3.3.12

மூக்கின் மீது விரல்!

இந்தியாவின் கழிப்பிட வசதியின்மையைப் பற்றி யாரும் பெரிதாக மூச்சு விட்டதில்லை. இன்னொரு விதத்தில் சொல்வதானால் மூச்சை அடக்கத்தான் செய்திருக்கிறோம்.

திறந்த வெளிக் கழிப்பிடங்களை உபயோகிப்பவர்கள் அதை விரும்பி அசுத்தம் செய்வதில்லை. வேறெந்த ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் அவர்களுக்குக் கண்முன்னே தெரிவது நடைபாதைகளும், ரயில் தண்டவாளங்களும், ஊருக்கு ஒதுக்குப் புறமான திறந்த வெளிகளும்தான்.

இவர்களின் நிலையை மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். அதுவும் மாதவிடாய் நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் அசௌகர்யங்கள் பற்றிப் புரிந்துகொள்ளவும், திட்டமிடவும் ஆட்சியாளர்கள் பெண்ணாய் இருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

ஆட்சியாளர்களுக்கு மருத்துவ மனையில் இருந்துதான் துவங்குகிறது சுகாதாரம். ஆனால் மக்களுக்கோ [இல்லாத] பொதுக்கழிப்பறை வசதிகளில் இருந்துதான் சுகாதாரத் தேவை துவங்குகிறது. நம் அரசுகளின் பொதுவான அணுகுமுறையே வந்தபின் காப்பதுதான் எனும் போது ஊற்றுக் கண்ணைப் பற்றிய ஆர்வம் எங்கிருந்து வரும்?

கேலிக்கூத்தான கடற்கரை உண்ணாவிரதங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் பின்னணியில் கழிப்பறையின் அவசியம் நினைவில் அசைகிறது. ஆனால் ஒரு முதல்வருக்கும், ஒரு பிரதமருக்கும் அறிவுறுத்த நியமிக்கப்படும் மூளைகளின் ஒரு செல்லில் கூட இதற்கான ப்ரக்ஞை இல்லை.

’பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்காதீர்’ என்று விளம்பரங்கள் சொல்லுகின்றன. கிண்டலாக கமல்ஹாசனும் பொதுவிடங்களில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ’உங்களுக்குத்தான் ப்ளாடர் இருக்கா?’ என்று கேட்கலாம்.. ஆனால் மிக அவசரமாக தனது உபாதையைத் தீர்க்க விரும்புபவருக்கு இந்த அரசு என்ன வசதி செய்திருக்கிறது?

குறைந்தது பத்து லட்சம் பேர் பயணிக்கும் புறநகர் ரயில் நிர்வாகமாகட்டும் அல்லது பெரிய அளவில் மக்கள் புழங்கும் மாநகரப் பேருந்து நிலையங்களாகட்டும் அல்லது மாநிலத்தின் கோடியில் இருக்கும் கன்யாகுமரியின் கடற்கரை ஓரமாகட்டும் எங்கும் போதிய கழிப்பறைகள் கிடையாது.

நீங்கள் யாரிடமாவது ஆயிரம் ரூபாய் நோட்டுக்குச் சில்லறை வாங்கிவிடலாம். ஆனால் சுகாதாரமான ஒரு கழிப்பிடத்தைக் காட்டச் சொல்லுங்கள். கழிப்பிடம் பற்றிக் கேட்டவுடனேயே ஒரு கேலி நிறைந்த புன்னகைதான் பதிலாக இருக்கும்.

தி.நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் புழங்கும் ஒரு வணிக நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலையில் பதிநான்காவது மாடியில் அமைந்திருக்கும் கழிப்பறையை உங்கள் ஆடைகளை நனைத்தபடியே சென்று அடையும்போது கழிப்பிடத்தில் கழிப்பதற்கு ஒரு சொட்டுக் கூட மிஞ்சாது.

எத்தனை எத்தனை புதிய வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவிகின்றன?   உள்ளூரிலேயே எத்தனை எத்தனை புதிய பெரும் வணிக நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன ஒவ்வொரு ஆண்டும்? அந்நிறுவனங்களுக்கு முதலில் கண்ணில் படுவது பூங்காக்களை நிர்மாணித்து அவற்றைப் பராமரிப்பதும் சாலைகளில் தங்கள் பெயர் பொறிக்கப்பட்ட தடுப்பான்களை வழங்குவதும் மட்டும்தான் பிரதானமாயிருக்கிறது.

புதிதாய் பல்லாயிரம் கோடிகளில் துவங்கும் அந்நிய நிறுவனங்களின் MOU - புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் படும்போதே ஒவ்வொரு நகரத்துக்கும் பல்லாயிரக்கணக்கான நவீன கழிப்பறைகளை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களுக்கு ஒரு நிபந்தனையாக்கி நகரத்தையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஏன் தூய்மையாக்க முடியாது?

நாற்சக்கரச் சாலைகளை நிறுவி வசூல்வேட்டையை நடத்துவது போலில்லாமல் மிக நியாயமான கட்டணத்தில் அந்த அந்தப் பகுதி கவுன்சிலரின் கட்டுப்பாட்டில் வரும் வகையில் தேவையான தூய்மையான கழிப்பறைகளை அமைத்துப் பராமரிக்கலாம்.

மிக நிச்சயமாக ஒவ்வொரு தெருவிலும் அந்தத் தெருவின் புழக்கத்துக்கு ஏற்ப கழிப்பறைகள் நிறுவப்படவேண்டும். வயோதிகர்களுக்கும், குறிப்பாய் நீரிழிவு நோயாளிகளுக்கும், பெண்களுக்கும் இது ஒரு பெரிய விடுதலையாய் இருக்கும். கழிப்பறையின்மை குறித்த சிந்தனையால் போதிய அளவு பெண்கள் நீர் பருகுவதும் இல்லை. கழிப்பிட வசதியின்மையால் நீண்ட நேரத்துக்கு உபாதைகளைத் தீர்த்துக்கொள்ளாமல் இயங்குவதால் மனோரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல்வேறு நோய்களுக்கும் அழுத்தங்களுக்கும் பெண்கள் ஆளாகின்றனர்.

நாடு மிகப் பெரியது. அதற்குண்டான சவால்கள் அதை விட மிகப் பெரிது. ஆனால் அதற்கான தீர்வு உடனடியாய் செயல்வடிவம் கொடுக்கப் பட்டுக் கட்டப் படும் முதல் செங்கல்லில்தான்.

இதை உணர்ந்தால் கழிப்பிடப் பிரச்சினைகள் மட்டுமின்றி குப்பைகளை நிர்வகிப்பது - ஆறுகளைத் தூய்மையாகப் பராமரிப்பது - மாசுக் கட்டுப்பாடு போன்ற பல சிக்கல்களையும் திறமையாக நிர்வகித்து முதன்முறையாக சரியான காரணத்துக்காக மூக்கின் மீது விரலை வைக்கலாம்.

பொருத்தமான படத்துக்கு நன்றி: ஜெயராஜ்,- ஃப்ளிக்கர்

4 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

உங்களது ஒவ்வொரு வரியிலும் உடன்பாடே. என்ன செய்ய.?பெருமூச்சு விடத்தான் முடிகிற்து. சில இடங்களில் கழிப்பறைகளைக் காண்கிறேன்.( இங்கு பெங்களூருவில்) ஆனால் அவை உபயோகிக்கப் படுவதாகவே தெரியவில்லை. !. தேவையில்லாத இடமா.? தேவையற்றதாக்கி விட்டார்களா.? சுந்தர்ஜி, நாங்கள் இப்போதெல்லாம் நெடுந்தூர பஸ் பயணத்தைத் தவிர்க்கிறோம். வெளி நாடுகளில் சிலர். DIAPER உபயோகிக்கிறார்களாம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஒவ்வொரு வரியும் யதார்த்தமான உண்மை.... வரும் ஒவ்வொரு அரசும் சுத்தம் சுகாதாரம் என்றெல்லாம் பேசுகிறதே தவிர எதுவும் செய்யவில்லை...

//புதிதாய் பல்லாயிரம் கோடிகளில் துவங்கும் அந்நிய நிறுவனங்களின் MOU - புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் படும்போதே ஒவ்வொரு நகரத்துக்கும் பல்லாயிரக்கணக்கான நவீன கழிப்பறைகளை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களுக்கு ஒரு நிபந்தனையாக்கி நகரத்தையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஏன் தூய்மையாக்க முடியாது?// நல்ல யோசனை.... செய்வார்களா.... காலம் தான் பதில் சொல்லவேண்டும்...

அப்பாதுரை சொன்னது…

ரொம்ப சிக்கலான பல பரிமாணப் பிரச்சினை.

இரசிகை சொன்னது…

thevaiyaana pathivu...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...