2.11.11

யாத்ரா-III


நிலவின் மது வழிந்து தளும்பும் இந்த இரவில் நடந்து கொண்டிருக்கிறேன். வழியெங்கும் பேரமைதியின் ஆட்சி. மரங்கள் உற்சாகமாக இரவின் ஏகாந்தத்தைப் பருகியபடி இருக்கின்றன. உறக்கம் கலைந்த பறவைகளின் கூடுகளில் சலசலப்பின் ஒலி கேட்கிறது. கடந்துபோக இருக்கிற அந்தப் பாலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருக்கிற தண்ணீரின் க்ளக் க்ளக் ஒலி காதுகளை முன்பாகவே தொட்டுக் கிளர்ச்சியை உண்டாக்குகிறது.

கோபமாய்-சந்தோஷமாய்-வருத்தமாய்-சோர்வாய்-தனிமையாய்-பேசியபடியோ பேசாதோ இருந்த அத்தனை மனிதர்களும் இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதிகாலை மறுபடியும் எழுந்திருக்கும் வரையிலும் யாரும் பேச அவசியமில்லை. உறக்கம் பேச்சைக் கட்டிப் போட்டிருக்கிறது. ஏதோ தெருக்களில் ஏதோ நாய்கள் ஏதோ காரணங்களோடு குரைத்துக் கொண்டிருந்தன.கிடைகளில் ஆடுகள் ஒன்றிரண்டு தும்மியபடி பம்மிக் கிடந்தன.வீட்டுத் தொழுவங்களில் கட்டப்பட்டிருந்த மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஓசை இரவுக்கு அழகு சேர்த்தது.

வாழ்வின் கடந்து போன பக்கங்களைத் திருப்பியபடி நடந்துகொண்டிருக்கிறேன்.இன்றைக்கு என்னுடன் துணைக்கு யாருமில்லை.நடுவழியில் ஓரிடத்தில் களைப்பாக உணர்ந்த போது ஒரு வீட்டுத் திண்ணையில் அரைமணி நேரம் உறங்கினேன். சடாரென எழுந்து பார்க்கையில் அருகில் யாருமற்ற ஒரு தனிமையில் குளித்துக்கொண்டிருந்தேன். நடக்க நடக்கத் தனிமை உடன் தொடர்ந்தது.

இப்படியாக முந்தைய நாள் நண்பர்களைத் தவற விட்டுவிட்டேன்.அவர்கள் இப்போது எங்கிருப்பார்கள்? அத்தனை வேகமாய் சென்றிருக்க் வழியில்லை. பகலெல்லாம் நடந்திருந்ததால் ஏற்கனவே களைப்பாய் இருந்தாலும், பகல் நேரத்து வெயிலை இரவில் நடந்து தவிர்க்கவே திட்டமிட்டிருந்தோம். ஆனால் வழியில் நீண்டுவிரிந்த சாலையில் யாருமே தென்படவில்லை.இந்தப் பயணம் முழுதும் முடிந்தவரை மொபைல் ஃபோனை உபயோகப்படுத்தக் கூடாதென எண்ணியிருந்தேன். அவர்களின் எண்ணையும் வாங்கிக் கொள்ள மறந்திருந்தேன். ஆனாலும் நிச்சயம் எங்காவது சந்தித்துவிடுவேன் என்கிற ஒரு பிடிமானத்துடன் நடந்துகொண்டிருக்கிறேன்.


இப்போது மணி இரண்டு.சூடான ஒரு தேநீர் பருகும் வேட்கை என்னைத் தொற்றிக்கொண்டது. கடந்த ஒருமணி நேரமாக சாலையோரத்தில் கடைகள் எதுவும் கண்ணில் படவில்லை. இரவில் நடக்கும்போது நம் இதயம் துடிப்பது காதுகளுக்குக் கேட்கும் அளவுக்கு அழகான ஒரு நிசப்தம்.வழியில் நிற்கும் மரங்கள் எதுவும் அசையாமல் உறங்கிக் கொண்டிருந்தன.சிறிது களைப்பாக இருந்தது.கையில் தண்ணீரும் எடுத்துச் செல்லவில்லை. நிமிர்ந்து பார்த்தேன்.நிலாவும் என்னுடன் நடந்துகொண்டிருந்தது துணையாக.

அல்பிஸியா சாமன் என்ற பூர்வாசிரமப் பெயர் கொண்ட நம்ம ஊர் தூங்குமூஞ்சி மரத்தின் அடியில் இருந்த கல்மேடையில் உட்கார்ந்தேன். தெலுங்கில் அதற்கு நித்ரா கண்ணேரு என்ற பெயராம். ஒரே மாதிரிதான் இருக்கிறது பெயர்க்காரணம்.ஆனாலும் தூங்குமூஞ்சி மரம் என்கிற நாமத்தை அதற்குச் சூட்டியவன் நிச்சயம் ஒரு கவிஞனாகத்தான் இருக்கமுடியும்.

நிலவின் வெளிச்சத்தில் பக்கத்தில் இருந்த செடியை உற்றுப்பார்க்கையில் அதன் இலைகள் தொட்டாற்சிணுங்கியை நினைவுபடுத்தியது.ஒரு குச்சியால் அதன் இலைகளைத் தொட இலைகள் மூடிக்கொண்டன.சிறிது நேரம் கழித்து மறுபடியும் இலைகள் திறந்துகொண்டன. மறுபடியும் குச்சியால் தொடல். மூடல். எத்தனை நாட்களாயிற்று இந்தத் தொட்டாற்சிணுங்கிகளுடன் உறவாடி?

திட்டப்படி அதிகாலைக்குள் வடமலைப்பட்டிக்கு முன்னால் உள்ள காளிகோயிலை அடைய வேண்டும்.எழுந்தேன்.நடக்கத் தொடங்கினேன்.காளிகோயில் எப்போது வருமென்றும் எத்தனை தொலைவில் இருக்கிறது என்றும்தெரியவில்லை. திடீர் வெள்ளத்துக்கோ அல்லது இருந்த பாலம் இடிந்ததற்கோ ராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த ஒரு பாலத்தைக் கடக்கும்போது எப்படி நிர்மாணித்திருக்கிறார்கள் என்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன். பாலத்தின் அடியின் ஓடிய தண்ணீரில் துள்ளியபடி இருந்த மீன்களும் இன்னும் உறங்காது இரவின் ரம்மியத்தை ரசித்துக் கொண்டிருந்தன.

பாலத்தைக் கடந்தவுடன் சற்றுத்தொலைவில் சாலையின் இடது புறம் மின் வெளிச்சம் தெரிந்தது. அந்த மின் வெளிச்சம் ஒரு தேநீர்க்கடையினுடையது என்றறிந்த பின் வாயிலிருந்து விசில் கிளம்பியது ஓஹ்ஹோ என்கிற தொனியில்.  அந்தக் கடையை அடைந்து சூடான ஒரு தேநீரை ருசித்தேன்.பக்கத்தில் சில ட்ரக்குகள். அதன் ஓட்டுநர்கள் அசதியுடன் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் வைத்திருந்த ரேடியோவிலிருந்து செம ஹாட்டு மச்சி கேட்க யாருமற்று ஒலித்துக்கொண்டிருந்தது.

சர்க்கரையின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. சர்க்கரையின் அளவைக்குறைத்து இன்னொரு தேநீர் கேட்டு உறிஞ்சி முடித்தவுடன் ரெண்டாவது தேநீருக்கு மட்டும் காசு வாங்கிக் கொண்டார். அந்த நிலா இதைப் பார்த்துக் கொண்டிருந்தது. பெயர் தெரியாத அந்த மனிதரை அந்த இரவுச் சாலையில் வாழ்த்தி அவரின் கையைக் குலுக்கினேன். மேன்மையான அவரின் மென்குணம் அவரைக் காக்கட்டும்.

அந்தத் தேநீருக்குப் பின் காளிகோயில் வரையிலான சாலை மிகவும் அச்சுறுத்துவதாக இருந்தது. மலையேற்றம் கடந்து சாலை சரியத்தொடங்குகிறது இப்போது. சாலையில் வாகன இயக்கம் சற்று அதிகரித்திருந்தது. ட்ரக்குகளும் பேருந்துகளும் அளவுக்கதிகமாய் சாலையை ஆக்கிரமித்துக்கொண்டு ஓட்டப்பட்டபோது இடது புறம் நடக்க இடமின்றி உருண்டு கிடந்த பாறைகளில் அடிக்கடி காலை உரசிக்கொள்வதாயிற்று.சரிவானதாலும் காலில் போதிய வலுவற்றிருந்ததாலும் அந்தச் சாலையைக் கவனத்தோடு கடந்து செல்ல எத்தனித்தேன்.

கிட்டத்தட்ட அதிகாலை மூன்றரை மணி. இதோ காளி கோயிலை அடைந்து விட்டேன். இலக்கை அடைந்துவிட்டேன் என்ற நினைப்பிலும் மிகுந்த அசதியிலும் ஒரு மணிநேரம் தூங்கலாம் என்கிற முடிவில் கோயில் அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் கிடந்த கல் பென்ச்சில் படுத்துறங்க ஆயத்தமானேன்.நிலா கிழக்கை நோக்கி விரைந்தபடி இருந்தது.அதன் இலக்கை அது இன்னும் அடையவில்லையே என்று வருந்தியபடியே உறங்கிப்போனேன்.

8 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

சாலையில் இரவில் தனியே செல்லும்போது பயமே ஏற்படவில்லையா.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரவில் தனியே நடந்து செல்வதும் ஒரு வித அனுபவம்தான்... பதினெட்டு-பத்தொன்பது வயதில் விருதாசலம் - திட்டக்குடி சாலையில் இப்படி 10-12 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன்... :) நல்ல அனுபவம்...

உங்கள் வார்த்தைகள் கோர்வை லயிக்க வைக்கிறது...... தொடருங்கள்....

ரிஷபன் சொன்னது…

நிலவின் வெளிச்சத்தில் பக்கத்தில் இருந்த செடியை உற்றுப்பார்க்கையில் அதன் இலைகள் தொட்டாற்சிணுங்கியை நினைவுபடுத்தியது.ஒரு குச்சியால் அதன் இலைகளைத் தொட இலைகள் மூடிக்கொண்டன.சிறிது நேரம் கழித்து மறுபடியும் இலைகள் திறந்துகொண்டன. மறுபடியும் குச்சியால் தொடல். மூடல். எத்தனை நாட்களாயிற்று இந்தத் தொட்டாற்சிணுங்கிகளுடன் உறவாடி?

ஒரு கவிஞருடன் பயணிப்பதில்தான் எத்தனை சுகம்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//G.M Balasubramaniam Nov 2, 2011 05:54 PM
சாலையில் இரவில் தனியே செல்லும்போது பயமே ஏற்படவில்லையா.//

// நிமிர்ந்து பார்த்தேன்.நிலாவும் என்னுடன் நடந்துகொண்டிருந்தது துணையாக.//

பின்னென்ன கவலை. துணைக்குத்தான் நிலா வந்ததாமே!

இயற்கையை ரசித்தபடிச் சென்ற பயணம் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது, நம் சுந்தர்ஜீ அவர்களால்.

[எனக்குத்தான் நடைபயணம் என்றாலும், இருட்டு என்றாலும், தனிமையென்றாலும் பயமோ பயம். vgk]

Matangi Mawley சொன்னது…

வழியில் துணை நிலா மட்டுமல்ல.. நாங்களும் தான்! :)
எத்தனை எத்தனை எண்ணங்கள்... இரவின் இருள் எண்ணங்களின் வேகத்தோடு உராய்ந்துகொண்டு- கற்பனைக் கனலை அழகாக தீட்டிவிட.. அதிலேயும் எழுதுவது- சுந்தர்ஜி... ஆஹா!

மூன்று ஜாம நேரம்.. காளி கோவில்... ஆஹா!! :D .. நான் ஏற்கனவே சொன்னதைப்போல-- அந்த கால மந்திர தந்திர கதைகளை படிக்கும் பொது இருந்த அதே ஆர்வம் எனக்குள்... :)

"கோபமாய்-சந்தோஷமாய்-வருத்தமாய்-சோர்வாய்-தனிமையாய்-பேசியபடியோ பேசாதோ இருந்த அத்தனை மனிதர்களும் இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்."-- Class!

மணி சரியாக 12 .01 am ... . சென்னையிலிருந்து bus இல் திருச்சிக்கு சென்றுகொண்டிருந்தேன். Bus இல் விளக்குகள் அனைக்கப்பட்டுவிட்டன. மரக்கிளைகளின் கரும் நிழல்கள்- நிலாவை மறைக்க மிகவும் தீவிரமாக முயர்ச்சித்துக்கொண்டிருந்தது.. Mobile இல் "E Ajnabi" (Dil Se) [தமிழில் 'பூங்காற்றிலே'- உயிரே]. அந்த பாட்டில் ஒலிக்கும் ஏதோ ஒரு தேடல்- என்னுள்ளேயும்... என்னால் மறக்க முடியாத-- ஒரு பிறந்தநாள் அது! அதை நினைவு படுத்திவிட்டது இந்த பதிவு!

எதிர்பார்ப்புகளோடு...

PS: தங்களது எழுத்தின் தாக்கம் என்னையும் தொற்றிக்கொண்டு விட்டது... !!!

ViswanathV சொன்னது…

தொடர்ந்து செல்லுங்கள்;
தொடர்ந்து வருகிறோம்;

Ramani சொன்னது…

அனைத்தும் இருந்தும் இல்லாத உணர்வுடன்
நம்முடன் நாம் நடக்கும் வாய்ப்பு
இதுபோன்ற சந்தர்பங்களில்தானே கிடைக்கிறது
நானும் தங்களுடன் நடப்பதாக உணர்ந்தேன்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ப.தியாகு சொன்னது…

வாதங்களில் இன்னும் அவனுக்கு ஆர்வமிருக்கிறது. அகந்தையும் கற்றலின் செருக்கும் இருக்கிறது.
நாளானால் சரியாகிவிடும்! - என்னவொரு அவதானிப்பு. ஒரு விஷயம் கவனித்தேன் சுந்தர் ஜி சார்,
'அவரின் படபடப்பும் எதையும் நிறுவும் பிடிவாதமும் அவர் அணிந்திருந்த காவியுடைக்கும் ருத்ராக்ஷத்திற்கும்
பொருத்தமில்லாதது போலுணர்ந்தேன்' என்று உங்கள் விசனத்தை கொஞ்சம் வேகமாகவே சொல்லிவிடுகிறீர்கள்.
ஆனால், சுரேந்தர் பாருங்கள் எவ்வளவு அமைதியாய் சொல்லிவைக்கிறார்!

அவர் நினைத்திருந்தாலும், லீ-யை குறை சொல்வதையே, தன்னை உயர்வாய் காட்டிக்கொள்ள ஒரு
சாதனமாய் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் அவர் செய்யவில்லை. அவர் நிறைகுடம் இல்லையா!

அகந்தையையும், கனிவையும் அடுத்தடுத்த தருணங்களில் தாங்கள் சந்தித்த அனுபவம் என்வரையில் அதிக கவனம்
பெற்றதில் நெகிழ்ந்தேன் சுந்தர் ஜி சார்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...