23.12.11

பீஷ்மரின் போதனை

மஹாபாரதத்தின் பக்கங்களில் நிறைந்திருக்கும் போதனைகளும் கதைகளும் கணக்கில் அடங்காதவை. வேறெந்த நாட்டின் இதிகாசத்துக்கும் இப்படிப்பட்ட செழுமையான பரந்த பெருமை கிடையாது.படிக்கப்படிக்க நம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளவும், பல நேரங்களில் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும் மஹாபாரதம் விளங்குகிறது. வாழ்வின் அனுபவம் முதிர முதிர நமக்கு அது மேலும் மேலும் தன்னைத் திறந்து கொடுக்கும் பொக்கிஷத்தின் சாளரமாக விளங்குகிறது.

அதிலிருந்து ஒரு தொடராக மஹாபாரதக் கதைகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன். முதலாவது இடுகை இது.

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம். அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற தர்ம புத்திரர் விரும்பினார்.

தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "பிதாமகரே!தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க, திரௌபதி மட்டும் பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் நெடியை உணர்ந்த தர்மர், "நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?இது தகாத செயல்" என்று கடுமையாகக் கேட்டார்.

"துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது, கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது?" என்று சொல்ல, தர்மரையும் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார். 

"திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். 

துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள்.
 .
"ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்"

"ஆனால் இப்போது பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன்." என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

அதனால்தான் முற்காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.

(இணைக்கப்பட்ட சிற்பத்தின் புகைப்படம் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருப்பதைக் குறிக்கிறது. இச்சிற்பம் 8ம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தில் கட்டப்பட்டதும் மாலப்ரபா நதிக்கரையில் பாகல்கோட் மாவட்டத்தில் பட்டாடக்கல் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் அற்புதமான விருபாக்‌ஷா ஆலயத்தில் உள்ளது)

12 கருத்துகள்:

Manju சொன்னது…

unga blog romba nalla iruku


Life is beautiful, the way it is...
90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here

G.M Balasubramaniam சொன்னது…

அன்பின் சுந்தர்ஜி, மஹாபாரதக் கதைகள் கேட்கத் தயாராய் இருக்கிறேன். அறிந்த கதை, படித்த கதை என்றாலும் நான் எண்ணிப் பார்க்காத கோணத்தில் கருதுக்கள் இருக்கும் என்ற நம்பிக்கை, மேலும் நான் படிக்காத கேட்காத விஷயங்களும் இருக்கும் என்றும் நம்பிக்கை. முகப்பில் இருக்கும் படம் பிரமாதம்.

vasan சொன்னது…

பீஷ்ம‌ரின் புராத‌ண சிற்ப‌த்தின் ப‌ட‌ம், இந்த‌ புராண‌த்தின் தொட‌க்க‌த்திற்கு ஒரு அக‌ல் விள‌க்காய் சுட‌ர் வீசுகிறது. உங்க‌ளின் தேடுத‌லால் எங்க‌ளுக்கு கிடைத்த அறிவொளி.‌

ரிஷபன் சொன்னது…

ஒரு துறவி அரசன் கொடுத்த விருந்தை சாப்பிட்டு விட்டு அரண்மனை தங்க வட்டிலுடன் போய்விட்டார். ம்றுநாள் அவருக்கு உறைத்தது.. என்ன இப்படி ஒரு தகாத செயலைச் செய்து விட்டோம் என்று. சாப்பிட்ட உணவின் தாக்கம் என்று புரிந்து திருப்பிக் கொண்டு போய் கொடுப்பதாய் ஒரு கதை உண்டு.

ஆனால்.. சுந்தர்ஜி.. பீஷ்மருக்குமா அந்த எக்ஸ்கியூஸ்.. அவர் அதைத்தாண்டிய்வராய் அல்லவா இருக்க வேண்டும்?

ஏதாச்சும் சொல்வீர்கள்.. என்கிற பத்திரிக்கையாளன் புத்தி!

Matangi Mawley சொன்னது…

I beg to differ, Sirji!
மகாபாரதம் என்னோட favourite கதைகள்-ல ஒண்ணு. நிறையா கத கேட்டிருக்கேன். நிறையா versions படிச்சதுண்டு. நிறையா ரொம்பவே பிடிச்ச விஷயங்கள். ஒரு சில 'நெருடலான' விஷயங்களும்... இந்த கதை ரெண்டாவது ரகம்.
இந்த கதை கேட்கும் போது/படிக்கும் போதெல்லாம்-- ரெண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒண்ணு- "corrupt man will be corrupt wherever he is" அப்டீங்கறத விளக்கும் ஒரு Birbal கதை. இன்னொண்ணு- Twain ஓட "Prince and the pauper" அ base பண்ணி எடுக்கப்பட்ட ஒரு movie - Trading Places. அதுல "Man is made by the society he lives in- that he imbibes the characteristics of his society" ங்கற argument. ஆனா என்ன பொறுத்த வரைக்கும், முதல் argument கொஞ்சம் கூடுதல் convincing ஆ இருக்கு.
அத்தன respectable personality --- ஒரு divine touch வேற பீஷ்மருக்கு கொடுத்துட்டு- அவரோட முழு power and potential உம் வெளிப்படும்போல இருக்கும் அந்த ஒரு தருணத்தில- he chose not to act. என்னதான் ஒரு well -thought out reply கொடுத்தாலும்- அது என்னமோ 'Joker' சொல்றது போல- "misplaced sense of self-righteousness" ஆ தான் எனக்கு தோணறது.
என்ன வேணும்னாலும் அவர் சொல்லிக்கட்டும். 21st century கு இந்த சால்ஜாப்பெல்லாம் செல்லாது! ஆனா- "வெளி சாப்பாடு சாப்ட கூடாது"-ன்னு உலகத்துக்கு சொல்லணும்-ங்கறதுக்கு இது example தான்- அப்டீன்னா- அது ரொம்பவே weak example - ங்கறது என்னோட view!
I don't claim to be an authority on Mahabharatha. But all stories are left to the readers' imaginative and creative interpretations. And these are mine!

நல்ல தொடர்! எனக்கு ரொம்பவே பிடிச்ச பல கதைகள திரும்பவும் உங்க வார்த்தைகள்-ல படிக்க ஆவலுடன்....! :) Thank you!

kashyapan சொன்னது…

சுnthar அவர்களே! கிரேக்க இதிகாசங்களிலும் உண்டு ---காஸ்யபன

நிலாமகள் சொன்னது…

வாழ்வின் அனுபவம் முதிர முதிர நமக்கு அது மேலும் மேலும் தன்னைத் திறந்து கொடுக்கும் பொக்கிஷத்தின் சாளரமாக விளங்குகிறது.//

ச‌ர்வ‌ நிச்ச‌ய‌மாய்!

//ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்.//

அத‌னால்தானோ 'பாத்திர‌ம‌றிந்து பிச்சையெடு' என்ற‌ன‌ர் ந‌ம் முன்னோர்!

//இணைக்கப்பட்ட சிற்பத்தின் புகைப்படம் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருப்பதைக் குறிக்கிறது. இச்சிற்பம் 8ம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தில் கட்டப்பட்டதும் மாலப்ரபா நதிக்கரையில் பாகல்கோட் மாவட்டத்தில் பட்டாடக்கல் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் அற்புதமான விருபாக்‌ஷா ஆலயத்தில் உள்ளது//

த‌க‌வ‌லுக்கு ம‌கிழ்வு. எங்க‌ளுக்கும் காண‌ வாய்ப்பு த‌ந்த‌மைக்கும்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அருமை சுந்தர்ஜி..
மஹா பாரதக் கதைகள் படு ஜோர் அல்லவா?
அதுவும் நம்ம சுந்தர்ஜிக்கிட்டேர்ந்துன்னா,
கேக்கணுமா?

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

Ramani சொன்னது…

சொல்லத் தெரிந்தவர்களிட்ம
கேட்க வேண்டியதைக் கேட்க
சந்தர்ப்பம் அமைவது கடினமே
தற்போது அமைவது குறித்து மிக்க சந்தோஷம்
பதிவுக்காகக் காத்திருக்கிறோம்

சுந்தர்ஜி சொன்னது…

இந்தக் கதையின் அடிநாதம் மட்டுமல்ல.இதிகாசங்களின் பல கதைகளிலும்-பல அவதாரங்களிலும் ஒரு கதையும் அதற்குப் பின்னணியாய்ப் பொதுவான விமர்சனங்களும் உண்டு.

ராமன் எத்தனை உயர்வான பாத்திரம்? அப்படி ஒரு பாத்திரத்தின் முகமூடி அணிய நேரும்போது வாலியை வதம் செய்த போதும்-சீதையை அக்னிப் ப்ரவேசத்துக்கு நிர்பந்தித்தபோதும் அதன் பாத்திரத்தின் வீச்சாகவே அது படுகிறது.

பீஷ்மாச்சாரியார் உட்பட எல்லோரின் வாழ்விலும் அவர்களால் செயல்படமுடியாது கைகள் கட்டப்பட்ட நிலையென்பது ஒருமுறையாவது வரும் என்பதும் அதற்காக வாழ்வெல்லாம் வருந்தி வதைபடும் சூழல் கண்டிப்பாய் வரும் என்பதும் என்னளவில் நான் பார்த்த அனுபவித்த நிலை.பீஷ்மருக்கும் அப்படித்தான்.

ஒரு கதையை நாம் யார் மீது பொருத்தியிருந்தாலும் அது விமர்சனத்துக்கும் இருவேறு கருத்துக்கும் இடம் அளிக்கக் கூடியதாகவே இருக்கும். லோகோ பின்ன ருசி என்கிற மஹாவாக்யம் சொல்வது காலம் காலமாய் இதைத்தான்.

ஆக எல்லாக் கடவுள்களிடமும் எல்லா மனிதர்களிடமும் எல்லாக் கதைகளிலும் நாம் பொருந்திப் போகமுடியாத இடங்கள் வரும். அப்போது அவரவர் அனுபவத்துக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்ப நியாயங்களும் விடைகளும் கிடைக்கும்.

சிவகுமாரன் சொன்னது…

மகாபாரத இடுகைகள் ... ஆகா வரவேற்கிறேன் சுந்தர்ஜி. இதைப் பற்றியெல்லாம் எழுத யாரிருக்கிறார்கள் ?

மிகப்பெரிய செயல் இது.
தலை வணங்குகிறேன்

gkrishna சொன்னது…

அருமையான கதை மற்றும் அருமையான பின்னூட்ட பதிவுகள்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...