11.11.12

காவேரி தீர ரசிகன் - காதம்பரி



புழுதி படிந்த அந்தக் குறுகலான சாலையில் பஸ் திரும்பி ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு எதிரே நின்றது. நாலைந்து பேர்கள் இறங்கினோம். பஸ்ஸில் யாரும் ஏறவில்லை. கண்டக்டரிடம் திரும்பி “ உங்க பஸ் எப்போ இங்கே வரும்?” என்று கேட்டேன். “இப்ப மணி பத்து. மாயவரம் போயிட்டுத் திரும்பி வருவோம். ஒரு மணிக்கு எதிர்பார்க்கலாம்” என்றார் அவர். “மூணு மணி நேரம் இருக்கு. அவசரப்படாம, சாவதானமா பெருமாளை தரிசனம் பண்ணிட்டு வரலாம்” என்றார்  என் நண்பர் நீடாமங்கலம் சம்பத் அய்யங்கார்.

சாலையில் இடதுபுறமாக சிறிய வாய்க்கால் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் கிராமத்துச் சிறுவர்கள் சிலரும், சிறுமியர் சிலரும் குதித்து நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

“ என்ன ஓய்! காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாமா? தலைவலி மண்டையைப் பிளக்கிறது” என்றார் சம்பத். அவரும் என்னைப் போல் காபிப் பிரியர். இருவரும் எதிரில் இருந்த சிற்றுண்டி சாலைக்குள் நுழைந்தோம். “ ஸ்ரீ ராமவிலாஸ் பிராமணாள் காபி கிளப்” என்று எழுதப்பட்ட சாயம்போன, துருப்பிடித்த பழைய போர்டு ஒன்று கோணல் மாணலாக வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.

தரையெல்லாம் ஒரே மணற்புழுதி. கை கால்கள் முறிந்த சில மர நாற்காலிகளும், பெஞ்சுகளும் இங்கும், அங்கும் கிடந்தன. உடையாத ஒரு இரும்பு நாற்காலியில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். இடுப்பில் அழுக்கு வேட்டி. தோளில் சிவப்புக் கலர் காசித் துண்டு, மூக்குப்பொடியின் நெடி. “வாங்கோ! ஸாருக்கு என்ன வேணும்னு கேளுடா” என்று அதட்டலாகச் சொன்னார் அவர். முதலாளிக்கு உரிய மிடுக்கு இருந்தது.

சம்பத்தும் நானும் அதிகமாக ஆடாத ஒரு பெஞ்சில் போய் அருகருகே அமர்ந்தோம். என் பார்வையைச் சுழல விட்டேன். சுவர்களில் வரிசையாக அந்தக் காலத்துப் படங்கள் - காந்தி, நேரு, திலகர், படேல், ராஜாஜி, நேதாஜி, ராஜா ரவிவர்மாவின் தெய்வீகக் களை ததும்பும் படங்கள். லக்ஷ்மி, சரஸ்வதி, ராஜராஜேச்வரி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ணனுடன் ருக்மணி சத்யபாமா, கணபதி, முருகன், யாரோ ஒரு சாமியாரின் படம். எல்லாவற்றின் மேலும் காய்ந்து, உலர்ந்த செம்பருத்திப் பூக்கள். மேலே அங்கும் இங்கும் ஒட்டடை. ஆதிகாலத்து ராட்சச ஃபேன் ஒன்று தந்தக் கலரில் பயங்கர சத்தத்துடன் ஓடத் தொடங்கியது.

முதலாளியின் பின்னே இருந்த மர பீரோ ஒன்றின் மீது ஆதிகாலத்து ஜி.இ.ஸி. ரேடியோ ஒன்று வீற்றிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரம் வந்தபோது தஞ்சாவூர் மாவட்டச் சிற்றூர்கள் எப்படி இருந்தனவோ அப்படியே ஒரு காட்சி கி.பி. இரண்டாயிரத்து ஐந்திலும்!

“ ஏன் சுவாமி! ரேடியோ இப்பவும் ஒர்க் பண்ணுகிறதா?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“ நடுநடுவிலே கொரரகொரன்னு சத்தம் போடும். இருந்தாலும் பாதகம் இல்லே. இப்ப போடறேன் பாருங்கோ” என்று சொன்ன முதலாளி ரேடியோவின் குமிழைத் திருகினார். ஏதோ ஒரு ரேடியோ நிலையத்திலிருந்து அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் பாட்டுக் கேட்டது. 

சம்பத் காதைத் தீட்டிக்கொண்டு கேட்டார். சியாமா சாஸ்திரியின் “மரிவேர” என்று தொடங்கும் ஆனந்தபைரவி ராகக் கீர்த்தனை. மிச்ரசாபு தாளம். நானும் ரசித்துக் கேட்டேன். 

இருந்தபோதிலும் சம்பத் அய்யங்காரைச் சீண்டுவதற்காக, “ இதே கீர்த்தனையை வேதாரண்யம் வேதமூர்த்தி வாசிக்கணும்; நாம கேக்கணும்” என்று சொன்னேன்.

”ஏன்யா? இது வாய்ப்பாட்டு. வேதமூர்த்தி நாயனம். இதையும், அதையும் கம்ப்பேர் பண்ணாதீரும்” என்று சம்பத் பொய்க் கோபத்துடன் சொன்னார்.

இதற்குள் முதலாளி எங்களிடம் நெருங்கி வந்து “ ஒங்களுக்கு என்ன வேணும்னு சொல்லவே இல்லையே?“ என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.

”எங்களை யாரும் கேக்கவே இல்லையே” என்றேன் நான் குறும்பாக.

“ஸ்ட்ராங் காபி. வேற ஒண்ணும் வேணாம்” என்றார் சம்பத்.

”எனக்கும் காபிதான். பில்டர் காபிதானே? ப்ரூ, நெஸ் கஃபே இதெல்லாம் வேண்டாம்” என்றேன் கண்டிப்புடன்.

“நீங்க கேட்டாலும் அதெல்லாம் கெடையாது இங்கே! சுத்தமான டிகாக்‌ஷன். சிக்கரி கூடப் போடறது இல்லே” என்றார் முதலாளி.

“நீங்க போய் கவுண்டர்லே ஒக்காருங்கோ. சர்வர் வந்து காபி கொடுக்கட்டும்” என்றார் சம்பத் அக்கறையுடன். வயது முதிர்ந்த முதலாளியை வேலை வாங்க இஷ்டமின்றி.

“நல்ல சமயம் பாத்து எங்கயோ போய்த் தொலைஞ்சுட்டான் இந்தப் பய. கோவிலுக்கு யாரானும் வெளியூர்லேருந்து லேடீஸ் வந்தா போய் பல்லை இளிச்சுண்டு நிப்பான்” என்று முதலாளி கடிந்து கொண்டார்.

சர்வர் என்று யாருமே இருக்க மாட்டார்கள் என்றும், போலிக் கௌரவத்துக்காகக் கிழவர் பொய் சொல்கிறார் எனவும் எனக்குத் தோன்றியது.

இதற்குள் அரியக்குடியின் ஆனந்தபைரவி முடிந்தது. கானடா ராகத்தை ஆலாபனை செய்யத் துவங்கினார் அந்த மாபெரும் கலைஞர். என்ன கீர்த்தனை என்று கவனித்தோம். “ஸ்ரீ நாரத” என்ற தியாகராஜர் கிருதி வெகு சுகமாக இருந்தது. சங்கதிகள் அனாயாசமாக விழுந்தன. கண்களை மூடிக்கொண்டு அந்த நாத வைபவத்தில் திளைத்தோம்.

அரியக்குடியின் பாட்டு முடிவதற்கும், முதலாளி காபி கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாயிருந்தது.

“ நீங்க வெளியூர்காரான்னு தெரியறது. எந்த ஊர்னு தெரிஞ்சுக்கலாமோ?” என்று வினயமாகக் கேட்டார் முதலாளி.

“எனக்குத் தஞ்சாவூர். இவருக்குக் கடலூர்” என்றேன்.

“பூர்வீகம் தஞ்சாவூரா?” கிழவரின் கேள்வி.

“இல்லையில்லை; எனக்கு மாயவரம். இவருக்கு நீடாமங்கலம்.”

“அங்கே என்ன உத்யோகம்?” கிழவர் விடுவதாக இல்லை.

“நான் டிரஷரிலே வேலை பாக்கறேன். இவர் டெபுடி கலெக்டர் ரிடையர்டு” என்றேன்.

நாகப்பட்டினம் பஸ்லே வந்தேளே, நாகப்பட்டினத்திலேதான் வேலை பாக்கறேளா?”. கிழவர் துளைத்தெடுத்தார்.

“அது போகட்டும். கமலநயனப் பெருமாள் கோவில் இங்கேருந்து எவ்வளவு தூரம் இருக்கும்? அதைச் சொல்லும்” என்றார் சம்பத். அவருக்கு அதிகார தோரணையில் பேசியே பழக்கம்!

“ ஓஹோ! பெருமாள் கோவிலுக்குத்தான் போறேளா? அரை மைல் இருக்கும். காலை வீசி நடந்தே போயிடலாம். கால் மணி இல்லேன்னா இருபது நிமிஷம்தான் ஆகும்” என்றார் கிழவர்.

“இப்ப பத்தரை மணி ஆயிட்டுதே; கோவில் திறந்திருக்குமா? பட்டாச்சாரியார் இருப்பாரா?” என்று விசாரித்தேன்.

“தெறந்திருக்கும். பக்கத்திலேயேதான் பட்டாச்சாரியார் வீடு. போய்க் கூப்பிட்டா வருவார். அந்தப் பையனுக்கும் கொஞ்சம் சித்தப் பிரமை மாதிரி இருக்கு பாவம்” என்றார் கிழவர்.

பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு நாங்கள் கிளம்பினோம்.

சாலையின் இடதுபுறத்தில் ஒரு பெரிய அலங்கார வளைவு காணப்பட்டது. அருள்மிகு கமலநயனப் பெருமாள் ஆலயம் - திருநாராயணபுரம் என்று எழுதியிருந்தது, வெள்ளை நிறத்தில்.

வளைவுக்குள் புகுந்து நடந்தோம். இருமருங்கும் தென்னை மரங்கள் வரிசையாக நின்றன. சிறிது தூரம் சென்றதும் வலது புறத்தில் ஒரு சின்னஞ்சிறிய தடாகம். ‘தாமரை பூத்த தடாகமடி’ என்று தண்டபாணி தேசிகர் பாடினாரே! அந்தப் பொய்கையில் செந்தாமரை மொட்டுக்கள் நூற்றுக்கணக்கில் காணப்பட்டன. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஐந்தாறு தாமரை மலர்களும் பூத்துக் கிடந்தன.

தண்ணீரின் மேற்பரப்பை மூடி மறைத்துக் கொண்டு பச்சைப் பசேல் என்று தாமரை இலைகள் வெள்ளி மணிகள் போல் இலைகளின் மீது ஒட்டாமல், நீர்த்துளிகள் இங்குமங்கும் உருண்டன. கம்பர் பாடிய ‘தண்டலை மயில்களாட’ என்னும் மருத நில வர்ணனை நினைவுக்கு வந்தது. குளத்தின் ஓரத்தில் போய் நின்று குளிர்ந்த தண்ணீரை இரு கைகளாலும் எடுத்து, முகத்தில் தெளித்துக் கொண்டேன். தண்ணீர்ப்பாம்பு ஒன்று நெளிந்து சென்றது.

பேசாமல் மறுபடியும் நடந்தோம். எங்களைக் கடந்து ஒருவர் சைக்கிளில் போனார். சம்பத் அய்யங்காருக்கு மூட்டு அலி. நெடுந்தூரம் நடக்க இயலாமல் சிரமப்படுவது போல் தோன்றிற்று. “இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் பெருமாள் கோவில்?” என்று கேட்டார் சைக்கிள்காரரை. அவர் உடனே சைக்கிளை விட்டு இறங்கினார்.

“ கொஞ்ச தூரம்தான். இன்னும் பத்து நிமிஷத்துக்குள் போயிடலாம்” என்றார் அவர்.

நான் அவரைப் பார்த்து, “ கோயில் வாசல்லே அர்ச்சனைத் தட்டு கிடைக்குமா?” என்று விசாரித்தேன்.

“ஊஹூம். அங்கே கடை ஒண்ணும் கெடயாது. பட்டாச்சாரியார் துளசியினாலே அர்ச்சனை பண்ணி, கல்கண்டை நிவேதனம் பண்ணிடுவார். நீங்க வற்புறுத்தினா ஒரு தேங்காயை எடுத்து ஒடப்பார்” என்றார் சைக்கிள் பேர்வழி.

“யாருக்கோ சித்தப்பிரமைன்னாரே ஓட்டல்காரர்! யார் அது?” என்று சம்பத் கேட்டார்.

“அதை ஏன் கேக்கறேள் போங்கோ! பெரிய பட்டாசாரியார் திருமலாச்சாரி அம்பது வருஷமா கோவிலைப் பாத்துக்கறார். அவருக்கு இப்ப வயசாயிட்டது. எழுபத்தஞ்சுக்கு மேல இருக்கும். அவரால ஒண்ணும் முடியாது. ஞாபக மறதி, தள்ளாட்டம் எல்லாம் வந்துட்டுது. அவருக்கு ஒரே பிள்ளை. பார்த்தசாரதின்னு பேரு. நாங்கள்லாம் பாச்சா, பாச்சான்னு கூப்பிடுவோம். அவனுக்குத்தான் சித்தப்பிரமை மாதிரி இருக்கு. ரொம்ப வயித்தெரிச்சல் கேஸ்” என்றார் சைக்கிள்காரர்.

” எதனால அப்படி ஆச்சுன்னு ஒங்களுக்குத் தெரியுமா?” என்று ஆவலுடன் வினவினேன்.

“ யாரு கண்டா? பாச்சா அமெரிக்காவிலே பெரிய வேலையிலே இருந்தான். லட்சக் கணக்கிலே சம்பாதிச்சான். பத்து வருஷத்துக்கு மேலே அமெரிக்காவிலேதான் இருந்தான். பெருமாள் கோயில் திருப்பணிக்கு இருபது லட்சம் ரூபாய் கொடுத்தான். திடீர்னு ஒருநாள் திரும்பி வந்துட்டான். ‘பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணப்போறேன். இனிமே அமெரிக்காவுக்குத் திரும்பிப் போக மாட்டேன்’ அப்படின்னு சொல்றான். மெண்டல் ஆயிட்டான். மாசம் லட்சரூபா சம்பாதிச்சவன், இங்கே மணியடிச்சுண்டு எட்டணாவுக்கும் ஒரு ரூபாய்க்கும் மன்னாடிண்டு இருக்கறதைப் பாத்தா வயித்தெரிச்சலா இருக்கு ஸார்” என்றார் சைக்கிள்காரர். இதற்குள் கோபுரம் தெரிந்தது.

“அமெரிக்காவிலே என்ன வேலை பார்த்தார்?” என்று கேட்டேன்.

“ அணுமின்சார தொழிற்சாலையிலே அட்லாண்டாங்கிற ஊர்லே வேலை பார்த்தான். அங்கே பெரிய பங்களா, ரெண்டு, மூணு கார் எல்லாம் வாங்கினான். அவன் சம்சாரமும் எம்.எஸ்.ஸி., பி.எச்.டி., படிச்சவதான். அவளும் அமெரிக்காவிலே வேலை பார்க்கறா. மணி மணியா ரெண்டு குழந்தைகள் வேற இருக்கு. எல்லாத்தையும் விட்டுட்டுத் திரும்பி வந்துட்டான். பெரியவர் திருமலாச்சாரிக்கு பெரிய அதிர்ச்சியாப் போயிட்டுது. இங்கே குணசீலம் பெருமாள் கோவிலுக்கு அழைச்சிட்டுப் போய் அபிஷேகம் எல்லாம் பண்ணினார். ஒண்ணும் குணமாகல்லே! மனோதத்துவம் படிச்ச பெரிய டாக்டர்கள்கிட்டே காட்டி வைத்தியம் பண்ணினார். ஒண்ணும் பிரயோஜனம் இல்லே. கடைசியிலே வேற வழியில்லாம பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணட்டும்னு விட்டுட்டார். வேற என்ன செய்யறது?” என்று ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார் சைக்கிள்காரர்.

நாங்கள் கோவிலை நெருங்கினோம். சின்னக் கோவில்தான். கோவில் திறந்திருந்தது. வாசலில் தூணில் சாய்ந்து கொண்டு, முப்பந்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏதோ ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். தலையில் கட்டுக்குடுமி. நெற்றியில் பளிச்சென்று திருமண். கழுத்தில் துளசி மாலை. தங்க ஃப்ரேம் போட்ட கண்ணாடி. முகத்தில் தெய்வீகமான பொலிவு இருந்தது. இரு காதுகளிலும் கடுக்கன் மின்னின. எங்களைப் பார்த்ததும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு “ வாங்கோ! பெருமாளைச் சேவிக்க வந்தேளா?” என்று கேட்டார். நாங்கள் மௌனமாகத் தலையசைத்தோம்.

சன்னதிக்குள் சென்றோம். கச்சிதமான சின்னக் கோவில். பெருமாள் கம்பீரமாக சிரித்த முகத்துடன் காணப்பட்டார். இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி விக்கிரகங்கள்.

“ அர்ச்சனைத் தட்டு கொண்டு வரல்லியா?” என்று கேட்டார்.

“வெறுமனே கற்பூர ஆரத்தி செய்தாப் போதும்” என்றார் சம்பத் அய்யங்கார். அவர் எப்போதுமே சிக்கனம்.

“இருக்கட்டும். பெருமாளைத் தரிசனம் பண்ணனும்னு இவ்வளவு தூரம் வந்திருக்கேள். நான் அஷ்டோத்தர அர்ச்சனை பண்ணறேன். ஆனந்தமாச் சேவிச்சுட்டு ஊருக்குப் போகலாம்” என்று மலர்ந்த முகத்துடன் சொன்னார் சின்ன பட்டாச்சாரியார்.

நாங்கள் மௌனமாக நின்றோம். உடனே அர்ச்சனை துவங்கியது. கணீரென்ற வெண்கலக் குரல்.

ஓம் கமலநயனப் பிரபுவே நமஹ:
ஓம் கந்தர்வ ஸேவிதாயை நமஹ:
ஓம் கமலா மனோஹராயை நமஹ:
ஓம் காவேரி தீர ரஸிகாயை நமஹா:

அவர் நிதானமாக நூற்றெட்டு போற்றிகளையும் கம்பீரமாக முழங்கியபோது, என் மனம் “ காவேரி தீர ரஸிகாயை நமஹ” என்ற நாமாவளியிலேயே லயித்திருந்தது. எவ்வளவு அழகான, அர்த்தச் செறிவுள்ள திருநாமம்?

நம்மைப் போன்ற சாதாரண மக்கள் காவேரியின் அழகையும், அதன் கிளை நதிகளின் எழிலையும், அதன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் நெல் வயல்களின் பசுமையையும், தோப்பு, துரவு, தோட்டங்களின் வளமையையும் கண்டு ரசிப்பதை யாரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால், சகல உலகங்களையும் காத்து ரட்சிக்கும் வல்லமை படைத்த நாராயணனாகிய முழுமுதற் கடவுள், காவேரி தீரத்தை ரசிப்பதாகப் பாராட்டிச் சொல்வது, எவ்வளவு உயர்ந்த, ரசமான கற்பனை என்று எண்ணிப் பார்த்தேன். என் உள்ளம் பெருமிதத்தினால் பூரித்தது. இந்தக் காவேரியின் கரையில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, இந்தப் பகுதியிலேயே வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்து, காவேரிக்கரை நாகரீகத்தைச் சுவைக்கும் என் போன்ற எளியவர்கள் எவ்வளவு பேறு பெற்றவர்கள்!

அர்ச்சனை முடிந்தது. துளசி தீர்த்தப் பிரசாதம் வழங்கினார். ‘காவேரி தீர ரஸிகாயை நமஹ’ங்கிற நாமாவளி எனக்குப் பிடிச்சிருக்கு என்றேன் நான்.

“எனக்கும் பிடிச்சதனாலேதான் அமெரிக்காவிலேருந்து வேலையை விட்டுட்டு ஓடி வந்துட்டேன்” என்றார் பார்த்தசாரதி பட்டாச்சாரியார்.

“நாங்க இப்போதான் கேள்விப்பட்டோம்” என்றார் சம்பத் அய்யங்கார் சாமர்த்தியமாக.

“ஒக்காருங்கோ, சொல்றேன். இந்தக் கமல நயனப் பெருமாள் லேசுப்பட்டவரில்லை. சின்ன வயசிலேருந்து இவர் சன்னதிலே வளர்ந்தவன் நான். அப்போதெல்லாம் மனசுக்குள்ளே நெனச்சுப்பேன் ‘ பெருமாளே! ஒங்க திருவடியை நித்யம் சேவிக்கணும்னு’. எனக்கு லௌகீகமான ஆசைகள் அதிகம் இல்லை. நான் படிச்சுப் பட்டம் வாங்கினதும் அப்பாவுக்கு நான் நிறைய சம்பாதிக்கணும்னு ஆசை வந்துட்டுது. என்னைப் போட்டுத் துளைச்சு எடுத்தார். அமெரிக்காவுக்குப் போயி நெறைய சம்பாதின்னு! அவர் பிடுங்கல் தாங்க முடியாமதான் நான் ஸ்டேட்ஸுக்குப் போனேன்”.

சம்பத் அய்யங்கார் குறுக்கிட்டு, “அங்க நல்ல வேலைல இருந்தேளாமே?” என்று வினவினார்.

“ஆமாம். ஆமாம். அட்லாண்டா சிட்டிக்கு அனல் மின்சாரம் சப்ளை செய்யற அடாமிக் ரியாக்டர்ல வேலை பார்த்தேன். நல்ல சம்பளம் கொடுத்தான். அப்போதான் எனக்குக் கல்யாணமும் ஆச்சு. இங்கே பக்கத்திலே திருச்சேறைங்கிற ஊர்ல என்னோட மாமா வாத்தியாரா இருந்தார். கடைசிப் பொண் கனகாவைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு என் எண்ணம். ஆனா எங்கப்பாவுக்கு ஏழைன்னாலே பிடிக்காது. பணக்காரனைக் கண்டா பரவசமாயிடுவார். ஜபல்பூர்ல இன்கம்டாக்ஸ் ஆஃபீசரா இருந்த ஜகந்நாதன் தன்னோட ஒரே பொண் ஜானாவை எனக்குக் கொடுக்கறேன்னார். ஏராளமான வரதட்சிணை, சீர் எல்லாம் தரேன்னார். எங்கப்பா ஒத்தைக்கால்ல நின்னு அவளை என் தலையில கட்டி வைச்சார். எனக்குக் கொஞ்சங் கூட இஷ்டமில்லாம அந்தக் கல்யாணம் பம்பாயில நடந்தது”.

த்சொ...த்சொ...என்று அனுதாபம் தெரிவித்தார் சம்பத் அய்யங்கார்.

“ஜானாவோட பேராசைக்கு ஈடு கொடுக்க முடியாம நான் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். ராப்பகலா உழைச்சேன். பெரிய பங்களா, ரெண்டு மூணு கார் எல்லாம் வாங்கினேன். ரெண்டு குழந்தைகளும் பொறந்து வளர்ந்தது. எனக்கு அந்த வாழ்க்கை புடிக்கவே இல்லை. கமலநயனப் பெருமாளை மனமுருகி வேண்டிண்டேன். பெருமாள் லேசுப்பட்டவர் இல்லைன்னு முன்னமேயே சொல்லியிருக்கேன். அவர் கருணையால எனக்கு லூகமியான்னு ஒரு வியாதி வந்தது. அடாமிக் ரேடியேஷன்தான் காரனம்னு சொன்னான். ரத்தத்திலே வெள்ளை அணுக்கள் கொஞ்சங் கொஞ்சமா செத்துப்போச்சு. சிவப்பு அணுக்கள் தாறுமாறாப் பெருகிடுத்து. உடம்பு சோகை புடிச்சு ஊதிப் போச்சு. ரெண்டு மாசத்திலே போயிடுவேன்னான் டாக்டர் கோல்ட்மான். பொண்டாட்டி ஜானா எல்லாப் ப்ராபர்ட்டியையும் தன் பேர்ல எழுதி வாங்கிண்டா. நான் இந்தியாவிலே போய்ச் செத்துப் போறேன்னேன். சரின்னு ப்ளேன்ல ஏத்திவிட்டுட்டா. நான் மட்டும் தனியா வந்து சேர்ந்தேன்”.

“வியாதி எப்படி சொஸ்தமாச்சு?” என்று ஆவலுடன் விசாரித்தேன் நான்.

“கமலநயனப் பெருமாள் சன்னதிலே ஒக்காந்து நாராயணா நாராயணான்னு ஓயாம ஜபம் பண்ணினேன். வியாதி போன இடம் தெரியல்லே. பெருமாள் லேசுப்பட்டவர் இல்லே. ஆனா நான் திரும்பவும் அமெரிக்காவுக்குப் போயி பழையபடி நிறைய சம்பாதிப்பேன்னு எங்கப்பா நெனச்சார். நான் பிடிவாதமா மாட்டேன்னுட்டேன். கமலநயனப் பெருமாளை பூஜை பண்ணிண்டு நிம்மதியா இருக்கப் போறேன்னு அடிச்சுச் சொல்லிட்டேன். எங்கப்பாவுக்கு பெரிய ஷாக்! என்னைக் குணசீலம் பெருமாள் கோவிலுக்கு இழுத்துண்டு போனார் மூளைக் கோளாறுன்னு சந்தேகப்பட்டு! வேலூருக்கும், மெட்ராஸுக்கும் இழுத்துண்டு போயி கண்ட கண்ட ஊசி, மாத்திரை, எலெக்ட்ரிக் ஷாக் எல்லாம் கொடுத்து இம்சை செய்தார். நான் மன உறுதியோட பிரகலாதன் மாதிரி அஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை ஜபம் பண்ணிண்டே இருந்தேன். விடுங்கோ! கமலநயனப் பெருமாள் என்னை ஆட்கொண்டு தனக்குத் தொண்டு செய்யும்படியா ஏற்பாடு பண்ணி என்னைக் காப்பாத்திட்டார்” என்று முடித்தார் பார்த்தசாரதி பட்டாச்சாரியார்.

“Inscrutable are the ways of the Lord அப்படின்னு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கார். பகவானுடைய லீலைகளை நாம புரிஞ்சுக்கவே முடியாதாம்” என்று சம்பத் அய்யங்கார் சொன்னார், உணர்ச்சிவசப்பட்டு.

“ ‘கோணை பெரிதுடைத்து எம்பெருமானைக் கூறுதலே’ அப்படீன்னார் நம்மாழ்வார் திருவாய்மொழியிலே! பகவானது விளையாட்டை முற்றும் அறிதல் நம்மைப் போல சாதாரண ஜீவன்களுக்கு இயலாது” என்று சிரித்தார் சின்ன பட்டாச்சாரியார்.

நாங்கள் அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டோம். எதிரில் எண்பது வயது மதிக்கத்தக்க கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே வந்தார். அவர்தான் திருமலாச்சாரி பட்டாச்சாரியார் என்று உடனே புரிந்துகொண்டு விட்டோம்.

“எங்க பாச்சா அமெரிக்காவிலே இருக்கான். மாசம் லட்ச ரூபா சம்பளம்” என்றார் கிழவர்.

(நன்றி- ரசனை - செப்டெம்பர் 2005)

[என் அப்பாவின் வயது காதம்பரிக்கு. 74. இவருடன் எனக்குக் கிடைத்த 25 வருடத்துக்கு முந்தைய அறிமுகம் என்னைச் செழுமைப் படுத்தியது. லூயி புனுவல் பற்றி கணையாழியில் 1986ல் இவர் எழுதிய கட்டுரை இவரிடம் என்னை ஈர்த்தது. ஃபைஸ் அகமத் ஃபைஸின் உர்துக் கவிதையை அவர் மொழிபெயர்த்த அதே ’பாலம்’ இதழில், ஓவியர் புகழேந்தியின் ’உருவச்சிதைப்பு ஓவியங்கள்’ குறித்த என்னுடைய கட்டுரை வெளியானது குறித்து அப்போது கர்வமடைந்தேன். 

உலக இலக்கியங்களில் மட்டுமல்ல. இந்திய இலக்கியத்திலும் அபாரமான வாசிப்பும், ரசனையும் கொண்டவர். உலக சாஸ்த்ரீய சங்கீதங்களில் இவருக்குள்ள ஈடுபாடும் இவர் எழுத்தின் செழுமைக்குக் காரணம். அற்புதமான உரையாடல்களை நிகழ்த்துபவர். 


ஒருமுறை பேசியது மறுமுறை பேசத் தேவையற்ற அளவுக்கு ஆழம். என் ஆதர்சங்களில் ஒருவர். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் க.நா.சு.வுக்குச் சமமான அளவு பரந்த வாசிப்புள்ளவர். இவரைப் போல் (Auto) Biography களை வாசித்தவர்கள் வெகு சிலரே. இந்தச் செடி நடப்பட்டதில் இருந்து கவனித்துவருபவர்களில் இவர் முக்கியமானவர். இன்றைக்கும்  தஞ்சாவூர் போனால் நான் காணத் தவறாத இரு விஷயங்கள்:  காதம்பரி, பெரிய கோவில்.

”கலை கலைஞன் காலம்” என்ற தலைப்பில் இரு பாகங்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. திரிசக்தி பதிப்பகம். மிக முக்கியமான எழுத்து. பல்வேறு எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருப்பவர். பல பத்திரிகைகளில் இவர் எழுத்துக்கள் வந்திருந்தாலும்,  மரபின்மைந்தன் முத்தையாவின் ”ரசனை” சஞ்சிகையில் தொடர்ந்து வெளியான இவர் எழுத்துக்கள் அற்புதமானவை. 


என் தளத்தில் அவரின் இந்தச் சிறுகதையை வெளியிடும் இந்தத் தருணம் மிக விசேஷமானதும், பெருமைக்குரியதும்.] 


முகப்பு ஓவியம்: ராஜராஜன்.                                                       நன்றி ராஜராஜன்.

15 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

துவைக்கும் கல்லில் அடித்துத் துவைக்கப்பட்ட அழுக்குத்துணியின் வலியில் அவதிப்படுகிறது மனம். இன்னொரு முறை துவைக்க ஆசைப்பட்டு மறுபடி படிக்கிறது அறிவு.

Matangi Mawley சொன்னது…

The last line! WOW! Awesome Punch!
Both Pacha and his father- victims of reality. Be it Pacha's 'alienation' or his father's want for a 'better-life', we just cannot judge them. Brilliant story.
The narration was fantastic. I wish Appa would read this one. I usually tell him the 'essence' of stories I read. But this one- being someone who has spent much time around places like Tanjore/Needamangalam/Mannargudi- I feel he might enjoy the nostalgia that comes along with the narration.
Reading the write-up on Kadhambari, led to a conversation with Appa. Since Kadhambari, as you've mentioned was a "Thanjavur-jilla" person, it prompted me to ask Appa whether he knows such a writer. I was surprised- as he replied that he knew and had visited him and spoken to him a couple of times. There are just so many events in his life that are like "untrodden-territories". Every time something comes up, it surprises me and makes me wonder- just how much I know about him!
Nice read- Tnx for sharing...

அப்பாதுரை சொன்னது…

படம் எங்கே பிடித்தீர்கள்? யார் வரைந்தது? உடனடியாக ஒரு பெரிய ப்ரின்ட் எடுத்து வீட்டில் மாட்டத் தூண்டுகிறது. விவரம் சொல்ல முடியுமா? நன்றி.

மீனாக்ஷி சொன்னது…

பிரமாதம்! பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி!
தலைப்பும், அது கதையில் வந்த அழகும் அருமை. இது போன்ற ஒரு அமைதியில் மனம் உறைய எத்தனை வலிகளை கடக்க வேண்டி இருக்கிறது. அது அத்தனயும் கடந்து, மனம் நன்கு பக்குவப்பட்டு கிடைக்கும் இந்த அமைதிதான் பெரும் பேறு என்பேன். இது வாய்த்தால் போதும். பரம சுகம். கதையின் பல வரிகளில் அப்படியே லயித்து விட்டது மனம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சுந்தர்ஜி !

சுந்தர்ஜி சொன்னது…

ரசிகனய்யா நீர்!

http://www.flickr.com/photos/rajarajan/.

ராஜராஜன் என்ற புனைபெயரில் வரையும் அற்புதமான ஓவியர்.கொற்றவை என்று ஒரு ஓவியம் க்ளாஸ்.

தொடர்புக்கு முயன்றேன்.முயல்கிறேன் அப்பாதுரை.

பொருத்தமான ஓவியம் தேடியெடுக்க ஆறு மணி நேரம் எடுத்துக்கொண்டேன்.உங்கள் வார்த்தை,ரசனை அதில் மூன்று மணி நேரத்தைக் குறைத்து விட்டது.

உங்கள் தோளில் கை போட்டுக் கொள்கிறேன் அப்பாதுரை.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் ரசனை உசத்தியானது.நன்றி மாதங்கி.

ரொமபவும் சந்தோஷம் மீனாக்ஷி. நீங்கள் இதை ரசிப்பீர்கள் என்றெனக்குத் தெரியும்.படித்த முதல் வாசிப்பிலேயே மனதில் துளசி மணத்துடன் இடம்பிடித்த கதை.

மனப்பூர்வமான தீபாவளி வாழ்த்துக்கள் மீனாக்ஷி.

ஓலை சொன்னது…

Ingu oruvarai parthasarathi maathiri neril paarkkiren. Aanal manaivi patri kurippiduvathu porunthaathu. :-))

மீனாக்ஷி சொன்னது…

என் பாராட்டையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஓவியம் பார்த்தவுடன் மனதை கொள்ளை கொண்டு விட்டது. தலைப்பின் அழகு படத்தில் தெரிகிறது. இதன் அழகில் சிறிது நேரம் லயித்த பின்பே கதையை படிக்க ஆரம்பித்தேன். கமெண்ட் போடும்போதே ஒரு வரி இதை பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே மறந்து விட்டேன். :)

//பொருத்தமான ஓவியம் தேடியெடுக்க ஆறு மணி நேரம் எடுத்துக்கொண்டேன்.//
வாவ்! ஓவியம் உண்மையில் உங்கள் ஸ்ரத்தைக்கு கிடைத்த வெற்றி பரிசுதான்.

//முதல் வாசிப்பிலேயே மனதில் துளசி மணத்துடன் இடம்பிடித்த கதை.//
அழகான கதைக்கு அழகான பாராட்டு.

நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் படங்களை பார்த்தேன். பிரமாதம். அசந்து போனேன். எல்லாமே அருமை. திருவிடைமருதூர் சான்சே இல்லை. அட்டகாசம். சமீபத்தில் சென்று வந்த, மனதை கொள்ளை கொண்ட கோவில் இது. ஓவியங்களுக்கு அவர் கொடுத்துள்ள பெயர்களும் அசத்தலாக இருக்கிறது. மிகவும் நன்றி.

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! ஓவியர் புகழேந்தியின் "உயிர்ப்பு" கண்காட்சி சென்னையில் நடந்தது.அப்பொது அதனை கண்டுகளித்திருக்கிறென்.. ஒருமுறை சென்னை "தீக்கதிர்" அலுவலகத்தில் அவரை சந்தித்து அளவளாவிய நினைவும் வருகிறது. மிகவும் தனித்த திறமையும் போக்கும் கொண்டவர்---கஸ்யபன்

கவிநயா சொன்னது…

வாவ்! மனதை நெகிழ வைத்த கதை. கதை என்று சொன்னாலும் கதை போலத் தோன்றவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

balhanuman சொன்னது…

மிக மிக அருமையான கதை. பகிர்வுக்கு மிகவும் நன்றி. இந்தக் கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு இருக்க முடியாது. இந்தப் படத்தைப் பற்றி நண்பர் அப்பாதுரையின் கருத்துதான் எனக்கும்...

balhanuman சொன்னது…

நீங்கள் குறிப்பிட்டுள்ள கலை கலைஞன் காலம் இரு தொகுதிகளும் உடுமலைப் பதிப்பகத்தில் கிடைக்கின்றன.

http://udumalai.com/?prd=kalai%20kalaingnan%20kaalam&page=products&id=9563

http://udumalai.com/?prd=kalai%20kalaingnan%20kaalam%20(%20thokuthi%202%20)&page=products&id=9564

RVS சொன்னது…

பிரமாதம் என்று வார்த்தையில் சொல்லிவிட முடியாது ஜி! நானும் கூட காவேரி தீர ரஸிகன் தான்.

கிராமத்து பிராமணாள் ஹோட்டலில் ஆரம்பித்து அப்படியே பொடி நடையாக அழைத்துக்கொண்டு போயிட்டீர் ஓய்! இந்த அற்புத படைப்பை அருளிச்செய்ததற்கு மிக்க நன்றி. :-)

vasan சொன்னது…

அமெரிக்க‌ போன‌த்தான் அமரிக்கையா வாழ்ற‌த‌ ந்ம்பும் இந்த‌ மாயையை, அவ‌ன‌ண்டை வாழ்வ‌தே அர்த்த‌மானதுன்னு சொன்ன‌ அந்த‌ பாங்கு, அஹா அருமை. அந்த‌ க‌ஃபி க‌டை முதலாளியின் அரைகுறை அறிமுக‌த்தில் வ‌ரும் க‌தை நாய‌க‌னின் வாழ்விய‌ல் ஒரு பாட‌ம். ஒருவேளை அவ‌ன் அங்கு போய் அவ்வ‌ள்வு ச‌ம்பாதித்து சாதிக்காம‌ல், வ‌ந்திருந்தால் வாச‌க‌ர்க‌ள் இவ்வ‌ள்வு உய‌ர‌த்திற்கு அவ‌னைக் கொண்டு போவ‌ர்க‌ளா? அவனை அது பாதித்திருக்காது.

sury Siva சொன்னது…



/“Inscrutable are the ways of the Lord அப்படின்னு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கார். பகவானுடைய லீலைகளை நாம புரிஞ்சுக்கவே முடியாதாம்” என்று சம்பத் அய்யங்கார் சொன்னார், உணர்ச்சிவசப்பட்டு.

“ ‘கோணை பெரிதுடைத்து எம்பெருமானைக் கூறுதலே’ அப்படீன்னார் நம்மாழ்வார் திருவாய்மொழியிலே! பகவானது விளையாட்டை முற்றும் அறிதல் நம்மைப் போல சாதாரண ஜீவன்களுக்கு இயலாது” என்று சிரித்தார் சின்ன பட்டாச்சாரியார்.//

அவனருளாலே அவன் தாள் பணிந்து... எனும் தேவாரத்துடன் தான் துவங்கவேண்டும்.

ஏன் எனின் இந்தக் கதையைப் படிப்பேன் என்று ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு கூட நினைக்கவில்லை.
திரு துரை அவர்கள் அனுப்பிய ஒரு ஈ மடலுக்கு பதில் போட்டுவிட்டு, துரை என்பவர் அப்பாதுரை தானா அந்த அறுந்த காத்தாடி எழுதியவரா வேறு யாரா என்று
அறிய கூகிளைக் கேட்டால் இந்த காதம்பரி வந்தாள்.

காதம்பரி என்னைக் காவேரி ரசிகப்பிரியனான கமல நாராயணனின் பாதங்களில் சேர்த்துவிட்டாள்.

யூ பிகம் வாட் யூ பிலீவ் என்பர். ஒன்றையே நினைத்திருந்து ஒன்றுக்காக வாழ்ந்திருப்பவன் அந்த ஒன்றாகவே ஆகிவிடுவான்
என்பதும் சித்தாந்தம். இதையே அந்தக்காலத்தில் யத் பாவம் தத் பவதி என்றார்கள்.

இன்னொரு கோணத்தில் யோசிச்சு பார்த்தா, விசிஷ்டாத்வைதத்திலே இரண்டு விதமான நியாயம் சொல்லி இருக்கு.
ஒண்ணு குரங்குக்குட்டி , இன்னொண்ணு பூனைக்குட்டி நியாயம். குரங்குக்குட்டி தன் அம்மாவை கெட்டியா புடிச்சுண்டு
இருக்காமாதிரி பகவானை கெட்டியா பிடிச்சுண்டு அவன் நாமாவையே சொல்லிண்டு இருக்கறது ஒண்ணு.
பூனைக்குட்டி மாதிரி அப்படியே உடம்பையே ஒடுக்கிண்டு அவன் காலடிலே படுத்துண்டு, நீ என்ன செய்யணுமோ
செஞ்சுடு, நான் உன் பாதங்களிலே சரணம் அப்படின்னு சொல்றது ஒணணு.

கையிலே இருக்கற எல்லா சம்பத்தையும் வீடு,வாசல், சொந்தம் பந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு, தனி ஒரு ஆளா வந்து
பகவத் கைங்கர்யம் பண்ணுவேன். என் உடம்புக்கு என்ன வேணாலும் ஆகட்டும், இது அவன் தந்த உடம்பு, இந்த உடம்பு
அவன் கைங்கர்யம் செய்வதிலேயே இருக்கட்டும் அவன் நினைச்சா சரி பண்ணட்டும் அப்படின்னு என்று திடமாக நம்புவதற்கும்

ஒரு தைரியம் வேண்டும்.

அந்த தைரியம் இந்த கலி காலத்துலேயும் ஒரு மனுஷனுக்கு இருந்தது என்று சொன்னால்,
அதுவும் அந்த காவேரி தீர ரசிகனாம் கமல நாராயணனின் சித்தம் தான்.

சுந்தர் ஜி.
உங்கள் கதையும் சுந்தர்.

சுப்பு ரத்தினம் @ சுப்பு தாத்தா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...