27.11.11

மழைக் கவிதை


























இந்த வரிகளில்
பெய்து கொண்டிருக்கும்
அதே மழை

கடைத்தெரு
வண்டிக்காரர்கள்
தீர்க்க வேண்டிய
கடன் வாக்குறுதிகளில்
இரக்கமின்றிப்
பொத்தல் இட்டு
உள்ளே நுழைகிறது

வரவேற்க விரும்பாத
வீடற்றவர்களின்
முகவரிகளையும்
பசியாற்றும்
அடுப்புக்களின்
நெருப்பையும்
கொஞ்சமும் தயவின்றி
அழித்துச் செல்கிறது

இரை தேடித் தவிக்கும்
பறவைகளின்
சிறகுகளை நனையவும்
பசியால் காயவும்
வைத்து
கூடுகளின் வாயிலில்
விருந்தாளி போல
எட்டிப் பார்க்கிறது

நோயாளிகளின்
விடாத இருமலாயும்
அரைகுறை
மருத்துவனின்
கல்லாப்பெட்டி
நாணயங்களாயும்
ஒரே சமயத்தில்
ஒலிக்கும் மழை

இதெல்லாம் போக
எப்போதாவது
காகிதக் கப்பல்களைச்
சுமந்தாலும்.
தவறாமல்
எல்லா நேரமும்
இப்படியான
கவிதைகளைச் சுமக்கிறது.

7 கருத்துகள்:

raji சொன்னது…

//நோயாளிகளின்
விடாத இருமலாயும்
அரைகுறை
மருத்துவனின்
கல்லாப்பெட்டி
நாணயங்களாயும்
ஒரே சமயத்தில்
ஒலிக்கும் மழை//

வித்தியாசமான வியக்க கூடிய சிந்தனைக் கோணம்.பகிர்விற்கு நன்றி

ரிஷபன் சொன்னது…

எப்போதாவது
காகிதக் கப்பல்களைச்
சுமந்தாலும்.
தவறாமல்
எல்லா நேரமும்
இப்படியான
கவிதைகளைச் சுமக்கிறது.

பெருமூச்சுகளினூடே வாசித்து வரும்போது புன்முறுவலுக்கும் வாய்ப்பு தந்த மழை.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

கடைசி பத்தி அருமை.

G.M Balasubramaniam சொன்னது…

மழையின் அவசியம் எல்லோருக்கும் தெரியும். அதே மழை வேண்டுபவருக்கு வேண்டுமிடத்தில் வேண்டிய அளவு பெய்தால்....நடக்க முடியாததை நினைத்து என்ன பயன். ?மழை பெய்து அவதிப்படும்போது அதன் சாதக பாதகங்கள் நினைக்கப் படுகின்றன.சுந்தர்ஜி, இப்பதிவைப் படித்தவுடன் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. முழுவதும் நினைவில்லை. நீங்களும் படித்திருக்கலாம். முடிந்தால் முடிக்கப் பாருங்கள். “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி.மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே;
நேற்றுமின்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே;
கேணி நீர்படு சொறித்தவளை கூப்பிடுகுதே;......”நினைவுக்கு வருவது இவ்வளவுதான்...

ஹ ர ணி சொன்னது…

மாறுபட்ட காட்சிப்படிமம். மாறுபட்ட உவமைகள். அருமை சுந்தர்ஜி. மழைபெய்யும்போதெல்லாம் மனசு நனைகிறது கவிதையில். ஈரமுடன் உலவுகிறோம் சுந்தர்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

பாலு சாருக்காக முக்கூடற்பள்ளின் ப்ரபலமான இந்தப் பாடலைப் பதிவு செய்கிறேன்.

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி - மலை
யாளமின்னல் ஈழமின்னல்
சூழ மின்னுதே.

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்று அடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடுகுதே.

சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்று அடைக்குதே - மழை
தேடி ஒருகோடி வானம்
பாடி யாடுதே.

போற்றுதிரு மால்அழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் - சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே.

இரசிகை சொன்னது…

thirukural ninaivukku varukirathu..

:)

vittathai yellaam vaasithuten sundarji..

niraiya vithiyaasamaai kodukirathu ungal thalam..

makizhchi.

neengathaan ippolaam en thalathirkku varuvatheyillai.
tim kidaikkum pothu vanthu vaasithu karuthukalai sollungal.
ennai thiruthikkolla santharppam kidaikkum.

:)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...