4.9.10

வேண்டுதல் அற்றவளின் பிரார்த்தனை




மணியோசைக்குப் பின்
பரவுகிறது அமைதியின் அலை.

வியாதி குணமாகுதலுக்கோ
புதிய வியாதியின் வரவிற்கோ

ஆகாத திருமணம்
நிறைவேறுதலுக்கோ
ஆனது முறிதலுக்கோ

எதிரியின் வீழ்ச்சிக்கோ

சூழ்ச்சிக்குத் துணை நிற்றலுக்கோ

கடன் தொல்லை விடுபடலுக்கோ
சொத்துக்கள் விலைபோகாதிருக்கவோ
விற்ற பொருள் திரும்பாதிருக்கவோ

முணுமுணுப்பாய்க் கேட்கின்றன
தயக்கத்தின் சொற்கள்.

இருண்ட அகல்களின்
நுனிகளில் சுடர்விடுகின்றன
நம்பிக்கை பருகிய
காலத்தின் திரிகள்.

பேராசைக்கும் நிராசைக்கும்
பொருத்தமான காணிக்கைகள்
இடப்படுகின்றன
முகமற்றவனின் பாதங்களில்.

மணியோசையின் 

அதிர்வுகளுக்குப் பிந்தைய 
யாருமற்ற இடைப்பொழுதில்
தேவாலயத்தின்
அசையும் மலர்களில்

மகரந்தமாய் நிரம்பியிருக்கின்றன
வேண்டுதல் எதுவுமற்றவளின்
பிரார்த்தனைகள்.

9 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சுந்தர் சார்,

பழைய கவிதைகளை இப்போதுதான் வாசித்தேன்.

"கொடுங்கனவு" - நினைவிலேயே நிற்கிறது.

வாழ்த்துக்கள்.

ரிஷபன் சொன்னது…

பிரார்த்தனைகளைப் போலவே வலிமையான கவிதை.

பத்மா சொன்னது…

வேண்டுதல் இல்லா வேண்டுதல்...
அதுவே வேண்டும் என்பதே என் வேண்டுதல் ..

ஒரு கணம் மனம் அசைந்து நின்றது நிஜம் ...

நிலா மகள் சொன்னது…

வழக்கம் போல் உங்கள் பட்டியலிடும் அழகு ரசிக்கத் தக்கதாய்...
'நம்பிக்கை பருகிய நாளையின் திரிகள்...'
'பேராசைக்கும் நிராசைக்கும் பொருத்தமான காணிக்கைகள்...'
-இவை பளிச்சிடுகிறது.
'அசையும் மலர்களில் மகரந்தமாய் வேண்டுதலற்றவளின் பிரார்த்தனைகள்...'
-இது டாப்!

vasan சொன்னது…

யாரும‌ற்ற, ஏதும் மாற்ற‌, ஆற்ற‌ இல்லா நேர‌ங்க‌ளில் தான்,
ப‌டிக்க‌வே 'வேண்டும்' உங்க‌ள் பதிவுக் க‌விதையை சுந்த‌ர்ஜி.

சைக்கிள் சொன்னது…

படிம அழகுள்ள, இருளும், ஒளியும் இணைமுரண் பேசும் , இயல்பு மலர்க் கவிதை.

ஹேமா சொன்னது…

வேண்டுதலில்லாப் பிரார்த்தனைதான் பொருத்தம் கல்லாய் இருக்கும் கடவுளுக்கும்.மனமாவது பாரம் குறைக்கும் !

Madumitha சொன்னது…

வேண்டிதல் இல்லாப்
பிரார்த்தனை
கடவுளின் மிக அருகில்
கொண்டு சேர்க்கக் கூடும்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கமலேஷ். கருங்கனவு கொடுங்கனவாக்கிட்டீங்களே கமலேஷ்.

நன்றி ரிஷபன்.

விமர்சனத்துல என்னை அசச்சிட்டீங்க பத்மா.

என்னை சரியாய் அளந்துவைத்திருக்கும் உங்கள் ரசனைக்கு ஒரு சலாம் நிலாமகள்.

இப்படி நீங்க படிக்கிறதே எனக்கு சந்தோஷம்தான் வாசன்.

ரசனைக்கு நன்றி சைக்கிள். என் வீட்டிற்கு உங்கள் முதல் வருகைக்கும்.

கல்லிலும் இல்லை கல்லும் இல்லை கடவுள். உள்ளில் உங்களில் உறைந்திருப்பதே கடவுள்.நன்றி ஹேமா.

கடவுளிடம் கொண்டு சேர்க்கும். கடவுளாயும் மாற்றும் பிறிதொரு நாள்.நன்றி மது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...