5.12.11

அனுமதி இலவசம்



1.
எல்லாப் பூங்காக்களிலும்
விரைத்த சுளித்த 
முகத்தைச் சுமந்தபடி 
வீசி நடக்கும்
கனவான் சீமாட்டிகளுக்கு
அண்மைப் புல்வெளிகளில்
பாரம் சுமந்து உறங்குகிறார்கள்
துரத்தப்பட்டவர்கள்.

2.
பெருத்த அமைதி
மலைப்பாம்பாய்ப் புரளும்
நூலகங்களின்
படித்த வரிகளில்
உறங்கியபடி இருக்கிறார்கள்
வேறெங்கும் போவதற்கு
வழியில்லாதவர்கள்.

3.
கோயில்களில் திறக்கப்படும்
அன்னதானக் கதவுகளை
நோக்கிப் பாயும்
யாசகர்களின் பசி குறித்துப்
புள்ளிவிவரங்களுடன்
அரசு விழாக்களில்
வெட்கங்கெட்ட
கவிதைகள் எழுதப்படுகின்றன.

4.
கருங்கடலின் முன்
செல்லுமிடம் தெரியாது
நிற்கும்
இன்னும் ஆயிரம்பேருக்குள்
வந்து மோதுகின்றன
கடலின் பேரலைகள்.

5.
நிராதரவின் கரங்களில்
ஊசலாடுகின்றன
இரவுகளில்
மூடப்பட இருக்கிற
ரயில் நிலையங்கள்-
கோயில்கள்-நூலகங்கள்-
பூங்காக்கள்-
பொதுக்கழிப்பறைகள்.

அதனினும்
பெருந் திகிலூட்டுபவை
மூடப்படாத இரவுகள்
மூடப்படாத சாலைகள்
மற்றும் ஒருபோதும்
உபயோகிக்கப்படாத
ஆட்சியாளர்களின்
துருப்பிடித்த மூளைகள்.

11 கருத்துகள்:

இரசிகை சொன்னது…

3.கோயில்களில்திறக்கப்படும்
அன்னதானக் கதவுகளைநோக்கிப் பாயும்யாசகர்களின்
பசி குறித்து
அரசு விழாக்களில்கவிதைகள் எழுதப்படுகின்றன.

:(

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

அழகு.அதிர்ச்சி கொடுக்கும் அழகு.சிந்தனையைச் சீண்டும் அழகு.
சூடாக வந்து தாக்கிய அழகு.

எஸ் வி வி

G.M Balasubramaniam சொன்னது…

மூடினால் திகிலூட்டும் ,மூடாமலேயே திகிலூட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. உபயோகிக்காமல் துருப்பிடித்த மூளை.நல்ல கற்பனை. அழகு.

ஹேமா சொன்னது…

ஆட்சியாளரின் துருப்பிடித்த மூளைகள்.சுந்தர்ஜி உங்களால் மட்டுமே இப்படிச் சிந்திக்க முடிகிறது !

RVS சொன்னது…

அபாரம் ஜி! அர்த்தம் பொதிந்த கவிதைகள். :-)

ஹ ர ணி சொன்னது…

சுந்தர சுகத்தின் பெயர் கொண்டு
சுகந்து நிற்பவனே...
எந்திரகதியில் இயங்கும் உலகிடை
என்ன மாயம் கற்றாய்?
எழிலுறு தமிழில் ஏற்றமாய்
எந்த மனமும் சிக்கும் மீனாய்
மந்திர வலைவிரித்தாய் மாயச்
செர்ற்களில்லை உன்னிடத்தில்
மயங்கும் வார்த்தைகளில்லை
உன்னிடத்தில் ஆனாலும்
உலகின் உயர்ந்த மானுடத்தின்
உன்னதம் போற்றும் கவிப்
பூக்களைத் தொடுத்துநின்றாய்..
தோழனே..நம்மையன்றி
யாரினி இவ்வுலகின் வறுமை
பாடுவார் அவர்துயர் பேசுவார்
எள்ளலும் வாழ்வின் அவலமும்
இசைந்திசைக்க எத்தனை
எளிமையாய் இந்தப் பதிவில்
ஏராளமாய் எண்ணிப் பேசவும்
எழுதவும் இடம்தந்து
கவி தந்திருக்கிறாய்..நாடாளும்
மன்னனில்லை நான் உனக்குப்
பொன்னாடை போர்த்தி பரிசு
அளிக்க.. மனசிருக்கிறது..
அதில் மாறாத அன்பிருக்கிறது
ஏற்றுக்கொள் என்னிதயச்
சொற்களில் கோர்த்த இந்தப்
பாமாலையை...

வாழ்க வளத்துடன்...

Rathnavel சொன்னது…

வேதனையான வாழ்க்கை.

ரிஷபன் சொன்னது…

கொஞ்சம் கொஞ்சமாய் அலை திரண்டு வந்து கடைசியில் சீறிப் பாய்ந்த அழகு..

சக்தி சொன்னது…

vanthu mothum alaigal oruvelai nam kavithaikalaaga....

manichudar சொன்னது…

துரத்தப்பட்டவர்கள், வழியில்லாதவர்கள், யாசகர்கள், திக்கற்றவர்கள் ஆட்சியாளர்களின் துருப் பிடித்த மூளைகளினால் உணரப்படாத துரதிஷ்டசாலிகள்.

சிவகுமாரன் சொன்னது…

துருப்பிடித்த மூளையா ?
ஊழல் செய்வதற்கும், மாட்டாமல் தப்பிப்பதற்கும், மாட்டினால் சமாளிப்பதற்கும் ...
நிறையவே பயன்படுத்துகிறார்கள் மூளையை.
ஓட்டுப் போட்டவர்களின் மூளை தான் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...