27.7.13

சுபாஷிதம் - 5

81.
ப்ரதமே நார்ஜிதா வித்யா த்விதீயே நார்ஜிதம் தனம்
த்ருதீயே நார்ஜிதம் புண்யம் சதுர்த்தே கிம் கரிஷ்யதி

முதல் பருவத்தில் கல்வியையும், இரண்டாம் பருவத்தில் பொருளையும், மூன்றாம் பருவத்தில் புண்ணியத்தையும்  பெறாத ஒருவனுக்கு நான்காம் பருவத்தில் அடைய என்ன இருக்கப் போகிறது?

[ ஹிந்து தர்மத்தின் படி, 
முதலாம் பருவம் ப்ரும்மச்சர்யாஸ்ரமம் (தனக்காய்க் கற்றலும், கேட்டலும்); 
இரண்டாம் பருவம் க்ருஹஸ்தாஸ்ரமம் (தன் குடும்பத்தின் பொருட்டுப் பொருளீட்டலும், இனவிருத்தியும்); 
மூன்றாம் பருவம் வானப்ரஸ்தாஸ்ரமம் (தன் சமூகத்தை முன்னிறுத்திப் பொருட்பற்றைத் துறந்து புண்ணியம் எய்துதல்); 
நான்காம் பருவம் சன்யாஸஆஸ்ரமம் (எல்லாவற்றையும் துறந்து வீடு பேறு எய்தல்) ]    

82.
அநாரம்போ ஹி கார்யாணாம் ப்ரதமம் புத்திலக்ஷணம்
ப்ராரப்தஸ்ய அந்தகமனம் த்விதீயம் புத்திலக்ஷணம்

நம் சக்திக்கு அப்பாற்பட்ட செயலைத் துவங்காதிருப்பது புத்திசாலித்தனத்தின் முதல் படி; அப்படித் துவங்கிய செயலையும் விடாது செய்து முடிப்பது அதன் இரண்டாம் படி.

83.
லௌகிகானாம் ஹி ஸாதூனாம் அர்தம் வாகனுவர்த்ததே
ரிஷீணாம் புனராதயானாம் வாசம் அர்தோனுதாவதீ

சாதாரண மனிதர்கள் உதிர்க்கும் விளக்கங்களை வார்த்தைகள் தொடர்கின்றன; ஆனால் முனிபுங்கவர்களின் வார்த்தைகளையோ  விளக்கங்கள் தொடர்கின்றன.

84.
பரோபதேஷ்வேலாயாம் ஷிஷ்டா: ஸர்வே பவந்தி வை
விஸ்மரந்தீஹ ஷிஷ்டத்வம் ஸ்வகார்யே ஸமுபஸ்திதே

பிறரின் துயருக்கு அறிவுரை வழங்கும் எல்லோரும் தன் சோதனைக் காலங்களில் அவ்விதமான புத்தியை உபயோகிப்பதில்லை.

85.
நிர்விஷேணாபி ஸர்பேண கர்தவ்யா மஹதி ஃபணா
விஷமஸ்து ந சாண்யஸ்து ஃபடாடோபோ பயங்கர:

நச்சுள்ள போதும், அற்ற போதும் பாம்பு கடிப்பது போல் சீறும்; பிறரை அச்சப்படுத்த அந்தப் படாடோபம் தேவை.     

86.
குணவந்த: க்லிஷ்யந்தே ப்ராயேண பவந்தி நிர்குணா: ஸுகின:
பந்தனமாயாந்தி ஷுகா யதேஷ்டசஞ்சாரிண: காகா:

நற்குணம் வாய்த்தவர்கள் துன்புறுவதும், பிறர் சுகமுற்றிருப்பதும் கிளி கூண்டில் அடைபட்டிருப்பதையும், காக்கை சுதந்திரமாய் வானில் பறப்பதையும் ஒத்தது.    

87.
அபிமானோ தனம்யேஷாம் சிரஞ்சீவந்தி தே ஜனா:
அபிமானவிஹீனானாம் கிம் தனேன கிமாயுஷா

சுய கௌரவம் பெற்றவர்களே இறவாமையெனும் செல்வம் பெற்றவர்கள்; சுய கௌரவம் அற்றவர்களோ எத்தனை செல்வம் பெற்றிருந்தும் வாழ்ந்து என்ன பயன்?

88.
நாஸ்தி வித்யா ஸமம் சக்ஷூ நாஸ்தி ஸத்ய ஸமம் தப:
நாஸ்தி ராக ஸமம் துக்கம் நாஸ்தி த்யாக ஸமம் ஸுகம்

கல்வியைப் போன்றொரு கண்ணில்லை; வாய்மையைப் போன்றொரு தவம் இல்லை; பற்றைப் போன்றொரு துன்பம் இல்லை; தியாகத்தைப் போன்றொரு இன்பம் இல்லை.

89.
த்யஜந்தி மித்ராணி தனைர்விஹீனம் புத்ராஷ்ச தாராஷ்ச ஸஹஜ்ஜனாஷ்ச
தமர்தவந்தம் புனராக்ஷயந்தி அர்தோ ஹி லோகே மனுஷஸ்ய பந்து:

செல்வம் இழந்தவனை பெண், பிள்ளை, மனைவி, சுற்றார் ஒருவரும் நெருங்க மாட்டார்கள்; அவனே மீண்டும் செல்வத்தைக் குவிக்கையில் விட்டுச் சென்ற அனைவரும் திரும்பிடுவார். செல்வமே இப்பாரில் நிலையான சுற்றம். 

90.
யஸ்து ஸஞ்சரதே தேஷான் ஸேவதே யஸ்து பண்டிதான்
தஸ்ய விஸ்தாரிதா புத்திஸ்தைலபிந்துரிவாம்பஸி

பல திசைகளிலும் பயணிப்பவனும், பல அறிஞர்களுடன் இணைந்திருப்பவனுமான ஒருவனின் அறிவு, நீரில் இடப்பட்ட ஒரு துளி தைலத்தைப் போல் விரிந்து பரவும்.  

(கூர்த்த மதி உடையவன் “தைலபூதி” என்று சமஸ்க்ருதத்தில் அழைக்கப்படுவது வழக்கம்.)

91.
அகாபி துர்நிவாரம் ஸ்துதிகன்யா வஹதி நாம் கௌமாரம்
ஸதப்யோ ந ரோசதே ஸா அஸந்த: அபி அஸ்யௌ ந ரோசந்தே

நன்மக்கள் புகழ்ச்சியை விரும்புவதில்லை; 
புகழ்ச்சியோ பொருத்தமில்லாக் கீழோரை விரும்புவதில்லை; 
(எனில் ”புகழ்ச்சி” எனும் கன்னி யாரை மணம் முடிப்பாள்?)

92.
குஸுமம் வர்ணசம்பன்னம்கந்தஹீனம் ந ஷோபதே
ந ஷோபதே க்ரியாஹீனம் மதுரம் வசனம் ததா

நிறத்தால் சிறந்த மலர் நறுமணம் இல்லாவிட்டால் சிறப்படைவதில்லை; 
செயல் ஏதுமின்றி இனிமையான வார்த்தைகளைப் பேசுவோரும் அப்படித்தான். 

93.
உத்ஸாகோ பலவாநார்ய நாஸ்த்யுத்ஸாஹாத்பரம் பலம்
ஸோத்ஸாஹஸ்ய ச லோகேஷு ந கிசிதபி துர்லபம்

உற்சாகம் மனிதனை வலுவுள்ளவனாய் மாற்றுகிறது. உற்சாகத்தைப் போல் சக்தி மிக்கது எதுவுமில்லை; அதனால் சாதிக்கமுடியாதது எதுவும் இல்லை. 

94.
யஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரக்ஞா ஷாத்ரம் தஸ்ய கரோதி கிம்
லோசநாப்யாம் விஹீனஸ்ய தர்பண: கிம் கரிஷ்யதி

சாத்திரங்கள் அத்தனையும் கற்றவனுக்குச் சுய ஞானமின்றி என்ன பயன்?
கண் பார்வையற்றவனுக்குக் கண்ணாடியால் என்ன பயன்?

95.
விஷாதண்யம்ருதம் க்ராஹ்யம் பாலாதபி ஸுபாஷிதம்
அமித்ராதபி ஸத்தத்தம் அமேத்யாதபி காஞ்சனம்

அமுதம் நஞ்சோடாயினும் விலக்கி உண்க;
உண்மை குழந்தையின் வாக்கில் இருப்பினும் ஏற்க;
நற்பண்பு எதிரியின் வசம் இருப்பினும் கொள்க;
சேற்றில் பொன் இருப்பினும் கொள்க;

 96.
வ்யாயாமாத் லப்தே ஸ்வாஸ்தயம் தீர்காயுஷ்யம் பலம் ஸுகம்
ஆரோக்யம் பரமம் பாக்யம் ஸ்வாஸ்தயம் ஸர்வார்தஸாதனம்

உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்யம், வலிமை, நீண்ட ஆயுள், மகிழ்ச்சி கிட்டும்; உடல்நலம் மாபெரும் பேறு; அதனால் அடையமுடியாதது எதுவுமில்லை.  

97.
பிண்டே பிண்டே மதிர்பின்னா குண்டே குண்டே நவம் பய:
ஜாதௌ ஜாதௌ நவாசாரா: நவா வாணீ முகே முகே

இருவரின் சிந்தனை ஒன்றாய் இருப்பதில்லை; இரு குட்டைகளின் நீர் ஒன்றாய் இருப்பதில்லை; சாதிகள் ஒவ்வொன்றும் ஒரே விதம் இருப்பதில்லை; இரு வாய்கள் ஒரே விஷயத்தைப் பேசுவதில்லை. 

98.
நரஸ்ய ஆபரணம் ரூபம் ரூபஸ்ய ஆபரணம் குணம்
குணஸ்ய ஆபரணம் ஞானம் ஞானஸ்ய ஆபரணம் க்ஷமா

மனிதனின் ஆபரணம் தோற்றம்; தோற்றத்தின் ஆபரணம் நற்குணம்; நற்குணத்தின் ஆபரணம் ஞானம்; ஞானத்தின் ஆபரணம் மன்னித்தல்.

(இந்த சுபாஷிதத்துக்கு மொழிபெயர்ப்பு அவசியமா? எனத் தோன்ற வைக்கிறது தமிழோடு பின்னிப் பிணைந்த நெருக்கம்)

99.
அபூர்வ: கோபி கோஷோயம் விததே தவ பாரதி
வ்யயதோ வ்ருத்திம் ஆயாதி க்ஷயம் ஆயாதி சஞ்சயாத்

வாணீ! உன் செல்வம் எத்தனை வினோத குணமுடையது! கொடுக்கக் கொடுக்கப் பெருகுகிறது. கொடுக்காது போனாலோ தேய்ந்து கரைகிறது.

100.
ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி
அக்னிம் யமம் மாதரிஷ்வானம் ஆஹு:

வாய்மை ஒன்றே; முனிவர்கள் அதை நெருப்பு, எமன், காற்று என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

(படக் குறிப்பு: ஞானம் என்ற சொல்லைச் சீன மொழியில் குறிக்கும் சொல்)

5 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

முதலாம் பருவம் ப்ரும்மச்சர்யாஸ்ரமம் (தனக்காய்க் கற்றலும், கேட்டலும்);
இரண்டாம் பருவம் க்ருஹஸ்தாஸ்ரமம் (தன் குடும்பத்தின் பொருட்டுப் பொருளீட்டலும், இனவிருத்தியும்);
மூன்றாம் பருவம் வானப்ரஸ்தாஸ்ரமம் (தன் சமூகத்தை முன்னிறுத்திப் பொருட்பற்றைத் துறந்து புண்ணியம் எய்துதல்);
நான்காம் பருவம் சன்யாஸஆஸ்ரமம் (வீடு பேறு எய்தல்)

தெரிந்து கொண்டேன் ஜி....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நற்குணம் வாய்த்தவர்கள் துன்புறுவதும், பிறர் சுகமுற்றிருப்பதும் கிளி கூண்டில் அடைபட்டிருப்பதையும், காக்கை சுதந்திரமாய் வானில் பறப்பதையும் ஒத்தது.

சிறப்பான மன்ம் நிறைவுற்ற ஆக்கங்கள்.. பாராட்டுக்கள்..!

G.M Balasubramaniam சொன்னது…


நீதிக் கோவை பல விஷயங்களையும் தொட்டுச் செல்கிறது. நமக்குட் தெரிந்து கொள்ளத் தேவையானவை அவை.

vasan சொன்னது…

இவைகளைப் படிக்கும் போது
புதிதாய் ஏதும் யாரும் இப்போது
எழுதிடவில்லையோ என்ற ஐயம்
உதிக்கிறது.சுந்தர்ஜி.
கிளிகள் சிறையிலும், காக்கைகள் வெளியிலும்
என்ற செய்தி, வளையாத நீண்ட மரங்கள் தான்
முதலில் வெட்டப்படுகின்றன என்பதை நினைவு
"படுத்தி' செல்கிறது

அப்பாதுரை சொன்னது…

எல்லாமே அருமை - 84ம் 94ம் தனித்து நிற்கின்றன.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...