22.9.13

கத்திச் சண்டை

தூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதாவது எடுத்துப் புரட்டுவது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை.

நெடுநாட்களுக்குப் பின் இந்தக் கதையை நேற்றிரவு வாசித்தேன். நெடுநாட்கள் என்பது பதினைந்து வருடங்கள். இப்போது வாசிக்கையில் அந்தக் கதை மனதுக்கு மிகப் புதியதாக, நெருக்கமாக இருந்தது. படித்த பின்னும் தூங்க முடியாது போனது.   

நான் ரசித்த மிக அற்புதமான கதை இப்போது உங்கள் வாசிப்புக்கு அல்லது மறுவாசிப்புக்கு.

########

மார்கழி மாசத்து நாலாம் வாரம். அதாவது, குளிர் ஜாஸ்தி. அதிலும், வேதபுரம் கடற்கரைப் பட்டினம். குளிர் மிகவும் ஜாஸ்தி. ஒரு நாள் ராத்திரி நான் குளிருக்குப் பயந்து சுகாதார சாஸ்திரத்தைக் கூடப் பொருட்டாக்காமல், என் அறைக்குள் நாலு ஜன்னல்களையும் சாத்தி, முத்திரை வைத்து விட்டுப் படுத்துக் கொண்டிருந்தேன்.

விடிய இரண்டு ஜாமம் இருக்கும்போது விழித்துக்கொண்டேன். அதற்கும் குளிர்தான் காரணம். வாடை குளு குளுவென்று வீசுகிறது. வடபுறத்து ஜன்னலின் கதவுகள் காற்றில் தாமாகவே திறந்து கொண்டன. எழுந்து போய் ஜன்னலை நேராக்குவோமென்று யோசித்தால் அதற்கும் சோம்பராக இருந்தது. போர்வையை நீக்கிவிட்டு இந்தக் குளிரில் எவன் எழுந்துபோய் ஜன்னலைச் சாத்துவான்? என்ன செய்வோம் என்று சங்கடப்பட்டுக் கொண்டே படுத்திருந்தேன். மழை இதற்குள்ளே பெரிதாக வந்துவிட்டது. மழை களகளவென்று கொட்டுகிறது. வாடைக் காற்று வந்து பல்லைக் கட்டுகிறது.

உயிரை வெறுத்து தைரியத்துடன் எழுந்து போய் ஜன்னலைச் சாத்துவோம் என்று சொல்லி யெழுந்தேன்.

அப்போது ஒரு பண்டாரம் சங்கூதிச் சேகண்டி யடித்துப் பாடிக்கொண்டு வந்தான். மார்கழி மாசத்தில் வருஷந்தோறும் ஒரு வள்ளுவன் வந்து பாதி ராத்திரி நேரத்திலேயே வேதபுரத்து வீதிகளில் எல்லாம் திருவாசகம் பாடிக் கொண்டு சங்கூதிக் கொண்டு சேகண்டி யடித்துக் கொண்டு சுற்றுவது வழக்கம். அவன்தான் இந்த வருஷமும் வந்துகொண்டிருப்பானென்றெண்ணி நான் ஆரம்பத்தில் ஒரு நிமிஷம் கவனியாமல் இருந்தேன். பிறகு கணீர் என்ற பாட்டுச் சத்தம் காதில் வந்து மதுரமாக விழுந்தது. அடா இது பழைய வள்ளுவனுடைய குரலில்லை. இது ஏதோ புதிய குரலாக இருக்கிறதென் றெண்ணி நான் குளிரையும் கவனியாமல் ஜன்னல் ஓரத்திலே கொஞ்சம் நின்றேன். மழை கொட்டுகிறது. அறைக்குள்ளே எனக்குக் கைகால் விறையலெடுக்கிறது.

அந்தப் பண்டாரம் வஸந்த காலத்தில், மாலை நேரத்தில், பூஞ்சோலையில் ராஜகுமாரன் ஒருவன் காற்று வாங்கிக் கொண்டு ஒய்யாரமாக நடப்பதுபோல (அந்தப் பண்டாரம்) அந்த மழையில் நடந்து செல்லுகிறான். பிரமானந்தமாகத் திருவாசகம் பாடுகிறான்:

"பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறை போலும் காணேடி."

இந்தப் பாட்டை அவன் பாடின ராகம் என் மனதை விட்டு இப்போதுகூட நீங்கவில்லை. மனுஷ்ய கானம் போலில்லை. தேவகானம் போலே யிருந்தது. "ஹே! யாரப்பா பண்டாரம் நில்லு!" என்று சொல்லிக் கூவினேன்.

அவன் நின்றான். "நீ போன வருஷம் திருப்பள்ளி யெழுச்சி பாடி வந்தவனாகத் தோன்றவில்லையே? நீ யார்?" என்று கேட்டேன். "நான் போன வருஷம் பாடினவனுடைய மகன். நான் பாடினது திருச்சாழல்" என்றான். இவன் அதிக பிரசங்கி என்று தெரிந்துகொண்டு, "உன் பெயரென்ன?" என்று கேட்டேன். "என் பெயர் நெட்டைமாடன்" என்று சொன்னான். "சரி போ" என்று சொன்னேன். அவன் இரண்டடி முன்னே போய் மறுபடி திரும்பி வந்து, "ஐயரே, உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டான்.

"என் பெயர் காளிதாசன்" என்று சொன்னேன்.

"ஓஹோ! பத்திரிகைக்குக் கதைகள் எழுதுகிறாரே, அந்தக் காளிதாசன் நீர்தானோ?" என்றான்.

"ஓஹோ! இவன் பத்திரிகை படிக்கிறானா" என்றெண்ணி வியப்புற்று, நான் அவனிடம் "தம்பி. நெட்டைமாடா; உனக்குச் சங்கீதம் யார் கற்றுக் கொடுத்தார்கள்? நீ இதுவரை எந்த ஊரிலே வளர்ந்தாய்?" என்று கேட்டேன். அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்:

"ஏ, ஐயரே, நான் மழையில் நிற்கிறேன். நீ அறைக்குள் நின்று கொண்டு என்னிடம் நீண்ட கதை பேசுகிறாயே. மேல் தளத்திலிருந்து கீழே இறங்கிவா; வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசலாம். நானும் உன்னிடத்தில் பல கேள்விகள் கேட்க வேண்டுமென்று நெடுநாளாக யோசனை பண்ணிக்கொண்டிருந்தேன், இறங்கி வருவீரா?" என்று கேட்டான்.

"இவன் என்னடா! வெகு விசேஷத்தனாகத் தெரிகிறதே!" என்று நான் ஆச்சரியப்பட்டுக் கீழே இறங்கி வருவதாக ஒப்புக் கொண்டேன். அவன் வாசல்படி யேறித் திண்ணையில் உட்கார்ந்தான். நான் கீழே போகையில் ஒரு மழை லாந்தர் கொளுத்திக் கொண்டு போனேன். அவன் கையிலும் ஒரு மழை லாந்தர் கொண்டு வந்திருந்தான். திண்ணையில் போய் உட்கார்ந்த உடனே நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டோம்.


அவன் தலை சுத்த மொட்டை; உடம்பு ஒற்றைநாடி; சதைபற்றுக் கிடையாது. ஆனால் உறுதியான உடம்பு; மேலே துணி கிடையாது. இடுப்பில் மாத்திரம் ஒரு துணி கட்டிக் கொண்டிருந்தான். மேலெல்லாம் மழைத் தண்ணீர் ஓடுவதை அவன் துடைக்கவில்லை. குளிரினால் அவன் முகம் விகாரப்படவில்லை. அவனைப் பார்த்தவுடனே எதனாலேயோ ஹம்ஸ பக்ஷியின் ஞாபகம் வந்தது. 

ஹாம்! ஆமாம்! அவன் முன்பு நடந்து செல்லக் கண்டபோது நான் என் மனதில், "இவன் என்னடா. அன்ன நடை நடக்கிறான்!" என்று நினைத்துக் கொண்டேன். மேலும் இவன் ஆசாமியைப் பார்த்தால் கோயில் அன்ன வாகனம் எத்தனை பொறுமையும் இனிமையுமாகத் தோன்றுமோ அத்தனை பொறுமையும் இனிமையுமான முக வசீகர முடையவனாக இருந்தான்.

நான் அப்போது அவனை நோக்கி: "என்னிடம் ஏதோ கேள்விகள் கேட்க வேண்டுமென்று நெடுங்காலம் யோசனை செய்து கொண்டிருந்ததாகச் சொன்னாயே, கேள்" என்றேன்.

அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்:

"உன்னிடம் கேள்விகள் கேட்க வேண்டுமென்ற விருப்பமிருந்ததாக நான் தெரிவிக்க வில்லை. உன்னிடம் சம்பாஷணை செய்ய வேண்டுமென்ற விருப்ப மிருந்ததாகச் சொன்னேன். நீ ஏதாவது கேள்வி கேள். நான் ஜவாப் சொல்லுகிறேன். அதுதான் எனக்குகந்த சம்பாஷணை" என்றான். "இதென்ன சங்கடம்" என்று யோசித்து, நான் இவனிடம் முன் கேட்ட கேள்விகளைத் திரும்பவும் கேட்டேன். "நீ சங்கீதம் எங்கே படித்தாய்? இத்தனை காலம் எந்த ஊரில் இருந்தாய்?" என்று வினவினேன்.

நெட்டை மாடன் சொல்லுகிறான்: "அறிவூர் வீணை ரகுநாத பட்டர் மகன் அஞ்ஜனேய பட்டரிடம் நான் சங்கீதம் வாசித்தேன். இதுவரை அந்த ஊரிலே தான் வாசம் செய்தேன்" என்றான்.

அப்போது நான் கேட்டேன்: "தம்பி, நெட்டைமாடா, நீ ஜாதியில் வள்ளுவனாயிற்றே! ரகுநாத பட்டர், அஞ்ஜனேய பட்டர் என்ற பெயர்களைப் பார்த்தால் அவர்கள் பிராமணராகத் தோன்றுகிறதே! உங்கள் ஜாதியார் பிராமணருக்குச் சமீபத்தில் வந்தால்கூட தீண்டல் தோஷம் என்று சொல்லுவது வழக்கமாயிற்றே. அப்படி யிருக்க நீ அவர்களிடம் சங்கீதம் எப்படிப் படித்தாய்?" என்றேன்.

அதற்கு நெட்டை மாடன் சொல்லுகிறான்: "நீ கேட்ட கேள்விக்கு ஜவாப் சொல்ல வேண்டுமானால் என்னுடைய கதையை ஆரம்பத்திலிருந்தே தொடங்கிச் சொல்ல வேண்டும். அவ்வளவு தூரம் பொறுமையுடன் கேட்பாயா?" என்றான்.

"கேட்கிறேன்" என்று சொல்லி உடன்பாடு தெரிவித்தேன். அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்:

"நான் வேதபுரத்தில் இருபத்தாறு வருஷங்களுக்கு முன் பிறந்தேன். என் தகப்பனார் சோற்றுக் கில்லாமல் நான் நாலு வயதுப் பையனாக இருக்கும்போது ஒரு சர்க்கஸ் கம்பெனியாருக்கு என்னை விற்று விட்டார். அந்தக் கம்பெனியில் சூராதி சூரத்தனமான வேலைகள் செய்து மிகுந்த கீர்த்தி சம்பாதித்தேன். பன்னிரண்டு வயதாக இருக்கும்போது அறிவூருக்குப் போனேன். அந்தக் கம்பெனித் தலைவரான மகாராஷ்டிரப் பிராமணருக்கு என்னிடம் மிகுந்த அபிமானம். 

அறிவூர் என்பது மலை நாட்டில் ஒரு பெரிய ஜமீந்தாருடைய ராஜதானி நகரம். அந்த ஊரில் சர்க்கஸ் இரண்டு மாசம் ஆடிற்று. அப்போது என்னுடைய எஜமானனாகிய ராயருக்கு வயதாய் விட்டபடியால் சீக்கிரத்தில் கம்பெனியைக் கலைத்து விட்டுப் பண்டரிபுரத்துக்குப் போய் அங்கு வீடு வாங்கித் தனது முதுமைப் பருவத்தை ஹரி பக்தியில் செலவிட வேண்டுமென்ற யோசனை பண்ணிக் கொண்டிருந்தார்.

அவருக்கும் ஜமீந்தாருக்கும் மிகுந்த நட்புண்டாயிற்று. ஜமீந்தார் கத்திச் சண்டையில் கெட்டிக் காரனாகவும் வயதில் குறைந்தவனாகவும் தனக்கொரு பக்கச் சேவகன் வேண்டுமென்று விரும்பினார். என்னுடைய எஜமானனாகிய ராயர் என்னைச் சிபார்சு பண்ணினார். இதற்கிடையே எனது தகப்பனாருக்கும் எஜமான் ராயருக்கும் அடிக்கடி கடிதப் போக்குவரவு நடந்துகொண்டு வந்தது. எனது தகப்பனாரும் என்னை அடிக்கடி பல ஊர்களில் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அறிவூர் ஜமீந்தார் எனக்கு அரண்மனையிலே சோறு போட்டு மகன் போலே வளர்த்தார். சங்கீதம் அந்த சமஸ்தானத்து பாகவதராகிய அஞ்சனேய பட்டரிடம் படித்தேன். யோகாப்பியாசம் பண்ணி யிருக்கிறேன். கத்திச் சண்டையிலே பேர் வாங்கி யிருக்கிறேன். ஆறு பாஷை பேசுவேன், பாடுவேன், நாட்டிய மாடுவேன், மிருதங்க மடிப்பேன். ஆனை யேற்றம், குதிரை யேற்றம், கழைக் கூத்து, மல் வித்தைகள் - எனக்குப் பல தொழிலும் தெரியும்" என்று சொன்னான்.

இதற்குள் பொழுது விடிந்து விட்டது. நல்ல சூரியோதயத்தில் அவன் முகத்தைப் பார்க்கும்போது நல்ல சுந்தர ரூபமுடையவனாக இருந்தான்.

அப்போது நான் அவனை நோக்கி: "நீ இன்று நம்முடைய வீட்டிலேயே காலை நேரம் போஜனம் செய்துகொள். உன்னுடைய கத்தி சுற்றும் திறமையை எனக்குக் கொஞ்சம் காண்பி" என்றேன். 'சரி'யென்று சம்மதப்பட்டான். பின்பு சொல்லுகிறான்: "எனக்குச் சரியாகக் கத்தி சுழற்றக் கூடியவர்கள் இந்த ஊரில் ஒரே மனுஷ்யன் தான் இருக்கிறார். நான் போய் என் வீட்டிலிருந்து கத்திகளை யெடுத்துக் கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு போய், மறுபடி ஐந்து மணியிருக்கும்போது வந்தான்.

இவன் பட்டாக் கத்தி, உண்மையான சண்டைக் கத்திகள் கொண்டு வருவானென்று நான் நினைத்திருந்தேன். இரண்டு மொண்ணைவாள் - வெண்ணெயை வெட்டும் சர்க்கஸ் கத்திகள் கொண்டு வந்தான். தனக்கு எதிர் நின்று சண்டை போடக் கூடிய வீராதி வீரனை என்னிடம் அழைத்து வருவதாக அவன் வாக்குக் கொடுத்தபடி அந்த மனிதனைத் தேடிப் பார்த்ததாகவும், அகப்படவில்லை என்றும் மற்றொரு நாள் கூட்டி வருவதாகவும் இன்று தான் மாத்திரம் தனியே கத்தி வீசிக் காண்பிப்பதாகவும் சொன்னான். 

'சரி' யென்று சொல்லி நான் அவனுக்கு முதலாவது காபியும், இட்டிலியும் கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் சொன்னேன். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது குள்ளச்சாமியார் என்ற யோகீசுரர் அங்கே வந்தார். அவரைக் கண்டவுடன் நெட்டைமாடன் எழுந்து ஸலாம் பண்ணி, 'ஜராம், ராம், மகாராஜ்!' என்றான். அவரும் இவனைக் கண்டவுடன். 'ராம், ராம்', என்றார். பிறகு நெடுநேரம் இருவரும் மலையாள பாஷையில் பேசிக் கொண்டார்கள்.

எனக்கு மலையாளம் அர்த்தமாகாத படியால் நான் அவர்களுடைய சம்பாஷணையைக் கவனிக்க வில்லை. குள்ளச்சாமியாரை நான் குருவென்று நம்பியிருக்கிறபடியால் அவருக்கும் கடையிலிருந்து வாழைப்பழம், வாங்கிக் கொண்டு வந்து பாலும் பழமும் கொடுத்தேன். இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்தார்கள். கீழ்த் தளத்தில் சாப்பிட்டார்கள். 

பிறகு நான் வெற்றிலைத் தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு மேல்மாடியில் பூஜா மண்டபத்துக்குப் போகலாம் என்று கூறி அழைத்து வந்தேன். இருவரும் மேல் மாடிக்கு வந்தார்கள். நான் ஊஞ்சலின் மீது அவர்கள் இருவரையும் வீற்றிருக்கும்படி செய்து தாம்பூலம் கொடுத்தேன். இருவரும் தாம்பூலம் போட்டுக் கொண்டார்கள். பிறகு ஒரு க்ஷணத்துக்குள்ளே நெட்டை மாடன் வெளி முற்றத்திலிருந்து ஒரு நாற்காலி யெடுத்துக் கொண்டுவந்தான்.

அதன் மேலே ஏறிக்கொண்டு ஊஞ்சல் சங்கிலிகளைக் கழற்றினான். அடுத்த க்ஷணத்துக்குள் ஊஞ்சலையும் கழற்றினான். அடுத்த க்ஷணத்துக்குள் ஊஞ்சலையும், சங்கிலிகளையும் கொண்டு சுவரோரத்தில் போட்டு விட்டான். பிறகு நெட்டை மாடன் என்னை நோக்கி "எனக்குச் சமானமாகக் கத்தி வீசத் தெரிந்தவர் இந்த ஊரில் ஒருவர் தானுண்டு என்று சொன்னேனே! அவர் யாரெனில் இந்தச் சாமியார் தான்" என்று குள்ளச் சாமியாரைக் காட்டினான். நான் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்தவனாய் விட்டேன்.

ஒரு க்ஷணத்துக்குள் அந்த இருவரும் தலைக்கொரு கத்தியாக எடுத்துக் கொண்டு வீசத் தொடங்கி விட்டார்கள். நெடுநேரம் அவர்களுக்குள்ளே கத்திச் சண்டை நடந்தது. அதைப் பார்த்து நான் பிரமித்துப்போய் விட்டேன். அத்தனை ஆச்சரியமாக அவ்விருவரும் கத்தி சுழற்றினார்கள். ஒருவருக்கும் காயமில்லை. ஆனால் நடுவே நடுவே இவன் தலை போய் விடுமோ! அவர் தலை போய் விடுமோ! என்று எனது நெஞ்சு படக்குப் படக்கென்று புடைத்துக் கொண்டிருந்தது.

பிறகு இருவரும் கத்தியைக் கீழே வைத்து விட்டுக் கொஞ்சமேனும் ஆயாசமில்லாமல் மறுபடியும் மலையாளத்தில் சம்பாஷணை செய்யத் தொடங்கி விட்டார்கள். கொஞ்சம் பொழுது கழிந்த பின்பு நெட்டை மாடன் போய் விட்டான். குள்ளச் சாமியார் என்னை நோக்கிச் சொல்லுகிறார்: "தம்பி, காளிதாஸா, இந்த நெட்டை மாடன் ராஜயோகத்தினால் சித்தத்தைக் கட்டினவன். இவனுக்கு ஈசன் யோகசித்திக்கு வாட்போரை வழியாகக் காண்பித்தான். இவனுக்கு நிகராக வாள் சுழற்றுவோர் இந்தப் பூமண்டலத்தில் யாரும் கிடையாது. 

ஆனால் இவன் தன்னைக் கொல்ல வந்த பாம்பையும் கொல்லக் கூடாதென்று அஹிம்ஸா விரதத்தைக் கைக்கொண்ட மகா யோகியாதலால், கொலைத் தொழிலுக்குரியதான கூர்வாளை இவன் கையினால் தீண்டுவது கிடையாது. உடம்பு நன்றாக வசமாக்கும்படி செய்கிற ஹடயோக வித்தைகளில் ஒன்றாக அதை நினைத்து உன் போன்ற அபிமானிகளுக்கு மாத்திரம் தனது திறமையை சர்க்கஸ் கத்தி வைத்துக் கொண்டு காண்பிப்பான். 

வள்ளுவர் குலத்தில் நம் ஊரிலேயே இப்படி ஒரு மகான் இருப்பது உனக்கு ஆச்சர்யமாகத் தோன்றலாம். இனிமேல் இதற்கெல்லாம் ஆச்சரியப்படாதே. ஹிந்துஸ்தானத்துப் பரதேசி பண்டாரங்களை யெல்லாம் மிகுந்த மதிப்புடன் போற்று. பரதேசி வேஷத்தைக் கண்டால் கும்பிடு போடு. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ? உனக்கு மேன்மேலும் மகான்கள் தரிசனம் தருவார்கள்" என்றார்.

நான் ஹிந்துஸ்தானத்தின் மகிமையை நினைத்து வந்தே மாதரம் என்று வாழ்த்திக் குள்ளச்சாமியாரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். அவர் "ஜீவ" என்று வாழ்த்தி விட்டு, விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

( பாரதியின் "கத்திச் சண்டை" தான் நீங்கள் இப்போது வாசித்த கதை.) 

7 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

பிரமாதம் ஜி!! பாடல்கள் மட்டுமல்ல... கதைகளிலும் அவரைத் தட்டிக் கொள்ள இனியும் யாருமில்லை.

அவரது கதைத் தொகுப்பு கைக்கு வந்து படிக்காமல் வைத்திருக்கும் என் முட்டாள்தனத்தை நொந்துகொண்டு, கையில் எடுத்துக் கொள்ளச் செய்து விட்டீர்கள்! நன்றி, நன்றி!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி...
அழகான கதை...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாரதியாரின் கதை வசீகரித்தது..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பாரதியாரின் கதைத் தொகுப்பினை உடனே வாங்க வேண்டும். நன்றி

G.M Balasubramaniam சொன்னது…


பாரதியின் கதைகளைப் படிக்கும் வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை. கிடைக்கச்செய்த உங்களுக்கு நன்றி சுந்தர்ஜி. எழுத்தின் நடை கதை சொல்லும் முறை இவையெல்லாம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் பொனது போல் இருக்கிறது.

vasan சொன்னது…

வள்ளுவ குலத்து நபரை வர்ணித்த போதும்,
அவரின் கவிதை, சங்கீதம் பற்றி சிலாக்கித்த போதும்
குங்கும பொட்டுக்காரன் வாசனை பொட்டில் அடித்தது.
குள்ளச் சாமியார் வந்தவுடன், இது நம்ம முண்டாசுகாரன் என்ற செய்தி தலைக்கேறிவிட்டது அவன்தான் இதை சொல்லக்கூடியவன் என்பதும் புரிந்தது. எனக்கு புதிது இக்கதை.
"என்றும் புதிது" அவன்.

அப்பாதுரை சொன்னது…

இந்தக் கதையை இப்போது தான் படிக்கிறேன். நன்றிஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...