2.2.12

யாத்ரா - II - சாப்பாட் முடிஞ்சிரிச்

















சூர்யனின் கணக்கில் அடங்காத அற்புதமான மற்றொரு அதிகாலை. கீழே இணைத்துள்ள வீடியோவை சொடுக்கிவிட்டுப் படிப்பீர்களானால் சோட்டாணிக்கரா பகவதி கோயிலுக்குள் நீங்கள் நுழைவீர்கள்.

இதோ சோட்டாணிக்கரா பகவதியை தரிசனம் செய்ய கோயிலின் வெளிப் ப்ரஹாரத்திற்குள் நுழைகிறேன். கோயிலைச் சுற்றி ஏராளமான பக்தர்கள் அப்போதுதான் குளித்த குளுமையுடன் நெற்றியில் மணக்கும் சந்தனத்துடன் பரவசத்துடன் கடந்து கொண்டிருந்தார்கள்.  பகவதியை தினமும் தரிசிக்கும் இரண்டு அணில் பிள்ளைகள் நெடிதுயர்ந்த ஓர் மரத்தில் காலை உணவுக்குப் பின் துள்ளிக் குதித்தபடியிருந்தன.

நானும் மோகன்ஜியும் கோயிலின் ப்ரஹாரங்களில் எழுதப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளின் தமிழில் நனைந்து கொண்டிருந்தோம். எங்கள் வசம் காமிரா இல்லாமல் போனதுக்கு வருந்தினோம். அத்தனை கற்பனையுடன் தப்பான தமிழில் எத்தனை எத்தனை அறிவிப்புக்கள்? மொழியற்றுப் போன ப்ரதேசங்களில் குழந்தையின் மழலை போல இருந்தது இந்த அறிவிப்புகள். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை சிரித்துக்கொண்டே யூகித்துவிடலாம். 

இவ்விடம் சிருநீர் தெளிக்காதை.

இஙகே குப்பை பொடக் குடாத்.

சாப்பாட் முடிஞ்சிரிச்.

ஹிந்தியின் இலக்கணத்தைத் தமிழுக்குப் பாய்ச்சி திக்குமுக்காட வைத்தார்கள்.இகரத்துக்கும் உகரத்துக்கும் கொக்கி போட்டு மாற்றியிருந்தார்கள். உதாரணத்துக்கு கூ வை எழுத க் போட்டு மேலே கொக்கி போட்டு சுழித்திருந்தார்கள். ஒரு அறிவிப்பை எங்களால் வாசிக்கவே முடியவில்லை. 

”ஸ்ரீறீக்ஷ்ஃண்ட்ப்ஹ்ச்ஜ்குஜ்ஜ்ந்லொஇந்” இப்படி எழுதியிருந்தால் எப்படி வாசிப்பீர்கள்? ஆகவே சிறிது முயற்சி சிறிது போராட்டத்திற்குப் பிறகு நானும் மோகன்ஜியும் அந்தப் பலகையை வாசிக்காமல் ரசித்துவிட்டுத் தாண்டினோம். 

கொஞ்சம் தள்ளி முற்றுப்புள்ளியில் கூட பிழையில்லாத ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தோம். ஆச்சர்யம் ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. விளம்பரம் ஜோசியத்தைப் பற்றியது. தமிழ் பேசாத மாநிலங்களில் மூன்று இடங்களில் கண்டிப்பாக தமிழ் தப்பாகவேனும் உபயோகப்படுத்துவதை உன்னிப்பாக வாழ்க்கையை உற்றுநோக்கும் என் போன்ற வேலையற்றவர்கள் கவனித்திருக்கக்கூடும். கள்-சாராயக் கடை, உண்டியல், கழிப்பறை.

திகட்டும் அளவுக்கு விளம்பரப் பலகைகள் படித்து முடித்துவிட்டு ( காமிரா யார் வசமும் இல்லை; சோட்டானிக்கராவிடம் வருத்தம் சொன்னேன்) கொஞ்சமாவது பகவதியின் அருளைப் பெறலாம் என்று முடிவு செய்துவிட்டு தரிசன வரிசையில் நின்றோம். நடை சாத்தப் பட்டிருந்தது. 
வரிசையில் நிற்கும் அந்த வெயிலுரைக்காத மென்காலையில் ஒவ்வொரு பாடல்களாகப் பாடிக்கொண்டிருந்தோம். கற்பக வல்லி நின், ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி, சின்னஞ் சிறு பெண் போலே, இன்னமும் திருவுள்ளமே இரங்காதா? என்று தொடங்கி சில மலையாளப் பாடல்களுடன் பயணம் தொடர்ந்தது. அப்போதும் நடை திறந்து பகவதி எங்களுக்கு தரிசனம் கொடுத்தாளில்லை. இன்னமும் பாரா முகம் ஏனம்மா? பாடத் துவங்கியவுடன் நடை திறந்தது என்று சொன்னால் நம்புங்கள். அற்புதமான சூழல். பகவதியைத் தொழுது சுற்றி வந்தோம்.கைகளில் சொத்தென்று விழும் இலையில் பொதிந்த ப்ரஸாதங்கள் கேரளக் கோயில்களின் அழகு. கேரளக் கோயில்களில் போன முறை தரிசித்தபோது இதுவே எனக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. பௌர்ணமி நெருங்கும் வேளை. எப்படி மாறிவிட்டேன் பாருங்கள்?

ஒவ்வொரு பயணத்திலும் குழுவாகப் போனால் சில சௌகர்யங்களும் பல கஷ்டங்களும் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் நின்று போக ஆசுவாசப் படுத்திக்கொள்ள சில இடங்கள் தேவையாய் இருக்கும். கவிதையின் முடிச்சு பிடிபடும் இடமும் அவசரமாய் ஒரு தேநீர் பருக விரும்பும் இடமும் ஒன்றாய் அமைதலோ இளைப்பாற வழியின்றிக் கடந்து போதலோ நேரக்கூடும். சில இடங்களில் கவிதை எழுத முடியாமலும் சில இடங்களில் தேநீர் பருக முடியாமலும் போயிற்று.

மோகன்ஜியின் அண்மை ஒரு பெரிய புதையல். எத்தனை ஒருமிப்பு அவருக்கும் எனக்கும் எனப் பல இடங்களில் தோன்றியது. நல்ல பொசுக்கும் மணலில் காலில் செருப்பின்றி நடந்துவிட்டு ஒற்றைப் பனைநிழலில் ஓடிவந்து நின்று ஒரு பாதத்தின் மீது மறுபாதம் பதித்து சூடு தணித்துக் கொள்வதாய் இருந்த்து அவரின் அனுபவ நிழல்.. அவரின் கடந்த காலமாய் நானிருப்பதாகவும் என் எதிர்காலமாய் அவர் இருப்பதாகவும் நான் உணர்ந்தேன். என் மனதில் வரைந்து கொண்டிருந்த பல சித்திரங்களின் பொருத்தமான வண்ணங்களில் மிகச் சரியாக பல நேரங்களில் அவரின் தூரிகை தோய்ந்திருந்தது.

சோட்டாணிக்கரா பகவதியை விட்டுவிட்டுப் புறப்பட்ட போது கண்ணில் பட்டது மீண்டும் அந்த சாப்பாட் முடிஞ்சிரிச்.

6 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

சோட்டானிக்கரா பகவதி கோவிலுக்கு 1971-ல் முதன் முறையாக என் ஐந்து வயது மகனுடன் போனேன். மாலை ஆறுமணி இருக்கலாம். நடை சாத்தியிருந்தது.நடை திறக்க நேரம் நெருங்க அருகில் இருந்தவர்களில் சிலரது போக்கு முதலில் ஆச்சரியம் அளித்தது. பின் ஒரு வித பயமேற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலோர் அங்கு தங்கி அவர்களது மனோ வியாதிக்கு ( பேய் பிடித்தவர்கள் என்று சொன்னார்கள். )மருந்தாக விரதம் அனுஷ்டிப்பவர்கள்.
அங்கிருந்த மரத்தில் உயரத்தில் ஆணிகள் அறையப் பட்டிருந்தன. பேய் பிடித்தவர்கள் தலையால் அடிக்கப் பட்டதாகக் கூறினார்கள்.
பிரசாதத்தை தூக்கிப் போடுவது எனக்கும் கோபமூட்டுவது. இதெல்லாம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாகுபாடு காட்டுவது போல் இருக்கிறது. ஒரு முறை நாங்கள் போனபோது பகவதியின் பிறந்த நாள் என்று பணம் வசூலித்தார்கள். சில நாட்கள் கழிந்து பிரசாதம் போஸ்டில் வந்தது. உங்கள் பதிவு என் நினைவுகளை தூண்டி விட்டது சுந்தர்ஜி. அதுவே நீண்ட பின்னூட்டம்.

Ramani சொன்னது…

சிலர் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு
அதை பயணம் என்பார்கள்
அனுப்வித்து பயணிப்பதும் அதை
படிப்பவரும்அனுபவிக்கத் தருவதும் நீங்கள்தான்
அனுபவித்தேன்.நன்றி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சாப்பாட் முடிஞ்சிரிச்.... என்ன சொல்வது.... நீங்கள் சொல்வது போல் கேரளத்தில் “கள்ளுக்கடை” என்பது மட்டும் தவறில்லாமல் எழுதி இருப்பது நானும் பார்த்திருக்கிறேன்....

சோட்டாணிக்கரை பகவதி - நானும் அந்தக் கோவில் சென்று பகவதியை திவ்யமாய் தரிசித்து இருக்கிறேன்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

தொடருங்கள்..தொடர்கிறோம்!

நிலாமகள் சொன்னது…

ந‌ம் நெய்வேலி நாலாம் பிளாக் ஐய‌ப்ப‌ன் கோயிலிலும் 'தீர்த்த்த‌க் கிண‌ர்' என்றெழுதியிருப்ப‌தை ப‌டித்து சிரித்திருக்கிறேன். அவ‌ர்க‌ள‌து தெரியாத்த‌ன‌மென்ப‌தா... அல‌ட்சிய‌மென்ப‌தா? அவ‌ர்க‌ள் உச்ச‌ரிக்கும் பாங்கிலேயே த‌மிழ்ப்ப‌டுத்திவிடுகின்ற‌ன‌ர்.

பாட‌ப்பாட‌ ப‌க‌வ‌திய‌ம்ம‌ன் ம‌ன‌மிர‌ங்கி த‌ரிச‌ன‌ம் த‌ந்த‌து சிலிர்ப்பு.

ஒற்றைப் ப‌னைம‌ர‌ நிழ‌லுக்கு ஓடோடி வ‌ந்து ஒரு கால் மேல் ஒருகால் வைத்து வெக்கை குறைப்ப‌து... வெம்பிக் க‌ன‌த்த‌ ம‌ன‌சுக்கு விசிறி...?!

அப்பாதுரை சொன்னது…

மீண்டும் மீண்டும் ரசித்த வரி //அவரின் கடந்த காலமாய் நானிருப்பதாகவும் என் எதிர்காலமாய் அவர் இருப்பதாகவும்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...