பெட்ரோலியத்தின் விலையேற்றம் யாரால் தீர்மானிக்கப்படுகிறது என்பதில் அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்குமிடையில் பெரும் குழப்பம் நிலவுகிறது என்பதைச் சாமானியனும் புரிந்துகொள்வான். போனவாரம் அரசின் குரலும் நிறுவனங்களின் குரலும் வேறுவேறு திசையில் இருந்ததையும், இந்த எண்ணெய் விலையேற்ற அரசியலுக்குப் பின்னுள்ள சதியையும் ஒரு கடிகாரத்தின் அளவு மூளையுள்ளவர்களும் புரிந்து கொள்வார்கள்.
யாசகம் கேட்பவனை விடவும் கேவலமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டுக் கடந்த 15 மாதங்களில் சுமார் 23 ரூபாய் விலையேற்ற அனுமதித்து இருக்கிறது இந்த அரசு.போன ஜூன் 2010 முதல் பெட்ரோல் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை வாழ்நாள் முழுதும் நட்டத்திலேயே இயங்கும் எண்ணெய் நிறுவனங்களிடமே அரசு கொடுத்துவிட்டது எத்தனை தொலைநோக்கான முடிவு? விலையேற்றம் பற்றிக் கேட்கும் கேள்விகளுக்கு எத்தனை திமிராய் இறுக்கமான முகத்துடன் மன்மோகனாலும் ப்ரணாப் முகர்ஜியாலும் பதில் சொல்ல முடிகிறது?
ஒரு இம்மியளவு கூட விலைவாசி கட்டுப்பாட்டில் இல்லை.அது தனக்குப் பெரும் தலைவலியாய் இருக்கிறது என்று புலம்புகிறார் பொருளாதார மேதை. நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தானாகவே தரையில் வந்திறங்க விலைவாசி என்ன மந்திரவாதி கையில் உள்ள பிரம்பா? யோசியுங்கள் மன்மோகன்.
மிகச் சாதாரணமான உங்களைச் சுற்றிக் கேட்கும் குரல்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். தீர்வுகள் எப்போதும் ப்ரச்சினைகளுக்கு அருகிலேயேதான் இருக்கின்றன. அதைத் தேடிப் பார்க்கவோ குறைந்தபட்சம் தேடித்தருபவர்களைப் பார்க்கவோ கூட உங்களுக்கு நேரமில்லை. அழுகிப்போன உங்களால் நாங்கள் ஆளப்படுவதை விட வேறேதுவும் மோசமான சாபம் எங்களுக்கிருக்கமுடியாது மன்மோகன்.
நீங்கள் சொல்வது போலவும், எண்ணெய் நிறுவனங்கள் புலம்புவது போலவும் அவற்றின் நிதிநிலை அறிக்கை இல்லை. உதாரணத்துக்கு 35,000 பேருக்கு மேலாகப் பணிபுரியும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டுகளில் என்னவென்று கீழே பாருங்கள்.
31.03.2003 6115 கோடி
31.03.2004 7005 கோடி
31.03.2005 4891.கோடி
31.03.2006 4916 கோடி
(http://www.iocl.com/Uploads/annual/IOC_Annual_Report_2005-06.pdf)
31.03.2007 7499 கோடி
http://www.iocl.com/Uploads/annual/IOC_Annual_Report_2006-07.pdf
31.03.2008 8550.56 கோடி
http://www.iocl.com/Uploads/annual/IOC_Annual_Report_2007-08.pdf
31.03.2009 2949.55 கோடி
http://www.iocl.com/downloads/IOC_FinancialResultAd.pdf
31.03.2010 10220.55 கோடி
http://www.iocl.com/downloads/IOC_FinancialResult_MAY_2010v1.pdf
31.03.2011 7445.48 கோடி
http://www.iocl.com/download/Audited_Financial_Results_2010-11.pdf
ஜூன் 4, 2002 ல் ரூ. 31.05 ஆக இருந்த அதன் விலை நவம்பர் 4, 2011ல் ரூ. 72.73ஐத் தொட்டிருக்கிறது. சென்னையின் கடந்த எட்டு வருடப் பெட்ரோலிய விலைமாற்றமும் இதற்கு வரியாக அடிப்படை விலையில் நான்கு மடங்குக்கு மேல் நாம் செலுத்தியிருக்கும் வரிவிதிப்பையும் நினைத்தால் தலைசுற்றுகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விற்றுக்கொள்முதல் (turnover) 31.03.2011ல் முடியும் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்து 4 ஆயிரத்து 631 கோடி எனும் போது இவற்றின் மீதான வரிவிதிப்பு ஒரு லிட்டருக்கு 4 மடங்கு எனும்போது கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி (வரியாகவோ தீர்வையாகவோ) இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து மட்டும் அரசுக்குக் கிடைக்கிறது. இது ஒரு உதாரணம்.
இது தவிர பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் எண்ணெய் நிறுவனங்களிலிருந்து வசூலிக்கப்படும் வரிவிதிப்பையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.இந்த வரிவிதிப்பில் அரசுக்கு ஒரு பெரிய சாதகமான அம்சம் ஒரு லிட்டர் விற்கப்படும்போதே உடனே வரி உள்ளிட்ட எல்லாத் தீர்வைகளும் கைக்கு வந்துவிடுகின்றன. ஆகையால் இந்த வரிவசூலிப்பைக் கணக்கில் வைத்துச் செலவுகளைத் திட்டமிடுதலும் மிக எளிதாக முடிந்துவிடுகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் ரூ. 72.73 க்கு விற்பனையாகும் போது மாநிலத்துக்கு வரி/வாட் ரூ.15.93ம் மத்திய அரசுக்கு வரி ரூ. 14.78ம் சேர்த்து ரூ.30.71 நேராகச் சென்றுவிடுகிறது. இதைத் தவிர்த்துவிட்டாலே கிட்டத்தட்ட பெட்ரோலின் விலை 42.02 ஆகக் குறைந்துவிடும்.
இதற்கடுத்து இந்தப் பெட்ரோலியப் பொருட்களுக்கு உபயோகப்படுத்தும் வாகனங்கள் -ராகுல் காந்தியும் தயாநிதி மாறனும் பயன்படுத்துவது போல- ஆடம்பரமான பெட்ரோல் குடிக்கும் வாகனங்களாய் இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கு அதிகபட்ச சூப்பர் டாக்ஸ் விதிக்க வேண்டும். அவற்றிற்கு சாலைகளை உபயோகப் படுத்தவும் அதிகபட்ச வரி விதிக்கவேண்டும்.வானில் பறக்கும் அரசியல்வாதிகள்-தொழில் அதிபர்களின் தனி விமானங்களுக்கும் உபயோகிக்கும் எரிபொருளுக்குத் தயவு தாட்சண்யம் இன்றி மிக அதிகமான விரிவிதிப்பு விதிக்க வேண்டும்.
அதேபோல எரிவாயு உருளைகளுக்கான மானியத்தை வறுமைக்கோட்டுக்குக் (இது இருக்கிறதா திரு. மாண்டேக்சிங் அலுவாலியா?) கீழே உள்ளவர்களுக்கு மட்டும் அளித்துவிட்டு மற்றவர்களுக்கு வரிவிதிப்பற்ற எரிவாயு உருளைகள் விநியோகிக்கலாம்.
எரிபொருளுக்கு மாற்றாய்க் கழிவுகளிலிருந்து வெளியாகும் வாயுக்களை அடிப்படையாய் வைத்து உருவாக்கப்படும் கண்டுபிடிப்புக்களுக்கு வரிவிலக்கும் அந்த மாதிரியான கண்டுபிடிப்புக்களுக்கு ஊக்கமும் அளிக்க வேண்டும்.
வாகனங்களுக்கு ப்ரேசிலையும் அமெரிக்காவையும் போல தாவரக் கழிவிலிருந்து உருவாகும் எத்தனாலை எரிபொருளாக உபயோகிக்க இனியும் அரசு தயக்கம் காட்டக்கூடாது. http://en.wikipedia.org/wiki/Ethanol_fuel. கச்சா எண்ணெயின் சுத்திகரிப்புக்கு பெரும் செலவு செய்யும் நம் நிறுவனங்கள் எத்தனாலின் சாதகங்களையும் பாதகங்களையும் நிபுணர்களை வைத்து விவாதித்து எண்ணெயைத் தவிர்த்த எரிபொருளுக்கு மாற முயலவேண்டும்.
இந்த வரி விதிப்பை நீக்கியபின் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவந்து விட முடியும். அதற்கு உண்மையான அக்கறையோடு வல்லுனர்களைக் கொண்ட குழு அமைத்து எல்லா நுகர்பொருட்களின் விலையையும் நிர்ணயிக்கவேண்டும்.
11 கருத்துகள்:
நாம் என்னதான் கரடியாய் கத்தினாலும் புலம்பினாலும், சோனியாவின் அடிமையான மன்மோகனுக்கு எதுவும் கேட்காது. இது மக்களுக்கான அரசு இல்லை. கார்பரேட் பண முதலைகளின் அரசு. இவர்களுக்கு பெரிய ஆப்பு வைக்கணும். திமிர் பிடித்த நிதியமைச்சரும் செயல்படாத உள்துறை அமைச்சரும், கேவலமான பிரதமரும் உள்ள நாடு, நம் நாடு.
அவர்களை பொறுத்தவரை மக்கள் செத்தால் என்ன? பண முதலைகளே முக்கியம்.
ஓன்றை கவனித்து இருக்கிறீர்களா சுந்தர்ஜி. இம்மாதிரி விலை ஏறும் போதெல்லாம் வெறுமே முதலைக் கண்ணீர் மட்டுமே வடிக்கும் மாநில அரசாங்கங்கள் விலையேற்றத்தால் அதிக நிதி வசூல் ஆவதால் எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒப்புக்குத்தான்.நட்டத்தில் இயங்குவதால்தான் விலை உயர்வு என்கிறார்களே. அந்த செய்தி தவறா.?
என்ன சொன்னலும் விலை குறையாது நண்பா
அதற்கு உண்மையான அக்கறையோடு வல்லுனர்களைக் கொண்ட குழு அமைத்து எல்லா நுகர்பொருட்களின் விலையையும் நிர்ணயிக்கவேண்டும். மன்மோகனின் தலைவலியும் நீங்கிவிடும். நமக்கும் விலைவாசி குறைந்துவிடும்.
கனவிலிருந்து நாம் அதற்கு விழிக்க வேண்டும்!
முடியல.. எப்படி இவனுங்களால இந்த அளவு தைரியமாக பொய் சொல்ல முடிகிறது? இதுல இந்த விலை உயர்வுக்கு (அ)யோக்கிய சிகாமணி சரத் பவார் வேற ஒத்து!
நல்ல கட்டுரை. பெட்ரோல் விலை லிடருக்கு 72ரூ உலக அளவிலும் அதிகம் தான்.
சென்ற பதினைந்து வருடங்களில் எண்ணெய் உபயோகமும் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்குமே? தனி மனித உபயோகம் தவிர வர்த்தக உபயோகம் கூடியிருக்குமே? வியாபார சமன்பாட்டில் அதையும் வைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். விலைவாசியைத் தரையிலிறக்குவது ஒரு புறம் - தேவைகளை மிதப்படுத்துவது இன்னொரு புறம். இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்கம் வராத முறையில் தனிப்பட்டத் தேவைகளை கட்டுக்குள் கொண்டு வரமுடியுமா? அறிவுள்ள பொதுஜனம் செய்யுமா?
சுந்தர்ஜி,
நான் சர்க்கரை ஆலையின் கழிவுப் பாகிலிருந்து ஆல்கஹால் ( மது பானத்திற்கானது) தாயரிக்கும் ஆலையில் பணிபுரிகிறேன். எங்கள் ஆலை போல் தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 ஆலைகளில் எரிசாராயம் தயாரிக்கப்படுகிறது. எல்லா ஆலைகளிலும் எத்தனால் எனப்படும் பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருள் தாயாரிக்கும் பிளான்ட் உள்ளது. ஆனால் எதுவும் ஓடவில்லை. எல்லா உற்பத்தியும் மதுபான் தாயாரிப்புக்குத் தான் போகிறது. மாநில அரசாங்கம் எத்ததனால் உற்பத்திக்கு ஆதரவாய் இல்லை. காரணம் டாஸ்மாக்குக்கு பிரச்சினை ஆகிவிடும்.
இந்தியாவில் 600 க்கு மேற்பட்ட சாராய ஆலைகளில் செய்யப்படும் உற்பத்தியில் 50 சதவிகிதம் எத்தனால்க்கு மாறினால் பெட்ரோல் இறக்குமதி குறைந்து விலை குறைய வாய்ப்புள்ளது.
அரசியல்வாதிகள் கையில் தான் உள்ளது.
அன்புள்ள சுந்தர்ஜி...
நான யோசித்து நொந்த செய்தி. ஆனாலும் அழகான காலதத்தின் தேவைக்கான சரியான கட்டுரை இது. உங்கள் யோசனைகள் திரு சிவகுமரன் சொன்னவை பரிசீலனைக்குட்படுத்தப் படவேண்டியவை.
என் மனதில் பட்டதையும் சொல்ல விழைகிறேன்.
டென்மார்க் எனும் நாட்டில் அதிகம் அதாவது 80 விழுக்காடு மக்கள் சைக்கிள்தான் பயன்படுத்துகிறர்கள். இது எத்தனை ஆரோக்கியமான ஒன்று.
ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் ஒரு டூவீலர் ஒரு கார்..அல்லது இரண்டு டூவீலர்...அல்லது இரண்டு கார்...என இரணடிற்குமேல் வாகனம் வாங்கி வைத்துக்கொள்ள கட்டாய தடை ஆணையாக அரசால் கொண்டுவரபப்டவேண்டும். எனவே வாகனம் குறைந்தால் சைக்கிள் போன்றவற்றைக் கட்டாயம் பயன்படுத்தும் நிலை வரும். இது பைத்தியக்காரத்தனமாகக்கூடத் தோணலாம். ஒருகாலத்தில் அப்படித்தர்ன் இருந்தோம். இப்போது காலம் மாறிவிட்டது என்கிற பழைய பல்லவியை எறிந்துவிடலாம். வாகனம் குறையும்போது அதன் தயாரிப்பும் குறையும். சாலைகளில் வாகனங்கள் குறையும். பயன்பாடு குறையும்போது பெட்ரோல் போன்றவை கட்டுக்குள் வரும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் கொட்டிக்கொடுக்கவேண்டியதில்லை.
சாலைகள் விரிவு இல்லை. போக்குவரத்து ஒழுங்கு இல்லை. ஒரு வழி சாலை இல்லை. எனவே சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்தைக் குறைக்கவேண்டும். இதனால் விபத்துக்களைக்கூட குறைக்க வழியுண்டாகலாம். இது தொடர் இணைப்பில் சாத்தியம் ஆகும். இதற்கு அரசு ஆணை முக்கியம்.
தாஙகள் குறிப்பிட்டது போல அதிக இலாபம் ஈட்டுகின்றன எண்ணெய் நிறுவனங்கள். இதனைக் கருதத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்தை மேலும் அரசுக்குப் பயன்படுத்த கூடுதல் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். அவர்களுக்கு செக் வைத்தால்தான் இது மாறும்.
நுகர்வோர் எனும் நிலையில் வாகனம் என்பது அவசரமான பணிகளுக்கு தொலைதுர்ரம் செல்வதற்கும் எனப் பயன்படுத்தியதுபோக பக்கத்தில் இருக்கும் கடைத்தெருவிற்கும்.. நடந்து போகவேண்டிய தொலைவு உள்ள இடங்களுக்கும்கூட வாகனத்தைப் பயன்படுத்தும் சோம்பேறித்தனமும் நம்மிடையே இருப்பதுகூட இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கான காரணங்களில் மிக முக்கியமானது.
வாகனம் பயன்படுத்துவோரின் வயதுகுறித்துகூட மறுபரிசீலனை செய்ய அரசு யோசனை செய்யலாம். குறிப்பாக பள்ளிச்சிறுவர்கள். கல்லுர்ரி மாணவர்கள் வாகனம் பயன்படுத்துவதில் சில கட்டுக்கோப்பான விதிகளை விதிக்கலாம்.
வாகனம் சீராக இயக்குவதற்கான சாலைகள் இல்லை. சாலைகளில் ஏராளமான தடைகள் உள்ளன (குறிப்பாக மாடுகள். ஆடுகள் நாய்கள்) இத்தடைகளை ஒழுங்குபடுத்துதலும் அவசியம். இதனால்கூட எரிபொருள் வீணாக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் அரசு விதி எனும் நிலையிலேயே கட்டுபபடுத்தவியலும்.
ஏனெனில் தனிமரம் தோப்பாவதில்லை என்பதையும் உணரத்தான் வேண்டியிருக்கிறது.
தூங்குபவனை எழுப்பலாம்
தூங்குவதுபோல் நடிப்பவரை என்ன செய்யலாம்
புள்ளி விவரங்களுடன் அனைவரும் அறிந்து தெளியும்படியான
அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ஹரணியின் கருத்தாழம் கவனிக்கப்பட வேண்டியது. அருமை!
அன்பரே! நலமா!
வெள்ளையர்கள் விட்டுப்போன ஆட்சி அவரைவிட கொடிய கொள்ளையர்கள் கையில் சிக்கி விட்டது
எண்ணை விலையேற்றம்
என்பது ஒரு பகல் கொள்ளை
மிகத் தெளிவாக
எழுதியுள்ளீர்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கருத்துரையிடுக