1.
போன வாரத்தில் ஒரு மாலை. சர். பிட்டி தியாகராயா கலையரங்கத்தில் பேராசிரியர். கு. ஞானசம்பந்தனின் நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். மனுஷ்யபுத்திரனுக்கு அருகில் உட்கார்ந்திருந்தும் பேச வழியில்லாததால் பொருள் பொதிந்த சிரிப்போடு கழிந்தது நேரம்.
மாலன் தன் தலைமையுரையில் தனக்கும் கமலுக்குமான நீண்ட நாள் நட்பையும் கமலுக்குள் இருக்கும் கவிஞனை மிக நேசிப்பதாகவும் பேசினார்.அதே போலத் தமிழில் பேச முடிந்த இடங்களிலும் ஆங்கிலத்தின் பண்பில்லாத உபயோகம் குறித்தும் மேடைகளின் பேச்சுத்தரம் உயர கு.ஞா.வின் பங்கு குறித்தும் பேசினார். கமலைச் சூரியனுக்கும் கு.ஞா.வைச் சந்திரனுக்கும் ஒப்பிட்டுப் பேசினார். அடர் நீலநிற முழுக்கைச் சட்டையுடனும் அதற்கு மேல் கருநிற கையற்ற வெய்ஸ்ட் கோட்டுடனும் வந்திருந்தார் மாலன். அவர் பேசத் தொடங்குமுன் மாலன் செம ஸ்டைலுடா மச்சி என்றார் பின்னால் இருந்த மற்றொரு மச்சி.
வழக்கம்போல கமல் ரசிகர்களின் அடையாளம் நிகழ்ச்சி முழுவதும் கூக்குரல்களால் விதவிதமான கோஷங்களால் நிகழ்ச்சியின் ரசனையைக் கோணலாக்கியது. மேடையின் திரை உயர்ந்ததும் உதடுகளில் ஆள்காட்டிவிரல் பதித்து உஷ் என்ற பாவனையை விழா துவங்கியதுமே வெளிப்படுத்தினார் கமல்.
அரைக்கை கருப்பு நிற T ஷர்ட்டுடன் தன் புஜம் தெரியும் கோணத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு அடிக்கடி சேஷ்டைகள் செய்தபடி இருந்தது அவருக்குத் தன் உடல்பொலிவு குறித்து இருக்கும் கர்வம் தெரிந்தது. 57 வயதில் அவரின் உடலை இளமையாய்ப் பேணுவது குறித்த வியப்பு எனக்கும் இருந்தது.நடுவில் ஒரு ரசிகனின் குரல்.” தலைவா! ஆர்ம்ஸ் சூப்பர்”.குரலெழுப்ப அதில் புளகாங்கிதம் அடைந்தார் கமல். இப்படியே விழா முழுவதும் கமலுக்கும் அவரின் ரசிகர்களுக்குமிடையிலான உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது.
பாக்கியம் ராமசாமி பேச்சு இயல்பாய் இருந்தது. மேடைக்கான எந்தத் தயாரிப்பும் முஸ்தீபுகளும் இல்லை. தொலைக்காட்சித் தமிழ்- அவற்றின் தரம் -அப்படியே ஒரு ரவுண்ட் போய்விட்டு வழக்கமான நையாண்டியுடன் ஆஸ்திக நாஸ்திகச் சம்பாஷணையைத் துவக்கிவைத்தார். நாஸ்திகர்களுக்கு எது கிடைக்குமோ அதை விட ஆஸ்திகர்களுக்கு ஒரு பத்து சதம் அதிகம் கிடைக்கும் என்றார் கமலை நோக்கி.
எல்லோராலுமே கமலின் பன்முகத் திறமை குறித்துத் தொடாமல் நேரடியாக கு.ஞா.வின் புத்தகங்கள் குறித்துப் பேசமுடியவில்லை. கு.ஞா.வின் புத்தகங்கள் குறித்து நன்கு அவற்றை வாசித்தவர்களை விட்டுப் பேச விட்டிருக்கலாம். பெரும்பாலும் பேசியவர்கள் யாத்தவரின் புகழையும் கமலின் திறனையும் பேசிய அளவுக்கீடாக புத்தகங்களின் வாசிப்பனுபவத்தைக் குறித்துப் பேசவில்லை.
புத்தகங்களை வெளியிட்டு கமல் பேச வந்தவுடன் ஆழ்வார்பேட்டை ஆண்டவா! என்ற வாடிக்கையான குரல் வந்தது. இனி வரும் கூட்டங்களில் அதை லட்சியம் செய்யாமல் இருக்கலாம். எப்போதும் போல தான் கறுப்புச் சட்டை அணிந்துவந்தும் இதற்கு என்ன சொல்ல என்று அலுத்துக்கொண்டே பேச்சைத் துவங்கினார். தனக்கும் கு.ஞா.வுக்கும் இடையிலான நட்பு குறித்தும் பொதுவாய்த் தான் இம்மாதிரியான இலக்கியவாதிகளுடன் தொடர்பு வைப்பது தனக்குத் தமிழின் பாலுள்ள சுயநலமே என்றும் சொன்னார்.
கைகள் இரண்டையும் நடிக்கும்போது எப்படி வைத்துக்கொள்வது என்று ஷண்முகம் அண்ணாச்சியிடம் கேட்டபோது எப்போது நீ நடிக்கத் துவங்கிவிட்டாயோ அப்போதிலிருந்து அக்கேள்வி உன்னில் எழாது என்று பதில் சொன்னார் என்றும் சொன்ன விதம் ஸென் குருவுக்கும் சிஷயனுக்குமான உரையாடல் போல செறிவாய் இருந்தது. அதேபோல வி.கே.ராமசாமி அவரின் கைகள் குறித்த ப்ரக்ஞை இல்லாமலே நடிப்பது தனக்குப் பெரிய ஆச்சர்யம் என்றார்.தவிர வி.கே.ஆர். ஒரு நல்ல எழுத்தாளர் என்ற தகவலையும் சொன்னார்.
பேசி முடிக்கும்போது நான் பல வேடங்களில் நடிக்கிறேன். குள்ளனாக உயரமானவனாக பக்தனாக. உண்மையில் நான் குள்ளன் கிடையாது என்று முடித்தார். தான் யார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிற பரிதாபம் கமலுக்கும் கருணாநிதிக்கும் மட்டுமே தொடர்கதையாய் இருக்கிறது. ஒரு கடவுள் மறுப்பாளன் கடவுளை ஏற்பவனை விட அதிகமாகக் கடவுளை நினைக்கவேண்டியிருப்பது வேடிக்கையான முரண்.
விழி பேசாமல் விட்டதை மொழியால் பேசினார் பாண்டியராஜன். புத்தகத்திலிருந்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நீங்கள் புத்தகத்தை வாங்கமாட்டீர்கள் என்று மிரட்டிவிட்டு நிழல் நிஜமாகிறது ரிலீஸாகும்போது கிருஷ்ணவேணியில் சட்டையைக் கிழித்துக்கொண்டு அடித்துப்பிடித்துப் பார்த்த அதே கமலுடன் ஒரே வரிசையில் உட்கார்ந்திருப்பது பெருமை என்றார் பாண்டியராஜன்.
ஏற்புரையாற்றிய கு.ஞா.வின் பேச்சில் அரங்கமே குலுங்கியது. அதே போல விழா முழுவதும் தன் குடும்பத்தினரின் பங்கையும் உபயோகப்ப்டுத்தியிருந்தார். யாரின் பெயரும் விடுபடாமல் எல்லோரின் பங்கையும் கௌரவப் படுத்தியிருந்தார். பெயர் தெரியாத தன்னைச் சார்ந்த பலரையும் மேடையில் அறிமுகப்படுத்தினார். கு.ஞா.வுக்கு உதவியாக இருக்கும் கால்கள் ஊனமுற்ற ஒரு மாணவரைப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கும்போது கமலும் அவருக்குச் சமமாக மண்டியிட்டு உட்கார்ந்து அவரின் தோளில் கைபோட்டுக் கொண்ட மனிதம் நெகிழ வைத்தது.
அந்த விழா முழுவதையும் தொகுத்துக் கொடுத்த தஞ்சை இனியனின் தொகுப்பும் அத்தனை சுவாரஸ்யமாகவும் அடுத்து என்ன பேசுவார் என்று யூகிக்கவும் வைத்தது. ஒரு தடுமாற்றம் இல்லாத அருமையான தெளிவான நல்ல உச்சரிப்போடு தமிழ். சமயோசிதமாக கமல் நடித்த அத்தனை திரைப்படங்களின் தலைப்பையும் வைத்து இவர் உருவாக்கிய அறிமுகச் சித்திரம் சபையின் பாராட்டைப் பெற்றது. அதற்கெழுந்த நீண்ட கரவொலிதான் அந்த விழாவின் ப்ரதான பாராட்டுக்களின் கரவொலி.
2.
மற்றொரு விழா மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில். வாலியின் நினைவுநாடாக்கள் மற்றும் பட்டத்து யானையின் பவனி ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா.
நல்லி குப்புசாமி செட்டியார்- முக்தா சீனிவாசன்- பாலகுமாரன்- இயக்குனர் மகேந்திரன்- பாடலாசிரியர் முத்துலிங்கம்- இயக்குனர் கரு.பழனியப்பன்-கலைப்புலி தாணு- மை.பா.நாராயணன்- சுதாங்கன்- பாரதிபாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.
சரியான நேரத்தில் துவங்கிய விழாவுக்கு மிக அருமையான இறைவணக்கப்பாடலைப் பாடிய ஸ்மித்தா மாதவ் நூல் வெளியீட்டு விழாவுக்குப் பொருத்தமாகக் கலைவாணியின் மீது பாடினார் அழகான ஒரு பாடலை. என்ன அற்புதமான குரலும் தமிழ் உச்சரிப்பும் ராக பாவமும். சபாஷ்.சபாஷ். ஸ்மித்தா ஒரு பரதக் கலைஞரும் கூட.நிச்சயமாக எதிர்கால இசை மற்றும் நாட்டியத் துறைக்கான முக்கியமான இடம் ஸ்மித்தாவுக்கு உண்டு. அவரைப் பற்றித் தனியாய் ஒரு இடுகை பின்னால் எழுதுவேன்.
முதலில் பேசிய முக்தா சீனிவாசன் நெடுநாட்களுக்குப் பின் பேசுவதாலோ என்னவோ! நெடுநேரம் பேசினார். நடுநடுவில் லொடலொடன்னு நான் பேசறதா நீங்க நினைக்காதபடிக்குச் சட்டுன்னு முடிச்சுக்கறேன் என்று சொல்லியபடியே நெடுநேரம் பேசினார். இலக்கியவாதிகளை அரசுகள் கௌரவிப்பதில்லை என்று ஆதங்கப்பட்டார். வாலியை அறிமுகப்படுத்திய நாட்களிலிருந்து தனக்கும் வாலிக்குமான தொடர்புகளைக் குறித்து அவர் பேச்சு இருந்தது.வாலியை ஒரு விசிஷ்டாத்வைதி என்றார்.
இயக்குனர் மகேந்திரன் கொஞ்ச நேரம் பேசினார். வாலியை மஹாபுருஷன் என்று வாழ்த்தினார். வாலியின் பெயர்க்காரணத்தில் தொடங்கி சாதனையாளர்களின் பெயர்கள் தனித்துவமானவை. பிறக்கும்போதே அப்படிப்பட்ட பெயர்களுடன் அந்தச் சாதனையாளர்கள் பிறந்துவிடுகிறார்கள். ஷேக்ஸ்பியர்-ப்ராட்மேன் -தெண்டுல்கர்- பாரதி- ஹுஸைன் போல்ட்-பீலி-இவர்களுடைய பெயரைப் போல அதே இன்னொரு பெயர் அந்தத் துறையில் வருவதில்லை என்றார்.
பாலகுமாரன் பேசும்போது பெரியவாள்ளாம் மன்னிக்கணும். வாலி ஒரு அத்வைதி என்றார். அவர் சாதாரணமான நபர் இல்லை. வாலியின் பார்வையில் பட்டவர்கள் எல்லாருமே பேரும் புகழும் அடைந்தவர்கள். அவரின் தொடுதல் பட்டவர்களும் அப்படித்தான். தன்னுடைய காலத்துக்குள் அவர் கடோபனிஷத் பற்றிய விளக்கத்துடன் ஒரு நூல் எழுத வேண்டும் என்றார்.
கவிஞர் முத்துலிங்கம் வாலி அவதார புருஷன் எழுதப்பட்ட பின்னரே இலக்கியவாதியாக அடையாளம் காணப்பட்டார் என்று தீர்ப்பு வழங்கிவிட்டு அவருக்கும் தனக்குமான உறவுச்சங்கிலியின் கண்ணிகளை நினைவு கூர்ந்துவிட்டு வாலிக்கான இடம் யாரோடு என்று சொல்வதற்காக மூச்சு விடாமல் 99 தமிழ்ப்புலவர்களின் பெயரை மனப்பாடமாகச் சொல்லி இவர்களோடு வாலியையும் சேர்க்கலாம் என்று முடித்தபின் அரங்கத்தில் நீண்ட கரவொலி எழுந்து அடங்க நேரம் பிடித்தது. பக்கத்திலிருந்தவர் இப்படித்தான் சிவக்குமார் 99 பூக்களின் பெயர்களை நினைவிலிருந்து சொன்னதை நினைவுபடுத்தினார். மறதிக்குப் பெயர்போன எனக்கு இந்த சாகசங்கள் உடம்பை உதற வைத்தன.
விழாவுக்குத் தாமதமாய் வந்ததற்கு ஒரு குட்டிக்கதை சொல்லி சமாளித்த கரு.பழனியப்பன் பரபரப்பாய் இருந்தார். மூச்சுவிடாமல் பேசினார்.வாலி தன் படங்களுக்கு இதுவரை பாடல்கள் எழுதியதில்லை. இனிமேல் கண்டிப்பாய் எனக்கு அவர் பாடல் எழுதவேண்டுமென்றார். நடுநடுவே பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்துக்கொண்டார். மனுஷன் அந்தக்கால க்ரிக்கெட் ஆட்டக்காரர் ஸ்ரீக்காந்த் க்ரீஸில் நிற்கும் போது எப்படி ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பாரோ அதேபோல பரபரப்பு. வாலியை இனிமேல் தலைவரே என்றழைக்கப்போவதாகவும் எல்லோரையும் அவர் வெளிப்படையாய்ப் பாராட்டுவதே அவரின் புகழுக்கும் இளமைக்கும் காரணம் என்று போட்டார் ஒரு போடு. பழனியப்பனின் படபடப்பும் பேச்சும் ரசிக்கும்படி இருந்தது அவரது இடது காதில் தொங்கிய வளையத்தைப் போல.
விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய நெல்லை ஜெயந்தா பல இடங்களில் வாலியின் வார்த்தைகளை வைத்தே பொருத்தமாய்த் தொகுத்தமை சமயோசிதமாய்த் தென்பட்டது. வாலியையும் ஜெயந்தாவையும் பிரித்துப் பார்க்கமுடியாதது போல ஒரு ஒருங்கிணைப்பு இருவருக்குள்ளும்.
ஏற்புரை வழங்கிய வாலி நல்லி செட்டியாரில் தொடங்கிக் கடைசியாக வாழ்த்துரை வழங்கிய பாரதி பாஸ்கர் வரையிலும் எல்லோருக்கும் நன்றிகளுடன் அவர்களுடனான தொடர்பையும் பேசினார். தனக்கு அன்று முதல் இன்று வரை உதவியவர்களின் பெயர்களை அடிக்கடிச் சொல்லியபடி இருந்தார். அறிமுகமில்லாத தன் புதிய நண்பர்களை மேடையில் ஏற்றிக் கௌரவித்தார்.
தன் சமகாலத்தில் தன்னோடு பாடல்கள் எழுதிய புலமைப்பித்தனை அவரின் இலக்கண அறிவை பலதடவை பாராட்டிப் பேசினார். அதே போல இலக்கியம் சம்பந்தமான தன் படைப்புக்களை முத்துலிங்கத்திடம் காண்பிக்காமல் பதிப்புக்கு அனுப்புவதில்லை என்றார்.திமுக வின் திருச்சி சிவா -பழைய அமைச்சர் வேழவேந்தன்- பாடலாசிரியர் பழநிபாரதி- ஹிந்துவிலிருந்து மாலதி ரங்கராஜன் -வாலியின் குடும்ப மருத்துவர் என்று எல்லோரும் கலவையாய் பேதமின்றி வந்திருந்தது ஒரு ஆச்சர்யம். எல்லோரையும் தக்க அளவில் மதிக்கும் இந்தப் பண்புதான் வாலியின் அடையாளம் என்று தோன்றியது. அன்று மிக உற்சாகமாக இருந்தார் வாலி.
3.
1. இரு வெளியீட்டு விழாக்களிலும் ஏற்புரையின் போது நூல் ஆசிரியர்கள் வாழ்த்தியவர்களைப் பதிலுக்கு வாழ்த்தாமல் வெளியிடப்பட்ட புத்தகங்களின் உருவாக்கம் அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள் இம்மாதிரி விஷயங்களுக்கு அதிகம் இடம் கொடுத்திருந்தால் இன்னும் அழகான விழாவாய் அவை அமைந்திருக்கும்.
2. விழா மேடையில் கமலுக்கு பசியோ தாகமோ தெரியவில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட பானத்தை சுற்றியிருப்பவர்களைப் பற்றிக் கவலையின்றி ஒரே மடக். ஆனால் அதற்கு மாறாக மாலன் தனக்கு இரண்டாவதாகக் கோப்பை நீட்டப்பட்டபோது மேடையில் உள்ள எல்லோருக்கும் கொடுக்க அறிவுறுத்தி அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட பிறகே தான் பருகியது மேன்மையான மென்மையான காட்சி.
3. கரு.பழனியப்பனின் திரைப்படங்கள் மற்றவர்களின் படங்களில் இருந்து வித்யாசமானவை. அவரின் ரசிகன் நான். அதனால் அவரின் அடுத்த படத்துக்குக் காசு வாங்காமல் பாடல் எழுதப் போவதாகச் சொன்னார் வாலி. இதைக் கேட்ட நெல்லை ஜெயந்தா கரு.பழனியப்பனிடம் என்னை மறந்துடாதீங்க சார் என்றார்.
4. இரு விழா மேடைகளிலும் குறைந்தது 100 பொன்னாடைகளாவது போர்த்தித் தள்ளப்பட்டிருக்கும். மூச்சுமுட்டியது அந்தக் கலாச்சாரம். அதை விடக் கொடுமை அவை போர்த்தப்படும் அடுத்த நொடியே உதவியாளர்களால் பின்னால் இருந்து உருவப்பட்டு மடித்துவைக்கப்பட்டது. குளிரில் நடுங்குவதாய் நினைத்து பேகன் மயிலுக்குப் போர்த்திய போர்வையின் தொடர்ச்சி பொன்னாடையாய் உருமாறியதோ? என்றைக்கு இந்தக் கலாச்சாரம் ஓய்வு பெறுமோ?
5. அதைவிடப் பரிதாபம் இரு மேடைகளிலும் அந்த விழா நாயகர்களுக்காகத் தங்கள் சொந்த செலவில் பொன்னாடைகளுடன் மேடையேறிய ஒன்றிரண்டு ரசிகர்கள் மேடையை நிர்வகித்தவர்களால் முரட்டுத்தனமாக அனுமதி மறுக்கப்பட்டனர்.
போர்த்தப்பட்டு
மடித்துவைக்கப்பட்ட
அந்தப்
பொன்னாடைகளை விட
பிரிக்கப்படாமல்
திருப்பி
எடுத்துச்செல்லப்பட்ட
பொன்னாடைகளில்
கசிந்திருந்தது
அந்த ரசிகர்களுக்கு
மறுக்கப்பட்ட அன்பு.
என்ன சொல்ல?
12 கருத்துகள்:
இந்த நிகழ்ச்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்பிருக்கிறதா சுந்தர்ஜி. எல்லாம் உங்களை காணத்தான்.
நேரடியாக நிகழ்ச்சியைப் பார்த்து
உணர்ந்ததைப் போலிருந்தது
அருமையாக இரண்டு நிகழ்ச்சியினையும்
தொகுத்தளித்தமைக்கு நன்றி
விழாவை உங்கள் பார்வையில் நையாண்டி கலந்து ரசிக்க முடிந்தது.
இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றியும் உங்கள் பார்வையில் படித்து ரசித்தேன்...
சுவாரஸ்யமான விவரங்கள். சமீபத்தில் தென்றல் தொலைக் காட்சியில் வாலியின் ஒரு புத்தக வெளியீட்டு விழ நிகழ்ச்சி பார்த்தேன். (பழசோ) அதில் எல்லோர் பேச்சும் ரசிக்கும்படி இருந்தாலும், குறிப்பாய் நெல்லை கண்ணன் பேச்சு ரொம்ப ரசிக்கும்படி இருந்தது.
dear sundar ji! a fine good wonderfull reporter is inthe offing---kaashyapan
விழாவைத் தொகுத்து இங்கு கொடுத்ததில் உங்கள் பங்கு மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. இத்தனை நுணுக்கமான விவரங்களுடன் பதிந்தது அருமை.
superb really!
அதிலும் கடைசிவரி கவிதை! பொன்னாடைக்குள் புதைந்துகிடக்கும் ரசிகனின் அன்பு! நெல்லை ஜெயந்தா நேர்காணல்களை மிக சுவாரஸ்யமாக கொண்டுபோவார். வாலியின் தாக்கம் அவரது வார்த்தைகளில் செறிவாகவே இருந்திருக்கும்! விழா நிகழ்ச்சிகள் பற்றிய வர்ணனைஎன்னைப்போல வெளியூர்க்காரர்களுக்கு
வாசிக்கவாவது கொடுத்துவைத்திருக்கிறதே என நினைக்க வைக்கிறது நன்றி அதற்கு.
very nice ...konjam enakkum sollunga ji ...
பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உன்னிப்பாக கவனித்து (கமலகாசனின் மடக்) எழுதியிருப்பது இன்னும் சுவை.
போர்த்தப்பட்டு
மடித்துவைக்கப்பட்ட
அந்தப்
பொன்னாடைகளை விட
பிரிக்கப்படாமல்
திருப்பி
எடுத்துச்செல்லப்பட்ட
பொன்னாடைகளில்
கசிந்திருந்தது
அந்த ரசிகர்களுக்கு
மறுக்கப்பட்ட அன்பு.
sundarji...intha arumaiyaana kavithaikkaka thandanaiyaa meelee padithathu?
சுந்தர் ஜி! ஒரு கொசுறு தகவல்.ஸ்மித மாதவ் அவர்களின் இசை கச்சேரியையும் கேட்டிருக்கிறேன்.அவருடைய பரதமும் பார்த்திருக்கிறேன் .அவர் சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். நாடகக் கலைஞர் டி.வரதராஜன் அவருடைய தாய் மாமன்.ஸ்மிதாவுக்கு வாழ்த்துக்கள்---காஸ்யபன் .
கருத்துரையிடுக