14.9.10

ப்ரகாஷுக்கு ஓர் கடிதம்-II


பாண்டிச்சேரி
21.02.1989

ப்ரகாஷ்,

பாண்டிச்சேரியில் என் மாமா மிகவும் அவசரமாக புத்திசாலித்தனமான காரியம் ஒன்றைச் செய்துவிட்டார். ஆரோ ஆஷ்ரயா என்ற அரவிந்தர் ஆஸ்ரம நிர்வாகத்துக்குட்பட்ட தங்குமிடத்தின் வாடகை அறையைக் காலி செய்து விட்டார். கொஞ்சம் ஃப்ரென்ச், கொஞ்சம் மலையாளம், அதிகமாக வங்காளம் கலந்தெடுத்த தங்குமிடம் அது. பக்கத்தில் Good Food. கொஞ்சம் அதிகமாக உற்றுப் பார்த்தாலே நளினமும் இயல்பும் கெட்டுப் போய்விடுமோ என்று தோன்ற வைக்கிற இளம்பெண்கள்-சிற்ப ஓவியக்கூடங்கள்-ஆஸ்ரமம்-நூலகம்-பீச்.தனிமை.சந்தோஷம்.த்ருப்தி.இப்படிப் பல விஷயங்களைக் கொஞ்சமும் யோசிக்காமல் பிய்த்தெறிந்து விட்டார். நானும் அவருமாக அந்த ரூமை ஷேர் பண்ணிக்கொள்ளலாம் என நினைத்தேன்.வாடகை ரூ.250. மனுஷனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை.

அவருக்குக் காலையில் தினமலர்-தட்டு வழிய சோறு-பெரிய அகல நீளத்தோடு ஒரு குடும்பம் நடத்துகிறமாதிரியில் கக்கூஸ் ஒன்று- zig zag ஆன ரசனைத் தேர்வு. கேஸெட்டில் முதல் பாட்டு”என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்- வாணிஜெயராம்” அடுத்த பாட்டு”சிரித்துவாழ வேண்டும்,பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.ஜிக்குமங்கு ஜிக்குமங்கு செச்சப்பாப்பா-டி.எம்.எஸ்”.

லாபம் பற்றிய கனவுகளிலேயே கண்கள் இடுங்கிப்போய் விட்டன. வயசு 50. ஒரு முழு வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட பதட்டம் எதுவுமில்லாமல் “எம்.டி. இன்னிக்கும் லேட்” என்று பெருமையோ சிறுமையோ அடித்துக் கொண்டிருப்பார்.

அரை நாள்த் தங்கலில் நான் சம்பாதித்தது எட்டு மனங்களைத்தான். ப்ரமோத்/ஆல்ஃப்ரெட்/ஸ்ரீகுமார்/கேசவன்/அப்துல்லா என்று ஐந்து மலையாளிகள். இதில் ப்ரமோத்தும் ஆல்ஃப்ரெட்டும் ரொம்ப நெருங்கிவிட்டார்கள். ஓ.வி.விஜயன், பஷீர்,டிகேஎன், உரூப், ஜோஸெஃப் முண்டசேரி, மலையாற்றூர் ராமக்ருஷ்ணன், சச்சிதானந்தன் என்று அவர்களின் கதை, கவிதைகளைச் சொன்ன போது ரொம்பவும் சந்தோஷப் பட்டுப் போனார்கள். உங்களைப் பற்றியும் உங்கள் மலையாள இலக்கியப் பரிச்சயத்தைப் பற்றியும், உங்களால் நான் பெற்ற பல மலையாள எழுத்தாளர்களைப் பற்றியும் சொல்ல மிகவும் மகிழ்ந்தார்கள்.

அப்புறம் சோரொன் மோய் சென் என்ற வயதான வங்காளியிடம் சரத்பாபு முதல் சமரேஷ் பாசு, சந்தோஷ்குமார் கோஷ் வரை பேசினேன்.அவர் தமிழில் எழுதப் பழகிக் கொண்டிருக்கிறார். நான் வங்காளி கற்றுக் கொள்ள முயன்றதைச் சொல்லிச் சிரித்தேன். நொட்ராஜனைத் தெரியுமாம் அவருக்கு. நல்ல தமிழ் எழுத்தாளர் என்றார். ஒரு சுமாரான கல்லூரிப் பண்டிதர் அவர், எழுத்தாளர் இல்லை என்றேன். முகம் சுருங்கினார் சென்.

சைக்கிள் இன்று வரை வரவில்லை.இனிமேல் சைக்கிள் நல்ல துணை. ஒரு வாரம் ஆகும் ஒரு ரூம் அமைய. இப்போதைக்கு என் மாமாவின் நண்பர் அறையில் வாசம்.

நாளை பௌர்ணமி.கடற்கரையில் 12மணி வரையில் இருக்கலாம் என்று ஒரு உத்தேசம். மாலதியைப் பார்க்கவில்லை. தற்போது நேரமில்லை.

சுந்தர்ஜி.

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ம்ம்ம்...கடிதத்தை நானும் வாசித்தேன் !

ரிஷபன் சொன்னது…

ஆஷோன்..
கடிதமாய் இல்லை. அதாவது வழக்கமான கடிதமாய் இராமல் எனக்குப் பிடித்த மாதிரி..

சுந்தர்ஜி சொன்னது…

வாசிப்புக்கு நன்றி ஹேமா. அதென்ன ம்ம்ம்...புரியலீங்க.

உங்களுக்குப் பிடித்த கடிதத்தை ப்ரகாஷுக்கு 21 வருஷங்களுக்கு முன்லேயே எழுதிவிட்டேன் என்று சந்தோஷமாய் இருக்கிறது ரிஷபன்.

ச்ந்தானகிருஷ்ணன் சொன்னது…

தமிழ் பல்கலைக் கழகத்திற்கு
நீங்கள்,பிரகாஷ் எல்லாரும்
வங்காளி கற்றுக் கொள்ள
போனது எனக்கும் ஞாபகமிருக்கிறது
சுந்த்ர்ஜி.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...கடிதத்தை வாசிக்கும்போது இன்னொருவர் கடிதத்தை வாசிப்பதாய் உணர்ந்தேன்.
ம்ம்ம்...அதுவும் ஒரு காரணம் !

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மதுமிதா நினைவு பகிரலுக்கு.

ம்ம்ம்...இப்பப் புரிஞ்சுடுச்சு ஹேமா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...