ஒவ்வொரு முறையும் என்னைக் கலங்க வைக்கும் இந்தக் குரலையும் வரிக
ளையும் என் வட்டத்தில் பேச முடிந்த எல்லோரிடமும் பேசித் தீர்த்தாயிற்று. இன்னும் தீரவில்லை இதன் மூச்சுமுட்ட வைக்கும் துயரம். இனி இப்படி ஒரு பாடலைப் பாட ஸ்வர்ணலதா வரமாட்டார். வைரமுத்துவாலும் இப்படி ஒரு பாட்டை எழுதமுடியாது. அதேதான் ரெஹ்மானுக்கும்.
அந்தப் பாடலின் ஆறு நிமிடங்களும் கடப்பதற்குள் ஒரு முழு வாழ்வையே கடப்பது போல் எத்தனை அனுபவங்கள்? கிராமத்து அப்பாவிப் பெண்ணொருத்தி.மனதின் கட்டளைக்குப் பலியாகி ஒருவனைக் காதலித்து அவன் விட்டுச் சென்ற மீளாக் காயத்தைக் கடைபரப்புகிறாள். புகைந்தபின்னும் மணத்தை விட்டுச் செல்லும் ஊதுவத்தியைப் போல இந்தப் பாடலின் குரல் முடிந்த பின்னும் நம் புலன்களின் ஆணிவேர் வரை அசைத்தெடுத்து விடுகிறது.
ரெஹ்மானின் இசையில் ரெஹமானும் நஸ்ரத் ஃபடே அலி ஃகானும் ஹிந்தியில் கொடுத்த சந்தா சூரஜ் பாடலின் அனுபவமும் ஸ்வர்ணலதாவின் உயிரைத் துளைக்கும் குரலும் கவிதையாய் மிளிரும் வைரமுத்துவின் வார்த்தைகளும் உர்து மொழியில் மட்டுமே கிடைக்கும் கஸல் அனுபவமும் வேறுவேறு ரஸானுபவங்கள்..
பாடலுக்கு ஏற்ற வரிகளும் வார்த்தைகளும் ஒரு பாடலை உன்னதமான கவிதையாக்கி விடுகின்றன.
போறாளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறுந் தந்த மண்ண விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழிய விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊர விட்டு
சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா
எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சீவன்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்ட போல
நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில்
ஊமையும் ஊமையும்
பேசிய பாசையடி
தெக்கத்திக் காத்து
அஞ்சாறு சீவன்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்ட போல
நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில்
ஊமையும் ஊமையும்
பேசிய பாசையடி
தெக்கத்திக் காத்து
தெச மாறி வீச
ஒண்ணான மேகம்
ஒண்ணான மேகம்
ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒண்ணு
உசுருள்ள நாத்து ஒண்ணு
வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது
சாதிக்கு ஆனதடி
நெஞ்சுக்குழி காஞ்சு
நெஞ்சுக்குழி காஞ்சு
நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர்
வீட்டுக்குங் காட்டுக்குங்
ஒரு உயிர்
வீட்டுக்குங் காட்டுக்குங்
கூட்டுக்குள் இழுக்குதம்மா
சேமிச்ச காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு
சேமிச்ச காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு
பாரமம்மா பாரமம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும்
சோத்துக்கும் சொந்தத்துக்கும்
தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும்
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும்
நாளைக்கு நன்மையம்மா
பழகின மண்ணை விட்டு நிர்பந்தங்களுக்காகத் தொலைதூரம் போகும் எல்லாக் கருத்தம்மாக்களுக்கும் கருத்தப்பன்களுக்கும் எழுதப்பட்டுப் பாடப்பட்ட ஒரு உன்னதமான வெள்ளை மலரையொத்த பாடல் இது. [இதற்குச் சமமான மற்றொரு பாடலான விடைகொடு எங்கள் நாடே வேறொரு மனதை உலுக்கும் ரகம். அது வேறொரு இடுகையில் எழுதுவேன்.]
தண்ணீருஞ் சோறுந் தந்த மண்ணோடு பால் பீய்ச்சும் மாட்டையும் பஞ்சாரத்துக் கோழியையும் அஞ்சாறு சீவனையும் விட்டுப் பிரிய நேர்ந்தால் அவைகளும் கூடத்தான் கண்ணீர் சிந்தியிருக்கும்.
கருத்தம்மாவுக்குத் தெரிந்த உயர்ந்த ஜாதிப்பூ சாமந்திப்பூவும் ஊமத்தம்பூவுமே. அதில் தான் எந்தப் பூவோ எனக் கவிதை கேட்க நேரும்போது ரோஜாக்களும் மல்லிகையும் கூட கருத்தமாவுக்காக இரண்டு சொட்டுக் கண்ணீரை உதிர்க்கும். பொதிமாட்டு வண்டியில் எல்லா பாரமும் ஏற்றி முடித்தான பின் இடமிருந்தால் அதன் மேலே போனால் போகிறது என்று போட்டுவைக்கிற வண்டியோட்டியின் மூட்டை போலிருக்கும் அவள் வாழ்க்கைக்கு வேறேது பொருத்தமான உவமையாய் இருந்துவிடும்?
ஊமையும் ஊமையும் பேசிய பாஷை போல பூசப்பட்ட நேசமும் பாசமும் ஆகிப்போகும் போது காற்றால் திசைமாறிய மேகத்தின் கிட்டாத உயிர்த்துளிக்காய் வாடி நிற்கும் நாற்றாகி விடுகிறது.
ஒருவருக்காகக் காத்து நின்ற ஓர் உயிர்த்தவிப்பு யாருக்காகவோ எனும்போது அவளின் காதல். எத்தனை உருக்கமான கற்பனை? ஆனால் அந்த வரியை வைரமுத்துவிடம் அனுமதி கேட்டுக்கொண்டு இப்படித்தான் பாடுவேன் நான். கடைசியில் சாமிக்கு நேர்ந்தது பூசாரிக்கு ஆனதடி. முகமில்லாத சாதியை விட முகம் தெரிந்த தனக்கு விருப்பமில்லா ஒரு பூசாரிக்குப் போனதன் துயரம் இன்னும் ஆழமான வடுவாய் மனதின் சுவர்களில்.
மூட்டை மூட்டையாய் சேமித்த அத்தனையும் பொழுதுவிடியும் போது கலைந்த கனவு போல செல்லாக்காசாய் மாறும் சோகம் இழப்பவனுக்கு மட்டுமே நேரும் தீராக் காயமானாலும் அது நம்முடைய சேமிப்பையும் அல்லவா செல்லாக்காசாகிப் போனதுபோல உலுக்குகிறது?
ஒருவருக்காகக் காத்து நின்ற ஓர் உயிர்த்தவிப்பு யாருக்காகவோ எனும்போது அவளின் காதல். எத்தனை உருக்கமான கற்பனை? ஆனால் அந்த வரியை வைரமுத்துவிடம் அனுமதி கேட்டுக்கொண்டு இப்படித்தான் பாடுவேன் நான். கடைசியில் சாமிக்கு நேர்ந்தது பூசாரிக்கு ஆனதடி. முகமில்லாத சாதியை விட முகம் தெரிந்த தனக்கு விருப்பமில்லா ஒரு பூசாரிக்குப் போனதன் துயரம் இன்னும் ஆழமான வடுவாய் மனதின் சுவர்களில்.
மூட்டை மூட்டையாய் சேமித்த அத்தனையும் பொழுதுவிடியும் போது கலைந்த கனவு போல செல்லாக்காசாய் மாறும் சோகம் இழப்பவனுக்கு மட்டுமே நேரும் தீராக் காயமானாலும் அது நம்முடைய சேமிப்பையும் அல்லவா செல்லாக்காசாகிப் போனதுபோல உலுக்குகிறது?
கன்னங்களில் வடிந்து காய்ந்து போன உவர்நீர்க்கோலங்களாய் வாழ்க்கை தீய்ந்து போனதாய் முடிக்கும் போதும் பொறு பொறு நாளை உனக்கான வாழ்க்கை ஒரு வாழையைப்போல அதன் கீழுள்ள கன்று போல நன்மை செய்யக் காத்திருக்கிறது என்று நம்பிக்கையை அவள் தனக்கே தனக்காய் சொல்லிக்கொள்ளும் போது அந்தக் கவிதை உன்னதமான ஒரு காவியமாய் நம் மனதில் அசைகிறது.
இந்தப் பாடல் தந்த அனுபவம் நான் பெற்ற பேறு. சாகும் வரையும் செத்த பின்னும் என்னை விடாது. தேசிய விருதுகள் இதுபோன்ற பாடல்களால் பெருமை அடைகிறது என்றாலும் உலகத் தரத்தை அனாயாசமாகத் தொட்ட பாடல். ரெஹ்மானுக்கும் ஸ்வர்ணலதாவுக்கும் வைரமுத்துவுக்கும் நன்றிகள் சொல்லி மிகுந்த மனநிறைவுடன் எழுதிமுடித்த பின்னும் இன்னும் அந்தக் குரல் சயனைட் போலத் தொடர்கிறது. என்ன செய்ய?
11 கருத்துகள்:
ஆச்சரியமாக இருக்கிறது ஜி.இப்பொழுதுதான் காதில் ஹெட் ஃபோன் வைத்துக் கொண்டு இந்த பாட்டை கேட்டு முடித்து இனி இந்த குரல் புதுப் பரிசுகள் தராது என்ற வருத்தம் சுமந்தபடி வலைக்குள் வந்தால் டேஷ் போர்டில் "போறாளே பொன்னுத்தாயி" என்றிருக்கிறது.
மனதை அதற்குள்ளேயே தக்க வைத்துக் கொண்டு அதைச் சுற்றியே படர்ந்து கொள்ள வைக்கும் பாடல்.
பகிர்விற்கு நன்றி ஜி!
சுந்தர்ஜி...இந்தப் பாட்டைகேட்டபோது இத்தனை உணர்வும் மனதிற்குள் விளங்கினாலும் சொல்லத் தெரியாமல் இருக்கும்.நீங்கள் எழுதியேவிட்டீர்கள்
என்ன ஒரு குரல்....
போறாளே பொன்னுத்தாயி....
நானும் ரசித்த பாடல்.... இது போன்ற பாடல் தர ஸ்வர்ணலதா இல்லையே என்ற ஏக்கத்தை மாற்ற வழியில்லையே....
பொதிமாட்டு வண்டியில் எல்லா பாரமும் ஏற்றி முடித்தான பின் இடமிருந்தால் அதன் மேலே போனால் போகிறது என்று போட்டுவைக்கிற வண்டியோட்டியின் மூட்டை //:((
பாடகியின் இறப்பின் இழப்பிலும் உங்க இரங்கலில் இப்பாடல் பிரதான இடம்பிடித்திருந்தது இன்னும் நினைவை விட்டு அகலா நிலையில் சேர்ந்தழுது ஓயும்படி இப்பதிவு. மனம் கனத்துப் போகும்போதெல்லாம் இனி இப்பதிவைத் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் நாங்கள்.
முதல் முறையா- palakkad ல ஒரு gala nite போது வாருணி அக்கா (அப்பா வோட friend ஓட daughter) பாடி கேட்டேன். school ல படிச்ச காலம். rahman swarnalatha யாரையும் தெரியாது. வார்த்தையும் புரியாது. வாருணி அக்கா வோட குரல் ல அந்த பாட்டில இருந்த ஆழமும், சோஹமும் தான் தெரிஞ்சது. original version கேட்கல அப்போ. '98 -'99 ல Lahore -Delhi bus inaugurate பண்ணின போது "chanda sooraj" பாட்டு- அந்த occasion அ கௌரவிக்க theme ஆ use பண்ண பட்டது. DD ல அன்னிக்கு நாள் முழுக்க அந்த பாட்ட telecast பண்ணின வண்ணம் இருந்தாங்க. இப்போ- அந்த பாட்டோட essence தெரிஞ்சது. நிறைய வருஷம் கழிச்சு- original version கேட்டப்ரம்- அந்த பாட்டோட meaning புரிஞ்சப்ரம் தான்- rahman மேல அத்தன respect வந்தது! Hats off !!
Brilliant piece of writing Sirji! Brings out all that is the song so well!
//இந்த பாட்டை கேட்டு முடித்து இனி இந்த குரல் புதுப் பரிசுகள் தராது என்ற வருத்தம்
well said..
ஆம் சுந்தர்.
இந்தப் பாட்டை நாம் காதுகளால் கேட்கவில்லை.
மனசால் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஸ்வர்ணலதா இன்னமும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
swarnalathaa...
paadalkalil swaasithuk konde iruppal...
சோக ரசம் ததும்பும் கிராமீய மணம் கொண்ட பாடல் நானும் ரசித்திருக்கிறேன்.
அருமையானப் பாடல்;
அருமையானப் பதிவு;
படிக்கப் படிக்க அருமையாய் இருக்கு;
கருத்துரையிடுக