
கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய்த் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் தின்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !
-சுஜாதா.
இது 1979ல் சர்வதேசக் குழந்தைகள் ஆண்டிற்காக சுஜாதா எழுதிய அவருக்கேயான நையாண்டிக் கவிதை. இதை இப்போது வாசிக்கும் போதும் பெருத்த மாறுதலின்றி இருப்பது கவிதையின் வெற்றியா? பொறுப்பற்று நொண்டிச்சாக்கிலேயே தலைமுறைகளை நாசமாக்கிய ஆள்பவர்களின் தோல்வியா? என்ற மிக எளிமையான கேள்விக்கு விடை கேள்வியிலேயே காத்திருப்பது கேவலத்திலும் கேவலம்.
7 கருத்துகள்:
செயல்படாதவரை நம் தோல்வியும் கூட.
கவிதையின் வெற்றியும்..
கருத்து எப்போதும் வெற்றியை நோக்கியும்!!
என்ன செய்யப் போகிறோம் நாம்...????????
நீங்கள் முன்பே சொல்லியதுதான்,சுந்தர்ஜி.வள்ளுவரும்,சித்தர்களும், பாரதியும் சொல்லியே கேட்காத நாடு, சுஜாதா சொல்லியா, சமுதாயத்தை மாற்றிவிடப் போகிறார்கள். சொல்லியபடி வாழ்ந்தவர்கள் சொல்லே அம்பலம் ஏறவில்லை.
தோல்வி அனாதை.வெற்றிக்குப் பல தகப்பன்.என்னளவில் காந்தி சொன்ன மாற்றத்தைத் துவக்கிவிட்டேன் பல காலத்துக்கு முன்.மொத்த மாற்றம் நிகழும் வரை செயல்படாமைக்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.சரிதானே சைக்கிள்?
ரசனையின் தரத்துக்கும் முதல் வரவுக்கும் நன்றி அண்ணாமலை.
மாற்றமாயிருப்போம் நம்மளவில் உங்களைப்போல்--உங்கள் குடும்பத்தினரைப்போல் நிலாமகள்.
ஒரு தடவை நீங்க பொலம்பும்போது நான் ஆறுதல் சொல்வேனாம்.இன்னொரு தடவை நான் பொலம்பும்போது நீங்க சமாதானம் சொல்வீங்களாம்.சரியா வாசன்?
நம் மீது படிந்திருக்கும்
கறையை எப்படி கழுவப் போகிறோம்?
கரையற்ற் கழுவ வழியற்ற கறை மதுமிதா.
கருத்துரையிடுக