12.12.11

மூடப்பட்ட கதவுகள் குறித்த கவிதை


















1.

இனி நிரந்தரமாய்
யாராலும் திறக்கப்படாது
போய்விடக்கூடும்
என ஒருவேளை
இறுதியாய்ப்
பூட்டப்படும்போது
இந்தவீட்டின்
கதவு மட்டும்
அறிந்திருக்கக் கூடும்.

2.

ஒரு கதவை
மூடும்போது
இன்னொரு கதவு
திறக்கப்பட்டதை
அறிந்த இந்தக்கதவு
வேறொரு கதவின்
மூடலுக்காய்க்
காத்திருக்கிறது.

3.

எத்தனையோ முறை
யார் யாருக்கோ
திறக்கமறுத்த

யார் யாரோ
தட்டத் தயங்கிய
இதே கதவுதான்

உட்புறம் திறக்கவும்
வெளிப்புறம் தட்டவும்
அவசியமற்றுப் போய்

வெறும்
ஒரு பெயராய்
நிற்கிறது.

4.

இந்தக் கவிதையால்
ஒருவேளை கதவு
திறக்கப்படக்கூடுமானால்

காற்றில்
உறைந்துபோயிருக்கும்
இறுதிநாள் வார்த்தைகளை
வார்த்து ஒரு திறவுகோல்
தயாரித்துவிடலாம்

திறக்கப்படாத
கதவுகளுக்காய்.

5.

நிராகரிப்பின் கசப்பை
அறைந்து 
மூடப்படும் கதவுகள்
பருகுகின்றன எனில்

நிராதரவின் குருதி
வழிந்தபடியிருக்கிறது

திறக்கப்படாத கதவுகளின்
இடைவெளிகளில்.

6.

கதவு திறத்தல்
வரவேற்பின் முதல்படி
எனில்

கதவு துறத்தல்
ஞானத்தின் முதல்படி
என்க.

8 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

I was trying to interpolate the word" mind " or "heart " for the word " kathavu " and may be, I could fathom the heart of the author.I personally feel what the author wants to convey should be understood without ambiguities. May be there are readers who can feel this poem far better han me. my only worry is whether I had understood rightly what is articulated in this poem. Correct me if I am wrong Suntharji.

சிவகுமாரன் சொன்னது…

கவிதையைப் படித்ததும் , கமலேஷின் கதவாயுதம் நினைவுக்கு வந்ததது.

ரிஷபன் சொன்னது…

கதவுகள் குறியீடு. சொல்ல வந்ததை கவிதை சொல்லிப் போய் விட்டது. மூடப்பட்ட கதவுகளின் வெளிப்படாத முனகல்கள் இனி காற்றில் கலந்தேதான் இருக்கும்.

ஹ ர ணி சொன்னது…

எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம் சுந்தர்ஜி. மனக்கதவுதான். இல்லறம் ஒரு சாவி. ஞானம் பிறிதொரு திறவுகோல். அருமை.

ஹேமா சொன்னது…

மூடப்பட்ட கதவுகளில் தாங்கியிருக்கும் சாவிக்கு மட்டுமே தெரிந்த கதைகள் நிறைய !

RVS சொன்னது…

கடைசிக் கவிதை ஞானத்தின் நுழைவாயில் ஜி!

இரசிகை சொன்னது…

nallayirukku...
sundarji
:)

சக்தி சொன்னது…

கதவுகள் மூடியிருக்கும்போது இதயத்தைத் திறந்து வைத்தது இந்தக் கவிதை. மூடிய கதவுகள் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...