24.9.10

அர்த்தநாரியின் கனா



ஒரு விருந்துக்காகத்
தயாராகிக் கொண்டிருக்கிறது
சமையலறை.

உப்பின் அளவு குறித்தும்-
காரம் மற்றும் வேகும்தன்மை
குறித்தும்-
அரைத்து விட இருக்கிற
மசாலாவின் கலவை குறித்தும்
சந்தேகங்கள் தீர்க்கப்படுகின்றன.

இலைகள் நறுக்கப்பட்டதும்
தாம்பூலத் தாம்பாளங்கள்
தயாரானதும்

மாக்கோலங்களில்
செம்மண் இடுகையும்
நீர்த்தொட்டி நிரம்பியதும்
உறுதிசெய்யப் படுகின்றன.

தாளிப்பு முடிந்து
ருசி கூட்டலும் குறைத்தலும்
முடிவடைகின்றன.

சாதமும் வடிக்கப்பட்டு
ஜமக்காளங்கள் விரிக்கப்பட்டு
மாவிலைத் தோரணங்களுடன்
வாயில் அலங்கரிக்கப்படுகையில்

அறுந்து விழுகிறது
அர்த்தநாரியின் கனவு.

16 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

வலி.

vasan சொன்னது…

ஒரு ப‌சி அறிந்தும், உறுப‌சி அறியா ஒற்றைய‌ர்க‌ள் ப‌ற்றி!!

நிலா மகள் சொன்னது…

விழித்திருக்கும் நேரமெல்லாம் சமையலறையில் உழன்று கிடக்கும் எம் போன்ற பெண் கனவோ...
கனவாயிருப்பினும் கவிதை நிஜமாய் அருமை ஜி!

பத்மா சொன்னது…

ஐந்தாவது முறையாக வந்து வாசிக்கிறேன் சுந்தர்ஜி ..

அர்த்தநாரி யார் என்ற கேள்வியுடன்.

நிலாமகள் கூறுவதும் ஒரு கோணம் ..

பச்சாதாபத்தோடு நிற்கவே விழைகிறது மனம் ..

சுயரூபம் ஸ்வரூபம்

சுந்தர்ஜி சொன்னது…

வலி பகிர்ந்தமைக்கு நன்றி சைக்கிள்.

தீராது ஒரு பசியும் உறுபசியும் வாசன் இந்த அர்த்தநாரிக்கு.

நான் குறித்தது இருபாலும் இழந்த இருபாலர்களின் கனவு பற்றி நிலாமகள்.

அர்த்தநாரி பாலற்றவன்.அவனின் வேதனைதான் இந்தக் கனவும் கவிதையும்.பச்சாதாபம் கொள்ளும் மனதுக்கு நன்றி பத்மா.

ரிஷபன் சொன்னது…

கவிதைக்கான பாடுபொருள் உங்களுக்கு சிரமமே இல்லை.. நேற்றைய தினம் விண் பிளந்து கொட்டிய மழை போல.. எனக்கான ஆச்சர்யம்.. வார்த்தைகளின் சரம்.. தேர்ந்த தொடுப்பு.

ஹேமா சொன்னது…

தயாரித்தபின்னும் சாப்பிடாமலே கனவு கலைகிறது சிலரது வாழ்வு போல !

நிலா மகள் சொன்னது…

மன்னிக்கவும்... அர்த்தநாரி என்ற சொல்லை அர்த்தப் படுத்திக் கொள்ளாமல் வாசித்து விட்டேன் கவிதையை. உங்க விளக்கத்துடன் மறு வாசிப்பு செய்தவுடன் பஞ்சாமிர்தத்தில் கிடக்கும் கல்கண்டின் செறிவு ஊட்டப்பட்ட சுவையாய் ஜிவ்'வென்று உயர்கிறது கவிதை அழகு.

நிலா மகள் சொன்னது…

நேர்மறையான முகம் நிறைக்கும் புன்னகை ... சிறப்பைக் கூட்டும் சுயருபம்.

Matangi Mawley சொன்னது…

such a sad plight! there s nowhere to go! i cannot even imagine the mental state involved here!

kudos! your pen creates wonders!

Madumitha சொன்னது…

திருமண விருந்து
என்று அர்த்தப் படுத்திக்
கொண்டால்
கனம் அதிகரிக்கிறது.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
-ரிஷபன்.
-ஹேமா.
-நிலாமகள்.
-மாதங்கி.
-மதுமிதா.25 வருடங்களாக என் நினைப்பிற்கு வெகு நெருக்கமாக இருக்கிறது உங்கள் ரசனையும்.ஒரு நிகழவே முடியாத திருமண விருந்தொன்றின் அரவாணியின் கனவுதான் அது.

Vel Kannan சொன்னது…

கவிதை ஏற்படுத்தம் பூடாகமான காட்சியும் விளக்க முடியாத வலியும் நெஞ்சை அடைக்கிறது ஜி.

இரசிகை சொன்னது…

:(

Harani சொன்னது…

சுந்தர்ஜி..
நேற்று இதற்கு கருத்துரை எழுதினேன். பதிவாகவில்லைபோலும். எனவே இன்று. முப்பது வருடங்களுக்கு முன் இருபது ஆண்டுகளாக அடுக்களைக்குள் ஓடிய என் சகோதரி களைத்து நிமிர்ந்த தருணம் அவளின் தாலியறுந்துபோனது.
ஒவ்வொரு விருந்திலும் எனக்கு அது உறுத்துகிறது.
உங்கள் கவிதை மனசை வலிக்கச் செய்கிறது. உங்கள் கவிதைகள் பகுதியில் எல்லாக் கவிதைகளையும் இதுவரை தேர்வுக்கு மனப்பாடம் செய்யும் மாணவனைப் போல படித்துக் கொண்டிருக்கிறேன். இது அத்தனையையும் சுந்தர்ஜி இதழுக்குக் கொண்டுவந்து சேருங்கள். அதற்காக என்னுடைய ஒரு நீண்ட மடல் காத்துக்
கொண்டிருக்கிறது எனது மன தவிப்புகளுடன். இப்போதுதான் நிரம்பவும் திருப்தியாக இருக்கிறேன். மனசு நிறைவாக உணர்கிறேன். உன் மனசிற்கும் அதனைக் கவிதையாக எழுதும் விரல்களுக்கும் என்னுடைய முத்தங்கள் கோடி...

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வேல்கண்ணன்.உங்களின் கவிதைகளைப் போல.

வருத்தம் பகிர்ந்தமைக்கு நன்றி ரசிகை.

ஹரணி.உன் மனதைத் திறந்துகொட்டிவிட்டாய்.உன் நட்பும் அதன் மேன்மையும் உன் எழுத்தின் வசீகரமும் நானறிவேன்.உன் போல எழுதுவோரும் சிந்திப்போரும் குறுகிப்போனதை நானறிவேன்.

சுந்தர்ஜி இதழ் 45 பக்கத்தை முடித்துவிட்டு நேரம் கிடைக்காமல் அல்லாடுகிறேன்.வலைப்பூவைப் போலல்ல அதன் உரு.முயற்சிக்கிறேன். எனினும் உன் கடிதம் காண விழைகிறேன் ஹரணி.வீட்டில் அனைவருக்கும் என் அன்பு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...