7.12.11

சீமாட்டியின் தாலாட்டு


சாலை வழியுறங்க 
சமுத்திரத்தில் மீனுறங்க
நாடெல்லாம் உறங்க 

நாலு கழனி நெல்லுறங்க
பாலில் பழம் உறங்க 

பாதி நிலா தானுறங்க

வண்டுகள் கவி பாட 

மரங்கள் நடமாட
செண்டுகள் தானாட 

தேசத்தார் கொண்டாட
ஆடுமாம் தூளி 

அசையுமாம் பொன்னூஞ்சல்

மண்ணிலொரு புன்னை மரம் 

வருசமொரு பூப்பூக்கும்
வருந்தி ஒரு காய் காய்க்கும் 

புன்னை மரம் 
இலை உதிரப் பிஞ்சு விடும்

முத்துச் சிரிப்பழகா 

முல்லைபூப் பல்லழகா
வெத்துக் குடிசயிலே 

விளையாட வந்தனையோ 
பச்சரிசி சோளம் 

பாதிநாள் பட்டினிதான்

பசும்பால் கொடுத்துந்தன் 

பசி தீர்க்கப் பார்த்தாலும்
பருத்தி விதை இல்லையடா

பசு பாலும் தரலையடா

ஆட்டுப் பால் ஊட்டியுன் 

பசிதணிக்கப் பார்த்தாலும்
ஆடு கடிக்கும் மரம் 

அத்தனையும் மொட்டையடா

பிள்ளைப் பாலூட்டி உன்னை 

போஜனைகள் செய்திடவே
கொள்ளை யுத்தம் பஞ்சம் 

கொடும்பாவி ஆனேண்டா


தொட்டால் பிசுக்கொட்டும் 
துணி மூட்டைத் தையலிட்டு
தொட்டில் கட்டித் தாலாட்ட 

தூக்கமும் வருமோடா


உன்னைப் போல் செல்வனை 
நான் உலகெங்கும் கண்டதில்லை
என்னைப் போல் ஏழையை நீ 

எங்காச்சும் கண்டதுண்டா. 


ஒரு ஏழைப் பெண்ணின் ஒழுகும் குடிசையிலிருந்து என்றோ ஒலித்த ஒரு தாலாட்டுப் பாடல் என் மனதை அசைக்கிறது. எத்தனை அற்புதமாய் தன் ஏழ்மையை இந்த வரிகளுக்குள் ஒளித்து வைத்து தன் குழந்தையைத் தாலாட்டுகிறாள்? அவள் குழந்தையின் வயிற்றுப் பசியைப் போக்கவும் வழியில்லை. அவள் வறுமையைத் துடைக்கவும் வழி இல்லை. அவள் கணவன் குறித்த தகவல்களும் இல்லை. ஆட்டுக்கும் மாட்டுக்கும் தீனிக்கு வழியில்லை. பஞ்சத்தால் தாய்ப்பாலுக்கும் வழியில்லை. பசி தீர்க்க எதுவுமில்லாது இருந்தாலும் தன் பாடல் அவனை உறங்கச் செய்துவிடாதா என்ற நப்பாசையுடனும் பிசுக்குத் துணியால் கட்டப்பட்ட தூளியில் எப்படி அவன் தூங்குவான் என்ற சந்தேகத்துடனும் தாலாட்டுகிறாள். இப்படிப்பட்ட தாலாட்டுப் பாடல்கள் மறைந்து போனது இருக்கட்டும்- அந்தத் தாலாட்டில் மறைந்திருக்கும் தன் இல்லாமையை இத்தனை நாசூக்குடன் எள்ளலுடன் பார்க்கும் ம்னோபாவமும் அல்லவா காணாமல் போய்விட்டது? கடைசி நான்கு வரிகளை மகத்தான ஒரு கவிதையால் நிரப்பித் தாலாட்டை முடிக்கிறாள் உன்னதமான தாலாட்டைப் பாடிய அந்தத் தாய். சிந்தனையில் செல்வச்சீமாட்டியாய்த் தெரிகிற அவள் ஏழையென்று ஒப்புக்கொள்ள கசியும் கண்ணீருக்கு மனமில்லை.

10 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

பாராட்ட வார்த்தைகள் இல்லை சுந்தர்ஜி.
பிரமாதம்.!

ரிஷபன் சொன்னது…

கவிதை இரு தளத்தில் இயங்குகிறதாய் என் நினைப்பு.. ஏழ்மையில் கிராமத்துப் பெண்ணின் பார்வையில் முதல் பத்தி.. அடுத்து செல்வம் சேர்ந்த பெண்ணின் கம்பீரத்தில்.. இப்படி மாறி.. மாறி.. ஒரு வேளை நான் வாசித்த லட்சணம் அப்படியோ..

நிலாமகள் சொன்னது…

செல்ல‌ ம‌க‌ன் தூக்க‌த்துக்கும், சீர‌ழிந்த‌ த‌ன் வாழ்வின் துக்க‌த்துக்குமான‌ இந்த‌ தாலாட்டு ம‌ன‌சைப் பிசைகிற‌து ஜி!

வ‌றுமை அவ‌ள் வார்த்தைக‌ளுக்கில்லை. செல்வ‌ச் சீமாட்டி தான் அவ‌ள். இப்ப‌டியான‌வ‌ர்க‌ள் அருகிப் போன‌துதான் த‌மிழுக்கு வ‌ந்த‌ கேடு. 'கொல‌வெறி' பிடித்த‌லைகிற‌து ச‌மூக‌ம்.

இரசிகை சொன்னது…

nallaayiruku...

ViswanathV சொன்னது…

கவிதையில் புதைந்துள்ள உண்மை, ஏழ்மை,
கவிதையை ரசிக்க முடியாது தடுக்கிறது;

Rathnavel சொன்னது…

அருமை.

கே. பி. ஜனா... சொன்னது…

இப்படிப்பட்ட தாலாட்டுப் பாடல்கள் மறைந்து போனது இருக்கட்டும்- அந்தத் தாலாட்டில் மறைந்திருக்கும் தன் இல்லாமையை இத்தனை நாசூக்குடன் எள்ளலுடன் பார்க்கும் ம்னோபாவமும் அல்லவா காணாமல் போய்விட்டது? கடைசி நான்கு வரிகளை மகத்தான ஒரு கவிதையால் நிரப்பித் தாலாட்டை முடிக்கிறாள் உன்னதமான தாலாட்டைப் பாடிய அந்தத் தாய். சிந்தனையில் செல்வச்சீமாட்டியாய்த் தெரிகிற அவள் ஏழையென்று ஒப்புக்கொள்ள கசியும் கண்ணீருக்கு மனமில்லை.//
அழகாய் சொன்னீர்கள்! உன்னதமான கவிதை! மகத்தான தாலாட்டு!

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி அவர்களே! கவிதையைப் படித்தபின் கவிதைக்காக அல்ல கவிதையின் தலைப்புக்காக உமக்கு ஆயிரம்பொற்காசுகள் தரவேண்டும் .வாழ்த்துகளுடன் ---காஸ்யபன்

அ. வேல்முருகன் சொன்னது…

அருமையானதொரு தாலாட்டை ரசித்ததோடு மட்டுமல்லாமல் பகிர்ந்தமைக்கு நன்றி

சிவகுமாரன் சொன்னது…

தூக்கத்தைக் போக்கிய தாலாட்டு. வேறென்ன சொல்ல ?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...