19.12.11

குரங்கிலிருந்து குரங்கிற்கு.


என் தாத்தா எனக்குச் சொன்ன இந்தக் கதையை தாத்தாவோடும் கதைகளோடும் வாழ்ந்தவர்கள் கேட்டிருக்கலாம். கேட்டிராதவர்களுக்காகத்  தொடர்கிறது கதை. முன்னாலேயே தெரியும் என்று சொல்பவர்களுக்கு இரண்டு சாய்ஸ். இப்படியே விலகிக் கொள்ளலாம். அல்லது ஒழுங்காய் என்னதான் சொல்லியிருக்கான் பாக்கலாமே என்று பொறுமையாய்ப் படிக்கலாம்.

கதைக்குப் போவோமா?

அது ஒரு வசந்த காலம். காட்டில் நதியோரத்தில் அமர்ந்து ஓடும் நீரில் கால்களை அளைந்தபடியே சிந்தித்துக்கொண்டிருந்தார் கடவுள்.

எல்லா உயிரினங்களுக்கும் ஆயுளை எத்தனை ஆண்டு காலம் வைப்பது என்ற சிந்தனையின் முடிவோடு எழுந்தார். எல்லா ஜீவராசிகளுக்கும் சரிசமமாக முப்பது ஆண்டுகள் வாழ்க்கை என்று முடிவோடு காட்டின் மையப் பகுதிக்கு எல்லா உயிரினங்களையும் வரவழைத்தார்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுட்காலம்.என் முடிவு சரியென நினைப்பவர்கள் இங்கிருந்து செல்லலாம். காலத்தை நீட்டவோ குறைக்கவோ நினைப்பவர்கள் இங்கேயே அமரலாம்.ஒவ்வொருவரையும் தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன்என்றார் கடவுள்.

கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வரைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் சலசலப்பின்றி அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றன.

கழுதையிடம் திரும்பினார். முதலாவதாக நின்றிருந்த அக்கழுதையை அழைத்தார் கடவுள். உன் மனவருத்தம் என்ன?சொல்.என்று கேட்டார்.

அதற்குக் கழுதை கருணையும் பெருந்தன்மையும் கொண்ட கடவுளே! என் நிலைமையைச் சொல்லித் தீராது. நாள்தோறும் நான் படும் வேதனையை நீங்கள் எப்படி அறிவீர்கள்? ஏராளமான சுமைகளைச் சுமந்து திரிகிறேன். நேரத்திற்கு ஓய்வோ தூக்கமோ உணவோ எனக்குக் கிடைப்பது இல்லை.  முதுகில் சுமையுடன் வரும் என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. நான் தெருவோரம் முளைத்திருக்கும் புற்களை மேயவும் வழியில்லை. தேங்கிக் கிடக்கும் நீரையும் பருக வழியில்லை. எனக்குக் கனவிலும் வருவது தூக்கமுடியாத சுமைகளின் காட்சியே. என் வாழ்க்கையே நரகம். இந்த நரகத்தையும் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்என்று புலம்பியது.

சரி! உன்னைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. உன் ஆயுட்காலத்தில் ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான். என்ன மகிழ்ச்சிதானே?” என்றார் கடவுள்.

இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் கனைத்தபடியும் ஆடியபடியும் அங்கிருந்து கிளம்பியது.

அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள். உன் குறை என்னப்பா?” என்று கேட்டார்.

கடவுளே! நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. ஆண்டுக்காண்டு பிறக்கும் குட்டிகளுக்கு முன்னால் என்னை யாரும் கண்டுகொள்வதில்லை. தெருவில் நடமாடினால் எல்லோரும் என்னைத் துரத்தியடிக்கிறார்கள். எனக்கு இருக்கும் பயத்தை குரைத்துக் குரைத்துத் தீர்த்துக்கொள்கிறேன் நான். தவிரவும் நான் முதுமையடைந்து தளர்ந்து போய்விட்டால் எல்லோருமே என்னை மிகக் கேவலமாக நடத்துகின்றனர். கடைசிக் காலங்களில் எனக்கு உணவும் கிடைப்பதில்லைஎன்று அழுதது நாய்.

சரி.சரி. அழாதே. உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று நினைப்பது புரிகிறது. குறைத்து விடுகிறேன். இனி உனக்கு வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான். போதுமா?” என்றார் கடவுள்.

அளவில்லாத மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டு சந்தோஷமாகக் குரைத்தபடியே புறப்பட்டது.

கழுதையும் நாயும் சந்தோஷமாகப் புறப்பட்டதை மரத்தில் தலைகீழாய்த் தொங்கியபடியே குரங்கு கவனித்துக் கொண்டிருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் கடவுளின் முன் தாவிக்குதித்து வணங்கியது. 

உனக்கு என்ன குறை? உன்னைப் பார்த்தால் சந்தோஷமாக இருப்பது போல இருக்கிறதே? என்று கேட்டார் கடவுள்.

தலையைச் சொறிந்தபடியும், பல்லைக் காட்டியபடியும் நின்ற குரங்கு, ” சரியாப் போச்சு! அடக் கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எத்தனை நீண்ட காலம் தெரியுமா? அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். 

இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்களும் வீணாய்ப்போன சோறும்தான். முதுமையடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறைத்து விடுங்கள்என்று வேண்டிக் கொண்டது.

சரி. நீயும் இத்தனை கஷ்டப் படுகிறாய். இனி உனக்கும் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள்என்றார் கடவுள்.

குரங்கும் குட்டிக்கரணம் அடித்தபடியே ஒவ்வொரு கிளையாகத் தாவித்தாவி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து மறைந்தது. 

கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.

உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்?” என்று கேட்டார்.

கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் . அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு தொழிலையோ கலையையோ வித்தையையோ முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் தங்குவதற்காகச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.

நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயனை அனுபவிக்கும் காலம் அது. அந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது எத்தனை கொடுமை? முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்குக் குறைந்தது நூறு ஆண்டுகளாவது வேண்டும்என்று வேண்டிக் கொண்டான் மனிதன்.

இங்கு வந்த நீ குறையுடன் செல்லக் கூடாது. அதற்காக நான் உனக்கு நூறு ஆண்டுகள் தரமுடியாது. உனக்கும் எனக்கும் பொதுவாக ஒரு ஆயுட்காலத்தை நிர்ணயிக்கிறேன். கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்கிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே?” என்று கேட்டார் கடவுள்.

ஹும். வேறென்ன சொல்லமுடியும்? அப்படியும் இப்படியும் பேசி இருபது ஆண்டுகளைக் குறைத்து எண்பதுடன் போகச் சொல்லுகிறீர்கள். பரவாயில்லை. மகிழ்ச்சிதான்என்று அரைகுறை மனதுடன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான் மனிதன். 

எதிர்காலத்தில் நடக்கப் போகிற வேடிக்கையை நினைத்துப் புன்னகைத்தாலும்  கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக கடவுள் வருத்தப்பட்டார்.

கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். 

முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பிறருக்குப் பயனுள்ளவனாக வாழ்ந்தான். கடவுள் அவனுக்கு முதன் முதலில் நிர்ணயித்த ஆயுட்காலம் அது. 

அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள் துவங்கியது. அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் அவமானங்களாலும் வாடினான். பொறுப்புக்களை இழுத்துப் போட்டுக்கொண்டு மிகுந்த சிரமப் பட்டான்.

நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் ஆரம்பமானது. இந்தக் கால கட்டத்தில் தான் சேர்த்த பொருட்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் வேறேதோ நோக்கத்துடன் வந்தாலும் அதைக் கைப்பற்ற வந்ததாய் எண்ணிக் குரைத்து ஒரு நாயின் வாழ்க்கையை நடத்தினான். 

அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கை போலானது. தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்டவும், கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்லவும் வேண்டியதாயிற்று. அவனுக்கென்று சுயமாய் எதுவுமற்று அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துக் கடைசியில் சுய பச்சாதாபத்துடன் இறந்தான்.

9 கருத்துகள்:

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நல்ல கதை. இந்தக் கதை சிரிப்பதற்காக அன்று சிந்திப்பதற்காகவும் இருக்கிறது.
இதுதான் மனிதனின் வாழ்க்கை என்கின்றபோது... என்ன செய்வது?
நல்ல சுவாரசிய நடை. வாழ்த்துகள்.

நிலாமகள் சொன்னது…

சுருக்க‌மாக‌ அறிந்த‌ க‌தைதான். உங்க‌ கைவ‌ண்ண‌ம் சேர்த்து தெளிவும் அழ‌கும்.

G.M Balasubramaniam சொன்னது…

குரங்கு வாழ்க்கையில் இருப்பவன் நான். இக்கதையை முன்பே கேட்டதில்லை. உங்கள் தாத்தா சொல்லி நீங்கள் சொன்ன இக்கதை என் வாரிசுகளுக்கும் சொல்லப்படும். நன்றி சுந்தர்ஜி.

கே. பி. ஜனா... சொன்னது…

உங்கள் கைவண்ணத்தில் கதை மிளிர்கிறது!

ரிஷபன் சொன்னது…

தெரிந்த கதையை தெரிந்த மனிதர் சொல்லும்போது கூடுதல் அழகு.

ஹேமா சொன்னது…

நான் இந்தக் கதையைக் கேட்டதில்லை சுந்தர்ஜி.கற்பனை என்றாலும் நிலமையை எவ்வளவு நன்றாகச் சிந்தித்திருக்கிறார்கள்.இன்றும் சிலர் 80 போதவில்லையே என்கிறார்களே !

சிவகுமாரன் சொன்னது…

கழுதையாய் இருக்கும் எனக்கு .. இந்தக் கதை .. ரொம்பப் பொருத்தமாய் தெரிகிறது.
ரெண்டு வரியில் கேட்ட கதை. அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.

ஹ ர ணி சொன்னது…

இந்தக் கதை படித்த கதை என்றாலும் நீங்கள் சொன்னதற்காக விலகிவிடமுடியுமா. சுந்தர்ஜியின் நடையில் படித்து இன்புறவேண்டாமா?

vasan சொன்னது…

நான் இர‌ண்டாவது பிரிவில் வ‌ந்தாலும், சுந்த‌ர்ஜி ஸ்டைலில் அதைப் ப‌டித்து ரஸிக்க‌ வேண்டும‌ல்ல‌வா! க‌தையாய் இருந்தாலும் அனுப‌வித்த‌ருளிய‌ வாழ்க்கையாய்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...