12.9.10

ப்ரகாஷுக்கு ஓர் கடிதம்-I


சென்னை
24.09.1989

ப்ரகாஷ்,

ஒரு இடைவெளிக்குப் பின்னால் எழுதுகிறேன். என் வாழ்க்கை எந்த வித ஆச்சர்யங்களுக்கும், குறிப்பிடத்தகுந்த சம்பவங்களின் தாக்குதல்களுக்கும் ஆளாகாமலும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற துணையின்றியும் காற்றின் விசைக்கேற்ப நழுவிப்போய்க்கொண்டிருக்கிறது. இதுபோலவே இருக்கப்போகிற எதிர்கால நாட்கள்-அது குறித்த கற்பனைகள் என்னை பயமுறுத்திக்கொண்டிருக்கின்றன.கதவுகளுக்கு வெளியே நிரந்தரமாக விடப்பட்ட ஒரு ஜோடி செருப்புகளின் நினைவு வந்து மோதுகிறது.

கோபாலி போன வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்திய பௌர்ணமி இரவை என்னுடன் கழித்தார். ஃபோனில் பேசிக்கொண்டபோது ஏதோ பரபரப்பு-நிறையப் பேச வேண்டிய விஷயங்கள் என்று எதிர்பார்ப்புகளைத் தூண்டிய ஒரு மாலை.வந்து சேர்ந்து நேரில் பார்த்தபோது கோபாலியை என்னால் அடையாளம் காண முடியவில்லை.திடீரென வயதுகூடிப்போன ஒரு களைப்பு முகத்தை நிரப்பியிருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் பரிச்சயப்படுத்திக்கொண்ட காலம் அமைதியானதாக இருந்தது.

பின் சாப்பிட்டுவிட்டுக் கடற்கரை மணலில் படுத்தபடி பேசிக்கொண்டிருந்தோம்.அலைகள் பேரிரைச்சலோடு கடல்மணலை மோதித் திரும்பிக் கொண்டிருந்தன.தொலைதூரத்தில் நிறைய வெளிச்சங்களோடு கப்பல்கள் சிலை போல நின்றுகொண்டிருந்தன.பேசிப்பேசி ஒரு சமன நிலையை இருவரும் அடைந்தபோது எழுந்து அறைக்குத் திரும்புவதற்காகக் கிளம்பினோம்.

நிசப்தமாக இருந்த கடற்கரைச்சாலையின் ஒரு மங்கிய வெளிச்சத்தோடு திறந்திருந்த கடையில் பன்னீர்சோடா குடித்துவிட்டு சிகரெட் பற்றவைத்துக்கொண்டோம். பன்னீர் சோடாவின் பன்னீர் மணம் தஞ்சாவூரை ஞாபகப்படுத்துவதாக இருவரும் சொல்லிக் கொண்டு மேலே தெளித்துக் கொண்டோம்.

அறையில் வந்து ஜப்பானிய ஹகாகுரேயைப் பற்றி சம்பாஷித்தபடி யுகியோ மிஷிமாவின் புத்தகத்தில் அவரைக் கவர்ந்த வரிகளைப் படித்துக் காட்டினார். நான் என் பங்குக்கு நான் மொழிபெயர்த்திருந்த வைக்கம் பஷீரின் “நீல வெளிச்சம்” படித்துக்காட்டினேன். இறுதிப் பகுதியில் கோபாலி தூங்கிப்போயிருந்தார்.என் தனிமையின் துணையோடு கோபாலியை எழுப்பி, விட்ட இடத்திலிருந்து மறுபடியும் கடைசி வரை படித்தேன்.

அறை முழுதும் கொடியில் துவைத்துப்போட்டிருந்த துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.சில சிகரெட் துண்டுகள்.அரைகுறையாய் எரிந்துபோய் மறு ஏற்றுதலுக்காகக் காத்து நின்ற மெழுகுவர்த்தியை அன்றைய இரவு ஏற்றவேண்டியிருந்தது. தூங்கினோம்.

நங்கநல்லூரில் ஒரு வீட்டில் தனியாய் இருப்பதையும், அந்த வீட்டில் தன் பையனின் சிகிச்சைக்காக வந்திருந்தபோது பெண் லக்ஷ்மி சில சரளைக்கற்களையும் கூழாங்கற்களையும் வைத்து விளையாடி விட்டுப் போனதையும், ஜன்னல் கம்பியில் கடித்துத் துப்பிய பபிள்கம் ஒட்டி இருந்ததையும் சொல்லிவிட்டு இப்போது அவற்றைத் தினமும் தொட்டுத்தொட்டுத் தடவி தன் பெண்ணையும் குடும்பத்தையும் நினைத்துக் கொள்வதாகவும் சமயங்களில் கூழாங்கற்களையும் பபிள்கம்மையும் தொட்டுப் பார்த்தபடியே அழுவதையும் சொன்னார்.

எனக்கு

“இறந்துபோன
என் மனைவியின்
சீப்பு-
காலில்பட்டுக்
குளிர்ந்துபோனேன்”

ஹைகூ ஞாபகம் வந்தது.அடுத்த நிமிஷமே கோபாலி அந்த ஹைகூவையும் சொன்னார்.

பெருமூச்சு கரைந்து ஓடியது.

சுந்தர்ஜி.

6 கருத்துகள்:

Madumitha சொன்னது…

உங்கள் கடிதம் என்னை
எங்கெங்கோ இழுத்துச் சென்றது.
கீழவீதியிலிருந்த பிரகாஷ் கடை,
பெரியகோவில் பிரகாரம்,
சோழன் சிலை புல்வெளி.

அது ஒரு காலம்.

நிலா மகள் சொன்னது…

இழந்தவையும் மறந்தவையும் தான் வாழ்வில் மிகச் சிறந்தவையாகத் தோன்றுகிறது!

பத்மா சொன்னது…

கவிதையாய் பேச இயன்றால் என்னே ஒரு நட்பு !

கொடுத்து வைத்தவர் நீங்கள் ஜி

ரிஷபன் சொன்னது…

பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற துணை..

நீங்கள் பாக்கியசாலி. அப்போதும் இப்போதும். ப்ரகாஷ் மற்றும் கோபாலி.

சுந்தர்ஜி சொன்னது…

ம்ம்ம்.அது ஒரு காலம்தான் மது.

இழந்தவையும் மறந்தவையும் சிறந்தவை என்ற உங்கள் உயரமும் பக்குவமும் புரிகிறது நிலாமகள்.

இப்போது நீங்கள் பத்மா.

நீங்களும் தான் ரிஷபன்.

vasan சொன்னது…

/ஹைகூ ஞாபகம் வந்தது.அடுத்த நிமிஷமே கோபாலி அந்த ஹைகூவையும் சொன்னார்.//

இதைத்தான் ஒத்த‌ அலைவ‌ரிசை என்கிறோமோ சுந்த‌ர்ஜி?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...