கடந்து நிற்பவை
எல்லாம் கடவுள்.
மதங்களின் எல்லைகள்
அற்றவை கடவுள்.
யாரும் எளிதில்
பின்பற்றமுடியாத
எளிமைதான் கடவுள்.
நேர்மை அன்பு
அர்ப்பணிப்பு-
இவையெல்லாம்
கடவுள்.
நம்பிக்கையும்
தோல்வியும்
கடவுள்.
அறியாமையும் குழந்தையும்
பெண்மையும் கடவுள்.
எல்லாவற்றையும்
விட்டுக்கொடுத்தல் கடவுள்.
பொறுத்து மறப்பது கடவுள்.
இவையெல்லாம்
உங்களிடமிருந்தால்
நீங்களே நீக்கமற
நிறைந்திருக்கும் கடவுள்.
உன்னத இசை கடவுள்.
நற்பண்பெல்லாம் கடவுள்.
மன்னிப்புக் கோருபவரும்
மன்னிப்பவரும் கடவுள்.
எதிரில் இருப்பதை
இல்லாத பொருளில்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும்
நிரூபணங்கள் தேடுகிறோம்.
சந்தேகங்கள் எல்லாம்
அற்ற பின்போ அறாமலோ
இயற்கையின் மடியில்
மரிக்கிறோம்.
நேற்று தொலைபேசியில் அப்துல்லா என்கிற ஒரு நண்பர் போன வருடம் செப்டம்பரில் எழுதியிருந்த இந்தக் கவிதையைப் படித்திருந்ததாகவும் அவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்துக்குத் தீர்வு காணவும் இந்தக் கவிதை உதவியது என்றும் சொல்லி நன்றி பாராட்டியபோது என் கண்கள் கண்ணீரில் கசிந்திருந்தன.
எழுதினால் பெரிதாய் என்ன கிடைக்கும்? படித்தால் என்ன கிடைத்துவிடும்? என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு என் கண்களிலிருந்து சொட்டிய துளிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அவரின் உரையாடலும் அவர் பற்றிய தகவல்களும் எல்லோருடனும் பகிர்வதற்கானதல்ல. பகிர்வது நாகரீகமும் இல்லை. ஆனால் அந்த உரையாடல் மூலம் எனக்குத் தோன்றிய எண்ணங்கள் இந்த இடுகையில். இந்த இடுகையின் பின்னணியில் என்னுடன் உரையாடிய அப்துல்லாவின் தழுதழுக்கும் குரலை நான் உணர்கிறேன்.
நேற்று தொலைபேசியில் அப்துல்லா என்கிற ஒரு நண்பர் போன வருடம் செப்டம்பரில் எழுதியிருந்த இந்தக் கவிதையைப் படித்திருந்ததாகவும் அவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்துக்குத் தீர்வு காணவும் இந்தக் கவிதை உதவியது என்றும் சொல்லி நன்றி பாராட்டியபோது என் கண்கள் கண்ணீரில் கசிந்திருந்தன.
எழுதினால் பெரிதாய் என்ன கிடைக்கும்? படித்தால் என்ன கிடைத்துவிடும்? என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு என் கண்களிலிருந்து சொட்டிய துளிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அவரின் உரையாடலும் அவர் பற்றிய தகவல்களும் எல்லோருடனும் பகிர்வதற்கானதல்ல. பகிர்வது நாகரீகமும் இல்லை. ஆனால் அந்த உரையாடல் மூலம் எனக்குத் தோன்றிய எண்ணங்கள் இந்த இடுகையில். இந்த இடுகையின் பின்னணியில் என்னுடன் உரையாடிய அப்துல்லாவின் தழுதழுக்கும் குரலை நான் உணர்கிறேன்.
வாழ்க்கையின் துவக்கம் தெரிவது போல் முடிவு தெரியாத ஒரு நாடகத்தில் நாம் வாழப் பணிக்கப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. பொங்கிவழியும் இன்பத்தை வாரி வாரி அளித்த நாட்கள் மறைந்து போய்விடுவதும், எதிர்பாராத கடுமையான சோதனைகளையும் துன்பங்களையும் வழங்கி வாழ்க்கையின் மீதான பிடிப்பையும் நம்பிக்கையையும் தளர்த்தி சஞ்சலத்தையும் சந்தேகத்தையுமே ஆதார எண்ணங்களில் புகுத்தி ஒவ்வொரு நாளையும் நரகமாக மாற்றிவிடுவதும் சுண்டிய நாணயத்தின் இரு பக்கங்களாய் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஒவ்வொரு மனிதனும் தன்னை வேறுவேறுவிதமாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது.
நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் போலவே நாமும் தெரிந்தும் தெரியாமலும் தவறுகள் இழைக்கும் சுபாவம் உள்ளவர்களாகவே இருக்கிறோம். ஆனால் நம் குற்றத்தை மிகச் சுலபமாக ஒதுக்கிவிட்டு நகர்வதைப் போல பிறரின் தவறுகளை நாம் ஒதுக்கிவிடுவதில்லை. ஏதிலார் குற்றம் போலத் தம் குற்றம் பார்ப்பதில்லை. அதை எத்தனை காலம் முடியுமோ அத்தனை காலம் சுமந்து நமக்கும் பிறருக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறோம். மிகச் சுலபமான ஒரு வடிகால் நம்மிடம் இருந்தாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவே. மன்னிப்புத்தான் அந்த வடிகால்.
தவறிழைத்த ஒருவரை நாம் மன்னிக்கும்போது அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையை விட மன்னிப்பவர் அடையும் நன்மையே அதிகம்.ஒருவர் செய்த தவறை மட்டுமே நாம் எண்ணும் போதும் அதையே சதா நினைத்துப் பெரிதுபடுத்தும்போதும் அவர் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்படுகிறது. ஆனால் அவரும் மனிதர்தான். தவறுகள் செய்வது சகஜம்தான் என நினைத்து அத்தவறை உடனே மன்னித்துவிடும்போது நமது மனமும் முகமும் சாந்தமாகிவிடுகிறது. நமது இறுக்கமான முகம் நிறைவான புன்னகையுடன் பிறரை வசீகரிக்கிறது. நாம் மன்னிக்கும் போது மன்னிப்பை வழங்க மறுக்கிற ஒருவரை விட அதிகமான நிம்மதியையும் வளங்களையும் பெறுகிறோம்.
நாம் மிகவும் கோபமாகவும் பிடிவாதமாகவும் கடுமையான கொள்கைகளுடனும் இருக்கும் காலங்களில் நம் முகத்திலும் மனதிலும் எழும் எண்ணங்கள் உண்டாக்கும் அதிர்வுகள் நம்மைச் சுற்றி உள்ளவர்களை நம்மிடம் நெருங்க அனுமதி மறுக்கிறது. ஆனால் அந்தத் தவறை மன்னித்து நமது சுமையைக் குறைத்துக்கொள்ளும் போது நம் மனம் எப்போதும் போல மகிழ்வையும் அதிலிருந்து பரவும் சுகந்ததையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அளித்து காரணம் இல்லாமலேயே எல்லோரும் மிக விரும்பக்கூடிய மனிதராக, குணமுள்ளவராக நாம் மாறிவிடுகிறோம்.
வெறுப்பும் கோபமும் வீண் சந்தேகங்களும் இத்தகைய சாதகமான இனிமையான குணங்களை ஒருபோதும் தருவதில்லை. என்றோ நடந்துமுடிந்த தவறிழைத்தவரே மறக்க நினைக்கிற ஒரு தவறை நாம் சுமக்கும் போது நம் மனதில் அதிர்ச்சியும் மனக்குமுறலும் தொடர்ந்து நம்மையும் பாதிக்கிறது. மாறாக தவறிழைத்தவர் மன்னிப்புக்கோரினாலும் கோராவிட்டாலும் நாமே முன்வந்து மன்னிக்கும் மனதோடு திகழும் போது மன்னிப்புக்கோருபவரை அன்பால் தண்டித்துவிடுகிறோம்.
உங்களில் பாவம் இழைக்கதவர்கள் முதல் கல்லை வீசி எறியுங்கள் என்கிற பைபிள் சொல்லுகிற பாடம் மன்னிப்புத்தான். மன்னித்து மறந்துவிடும்போது நமது துன்பமும் முடிவுக்குவந்து விடுகிறது.நடந்துமுடிந்த சம்பவத்தை அல்லது தவறை ஒரு பாடமாக நாம் பார்க்கும் முதிர்ச்சியை அடையும் போதுதான் அடுத்த கட்டத்துக்கு நாம் செல்ல முடியும்.நடந்துமுடிந்த ஒரு சம்பவத்தை மாற்ற முடியாது. ஆனால் அதையும் தாண்டிய மகத்தான ஒரு செயல்தான் மன்னிப்பு.
யார் தவறிழைத்தாலும் அவரிடம் அத் தவறால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் அடைந்த துன்பங்களையும் இனி அந்தத் தவறு அடுத்தமுறையும் நடைபெறாதிருக்கவும் மன்னிப்பதாய்ச் சொல்லி மன்னிப்போம். குறைகளும் தவறுகளும் தோல்விகளும் மனித வாழ்க்கையின் மற்றொரு அங்கம் என்பதால் குறைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனதை மாற்றிக்கொள்வோம்.
எந்த நிபந்தனையுமின்றி மன்னிப்புக்கேட்கவும் மன்னிக்கவும் பழகிக்கொள்வோம்.இந்தத் தலைமுறையில் மறைந்துவரும் இந்தப் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கும் நாம் சொல்லிக் கொடுப்போம். சொல்லிக் கொடுத்தலின் சிறந்த போதனை நாமே அந்தப் பழக்கத்தை முன்மாதிரியாகச் செய்து காண்பிப்பதுதானே?
நாம் அநேகமாய்
நினைக்க வேண்டியதை
மறக்கவும்
மறக்கவேண்டியதை
நினைக்கவும்
செய்கிறோம்.
மறக்க வேண்டியவற்றை
மறந்தும்
மறக்கக் கூடாததை
நினைத்தும்
வாழ்ந்து காட்டுவோம்
கடவுளாய்.
10 கருத்துகள்:
To err is human. To forgive is divine. அழகாக விளக்கி இருக்கிறீர்கள்
சுந்தர்ஜி. பாராட்டுக்கள்.
மறக்க வேண்டியவற்றை மறந்தும் மறக்கக் கூடாததை நினைத்தும்
வாழ்ந்து காட்டுவோம் கடவுளாய்.
இடுகையினூடே இழையோடும் வருத்தத்துடனான துக்கம் மனதை விம்மச் செய்கிறது ஜி! காலமும் கடவுளும் தவறுகளின் ரணத்தை வடுவாக்கி வடுவையும் மறையச் செய்யட்டும்!
hats off ji! nothing else to say.such a great post.thanks for sharing
அற்புதம். உண்மை.
கவிதைக்குள் இறைவனைக் காணுதல். சூப்பர்ப். உங்கள் எழுத்தின் ஆற்றலும் வீச்சும் புரிகிறது சுந்தர் சாமி :-))
ஸ்வாமியே சரணம் ஐயப்பா! :-)
இந்தப் பதிவுககாக தலை வணங்குகிறேன் சுந்தர்ஜி. நெஞ்சம் நிறை நன்றிகள்.
மன்னிப்பதால் கடவுள் ஆகின்றோமோ இல்லையோ --- மன்னிப்பில் தான் மனிதம் தழைக்கிறது.
--அவர் நாண நன்னயம் செய்து விடல்.
- இந்தக் குறள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
மனம் கவர்ந்த பதிவு.
நிறைய அசை போட வைக்கிறது. பாராட்டுக்கள்.
நெகிழ வைத்த இடுகை, உங்கள் கவிதை இத்தகைய வினையாற்றியிருப்பது சிலிர்க்க வைக்கிறது சுந்தர்ஜி சார், வாழ்த்துகள்.
முகப்புக்கென தேர்ந்தெடுக்கும் படங்கள் மனதை மயக்குகின்றன.
அன்புடன்..
அன்பு சுந்தர்ஜி...
ஒரு வாரத்துக்கு முன்பு என நினைவு...
அன்று தான் உங்களிடம் கேட்டிருந்தேன்,
புதிதாய் வலைப்பூவில் ஏதாவது இடுகை போட்டிருக்கிறீர்களா என்று..
கொஞ்சம் வறட்சியான சிரிப்போடு
அடிக்கடி எழுதிக் கொண்டிருக்கிறேன்,
நீங்கள் எப்போதாவது வருகை புரிந்து விட்டு இப்படிக் கேட்டால்
என்ன சொல்வது என்றீர்கள்..
அந்தக் கூச்சத்தோடு,
அன்று இரவு
எனது வாழ்க்கை இணை தோழர் ராஜியை அழைத்து வாசித்துக்
காட்டிக் கொண்டிருந்தேன் உங்களது
முதுமையின் நாட்குறிப்பு
அற்புதமான அந்தப் பதிவு எனக்கு நிறைய சிந்தனைகளைக் கிளர்த்திக் கொண்டிருக்க
தோழர் ராஜி கேட்டார்,
முதுமையை இன்னும் எட்டாத ஒரு மனிதர்
முதியவராகவே தம்மைக் கற்பிதம் செய்து கொண்டாலும்
இத்தனை சரியாக அந்த பருவத்தின் உணர்வுகளைச் சொல்லி விட முடியுமா..
வாழ்த்துக்கள்...
உங்களது பல பதிவுகளையும் அன்று வேட்கையோடு வாசித்தேன்..
இப்போது
கண்ணீர் மல்க நீங்கள் அப்துல்லாவின் பகிர்வை
எங்களுக்கும் வாசித்துக் காட்டியிருப்பதையும்..
வாழ்த்துக்கள்..
எஸ் வி வேணுகோபாலன்
பின் குறிப்பு:
(இன்று காலை ஒரு முரட்டு ரசிகர் பாண்டிச்சேரி பாகூர் கூட்டுறவு பண்டக சாலையில் ஊழியராக இருப்பவர், தோழர் ஆனந்த்
அழைத்தார், ஏற்கெனவே, கடந்த வாரம் ஒரு கவிதைக்காக என்னை மிகவும் பாராட்டிக் கொண்டிருந்த அந்த எளிய மனிதர்,
உங்கள் கவிதையை எனக்கு வாசித்தார், அதுவும் எனது எழுத்திலிருந்து... அது எதற்காக?
ச சுப்பாராவ் அவர்களது தாத்தாவின் டயரிக் குறிப்புகள் நூலுக்கான எனது மதிப்புரையை அவர் பன்முறை படித்துப் படித்துத் திளைப்பவராம்.
நான் ஒரு வேளை எழுதிவிட்டு அடுத்த விஷயத்திற்கு நகர்ந்திருப்பேனாம்....அது எத்தனை ரசமான எழுத்து என்பதை நான் உணரும் வண்ணம் அவர் எனக்குப் படிக்க தொடங்கிவிட்டார்..அது உங்களது அருமையான கவிதை ஒன்றிலிருந்து தான் தொடங்குகிறது...
எனது இன்றைய நாளை இப்படித் தான் அவர் இன்பமாகத் தொடங்கி வைத்தார்,...இப்போது உங்களது வலைப்பூவைப் பார்த்துவிட்டேன்..
தாங்க இயலாத உடல் வலி, சளி, காய்ச்சல் இவற்றோடு விடுப்பு போட்டு உட்கார்ந்திருக்கும் என்னை
இப்போது யார் எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்?
பாகூர் ஆனந்தனா, சுந்தர்ஜியா, சுப்பாராவா, டாக்டர் ராமானுஜமா, மருத்துவர் பி வி வி அவர்களா..
சகித்துக் கொண்டிருக்கும் தோழர் ராஜியா..)
கருத்துரையிடுக