18.7.13

பிக்ஷு ஸுக்தம் - கொடையின் மேன்மையான பாடல்

அங்கிரஸ ரிஷியின் புதல்வனான பிக்ஷுவின் பெயரால் அழைக்கப்படும் இந்த ஸுக்தம் ரிக் வேதத்தைச் சேர்ந்தது.

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் 117ஆவது பாகத்தில் அமைந்திருக்கும் ஒன்பது ச்லோகங்களும் கொடையின், பரந்த மனப்பான்மையின், பொதுநலத்தின், தானத்தின் மேன்மையை உலகுக்குச் சொன்ன ஆதிமனிதனின் கவிதைகள்.

கொடையின் சிறப்புக்கென்றே கர்ணன் தொடங்கி நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் நிழலாய் இன்றும் நம் கதைகளில் வாழும் மன்னர்களையும், கடையெழு வள்ளல்களையும் நாம் தொந்தரவு செய்ய வேண்டாம். விட்டுவிடுவோம்.

வீடு தேடி வரும் அடியார்க்கு உணவளித்த பின்னே உணவருந்தியவர்களும், விலங்குகள் தங்கள் முதுகைச் சொறிந்து கொள்வதற்கென நடுகல் நட்டவர்களும், தினமும் காக்கைகளுக்கு அன்னம் அளித்த பின் உண்டவர்களும், பூனை- நாய்களுக்கு உணவும், குருவிகளுக்குக் கைப்பிடி தானியமும், அரிசியும் - உளுந்தும் களைந்த கழுநீரை மாடுகளுக்கு அளித்தோரும் கலங்கிய படமாய்ச் சற்றைக்கு முன்னே வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள். நம் கையெட்டும் தொலைவில் பொதுநலத்தின் மணம் வீசும் உதாரணங்கள்.

அரிசி மாவினால் இடப் பட்ட கோலங்களின் வாயிலாக எறும்புகளுக்கு உணவளிப்பதில் துவங்கிய ஒவ்வொரு புதிய நாளும், காக்கைக்கு அளிக்கும் உணவில் கிளைவிட்டு, இரவு நேரங்களில் பசியுடன் திரியும் யாசகர்களின் பசியின் முள்ளை நீக்குவது வரையும் அவர்களின் பரந்த மனம் கொடுத்தலின் தாரையாக, இரக்க குணத்தின் ஊற்றுவாயாக இருந்து வந்தது.

இரு தலைமுறைகளுக்கு முன்னே இரவு பசியுடன் ”அம்மா! வயிறு பசிக்குதம்மா! பிச்சை போடுங்கம்மா!” என்று எல்லாத் தெருக்களிலும் ஒலித்த குரல்கள் காற்றோடு தேய்ந்து போய்விட்டதன் காரணம் வளமை இல்லை. மனிதாபிமானம் தேய்ந்து போனமைதான். அப்படி ஒலித்த குரல்கள் யாசித்தலை விடுத்துத் தாங்களாகவே எடுத்துக்கொள்ளத் துவங்கிவிட்டன. இதைப் பெருகி வரும் குற்றங்கள் நிரூபிக்கின்றன. கொடுப்பவன் அற்றுப்போனபின் பெறுபவன் எங்கிருப்பான்?

தனி வீடுகளில் இருந்த மனிதன் அடுக்குவீடுகளுக்குள் மறைந்து, கதவுகளால் தனக்கும் இந்த உலகத்துக்குமான தொடர்பைச் சாதகமாக தீர்த்துக் கொண்டுவிட்டான். பரந்து விரிந்த மனங்கள், குறுகி உயர்ந்த கட்டிடங்களில் குடிபுகுந்த பின் கொடையின் விரல் தொடாத நாணயங்கள் அதல பாதாளத்தில் புதைந்து கிடக்கின்றன.

நமது தொன்மையான சிந்தனை வளத்தின் வேர்களில் இருந்து இப்போது கிளை பரப்பி நிற்கும் மரத்தின் நிழல் நம் கால்களையும், மனதையும் பொசுக்குவதாக இருக்கிறது.

ஊன்றப்பட்ட நல்வித்திலிருந்து கிளம்பிய இந்தப் பாரம்பர்யமான மரத்தின், பட்ட மரத் தன்மை மனதின் சுவர்களில் ஏக்கத்தை உண்டுபண்ணுகிறது.

பொன்னுக்கு நிகரான இந்த ஒன்பது ச்லோகங்களின் சிந்தனைகளும் நாளைய மனிதனை மனதை வளப்படுத்தட்டும். இறைவா! எம் மனங்களில் மீண்டும் கொடையின் மழை பெருக்கெடுக்கத் துணை செய்.

பிக்ஷு ஸுக்தம்:

1.
ஓம். 
ந வா உ தேவா: க்ஷுதமித்வம் ததுருதாசிதமுப கச்சந்தி ம்ருத்யவ: 
உதோ ரயி: ப்ருணதோ நோப தஸ்யத்யுதாப்ருணன் மடிர்தாரம் ந விந்ததே

பசியை மரணத்துக்குரிய காரணமாக தேவர்கள் விதிக்கவில்லை. நன்றாக உண்பவர்களையும் மரணம் உண்கிறது. தவிர, கொடுப்பவனுக்குச் செல்வம் குறைவதில்லை. கொடுக்காதவனோ தேற்றுவார் அற்றுத் துன்புறுவான். 

2.
ய ஆத்ராய சகமானாய பித்வோன்னவான் ஸன் ரஃபிதாயோபஜக்முஷே
ஸ்திரம் மன: க்ருணுதே ஸேவதே புரோதோ சித்ஸ மர்டிதாரம் ந விந்ததே

எவனொருவன் ஏராளமான உணவு படைத்தவனாய் இருந்தும், உணவு தேவைப்படும் பலவீனர்களுக்கும், உதவி நாடி வரும் தீனர்களுக்கும், மனதைக் கல்லாக்கி உதவ மறுத்து, அவர்களுக்கு முன்னாலேயே உண்டு மகிழ்கிறானோ, அவன் தேற்றுவார் அற்றுத் துன்புறுவான்.   

3.
ஸ இக்போஜோ யோ க்ருஹவே ததாத்யன்னகாமாய சரதே க்ருசாய
அரமஸ்மை பவதி யாமஹூதா உதாபரிஷுக்ருணுதே ஸகாயம்

பலவீனமுற்று உணவைத் தேடி வருபவனுக்கு யார் உடனடியாக உணவளிக்கிறானோ அவனே வள்ளல். அவனுக்கு ஏராளமான வெகுமதிகள் காத்திருக்கின்றன. பகைவர்களிடமும் அவன் நட்பை விதைக்கிறான்.    

4.
ந ஸ ஸகா யோ ந ததாதி ஸக்யே ஸசாபுவே ஸசமானாய பித்வ:
அபாஸ்மாத் ப்ரேயான்ன ததோகோ அஸ்தி ப்ருணந்தமன்யமரணம் சிதித்சேத்

தன் நண்பனுக்கோ, கூடவே இருப்பவனுக்கோ, முன்பு உதவியவனுக்கோ  எவனொருவன் கொடுப்பதில்லையோ அவன் நண்பன் அல்லன்; அவனைத் துறந்து விடுதல் நலம். அந்த வீடு வீடல்ல. கொடுக்க வல்ல வேறொருவரை அவன் நாடட்டும்.

5.
ப்ருணீயாதின்னாதமானாய தவ்யான் த்ராகீயாம்ஸமனு பச்யேதே பந்தாம்
ஓ ஹி வர்த்தந்தே ரத்யேவ சக்ராண்யன்யமன்யமுப திஷ்டந்த ராய:

நிதி மிகுந்தவன் கட்டாயமாக வறியவனுக்குக் கொடுக்க வேண்டும். தொலைநோக்குள்ள வழிகளை எண்ணிச் செல்வத்தைப் பெருக்க முயலவேண்டும். ஏனெனில், சுழலும் ரதத்தின் சக்கரங்களைப் போல் ஒருவரிலிருந்து மற்றொருவருக்குச் செல்வம் மாறி மாறிச் செல்கிறது.

6.
மோகமன்னம் விந்ததே அப்ரசேதா ஸத்யம் ப்ரவீமி வத இத்ஸ தஸ்ய
நார்யமணம் புஷ்யதி நோ ஸகாயம் கேவலாகோ பவதி கேவலாதீ

அழியக்கூடிய உணவைப் பகிராமல் மூடன் ஆசையினால் சேமிக்கிறான்; அது அவனுக்கு அழிவையே கொடுக்கும் - இது சத்தியம். இறைவனுக்கு அர்ப்பணிக்காமலோ, நண்பனுடன் பகிராமலோ தான் மட்டும் உண்பவன் பாவியாகவே ஆகிறான்.

7.
க்ருஷன்னித் ஃபால ஆசிதம் க்ருணோதி யன்னத்வானமப வ்ருங்க்தே சரித்ரை:
வதன் ப்ரஹ்மாவததோ வனீயான் ப்ருணன்னாபிரப்ருணந்தமபி ஷ்யாத்

விவசாயிக்குக் கலப்பை உணவளிக்கிறது; பயணங்களாலும் உழைப்பாலும் ஒருவன் பொருளீட்டுகிறான். வெறுமனே இருப்பவனை விடச் சாத்திரங்களை எடுத்துரைப்பவன் உயர்ந்தவன். கொடுக்க வல்லவன் கொடுப்பதற்கு எதுவுமற்றவன் அருகே இருக்கவேண்டும்.   

8.
ஏக பாத்பூயோ த்விபதோ விசக்ரமே த்விபாத் த்ரிபாதமப்யேதி பச்சாத்
சதுஷ்பாதேதி த்விபதாமபிஸ்வரே ஸம்பச்யன் பங்க்தீருபதிஷ்ட்டமான:  

இரு மடங்கு செல்வம் உள்ளவன் ஒரு மடங்கு செல்வம் உள்ளவனை விரைந்து கடந்து, மூன்று மடங்கு உள்ளவன் பின் செல்கிறான். நான்கு மடங்கு செல்வம் பெற்றவன் இரண்டு மடங்கு செல்வமுள்ளவன் விட்டுச் சென்ற பாதையை உற்றுக் கவனித்துப் பின் கடந்து செல்கிறான்.  

9.
ஸமௌ சித்தஸ்தௌ ந ஸமம் விவிஷ்ட்ட: ஸம்மாதரா சின்ன ஸமம் துஹாதே
யமயோச்சின்ன ஸமாவீர்யாணி ஜ்ஞாதீ சித் ஸந்தௌ ந ஸமம் ப்ருணீத:

கைகள் இரண்டும் ஒன்றாய்த் தோற்றமளித்தாலும் சம ஆற்றலுடன் இருப்பதில்லை;  ஒரே பசுவிற்குப் பிறந்த இரு பசுக்கள் சமமாய்ப் பால் தருவதில்லை; இரட்டையராய்ப் பிறந்திருந்தாலும் சம ஆற்றலுடன் இருப்பதில்லை; ஒரே பெற்றோரின் இரு பிள்ளைகள் ஒத்த தர்ம சிந்தனையோடு இருப்பதில்லை.  


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

(வேத மந்திரங்கள் அனைத்தின் இறுதியிலும் மும்முறை சாந்தியுடன் நிறைவடைவதைக் காணலாம். சாந்தி என்றால் அமைதி. மூன்று விதமான துன்பங்களிலிருந்து நாம் அமைதி பெறுவதற்காக மூன்று முறை வேண்டப் படுகிறது.

1. அத்யாத்மிகம் ( நம்மால் நமக்கு நேரும் துன்பம்). 2. ஆதிபௌதீகம் (பிற சூழல்களால் நமக்கு உண்டாகும் துன்பம்) 3. ஆதிதைவிகம் (தெய்வ சக்திகளால் வரும் துன்பம்)

உதவியவை:
வேத மந்திரங்கள் - சுவாமி அசுதோஷானந்தர்
www.sanskritdocuments.com
www.sacred-texts.com

6 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…


நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு மந்திரங்களின்முடிவிலும் ‘ஓம் சாந்தி ‘ என்று மும்முறை ஏன் கூறுகிறார்கள் என்று. இப்போது தெளிந்து விட்டது. ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்...இவற்றிலிருந்து நாம் அமைதி பெற. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இதை தெரியாமலேயே திருமணம் ஆன புதிதில் என் மனைவியின் பெயரை சாந்தி என்று மாற்றிவிட்டேன். எப்பொழுதும் எல்லாவற்றிலிருந்தும் அமைதி பெற அவளை ஒவ்வொரு முறையும் அழைக்கும்போதும் அமைதி கிடைக்கிறது.....!

பிரபஞ்சவெளியில் சொன்னது…

அரிய பொக்கிஷங்களை மீட்டெடுத்து தருகிறீர்கள்..நன்றி

sury siva சொன்னது…

1. ஆதிபௌதீகம் எனப்படுவது பயலாஜிகலி டிரான்சிமிட்டெட் . ஜெனெடிக் டெபெக்ட்ஸ் ஓவர் விச் யூ அண்ட் ஐ டு ஹாவ் லிட்டில் கண்ட்ரோல் .அப்படின்னு நினைக்கிறேன்.

தாத்தா அப்பா நமக்கு கொடுத்த அசையா சொத்து. இதையும் விக்கவோ வாங்கவோ முடியாது. டயாபெடிஸ், ருமாடிஸம், உயர் ரத்த அழுத்தம், மாதிரி

அம்மா வழியா வர்றது ஹேமோபிலியா .

இதிலிருந்து தப்புவது என்பதே முடியாது.

2. கொடுப்பவன் குறைந்ததனால் பிச்சை எடுப்பது குறைந்தது என்பது பொதுவாக சரியே. இருந்தாலும், ஒரு நாட்டின் பொது வளம் பெருகும்போது, வேலை வாய்ப்புகள் கிடைக்கும்பொழுது, மக்களுக்கு தமது கால்களில் நிற்கவேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும்போது , சாதரணமாக பிச்சை எடுப்பவர்கள் குறைகின்றனர்.

ராம ராஜ்யத்தில், கொடுப்பவர்கள் இல்லை. ஏன் எனின் பிச்சை எடுப்பவர்கள் இல்லை, என்னும் தொனிக்கும்படியாக வால்மீகி எழுதி இருக்கிறார்.

அதெல்லாம் சரி. நான் பார்த்தது இங்கே.

இங்கே போன வாரம் , பாஸ்டன் ரயில் நிலையத்தில் இரண்டு பிச்சை எடுப்பவர்களை பார்த்து அதிர்ந்து போனேன். கையில் ஒரு டம்ளரை வைத்துகொண்டு ஸ்டேஷன் உள்ளே போகிறவர்களிடம் அதை நீட்டி
பிச்சை கேட்டார்கள். அது மட்டுமல்ல, கொடுக்காமல் சென்ற அனேகம் பேரை வாயில் வர இயலாத அசிங்க வார்த்தைகளால் திட்டினார்கள்.

தரம் அறிந்து தானம் கொடு என்பதற்கு ஒரு சுபாஷிதானி இருக்கிறது.
சட்டென நினைவுக்கு வரவில்லை.

சுப்பு தாத்தா.
நியூ ஜெர்சி.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
www.pureaanmeekam.blogspot.com
www.movieraghas.blogspot.com

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாத்திரம் அறிந்து பிச்சையிடு...!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ஒரு சிறு விளக்கம்:

இந்த இடுகை யாசிப்பது குறித்து அல்ல;
தர்மம் குறித்த சிந்தனைகளை வலியுறுத்துவது.
பெயர், புகழ் இவற்றிற்கன்றி தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இயல்பாய் தானம் செய்யும் குணம் குறித்தது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நீங்கள் சொல்வது சரிதான் சுப்பு தாத்தா.

ஆதி பௌதீகம் என்பது பிறரால் என்பதிலிருந்து பிறவற்றிலிருந்து என்பதாய் இருப்பதுதான் பொருத்தமானது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...