இப்போது
மழை வந்ததை
யாரும்
எதிர்பார்க்கவில்லை.
சில பேர்
கூரைகளுக்கடியிலும்
சில பேர்
வானத்தின் கீழுமெனப்
பிரிந்து கொள்ள
மழை வலுத்தது.
யாரையும் பேசவிடாமல்
வாயை அடைத்தது
மௌனம்.
மழை வாசனை
மண்ணோடும்
மண்ணில் கிடந்தவற்றோடும்
கரைந்து புதுக்கலவையானது.
என் வாய்
எச்சில்
மழைவாசனையாய்
இருந்தது.
நிர்வாணம் தவிர்த்து
மற்றெல்லாவற்றையும்
கரைக்கும் மூர்க்கத்துடன்
மழை இன்னும்
வலுத்தது.
மழையின் நிழலாக
வீட்டின் வாசல் எல்லாம்
கோலமாய்ப்
பள்ளங்கள்.
மழை எப்போது பெய்யுமெனக்
காத்துக்
கடைகளுக்குக் குடையை
விரித்துப் போகும்
குழந்தைகளைப்
பார்க்கமுடியவில்லை.
இப்போது
மழையைத் தவிர
தெருக்களில்
யாருமில்லை.
இந்தக் கவிதையின் முதல்வரி போலவே எதிர்பாராது இன்றும் மழை பெய்தபடி இருந்த இந்தக் காலையில் நினைவுகள் பின்பக்கமாய்ப் பயணித்தன.
23 வருஷங்களுக்கு முன்பு இந்தக் கவிதை
ஜூன் 1988 கணையாழியில் வெளிவந்திருந்தது.அப்போது எனக்கு 22 வயது.
அசோகமித்திரனும் நாஞ்சில் நாடனும் எழுதிய அதே இதழில் சுந்தர்ஜியும் என்று நிதானிக்க அவகாசம் வேண்டியிருந்தது.அசோகமித்திரன் கௌரவ ஆசிரியராக இருந்தார்.
தொடர்ச்சியாகக் கணையாழி-முன்றில்-இன்று-கனவு-பாலம்-காலச்சுவடு ஆகியவை என் கதை-மொழிபெயர்ப்பு-கவிதைகளை வெளியிட்டு எனக்குக் கிறுக்குப் பிடிக்க வைத்திருந்தன.
இந்தக் கவிதையை இப்போது திருப்பிப் படிக்கும்போது ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் என்னைத் தேடுவதாய் இருக்கின்றன நினைவுகள்.
இன்றைய ஒப்பனைகள் எதுவும் இல்லாத என் 22 வயதுக் கவிதை எனக்கு வசீகரமாகவே தெரிகிறது.
வேறு வழியில்லை.படித்து வையுங்கள்.