15.12.11

தத்தாத்ரேயரும் 24 குருமார்களும் - II

எனது 24 குருமார்கள்.
====================
முன்னொரு காலத்தில் யது என்னும் பெயர் கொண்ட அரசன், பிறந்த மேனியாய்ச் சுற்றிக்கொண்டிருந்த யௌவனரான ஒரு துறவியிடம்,

”மனிதர்கள் பெரும்பாலும் நீண்ட ஆயுள், புகழ் பாராட்டு, செல்வம் ஆகியவற்றை அடையவே அறம், பொருள், இன்பம், வீடென்ற சக்கரத்துள் அழுந்தியிருக்கிறார்கள். சதா காமம், லோபம் என்கிற தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீரோ அவைகளால் தீண்டப்படாமல், கங்கையில் மூழ்கிக் களிக்கும் யானையைப் போல - இப்படி ஆனந்தமாய்த் திரிகிறீரே? உமக்கென்று எந்தச் செயலுமின்றி இருக்க எப்படிச் சாத்தியமாயிற்று?” என்று கேட்டான்.

 ”என் புத்தியில் புகுந்து குருவாய் விளங்குபவர்கள் எனக்குப் பலர் இருக்கிறார்கள். அந்த ஆச்சாரியர்களிடமிருந்து நான் பெற்ற போதனையால் நான் முக்தனாகச் சஞ்சரிக்கிறேன். என்றபோதும் நான் போதனை பெற்ற 24 குருமார்களைப் பற்றிக் கூறுகிறேன். கேளும்.

பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேகரிக்கும் வேடன், மான், மீன், பிங்களை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தொடுப்பவன், பாம்பு, சிலந்தி, குளவி ஆகியோரே அவர்கள்” என்றார் அவதூதரான தத்தாத்ரேய மஹரிஷி.

1.
மற்றவர்களால் எத்தனை துன்புறுத்தப் பட்டாலும் எல்லாம் ப்ராரப்த கர்மாவின் படியே நடப்பதாய் எண்ணி, தன் மீது பள்ளம் தோண்டினாலும், உழுதாலும், எரித்தாலும் பொறுமையோடு ஏற்பதுடன், எல்லா உயிர்களும் வாழத் தேவையான சூழ்நிலைக்கும் உதவியாய் இருக்கும் இந்த பூமியிடமிருந்து பொறுமை, எந்தச் சூழ்நிலையிலும் பிறருக்கு உதவும் அன்பு, சகிப்பு இவற்றைக் கற்றேன். மலைகளோடும் நதிகளோடும் மரங்களும் இதன் சீடர்கள். இவற்றை எனக்குப் போதித்த பூமியே எனது முதல் குரு.

2.
தூய்மையும் மணமும் அற்றது காற்று. மணம் நிறைந்த பொருட்களின் மீதும், துர்நாற்றம் வீசும் பொருட்களின் மீதும் எந்தப் பாரபட்சமும் இன்றி வீசிக் கடப்பதைப் போல, இன்பம் துன்ப்ம் துவங்கி, வாழ்க்கையின் எல்லா எதிரெதிர் நிலைகளின் குண தோஷங்களால் பீடிக்கப்படாமல், பற்றின்றி எதிர்கொள்ளும் பக்குவத்தைக் காற்றிடம் கற்றேன். காற்றே என் இரண்டாவது குரு.

3.
காற்றினால் அலைக்கழிக்கப்படும் மேகங்கள் ஆகாயத்தில்தான் இருக்கின்றன. அசைபவை, நிலைத்திருப்பவை அனைத்திலும் மறைந்தும், பிளவுபடாமலும், பற்றில்லாமலும், எங்கும் வியாபித்தும் இருக்கும் நிர்மலமான ஆகாயம், எங்கும் நிறைந்த ஆன்மாவுடன் உள்ள ஒற்றுமையை போதிப்பதால் ஆகாயம் அல்லது வெளி- என் மூன்றாவது குரு.

4.
தெளிவானதும், மனநிறைவு அளிப்பதும், எல்லாவற்றையும் தூய்மையாக்கும் நீரே என் நான்காவது குரு. பார்வை மற்றும் உபதேசங்களால் மக்களைத் தூய்மைப்படுத்தும் ஞானி ‘நீரின் நண்பன்’ என அழைக்கப்படுகிறார்.

5.
நெருப்பு சில இடங்களில் மறைந்தும், சில இடங்களில் வெளிப்படுத்தியும் கொள்கிறது. தன்னில் இடப்பட்டவற்றின் நன்மை, தீமை பேதமின்றி எதையும் எரித்துச் சாம்பலாக்குகிறது. பிறருக்காக அனைத்தையும் ஏற்கும் சுடரும் நெருப்பே என் ஐந்தாவது குரு. 

6.
பிறப்பிலிருந்து மரிப்பு வரை உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன. அதற்கும் ஆன்மாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேய்வதும், பின் வளர்வதும் காட்டி இல்லாமையிலிருந்து இருப்பை உணர்த்தும் சந்திரனே என் ஆறாவது குரு.

7.
சூரியன் தன் கதிர்களால் நீரை உறிஞ்சி மழையாய்ப் பொழிவிக்கிறான். ஆனால் உறிஞ்சும் நீருடனும், பொழியும் நீருடனும் உறவை உண்டாக்கிக் கொள்வதில்லை. பெறுவதிலும், கொடுப்பதிலும் ஞானிக்குப் பற்றிருக்கக் கூடாது. பல இடங்களில், பல நாடுகளில் உதிப்பதாய்த் தோன்றினாலும் உதிப்பது ஒரே சூரியனே. உடல்களால் பலவாக இருந்தாலும் ஆன்மா ஒன்றே என உணர்த்திய சூரியனே என் ஏழாவது குரு.

8.
வேடன் ஒருவன் வலை விரித்துப் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இவற்றைக் கண்ட ஆண் புறா தானும் வலையில் சென்று சிக்கிகொண்டது. குடும்ப வாழ்க்கை நடத்தும் மனிதன் மன அமைதி இழந்து, நிலையற்ற சிந்தனைகளோடு அவர்களைப் பராமரித்துக் கொண்டு குடும்பத்திலேயே கட்டுண்டு அழிகிறான். அளவுக்கு மீறிய பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்த்திய புறாவே என் எட்டாவது குரு.

9.
எங்கும் அலையாமல் பெரியதோ, சிறியதோ சுவை மிக்கதோ, அற்றதோ, கிடைத்தாலோ கிடைக்காது போனாலோ கவலையற்று, தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். ஆக மலைப்பாம்பே என் ஒன்பதாவது குரு.

10.
கடலில் நதிகள் கலப்பதால் கடல் தன் கரையைக் கடப்பதிலை. கலக்காவிடில் வற்றுவதுமில்லை. அதுபோல ஒரு ஞானி தன் விருப்பங்கள் நிறைவேறினால் வருத்தமோ, இல்லாதுபோனால் துயரமோ அடையமாட்டார். மேலும் ஒரு ஞானி கடலைப்போல ஆரவாரத்துடனும், கம்பீரத்துடனும், ஆழங்காண இயலாதவராயும், கடக்க இயலாதவராகவும் கலக்கமுடியாதவ்ராகவும் விளங்க மாதிரியாய் விளங்கும் கடலே என் பத்தாவது குரு.

11.
புலன்களை வெல்லாதவன் தீயில் வீழும் விட்டிலைப் போன்றவன். மாயையால் உண்டாக்கப்பட்ட பெண், பொன், ஆபரணம், ஆடை ஆகியவற்றால் வசீகரிக்கப்படும் அஞ்ஞானி அறிவைத் தொலைத்து அவற்றிலேயே மூழ்கி விட்டிலைப் போல அழிகிறான் என்று போதனையைத் தூண்டிய விட்டில் பூச்சி என் பதினொன்றாவது குரு.

12.
எல்லா மலர்களிடமிருந்தும் சிறிது தேனை நுகரும் தேனீ, எல்லோரிடமும் சிறிதளவு உணவைப் பெற்று சரீரத்தைக் காப்பது குறித்தும், பலவிதமான சாஸ்திரங்களிலிருந்தும் அதன் சாரமான தத்துவத்தை மட்டும் கிரஹித்து வீண் தர்க்கங்களைத் தவிர்க்க அறிவுறுத்தியது. பிச்சை ஏற்கும் கைகளே கலம். வயிறே அதனை வைக்கும் இடம். அடுத்த வேளைக்கென உணவைச் சேமித்தால் தேனைச் சேகரித்து கூட்டுடன் அழியும் தேனீயின் நிலைதான் உண்டாகும். இதனால் தேனீ என் பன்னிரெண்டாவது குரு.

13.
வேடன் அமைத்த குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்து மோகம் கொண்ட ஆண் யானையும் குழியில் வீழ்ந்தது. துறவியானவன் மரத்திலான பெண்ணைக் காலினால் கூடத் தொடக்கூடாது என்பதை உணர்ந்தேன். யானை என் பதிமூன்றாவது குரு.

14.
தேனீக்கள் பல நாட்களாகத் தேனைச் சேகரிகின்றன. கூட்டினைக் கலைத்து கவர்ந்து செல்கிறான் வேடன். கருமி சேகரித்து வைக்கும் பொருட்களும் மரணத்துக்குப் பின் இன்னொருவனால் அனுபவிக்கப்படுகின்றன. தேன் சேகரிக்கும் வேடனே என் பதினான்காம் குரு.

15.
மானைப் பிடிப்பதற்கு முன்னால் அதைத் தூண்ட வலை விரிக்கும் வேடன் இசைக்கும் இசைக்கு ஆபத்தையும் சூழ்நிலையையும் அறியாமல் கண்ணை மறைக்கும் ஆசையுடன் துள்ளிக்குதித்து வேடனிடம் சிக்கிக்கொண்டது மான்.[மானின் வயிற்றில் பிறந்த ரிஷ்யசிருங்கர் பெண்களின் ஆட்டம் பாட்டங்களில் சிக்கி அவர்களின் கைப்பாவை ஆனார்] துறவி உலகின்பமூட்டும் இசைக்கு அடிமையாகக் கூடாது. ஆக, மான் என் பதினைந்தாம் குரு.

16.
தூண்டில் புழுவைச் சுவைக்க ஆசை கொண்டு மாட்டிக்கொண்ட மீனே வாயைக் கட்டுப்படுத்தும் உபாயத்தைக் கற்றுக்கொடுத்தது. உணவின் மீதான ஆசையை வென்றவர்கள் புலன்களை எளிதில் கடப்பார்கள் எனும் பாடத்தை உணர்த்திய மீனே என் பதினாறாம் குரு.

17.
பிங்களா என்ற தாசி நன்கு தன்னை அலங்கரித்துக் கொண்டு வருவதாய்ச் சொல்லியிருந்த வாடிக்கையாளனுக்குக் காத்திருந்தாள். நெடுநேரம் கடந்தும் அவன் வராது போகவே அவளுக்குள் வைராக்கியம் உதித்தது. தன்னையே அளிக்கும் இறைவனை விட்டு நாளை அழிய இருக்கும் நரர்களிடம் ஆசை வைத்தேனே என வருந்தி ஆண்கள் மீது வைத்த ஆசையைத் துறந்து தெளிவடைந்தாள். பெருவிருப்பம்,பெருந்துக்கம்; விருப்பமின்மை பரம சுகம் என்பதைப் புரிந்துகொண்டேன். அவளே என் பதினேழாவது குரு.

18.
தன் வாயில் அபூர்வமான ஒரு இறைச்சித் துண்டைக் கவ்விச்சென்ற ஒரு குர்ரப் பறவையை எல்லாப் பறவைகளும் துரத்தித் துன்புறுத்தின. காரணம் புரிந்து வாயிலிருந்து அத்துண்டை விடுவித்தவுட்ன் அதன் துன்பம் நீங்கியது. அவசியமில்லாத, அளவுக்கு மிகுதியானவற்றைச் சுமந்து அலைவது துன்பம் என குர்ரப் பறவை கற்றுக் கொடுத்து என் பதினெட்டாவது குருவானது.

19.
மான அவமான பேதமற்ற, வீடு மக்கள் குறித்த கவலையற்றவர்கள் பாலகர்களே. பரமானந்தத்தில் மூழ்கியோர் இருவரே. ஒருவர் சூதுவாது அறியாக் குழந்தை; மற்றொருவர் குணங்களை எல்லாம் கடந்த ஞானி. தாயிடம் பாலருந்தும் மழலையே என் பத்தொன்பதாம் குரு.

20.
வீட்டில் யாருமில்லை. திடீரென வந்த உறவினர்களுக்கு உணவு தயாரிக்க குமரிப்பெண் ஒருத்தி கை நிரம்ப வளையல்களுடன் உரலில் நெல்லைக் குத்துகிறாள். அவள் நெல் குத்துவதை வளையல்கள் ஒலி எழுப்பிக் காட்டிக் கொடுக்கின்றன. அதைக் கண்டு வெட்கமுற்று இரு வளையல்களை மட்டும் அணிந்து தொடர்கிறாள். இப்போதும் அவை ஒலி எழுப்பவே ஒற்றை வளையல் அணிந்து ஒலியை முடக்குகிறாள். இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் கூட தேவையற்ற விவாதம், கலகம் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன். அவளே என் இருபதாம் குரு.

21.
அம்புடன் இலக்கை நோக்கிக் குறி வைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். பரிவாரங்களுடன் கடந்துபோன அரசனைக் கூட கவனியாது தன் இலக்கில் தீவிரமான கவனத்தைச் செலுத்தியபடி இருந்த அவன், சஞ்சலமில்லாது மனதை ஒரே இலக்கில் செலுத்தும் வைராக்கியத்தையும், பயிற்சியையும் எனக்கு அறிவுறுத்தினான். அவனே என் இருபத்தியொன்றாவது குரு.

22.
தனக்கென்று இருப்பிடத்தைப் பாம்பு உருவாக்கிக் கொள்ளாது  கரையான் உருவாக்கிய புற்றில் உறைகிறது. சிறிது காலமே வசிக்க இருக்கும் இந்த உடலுக்கு பெரிய வீட்டைத் திட்டமிடுவது துக்கத்தின் தொடக்கம். துறவிக்கு வானமே குடிசையாய் வாழும் போதனையைக் கற்றுக் கொடுத்த பாம்பே என் இருபத்தியிரண்டாம் குரு.

23.
சிலந்தி தன் வாயிலிருந்து உற்பத்தியாகும் இழையில் நெய்யப்பட்ட வலையைத் தன தேவை பூர்த்தியானவுடன் மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக்கொள்கிறது. ஈசனும் தன்னிலிருந்து இவ்வுலகை வெளிக்கொண்டு தன விருப்பப்படி லீலைகளை முடித்துக்கொண்டு யுக முடிவில் மீண்டும் தனக்குள்ளே இழுத்துக்கொள்கிறார். இதை போதித்த சிலந்தியே என் இருபத்திமூன்றாவது குரு.

24.
புழுவானது வண்டின் கூட்டில் புகுத்தப்பட்ட நாளிலிருந்து சதா வண்டையே நினைத்து நினைத்து இறுதியில் குளவியாய் மாறிவிடுகிறது. உடல் எடுத்தவன் மனத்தால் எதை எதைப் பற்றி - அன்பினாலோ, வெறுப்பினாலோ, அச்சத்தினாலோ - சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ, அத்தோற்றத்தையே அடைகிறான்.  இறைவனையே தியானிக்கும் பக்தன் அதேபோல ஜீவன் முக்தனாகிறான் எனப் புரிய வைத்த குளவி என் இருபத்திநான்காம் குரு.

ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோராவது ஸ்கந்தத்தில் ஏழு, எட்டு, ஒன்பதாவது அத்யாயமாக அமைந்திருக்கும் அவதூத கீதை, உத்தவ கீதையின் ஒரு அங்கமாகவும் கருதப்படுகிறது.  

குருமார்கள் இருபத்தி நான்மர் மட்டுமல்ல; நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவருமே நமக்கு ஒரு ஞானத்தை போதிக்கும் குருமார்கள் என்பதுதான் மைய போதனை. 

உதிர்ந்துகொண்டிருக்கும் இறுதி நொடி வரை நாம் கற்க இருக்கிறோம் என்றுணராது, கல்வியென்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் என்றும் நம்மை விட அடையாளத்திலும் தகுதியிலும் குறைந்தவர்களிடம் கற்க மறுக்கும் அகந்தையும் உள்ள நமக்காக உருவாக்கிக் கொடுத்த போதனைகள்தான் இவை.

மேற்கத்திய சிந்தனையும், அறிவின்பாற் பட்டு சிந்திக்கும் வழக்கமும் பல தருணங்களில் நம் நம்பிக்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் முரணாக இருந்திருக்கிறது.மேலை நாடுகளிலிருந்து பலதரப்பட்ட அறிஞர்கள் இங்கு வந்து நம் செல்வங்களையும் சிந்தனைகளின் ஆழத்தையும் பார்த்து வியந்து பாராட்டிக்கொண்டிருக்க நாம் நம் வேர்களை வெட்கமின்றி இழந்துகொண்டிருக்கிறோம்.

தத்தாத்ரேயர் குறித்து அறிய ஏராளமான புத்தகங்களும் தகவல்களும் இருக்கின்றன. அவற்றில் முத்தாய்ப்பாக பண்டிட் ராஜ்மணி டிகுநைத் (Pandit Rajmani Tigunait) எழுதியுள்ள ”The Himalayan Masters” புத்தகத்திலிருந்து இரு பத்திகள்:

[The ashram of Sage Dattatreya’s parents, known as Ansuya in Chitrakut, is still nestled in the beautiful Vindhya Range of the central Indian mountains. A steep mountain towers over the back of the ashram and the serene streams of the Mandakini River issue from a nearby cave. In the air is a pervasive sense of tranquility.

The fish leap from the water to take puffed rice from the hands of pilgrims. Monkeys come from the forest, greet visitors, and share their food like old friends. Your intellect may insist that they do it out of habit or to get food. But listen to nature and you will hear a silent voice: “Do not pollute the spirit cultivated by sages with your cold intellectualism.”]

மத்திய இந்திய மலைப்ரதேசங்களில் அழகான விந்திய மலைச்சாரலில் சித்ரகூடத்தில் தத்த முனியின் பெற்றோர்கள் தங்கியிருந்த ஆஸ்ரமம் அனுசுயா என்ற பெயரில் இன்னமும் இருக்கிறது.  அருகில் இருக்கும் குகையில் இருந்து பாயும் மந்தாகினி நதியின் அற்புதமான தீரத்தில் நெடிதுயர்ந்த மலைகளின் பின்னணியில் ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது. வீசும் காற்றில் தான் எத்தனை ஏகாந்தமான ஒரு அமைதி?

யாத்ரிகர்களின் கையிலுள்ள பொரியை உண்ண நீரிலிருந்து எம்பிக் குதிக்கின்றன மீன்கள். காடுகளிலிருந்து வெளியே வந்து வரவேற்று ஏதோ அவர்களின் நீண்ட நாள் நண்பர்கள் போல உணவைப் பகிர்ந்துகொள்கின்றன குரங்குகள். உங்களின் அறிவு அவை பழக்கத்தாலோ உணவுக்காகவோ இப்படி நடந்துகொள்கின்றன என உங்களை வற்புறுத்தலாம். ஆனால் ஏகாந்தமான அந்த இயற்கையின் நிசப்தமான குரலை உற்றுக்கேட்டீர்களானால்

“யுகாந்திரங்களாய் முனிஸ்ரேஷ்டர்கள் நிர்மாணித்திருக்கும் வாழ்க்கையின் மேன்மைமிக்க அடிநாதத்தை உறைந்துபோன உங்களின் புத்திசாலித்தனத்தால் மாசு படுத்திவிடாதீர்கள்”

எனும் அதன் கோரிக்கை உங்கள் காதுகளைத் தொடக்கூடும்.

8 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

கற்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் காணும் எதிலுமொரு ஆசான் நிச்சயம் இருக்கிறான், என்று ஓங்கியடித்துச் சொல்கிறது, இந்தப் பதிவு. நிறையவே விஷயங்கள் கிரகிக்க வைத்த இப்பதிவிட்டமைக்கு நன்றி சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

தன் வாயில் அபூர்வமான ஒரு இறைச்சித்துண்டைக் கவ்விச்சென்ற ஒரு குர்ரப் பறவையை எல்லாப் பறவைகளும் துரத்தித் துன்புறுத்தின. அந்தத் துண்டை வாயிலிருந்து விடுவித்தவுட்ன் அதன் துன்பம் நீங்கியது. அவசியமில்லாதவற்றைச் சுமக்காதிருப்பதை குர்ரப் பறவை கற்றுக் கொடுத்து என் பதினெட்டாவது குருவானது.


24 குருமார்களுமே அனைவருக்கும் தேவையானவர்கள்.

manichudar சொன்னது…

வாழ்க்கையின் மேன்மை மிக்க அடிநாதத்தை உறைந்து போன உங்களின் புத்திசாலித்தனத்தால் மாசு படுத்திவிடாதீர்கள்," அருமை வணக்கம்.

சிவகுமாரன் சொன்னது…

காண்பனஅனைத்திலும் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் இருக்கின்றன.
பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.

நிலாமகள் சொன்னது…

உதிர்ந்துகொண்டிருக்கும் இறுதி நொடி வரை நாம் கற்க இருக்கிறோம் என்றுணராது கல்வியென்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் என்றும் நம்மை விட அடையாளத்திலும் தகுதியிலும் குறைந்தவர்களிடம்
கற்க மறுக்கும் அகந்தையும் உள்ள நமக்காக உருவாக்கிக் கொடுத்த போதனைகள்தான் இவை. //

பாசமே துன்பத்திற்குக் காரணம் //

எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தைக் கடலிடம்//

பொருட்களைச் சேகரித்து வைத்தும் மரணத்துக்குப் பின் அவை ந்ம்முடன் வரப்போவதில்லை //

தூண்டில் புழுவைச் சுவைக்க ஆசை கொண்டு மாட்டிக்கொண்ட மீனே வாயைக் கட்டுப்படுத்தும் உபாயத்தைக் கற்றுக்கொடுத்தது//

அவசியமில்லாதவற்றைச் சுமக்காதிருப்பதை குர்ரப் பறவை கற்றுக் கொடுத்து //

புழுவாய் இருந்து வளர்ந்து முதிர்ந்தபின் தன்னை உணரும் கூட்டுப்புழுவே //

அன‌ந்த‌ கோடி ந‌ம‌ஸ்கார‌ங்க‌ள் ஜி!

'கீழ்த்த‌ர‌மான‌ இசை' ம‌ட்டும் ச‌ற்றே புரிய‌வில்லை.

சுந்தர்ஜி சொன்னது…

மன்னிக்கவும் நிலாமகள்.

வேறொரு இடுகைக்காகத் தயாரித்திருந்த சொற்கள் மானுடன் கலந்துவிட்டதால் இப்பிழை.திருத்திவிட்டேன்.

vasan சொன்னது…

க‌தை, க‌விதை, க‌ட்டுரை, பேச்சு, செய‌ல், ந‌டை ப‌ய‌ண‌ம், அர‌சிய‌ல், ச‌மூக‌ விழிப்புண‌ர்ச்சி, ஆராய்ச்சி, என, செய்கின்ற‌ யாவிலும் தன் முத்திரையைப் ப‌திக்கும் உங்க‌ளின் திற‌த்தால். எனக்கு, இருப‌த்தி நாலு குருக்க‌ளுட‌ன், ம‌ற்றுமொரு குரு, சுந்த‌ர்ஜி.

நிலாமகள் சொன்னது…

மானைப் பிடிப்பதற்கு முன்னால் அதைத் தூண்ட வலை விரிக்கும் வேடன் உருவாக்கும் இசைக்கு ஆபத்தையும் சூழ்நிலையையும் அறியாமல் கண்ணை மறைக்கும் ஆசையுடன் துள்ளிக்குதித்து வேடனிடம் சிக்கிக்கொண்டது மான். வரப்போவதை உணராது ஆபத்தில் சிக்கிய அப்பாவி மான் என் பதினைந்தாம் குரு//

ந‌ம்மை ம‌ய‌க்கும் ப‌ல‌வ‌ற்றுக்குப் பின்னும் ஏதேனும் 'பொறி' வைக்க‌ப்ப‌ட்டிருக்குமோ எனும் எச்ச‌ரிக்கையுண‌ர்வு முக்கிய‌ம். ச‌ரிதானே ஜி!சிவ‌குமார‌ன் சொல்வ‌து போல் ந‌ம் பாட‌திட்ட‌ம் ந‌ம்மைச் சுற்றிப் ப‌ர‌வியுள்ள‌து. ஆய்ந்த‌றிந்து தேர்வ‌து தான் ந‌ம் பொறுப்பு என்றாகிற‌து. பெரியோரின் உப‌தேச‌ங்க‌ள் எல்லாம் அத‌ற்கு வ‌ழிகாட்டியாகி விடுகிற‌து. ந‌ன்றி ஜி!தேடிக் க‌ண்ட‌டைந்த‌வ‌ற்றை எல்லோருக்குமான‌ ப‌கிர்த‌லுக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator