10.11.12

மரணத்தை அறிவிக்கும் அறிகுறிகள்.

நேற்று மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அதன் மோக்ஷ தர்ம பர்வத்தில் 317ஆவது அத்யாயத்தில்  மரணத்தை அறிவிக்கும் லக்ஷணங்களை ஜனக மன்னனுக்கு யாக்ஞவல்க்யர் கூறுவதாக வரும் பகுதி சிலிர்க்க வைக்கிறது.

எப்படி ஒரு கரு உருவான சில காலங்களுக்குள்ளே அதையறிந்து கொள்கிறோமோ, அதே போல இந்த ஜீவன் விடைபெறும் காலமும் நமக்கு சில அறிகுறிகள் மூலமாக முன்கூட்டியே அறிவுறுத்தப்படுவது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். 

இனி அந்த உரையாடலுக்குச் செல்வோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாக்ஞவல்க்யர் ஜனக மன்னனிடம் கூறுகிறார்:

”மிதிலை மன்னா! ஞானிகள் மூலம் தீர்மானிக்கப்பட்ட அமங்கலமான அல்லது மரணத்தை அறிவிக்கும் அடையாளங்களை வர்ணிக்கிறேன். அவை சரீரம் விடுபடுவதற்கு ஒரு வருஷம் இருக்கும்போதே அவனுக்கு முன்னால் தோன்றுகின்றன. 

யார் ஒருபோதும் முன்பு கண்ட அருந்ததி அல்லது துருவ நக்ஷத்ரத்தைப்  பார்ப்பதில்லையோ-

பூர்ண சந்திரனின் மண்டலம் அல்லது விளக்கின் ஒளி யாருக்கு வலது பக்கம் துண்டிக்கப்பட்டதாகக் காணப்பட்டதோ-

யார் மற்றவர்களின் கண்களில் தன்னுடைய நிழலைக் காண்பதில்லையோ- 

அத்தகைய மக்கள் ஒரு வருஷம் வரை மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.

மனிதனின் சிறந்த காந்தியும் மிகவும் மங்கி விடுமானால், அதிக அறிவும் அறிவிழந்த நிலைக்கு மாறுமானால், இயல்பாகவே பெரும் மாறுதல் உண்டாகுமானால்-

எவனொருவன் கண்களுக்குக் கருப்பாக இருந்தாலும் மஞ்சள் போலத் தோன்றுமோ- எவனொருவன் தேவர்களை மதிக்க மாட்டானோ- எவனொருவன் பிராமணனோடு விரோதம் செய்வானோ-  

அது அவனுடைய ஆறு மாதத்திற்குள் உண்டாகும் மரணத்தின் அறிவிப்பாகும்.

எந்த மனிதன் சூரிய - சந்திர மண்டலத்தை சிலந்தி வலையைப் போல துளையுள்ளதாகப் பார்க்கிறானோ-

யார் ஆலயத்தில் அமர்ந்து அங்குள்ள நறுமணப் பொருட்களில் அழுகிய பிணத்தின் துர்கந்தத்தை அனுபவிக்கிறானோ- 

அவன் ஏழு இரவுகளில் மரணத்தை அடைகிறான்.

யாருடைய காதும், மூக்கும் வளைந்து விடுமோ- பற்கள் மற்றும் கண்களின் நிறம் கெட்டு விடுமோ - யாருக்கு நினைவற்ற நிலை உண்டாகுமோ - யாருடைய உடல் குளிர்ந்து விடுமோ - யாருடைய இடது கண்ணிலிருந்து தற்செயலாகக் கண்ணீர் கிளம்புமோ - தலையிலிருந்து புகை உண்டாகுமோ -

அவனுக்கு அக்கணமே மரணம் உண்டாகிறது.

மரணத்தை அறிவிக்கும் இந்த லக்ஷணங்களை உணர்ந்து மனதைக் கட்டுப்படுத்தும் சாதகன் இரவும் பகலும் பரமாத்மாவை தியானம் செய்ய வேண்டும். மரணம் உண்டாகும் நேரத்தை எதிர்பார்க்க வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதற்கு முந்தைய 315வது அத்யாயத்தில் ஜனக மன்னனுக்கும், யாக்ஞவல்க்யருக்குமான உரையாடலே ஒரு கவிதையாய்த் தென்பட்டது எனக்கு. அத்தோடு இந்த இடுகையை முடிக்கிறேன்.

யாக்ஞவல்க்யர் கூறுகிறார்:

“ மன்னா! அத்திப்பழத்தின் தொடர்பால் புழுக்கள் அத்தோடு பற்றப்படுவதில்லை. 

மீன் வேறு பொருள். நீர் வேறு பொருள். நீரின் ஸ்பரிஸத்தால் ஒரு போதும் எந்த மீனும் பற்றப் படுவதில்லை.

அக்னி வேறு பொருள். மண்பாண்டம் வேறு பொருள். இந்த இரண்டின் வித்தியாசத்தையும் நித்யமானதென்று கருது. 

தாமரை வேறு. நீர் வேறு. நீரின் ஸ்பரிஸத்தால் தாமரை பற்றப்படுவதில்லை. 

அதுபோல ப்ரகிர்தியும், புருஷனும் வெவ்வேறானவை. ஜீவனும், உடலும் வெவ்வேறானவை. சங்கமமற்றவை.

சாதாரண மனிதன் அவற்றின் சகவாசத்தையும், வாழ்விடங்களையும் ஒருபோதும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை.

20 கருத்துகள்:

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! இந்திய தத்துவ ஞானத்தின் அறிவியல் வித்தகர் யக்ஞவல்கியர். அவருடைய பிருகுதாரணய உபனிஷத் மிகவும்முக்கியமானது. அவருக்கு இரண்டு மனைவியர். ஒருவர் மைத்ரேயி. இவர் அறிவை விரும்பியவர்.மற்றொருவர் காத்யாயினி.இவர் வழ்க்கையை விரும்பியவர். தூர்தர்ஷனில் ஒவ்வொரு ஞாயிறு காலை 10 மணிக்கு" உபனிஷ்த் கங்கா" என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது . அதன் mythical value வை விட்டுவிட்டு ரசிக்கலாம். அருமையான தொடர்---காஸ்யபன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்... நன்றி ஐயா...

பவளசங்கரி (வல்லமை) சொன்னது…

அன்பின் சுந்தர்ஜி,

//அதுபோல ஜீவனும், உடலும் வெவ்வேறானவை. சங்கமமற்றவை.
சாதாரண மனிதன் அவற்றின் சகவாசத்தையும், வாழ்விடங்களையும் ஒருபோதும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை.//

பணிவான வணக்கங்கள்.

அற்புதமான விளக்கங்கள். நன்றி.

அரவிந்த் சொன்னது…

அற்புதமான உரை.

அதுவும் ஜீவனுக்கு உடலுக்கும் உள்ள தொடர்பைக் கூறும் கவிதையும் உதாரணங்களும் அருமையிலும் அருமை.

"நான் என்பது இந்த உடலன்று; நான் என்பது இந்த மூச்சன்று; நான் என்பது இந்த நினைவுமன்று. இவற்றையெல்லாம் தாண்டிய தனிப்பொருள் ஒன்று என்னுள் ஒளிர்கிறதே, அதுவே நான். ஆம். அதுவே என்றும் அழிவற்ற நித்ய வஸ்துவாகிய ஆன்மா. அது பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமே அது." - என்ற பகவான் ரமண மஹர்ஷிகளின் வாக்கு நினைவிற்கு வருகிறது. நன்றி.

vel kannan சொன்னது…


உங்களை தொடர்கையில் ஏகப்பட்ட கேள்விகள்.
இருந்தாலும் எதையும் கேட்கபோவதில்லை , கேட்டாலும்
அதற்கு தகுந்த பதில் (உங்களை பொருந்த வரை) உங்களிடம் உண்டு.
இதை சொல்வது கூட சக தோழன் பயணி என்கிற முறையில் தான்
வாழ்வு தனது கூரிய பற்களாலும் நகங்களாலும் அடித்து துவைத்து காயபோட்டு கொண்டிருக்கிறது.
ஆனாலும் வாழ்வதற்கான ஆதார புள்ளியும் என்னில் இயங்கி கொண்டுஇருக்கிறது ஆகவே , இயங்குவதால் வாழ்கிறேன், வாழ இயங்குகிறேன். அவ்வளவே ! நன்றி

Matangi Mawley சொன்னது…

In the book- "Harry Potter and the Prisoner of Azkaban", Harry peruses through a book called "Death Omens" in a book store. The excerpt is here:

"... But Harry wasn't listening. His eyes had fallen on another book, which was among a display on a small table: Death Omens.- What to Do When You Know the Worst Is Coming. "Oh, I wouldn't read that if I were you," said the manager lightly, looking to see what Harry was staring at. "You'll start seeing death omens everywhere. It's enough to frighten anyone to death. "... "
I think it's wise not to expect/be pre-warned about such things. Death would look tragic, instead of being lyrical- if time is not kept indeterminate.

But Yagnavalkya's quotes from 315 are brilliant!

சுந்தர்ஜி சொன்னது…

//வாழ்வு தனது கூரிய பற்களாலும் நகங்களாலும் அடித்து துவைத்து காயபோட்டு கொண்டிருக்கிறது.//

//இயங்குவதால் வாழ்கிறேன், வாழ இயங்குகிறேன்.//

கண்ணா! என் அன்புச் சகோதரா, வாழ்க்கை இனிமையானது.மொட்டு மலர்வதைப் போல, மலர் உதிர்வதும்.

நீங்களும் நானும் மட்டுமல்ல, ஒரு சிற்றெறும்பு கூட மேற்கூரிய காரணங்களுக்காகத் தான் வாழ்கிறது.

அது எத்தனை கசந்தாலும் அதற்கான வசீகரத்தோடு அது மணம் வீசியபடித்தான் இருக்கிறது.

தோன்றும் கேள்விகளும், அதற்கான பதில்களும் எப்போதும் முழுமையானவை அல்ல.

எப்போது அவை தீருகிறதோ அப்போது வாழ்க்கை நிறைவடையும்.

komu சொன்னது…

மிகவும் நன்றி அனைவருமே தெரிந்துகொள்ளவெண்டிய விஷயங்கள்தான்

சுந்தர்ஜி சொன்னது…

//I think it's wise not to expect/be pre-warned about such things. Death would look tragic, instead of being lyrical- if time is not kept indeterminate.//

ஒரு சிருஷ்டி உருவாகும் வர்ணனைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.உபநிஷத்துகளிலும், மஹாபாரதத்திலும், பாகவதத்திலும் என்று அதன் முழு உருவைத் தொகுத்தபடி இருக்கிறேன்.

அதேபோல மரணம் குறித்தும், மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை குறித்தும் நம் புராதன க்ரந்தங்களில் சொல்லியிருப்பவற்றை வாசித்து வருகிறேன்.

பிறக்கும் முன்பு முந்தைய பிறவிகள் குறித்து ஜீவன் உணர்ந்து, பிறக்க இருக்கும் பிறவியில் முக்தியை வேண்டி கர்ப்பத்தில் தவமிருக்கிறது. ஆனால் பிறந்தவுடன் அது மாயையால் சூழப்பட்டு சராசரி வாழ்க்கையை நோக்கித் திரும்பி விடுகிறது என்றும்,மரணத்தை நெருங்கும் போது அடுத்த பிறவி குறித்த கனவுகள் வருவதாகவும் உபநிஷத்துக்கள் சொல்கின்றன.

இவையெல்லாம் அறிந்துகொள்ளும் ஆர்வமும், எனக்கு இவற்றில் அளவிட முடியாத தாகமும் இயற்கையாகவே உண்டு.

என் கிராமத்தில் படுக்கையில் இருப்பவர்களைப் பார்த்து இத்தனை நாளுக்குத் தாங்காது என்று சரியாகக் கணித்துச் சொன்னவர்கள் உண்டு.

தஞ்சாவூர்க்கவிராயரின் அப்பாவின் கண்களை ஒரு குறிப்பிட்ட வகை சிற்றெறும்புகள் மொய்த்தன. அதற்கு அவர் சொன்னார்: ”சாவு நெருங்குவது அந்த எறும்புகளுக்குத் தெரியும். அவை வருவதும், மொய்ப்பதும் நமக்கே தெரியாது” சொன்னது போலவே சீக்கிரம் இறந்தும் போனார்.

வாழும் ஆர்வம் ஒரு கட்டத்தில் அலுத்து விடும். அதை சுவாரஸ்யமாய் வைத்துக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.அவர்கள் மரணத்தை, அது தோளைத் தொட்டு மிஸ்டர் போலாமா? எனும் வேளையில் கூட கவனிக்காமல் ஏதோ மும்முரமாய் இருப்பார்கள்.

அப்பாதுரை சொன்னது…

வேறு யாரை குறிப்பிடுகிறதாம்?

அப்பாதுரை சொன்னது…

அந்த நாளில் 'பிராமணர்' என்ற வாக்கு பிறப்பால் பிராமணரை மட்டுமே குறிப்பிட்டது. உபநிஷது மட்டுமல்ல, பல புராணங்களிலும் இதே கதை. தவறாக இருந்ததை தவறு என்று சொல்லாமல் ஏன் சுற்றி வளைத்து சாக்கு சொல்கிறோம்? அந்தக் காலக் கண்ணோட்டத்தில் அது சரியாக இருந்திருக்கலாம். இன்றையக் கண்ணோட்டத்தில் அது பிழையாகப் படுகிறது, அவ்வளவு தான்.

சுந்தர்ஜி சொன்னது…

இருக்கலாம் அப்பாதுரை.

வியாஸர் இதை எழுதும்போது பிராம்மணர்கள் என்று மட்டும்தான் எழுதுகிறார்.

கலியுகத்தில் பிராமணக்குரிய தகுதி பிறப்பால் மட்டும் வருவதாய் நான் நினைக்கவில்லை.

அதனால்தான் ப்ரத்யேகமாக இதைக் குறிக்க விரும்பினேன்.

என் ஆர்வம் யாக்ஞவல்க்யர் கூறும் சமிக்ஞைகளில் மட்டும்தான் இருந்தது.

அப்பாதுரை சொன்னது…

பிராமணர் என்பது பிறப்பால் வருவது தானே சுந்தர்ஜி. பிராமணன் என்பது ஒரு இனம், அதற்கான குறி கூட இருக்கிறது - இனத்தில் பிறப்பால் தான் சேர முடியும். மதம் வேண்டுமானால் மாறலாம். என்றைக்குமே இந்த நியதி தானே? மேற்கில் கூட 'brahmin' என்கையில் ஒரு குறிப்பிட்ட 'உயர்ந்த கலாசாரத்தவன்' என்ற பொருளிலேயே வழங்குகிறார்கள் - இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் எடுத்துப் போன சொல்.

யக்ஞவல்கியர் சொன்னது தான் முக்கியம் - நானும் உங்கள் கட்சி தான். ஆனால் பிராமணர் என்பதற்கான விளக்கம் வல்கியர் சொன்னதல்ல, உங்களது எனும் பொழுது சிறிது இடறுவதாக உணர்ந்தேன். தவறாக எண்ண வேண்டாம். வல்கியர் கூற்றாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே?

சுந்தர்ஜி சொன்னது…

புரிதலில் குழப்பம் நேரலாம் என்றே அந்த ஸ்டார் மார்க் கொடுத்திருந்தேன் அப்பாதுரை.

இப்போதும் தன் தன்மையால் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவரும் பிராமணராகலாம் என்ற விதியை நான் வலியுறுத்தவே விரும்புகிறேன்.பிறப்பால் அல்ல.

இருந்தாலும் இந்த இடுகையின் நோக்கம் இதுவல்ல என்பதால் இந்த விவாதம் இத்துடன் முடிவதையே விரும்புகிறேன்.

”பிராம்மணன் என்று யாக்ஞவல்க்யர் குறிப்பது பிறப்பால் பிராம்மணர்களாய் இருப்பவர்களை அல்ல” என்று நான் இணைத்திருந்த குறிப்பை நீக்கி விடுகிறேன்.

அப்பாதுரை சொன்னது…

//இப்போதும் தன் தன்மையால் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவரும் பிராமணராகலாம் என்ற விதியை நான் வலியுறுத்தவே விரும்புகிறேன்.பிறப்பால் அல்ல.

இதை ஒரு நல்ல மாலைப் பொழுதின் பயண உரையாடலாக வைத்துக் கொள்வோம். நான் எதிர்கட்சி.

சுந்தர்ஜி சொன்னது…

ஹாஹா! ஷ்யூர்!

நாம் திட்டமிட்டிருக்கிற யாத்திரையின் அஜெண்டாவில் சேர்த்துக்கொள்கிறேன் அப்பாதுரை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா

vasan சொன்னது…

அந்த "மாபில் இலை"யின் உதிர்வு
உதிர‌ உறைவின் அதிர்வாய்,
ஆனால் ப‌திவுக்கு சிக‌ர‌மாய்.
உங்க‌ளின் அர்ப்ப‌ணிப்பு சிலிர்ப்பாய்

Anonymous சொன்னது…

//தஞ்சாவூர்க்கவிராயரின் அப்பாவின் கண்களை ஒரு குறிப்பிட்ட வகை சிற்றெறும்புகள் மொய்த்தன. அதற்கு அவர் சொன்னார்: ”சாவு நெருங்குவது அந்த எறும்புகளுக்குத் தெரியும். அவை வருவதும், மொய்ப்பதும் நமக்கே தெரியாது” சொன்னது போலவே சீக்கிரம் இறந்தும் போனார்.//

சில மாதங்களுக்கு முன்னால் உறவினர் ஒருவர் காலமானார். அவரது இறப்பிற்கு முந்தைய நாள் யாருமே அதுவரை பார்த்திராத ஒருவகை எறும்புகள் வந்து அங்கே மொய்த்தன. பின் சென்று விட்டன. அவற்றைச் ”சாவெறும்பு” என்று சொன்னார் மற்றோர் முதிய பெண்மணி. அது மரணத்தை முன்னறிவிக்க வருமாம். ஆச்சரியமாகத் தான் உள்ளது.

இறப்பிற்கு முன்னால் உடலில் நிகழும் வேதியியல், ரசாயன மாற்றங்களையும் அதன் வாசனைகளையும் மோப்பத்தால் உணர்ந்து அந்த எறும்புகள் வரும் போலும்.

- அரவிந்த்

Anonymous சொன்னது…

எதற்கும் இந்தத் தகவலையும் ஒருமுறை படித்துப் பாருங்கள்...

இறப்பை முன்னறிவிக்க ஒரு பூனை வருகிறது!!

http://ramanans.wordpress.com/2012/05/10/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA/

- அரவிந்த்



தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...