9.9.13

சுபாஷிதம் -13


241.
ஸிம்ஹாதேகம் பகாதேகம் சிக்ஷேச்சத்வாரி குக்குடாத்
வாயஸாத்பஞ்ச்சசிக்ஷேச்ச ஷட் சுனஸ்த்ரீணி கர்தபாத்

சிங்கத்திடமும் கொக்கிடமும் இருந்து ஒன்றும், சேவலிடமிருந்து நான்கும், காக்கையிடமிருந்து ஐந்தும், நாயிடமிருந்து ஆறும், கழுதையிடமிருந்து மூன்றும் என குணங்களை நாம் கற்க வேண்டும்.

242.
ப்ரவ்ருத்தம் கார்யமல்ப்பம் வா யோ நர: கர்த்துமிச்சதி
ஸர்வாரம்பேண தத்கார்யம் ஸிம்ஹாதேகம் ப்ரசிக்ஷதே

சிறிதோ, பெரிதோ செய்யத்துவங்கிய செயலில் இறங்கியபின் அது முழுமையடைய அதிகபட்ச முயற்சியைக் கொடுக்கும் குணத்தை சிங்கத்திடமிருந்து கற்க வேண்டும்.

243.
இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத்பண்டிதோ நர:
தேசகாலபலம் ஞாத்வா ஸர்வகார்யாணி ஸாதயேத்

இடம், காலம், வலிமை, புலனடக்கத்துடன் செயலாற்ற ஒரு கொக்கிடமிருந்து கற்க வேண்டும்.

244.
ப்ராகுத்தானஞ்ச்ச யுத்தஞ்ச ஸம்விபாகச்ச பந்துஷு
ஸ்வயமாக்ரம்யபுக்திச்ச சிக்ஷேச்சத்வாரி குக்குடாத்

அதிகாலை எழுதல், சண்டையிடல், சுற்றத்துடன் உணவைப் பகிர்தல், தன் காலில் நிற்கும் முனைப்பு இந் நான்கையும் சேவலிடம் கற்க வேண்டும்.

245.
கூதமைதுனதீரத்வம் காலே காலே ச ஸங்க்ரஹம்
அப்ரமத்தமவிஷ்வாசம் பஞ்ச்ச சிக்ஷேச்ச வாயஸாத்

ரகசியக் கலவி, தீரம், வருங்காலத்துக்காக உணவைப் பாதுகாத்தல், நேரந்தவறாமை, யாரையும் நம்பாமை எனும் ஐந்து குணங்களையும் காக்கையிடம் கற்க வேண்டும்.

246.
பக்வாசி ஸ்வல்பஸந்துஷ்ட: ஸுனித்ரோ லகுசேதன:
ஸ்வாமிபக்திச்ச சூரத்வம் ஷடேதே ச்வானதோ குணா:

உற்றபோது அதிகமாயும், அற்றபோது கிடைப்பதையும் உண்ணல், ஆழ்ந்துறங்குதல், நொடியில் எழல், உரியவனிடம் விசுவாசம், வீரம் இந்த ஆறும் நாயிடம் கற்க வேண்டியவை.

247.
ஸுஷ்ராந்தோபி வஹேதாரம் சீதோஷ்ணோ ந ச பச்யதி
ஸந்துஷ்டச்சரதே நித்யம் த்ரீணி சிக்ஷேச்ச கர்தபாத்

தட்பவெப்பம் பற்றிக் கவலையற்றிருத்தல், சோர்வுற்ற போதும் சுமத்தல், நிறைவுற்ற மனது இம் மூன்றையும் கழுதையிடம் கற்க வேண்டும்.

248.
ய ஏதான விம்சதிகுணானாசரிஷ்யதி மானவ:
கார்யாவஸ்த்தாஸு ஸர்வாஸு விஜயீ ஸம்பவிஷ்யதி

மேற்சொன்ன இருபது குணங்களையும் கற்ற ஒருவன் எடுத்த காரியம் யாவினும் வெல்வான்.

249.
லப்தவித்யோ குரும் த்வேஷ்டி லப்தபார்யஸ்து மாதரம்
லப்தபுத்ரா பதிம் நாரீ லப்தாரோக்யஸ் சிகித்ஸகம்

கற்ற பின் குருவை மாணவனும், மணம் உற்ற பின் தாயை மகனும், பிள்ளை பெற்ற பின் உற்றவனைப் பெண்ணும், நோயற்ற பின் மருத்துவரை சிகிச்சை பெற்றவனும் பொருட்படுத்துவதில்லை.

250.
அக்ஷரம் விப்ரஹஸ்த்தேன மாத்ருஹஸ்த்தேன போஜனம்
பார்யாஹஸ்த்தேன தாம்பூலம் ராஜஹஸ்த்தேன கங்கணம்

அறிவாளியின் கரத்தால் அட்சரத்தையும், அன்னையின் கரத்தால் உணவையும், மனைவியின் கரத்தால் தாம்பூலத்தையும், அரசனின் கரத்தால் பரிசையும் பெற வேண்டும்.

251.
வஸ்த்ரதானபலம் ராஜ்யம் பாதுகாப்யாம் ச வாஹனம்
தாம்பூலாத்போகமாப்னோதி அன்னதானாத்பலத்ரயம்

உடையைத் தானமளிக்க அரசும், காலணியைத் தானமளிக்க வாகனமும், தாம்பூலத்தைத் தானமளிக்க இன்பமும் வாய்க்கும். ஏழைக்கு அன்னதானமளிக்க முந்தைய எல்லாப் பலன்களும் ஒருங்கே கிட்டும்.

252.
தீரே தீரே ரே மனா தீரே ஸப் குச் ஹோயே
மாலீ ஸீஞ்ச்சே ஸௌ கடா ருது ஆயே பல் ஹோயே
-கபீர்

ஓ மனமே! தோட்டக்காரன் நூறு குட நீர் வார்த்தாலும், அததற்குரிய நிதானத்துடனேயே, அதற்குரிய பருவத்திலேயே பழங்கள் கனியும்.

253.
படா ஹுவா தோ க்யா ஹுவா ஜைஸே பேட் கஜூர்
பந்தீ கோ சாயா நஹீ பல் லாகே அதிதூர்
-கபீர்

பிரபலமாக இருப்பதால் என்ன பயன்? பேரீச்சை மரத்தின் கீழ் இளைப்பாற நிழலோ, கையெட்டும் தொலைவில் பழமோ இருப்பதில்லை.

254.
விரலா ஜானந்த்தி குணான் விரலா: குர்வந்த்தி நிர்தனே ஸ்நேகம் 
விரலா: பரகார்யரதா: பரதுக்கேனாபி துக்கிதா விரலா:

பிறரின் குணங்களைப் பாராட்டுவோரும், வறியோரிடம் நட்புக் கொள்வோரும், பிறரின் வேலையில் அக்கறை கொள்வோரும்,  பிறரின் துயரில் துயருறுவோரும்  வெகு சிலரே.

255.
யோஜனானாம் ஸஹஸ்ரம் து சனைர்கச்சேத் பிபீலிகா 
அகச்சன் வைனதேயோபி பதமேகம் ந கச்சதி 

விடாமுயற்சி ஓர் எறும்பை ஆயிரம் மைல்களாலானாலும் கடக்கச் செய்யும். முயற்சியின்மை ஓர் கழுகை ஓரடி கூட நகர்த்தாது.

256.
கன்யா வரயதே ரூபம் மாதா வித்தம் பிதா ஸ்ருதம் 
பாந்தவா: குலமிச்சந்தி மிஷ்ட்டான்னே இதரேஜனா:

வரனின் உருவத்தில் கன்னியும், வளத்தில் அவள் தாயும், அறிவில் தந்தையும், குலப் பின்னணியில் சகோதரர்களும் கவனம் செலுத்த, பிறர் அருமையான ஒரு விருந்துக்கு ஆர்வமாய் இருக்கிறார்கள். 

257.
ஆஷா நாம் மனுஷ்யாணாம் காசிதாச்சர்யச்ருங்கலா 
யயா பத்தா: ப்ரதாவந்தி முக்தாஸ்திஷ்டந்தி பங்குவத் 

ஆசை என்பது ஒரு ஆச்சர்யமான சங்கிலி. இச்சங்கிலியில் கட்டுற்றவர்கள் ஏதொன்றின் பொருட்டோ சதா அலைந்து திரிகிறார்கள். கட்டுறாதவர்கள் 
ஊனமுற்றோனைப் போல எதனிலும் பற்றற்று இருக்குமிடத்திலேயே இருக்கிறார்கள்.

258.
உஷ்ட்ராணாம் ச விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா:
பரஸ்பரம் ப்ரசம்ஸந்தி அஹோ ரூபமஹோ த்வனி:

ஒட்டகங்களின் திருமணத்தில் கழுதைகள் பாட்டிசைத்தன. "அடடா என்ன அழகு?" என்று கழுதைகள் மயங்க, "ஆஹா என்ன குரல்?" என்று வியந்தன ஒட்டகங்கள்.  

259.
மனஸா சிந்திதம்கர்மம் வசஸா ந ப்ரகாசயேத் 
அன்யலக்ஷிதகார்யஸ்ய யத: ஸித்திர்ந ஜாயதே 

மனதில் தீட்டிய திட்டத்தைப் பிறரிடம் பகிர வேண்டாம். அப்படிப் பகிரப்பட்ட லட்சியம் வெற்றியடையாது.

260.
கதேர்பங்க: ஸ்வரே ஹீனோ காத்ரே ஸ்வேதோ மஹத்பயம் 
மரணே யானி சிஹ்னானி தானி சின்ஹானி யாசகே 

நடை தடுமாறுதல், குரல் உடைதல், வியர்த்தல், அச்சம் இவையெல்லாம் மரணத்தினது போலவே யாசகனின் அடையாளங்களும்.

4 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஒவ்வொரு பிராணிகளிடமும் நாம் கற்றுக்கொள்ள எவ்ளோ விஷயங்கள்!

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

G.M Balasubramaniam சொன்னது…

விலங்கினமிருந்து நாம் கற்க வேண்டியது நிறையவே உள்ளது.எங்கிருந்து ஏது கற்றாலும் கற்றபடி நடப்பது என்பது இலகுவான விஷ்யமாய் இல்லையே சுந்தர்ஜி.

அப்பாதுரை சொன்னது…

இதே கருத்து அர்த்தசாஸ்திரத்தில் வருகிறது என்று நினைக்கிறேன்.

எப்படி பொறுமையாக இதையெல்லாம் படித்து எழுதுகிறீர்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது.

ஓ..மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே ஒரு பிறவி போதாது சுந்தர்ஜி..:)

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நன்றி கோபு சார். பிராணிகளிடமிருந்து மட்டும்தானா?

நன்றி ஜி.எம்.பி. சார். இலகுவாக இல்லை என்பதால் சொல்லாமல் விட்டு விடலாமா? என்றாவது யாருக்காவது பயன்படும். எனக்கு இப்போது பயன்படுவது போல.

நன்றி அப்பாதுரை. நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒன்றைச் செய்யும் போது களைப்படைவதில்லை என்னும் பாலபாடம் உந்தித் தள்ளிச் செல்கிறது. தன்னுடைய 24 குருமார்களைப் பற்றி தத்ராத்ரேயர் உபதேசிக்கும் அவதூத கீதையின் தாக்கம்தான் இது.

முன்னால் ஒரு முறை அவதூத கீதையை எழுதியிருக்கிறேன். மீண்டும் இப்போது ஒருமுறை எழுத நினைக்கிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...