
I
நிராதரவின் அரவணைப்பில்
உயிர் துறந்தவனின்
இறுதி நிமிடங்களை
மொய்க்கிறது
காத்திருப்பின் பரிதவிப்பு.
II
பொருத்தமில்லா
ஒப்பனைகளின் ஆழத்தில்
காய்ந்திருக்கிறது
பேரங்களின்
திகட்டும் மொழி.
III
தொலைத்ததும் அறியாது
இருப்பதும் புரியாது
சாலையின்
கரிக்கும் புகையில்
சொட்டுகிறது
காலத்தின் திவலை.
IV
கனவுகளின்
செங்கற்களில்
படிகிறது
நாளெல்லாம்
பெற்றோரைப் பிரிந்த
பிஞ்சுகளின் பால்மணம்.
V
விருந்துக்காய்த்
துடித்தடங்கிய
ஆடுகளின் குருதியில்
எழும்பத் துவங்குகிறது
நரகத்தின் வெளிச்சுவர்.
VI
செய்வது வேரறியாது
தலைக்கு மேல்
பார்ப்போரும் இல்லாது
உதித்து மறைகிறது
நகரத்தின்
சூரியனும் சந்திரனும்.
11 கருத்துகள்:
செய்வது அறியாது நிற்கிறேன் ... நகர வாழ்வில் ..
காலத்தின் திவலைகளை மிடறு மிடறாய் விழுங்கப் பழகிப்போகிறோம்.நரகத்தின் தலை எழுத்து நச்.அருமை ஜி.
ஆறு கவிதைகளும் அடடா மனதை நெகிழ வைத்தது.ஆழமான உங்கள் பார்வை வெகு சிறப்பு.
உங்கள் தலைநரகம் கவிதைகள் அத்தனையும் அருமை.குறிப்பாக விருந்துகளில் வெட்டப்படும் ஆட்டின் பரிதாபத்தைச் சொன்ன கவிதை மிக அருமை.எனக்கும் அதில் உடன்பாடு உண்டு.
தலைநகரம் அவலங்களின் புகலிடம்.மனதைப் பிசைகிறது இனம் புரியா துக்கம்.அபாரம் சுந்தர்ஜி சார்.
கட்டிட வெப்பம் உங்கள் மூச்சில் சுந்தர்ஜி.
நிராதரவின் அரவணைப்பு
......எட்டிச்சுவை
பார்ப்போர் இல்லா சூரியனும் சந்திரனும் அவலம் ..அப்படி விட்டுவிடுவோமா ஜி ?
உங்கள் கவிதைகள் தான்
பார்த்துக் கொண்டிருக்கிறதே
சூரியனையும்,சந்திரனையும்.
தலைநகர சுவர்களில் பொடிந்திருந்தது அரிய உருவகங்கள்.அஹிம்சை-அன்பை வலியுறுத்தின வலி சுமந்த வரிகள்.தொலைந்தது அறியாமல் தேடுவதும் இருப்பது புரியாமல் புகை சூழ்ந்த இடத்தில் தடுமாறுவதும் கொடுமையின் உச்சம்.காலத் திவலை அடர்த்தி.
நகரத்தில் நுழைகையில் நானும் உணரும் உணர்வு வேல்கண்ணன்.
நன்றி யாழி.
நெகிழ்ச்சியை நானும் பகிற்கிறேன் விநாயகமூர்த்தி.
நன்றி பாரதிக்குமார்.
துக்கமாய்த்தான் இருக்கிறது தியாகு.
ஆறாத ஆற்றாமை ஹேமா.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் பத்மா மட்டும் போதாதாம்.
கவிதைகளும் கதைகளும் மட்டும்தான் பார்க்கின்றன மது.
அடர்ந்த விமர்சனத்துக்கும் நன்றி தனம்.
சுந்தர்ஜி..
ஆடு பற்றிய கவிதை என்னுடைய கறிக்கோழியின்
இறகுகள் / கவிதையோடு பயணிக்கிறது. ஒவ்வொரு
முறை பயணத்தின்போதும் கறிக்கடைகள்தான் என்முன்னே
காட்சிப்படுகின்றன. மனம் குமைகிறது துயரத்தின் நெருக்கத்தில்.
கருத்துரையிடுக