15.11.11

முதுமையின் நாட்குறிப்பு



















1.
என் கண்கள்
பார்க்கும் காட்சிகள்
சிறிது மங்கலாய்த்
தோன்றுகின்றன.

யார் பேசினாலும்
துவக்கம அல்லது
முடிவை வைத்து
வாக்கியங்களை
யூகித்துக் கொள்ள
வேண்டியதிருக்கிறது.

நடுநடுங்கும் கைகளை
எப்படி வைத்துக்
கொண்டாலும்
யாரேனும் பார்க்கையில்
அது நடுங்கியபடித்தான்
இருக்கிறது.

2.

தாடியை மழிக்கவும்
மழிக்காதிருக்கவும்
முடிவெடுக்க
முடிவதில்லை.

உட்கார்ந்திருக்கையில்
படுத்துக்கொள்ளலாம்
போலவும்
படுத்திருக்கையில்
உட்காரலாம்
போலவும்.


3.
நண்பர்களில் யாரும்
உயிரோடு இல்லை.
நண்பர்களாய்
வருவதற்கும்
இனி யாரும் இல்லை.

வரட் வரட்டென்று
உச்சி வெயிலில்
கரையும் காக்கைகள்
பறக்கும்
கனவுகள் பகலில்.

மல்லாந்து பார்க்கையில்
ஒரு யானை போலவோ
ஒரு யாளி போலவோ
உருமாறியபடி
இருக்கிறது
சாளரம் காட்டும் ஆகாயம்.

-நன்றி- வண்ணக் கதிர்- 

17 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

நாட்குறிப்பை எழுதுவதற்குள் ஞாபகமறதியும் அல்லவா சேர்ந்து விடும்..
முதுமை இன்னொரு குழந்தைப் பருவம் என்று சொல்கிறார்கள்.. அந்தக் குழந்தையை அதே நோக்கில் பார்க்க மனிதரில் பெரும்பாலோர் கற்கவில்லை.
சாளரம் காட்டும் ஆகாயம் கூட சாஸ்வதமில்லை

Ramani சொன்னது…

முதுமையின் விரக்தி அவதி மிக அழகாய்
அவலமாய் உங்கள் கவிதை வரிகளில்
மனம் கவர்ந்த பதிவு

சுப்பு சொன்னது…

கவிதை அருமை

G.M Balasubramaniam சொன்னது…

முதுமை குறித்த பயங்கரத்தை அல்லவா கோடி காட்டுகிறீர்கள் . இல்லை இலை, அடித்துத் துவைத்துக் காயப் போட்டிருக்கிறீர்கள். ரிஷபன் சொல்வதுபோல முதுமை இன்னொரு குழந்தைப்பருவம். இதை யார் ஏற்காவிட்டாலும் நான் அப்படித்தான் வாழ விரும்புகிறேன். குழந்தையும் (கிழவனும் )தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.!பதிவுக்குப் பாராட்டுக்கள் சுந்தர்ஜி.

raji சொன்னது…

இதைப் படிக்கையில் எனது வயோதிகத் தந்தையின் நினைவில் என் கண்ணில் நீர் கட்டுகிறது ஜி!

@ரிஷபன்

அந்தக் குழந்தையை அதே நோக்கில் பார்த்தாலும் கூட வயோதிகக் குழந்தைகள் உடல் ஒத்துழைப்பின்மையால் மனதளவிலும் தளர்ந்து விடுகிறார்கள்தான்.இந்த கால கட்டத்தை தாண்டுவது அந்தக் குழந்தைக்கும் கடினம்.அது நம் தாய் தந்தையர் என்ற பட்சத்தில் அவர்களின் துயரை கண்ணால் பார்ப்பது நமக்கும் மிகக் கடினமே

வித்யாஷ‌ங்கர் சொன்னது…

painful lines

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

முதுமை அவ்வளவு அவலமாய் எனக்குத் தோன்றவில்லை..அது இது வரை வாழ்ந்த வாழ்க்கையை அசை போடும் அற்புத காலமல்லவா?

ஹேமா சொன்னது…

முதுமையை நினைச்சா பயமாத்தான் இருக்கு சுந்தர்ஜி !

சிவகுமாரன் சொன்னது…

கவிதையைப் படிக்கும் யாவருக்கும் முதுமையின் பயம் தொற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.
வார்த்தைகளில் வாழ்ந்து சலித்த வலி தெரிகிறது.
என் திண்ணை ராஜ்ஜியம் படித்தீர்களா ? http://sivakumarankavithaikal.blogspot.com/2010/09/thinnai-rajyam.html

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

வணக்கம்1
//உட்கார்ந்திருக்கையில்
படுத்துக்கொள்ளலாம்
போலவும்
படுத்திருக்கையில்
உட்காரலாம்
போலவும்.//
அங்காடி நாயென அலை பாயும் மனத்தை பற்றிய அருமையான வரிகள்.

RVS சொன்னது…

படிக்கப் படிக்க ஒரு வயதானவருடன் பேசுவது போலிருந்தது ஜி!

அற்புதமான படைப்பு! :-)

இரசிகை சொன்னது…

yenakku yenna sollanne theriyalai...sundarji!

சுந்தர்ஜி சொன்னது…

பொதுவாய் ஒன்று.

இணைத்திருக்கும் படம் காரை உதிர்ந்த சுவற்றின் பின்னணியில் தனிமையையும் ஓடிக்களைத்த கவனிப்பற்ற ஒரு சைக்கிளையும் கீழே உதிரும் இலைகளோடும் மேலே அரும்பும் பூக்களோடும் வாழ்க்கை என்றும் புதிதாய் அழகாய் அதன்வழியில் தொடரும் போக்கையும் காட்டுகிறது.

அது கவிதை சொல்லவிட்ட இடைவெளியைச் சொல்கிறதாய் அல்லவா நான் நினைத்தேன்?

இக்கவிதை முதுமையின் பயங்கரம் குறித்துப்பேசவில்லை.

யாருமற்ற முதியவனின் ஒரு நாள் -அல்ல- ஒவ்வொரு நாளும்தான் இக்கவிதை.

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி.. நானும் இதை அடிக்கடி யோசிக்கிறேன்.. வயதாகிறது அல்லவா? ஆனாலும் முதுமை ஒரு அனுபவம். வாழ்ந்து சலித்த அல்ல வாழ்ந்து சுகித்து முதிர்ச்சியடைந்து உடலளவிலும் மனதளவிலும்..பின் மனதளவில் முதுமையை அனுபவித்தல் ஒருவிதசுகம். உங்களின் கவிதை எனக்கு அதைத்தான் சொல்கிறது. ஒவ்வொரு நாளும் ஒன்றில் நாம் முதிர்ந்துகொண்டேதான் இருக்கிறோம். அப்படி முதிரத்தானே வேண்டும்? அப்போதுதானே நாம் வாழ்ந்திருக்கிறோம் என்று பொருள்.

ezhil சொன்னது…

அருமை

Ezhil.v சொன்னது…

அருமை

காமாட்சி சொன்னது…

முதுமை உடலில் தெம்பும்,அனுஸரணையான மனிதர்களின் அரவணைப்பும் இருந்தால்
ஆசீர்வாதம் செய்து கொண்டு உட்டார்ந்திருக்கலாம். அநுபவிப்பவர்களைக் கேளுங்கள். நாலும் கிடக்கிற நடுவில் ஓடிப்போக முடிந்தவர்கள்தான் அதிருஷ்டமுள்ளவர்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்குமா?
DVdhg'Vd

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...