வெளியே கூட்டிப் போக
ஒரு குரல்.
தனியே விட்டு
ஊர் போய்த்திரும்பினால்
தவிப்பாய்
வேறொரு குரல்.
பேப்பர் போட
வருபவருக்கு ஒருவிதம்.
கொய்யா மரத்தில்
அணிலும் காக்கையும்
விரட்டிப்பிடிக்கமுடியாக்
கோபத்தில் ஒருவிதம்.
மேயும் மாடுகளின்
நடமாட்டத்துக்கு
தொடர் குரைப்பு.
மாதமொருமுறை வரும்
சிலிண்டருக்கோ
பயத்தோடு ஓர் குரைப்பு.
ஓரெழுத்துக் கூடினாலும்
பால்காரருக்கும்
தபால்காரருக்கும்
வெவ்வேறுவிதம்.
பாம்புக்கு வன்குரல்.
சிறுநீர் கழிக்கவும்
இனம் பெருக்கவும்
வெவ்வேறு தொனிகளில்.
குட்டிகளுடன்
விளையாடுகையில்
செல்லமாய் ஒரு குரல்.
யாருமற்ற இரவுகளில்
தொலைதூரக்
குரைப்புக்கு
பதில்குரைப்பாய்
சிலநேரம்.
எதுவுமில்லா அலுப்பூட்டும்
பொழுதுகளில்
ஆயாசமாய் ஒரு குரல்.
திடுக்கிடும் கனவுகள்
கலைகையில்
குழப்பமாய் ஒரு குரல்.
எஜமானன்
இறந்துபோனால்
தேற்றமுடியாத
உயிரின் துயரம்
சொட்டும் குரலென
நாயின் குரல்
நாற்பது விதம்.
என் கவிதைக்குக்
கூட இல்லை
இத்தனை விதம்.
(நன்றி-சொல்வனம்-ஆனந்தவிகடன்-21.12.11)
(நன்றி-சொல்வனம்-ஆனந்தவிகடன்-21.12.11)
24 கருத்துகள்:
எத்தனை எத்தனை குரல்கள்.... அந்த குரல்கள் சொல்லும் மொழிகள்...
அதைச் சொல்லும் உங்கள் கவிதையின் குரலும் நன்று.....
//நாயின் குரல்
நாற்பது விதம்.
என் கவிதைக்குக்
கூட இல்லை
இத்தனை விதம்.//
ஆஹா, ஏன் இல்லை.
அந்த நன்றியுள்ள ஜீவனைப்பற்றி ஜீவனுள்ள கவிதையைக் கொடுத்து அசத்தி விட்டீர்களே!
சுந்தர்ஜி ன்னா சுந்தர்ஜி தான்
(என் அடுத்த 101 வது படைப்பு இதே போல வரும் “பஜ்ஜின்னா பஜ்ஜீ தான்”)
குறளை விட
அதிக வகைகளில்
குரல்கள்
ஆச்சரியமாயிருக்கிறது.
இப்படி ஒரு கவிதை நேற்று எழுத ஆரம்பித்தேன்.
"வாலாட்டிக் காட்டி வரவேற்கும் சிலநேரம்
வருவோரை மிரட்ட "வள்"ளென்னும் சிலநேரம்
தாலாட்டுக் கேட்பதுபோல் தலைசாய்க்கும் சிலநேரம்
தலைநிமிர்த்தி முகம் பார்த்து விழிமூடும் சிலநேரம்
பால்காரன் நாடியை பதம் பார்க்கும் சிலநேரம்
பழகாத உ றவினரை பயம் காட்டும் சிலநேரம்
கால்தூக்கி கம்பத்தில் கழித்துவிடும் சிலநேரம்
கம்பெடுத்தால் காணாது பறந்துவிடும் வெகுதூரம்."
இப்படி எழுத ஆரம்பித்தேன் .. என் சிறு வயது தோழனாய் இருந்த எங்கள் வீட்டு ராமு பற்றி. இங்கு வந்தால், நீங்கள் அதையே இன்னும் சுவையாய் எழுதியிருக்கிறீர்கள்.
நான் நிறுத்திக் கொள்கிறேன் சுந்தர்ஜி.... குரைப்பதை.
அசத்தல் சிந்தனை..
எல்லாற்றிலும் வகைகள் இருக்கிறது...
உங்கள் கவிதையின் குரலும் வித்தியாசப்பட வாழ்த்துக்கள்..
நாயின் குரைப்பில் உணர்வுக்கு ஒரு ஒலியென
அத்தனை வித்தியாசங்கள் உள்ளன
நமது அவசர கதியில் அதையெல்லாம்
கவனிக்க எங்கே நேரமிருக்கிறது
100வது பதிவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
இது புதுசு!!!
நாய்களிடத்தில் இத்தனை
உணர்ச்சிக் குரல் ஓசைகளா!....
மனிதர்கள் நாம் எதைத்தான்
சரியாகப் புரிந்துகொண்டோம்.
அருமையான பகிர்வு மிக்க நன்றி
பாராட்டுக்கள்........
ஜி! உங்களது கவிதைக்கு நாலாயிரம் குரல்! ;-)))
சிவா உங்களுதும் அற்புதம். "வள்.. வள்".. உங்கள் கவிதை பிஸ்கட்டுக்காக...
நாயின் குரலே நாற்பது விதம்-என
நவின்ற கவிதை நற்சுவை பதம்
ஆயின மனப்பசி அடங்க இதம்-நான்
அருந்த வருவேன் தருவீர் நிதம்
புலவர் சா இராமாநுசம்
வாருங்களேன் என்
வலைப்பக்கம்
நன்றி RVS ( சுந்தர் ஜி புண்ணியத்தில் )
எங்க வீட்டு "பல குரல் மன்னன்"- துப்பாண்டி-க்கு apply பண்ணிக்கறேன், இந்த கவிதைய!! :) ஆஹா! :)
1980 களில் தொடராக பூக்களின் மொழி குறித்தும் பறவைகளின் மொழிகுறித்தும் எழுதிய கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. அருமை சுந்தர்ஜி. வளர்ப்பு நாய்களிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளமாக உள்ளன. குரைப்பின்மொழி கௌரவமான கவிதை விலங்குகள் குறித்த மானுடச் சிந்தனை. அருமை.
நுண்ணிய உங்களின் அவதானிப்பு
விதவிதமான அதனின் பல குரல் குரைப்பை விட நிச்சயம் குறைந்ததல்ல என்கிறது கவிதை.
//நுண்ணிய உங்களின் அவதானிப்பு
விதவிதமான அதனின் பல குரல் குரைப்பை விட நிச்சயம் குறைந்ததல்ல என்கிறது கவிதை//
வழி மொழிகிறேன்
வீட்டில் நாய் வளர்த்ததால்
இத்தனை இசையையும் ரசித்திருக்கிறேன்
அதனால் தங்கள் படைப்பை மிக நன்றாக
ரசித்து மகிழ முடிந்தது
மனம் கவர்ந்த பதிவு
விகடன் ”சொல்வனம்” உங்க கவிதை அருமை பாஸ். இப்பத்தான் படித்தேன். எவ்வளவு நுட்பமாய் கவனித்து இருக்கிறீர்கள்! பாராட்டுக்கள். முன்பு கல்கியில் வந்த ”யானை” கவிதை போல இதுவும் தனிச் சுவை.
சொல்வனத்தில் ஒலித்த குரைப்பின் மொழியை உரைப்பது கடினம்.உணர்வது சுகம்.பின்னிரவு என்ற ப்ரக்ஞையற்று கவிதை படித்த தாக்கத்தில் பாராட்டுத் தெரிவித்தபோது “நன்றி” என்ற உங்கள் பதில் கூட அதன் வா(ல்)ய் மொழியை நினைவூட்டியது.
ஓரெழுத்து வித்யாசம்தான் பால்/தபால்காரரிடம் குரைக்கும் மொழி.என்னைப் பொறுத்தவரை ஒரே எழுத்துத்தான். "GOD"க்கும் "DOG"க்கும்.செல்லப்பிராணியை ஸ்நேகிக்கும் உள்ளங்கள் மட்டுமே உணரமுடியும் குரைப்பின் மொழியை 100%.
ஒவ்வொரு குரல்மொழியிலும் அதன் “உடல்மொழி” எப்படி இருந்திருக்கும் என குறும்படம் போல் யூகிக்க முடியும்.எனக்கு மட்டுமல்ல.செல்லப்பிராணி வளர்க்கும் அத்தனை பேருக்கும்.
Nalla kavidhai
காதைக் குத்தாத ஓசை.அது விலங்கின் ஓசையாக இருந்தாலும் உணர்த்தும் உண்மைகள் ஏராளம்.
அருமை சுந்தர்ஜி.
வளர்ப்பு பிராணிகள் ஓர் அழகான அவஸ்தையும் கூட சுந்தர்ஜி.
சூப்பர் சுந்தர்ஜி! பிடித்தமான கவிதை.பிடித்தமான ஃபோட்டோ.
Superb Sundarji. I do a dog lover.
கருத்துரையிடுக