26.9.10

சருகின் மொழி



படரக் கற்கிறேன் 
வீசியெறிந்த விதையிலிருந்து
மீளும் பாகற்கொடியின்
கைகளிலிருந்து -

ஒட்டியும் விலகியும்
இருக்கக் கற்கிறேன்
எப்போதும் உடன் இருந்தும்
வெளியே காத்து நிற்கும்
காலணியின் போதிப்பிலிருந்து  -

மீளக் கற்கிறேன்
ஏதோ எச்சத்தின் ஆழத்தில்
விழுது பரப்பிய மரத்தின்
நம்பிக்கையிலிருந்து -

நிரப்பக் கற்கிறேன்
கொள்வது எவ்வளவாயினும்
எத்தகையதாயினும்
நிரப்பும் நீரின்
தன்மையிலிருந்து -

பார்க்கக் கற்கிறேன்
இருள் அனைத்தும்
நிறங்கள் என்றறியும்
பார்வையற்றவனின்
கண்களிலிருந்து -

வாழக் கற்கிறேன்
மரணத்தை முதுகில் சுமந்து
நகரும் நத்தையின்
நிதானத்திலிருந்து -

மரிக்கக் கற்கிறேன்
உதிர்ந்த பின்னும் வழிகாட்டும்
சருகுகளின் மொழியிலிருந்து.

12 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

//நிறங்களெல்லாம்
இருளென்றறியும்
பார்வையற்றவனின்
கண்களிலிருந்து
வாழக் கற்கிறேன்.//
- என் அனுபவம் ஒன்றால் தூண்டப் பெற்று நான் இப்படி வாசித்துக் கொண்டேன். அர்த்தமுள்ள நம்பிக்கையான வரிகள் அத்தனையும். very fine.

இரசிகை சொன்னது…

nallaayirukku sundarji...

:)

செல்வராஜ் ஜெகதீசன் சொன்னது…

/இறக்கக் கற்கிறேன்
மரித்த பின்னும்
வழிகாட்டும்
சருகளின்
மொழியிலிருந்து./

Nice lines.

vasan சொன்னது…

//மரணத்தை
முதுகில் சுமந்து
நகரும் நத்தையின்
நிதானத்திலிருந்து.
இறக்கக் கற்கிறேன்//
பிற‌ப்பிலிருந்தே, 'வீடு' சும‌க்கும் நத்தை.
எந்த‌க் க‌விஞ‌னும் இப்ப‌டிச் சொன்ன‌தில்லை இற‌ப்பை.
அழகோவிய‌ம் சுந்த‌ர்ஜி.

Madumitha சொன்னது…

சூழல் கற்றுக் கொடுத்துக் கொண்டேதானிருக்கிறது.
கற்றுக் கொள்பவர்கள்தான் எண்ணிக்கையில் மிக
சொற்பமாக.

Harani சொன்னது…

அருமை சுந்தர்ஜி.

பத்மா சொன்னது…

எழுதக் கற்கிறேன்
வாசித்த பின்னும்
மனதில் எழுதிகொண்டிருக்கும்
இவ்வரிகளிளிருந்து

நிலா மகள் சொன்னது…

நிரப்பக் கற்றிருக்கிறீர்கள் ஜி...
கொள்பவர்கள்
கொள்ளளவுக்குத் தக...!!

paarkkadal sakthi சொன்னது…

கற்பித்தல் சுகம்; ஆனால் கற்றல் மகானுபவம் .
ஒவ்வொரு வரியும் நீட்சி பெற்றவை பாகல் கொடி போலவே ; தன்னுள் குமைந்து, கையாள்பவரின் பாங்குக்கு ஏற்ப

கமலேஷ் சொன்னது…

இந்த கவிதையில் நான் கற்க கற்கிறேன்.

ஹேமா சொன்னது…

இயற்கையும் சூழலும் கற்றுத்தரும் பாடங்கள் போலப் புத்தகப் பாடங்களில் இல்லையே !

சுந்தர்ஜி சொன்னது…

வாசிப்போருக்கு ஏற்ப ஒரு படைப்பு தன்னை உருமாற்றிக்கொள்கிறது.உங்கள் ரசனைக்கு நன்றி சைக்கிள்.

பாராட்டுக்கு நன்றி ரசிகை.

உங்கள் சிலாகிப்புக்கு நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

மனம் திறந்த பாராட்டில் பெருமை கொள்கிறேன் வாசன். நன்றி.

சிலராவது இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டித்தான் இருக்கிறது உங்களைப்போல மதுமிதா.

நன்றி ஹரணி.

ஓ!அப்படியா? தன்யனானேன் பத்மா.

மிகவும் சிரமப்பட்டு நிரப்புகிறேன் உங்களுக்கான கலனை நிலாமகள்.

முதல் வருகைக்கும் தரமான எதிர்காலத்துக்கு உத்திரவாதம் அளிக்கும் உங்கள் முதல்த்தரமான ரசனைக்கும் நன்றி பாற்கடல் சக்தி.

கமலேஷ்-உங்களிடம் நானும்.நேற்றைய கதாயுதம் உதாரணம்.

ஏட்டுச் சுரைக்காய் உங்கள் ஊரில் கிடையாதோ ஹேமா சமையலுக்கு?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...