு” அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்பாகவே ‘ஹிண்டு’வுடன் ஒரு கிழம் குறுக்கிட்டது. கிளை நூலகர் கவிஞனைக் கைவிட்டு கிழவரிடம் கரிசனம் காட்டினார். அவருக்குத் தெரியும். கிழவர் பொல்லாதவர்.

"Sir, The indifferent attitude of librarian is totally condemnable and I hope that the authorities...' என்று நீளமாக ஒரு கடிதம் ஹிண்டுவுக்கு எழுதிப் போட்டுவிடுவார்.

கிழவர் அகன்றதும் “தாழம்பூ வருகிறதா?” என்றேன்.

“வெள்ளைப் பிள்ளையார் கோயில் பக்கம் சட்டிபானை விற்கிறார்கள் இல்லையா? அந்த இடத்துல ஒரு ஆள் விற்கிறான்!” என்றார்.

கிளைநூலகரின் இலக்கிய அறிவுக்காக ஒரு நிமிடம் துக்கம் அனுஷ்டித்துவிட்டு வெளியேறினேன்.

தாழம்பூ ஒரே பிரதி தபாலில் வந்தது. தஞ்சாவூரில் யார் கையிலும் இந்தப் பத்திரிக்கையைப் பார்த்ததில்லை. கீழராஜ வீதியில் ரப்பர் ஸ்டாம்ப் கடை வைத்திருக்கும் ப்ரகாஷ் படித்திருப்பார். அவரைச் சுற்றி இலக்கியக் கும்பல் ஒன்று எப்போதும் இருக்கும். ப்ரகாஷைத் தவிர இந்தப் பெரிய நகரத்தில் என்னைக் கவிஞனாக அங்கீகரிக்க ஒரு நாதியும் கிடையாது. நேராகக் கடையை நோக்கிச் சென்றேன். போகின்ற வழியில் டாக்டர் நரேந்திரன் க்ளினிக்கைப் பார்த்தேன். அவரும் ஒரு இலக்கிய ரசிகர். உட்காரும் இடத்தில் ஒரு கட்டி உள்ளது. அவரிடம் கட்டியைக் காண்பிப்பதா? கவிதையைக் காண்பிப்பதா?

அதற்குள் அவர் க்ளினிக்கைக் கடந்து விட்டேன்.

செல்லும் வழியெங்கும் நெடுக ஒரு மலையாளப் படத்தின் போஸ்டர்களை வரிசையாக ஒட்டியிருந்தார்கள். அதில் தெருவைப் பார்த்துத் திரும்பி நின்று கொண்டு ஒரு காமவெறி பிடித்த பெண் ( அப்படித்தான் போஸ்டர் சொன்னது) ‘ப்ரா’வின் ஹூக்கைக் கழற்றிக் கொண்டிருந்தாள். அவளுடைய இரண்டு மார்பகங்களும் போஸ்டரை முழுவதுமாக அடைத்துக்கொண்டிருந்தன. நிலவிலிருந்து விண்கலம் எடுத்து அனுப்பிய அபூர்வ ஃபோட்டோ போல தொப்புள் துல்லியமாக அச்சிடப்பட்டிருந்தது.

சாணித்தாளில் அச்சடித்த, யாருமே படிக்காத இலக்கியப் பத்திரிகையில் என் கவிதை. வழவழ போஸ்டரில் நடிகையின் தொப்புள். வயிறு எரிந்தது.

திருவையாறு போகிற நகரப் பேருந்தில் சன்னல் ஓரம் ஒரு தேவதை. சரியாகப் பார்ப்பதற்குள் பேருந்து என் முகத்தில் புகையைத் துப்பிவிட்டுப் போனது.

கணேஷ் பவனிலிருந்து நெய் தோசை வாசனை வந்தது. இப்போதைக்கு வாசனையை மட்டும்தான் சாப்பிட முடியும். கையில் மூன்று ரூபாய் எழுபத்தைந்து காசு இருந்தது.

கையிருப்பை வைத்து செல்வ நிலையைக் கணக்கிட்டால் சாலை ஓரப் பிச்சைக்காரன் என்னை விடப் பணக்காரன். ச்சே! ப்ரகாஷ் கடை களை கட்டியிருந்தது. கல்லாவில் ப்ரகாஷ் உட்கார்ந்திருந்தார். தாடி. வழுக்கை....சந்தேகமில்லை. தமிழ்நாட்டு சாக்ரடீஸ்தான்!

என்னைப் பார்த்து “தாழம்பூ படிச்சேன். உன் கவிதை பிரமாதம்” என்றார். இதுதான் ப்ரகாஷ். பக்கத்திலிருந்த ஒருவர் “ அண்ணே! நீங்க இப்படிச் சொல்லிச் சொல்லியே நாட்ல கவிஞனுங்க கூட்டம் பெருத்துப் போச்சுண்ணே” என்றார்.

எதோ நாய்களின் தொல்லை தாங்க முடியாமல் நகராட்சி அதிகாரியிடம் புகார் சொல்லும் அந்த தொனி கோபமூட்டியது.

“நீ எழுதின கவிதைய சொல்லிக் காட்டேன். எல்லோரும் கேட்கட்டும்!”

நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னேன்.

“ஜில்லென்ற தொடுதலில்
உஷ்ணங்கள் ஜனிப்பது
என்ன 
ரசாயனம்!”
”மூணு வரியில் முப்பது வட மொழிச் சொற்களா?” என்றார் அருகிலிருந்த ஒரு தூய தமிழ் அன்பர்.

“பெரும்பிடுகு அண்டபகிரண்டக்கவிராயர்! என்னய்யா இது பெயர்? கவிதையை விடப் பெருசா இருக்கே!”

நான் பதிலே பேசவில்லை. புத்தர் மாதிரி பொத்தாம் பொதுவாகப் புன்னகைத்து வைத்தேன். பேசினால்தான் பிசகு. குட்டு வெளிப்பட்டு விடும். புன்னகை ஒரு புதிர் போல இருக்கும்.

என் கவிதையைப் பாராட்டி ப்ரகாஷ் எல்லோருக்கும் “டபுள் ஸெவன்” கூல்ட்ரிங் வாங்கிக் கொடுத்தார். எல்லோரும் டபுள் ஸெவனை ரசித்துச் சாப்பிட்டார்கள்.

வெயில் சுகமாகக் காய்ந்தது. நான் ப்ரகாஷுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினேன். எனக்குப் பின்னால் கடையிலிருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது. என் கவிதைக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்காது என்று மனசைத் தேற்றிக் கொண்டேன்.

நேராக பூங்காவுக்குச் சென்றேன்.

மரங்கள் தரையில் நிழல்கவிதை எழுதியபடி இருந்தன. கிளைகளில் குருவிகள் கவிதை பாடிக்கொண்டிருந்தன. காற்று ஒரு கவிதை போல வீசிக் கொண்டிருந்தது. ஜகத் சர்வம் கவிதை மயம்.

ஒரு பென்ச்சின் மீது படுத்தேன். மேலே மரக்கிளைகளில் காகங்கள். இந்தக் காக்கைகளின் அழகை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்? அடடா! அவற்றின் சிறகு கோதும் அழகு. கறுப்பே அழகு...

‘சொத்’தென்று என் மீது ஒரு காக்கை எச்சமிட்டுப் பறந்தது!

‘சீ, சனியனே!’ -காக்கைகளை விரட்டினேன்.

புதிய ஜிப்பா பாழாகி விட்டது. தோள்பட்டை ஓரம் பச்சையும் மஞ்சளுமாய் கோடாக வழிந்தது. சற்றுத் தள்ளி இருந்த செயற்கை நீரூற்றுத் தொட்டியில் ஜிப்பாவை அலசினேன்.

எங்கிருந்தோ ‘வாட்ச்மேன்’ முளைத்தான்.

“சார், இங்கே குளிக்கப் படாது”

“இல்லப்பா! சட்டைல காக்கா அசிங்கம் பண்ணிட்டுது. அதான். இதோ முடிச்சுட்டேன்..”

“அப்படியா சார்! தாராளமா அலசிக்குங்க...” -போகாமல் தலையைச் சொறிந்தான்.

“என்ன?”

“டீ குடிக்கக் காசு கொடு சார்!”

ஜிப்பாவுக்குள் கையை விட்டேன். அடக்கடவுளே! ரூபாய்த் தாள் நனைந்திருந்தது. சில்லறைக் காசுகளைக் கொடுத்தேன். போய்விட்டான்.

கவிஞனிடமே லஞ்சமா!

’ஈரமான ஜிப்பாவுடன் பூங்காவில் இப்படி நனைந்த கோழி மாதிரி உட்கார்ந்திருப்பது சந்தேகத்துக்கு இடமாகும். மரியாதையாகக் கிளம்பு’ என்று என் மனக்குறளி உத்தரவிட்டது.

திடீரென்று ஒரு பட்டாம் பூச்சிகள் கூட்டம் பூங்காவுக்குள் நுழைந்தது. -கல்லூரி மாணவிகள்! மந்தமடைந்திருந்த என் மூளையின் செல்கள் உயிர் பெற்று நியூரான்கள் கூச்சலிட்டன.

“உட்கார்!” -கூட்டம் என்னை நெருங்கியது.

கூட்டத்தில் ஒரு பெண் என்னைக் காட்டி, “ உதயா! அத பாருடி, உன் ஆளு” என்றாள். கடவுளே! அந்தக் கூட்டத்தில் உதயா இருப்பாள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. சட்டென்று எழுந்தேன்.

குரோட்டன்ஸ் ஓரமிருந்த முட்செடியில் என் ஜிப்பாவின் பக்கவாட்டுப் பை சிக்கி டபார் என்று மார்பு வரை கிழிந்தது. கண்ணிமைக்கும் நேரம். ஜிப்பா கிழிந்து தொங்குகிறது. தலை கலைந்து கிடக்கிறது. இந்த மாதிரி சமயங்களில் புன்னகைப்பது நிலைமையை மோசமாக்கும் என்று அறிவேன். ஆயினும் புன்னகைத்தேன்.

உதயா என்னை நெருங்கி ஒரே ஒரு சிறிய வாக்கியத்தை சொல்லிவிட்டுப் போனாள்.

“ஜிப்பாவும் உங்க மூஞ்சியும்!”.

சென்னையின் அதிநவீன ஆயத்த அங்காடியில் வண்ண வண்ணமாக ஜிப்பாக்கள் தொங்கின. என் மனைவி அவற்றை சுட்டிக்காட்டி “ஏதாவது எடுத்துக்குங்களேன்! உங்களுக்கு நல்லா இருக்கும்!” என்றாள். பிடிவாதமாக மறுத்துவிட்டேன். நான் ஜிப்பா தரித்த முதல் தினம் நினைவுக்கு வந்தது.

என் மனைவி பெயர் உதயா இல்லை.

நன்றி -ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2008-

13 கருத்துகள்:

Ramani சொன்னது…

நீங்கள் முன்னுரையில் சொல்லியது மிகச் சரி
சிடு மூஞ்சிகள் ஆனாலும் மனதுக்குள் சிரித்துத்தான்
ஆகவேண்டும்
எல்லோடைய முதல் படைப்பும்
பத்திரிக்கையில் வெளியானபோது
அவர்கள் படுகிற இன்ப அவஸ்தையை
மிக நேர்த்தியாக சொல்லிப் போனது அருமை
இறுதி வரி மிக மிக அருமை
பதிவாக்கித் த்ந்தமைக்கு நன்றி

ஜீ... சொன்னது…

//இந்த மாதிரி சமயங்களில் புன்னகைப்பது நிலைமையை மோசமாக்கும் என்று அறிவேன். ஆயினும் புன்னகைத்தேன்//
கதை முழுவதையும் புன்னகையுடனேயே படித்தேன்! :-)

ரிஷபன் சொன்னது…

சாத்தியமே இல்லாத எழுத்து நடை.. சிரிப்பு இல்லாமல் படிக்கும் சாத்தியமே இல்லை!

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான, நகைச்சுவையான பதிவு.
நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//“ஜிப்பாவும் உங்க மூஞ்சியும்!”.//
கற்பனை செய்து பார்த்தேன்.

சூப்பர் சார். உதயா கிடக்கிறாங்க.

அவங்களும் சூப்பர் சார் என்று தான் சொல்ல வந்தாளோ என்னவோ!

உதயாவை பிறகு நீங்கள் சந்திக்க உதயமானார்களா?

நல்ல நகைச்சுவைப்பதிவு தான்.

ஆனந்தவிகடன் தீபாவளி மலரிலே வந்துள்ளது என்றால் சும்மாவா! ;)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//“முன்னே பரடா முட்டாள்! கவிஞனின் ஜிப்பா கசங்கித்தான் இருக்கும்! க்ஞ்சி போட்டு விறைப்பா நிற்கும் கதர்ச்சட்டை போட நான் என்ன அரசியல்வாதியா?”.

தெருவைக் கடந்துவிடலாம். ஜிப்பாவைக் கடப்பது கஷ்டம் என்று தோன்றியது.//

நிறைய இடங்களில் நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ளன. பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிரித்துச் சிரித்து வயிறு புண்ணானது எனச் சொன்னால் மிகையாகாது....

நல்லதோர் நகைச்சுவை...

அள்ளித்தெளித்திருந்த நகைச்சுவை இன்னும் மனதில்....

G.M Balasubramaniam சொன்னது…

தஞ்சாவூர்க் கவிராயரின் பதிவுலக தொடர்பாளனாகி விட்டேன். இந்தக் கதையை அதில் படித்தேன். கதையில் வரும் பிரகாஷ் அவர்களின் அடையாளங்கள் உங்கள் பதிவில் காணப்படும் பிரகாஷுடன் ஒத்துப் போகிறதே.? சரியா. ?பதிவினை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

கே. பி. ஜனா... சொன்னது…

உண்மைதான்! தப்பாமல் சிரிப்பை வரவழைக்கிறது ஜிப்பாக் கதை!

சு.சிவக்குமார். சொன்னது…

மிக மிக கச்சிதமான சொற்கள் மற்றும் நேரடியான நடையில் அரும்பும் நகைச்சுவை ஒன்றே கவிராயரின் புலமைக்கு சான்று..மிக மிக நிறைவான ஒரு சிறு கதை..ஏதோ ஒரு தீ எரிந்து உந்தி பல கிறுக்களுக்குத் தள்ளிய பாலியம் சென்று மீண்டேன்..அந்தவயதிலிருக்கும் ஒரு விதமான கிறுக்கை கூட இவ்வளவு அழகான கதையாகுமா..

vasan சொன்னது…

/“பழையமுது என்று சொல்” என்ற என்னை அம்மா பயத்துடன் பார்த்தாள்.
நான் ஜிப்பாவுடன் வெளியே கிளம்பினேன்...
எப்போதும் என்னைப் பார்த்து வாலாட்டும் தெருநாய் “வள்” என்றது. பிறகு முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு “ஸாரி” என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டது./
இதில் தொட‌ங்கி...
//நான் ஜிப்பா தரித்த முதல் தினம் நினைவுக்கு வந்தது.
என் மனைவி பெயர் உதயா இல்லை.//
இதுவ‌ரை, ர‌சித்துச் சிரித்த அல்ல‌து சிரித்து ர‌சித்து, வீர‌பாண்டிய‌ க‌ட்ட‌பொம்ம‌னின் வீரிய‌ வ‌ச‌னம் போல எண்ணிக்கையில‌ட‌ங்காது. (இதில் வெளியே சொல்ல‌முடியா கொடுமையென்ன‌வெனில், ஆ‌வி யின் எல்லாத் தீபாவ‌ளி ம‌ல‌ர்க‌ளும் வீட்டுப் ப‌ர‌ணியில் இருக்கிற‌து)

அப்பாதுரை சொன்னது…

கடைசியாக எப்போது இது போல் ரசித்துப் படித்திருக்கிறேன் என்று ஒரு கணம் யோசிக்க வைத்தது. நன்றி சுந்தர்ஜி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ரசிக்கவைத்த கதை ! பாராட்டுக்கள்..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...