9.12.11

கோட்டையிலிருந்து..


1.
இந்தச் சுவர்களில்
காதைப் பதியுங்கள்.
உன்னிப்பாய்க்
கேளுங்கள்.
கேட்கிறதா
சிதைந்த 
கோட்டையின் 
சுவர்களில் 
நிறைவேறாத
கட்டளைகளின்
முனை மழுங்கிய 
சப்தம்?

2.
சுரங்கத்தில்
நுழைகையில்
மிதிக்காமல்
தாண்டி வாருங்கள்-
வரலாற்றின்
பாதங்களில்
ஒட்டிக்கொள்ளாது
தரையெங்கும்
சிந்திக்கிடக்கிறது
போரின் இறுதிநாளில்
தோற்றுச்
சிறைபிடிக்கப்பட்ட
வெதும்பலின் திவலைகள்.

3.
வாழலாம் அல்லது
வீழலாம்.
அல்லது
ஒளியலாம்.
நெருங்கும்
தீப்பந்தங்களில்
மினுமினுக்கும்
வாள் நுனிக்கு முன்
ஏதாவதொன்று
ஆனால்
எந்த ஒன்று?

4.
கைவிடப்பட்ட
காலற்ற
குதிரைகள்-
குழந்தைகள்-
முதியோர்-
கவரப்பட்டுக்
கைவிடப்பட்ட
பிணப்பெண்கள்.
செருகப்பட்டு
நிமிர்ந்து நிற்கும்
வாட்கள்.
இழந்த வாழ்வின்
சுமை தாளாது
குனிந்து நிற்கும்
கோரப் போர்ச்செடி.
குருதியில் புரளும்
உயிர்களின்
ஓலத்தால்
சரியக்கூடுமோ
ஒரு கோட்டை?

5.
அந்தப்புரத்தின்
நீரில்லாக் குளத்தில்
தாவிக் குதிக்கிறது
ஆயிரம் வருஷத்துப்
பழைய தவளை.
புராதனக் காற்றில்
மிதந்து வருகிறது
நிசப்தம் பூசிய
நிறைவடையாத பாடலின்
இறுதி வரி.

6.
கோட்டை முகப்பில்
கிழிக்கும்
நுழைவுச்சீட்டைச்
சுமப்பதும்
உள்ளே நுழைவதும்
போல் எளிதானதல்ல
கோட்டையிலிருந்து
வெளியேறிச்செல்வது.

7 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

அந்தப்புரத்தின்
நீரில்லாக் குளத்தில்
தாவிக் குதிக்கிறது
ஆயிரம் வருஷத்துப்
பழைய தவளை.
புராதனக் காற்றில்
மிதந்து வருகிறது
நிசப்தம் பூசிய
நிறைவடையாத பாடலின்
இறுதி வரி.

ஆஹா..

A.R.ராஜகோபாலன் சொன்னது…

””செருகப்பட்டு
நிமிர்ந்து நிற்கும்
வாட்கள்”””

வளைவு நெளிவான எழுத்துக்கள் கூட உங்களின் வார்த்தையின் வார்புகளினால் நிமிர்ந்து நிற்கிறது.

Rathnavel சொன்னது…

அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ராபர்ட் க்ளைவ் இங்கு வந்து காஃபி குடித்ததாய் ஒரு தகவல்......

நிலாமகள் சொன்னது…

நிறைவேறாத
கட்டளைகளின்
முனை மழுங்கிய
சப்தம்//
வெதும்பலின் திவலைகள்//
ஏதாவதொன்று
ஆனால்
எந்த ஒன்று?//
இழந்த வாழ்வின்
சுமை தாளாது
குனிந்து நிற்கும்
கோரப் போர்ச்செடி//
நிறைவடையாத பாடலின்
இறுதி வரி//
உள்ளே நுழைவதும்
போல் எளிதானதல்ல
கோட்டையிலிருந்து
வெளியேறிச்செல்வது.//

ஒரு பாழ‌டைந்த‌ கோட்டை கிள‌ர்த்தும் சிந்த‌னை வீச்சு அபார‌ம்! உங்க‌ள் பாட்டுக்கோட்டையிலிருந்தும் வெளிவ‌ருவ‌து சுல‌ப‌ம‌ல்ல‌ ஜி!

சிவகுமாரன் சொன்னது…

கோட்டையிலிருந்து நானும் இன்னும் வெளிவரவில்லை.
போருக்கு முந்தைய வீரமும் பிந்தைய ஈரமும் .... வலி நிறைந்த வார்த்தைகளில்.
பிணப்பெண்கள் - இந்த ஒரு வார்த்தையே பல கற்பனைகளை, பயங்கரங்களை சொல்லிச் செல்கிறது. இந்த இடத்தில் ஒரு கணம் அதிர்ந்து நின்று விட்டேன். பிணை தான் பிணம் ஆனதோ என்று கூட நினைத்தேன். இல்லை. பிணையாய்ஆனதும் அவர்கள் நடைப் பிணமாய் ஆகி விடுகிறார்கள் என்பதைச் சொல்லவே பிணப் பெண்கள்.

அப்பப்பா இன்னும் பல சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்கிறது கவிதை.
அபாரம்.

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

ஆஹா! இறுதி வரி அழகு அத்தனை அழகு.

எஸ் வி வி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...