
நடுக்கத்துடன் திறக்கிறேன்
இரவின் கதவை மெதுவாய்.
சுவரெங்கும் பூசப்பட்டிருக்கிறது
பூத பைசாசங்களின்
கதறச் செய்யும் சாகசங்கள்.
ஒளி புகாது போர்த்துகிறது
அச்சம் தோய்த்த
கனவுகளின் போர்வை.
இரக்கமின்றி மூடுகிறது
நாசியின் துளைகளை
திகிலின் கருஞ்சொட்டு.
இறுகிப் போன பீதியின் கதவுகளில்
பெருத்த சப்தத்துடன்
அறையப்படுகிறது நிசப்தத்தின் ஆணி.
கொட்டும் இருளும்-
விடாத நாய்க்குரைப்பும்-
நிலவின் நிழலசைவும்-
அய்யோ நான்
செத்துத்தான் போயிருந்தேன்.
செத்தவனை எழுப்பியது
புலரியின் தேன் சுவைத்த
தேவாலய சங்கீதம்.
நினைவாய்ப் பின் தொடரும்
கோப்பை நிறைந்த
திட்டுக்களுடன் அம்மாவின் அதிகாலை.
8 கருத்துகள்:
//நடுக்கத்துடன் திறக்கிறேன்
இரவின் கதவை மெதுவாய்.
.....
நிலவின் நிழலசைவும்-//
சொற்கள் சொக்கவைக்கிறது ஜி.
இப்படியான பொழுதுகள் நிகழ் காலத்திலும் உணர முடிகிறது ஆனால் சாகத்தான் முடியவில்லை.
//நினைவாய்ப் பின் தொடரும்
கோப்பை நிறைந்த
திட்டுக்களுடன்
அம்மாவின் அதிகாலை.//
இந்த வரிகள் உங்களையும் கவிதையும் போல்
நானும் மீண்டு எழுகிறேன்.
'உறங்குவது போலும் சாக்காடு' என்ற வள்ளுவத்துக்கு அழகிய விவரணையாய் உங்கள் கவிதை!
கவிதை!
செத்துப்போனபிறகும் கவிதை வந்துகொண்டேயிருக்கும் உங்களுக்கு சுந்தர்ஜி !
மரணத்திலிருந்து
எழுப்பும் வித்தை
விடியலுக்கு மட்டுமில்லே
உங்கள் கவிதைகளுக்குமுண்டு.
ஒரு பாலகனின் வளர்ச்சியில் மெல்ல மெல்ல அரங்கேறும் வாழ்க்கைப் பயங்கள், கனவில் தொடங்கி காலத்துக்கும் தொடரும் விந்தை.
பேதலிக்கச் செய்யும் கனவுகளை மரிக்கவைக்கும் மாமருந்தொன்று, அதிகாலையில் அம்மாவின் கோப்பைக்குள் திட்டுக்களாகவும், பானமாகவும்
தளும்பிநிற்கும் அற்புதம்.
அபாரம். பாராட்டுகள்.
துரத்தும் நினைவுகளும் சாகடிக்கும் வாழ்க்கைக்கு முந்தைய பருவம்..
கனவுகளோடு நிற்கிறது
கோப்பை நிரம்ப
திட்டுக்களும்
பானமும்
தந்தெழுப்பும்
அம்மாவின் அதிகாலை//
எது நடக்கிறதோ இல்லையோ இது நிச்சயம் இருக்கும்.
கருத்துரையிடுக