11.11.11

யாத்ரா-V


இப்போது இரவின் அழகு படர்ந்திருந்த 7 மணி. திருப்பதியை அடைந்துவிட்டேன். அந்த மண்ணில் கால் பதியும் போது எத்தனையோ விதமான எண்ணங்கள் வளையமிட்டன.

எந்தப் புறம் பார்த்தாலும் வண்ணமயமான விளக்குகள். இறைவனின் திருவுருவப் படங்கள். விதவிதமான மக்கள். கடைவீதியின் இரைச்சல். ஒரு புறம் பீப்பீ ஊதிக்கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். தெருவிலேயே மூத்திரம் போன ஒரு குழந்தையை அதன் அம்மா திட்டிக் கொண்டிருந்தாள். சுற்றுவட்டாரத்தில் தலையை மழித்துக்கொள்ளாதவர்களையே காணமுடியாதபடி எங்கும் முடி காணிக்கையளித்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள்.


டடடட என்று சப்தமிடும் ஒரு டப்பாவைக் குலுக்கியபடி நம்பிக்கையோடு அந்தக் குளிரிலும் ஐஸ்க்ரீம் விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அவரின் நம்பிக்கையைச் சிலர் ஆதரித்துக்கொண்டிருந்தார்கள். வேகவைத்த வேர்க்கடலையைச் சணக்காயலு என்று கூவியபடியிருந்தாள் பெண்ணொருத்தி. அவளிடம் கேட்டேன் ”கோயிலுக்கு எத்தனை தடவை போவாயம்மா ஒரு வாரத்தில்?”. ”எங்க சார் ஆறுமாசத்துக்கோ அல்லது வருஷத்துக்கு ஒரு வாட்டியோதாம் போவோம்” என்றாள்.

எங்கேயிருந்தோவெல்லாம் அற்புதத்தைத் தேடி இந்த மலைக்கு வருபவர்களுக்கு நடுவே அந்த மனோபாவம் வினோதமாயிருந்தது அதிசயமில்லை. எது மிக அருகில் சுலபமாய்க் கிடைத்துவிடுகிறதோ அதில் சுவாரஸ்யம் இருப்பதில்லை. அதைத் தேடுவதும் இல்லை என்கிற போதனையைக் கற்பித்தாள் அந்தக் கடலைக்காரப்பெண்.குளிரில் சோளம் வேகும் மணத்தை யாரும் எனக்கு முன்னால் எழுதி இருக்கக் கூடாது.ஆஹா! இதுவரை நான் போயிருக்காத ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்கத் தீவில் இருப்பதாய் உணர்ந்தேன்.


குளிருக்குச் சூடாய் பருப்பும் காய்கறிகளும் சூழ்ந்த ஆவி பறக்கும் சாதம் வேண்டுமென மனது கேட்டது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேலாய் உணவளிக்கும் அன்னதானக் கூடத்துக்குள் நுழைவதற்கு முன்னால் சிறிது நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பரிமாறப்பட்ட இலைகளுடன் மேஜைகள் காத்திருந்தன. செவ்வகமான ஆழமான ஒரு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரம் பதித்த தள்ளுவண்டியில் கொதிக்கும் சாம்பாருடன் என்னை நெருங்கினார்கள். இந்த நான்கு நாட்களில் முதன் முறையாகப் பசியை உணர்ந்தேன். தேவாமிர்தமாக இருந்தது அந்த நேரத்தைய உணவு. ரசம் மோருடன் நிறைவு பெற்ற அந்த உணவுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லி எழுந்தேன்.


சிறிது நேர ஓய்வுக்குப் பின் பெருமாளை தரிசிக்கக் கிளம்பினேன். சொல்ல மறந்துவிட்டேனே! என் நண்பரை மீண்டும் கிடைக்கப்பெற்றேன்.வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியே தரிசன வரிசையில் இரவு பத்தரை மணிக்கு நுழைந்தோம். வரிசை வேகமாக நகர்ந்தபடி இருந்தது. விதவிதமான மக்கள். சிலர் மனதின் பாரம் கரையக் கண்களில் கண்ணீருடன். சிலர் அரட்டை அடித்தபடி. நான் மெதுவாக என் மனதை சுற்றிலும் நிகழ்பவற்றை வேடிக்கை பார்ப்பதிலிருந்து மெதுமெதுவாய் விலக்கி என் ப்ரார்த்தனைகளில் செலுத்தினேன். திடீரென ஒரே சப்தம். லட்டுக்களுக்கு சீட்டு வாங்கும்படிக் கேட்டுக்கொண்டிருந்தது ஒலிபெருக்கியின் அறிவிப்பு. மக்கள் ஒரு பெரும் களேபரத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அது அந்த நேரத்துக்குப் பொருத்தமாய் இல்லை. பிடிக்கவும் இல்லை.


எதை நோக்கி ஒரு வரிசை நீண்டாலும் அதில் ஒரே மாதிரியான பிறரை முந்தி முதலிடத்தைப் பிடிக்கும் மனோபாவம் கடவுளின் தரிசன வரிசையிலும் இருந்தது. பரபரப்பும் வேகமும் எல்லோரையும் தொற்றிக்கொண்டிருந்தது. கடவுளின் தரிசனத்துக்கு முந்தைய சூழல் எத்தனை அமைதியும் பொறுமையும் கொண்டதாய் இருக்கவேண்டுமோ அதற்கு நேர்மாறாய் படிப்படியாய் உக்கிரமும் வேகமும் ஆரவாரமுமாய் நகர்ந்து கொண்டிருந்தது வரிசை. பணியிலிருந்த அத்தனை பணியாளர்களும் அதே தன்மையோடே இருந்தார்கள்.

இதோ இறுதி வளைவுக்குப் பின்னே கண்ணில் தெரிகிறது எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தேயும் எல்லா இடங்களிலும் பரவியபடியேயும் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த ஏழுமலையானின் தரிசனம். அவனைக் கண்ணால் பார்த்து உள்வாங்கிக் கொள்ளவும் அவன் அழகில் பரவவும் தன் மொழியைப் பேசிக்கொள்ளவும் யாதொரு பக்தனுக்கும் அரை நிமிடம் கூடத் தரப்படவில்லை என்பதையும் அந்த வேங்கடவன் கவனித்தபடியிருக்க கூட்டத்தோடு வெளியேறினேன். என்னளவில் என் ப்ரார்த்தனைகளைக் காத்திருந்த வரிசையிலேயே கடவுளின் பாதத்தில் பதித்திருந்தேன். என் கண்களையும் மனதையும் நோக்கி அந்த அரை நிமிடத்தில் ஆண்டவனின் புன்னகை தோய்ந்த அருள் நீந்திவந்ததாய் உணர்ந்தேன்.


அதன் பின் அந்த லட்டு மஹோத்ஸவம். நிவேதனம் செய்யப்படாத ப்ரசாதத்திற்காய் இப்படி அநாகரீகமாய் எந்த ஒரு கோயிலின் சன்னிதானத்திலும் அடித்துக்கொள்ளும் சூழலைப் பார்த்ததில்லை. ஒரு  திரைப்படத்தின் டிக்கெட்டுக்களுக்காக அடித்துக்கொள்ளும் கூட்டத்தை நினைவுபடுத்தியது அங்கே வரிசைகளில் நிற்காத பக்தர்களின் ஒழுங்கும் விநியோகித்த பணியாளர்களின் மொழியும். விலகி வந்துவிட்டேன்.

அளவில் மிகச் சிறிய கோவில். ஆனால் வருமானத்தால் கடவுளின் சாந்நித்தியம் பின்னால் தள்ளப்பட்டு கெடுபிடிகளை அதிகரித்து நள்ளிரவு வரை தரிசனத்துக்காகக் கோயில் நடை சாத்தப்படாமல் திறந்திருப்பதும் ஆகம விதிமுறைகளுக்கு முரணானது. பல வருடங்களுக்கு முன்னால் பல பக்தர்கள் நெரிசலால் உயிரிழந்த ஓர் விபத்து நடந்தபோது ஆகமவிதிகளின்படி சடங்குகளைக் கடைப்பிடிக்காததுதான் இந்த துர்சம்பவத்துக்குக் காரணம் என்று காஞ்சி பரமாச்சார்யர் கருத்துச் சொல்லியிருந்தார்.

பக்தர்களில் அநேகம் பேர் தரிசனம் முடிந்து வெளியேறும்போது கெடுபிடிகளை எதிர்த்துக் குமுறியதையும் பார்க்கும் போது திருப்பதி கோயில் நிர்வாகம் தீர்வுகளை நாடினால் தரிசன அனுபவம் இன்னும் மறக்கமுடியாததாக அமையும் என்றும் தோன்றியது. எங்களுடன் வந்த ஒரு யாத்ரீகர் ”அடிவாரத்தோடு ஊருக்குத் திரும்பிவிடுவேன்” என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்தது.

திருமலையை நோக்கி நடந்துவந்து அந்த தரிசனம் முடியும் வரை கிடைத்த ஏகாந்தமான அமைதியை மனம் அசைபோட்டபடியிருக்க சென்னைக்குத் திரும்பும் ஆந்திர தேசத்துப் பேருந்தில் அடைக்கலம் அடைந்தேன்.தூக்கம் கண்களில் அமர்ந்தது. இமைகளைப் பிரித்தபோது சென்னையின் கோயம்பேட்டு நெரிசலில் எங்கள் பேருந்து ஐக்கியமாகியிருந்தது.

17 கருத்துகள்:

Ramani சொன்னது…

அருமையான பதிவு
எப்போதும் முடிவும் உச்சமும் திருப்தி அளிப்பதாக இருக்கவேண்டும்
இல்லையெனில் கொஞ்சம் மனச் சங்கடம்தான் மிஞ்சும்
நான் கடந்த டிசம்பரில் மனைவியோடு சேவை செய்வதற்காக
திருமலை சென்று ஒரு வாரம் தங்கி இருந்தேன்
சாப்பாடு பரிமாறுதல் லட்டு பிடித்தல் பிரசாதம் பொட்டலம் போடுதல்
பூ பறித்தல் பூ கட்டுதல் வரிசையை ஒழுங்குபடுத்துதல்
என தினமும் ஒருபணி (8 மணி நேரம் ) ஒதுக்கீடு செய்து பார்க்கச் செய்து
இறுதி நாளில் திருமலையாணை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்
சேவை செய்த பின் பார்த்ததாலோ என்னவோ மிக திருப்தியான தரிசனமாக அமைந்தது
அருமையான யாத்திரைப் பதிவின் மூலம் எங்களையும்
திருமலை அழைத்துச் சென்றமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

RVS சொன்னது…

ஏழுமலையானை உங்கள் பதிவுகளின் மூலம் புண்ணிய யாத்திரையாக நடந்து சென்று சேவித்தேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி. :-)

ரமேஷ் வெங்கடபதி சொன்னது…

திருமலை வேங்கடபதி தரிசனத்திற்கு நான் ஒவ்வொரு முறை செல்லும்போதும், ஒவ்வொரு வித அனுபவங்களோடே தரிசனம் கிடைத்து வருகிறது!

ப்ரார்த்தனைகளை நான் வரிசையில் நிற்கும்போதே முடித்து விடுவது: அனுபவத்தில் சுவாமியின் முன்னே நிற்கும்போது எதுவுமே வேண்டத் தோணாது!

தரிசனம் முடிந்து, உண்டியலுக்கு எதிர் உள்ள மண்டபத்தில் கண் மூடி 10 நிமிட த்யானம்! பாஸிட்டிவ் எனர்ஜி பாயும்!

Vel Kannan சொன்னது…

பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ஜி, நல்லதோர் பயணம் நல்லதோர் பகிர்வு. இதில் சிலவற்றில் கருத்து வேறுபடுகிறேன். (உ.ம்- //அந்தப் பெண் நிஜமா? அல்லது எங்கள் தோற்ற மயக்கமா?// இப்படியானவற்றிலிருந்து) அவசியம் நான் ஒன்று இங்கு சொல்லியகவேண்டும். இதே அனுபவம் வேறு ஒருவருக்கு வந்திருந்தால் மிக அதிகமான மிகைப்படுத்தல் இருந்திருக்கும்
அது துளியும் இல்லை ஜி, மிக இயல்பாக இந்த ஐந்து பதிவும் என் மனதில் ஒட்டிக்கொண்டது. உங்களின் யாதர்த்தமான நடைக்கு மற்றுமொரு சான்று.

Vel Kannan சொன்னது…

வேங்கட சுப்பரமணியமா ?
வேங்கட பெருமாளா ?
(என்ன தான் இருந்தாலும் இந்த வாய் சும்மாவே இருக்க மாட்டேங்குது ஜி? -
சிரங்கு வந்த குரங்கு-ன்னு கூட வச்சுக்கலாம்)

G.M Balasubramaniam சொன்னது…

என்னதான் குறைகள் இருந்தாலும் திருமலையானின் தரிசனத்தில் எல்லாம் அடிபட்டுப் போகும் அந்தக் கோயிலுக்கே ஒரு சான்னித்தியம் AURA உண்டு. எனக்கு ஸ்வாமி சின்மயாநந்தா கூறியது நினைவுக்கு வருகிறது. எவ்வளவோ அல்லல்களுக்கு உட்பட்டு அவதிப்பட்டு ஏழுமலையானை வரிசையில் நகர்ந்து தரிசிக்கும் நேரம் வந்தவுடன் நம்மையறியாமல் கண்களை மூடிக்கொண்டு அகத்தில் அவன் உருவைக் காண்கிறோம் என்பார். சத்தியமான வார்த்தை. ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒவ்வொரு அனுபவம். நம்பினோர் கைவிடப்படார். வாழ்த்துக்கள், சுந்தர்ஜி.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...உங்களோடு பயணிப்பதுபோலவே இருக்கு !

அமைதிச்சாரல் சொன்னது…

எத்தனை தடவை போனாலும் ஒவ்வொரு தடவையும் ஒரு புது அனுபவமும் உணர்வும்..

அருமையான தரிசனம் உங்கள் பகிர்வின் மூலம், நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுகமாய் ஒரு யாத்ரா உங்களுடனேயே நாங்களும் வந்த ஒரு உணர்வு.

தனித்தனியே படித்தாலும், மீண்டும் ஒரு முறை சேர்த்து படிக்க வேண்டும் எனத் தோன்றியது.

லட்டு பிரசாதம் - இன்னமும் எத்தனையோ விஷயங்களை சீர்படுத்தலாம்... ஆனால் செய்யத்தான் அவர்களுக்கு எண்ணம் இல்லையோ எனத் தோன்றுகிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அருமை.. நாஙக்ளும் உங்களுடன் வந்தது போல் உணர்வு என்னுள்!

ரிஷபன் சொன்னது…

ஆயிரம் குறைகள் சொன்னாலும் அங்கே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
போனதும் அவரவருக்கு ஒரு புரிதல் உண்டாகிறது வாழ்வில்..
உங்களோடு பயணித்த நிறைவில் என் நெஞ்சம் இப்போது.

சிவகுமாரன் சொன்னது…

சென்ற வாரம் இரண்டு நாட்கள் (நவம்பர் ) திருப்பதியில் இருந்தேன். தரிசனத்த்ற்கு ஆயிற்று மணி நேரம்.
தரிசித்தது அரை நிமிடம்.

நானும் ஒரு முறை , சென்னையிலிருந்து திருப்பதி பாத யாத்திரை செல்ல உத்தேசித்திருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி...

தொடர்ந்து சில ஆண்டுகள் சென்று அதன்பின் சில இறப்புக்களால் செல்லமுடியாமல் போய்..அப்புறம் மனவருத்தம் ஆகி...அதற்குப்பின் செல்லலாம் என முடிவெடுககையில் அப்பா இறந்துபோய்..இப்படி பல தடங்கல்கள்..உங்களோடு திருமலையானைத் தரிசித்தது நானே நேரில் சென்றதுபோல உணர்ந்தேன். இதுதான் எழுத்தின் வலிமையென நினைக்கிறேன். லட்டுக்கு அடித்துக்கொள்வது கண்ணப்பரைப்போன்ற காட்டுமிராண்டித்தனமாக பக்திதான். லட்டு என்பது தெய்வவடிவமாக இருப்தால்தான் இந்த அடிதடி. பொறுத்துக்கொள்வோம். நடையை சாத்தாது இருப்பதுதான் வணிகமயமாகும் பக்தியைக் காட்டுகிறது. திருப்பதி போகும்போதெல்லாம் நான் பெரும்பாலும் கோயிலுக்கு எதிரேயுள்ள கடைத்தெருவில்தான் நின்றுகொண்டு எல்லா மக்களையும் ரசித்துக்கொண்டிருப்பேன். அந்த ஆனந்தம் அலாதியானது. அருமையான பதிவு சுந்தர்ஜி. உங்களுக்கு ஒரு புத்தகம் அனுப்புகிறேன் எனது சிறுகதைத்தொகுதி பழைய கதைகளின் தொகுப்பு (புரண்டு படுக்கும் வாழ்க்கை) உங்களின் புதிய முகவரி தேவை. தாங்கள் உடனே புத்தகத்தைப் பெறுவதுபோல. படித்துவிட்டு எழுதத் தோணினால் எழுதுங்கள் அதுபற்றி சில வரிகள். நன்றி.

அப்பாதுரை சொன்னது…

நெரிசலில் தவித்து சுவாமி தரிசனம் செய்யும் அவசியம் எனக்குப் புரிவதேயில்லை.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

அருமையான பயணக்
கட்டுரை தாங்கள் பட்ட அனுபவத்தை பலமுறை நானும்
பட்டுள்ளேன்
நன்றி!




புலவர் சா இராமாநுசம்

Matangi Mawley சொன்னது…

எவ்வளவு நிறைவான பயணம். ஆனாலும் அந்த நெரிசல்... அந்த கூட்டம்... !
அந்த கோவில் வெளியே இருக்கும் வீதிகள்.. கடைகள்... அதிலும் ஒரு விதமான அழகு தான்... எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட... குழந்தைகள் தலை நிறைய சந்தனம்... கண்ணில் "இதோ-இதோ" என்று தளும்பி நிற்கும் கண்ணீர்-- பொம்மை துப்பாக்கிக்கும், கலர் கலர் கண்ணாடிக்கும் ஆசைப்பட்டுக்கொண்டு... :) கம கமக்கும் ஜவ்வாது, விப்ஹூதி, மஞ்சள்,கற்பூரம்- வாசம்! வண்ண வண்ண தாயத்து கயறுகள்... கோபி சந்தன வில்லைகள்... கோவில் உள்ளே காண முடியாத கடவுளின் பல்வேறு விதமான- வண்ண மயமான படங்கள்... ஆஹா!
நல்ல பசியிலும், களைப்பிலும் தங்களுடனேயே நடந்து வந்த எங்களுக்கும் அருமையாக ருசித்தது அன்னதான சமாஜத்தின் சாப்பாடு!
இது வரை திருப்பதி சென்ற அனுபவமே கிடையாது!
இதுவே முதல் முறை-- என்று சொல்லவேண்டும் போன்ற வருணனை...
Fantastic!

ஸ்ரீராம். சொன்னது…

// எது மிக அருகில் சுலபமாய்க் கிடைத்துவிடுகிறதோ அதில் சுவாரஸ்யம் இருப்பதில்லை. அதைத் தேடுவதும் இல்லை //

பக்கத்து உயரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

திருப்பதியின் அந்த ஆர்ப்பாட்டம் பல பேருக்கு ஒத்து வருவதில்லை. எனக்கும்! நீங்கள் கீழிருந்து மேற்கொண்ட நடை பயணத்தின் அருமையை, ரசனையை வெளிப் படுத்திய விதத்தில் கவரப் பட்டு மறுபடி போக ஆசை வருகிறது. மேலே ஏறி விட்டு கோவிலைப் பார்த்து விட்டுக் கூட திரும்பி விடலாம்தான்!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...