4.11.11

யாத்ரா-IV


நேற்றிரவு திருச்சானூரில் என் இரு நண்பர்களில் ஒருவரைக் கண்டுகொண்டேன்.அவரோடு இப்போது திருப்பதி மலையானைத் தரிசிக்கும் இறுதிக் கட்ட மலையேற்றம். சுமார் 10 கி.மீ. தொலைவில் ஆண்டவனைக் கண்டுவிடலாம் எனும் ஆனந்தநிலை.

கடைவீதிகளில் ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்தபடியே வந்தேன். ஒரு கடையில் உலர் திராட்சை வாங்கிக்கொண்டேன். அப்படியே அரிசி-மிளகாய்வற்றல்-புளி-பருப்பு வகைகளின் விலையையும் விசாரித்தேன்.பாண்டிச்சேரிக்குச் சமமாக இருந்தது.சென்னையில் விலை அதிகம். அடுத்து ஒரு வீதியில் வெற்றிலை என்னை எடுத்துக்கொள்ளேன் என்றது. அதன் சொல்படி களிப் பாக்கும்,சுண்ணாம்பும் சேர்ந்து அரைக்க வெற்றிலை வாயெல்லாம் மணத்தது.வெற்றிலை போட்டபின் மலையேற்றத்தைத் தொடங்கினோம்.

படி ஏறுவதற்கு முன்னாலேயே 3590 படிகள் என்ற தகவலையும் போகும் வழியில் உள்ள சன்னதிகளையும் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அதுதவிர  வழிபாட்டுத்தலங்களில் அணிய வேண்டிய ஆடைகளின் கண்ணியம் பற்றியும் துப்புவது புகைப்பது மது அருந்துவது இவற்றைத் தவிர்க்கவும் ப்ளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்ப்பது குறித்தும் நிறைய அறிவிப்புகள்.

படிகளின் நெடுகிலும் குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தும் படிகளிலும் மலைப்பாதைகளிலும் குப்பைகளை வீசியபடியும் துப்பியபடியும் வெங்கட்ராமா கோவிந்தா என்று கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் மலையேறிக்கொண்டிருந்தார்கள். மற்றொரு புறம் அவற்றைச் சுத்தப்படுத்த ஏராளமான பணியாளர்கள். வழிநெடுகிலும் குடிநீர் மற்றும் இலவசக் கழிப்பிடங்களையும் அமைத்த தேவஸ்தானத்திற்குப் பாராட்டுக்கள்.

வழியில் லக்ஷ்மிநரசிம்மரின் சந்நிதானத்தில் வழிபட்டுத்திரும்பும் போது என் நண்பரை மறுபடியும் தொலைத்தேன். சரி. எப்படியும் வழியில் அகப்படுவார் என்ற நம்பிக்கையில் மேலே நடந்து போகத் தொடங்கினேன். பலரும் ஒவ்வொரு படியாக சந்தனம் குங்குமம் இட்டு ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றித் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். மலை ஏறியவர்களில் முதியவர்கள்-உடல் பருமன் கொண்டவர்கள்-குழந்தைகள் என்று ஆச்சர்யமூட்டும் குறிப்பிட்ட இந்த வகையினருடன் சேர்த்து எல்லாருமாய் ஏறிக்கொண்டிருந்தார்கள்.


கடந்து வந்த நகரத்தின் அழகைத் திரும்பிப் பார்க்கையில் அற்புதமாக இருந்தது. வழியில் கூட்டமாக எல்லோரும் நிற்க என்ன என்று நானும் பார்த்தேன். ஒரு பாறையில்ஆறடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று சட்டையை உரித்துக் கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்கும் குணம் நமக்கு மட்டுமே உரியதெனத் தோன்றியது. மிருகக் காட்சி சாலை-காடுகள்-உயிரியல் பூங்கா-அருங்காட்சியகம்-என்று எங்கு போனாலும் நாம்தான் விழுந்து விழுந்து வேடிக்கை பார்க்கிறோமே தவிர ஒரு குரங்கு கூட நம்மைப் பார்க்க சிறிதும் ஆசைகொள்வதில்லை.

குளிர்பானங்கள்-பழங்கள்-ஐஸ்க்ரீம்கள்-நொறுக்குத் தீனிகள்-என்று வயிற்றுக்கு ஈய வழி நெடுகிலும் கடைகள். மலையில் நடந்து செல்லும் பாதையை ஒட்டியே பேருந்துகள் செல்லும் பாதையும் அமைந்திருப்பதால் வியாபாரிகள் இவ்விரண்டு பாதைகளுக்கும் இடையே புதிதாக ஒரு பாதையமைத்துப் பொருட்களைக் கடைகளுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள்.எல்லாக்கடைகளிலும் நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந்தாலும் நான்கு நாட்களாகக் கூட்டமில்லை என்றார்கள் வியாபாரிகள். ஒலிபெருக்கியில் தொலைந்து போன குழந்தைகளின் அறிவிப்புக்களுக்குப் பின்னே பக்தி சங்கீதம் மலையெங்கும் ஒலித்தபடி இருந்த அந்தச் சூழல் ரம்யமாக இருந்தது.

நான் ஆரம்பம் முதலே ஒரு நடைப்போட்டிக்குச் சமமாய் இந்த யாத்திரையை எடுத்துக்கொள்ளாததால் எல்லாக் கட்டங்களிலும் கடைசியாய்ப் போய்ச்சேர்ந்துகொண்டிருந்தேன். தவிர சுற்றிலும் நடப்பதை கவனிக்காமல் அதெப்படி விடுவிடுவென்று கடந்து செல்ல முடியும்? வலது பக்கம் பார்த்தேன். நன்கு கனிந்த பப்பாளிகளை வெட்டிக்கொண்டிருந்தார் ஒரு தோழர். நானும் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பப்பாளிகளை உள்ளே தள்ளிவிட்டு மறுபடியும் தொடர்ந்தேன்.

ஆஹா! எத்தனை மான்கள் இடப்புறத்தின் புல்வெளிகள் முழுவதும். வழிப்போககர்கள் அவற்றிற்குத் தீனி கொடுத்து மகிழ்ந்தர்ர்கள். மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்தபடியும் ஓடிவிளையாடியபடியும் திரிந்தன. இந்த மான்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் ஒரு புலியை விடவும் வேகமாக ஓடவேண்டியதில்லை என நினைத்துக்கொண்டேன்.


அப்போது நேபாளிகளை நினைவுறுத்தும் முகச்சாயலுடன் ஒரு துறவி மான்களுக்குத் தீனியளித்துக் கொண்டிருந்தார். அவருடன் உரையாடவேண்டும் என்ற ஆவலில் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.கழுத்தில் மூன்று நான்கு ருத்ராக்ஷ மாலைகள். முதுகுவரை புரளும் ஜடாமுடி. எந்த அடையாளத்தையும் பறைசாற்றாத முன் நெற்றி.

இருகைகளையும் கூப்பி வணக்கம் சொன்னேன். அவர் திரும்பிப் பார்த்தார். கூடையில் வைத்திருந்த மிச்சத் தீனியையும் மான்களுக்கு அளித்துவிட்டு என்னருகில் வந்தார்.

உரையாடியபோது அவர் இமாசலப் ப்ரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆச்சர்யமான தமிழில் பாடுவது போல இழுத்து இழுத்துப் பேசினார். பெயரைப் பற்றிக் கேட்டபோது பிடிகொடுக்காமல் நழுவினார். லீ என்று கூப்பிடு. அல்லது சீனிவாசன் என்று கூப்பிடு.ஏதோ ஒரு பெயர் என்றார். அந்த பிடிகொடுக்காத ஆரம்பம் எனக்கு ஒவ்வாததாக இருந்தது.


உங்களின் தேடலுக்கு விடை கிடைத்ததா? என்ற என் கேள்வி அவரைச் சிறிது சீண்டியது போலத் தெரிந்தது. மிகத் தீவிரமான சிவனடியார் என்பது அவரின் வேகமான பேச்சில் தெரிந்தது. எங்கு தொடங்கினாலும் அது சிவன் புகழ் பாடுவதிலேயே முடிந்தது. விஷ்ணுவை விட சிவன் உயர்ந்த கடவுள் என்று தொடங்கி ஒவ்வொரு அவதாரத்தையும் ஒப்பிட்டு சிவனின் புகழில் முடித்தார்.வேமண்ணாவையும் அகத்தியரையும் தெரிந்துவைத்திருந்தார்.

”நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” சிவவாக்கியரையும் “ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி” அழுகுணிச் சித்தரையும் அபாரமான தடங்களில் சென்ற திருமூலரின் பாடல்களைப் பற்றியும் சித்தர்களின் ஞானத்தேடல் பற்றியும் சொன்னபோது கவனித்தபடி இருந்தார். எதைத் தேடி நான் இந்தத் திருப்பதி மலைக்கு வந்தேன்? என்று கேட்டார். ”யாத்திரை என்பது இந்தியர்களின் பாரம்பர்யத்தில் வந்த அற்புதமான ஒரு விஷயம். உடலின் உட்புறத்தை உபவாசம் தூய்மையாக்குகிறது என்றால் யாத்திரை மனதுக்கு” என்றேன்.

”பெருமாளோ சிவனோ வேறாருமோ எனக்குள்ளே அவர்களைக் கண்டுணர்ந்தபின் தேடியலைவதற்கு என்ன அவசியமிருக்கப் போகிறது? வேங்கடவனின் தரிசனம் என்பது எனக்கு நானே வைத்துக்கொள்ளும் ஒரு பரிசோதனை என்று வைத்துக்கொள்ளலாம் . ரிஷிகேஷ் ஹரித்வார் ஆகட்டும் அல்லது சபரிமலையாகட்டும் காசி ராமேஸ்வரம் ஆகட்டும் எல்லாம் ஒன்றுதான்” என்றேன்.

அவரின் படபடப்பும் எதையும் நிறுவும் பிடிவாதமும் அவர் அணிந்திருந்த காவியுடைக்கும் ருத்ராக்ஷத்திற்கும் பொருத்தமில்லாதது போலுணர்ந்தேன். முனிவரின் கோபம் சாபம் என்கிற சொற்றொடர்களே எனக்கு முரணாய்த் தோன்றும். அந்த லீயும் எனக்கு முரணாகவே தோற்றமளித்தார். அவரிடம் மறுபடியும் வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் என்று வணங்கி விடைபெற்றேன்.

எங்களுக்குச் சற்றுத் தொலைவில் மற்றொரு துறவி நீண்ட தாடியும் ஜடாமுடியும் காவியும் ருத்ராக்ஷமும் தரித்துப் படுத்திருந்தவர் அப்போதுதான் எழுந்தார். அவருக்கருகில் சென்ற போது என்னைப் பார்த்துச் சிரித்தார். நானும் சிரித்தபடி அவரை வணங்கியபடியே அவர் அருகில் அமர்ந்தேன்.


அவர் பெயர் சுரேந்தர் என்று சொன்னவுடன் நீங்கள் மலையாளிதானே என்றேன். ஆமாம் என்று சிரித்தார். உங்கள் தோற்றம்-பெயர்-மொழியின் உச்சரிப்புக் காட்டிக்கொடுத்தது என்றேன். சிரிக்கும் ஆழமான அமைதியான கண்கள். அவரின் கடந்த காலத்தைப் பற்றிக் கேட்டதற்குத் தன் தாடியைக் கோதியபடி “நான் ISRO வில் ஒரு விஞ்ஞானியாக திருவனந்தபுரத்தில் பணியாற்றிவன். ஆனாலும் அதில் கிடைக்காதது இத்துறவு வாழ்க்கையில் கிடைத்தது. விளவங்கோட்டுக்குப் பக்கத்தில் பூத்துறையில் அவதூதர்கள் சிலர் எங்கள் குடும்பத்துக்கு வழிகாட்டிகளாய் இருந்தார்கள். அவர்களில் 13வது அவதூதராய் வந்தவர் நான் என் 43வது வயதில் இறந்துவிடுவேன் என்று சொன்னார்” என்று நிறுத்தினார்.

”என் 43 வயதைக் கடந்தவுடன் அவரை ஒரு முறை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரைப் பார்த்துச் சிரித்தேன். அதைப் புரிந்துகொண்ட அவர் உன் 43ஆவது வயதில் உனக்குள் நான் புகுந்துகொண்டேன்.இனி உனக்கு மரணமில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்” என்று முடித்தார்.

மேலும் பேசியதில் அவரின் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் இப்படி யாராவது துறவியாகிவிடுகிறார்கள் என்றும் அவர் மனைவி இறந்துவிட்டார் என்றும் அவருக்குக் குழந்தைகள் இல்லை என்றும் சொன்னார். ”நட்ட கல்லும் பேசுமோ ஞானத்தின் உயர்நிலை” என்றார்.

லீயைப் பற்றிக் கேட்டபோது ”நீங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்ததை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். லீ இன்னும் முதிர்வடையவில்லை. அவனோடு தொடர்பு ஏற்பட்டு ஓராண்டுகள் ஆகின்றன. வாதங்களில் இன்னும் அவனுக்கு ஆர்வமிருக்கிறது. அகந்தையும் கற்றலின் செருக்கும் இருக்கிறது. நாளானால் சரியாகிவிடும்” என்றார். அவரிடம் ஆசிகள் பெற்று வாய்ப்பிருந்தால் மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றேன்.


மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. கோவிந்தா கோவிந்தா எனும் கோஷம் இப்போது உரக்கவே கேட்டபடியிருந்தது. அந்த இரு துறவிகளையும் சந்தித்ததில் என் மனம் நிறைந்திருந்தது. மீதமிருந்த படிகளைக் கடக்கத் துவங்கினேன்.

16 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

அனுபவங்களை புரிந்து கொள்ள முடிந்தது.,


வாழ்த்துகள்

G.M Balasubramaniam சொன்னது…

இப்படி தனியாகச் செல்ல வேண்டும். அப்போதுதான் நம் மனம் ரசிப்பதைச் செய்ய முடியும். திருவண்ணாமலையில் ஒரு சமயம் போய்க்கொண்டிருந்தபோது,பல துறவிகளை பார்த்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலோர் போதையில-இருப்பதுபோலவே எனக்குப் பட்டது. ஒரு வேளை ஆண்டவனின் அருகாமைபோதையேற்றுகிறதோ என்னவோ.1970-ல் ஒருமுறைநடந்து
திருமலைக்குச் சென்றிருக்கிறேன்
பின்னர் சென்றதெல்லாம் காரிலோ பஸ்ஸிலோதான்.எனக்கு உங்கள்மேல் பொறாமை ஏற்படுகிறது.எனக்கு நடந்து மலையேற விருப்பமிருந்தாலும் அனுமதி இல்லை.

RVS சொன்னது…

அபாரமான பயணக் கட்டுரை!!

வெற்றிலை உங்களை கூப்பிட்டதை ரசித்தேன்.

பல தடவை கோவிந்தனைப் பார்க்க குடுப்பத்தோடு ஏறியிருக்கிறேன் ஜி! இம்முறை உங்களோடு ஏறுகிறேன்.

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது நியதி! உங்களுக்கு? :-))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//வேடிக்கை பார்க்கும் குணம் நமக்கு மட்டுமே உரியதெனத் தோன்றியது. மிருகக் காட்சி சாலை-காடுகள்-உயிரியல் பூங்கா-அருங்காட்சியகம்-என்று எங்கு போனாலும் நாம்தான் விழுந்து விழுந்து வேடிக்கை பார்க்கிறோமே தவிர ஒரு குரங்கு கூட நம்மைப் பார்க்க சிறிதும் ஆசைகொள்வதில்லை.//

ஆஹா! அருமை. vgk

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

படங்கள் யாவும் அருமை. படிகளில் சூடமேற்றும் படம் பளிச்சென்று உள்ளது.
புலிகளுக்காக பயந்த தப்பிக்க வேண்டிய அவசியமில்லாத மான்கள்.

//அடுத்து ஒரு வீதியில் வெற்றிலை என்னை எடுத்துக்கொள்ளேன் என்றது. அதன் சொல்படி.களிப் பாக்கும்,சுண்ணாம்பும் சேர்ந்து வெற்றிலை வாயெல்லாம் மணத்தது.//

தங்களுடன் பேசிய வெற்றிலையும், சுண்ணாம்பும், களிப்பாக்கும், படிக்கும் என்னைக் களிப்பாக்கியது. vgk

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அற்புதம்.... வேறொன்றும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை....

ரிஷபன் சொன்னது…

துறவிகளோடான சம்பாஷணை எனக்கும் உகப்பே. எனது முந்தைய அனுபவங்கள் இப்போது நினைவில். மலையேறிப் போனபோது மான்களைப் பார்த்தேன் லீயைப் பார்க்கவில்லை. இப்போது சுவாரசியம் கூடியிருக்கிறது பயணத்தில்

ஷைலஜா சொன்னது…

அருமையான பயணக்கட்டுரை. ஆமாம் இசைக்கவியும் எனது நண்பருமான திரு ரமணனுடன் நிகழ்ச்சில கலந்துகொண்டவர் தாங்கள் தானா?

bandhu சொன்னது…

மேலும் மேலும் திருமலைக்கு நடந்து செல்லும் ஆவலை தூண்டுகிறீர்கள்.. மிக்க நன்றி..

Matangi Mawley சொன்னது…

நிகழ்வுகளை மட்டுமின்றி, அன்நிகழ்வுகளோடு உருவுகொண்ட உணர்வுகளையும் வெகு பொருத்தமாக பதிவு செய்துவிட்டீர்கள்! காலம், நேரம், இடம் போன்றவற்றைக் கடந்து ஏதோ ஒரு உலகத்திற்கு விரைந்து செல்லும் தங்களது மனஸ், படிக்கும் எங்களது மனதையும் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்கிறது... அதில் நாங்கள் நேரே காணாத மனிதர்களையும், கேட்காத குரல்களையும், வாதங்களையும்- பார்க்கிறோம், கேட்கிறோம்... பிறகு, திடீரென்று, நீங்கள் உங்கள் நண்பர்களை அவ்வபோது தொலைப்பது போன்று- எங்கள் மனமும் அதன் சாரதியை இழந்து- வேறேதோ உலகத்திற்கு தாவுகிறது... மற்றும் பல வாதங்களைத் தேடுகிறது!

ஆத்ம சுத்திக்கு மேற்கொள்ளும் யாத்ரைகள்- இது போல தான் அமைந்திருக்க வேண்டும் போலும்!... எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.. எல்லோரிடமும் பேசவேண்டும்... !

பதிவைப் படித்த எங்களுக்கே, படித்த விஷயங்களின் தாக்கத்திலிருந்து மீளமுடியவில்லையே... நேரே அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் இந்த அனுபவம் என்று நினைக்கும்போது ப்ரமிப்பாக இருக்கிறது!

Matangi Mawley சொன்னது…

PS: நிமிர்ந்து அமர்ந்திருக்கும் சாதுவை , ஆச்சர்யமாக பார்க்கும் சிறுவர்கள்- நிழற்படம் அருமை!

Ramani சொன்னது…

இரு நிலைகளில் இருந்த பெரியவர்களை
சொல்லிப்போனவிதம் மனம் கவர்ந்தது
தொடர்ந்து வருகிறோம்
அருமையான பதிவினை பகிர்ந்தமைக்கு நன்றி

சுந்தர்ஜி சொன்னது…

ஆம் ஷைலஜா.

Harani சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி...

இப்போதுதான் யாத்திரை பதிவின் நான்கையும் வாசித்து முடித்தேன். அதிர்வு குறைந்த நீரில் மிதந்துபோகும் ஒரு பூவைப்போல அழகான எளிய நடை. சுவையான நடை. கூடவே உங்களுடன் வந்ததைப்போல உணர்வு.எல்லோரும் இரவில் தாங்கள் விழித்திருந்த தருணங்கள் நான் உங்கள் கூடவே இருப்பதுபோல எண்ணி களித்தேன். இருளின் அடர்த்தியைக் காட்டும் மின்மினிகளை நான் நிறைய முறை அனுபவித்திருக்கிறேன். இலவசமாகத் தங்கும் யாத்ரா நிவாஸில் என்ன பயம் வந்தது அந்தப் பெண்மணியிடம்? சாதுக்களிடம் உரையாடியது இனிமை. சுவையான பதிவு நான்கும். தொடர்ந்து வாசிப்பேன்.

அப்பாதுரை சொன்னது…

துறவிகள் உரையாடல் எதிர்பார்க்கவில்லை. திருப்பதி போகும் வழியிலா? திருப்பதி படிகளிலும் குப்பையா!

நடைபயணக்கட்டுரை இப்பத்தான் படிக்கிறேன்.. கண்பார்வையில் படுவன நிச்சயம் வேறாக இருக்கின்றன.

(டெம்ப்லேட் மாத்திட்டீங்களா மறுபடியும்?)

ஸ்ரீராம். சொன்னது…

பத்து வருடங்களுக்கு முன் நடைபயணத்தில் மலை ஏறியிருக்கிறேன். சுற்றுப்புறத்தை நானும் ரசித்தேன்தான் எனினும் உங்கள் பயண அனுபவ எழுத்துகளைப் படிக்கும்போது மறுபடி நடை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.மனிதனின் வேடிக்கை பார்க்கும் குணம் பற்றிய வரிகள் அருமை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...