25.11.11

முடியாத பயணம்


















வீட்டைப் பிரிந்து
நள்ளிரவு ரயிலில்
அழுதுவடியும்
வெளிச்சத்தில்
ஆளற்ற ஊர்களைக்
கடக்கும்
உறக்கமற்ற இரவுகளை
நீங்கள் பெற்றதுண்டா?
குருதி வடியும்
காயங்கள் அவை.

நீரற்ற நதிப்பாலங்களை
பெருத்த இரைச்சலோடு
கடக்கும்போது
தடதடவென அதிர்கிறது
மனது என்றும்

மலையடிவாரங்களில்
ஆடுகள் மேயும்
தரிசு நிலங்களை
ஊளையிடும் காற்றோடு
கடக்கும் போது
சுமைதாங்காது
அழுதுவிடலாம் என்றும்

அவிழும் காற்சட்டையைப்
பிடித்துக்கொண்டே
கையசைத்தபடி
ரயிலோடு ஓடிவரும்
சிறுவர்களின் தனிமையும்
பின் தொடரும் வெறுமையும்
மீளாத் துயரம்தான்
என்று எழுதிவிடலாம்
இந்த வரிகளை.

என்றாலும்
மனதின் சுவர்களில்
தெறிக்கும்
துயரத்தின் சாறு
கடக்கும் காட்சிகளால்
அல்ல
ஓரிடத்தை
அடைய
மற்றோரிடத்தை
விட்டுச் செல்வதில்தான்
என்றுணர்த்த
நீள்கின்றன
பயணங்கள் முடிவுறாது.

6 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

இவை நம் உள் மனதின் அலைச்சலா..
எனில் சரியே.
//அவிழும் காற்சட்டையைப்
பிடித்துக்கொண்டே
கையசைத்தபடி
ரயிலோடு ஓடிவரும்
சிறுவர்களின் தனிமையும்//
சிறுவர்களின் உல்லாசம் அல்லவா.. கடந்து போகும் ரயில்களில் குதூகலித்துப் பின் வீட்டில் அடையப் போகும் உல்லாசப் புறாக்கள் அவர்கள்.

ரமேஷ் வெங்கடபதி சொன்னது…

தாயைப் பிரிந்து பள்ளிக்கு செல்லும் மகவின் மனவோட்டம், வாழ்வில் பலமுறை நினைவூட்டப்படும் - தொலைதூர பயணங்களில்..! நல்ல பதிவு!

அப்பாதுரை சொன்னது…

ரயில் பயணத்தில் ரசிக்க முடிகிற தத்துவம்.

Ramani சொன்னது…

சில நாட்களில் இரவில் கடைசி வண்டியில் வர நேர்கிறபோது
என்னுள் விரியும் ஒரு வெறுப்பு மனோ நிலையை
இந்தப் படைப்பில் உணர்ந்தேன்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

நிலாமகள் சொன்னது…

ஓரிடத்தை
அடைய
மற்றோரிடத்தை
விட்டுச் செல்வதில்தான்//
துய‌ர‌த்தின் சாறை உல‌ர‌ச் செய்வ‌தாய் தானே சூழ‌லில் தேடிக்க‌ண்ட‌டையும் இருப்பு இருக்கிற‌து! எல்லாம் க‌ட‌ந்து போகும்... பின்னும் நிலைக்கும் அனுப‌வ‌ங்க‌ள்; அவ‌ற்றின் உண‌ர்வ‌ய‌ங்க‌ள்.

இரசிகை சொன்னது…

nallaayirukku..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...