13.7.13

சுபாஷிதம் - II

21.
ந ராஜ்யம் ந ராஜா ஸீத் ந தண்டயோ ந ச தாண்டிக:
தர்மேணைவ ப்ரஜாஸ்ஸர்வா ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம்

அரசும் இல்லை; அரசனும் இல்லை; குற்றமும் குற்றவாளியும் இல்லை; நீதிபதியும் தண்டனையும் இல்லை; பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தங்கள் சுய தர்மத்தாலேயே காக்கட்டும்.

( இக்ஷ்வாகு தான் இந்தியாவை ஆண்ட முதல் மன்னன்; அவனுக்குப் பிந்தைய காலத்தில்தான் ராஜா-ப்ரஜா வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இக்ஷ்வாகுக்கு முந்தைய காலத்தில் இந்த சுதர்மம் இருந்திருக்கிறது என்பது இந்த சுபாஷிதத்தின் மூலம் உணர்த்தப்படும் சிலிர்ப்பூட்டும் செய்தி.)

22.
ஸத்யம் ப்ருயாத் ப்ரியம் ப்ருயான்னப்ருயாத் ஸத்யம்ப்ரியம்
ப்ரியம் ச நாந்ருதம் ப்ருயாதேஷ: தர்ம: ஸநாதன:

உண்மையே பேசு; பிறருக்குத் தீமை செய்யும் உண்மையைப் பேசாதே; பிறருக்கு எது நன்மையோ அதையே பேசு; பிறரை இனிமைப்படுத்தப் பொய் பேசாதே. இதுவே தர்மம். 

[பொதுவாகவே கவிகள் ஒரு மஹா வாக்கியத்தை முடிக்கும்போதும்- அரிய உண்மையை உரைக்கும்போதும்,  “ஏஷா தர்ம ஸநாதன” (இதுவே தர்மம்) என்று  வலியுறுத்தி முடிப்பது வழக்கம்.]
  
23
அபி ஸ்வர்ணமயீ லங்கா ந மே ரோசதி லக்ஷ்மண  
ஜனனீ: ஜன்மபூமிஷ்ச்ச ஸ்வர்க்காதபி கரியஸீ

”லக்ஷ்மணா! பொன்னால் இழைத்த இந்த இலங்கை என்னை சலனப்படுத்தாது; என் தாயும், தாய்நாடும் சொர்க்கத்தை விட உய்ர்வானவை”

(சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன், ஒரு விஜயதஸமி நாளில், ராவணனை வென்ற பின் லக்ஷ்மணனிடம் ஸ்ரீராமன் சொன்னது. அதன்பின் விபீஷணன் பட்டம் சூட்டப்பட்டான்.) 

24
மரணான்தானி வைராணி நிவ்ருத்தம் ந: ப்ரயோஜனம்
கீயதாமஸ்ய சம்ஸ்க்காரோ மமாபேஷ்ய யதா தவ:

பகை மரணத்தோடு அழிந்தது. அவன் உனக்கெப்படியோ அப்படியே எனக்கு; கிரமப்படி தகனம் செய்வி.

(ராவணன் மாண்ட பின், அவனைத் தகனம் செய்யத் தயங்கிய விபீடணிடம் ஸ்ரீராமன் சொன்னது) 

25
காவ்யஷாஸ்த்ரவினோதேன காலோ கச்சதி தீமதாம்
வ்யஸனேன ச மூர்க்காணாம் நித்ரயா கலஹேன வா

கற்றவனின் காலம் காவியங்கள், சாத்திரங்களின் ஆராய்ச்சியில் பயனாகிறது. கல்லாதான் காலமோ கவலையிலும், உறக்கத்திலும், சச்சரவுகளிலும் கழிகிறது. 

26
தைலாத் ரக்ஷேத் ஜலாத் ரக்ஷேத் ரக்ஷேத் ஷிதில பந்தனாத்
மூர்க்க ஹஸ்த்தே ந தாதவ்யம் ஏவம் வததி புஸ்தகம்

புத்தகம் பேசுகிறது: “ தைலத்திடமிருந்தும், நீரிடமிருந்தும், மோசமான கட்டுமானத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்; இத்தனையையும் செய்த பின் ஒருபோதும் ஒரு மூடன் கையில் என்னை ஒப்படைக்காதீர்கள்”.

27
ச்ரோத்ரம் ச்ருதேநைவ ந குண்டலேந தாநேன பாணிர்ன து கங்கணேன
விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ன து சந்தனேன

காதுகள் கேட்பதற்கே அன்றிக் குண்டலங்களுக்கல்ல; கைகள் கொடுப்பதற்கே அன்றிக் கங்கணங்களுக்கல்ல; இந்த உடல் பிறர்க்கு உதவுவதற்கே அன்றி சந்தனப் பூச்சுக்கல்ல.

28
பாஷாஸு முக்யா மதுரா திவ்யா கீர்வாணபாரதி
தஸ்யாம் ஹி காவ்யம் மதுரம் தஸ்மாதபி ஸுபாஷிதம்

மொழிகளில் சிறந்தது இனிமையும் அழகும் பொருந்திய கடவுளின் மொழியான சமஸ்க்ருதம்; அதனாலேயே காவியங்களும், சுபாஷிதமும் இனிக்கின்றன.

29
உதாரஸ்ய த்ருணம் வித்தம் ஷூரஸ்ய மரணம் த்ருணம்
விரக்தஸ்ய த்ரணம் பார்யா நிஸ்ப்ருகஸ்ய த்ருணம் ஜஹத்

கொடையாளிக்குச் செல்வம் துச்சம்; வீரனுக்குச் சாவு துச்சம்; சுயநலமற்றோனுக்குக் குடும்பம் துச்சம்; பற்றற்றவனுக்கு உலகமே துச்சம்.

30
வித்வத்வம் ச ந்ருபத்வம் ச நைவ துல்யம் கதாசந
ஸ்வதேஷே பூஜ்யதே ராஜா வித்வான் சர்வத்ர பூஜ்யதே

கற்றறிவும், ஆளும் திறனும் துளியும் ஒப்பிடமுடியாதவை; அரசனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்பு; கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.

31
துர்ஜநேன ஸமம் ஸரவ்யம் ப்ரீதிம் சாபி ந கார்யேத்
உஷ்ணோ தஹதி சாங்கார: ஷீதக்ருஷ்ணாயதே கரம்

கரி சூடானால் கையைச் சுட்டுவிடும்; அணைந்து குளிர்ந்த பின் கையைக் கரியாக்கும். துர்மதி கொண்டவனோடு கொள்ளும் உறவும், நெருக்கமும் அப்படித்தான். 

32
த்ராக்ஷா ம்லானமுகீ ஜாதா ஷர்க்கரா சாஷ்மதாம் கதா
ஸுபாஷிதரஸஸ்யார்கே ஸுதா  பீதா திவம் கதா

சுபாஷிதச் சாற்றின் இனிமைக்கு முன்னால் திராட்சை வெட்கித் தலை குனியும்; சர்க்கரை கல்லாய் விடும்; அமிர்தமோ தோற்றுச் சொர்க்கத்துக்குத் திரும்பிவிடும். 

33
சிந்தனீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிகியா
ந கூபக்ரனன் யுக்தம் ப்ரதீப்தே வான்ஹினா க்ருஹே

வீடு தீப்பற்றிக் கொண்ட பின் நீருக்காகக் கிணறு தோண்டினாற் போலன்றி, ப்ரச்சினைகள் வருமுன் தீர்வுகளுக்குத் திட்டமிடுதல் வேண்டும். 

34
ஏகம் விஷரஸம் ஹந்தி ஷஸ்த்ரேணைகஷ்ச்ச வத்யதே
ஸராஷ்ட்ரம் ஸப்ரஜம் ஹந்தி ராஜானம் மந்ரவிஷ்லவ:

நஞ்சினால் ஒருவனுக்கு அழிவு; ஆயுதங்களால் பலருக்கு அழிவு; அரசனின் தவறான முடிவால் அவனோடு சேர்த்து மொத்த நாட்டுக்கே அழிவு.

35
ஆதித்யஸ்ய நமஸ்காரம் யே குர்வந்தி தினே தினே
ஜன்மாந்தரஸஹஸ்ரேஷு தாரித்ரியம் நோபஜாயதே

கதிரவனைத் தினந்தோறும் வணங்குபவனுக்கு ஒரு பிறவியிலும் வறுமை அண்டாது. 

(இதன் உட்பொருள்: தினமும் கதிரவனோடு எழுந்து, கதிரவன் மறையும் வரை உழைப்பவனை வறுமை எப்படி அண்டும்?)

36
ஜ்யேஷ்டத்வம் ஜன்மனா நைவ குணைர்ஜ்யேஷ்டத்வமுச்யதே
குணாத் குருத்வமாயாதி துக்தம் ததி க்ருதம் கமாத்

ஒருவன்  முதன்மை அடைவது பிறப்பால் அல்ல; அவன் குணம், இயல்புகளாலேயே - பால் தயிராகி நெய்யாவது போல .

37
உகமேன ஹி ஸித்யந்தி கார்யணி ந மனோரதை:
ந ஹி சுப்தஸ்ய ஸிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா:

எப்படி உறங்கும் சிங்கத்தின் வாயில் இரை தானாய்ச் சிக்குவதில்லையோ, அப்படி எண்ணத்தினால் மட்டும் செயல்கள் நிறைவேறி விடுவதில்லை.

38
ஸ்தானபஷ்டா: ந ஷோபதே தந்தா: கேஷா நகா நரா:
அதி விக்ஞாய மதிமான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத்

பற்களோ, சிகையோ, நகமோ அதனதன் இடத்தில் இல்லாது போனால் பார்க்கச் சகியாது; தங்களுக்குரிய இடத்தில் இல்லாது போனால் ஞானிகளும் அப்படித்தான். 

39
உதயே ஸவிதா ரக்தோ ரக்தஷாஸ்த்தமயே ததா
ஸமப்த்தௌ ச விபத்தௌ ச மஹதாமேகரூபதா

கதிரவன் உதிக்கையிலும் மறைகையிலும் எப்படியோ, அப்படியே
வாழ்கையிலும் வீழ்கையிலும் மாமனிதர்கள்.

40
ஷாந்திதுல்யம் தபோ நாஸ்தி தோஷான்ன பரமம் ஸுகம்
நாஸ்தி த்ருஷ்ணாபரோ வ்யாதிர்ன ச தர்மோ தயாபர:

அமைதியைப் போன்றொரு தவம் இல்லை; த்ருப்தியைப் போன்றொரு மகிழ்ச்சி இல்லை; ஆசையைப் போன்றொரு வியாதி இல்லை; கருணையைப் போல் ஒரு தர்மம் இல்லை.

4 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…


/புத்தகம் பேசுகிறது: “ தைலத்திடமிருந்தும், நீரிடமிருந்தும், மோசமான கட்டுமானத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்; இத்தனையையும் செய்த பின் ஒருபோதும் ஒரு மூடன் கையில் என்னை ஒப்படைக்காதீர்கள்”./ இந்த புஸ்தகம் என்னும் சொல்லே இந்த சுபாஷிதம் அண்மைக் காலத்தியது என்று எண்ண வைக்கிறது. இவற்றை பல காலங்களில் சொன்ன சுபாஷிதங்களின் தொகுப்பு எனலாமா?எக்காலத்தையதாய் இருந்தால் என்ன ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். சேகரித்தளிக்கும் உங்களுக்கு ஒரு பெரிய “ ஓ” போடுகிறேன் சுந்தர்ஜி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அழகாக தொகுத்தளிக்கீறிர்கள் அண்ணா...
தெரியாத சுபாஷிதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.

நிலாமகள் சொன்னது…

சேமித்துக் கொண்டேன். நன்றி ஜி.

Chitra சொன்னது…

Wonderful sir. No words to show my gratitude

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...