23.3.10

அஸ்தமனம்


கொல்கத்தாவின் புராதனமான தெருக்களின் வாசனையைச் சுவாசித்தபடி நின்றிருந்தேன்.

இரவு ஒன்பது ஆகிறது. பத்து மணிக்கு ஒரு சவாரி காத்திருக்கிறது. அதற்குள் ஏதாவது சாப்பிட்டு விடலாமா? ரெண்டு பரோட்டாக்களைச் சாப்பிட்டுவிட்டு சூடாக ஒரு தேநீர் பருகினேன். இனிமேல் இரவுச் சவாரிகளைத் தவிர்த்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

ஊருக்கு வெளியே அந்த அபார்ட்மென்ட். நெருங்க நெருங்க அந்த அடுக்கு வீடுகளின் அமைப்பே அலாதியாக இருந்தது. அநேகமான வீடுகளில் விடுமுறைக்காக வெளியூருக்குச் சென்றுவிட்டது தெரிந்தது.

வெளிச்சம் அதிகமில்லை. போக வேண்டிய வீட்டிலிருந்து மெல்லிய வெளிச்சம் கசிந்து வந்தது. மனது சஞ்சலமாக இருந்தது. வராமல் இருந்திருக்கலாமோ?

இரவுச் சவாரிகளை நான் தேர்ந்தெடுப்பதே இரவுகளின் மேல் எனக்கிருந்த காதலினால்தான். இரைச்சல் குறைந்த தெருக்களில் இசையின் துணையோடு வண்டி ஓட்டுவது என் பொழுதுபோக்கு. ஆனால் இந்த சவாரி அமானுஷ்யமாக மனதுக்குப் பட்டது. இறங்கிச் சென்று மெல்ல அழைப்பு மணியை இசைத்தேன். உற்றுப்பார்த்தபோது கதவு தாளிடப்படாதது தெரிந்தது. மெல்லத் தள்ளினேன். அறையின் நடுவே நாற்காலியில் எண்பது மதிப்புள்ள ஒரு மூதாட்டி.

"உள்ள வாப்பா" என்றார்.

அறையின் அமைப்பும் ஒழுங்கும் ஆச்சர்யமாக இருந்தன. சுவர்களில் படமோ,கண்ணாடியோ இல்லை.காலி செய்த வெற்றுத் தோற்றம். மின் விசிறிகளில் தூசி படிந்திருந்தது.அந்தப் பெண்ணின் அருகில் ஒரு சிறிய பெட்டி.ஒரு கையில் சில புகைப்பட ஆல்பங்கள்-காகிதங்கள் .வேறெதுவுமில்லை.

"போகலாமா அம்மா?" என்று கேட்டபடியே பெட்டியை எடுத்துக் கொண்டு வண்டிக்குச் சென்றேன். திரும்பி வந்து பார்க்கையில் மூதாட்டி உட்கார்ந்தபடியே கையை நீட்டினார்.கைகளைப் பற்றிக் கொண்டு நடந்து வண்டியில் அமர்த்தினேன்.

வண்டியை ஓட்டியபடியே கண்ணாடியில் பார்த்துக் கேட்டேன்."எங்கம்மா போகணும்?"

போகும் இடமும் செல்ல வேண்டிய வழியையும் சொன்னார். மீட்டரைப் போட்டேன். "அந்த வழில போனா சுத்தும்மா" என்றேன்."பரவாயில்லப்பா " என்றபடி யோசனையில் ஆழ்ந்தார்.சுருக்கம் நிறைந்த நெற்றியில் அளவான பொட்டு. காதுகளில் வைரத்தோடு பளபளத்தது.மிகச் சிறிய கண்கள்.கண்ணாடிக்குள் கண்களை மூடியபடியே சாய்ந்திருந்தார்.

"இங்க கொஞ்சம் நிறுத்தப்பா" என்றார் ஒரு பெரிய கட்டிடத்தின் அருகே.பழைய காலக் கட்டிடம்.இருளின் போர்வையில் வண்டியை நிறுத்தினேன்.ஜன்னலின் வழியே அந்தக் கட்டிடத்தை உற்றுப் பார்த்தபடி இருந்தார்."இந்த இடத்தில் சமையல் காரியாக பத்து வருஷங்கள் வேலை செய்திருக்கிறேன்"என்றார் பெருமூச்சுடன்.அந்தப் பெண்மணி சமைத்த பருப்பு மணக்கும் சாம்பார், தாளிப்பின் வாசனை எல்லாம் காற்றோடு கலந்து காலத்தோடு உறைந்து போய்விட்டது.வாழ்வின் இறுதி நோக்கி நழுவிய பாதையின் ஓரத்தில் நின்று அந்த அம்மா கையசைத்தது போலத் தோன்றியது. அத்தனை நேரம் என்ன யோசித்திருப்பாளோ? தெரியவில்லை."சரி.போகலாம்பா" என்றார்.

ரவிஷங்கரின் சித்தாரும் இருளும் இசைவாக வழிந்து பெருகியது.மனது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.சித்தாரின் தந்திகளில் கை விரல்கள் ஏறி இறங்கி ஆன்மாவை ஊடுருவிச் சென்றது இசை. நான் இருளின் வெளியில் கரைந்து போகத் தொடங்கி இருந்தேன்.

"நான் ரொம்ப நாள் இருக்கமாட்டேன். டாக்டரும் அப்படித்தான் சொல்றாரு.கடைசியா எல்லாத்தையும் ஒரு தடவை பாத்திட ஆசையா இருக்கு".இருளை வெறித்தபடி வார்த்தைகளைச் சிந்தினார்.கண்ணாடி வழியே உற்றுப்பார்த்தேன்.கண்களின் ஓரத்தில் நீர் கசிந்து உருண்டது.சாலையை விழுங்கியபடிக் கார் ஓடிக்கொண்டிருந்தது.

"இங்க கொஞ்சம் நிறுத்துப்பா". நிறுத்தினேன்.

அது ஒரு நடன அரங்கம்.புதுப்பிக்கப்படாமல் சிதிலமாகி இருந்தது. வெளிறிப் போன பூச்சு.சீருடை கிழிந்து போயிருந்த ஒரு காவலாளி சுவரில் சாய்ந்து தூங்கியபடி இருந்தான்.பிரபலமான அந்தக்கால நாட்டியக்காரிகளின் கால்கள் பட்ட இடம்.நானே நான்கைந்து முறை வந்ததுண்டு.ஏக்கத்துடன் "நான் நிறைய நடனமாடிய இடம் இதுதாம்பா"என்றார்.அவரின் சதங்கைகளின் ஒலி அவரின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது தெரிந்தது.எனக்குத்தான் அவரை அடையாளம் தெரியவில்லை.எத்தனை ஒப்பனைகள் சுமந்த முகம்?இன்று அடையாளம் இழந்து இருளின் ஆழத்தில் அசைகிறது.கைத்தட்டல்களின் அதிர்வுகளில் ஆடிய கால்கள்.மனது கனத்தது.

சித்தார் முடிந்து முகேஷ் "கபீ கபீ மேரே தில் மே"பாடிக் கொண்டிருந்தான்.

வண்டி ஓடிக்கொண்டிருந்தது.அந்த அம்மா தனக்குத்தானே பேசியபடி வந்தார்."எது உச்சமோ அதுதான் வீழ்ச்சி.எது துவக்கமோ அதுதான் முடிவு". எனக்கு லேசாகப் புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது.நாய்கள் ஒன்றை ஒன்று முகர்ந்து கொண்டே தலையை ஆட்டியபடியே ஓடிக்கொண்டிருந்தன.அவற்றின் வாழ்க்கையில் எது உச்சம் எது வீழ்ச்சி? தெரியவில்லை.

"இந்த வீடுதாம்பா கல்யாணம் முடிஞ்சு நான் மொதல்ல குடி புகுந்தது".நிறுத்தினேன்.

அசையாமல் நின்றிருந்த அந்த நான்கு சுவர்களுக்கும் அந்த அம்மாவை நிச்சயம் தெரிந்திருக்கும்.தெருக்களில் யாருமில்லை.

"கொஞ்சம் இறக்கிவிடப்பா ப்ளீஸ்" என்றார்.

அந்த வீட்டின் சுவர்களை முகர்ந்து தடவிப்பார்த்தார்.கதவுகளின் கிராதிகளில் கன்னத்தைப் பதித்துக் கைகளால் பிடித்துக் கொண்டார்.படிகளில் மெதுவாய்ச் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.அவர் மிகவும் நேசித்த வீடாக இது இருந்திருக்கவேண்டும்.ஒருவேளை அவரின் கணவரோடு இந்தப் படிகளில் அமர்ந்திருந்த தருணங்களோ-மகனைக் கொஞ்சிய மாலைகளோ கண் முன்னே விரிந்திருக்கக் கூடும்.படிகளைத் தட்டிப் பார்த்தார். என்னிடம் ஏதோ சொல்ல முற்பட்டார்.அவரால் பேச முடியவில்லை.சைகையால் "எல்லாம் போயிடுச்சு"என்பது போல அபிநயித்தார்.அவரின் தலையை வருடிக் கொடுத்தேன். காரிலிருந்து சிறிது தண்ணீரை எடுத்து குடிக்கக் கொடுத்தேன்.என் கண்களும்-மனதும் இளகிக் கரைந்தது.

வண்டி சென்றபடி இருந்தது."எனக்கு இப்ப யாரும் இல்ல.எத்தனை நாள் இன்னும் பாக்கி இருக்கோ தெரியல்ல". என்ன பேசுவது என்று தெரியாமல் இசையை நிறுத்தி விட்டு மௌனத்தைப் பரவ விட்டேன்."என்னால தாங்க முடியல்ல.நேரே போப்பா.பாத்ததெல்லாம் போதும்" என்றார்.

காக்கைகள் மெல்லக் கரகரத்தன.என்னென்னெவோ நினைவுகள்.மெதுவே முகவரியின் வாயிலில் நிறுத்தினேன். பார்ப்பதற்கு முதியோர் காப்பகம் போலத் தெரிந்தது.உள்ளே சென்று தகவல் தெரிவித்தேன். இருவர் வெளியில் வந்து அவரிடம் இருந்து ஒரு சீட்டைப் பெற்று சரிபார்த்தபடி இறக்கிச் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றனர்.அவரின் பெட்டியை எடுத்துச் சென்றேன்.

"உன்ன ரொம்பத் தொந்தரவு பண்ணிட்டேம்ப்பா.ரொம்ப நன்றி.எவ்வளவு ஆச்சு?
"பரவாயில்ல அம்மா.வேணாம்.மறுபடி வாய்ப்பிருந்தா சந்திக்கலாம்மா"
"ஒனக்கு புள்ள குட்டிங்கல்லாம் இல்லியா?இந்தா வாங்கிக்கப்பா"
"மத்த சவாரில பாத்துக்கறேன். வரேம்மா" என்று கையெடுத்து வணங்கிவிட்டுக் கிளம்பினேன்.

வண்டி ஓடிக்கொண்டிருந்தது.நகரத்தின் இயக்கம் ஆரம்பிக்க இருந்தது. வீட்டை அடைந்தேன்.அன்றைக்கு வேறு சவாரி எதுவும் போகவில்லை.

16.3.10

பரிணாமம்
வயதானவர்களே பென்ஷன் தாரர்களே
பெற்ற பிள்ளைகளால் கணவன் மனைவியால்
கைவிடப்பட்டவர்களே அழைக்கிறோம் வாருங்கள்.

இருபத்திநாலு மணி நேரமும்
தூங்க விடாமல் ரூம் சர்வீஸ்
அவசர உதவிக்கு கத்துக்குட்டி மருத்துவ வசதி
எரிச்சல் மிக்க ஹோம் நர்ஸ் வசதி
அவசரத் தேவைக்கு ஷாப்பிங் செய்ய
வேகமாக ஓட்டும் ஓட்டுனருடன் வாகன வசதி

ஜன்னல்கள் இல்லாத காற்றோட்டம் மிகுந்த
சிங்கிள் ரூம் டபுள் ரூம் ஏ/-சி யுடன்
(பாத் ரூம் இணைக்கப்பட்டது)
எல்லா நேரமும் எல்லா சேனல்களும்
(வண்ண ரிமோட்டும் கண்ணாடியும் இலவசம்)

சுத்திகரிக்கப்பட்ட உப்புச் சுவையுடன் குடிநீர் சுடுநீர்
அனுபவமுள்ள மோசமான சமையல்காரர்கள்
வாயில் வைக்கமுடியாத அன்லிமிடெட் சைவ உணவு
பார்வையாளருக்கு வாரம் ஒருமுறை இலவச உணவு

ஹோம் அமைந்துள்ள இடம்:
உங்கள் வீட்டிலிருந்து எட்ட முடியாத மிக அருகில்
மரங்களே இல்லாத செயற்கையான சூழலில்.

குறிப்பு:
ஏன் பிறந்தோம் என்று புலம்ப தனி ஹால் வசதி-
செய்த தவறுகளை நினைத்துக் கதற தனி அறை வசதி-
வயது வாரியாக அனுபவங்களை அசைபோட புதிய லாய வசதி-

மிகக் குறைந்த கட்டணம். மிகக் குறைவான இடங்களே உள்ளன.
சேர்க்கைக்கு உடனே அணுகவும்.
கையில் பணம் இருக்கும் வரை சிறப்பான சேவை.

15.3.10

வசம்படிப்பு இலவசம். அரிசி இலவசம். சீருடை இலவசம்.
சைக்கிள் இலவசம். செருப்பு இலவசம்.
பால்-முட்டை இலவசம். பிஸ்கட் இலவசம்.
கொடி பிடித்தது கோஷம் போட்டது
வகைக்கு பிரியாணி இலவசம்.சாராயம் இலவசம்.
நீயாரென்றே தெரியாத போதை இலவசம்.
தொலைக்காட்சிப் பெட்டியும் அது
தரும் சொரணையற்ற கிளுகிளுப்பும் இலவசம்.
ஆடு இலவசம். மாடு இலவசம். கணினி இலவசம்.
மிக்ஸி இலவசம். தரிசு நிலம் ஆளுக்குப் பத்து ஏக்கர் இலவசம்.
எருமை இலவசம். அதுபோடும் சாணி இலவசம்.
மழைக்கு இலவசம். வெயிலுக்கு இலவசம்.
ஓட்டுப் போட இலவசம்.மருத்துவம் இலவசம். சாவும் இலவசம்.
ஆட்சிக்கு வந்துவிட்டால் கஜானா மட்டும் என் வசம்.அ-கவிதைஉன் சுயபுலம்பலைச் சொல்ல எழுதாதே கவிதை.

கோபம் அதிகமெனில் தோப்பில்
தனியே நின்று உரக்கக் கத்து.

சோகம் தாளவில்லை எனில்
துவைகல்லில் அமர்ந்து பாரம் கரைய அழு.

என்ன பசி என்றாலும் இரை தேடப் பழகு.

காதலிக்க வாய்த்தால் காதலி.
காதலில் தோற்றால் தாடி வளர்த்து
புல்புல்தாரா வாசி.

என்னதான் ஆனாலும்
தயவு செய்து கவிதை மட்டும் எழுதாதே
கொஞ்ச காலத்துக்கு.

கவனிபெர்த் சர்டிபிகேட் ரெடியா?
கொஞ்சம் செலவாகும் சார்.
ஸ்கூல் அட்மிஷன் வேணும்-
பாத்துப் பண்ணுங்க சார்.
புதுப் படத்துக்கு டிக்கெட்?
ப்ளாக்லதான் கிடைக்கும்.
ஆட்டோக்கு எவ்வளவு ஆச்சு?
மீட்டருக்கு மேல போட்டுக்குடு சார்.
ஹவுசிங் பிளான் அப்ரூவ் பண்ணியாச்சா?
சாருக்குக் கொஞ்சம் வெட்டுங்க.
ஈ.பி. அப்ரூவல் வேணும்-
சாரத் தனியாப் பாருங்க.
எம்.எல்.ஏ. டிக்கெட் வேணும் மேடம்?
எவ்வளவு தருவே?
டிரைவிங் லைசென்ஸ் எங்கடா?
நூறு ரூவா எடு.
ரேஷன்ல இலவசமா?
எனக்கும் கொஞ்சம் வெட்டு.
மழைக்கு நிவாரணமா?
பாதி தா.
தொழில் தொடங்கக் கடன் வேணும்-
எனக்கு என்ன தருவே?
ரோடு போடணும்.
டெண்டருக்கு ஐயாவைக் கவனிங்க.
டாக்டர் சீட்டா?
எத்தனை லட்சம் வெச்சுருக்கே?
எங்கப்பாக்கு டெத் சர்டிபிகேட் கொடுப்பா.
கைல கவனி சார். கொடுத்டலாம்.

13.3.10

நதி-இலை


சுழித்தோடும்
மஹாநதி
வெள்ளம் நான்.
என்னில் மிதக்கும்
அறியாச் சிற்றிலை
நீ.
யுக யுகமாய்
என் பயணம்.
நாளையின் நிழல் கூட
இல்லை உன் வசம்.
தத்தளிக்கும்
சிறு எறும்பைக்
கரையேற்று
இயலுமெனில்.

ப்ரளயன்


இல்லாத உன் இருப்பை
உலுக்கிச் செல்கின்றன
என் அதிர்வுகள்.

மண்ணுகடியில் புதைந்தது
கைப்பற்றியிருந்த
உன் நம்பிக்கை.

நினைத்தபடி வளைக்கவும்
சொன்னபடி ஆடவும்
போகிற போக்கில்
கிள்ளிச் செல்லவும்
புல்நுனி அல்ல-

ப்ரளயன் நான்.

சாகசக்காரன்


இல்லாத பக்கங்கள்
ஒவ்வொன்றாய்த்
திறந்து
சரித்திரத்தின்
தடயங்களை
அரிக்கின்றன கரையானாய்-
செத்த பின் பிறக்கும்
செய்யாத சாகசங்கள்.

12.3.10

மாயை
கண்ணாடியில்
எழுத்தாய் உறவு.
பாலில் நெய்யாய்க்
காதல்.
உருகிய மெழுகாய்ப்படரும்
பந்தம்.
நீரில் எழுத்தாய்க்
கனவு.
மேகங்களின்
உருமாற்றமாய் வாழ்வு.
எதுபோலவும் இல்லாது
இளமையாய் மரணம்.

பிம்பம்
உன் மொழி
முறுக்கேற்றப்பட்ட வில்.
குரல்
ஓடும் நதியின் சலசலப்பு.
உறுதி
பாலையைக் கடக்கும்
ஒட்டகக் குளம்பு.
உன் பார்வை
வேப்ப நிழல்.
என் ஏமாற்றம்
வெற்றுத் திரையின்
நிசப்தம்.

11.3.10

யுவா-5


I
கடற்கரை
பலூன்களில்
ஒளிந்திருக்கிறது
குழந்தைகளின் கனவு.
மறுக்கப் பட்டவைகளில்
விற்பவனின்
உயிர்மூச்சு.
II
கரையில்
கடலை விற்கிறான்.
அலைகளை மீறிய
இரைச்சலைப்
பகிர்ந்த பின்
மீதமானது
தாளும் கடலைத்தோலும்.
III
பாசி படிந்த
நினைவுகளில்
மறதியின் கனத்துடன்
தேடிக் கொண்டிருக்கிறேன்
கோபத்துடன் விட்டுச்சென்ற
மகனின்
எப்போதோ சிரித்த முகத்தை.

நீர்க்குமிழி


முக்காலி விளிம்பைத்
தொங்கும் கால்களால்
உதைக்க எத்தனித்த
நொடியில்
துவங்கியது
மகத்தான இசை.
தொங்கும் விசிறிக்கும்
துவங்கிய இசைக்கும்
இடையில் பிறந்தேன்
மறுபடியும்.

ஹே ராம்


யார் தும்மினாலும்
தீர்க்காயுசு.
தடுக்கி விழ நேர்ந்தால்
ஹே ராம்.
கிண்டலுக்கு ஆளானால்
ராமனே ராமனே.
இயலாது
உடல் நோகும்போது
ராமா எனும் அரற்றல்.
ஆபத்து
யார் தலைக்கு வந்தும்
தலைப்பாகையோடு போனால்
ராம் ராம் என்ற நிம்மதி
நீள் மூச்சு.
உன்னை ராமனுக்குத்
தெரியுமோ தெரியாதோ
உன் போல ராமனை
யாருக்கும் தெரியாது.

ஒப்பனைஇருப்பதில் ஒப்பற்ற ஆடை.
வெட்கம் பூசிய ஒப்பனை.
பரபரக்கும் ஆர்வம்.
மொடமொடக்கும்
தடுக்கும் மொழி.
பரவசம் தளும்பும் வசீகரம்.
காற்றில் கரையும் சுகந்தம்.
நன்றாகத்தான் இருக்கிறது
ஒரு நிகழ்வுக்கு முந்தைய உன் பரபரப்பு
மழைக்கு முந்தைய பத்து நிமிஷம் போல.

II
ஒப்பனை என்பது ஒரு பாவனை
என்றுணர்.
ஒப்பனை நிலையற்றது.
மேலும் ஒப்பனையை
மெருகேற்ற முடியும்.
கலைத்தல் உருவாக்குதலை
விட மிக எளிது.
உனக்கான ஒப்பனையும்
பிறருக்கான ஒப்பனையும்
வேறு வேறு எனும்போது
ஒப்பனை ஒரு பாவனை
என்றுணர்.

நீயும் நானும்


I
அந்த
வெற்றுத்தாளில்
புதைந்திருக்கிறது
உன் செருக்கு.
தடயங்களை
அழிக்கக்காத்திருக்கிறது
காலம்.
உன் செல்வாக்கு
கைகளில் அள்ளிய நீர்.
உன் அரசியல்
காற்றோடுபோன
கோலத்தின் புள்ளி.

II
அந்த
வெற்றுத்தாளில்
புதைந்திருக்கிறது
என் மௌனம்.
தடயங்கள் அற்ற
சுவடுகள் பதித்து
என் பயணம்.
என் செல்வாக்கு
காலத்தின் ஆயுள்ரேகை.
என் அரசியல்
காற்றையும் கடந்த
மனோரஞ்சிதம்.

10.3.10

பளுமுறிந்த சிறகுகளில்
கனக்கிறது தொலைவின் பளு.
விட்டுவந்த முட்டைகளில்
குஞ்சுகளின் மருளும் விழி.
விடைபெறுகிறது
இனி ஒருபோதும் கிடைக்காத
பறவை உயிர்.

பேதம்


நெருங்கி விட்டதாய்
நினைக்கிறாய் நீ.
உன் பயணமே
துவக்கம் கொள்ளவில்லை
என்கிறது என் மனம்.

வண்ணங்களை விரும்புகிறேன்
என்கிறாய்.
நிறங்களை விட்டுவிடு
முதலில் மனங்களை
நேசி என்கிறேன்.

இசையால் கரைகிறேன்
எனச் சொல்கிறது
உன் வார்த்தைகள்.
உன் செல்ல மகளின்
பள்ளிப் பிரதாபத்தை
ஒருமுறையேனும்
கேளேன் எனக் கசிகிறது
என் விழிகள்.

மழையை
மிக நேசிக்கிறேன் என்கிறாய்.
உன் குடையை மடக்கி
மழையில் நனை
மழையை உணர் என்கிறேன்.

நெருங்கிவிட்டதாய்
நினைக்கிறாய்.
புன்னகைக்கிறேன் நான்.

9.3.10

தளம்


குனிவதையும்
நிமிர்வதையும்
தீர்மானிக்கிறது
இருக்கும் இடம்.
கடந்து செல்வதையும்
தடைப் பட்டதையும்
கவனிக்கிறது தொலைவு.
இருப்பதையும்
இல்லாததையும்
எடையிடுகிறது காலம்.

8.3.10

துயரப்பூ

இருப்புப் பாதையின்
நடுவே திறந்தது
மரணத்தின் கதவு.
சரளை இடுக்குகளில்
மலர்கிறது
குருதியின் அரளி.
விரித்துப் பறக்கிறது
வாழ்வின் சிறகு
பரிதவிப்பின்
அவலத்தை உதிர்த்தபடியே.

6.3.10

யுவா-1


I
ஏணியில்
ஏறி நிற்கிறேன்
மறதியின் சுமையோடு.
II
குழந்தைகளின் சகவாசம்.
இயற்கையின் மடி.
சங்கீதம்.
வேறெதுவுமில்லை.
III
மூடியிருந்த கதவுகள்
திறந்திருக்கின்றன.
உள்ளே எதுவுமில்லை.
IV
நீரின் தாகம்.
காற்றின் புழுக்கம்.
இசையின் மௌனம்.
என்ன செய்யலாம் சொல்?
V
காத்திருந்தேன்.
கடல் தந்தது
அலையும்
ஒற்றைச் செருப்பும்.
VI
செடிக்கும் வாய்க்கவில்லை.
கூந்தலிலும் நிற்கவில்லை.
ரோஜா.
VII
ஓங்கிய கோடரிக்கு
வீழ்ந்தது மரம்.
பறந்தது மரங்கொத்தி.
VIII
முடவன் செதுக்கிய சிற்பம்
காத்து நின்றது
குருடனின் பார்வைக்கு.

5.3.10

விதைச் சொல்


காற்றோடு கலந்தது
சேமித்த நற்பெயரின்
விதை.
வீதியெங்கும்
துளைக்கிறது
அவதூறுகளின்
விஷநுனி.
அலையாய் அரிக்கிறது
காலடி மண்ணையும்
காலம்.
சகிக்க முடியாதது
செத்த பின்னும்
நான் தினமும்
வாழ்வது.

பரிமாற்றம்


தேர்ச் சக்கரங்களின்
சோம்பலைப் பூசித்
தயாராகிறேன்.
யூகங்களில் மெருகேறுகிறது
குமட்டும் என்
குருட்டு ஒப்பனை.
பரிமாற எதுவுமற்றுக்
கரும் பூனை உறங்குவதாய்ப்
புழக்கமற்ற மேடை.
எப்போதும் போலத்
தொடங்காத விருந்தைப்
பொய் போர்த்தி மூடுகிறது
வியாதி ஒன்றின்
பெயர் சொல்லி.

4.3.10

மீனின் கண்


கரையில் ஒதுங்கிய
மீனின் கண்களில்
உறைந்திருந்தது
புயலின் கோரம்.
உடைந்த படகுகள்-
அறுந்த வலைகளின் பாடு
அப்பாவின் அடிக்குத் தப்பிய
இளைய மகன் போல.
நாளை முழு நிலவின்
களிம்பு தடவப் பட்டபின்
அதனதன் நிலைக்குத்
திரும்பும் கடலருகில்
எல்லாமும்.

சாம்பல் பூ


சாம்பல் பூக்கத்
தொடங்கி விட்டது
உன் நினைவுகள் மீது.
ஆனாலும்
என்றோ
பதிவு செய்யப்பட்ட
உன் குரலும்-
தாளில் மங்கிய
உன் மொழியும்
முளைக்கச் செய்கிறது
கண்ணீரை.

3.3.10

பகல் காட்சி
தெருவெங்கும்
பொங்கி வழிகிறது நிசப்தம்.

வெயிலில் காய்ந்தபடி இருக்கின்றன
ஆளற்ற வாகனங்கள்.
உண்ண எதுவுமின்றிப்
பால் உறைகளைக்
கடித்துக் குதறுகின்றன நாய்கள்.

வியர்வை வண்ணச்
சீருடைப் பணியாளர்கள்
காலி சிலிண்டர்களை உருட்டத்
தூக்கம் கலைகிறார்கள்
வயோதிக அன்பர்கள்.

இளைஞர்களும் இளைஞிகளும்
அயல்நாட்டுத் தெருக்களில்
கனவுகளைத் தேடியபடியிருக்க
பீதி நிறைந்த கண்களுடன்
இருமுகிறார்கள் பெற்றோர்கள்.

அனைத்து வீட்டின் கதவுகளும்
அறைந்து சாத்தப் பட்டிருந்தாலும்
இடுக்குகளின் வழியே கசியும்
தொலைக்காட்சித் தொடர்கள்
தெருச் சாக்கடையில் கலக்க
துர்நாற்றம் தாளாது
உறுமிக் காட்டுகின்றன பன்றிகள்.

நல்லவேளை.
தபால்காரர் ராமலிங்கம்
பலத்த சிரிப்பால்
தெருவையே கழுவி விட
சிலிர்த்தெழுந்தது என் தெரு.

2.3.10

தொலையாத நினைவுகள்


எத்தனை கூரானது
நீ இன்னும் என் மீது
எய்யாத அம்பு?

என் தூரிகையின் வர்ணத் தீட்டலை
தேர்ந்த வார்த்தை கொண்டு அவமதித்தாய்.

யாரும் எழுதாத என் செல்லக் கவிதையை
கால்கள் ஒடித்து மொழிச் சிறையிலிட்டாய்.

என் மட்டையின் வியர்வை சொன்ன வெற்றிகளை
நீ தோட்டத்துக் கதவோடு நிறுத்திக் கொன்றாய்.

போதும். போதும்.
இரவின் மடியில் புரண்டு
நான் தொழுவதெல்லாம்
என் நினைவுப் பெட்டகத்தின்
சாவி தொலைந்து போய் விடத்தான்.

இடைவேளை
உன்னை அடைய முடியாதபடி
என் குரல்.
உன்னால் படிக்க இயலாதபடி
என் கண்களின் மொழி.
உன் நாசிகளைத் தொட இயலாத
என் வியர்வையின் சுகந்தம்.
உன் கேசங்களைக் கோதிவிட
முடியாதபடி என் விரல்களின்
வருடல்கள்.
உன் அருகில்தான்
மழை நீரில் மிதக்கிற கப்பலை
உற்றுப் பார்த்தபடி
நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறேன்.
அருமையான இசையின் துவக்கத்துக்கும்
கிளரச் செய்யும் பாடலின்
முதல் வரிக்கும் இடையிலான தொலைவு இது.
கவிதை எழுதப்பட்ட தாள்கள்
நனையாதபடிக்குத் தூறல்
மெலிந்த பின் வந்துவிடுவேன்.
பொறு.

1.3.10

அற்புதம்


மிக மங்கிய வெளிச்சத்துடன்
கொட்டிக் கொண்டிருக்கிறது பனி.

எந்த இயக்கமும் இல்லை.
எந்த ஓசையும் இல்லை.

நாய்களைக் காணவில்லை தெருக்களில்.
எங்கோ உறைந்து கிடக்கிறார்கள் இரவுக் காவலாளிகள்.
கூடவே மயங்கித் திளைக்கிறது என் நகரம்.

உறக்கமின்றி நின்றிருந்தேன்
தெருவின் நிசப்தத்தைச் சுவைத்தபடி.

அப்போது நறுமணங்கள் பரவ
மிதந்து சென்றார் கடவுள் தெருவின் நடுவே.

இமைத்துத் திறந்தேன் மறுபடியும்.

தெருவில் நன்றாகக் கொட்டியபடி
இருந்தது பனி.

ஈரம்தென்றல் வருடியதும் உதிரும்
பவளமல்லி போல உன் மரணம்.

தொட்டுச் சென்ற அலைகளுக்குக் கீழே
விட்டுச் சென்ற உன் சுவடுகள்.

பெருக்கித் தெளித்த முற்றத்தின்
அடித்தட்டுக்களில் புதையுண்டு கிடந்தது
நீ இட்ட மணக்கோலம்.

இறந்து போயிருந்த வீணையின் தந்திகளில்
சிந்திக் கிடந்தது ஸ்ரீ ராகம்.

நாவின் சுவை நரம்புகளில்
மயங்கிச் சலித்தது அக்கார வடிசலின்
அதிமதுரச் சுவை.

வெண் பட்டுப் புடவையின் தலைப்பில்
காய்ந்து வாடியிருந்தது உன் நாணத்தின் மீதி.

ஊஞ்சல் அசைகையில் மார்கழி புலர்கையில்
மருதாணி உதிர்கையில்
என் தோள்களில் உணர்கிறேன் உன் கரங்களை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...