31.1.12

செம்பையும் ஏசுதாஸும்.

I
இது மிகவும் அபூர்வமான ஓர் ஒலிப்பதிவு.

ஏசுதாஸின் ஆதார குருவான 1974ல் மறைந்த செம்பை வைத்யநாத பாகவதர் தன் சீடனின் 33வது பிறந்தநாளுக்காகத் தன் 78ஆவது வயதில் அவருடன் சேர்ந்து 1973ல் கொடுத்த கச்சேரி. எத்தனை அபூர்வமான பெரும் நேர்மையான குரு-சீட உறவின் சாட்சி இது?

ஏசுதாஸுடன் சேர்ந்து பாட ஆரம்பிக்குமுன் இந்த அறிவிப்பைக் கேளுங்கள்.

"இன்றைக்கு நம்முடைய தாஸின் 33வது பிறந்தநாள். அது சம்பந்தமாகத்தான் இன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற கச்சேரி. அதன் விசேஷமாக இந்த வயலினை தாஸுக்குப் பரிசளிக்கிறேன். நிறைய கர்நாடக இசை பாடவேண்டும் என்கிற ஆசையில் இதை அவருக்குப் பரிசளிக்கிறேன். இந்த வயலினை ஏற்பாடு செய்தது நம்முடைய டி.வி.கோபாலக்ருஷ்ணன்” என்று சொல்லிவிட்டு சிறிது தணிந்த குரலில் இன்னொன்றும் சொல்லவேண்டும் என்று முணுமுணுத்தபடியே மிருதங்கத்தின் லயப் பரிசோதனை முடிந்தபின் “ரெடியா? தயவு செய்து சினிமாப் பாட்டு பாடவெண்டும் என்று கேட்கவேண்டாம். கடைசியில் உங்கள் விருப்பப்படி அவரைச் சில பாடல்கள் பாடச் சொல்கிறேன். அதுவரைக்கும் பொறுமையாய்க் கச்சேரியைக் கேளுங்கள்” என்று அவருக்கே உரித்தான வெளிப்படைத் தன்மையோடும் நகைச்சுவையோடும் அறிவித்து விட்டு ஏசுதாஸுடன் இணைந்து இந்தக் கச்சேரியைச் செய்தார்.

கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தது டி.வி.கோபாலக்ருஷ்ணன்.

1973ல் கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் ப்ரபலமாகிவிட்டிருந்தார் ஏசுதாஸ். மலையாளத்திலும் தமிழிலும் பல விருதுகள் சோட்டி ஸி பாத் மூலமாக ஹிந்தியில் அறிமுகம் என்றிருந்த காலகட்டம். அப்போதும் செம்பையுடன் அவர் கொண்டிருந்த மதிப்பும் ஏசுதாஸிடம் செம்பைக்கு இருந்த அன்பும் ஒப்பிடமுடியாதவை.

எத்தனை நினைவுகளையும் பண்புகளையும் ஒரே வரிசையில் காட்டும் நினைவலை இது? மனம் நிறைவால் தளும்புகிறது.

II

இன்று முதல் ப்ளாக்கரில் உள்ள அனைத்து URL முகவரிகளிலும் ஓரெழுத்து குறைந்திருக்கிறது. இனி .காம் இன்று முதல் .இன் என அறியப்படும்.ஆனாலும் .காம் முகவரியில் தட்டச்சினால் அது தானாகவே .இன்னுக்கு எடுத்துச் சென்றுவிடும். இனி உங்கள் முகவரி என்ன என்கிற கேள்விக்கு என்னைப் போல் sundargprakash.blogspot.in என்று சொல்லாமல் அவரவர்கள் முகவரியை காம் நீக்கி இன் சேர்த்துக் கொடுக்கவும். 

27.1.12

யாத்ரா-II- துவக்கமும் முடிவும்


மற்றுமொரு வருடம்.
மற்றுமொரு பயணம்.

இம்முறை வானவில்மனிதன் மோகன்ஜியின் நட்பால் தூண்டப்பட்டு கார்த்திகை 1ம் தேதி மாலையிட்டு ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை சென்றிருந்தேன்.

இதுவரை பார்த்துப் பழகியிருக்காத எழுத்தாலும் குரலாலும் மட்டுமே பரிச்சயமான மோகன்ஜியை பயணத்துக்கு முன்பு ஒரு நாள் பதிவுலக நண்பர்கள் சூழ சென்னை நடேசன் பூங்காவில் சந்தித்ததோடு சரி.

கொஞ்சம் சாம்பார்த்தூள் பெருங்காயம் உப்பு ஒன்று சேர்த்து வயிற்றில் கரைத்த புளியுடன் ஜனவரி 10ம் தேதி சென்னை சென்ட்றல் ரயில் நிலையத்தை மிதித்தேன். கொல்கத்தாவிலிருந்து விதவிதமான வண்ண உடைகளுடனும் தாடிகளுடனும் தென்பட்ட தோராயமாய் முன்னறிமுகம் நிகழாத எழுபது ஐயப்ப பக்தர்களுக்கு நடுவில் மோகன்ஜியைத் தேடினேன்.

ஆளைக் காணோம். இதற்கு நடுவில் ஒவ்வொரு நண்பரும் தன் பெயரைச் சொல்லி என் பெயரைக் கேட்டு பரிச்சயப் படுத்திக்கொண்டிருந்தாலும் கண்கள் தேடுதலில் இருந்தன. மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிதான 81 வயதைத் தொட்ட பால் தா எனும் முதியவர் சிரிக்கும் சுருக்கம் விழுந்த கண்களால் என்னை நெருங்கி தன் வசம் இருந்த கல்கண்டு ப்ரசாதத்தையும் மணிக்கட்டில் கட்டிக்கொள்ள கயிறு ஒன்றையும் கொடுத்து காலைத் தொட்டு வணங்கினார். பதறி விலகினேன் நான். துவக்கம் முதலே எனக்கு சிறிது அலர்ஜியாக இருந்த விஷயம் இது ஒன்றுதான். வயது பேதமின்றி கால்களில் விழுந்து நமஸ்கரிக்கும் முறை எனக்கு அத்தனை உவப்பானதாக இல்லை.

என் தோளில் தொங்கிய பையில் பத்து நாள் பயணத்துக்குத் தேவையான ரெண்டு வேட்டி-ரெண்டு துண்டு- ரெண்டு உள்ளாடைகள்-ஒரு புத்தகம்- இந்தப் பயணம் முழுவதும் மொபைல் ஃபோன் தொலைக்காட்சி செய்தித்தாட்கள் எதுவும் இருக்கப்போவதில்லை. இரைச்சல் தொலைந்த வனப் பகுதியில் மிகுதியான நாட்கள் எனும் எண்ணமே சுவாரஸ்யத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது.

ரயில் பெட்டியில் ஐயப்பனின் படத்தை அலங்கரித்து வண்ண வண்ண வாசனை மலர்கள் சூட்டி ஊதுவத்தி தசாங்க சாம்பிராணி மணம் கமழ பார்ர்க்கும்போது கிட்டத்தட்ட ஒரு நடமாடும் கோயில் போல இருந்தது. அடுத்தடுத்த இருக்கைகளுக்குப் பக்கத்தில் அத்தனை பேரின் உருப்படிகளும் சாப்பிடத் தேவையான் பொதியப்பட்ட உணவு வகைகளும் இலைக்கட்டுக்களுடன் ஒரு சிறிய பேண்ட்ரி வேனை நினைவுபடுத்தியது மணமும் அமைப்பும்.   

ரயில் கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எட்டிப்பார்க்க பச்சை நிற வேட்டியுடன் தொலைவில் வந்துகொண்டிருந்த மோகன்ஜியை அருகில் கண்டதும் அப்பாடா என்றிருந்தது. மனிதர் இரண்டு பைகளுடனும் மற்றொரு பையில் பூஜைக்குரிய இரண்டடி உயரமுள்ள ஐயப்ப விக்ரஹத்துடனும் வந்திருந்தார். பரஸ்பர குசலத்துக்குப் பின் ரயில் கூவியது. காலை 11.30க்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் சென்னையை விட்டுக் கிளம்பியது. அந்தக் குழுவினரோடு கொஞ்சம் கொஞ்சமாக என்னைப் பரிச்சயப் படுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். கொல்கத்தாவிலிருந்து சுமார் 50 பேரும் ஹைதரபாத்திலிருந்து சுமார் 10 பேரும் புனாவிலிருந்து சுமார் 10 பேரும் சென்னையிலிருந்து 5 பேருமாக வந்துள்ளதாக புள்ளிவிவரங்களை அறிந்தேன்.

திட்டப்படி இரவு பாலக்காடு அடைந்து இரவு தங்கலுக்குப் பின் மறுநாள் செவ்வாய்க்கிழமை அபிஷேகம் பூஜைகள் முடிந்து இருமுடி கட்டி நள்ளிரவில் பயணம் துவங்குவதாக இருந்தது.

ரயில் ஓடிக்கொண்டிருந்தது. மனதிலும் பல்வேறு எண்ணங்களும் அசைபோடலும்.

என் பத்து வயதில் அப்போதைய நெல்லை மாவட்ட ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீ சங்கர கனபாடிகளிடம் யஜுர் வேதங்களின் வேரான தைத்ரியோபனிஷத்தைக் கற்று கோயில்களில் அதிருத்ர ஹோமங்களிலெல்லாம் பங்கேற்று வருடா வருடம் ராதாகல்யாணம் தீபப் ப்ரதக்ஷிணம் டோலோத்ஸவம் இவற்றிலெல்லாம் கலந்து கொண்டு ஆடிப் பாடித் திரிந்த நாட்களும் 1977ல் முதல்முறை 1979ல் இரண்டாவது முறை சபரிமலை போனதும்-மார்கழி மாத ராப்பத்து பகல்பத்து அதிகாலை தெருத்தெருவாக பஜனை என பெருமாளே கதியென்று கிடந்த என் பள்ளி நாட்களும் -

அதன் பின் ஒவ்வொன்றிற்கும் காரணமும் பொருளும் தேடித் திரிந்து அத்தனை நாள் கற்றவற்றையும் பரிசோதனைக்குள்ளாக்கி கோயில்களுக்குப் போவதைத் தவிர்த்து கடவுள்களின் இருப்பை விமர்சிக்கும் இயக்கங்களில் கலந்துகொண்டு யாரை வென்றோம் என்று தெரியாது மமதையோடு திரிந்த நாட்கள்-

பின் எழுத்து இலக்கியம் ஓவியம் இசை என்று மானசீகமாக வேறொரு வடிவில் தேடியலைந்து கடவுளைக் கண்டடைந்த நாட்கள்-

எல்லாம் சுழன்று வட்டவடிவில் மறுபடியும் நாம சங்கீர்த்தனத்துடன் கடவுளை அழைக்கும் முதல் படியை தொட்டுக்கொண்டிருக்கிறேன்.

மாலை விழத் தொடங்கியது. இரவு எழத் தொடங்கியது. எல்லோரும் குளித்து கடவுளை வழிபட யத்தனித்தார்கள்.

இவ்வுலக இன்பமும் 
மேலுலக இன்பமும் அன்பும் 
அதனால் ஏற்படும் ஆசையும் 
அவ்வாசையின் அனுபவமும் 
மனதிற்கினிய உற்றாரும், 
சீரான இவ்வுலக வாழ்வும், 
மங்களமும் உயர் நலமும் 
நல்ல இருப்பிடமும், புகழும், 
பொன்னும் செல்வமும், 
தவ வலிமையும், 
அதனால் கிடைக்கப்ப்பெற்ற பலனைக் 
காப்பாற்றும் திறனும், 
வழிகாட்டும் ஆசிரியரும், 
தந்தை போன்று தாங்குபவனும் - 
மேன்மை பொருந்திய பெரியவர்களும், 
நல்லொழுக்கத்தை போதிப்பவனும் - 
என்னைச் சரியான பாதையில் 
வழிநடத்திச்செல்பவனும், 
மனஉறுதியும், 
எல்லோருடைய உதவியும், 
வெகுமானமும், வேள்வியும் 
வேள்வியின் பாதையில் செல்ல 
வழிகாட்டும் நூலும், அதன் அறிவும், 
நான் கற்றறிந்தவற்றைக் 
கற்றுக்கொடுக்கும் திறனும், 
மக்களை ஏவும் திறமையும், 
பணியாட்களையும் 
மற்றவர்களையும் நடத்தும் திறமையும் 
மேழிச் செல்வமும், 
பயிர்த்தொழிலில் ஏற்பவும் 
இடையூறுகளின் ஒழிவும், 
வேள்வி முதலிய நற்கருமமும், 
அதன் பலனும், 
நீடித்த குடல் முதலிய 
நோயின்மையும் 
குறுகிய காய்ச்சல் முதலிய 
நோயின்மையும், 
நோயற்ற வாழ்வுக்குரிய மருந்தும், 
என்வாழ்வின் நாட்களைக் கூட்டும் 
மூலிகை மருந்துவகைகளும், 
நீண்ட ஆயுளுடன் கூடிய 
எதிர்பாராத மரணமின்மையும், 
நண்பர்களில்லாதமையும், 
அச்சமின்மையும், நன்னடத்தையும், 
நல்ல தூக்கமும், 
கடவுளின் திருவுள்ளத்துடன் கூடிய 
விடியற்காலையும், 
வேள்வி, மறைஒதுதல், வேள்வி பயிலுதல் முதலிய 
நல்ல செயல்களினால் ஒளிரும் பகற்பொழுதும், 
ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் 
எனக்குக் கிடைககட்டும்.

என்ற ப்ரார்த்தனைகளை உள்ளடக்கிய 

சஞ்ச மே மயச்ச மே ப்ரியஞ்ச மேனுகாமச்ச மே காமச்ச  மே ஸௌமனஸச்ச மே பத்ரஞ்ச மே ஸ்ரேயச்ச மே வஸ்யச்ச மே யசச்ச மே பகச்ச மே த்ரவிணஞ்ச மே யந்தா ச மே தர்த்தா ச மே க்ஷேமச்ச ம த்ருதிச்ச மே விச்வஞ்ச மே மஹச்ச மே ஸம்விச்சமே க்ஞாத்ரஞச மே ஸூச்ச ம ப்ரசஸூச்ச மே ஸீரஞ்ச மே லயச்சம ருதஞ்ச மேம்ருதஞ்ச மேயக்ஷ்மஞ்ச மேநாமயச்ச மே ஜீவாதுச்ச மே தீர்க்காயுத்வஞ்ச மேநமித்ரஞ்ச மேபயஞ்சமே ஸுகஞ்ச மே சயனாஞ்ச மே ஸூஷா ச மே ஸுதினஞ்சமே ||” 


என்று செல்லும் சமகம் பாராயணம் செய்யப்பட்ட படியிருந்தது. எத்தனை தெளிவாயும் நுணுக்கமாயும் இருந்திருக்கின்றன நம் வேண்டுதல்கள்? 

யஜூர் வேதத்தின் மிக முக்கியமான பாகங்களாகக் கருதப்படுபவை ஸ்ரீருத்ரமும் சமகமும். இவற்றின் மொழிபெயர்ப்போடு இவை பற்றியும் நேரம் அமைகையில் ஓர் இடுகை இட வேண்டும். இரண்டின் மேலும் சாம்பல் பூக்கும் அளவிற்கு நான் விலகிப் போய்விட்டிருந்தேன். சமகத்தின் பயிற்சியை இழந்த என் நாவிற்கு மறுபடியும் அந்தத் தடங்களில் பயணிக்க ஆசை பிறந்து சமக தண்டவாளங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. 

அதற்குப் பின் இசை தொடங்கியது. டோலக்கும் ஜால்ராவும் தாளத்துக்குத் துணைபுரிய நான் கேட்டிராத தற்போது பிரபலமாகியிருக்கும் பல்வேறு பஜனைப் பாடல்களும் வெவ்வேறு குரல்களில் பாடப்பட்டன. கூடவே பயணம் செய்து கொண்டிருந்த பல பயணிகளும் இப்போது ஒன்றாய்க் கலந்து இசையில் நனைந்தபடி இருந்தார்கள். கிட்டத்தட்ட ஆடிக்கொண்டே பயணச்சீட்டைப் பரிசோதித்துக்கொண்டிருந்த டிடிஈ ஒரு கட்டத்தில் பார்க்க மற்றொரு ஐயப்ப பக்தரைப் போலக் காட்சியளித்தார். கற்பூர ஆரத்தியுடன் அன்றைய கிரமங்கள் முடிவுக்கு வந்தன.

என்னுடன் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் பேசியபடி வந்தார்கள்.அன்னா ஹஸாரே தொன்மையான இந்தியாவின் பெருமை இசை எழுத்து அவரவர் அனுபவங்கள் என்ற வட்டத்தில் சுற்றி வந்தது. அந்தப் பெட்டி முழுவதும் வங்காள மொழி சிந்தியபடி இருந்தது. வ்யது வித்யாசம் பாராமல் எல்லாரும் எல்லாரோடும் பழகியதும் உதவிகள் செய்துகொண்டதும் அபூர்வமான காட்சியனுபவங்கள். 

பசிக்கத் துவங்கிய போது சப்பாத்தியும் தக்காளி தொக்கும் தயிர்சாதமும் வயிற்றை நிரப்பியது. விஜயவாடாவில் வாங்கிய மோர் கோவையில் தாகம் தணித்தது. மோகன்ஜி ஒரு இடைவெளிக்குப் பின் அனைவரையும் சந்திப்பதால் எல்லோரிடமும் விகிதாச்சார அடிப்படையில் கடலை போட்டபடியிருந்தார்.

கோயம்புத்தூரில் தன் தம்பி ஒருவேளை தன்னைப் பார்க்க வரக் கூடும் என்று மோகன்ஜி சொன்னார். கோயம்புத்தூர் வ்ந்தது.அவர் தம்பி வரவில்லை. அதற்குப் பின் பாலக்காடு வந்தது.

இனி எழுதப் போகும் இடுகைகள் வரிசைக்கிரமமாக நாட்காட்டியின் ஒழுங்கில் எழுதப் படப் போவதில்லை. என் கையும் மனமும் போகும் பாதையில் எழுத்து போகும். பொறுத்துக் கொள்ளுங்கள். 

23.1.12

கடவுளோடு ஓர் உரையாடல்

I
நீண்டு வளர்ந்த 
மரத்தின் உச்சியில்
ஒற்றைக் கொக்கை
மலையில் அமர்ந்திருக்கையில்
தரிசிக்கிறேன் நான்.

பாயும் நதியின்
மடியில் உருளும்
கூழாங்கற்களை
நீரில் மூழ்கி
கைகளில் அள்ளிக்
கன்னங்களில் பதிக்கிறேன்.

அரிதான 
ஒன்றைத் தரிசிக்க 
அதற்குச்
சமமான உயரம்.
அல்லது
சமமான தாழ்வு.

கடவுளோடு
உரையாடுகையில்
உதிர்ந்த முதல் பாடம்.

II
இருப்பிலிருந்து
உதிர்ந்து
வெளிகளில் மிதந்து
மெல்ல மெல்ல
நிசப்தத்தில்
பதிய இருக்கின்றன
பழுப்பு இலைகளின்
சுவடுகள்.

பறவைகளின் கூவல்கள்
நிரம்பிய பள்ளத்தாக்குகளில்
எங்கோ 
ஓடிக் கொண்டிருக்கும்
நதியின் இசை
காதுகளில் பாய்கிறது

தரிசனங்கள்
பல சமயங்களில்
கண்களால்.
சில சமயங்களில்
மனதால்.

III
பல கதவுகளால்
மூடப் பட்டிருக்கிறது
அந்த குகை.

வெவ்வேறு
கதவுகளை
மறுபடி மறுபடி
மாற்றித் திறந்தபின்னும்
எதையும் காணாது 
திகைக்கிறேன்.

அவனோ
ஒரே கதவைத்
திறந்தும் மூடியும்
பேரானந்தத்தில்
திளைக்கிறான்.

சில பயணங்களைப்
பாதைகள்
தீர்மானிக்கின்றன.
வேறு சிலவற்றைப்


பார்க்கும் கோணங்கள்.

5.1.12

ரெங்கப்பிள்ளையும் போதையும்

நான் பாண்டிச்சேரி வாசி என்று பெருமைப்பட்டுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.

1. மணக்குள விநாயகர்
2. மஹாகவி பாரதி.
3. அரவிந்தர்
4. அற்புதமான கவிதை எழுத வைக்கும் கடற்கரை
5. மேன்மையும் கண்ணியமும் நிறைந்த ஃப்ரென்ச் கலாச்சாரம்
6. தெருவெங்கும் நிழல் விரிக்கும் மரங்கள்
7. எதிர்காலத்தில் தன் நாட்குறிப்புக்கள் எப்படியெல்லாம் சிலாகிக்கப் படப்போகிறது என்று அறியாமலே 25 வருடங்கள் எழுதித் தள்ளிய ஆனந்த ரெங்கப்பிள்ளை.

மேலேயுள்ள வரிசையில் ஏழாவதாய் வரும் ஆனந்த ரெங்கப்பிள்ளையைப் பற்றித்தான் இந்த இடுகை. 

ரெங்கப்பிள்ளையின் நினைவாக ஒரு வீதியே ரங்கப் பிள்ளை வீதியென அழைக்கப் படுகிறது. அன்றைய ஃப்ரென்ச் அரசின் ஆளுநராக இருந்த ஜோஸஃப் ஃப்ரான்க்வா தூப்ளேவுக்கு துபாஷியாகப் பணியாற்றிய ரெங்கப் பிள்ளை பிறந்தது மார்ச் 30,1706ல் சென்னை பெரம்பூரில். 52 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த வணிகரான பிள்ளை இந்திய சரித்திரத்தில் மறக்க முடியாதவர்.
அவரின் நாட்குறிப்புக்களில் அன்றைய அரசியல் சமூகம் பொருளாதாரம் மக்களின் குணாதிசயங்கள் ஆள்பவர்களின் மனநிலை போன்ற பலவிஷயங்களை மிகவும் சுவாரஸ்யமான தமிழில் அறியமுடிகிறது. அப்படியே ஒவ்வொரு பக்கமாய்த் திருப்பி நகரும்போது கண்ணில் பட்ட ஃப்ரென்ச் அரசின் ஓர் ஆணையை படித்ததும் மனம் அன்றைக்கும் இன்றைக்குமாய் அலைபாய்ந்த்து.

பாண்டிச்சேரியையும் அதன் ஆன்மாவையும் அறியாதவர்களும், அறிய விரும்பாதவர்களும் அடையாளப் படுத்திக்கொள்ளும் முதல் விஷயம் மலிவான விலை போதைதான். 

எப்படி அதிகாலையிலேயே காஃபியும் தேநீரும் குடிப்பது போல இளநீரை விரும்பிக் குடிக்கும் பாண்டிச்சேரி மக்கள் நினைவுக்கு வருகிறார்களோ அதுபோல பொழுது விடிந்ததுமே சரக்கில்லாமல் எதுவும் ஆகாது எனும் அடித்தட்டு மக்களும் அவர்களைக் குடிக்க வைத்தே பிழைக்கும் ஆட்சியாளர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

கள்ளுக்கடை வாசல்களிலும் தென்னந்தோப்புக்களிலும் அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டு கையிலுள்ள கடியாரம் மோதிரம் முதல் தன் சட்டைப் பையிலுள்ள பணம் வரைக்கும் என்ன களவு போனாலும் ப்ரக்ஞையின்றி குப்புறக் கிடக்கும் குடிமகன்கள் ஒரு வகை என்றால்- 

வெளியூர்களிலிருந்து குடிப்பதற்காக மட்டுமே வருகை தந்து முட்ட முட்டக் குடித்து விட்டு சாலைகளில் எட்டுப் போட்டுக்கொண்டே போகுமிடம் தெரியாது செக்குமாடு போலச் சுற்றிவருபவர்கள் இன்னொரு வகை என்றால்- 

பேருந்துகளில் பக்கத்திலிருக்கும் பயணி தன் மித மிஞ்சிய குடியால் எந்த நிமிடம் வாந்தியெடுத்து தன்னை நாசப்படுத்திவிடுவாரோ என்ற பயத்தோடு இருக்கையைக் காலி செய்து இடம்மாறி விடும் அப்பிராணிப் பயணிகள் மற்றொரு வகை.

இதிகாசங்களின் சோம பானங்களில் தொடங்கி கள்ளுண்ணாமை பற்றிச் சொன்ன வள்ளுவரைக் கடந்து காலம் காலமாக மனிதனின் வாழ்வை நிழல் போலத் தொடரும் இந்த மதுவர்க்கங்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. 

களி, கவ்வை, நரவு, ஈழம், பானம்,பனாட்டு, தாளயம், தோப்பீ, மது, நாற்றம் இவற்றில் சில.  தேனிலிருந்து தயாரிக்கப்படும் கள்ளிற்கு மாதவம்- வெந்நெல்லிலிருந்து தயாரிக்கும் கள்ளிற்குத் தொண்டி- தென்னங்கள்ளிற்குக் குங்கு- பூக்களிலிருந்து பெறப்படும் கள்ளிற்கு மது, மதுகம், தேரல்- கல்கண்டியிலிருந்து தயாரிக்கப் படும் கள்ளிற்குக் கெடம் என்றும் பெயர்கள் எக்கச் சக்கமாக இருக்கின்றன.  

அதேபோல் சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் பிராந்தி சாராயம், லிக்கர் சாராயம், பத்தாயி சாராயம், கொழும்பு சாராயம், கோவை சாராயம், பட்டை சாராயம், சுளுக்குச் சாராயம் என்றெல்லாம் பல வகையான சாராயங்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.  
இது இப்படியிருக்க சுமார் 270 வருடங்களுக்கு முன்னால் அப்போது பாண்டிச்சேரியை ஆண்ட, உலகிலேயே உயர்ரக மதுவகைகளின் தயாரிப்புக்களுக்குப் பெயர் பெற்ற ஃப்ரென்ச்சுக்காரர்களால் ஆளப்பட்ட அரசால் 1741 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஒரு ஆணையைப் பார்ப்போம்.

"லாகரி வஸ்த்துவாகிய பலவித சாராய வகைகள் கோடைக் காலமாகிய உஷ்ண காலத்திலே வாய்கட்டாமல் மிகுதியாக குடிக்கிறவர்களுக்கு மிகுதியாக வியாதி சம்பவிக்கிற படியால் இந்த அவசரமான வேலையில் எங்களால் ஆன மட்டும் விலக்கினோம். நிற்க. உத்தாரமாக கட்டளையிட்டதாவது.
எந்த சாதியில் எப்பேர்பட்டவராயிலும் மார்ச் மாதம் தொடங்கி, செப்டம்பர் வரையிலும் பிராந்தி சாராயங்கள் விற்றாலும், விற்பித்தாலும் கொஞ்சமானாலும், ரொம்பவானாலும் பின்னை எந்த மார்க்கத்திலேயாவது வழக்கம் பண்ணி இந்த உத்தாரத்தை மீறி நடந்தவர்கள் ஆயிரம் வராகன் அபராதமும் ஒரு வருஷம் காவலிலே கிடக்கிறது".

ரெங்கப்பிள்ளையின் மொழி புரியவில்லை என்று சொல்பவர்களுக்காக இந்த மொழிபெயர்ப்பு- 
கோடைப் பருவத்தில் மது அருந்துபவர்களுக்குப் பல வியாதிகள் வருகின்றன. குடிகாரர்களின் உடல்நலனைக் கருதி மார்ச் முதல் செப்டெம்பர் வரை மதுவகைகளைத் தயாரிக்கக் கூடாது. விற்கவும் கூடாது. பிறர் மூலமாக விற்பனையும் கூடாது. தவறினால் ரூ.15 லட்சம் (1500 வராகன்) அபராதமும் ஓராண்டு சிறையும் விதிக்கப்படும். 

இந்த ஆணை ஃப்ரென்ச்சிலும், தமிழிலும் வெளியிடப்பட்டது. ஒரு வெள்ளைக்காரர் குதிரையில் ஏறி ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஃபிரென்ச்சில் படித்தார். அவருக்குப் பின் வந்த ஒரு கணக்குபிள்ளை அதைத் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த ஆணை பாண்டிச்சேரி முழுவதும் தண்டோரா போடப்பட்டு ப்ரகடனப் படுத்தப்பட்டது.

இவ்விதம் அபராதமாய்ப் பெறப்பட்ட பணத்தில் ஒரு பங்கை பிச்சைக்காரர்களின் மேம்பாட்டுக்குப் பயன் படுத்தியிருக்கிறார்கள். சாராய விற்பனையிலோ கொள்முதலிலோ தயாரிப்பிலோ ஒருவன் எந்தவிதமாய் ஈடுபட்டிருந்தாலும் அவர்களைச் சாவடியில் கட்டிவைத்து அடித்து வலது தோளில் முத்திரை குத்தி அனுப்பிவிடுவார்கள். இது சாராயம் குடிப்பவர்களுக்கும் பொருந்தும். ஆனால் கள் இறக்குபவர்கள் மட்டும் அதை உணவுப்பண்டங்கள் கெடாமல் இருக்க உதவும் காடியாக்கி விற்றுக் கொள்ளலாம். 

ஒருவேளை முன்பே தங்கள் வீட்டில் சாராயம் சேர்த்து வைத்திருந்தவர்கள் இந்த ஆணையால் பாதிக்கப் படக் கூடாது என்பதையும் யோசித்து அவர்களுக்குக் கால அவகாசமாக மூன்று நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்தக் கெடுவுக்குள் ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் தங்களிடம் மீதமிருக்கும் இருப்பைக் கூறி ஒப்புதல் பெறவேண்டும். அப்படி பெறத்தவறினால் அவர்களிடமிருந்த சாராயம் முழுவதும் பறிக்கப்படும். 

ஒரு ஆணையை வெறும் ஏட்டுச்சுரைக்காயாய் விட்டுவைக்காமல் மிகக் கடுமையான கண்டிப்புடன் அதைச் செயல் படுத்திய ஃப்ரென்ச் அரசாங்கத்தையும் இன்றைய ஆளும் அரசாங்கத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏனோ இலுப்பைப் பூவின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

4.1.12

வல்வில் ஓரியும் புறநானூறும்

முந்தைய இடுகையில் பார்த்த அதே வல்வில் ஓரி இன்றைக்கும் தொடர்கிறார் புறநானூறு வழியாக. 

புறநானூற்றில் புலவர் வன்பரணரால் பாடப்பட்ட ஒரு பாடல் எத்தனை தூரம் கொடையில் சிறந்திருந்தாலும் சரியான முரட்டுப் பயல் போலக் காட்சி தரும் ஓரியின் வில்வன்மையைக் குறித்துப் பாடுகிறது. 

வேழம் வீழ்த்த விழுத் தொடப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகாக்கலை உருட்டி, உரல்தலைக்
 கேழற் பன்றி வீழ, அயலது
 ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன் 

குறி தவறாது எய்யப்பட்ட அம்பு, யானையை வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியைக் கொன்று, துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளி மானை உருட்டித் தள்ளி, உரல் போன்ற தலையையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடம்பில் பாய்ந்து நின்றது. 

இத்தனை உயிர்களை ஒரே குறியில் கொன்று வீழ்த்திய ஓரியின் வன்செயல் வன்பரணரால் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடலை ஓரங்கட்ட வைத்தாலும் ஓரியின் விற்பயிற்சி மேல் திகைப்பும் ஆச்சர்யமும் வன்பரணர் மேல் ஓரி தரவிருக்கும் பரிசைக் குறிவைத்துப் பாடல் புனைந்திருக்கலாமோ என்று கொஞ்சம் சந்தேகமும் ஒரே நேரத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

அதேபோலக் கழைதின் யானையார் எனும் புலவர் வல்வில் ஓரியைக் குறித்துப் பாடிய ஈ என இரத்தல் எனத் தொடங்கும் ப்ரபலமான இந்தப் பாடலும்   வல்வில் ஓரியிடம் பரிசுக்காக வந்தாலும் கொடையையும் யாசித்தலையும் அதனதன் ஏற்ற இறக்கங்களுடன் பார்த்த பாடலையும் இப்போது பார்க்கலாம்.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;


ஒருவனிடம் சென்று யாசிப்பது எத்தனை இழிவானதோ அதை விடவும் இழிவானது யாசித்தவனுக்கு எதுவும் தராது மறுப்பது. அதேபோல் ஒருவன் யாசிப்பதற்கு முன்னமே கொடுத்து மகிழ்விப்பது எத்தனை உயர்ந்ததோ அதைவிடவும் மிக உயர்ந்தது கொடுத்ததை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று 
மறுப்பது. 

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்; 

எத்தனைதான் தாகத்தின் வயப்பட்டாலும் பளிங்கு போல மின்னும் நீரான கடல் நீரைக் குடிக்க முடியாது. பசுக்களும் பிற விலங்குகளும் நீர் பருகியதால் சேற்றுடன் கலங்கிய நீர் சொற்பமாய் இருந்தாலும் அதைப் பருக ஒருபோதும் எவரும் தயங்குவதில்லை. 

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்!  

தமக்குக் கொடை கிடைக்காதே போனாலும் தாங்கள் கிளம்பிய நேரத்தையும் சகுனத்தையும் பழிப்பார்களே தவிர, உன்னைப்போல் ஓய்வு ஒழியாது கொடுக்கும் வள்ளல்களைப் பழிக்க மாட்டார்கள். அதனால் நீ எனக்கு ஒருவேளை கொடை தராது போனாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். வானத்துக் கருமேகம் பொழியும் மழை போல் வற்றாது கொடையளிக்கும் வள்ளல் ஓரியே, என்றென்றும் நீ வாழ்க! 


இந்தப் பாடல் மிகச் சிறப்பாக அறம் சார்ந்த கருத்துக்களை எளிமையான அருமையான கவிதை நயத்துடன் சொன்னதோடு மட்டுமில்லாமல் ஓரி பரிசு தருவானோ மாட்டானோ என்கிற பதைபதைப்பும் உள்ளுக்குள் ததும்பும் பாடலாகத்தான் இது தெரிகிறது.

இத்தனை வில்வன்மையும் பராக்கிரமும் உடைய ஓரி மற்றொரு குறுநில மன்னனான காரியிடம் தோற்றதின் பின்னணியை மற்றொரு இடுகையில் பார்ப்போம்.

3.1.12

வெண்பன்றி எழுப்பிய கோயில்

ராசிபுரம் போயிருந்தேன். ஆனால் கல்வெட்டுக்கள் ராஜபுரம் என்று சொல்கின்றன. அற்புதமான புராதன சிவாலயம் என்னை அழைத்தது. உள்ளே செல்லும்போது உச்சிக்கால பூஜைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. 

கைலாசநாதரையும் அம்மையையும் வணங்கிவிட்டு வெளிப்ப்ரஹாரத்தில் அமைந்திருந்த காலபைரவர்-தக்ஷிணாமூர்த்தி-சண்டிகேச்வரர் சன்னதிகளை வணங்கித் திரும்பும் போது பிரகாரத்திலுள்ள வன்னி மரத்தின் அடியில் வில்அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி-கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான- வல்வில் ஓரியின் சிலை அமைந்திருக்க, தொன்மங்களைத் தேடியலையும் என் பசி பெருகியது.

வல்வில் ஓரி கொல்லிமலையைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான்வில் வித்தையில் வீரனான ஓரி சிறந்த சிவபக்தன்ஒரு சமயம் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தபோது வனத்தில் நீண்டநேரமாகத் தேடியும் ஒரு மிருகம்கூட கண்ணில் அகப்படவில்லை.

களைத்துப்போன ஓரி ஓரிடத்தில் வெண்பன்றி ஒன்று செல்வதைக் கண்டான்உடனே குறி பார்த்து பன்றி மீது அம்பை எய்தான்அம்பினால் தாக்கப்பட்ட பன்றிஅங்கிருந்து நீண்டதூரம் ஓடி ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. பன்றியைப் பின்தொட்ர்ந்த மன்னன் புதரை விலக்கியபோது அங்கே ஒரு சுயம்புலிங்கத்தைக் கண்டான்.

லிங்கத்தின் நெற்றியில் தான் எய்த அம்பு தாக்கி ரத்தம் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டு கலங்கிய ஓரி தன் தவறை உணர்ந்து சிவபெருமானை வணங்கினான்சிவபெருமானும் அவனுக்குத் தன் சுயரூபம் காட்டித் தானே பன்றியாக வந்ததை உணர்வித்தார்அதன்பின் ஓரி இவ்விடத்தில் கோயில் எழுப்பினான்.

ஓரியின் விலவன்மை புறநானூற்றில் புகழ்ந்து பாடப்பட்டிருக்கிறது. அப்பாடல் குறிக்கும் வில்வன்மை கோயில் கோபுரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்த உடனேயே கோபுரத்தின் பின்புறத்தில் ஒரே அம்பால் ஐந்து மிருகங்களைக் கொன்ற காட்சியைக் காணும் போது இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னே நகர முடிகிறது. 

கைலாசநாதர் மூலஸ்தானத்தில் சுயம்புலிங்கமாக காட்சி தர இப்போதும் இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறதுசிவராத்திரியின்போது இறைவனுக்கு கால பூஜைகள்தான் நடக்கும். ஆனால் இத் தலத்தில் ஆறு கால பூஜைகள் செய்யப் படுகின்றன

அம்பாள் அறம்வளர்த்தநாயகி தனி சன்னதியில் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறாள்இவளது சன்னதியில் பௌர்ணமியன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கிறதுஇவளுக்கு முன்புறம் மகாமேரு உள்ளது

ப்ரஹார வலத்தைத் துவங்கும்போது முதலில் காசி விஸ்வநாதர்விசாலாட்சி அம்பாள் சன்னதியும்பிரகாரத்தின் முடிவில் ராமேஸ்வரர்,பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைக்கப்பட்டிருக்கிறது.

நெல்லி ஸ்தல விருட்சம்கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர்எதிரே நந்தியுடன் காட்சி தருவது தனிச்சிறப்பு. இவரை வணங்கிவிட்டே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம் துர்க்கையின் சன்னதியில் அம்மனுக்கு ஆடிக் கடைசி வெள்ளியின்போது சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள ராஜகோபுரம் நிலைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறதுவிஸ்வநாதர் சன்னதி விமானம்காசியைப் போன்றே அமைக்கப்பட்டிருக்கிறதுப்ரஹாரத்தில் கடைந்தெடுக்கப்பட்ட தூண்களில் சிற்ப அழகும் இசையொலி எழுப்பும் குடைவு வேலைப்பாடுடைய தன்மையும் நம்மை பிரமிக்க வைக்கிறது. 

அம்பாள் சன்னதி அருகில் முருகன் பால தண்டாயுதபாணியாகவும்வள்ளிதெய்வானையுடன் கல்யாண சுப்ரமண்யராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகிறார்இவ்வாறு ஒரே சமயத்தில் முருகனின் இரண்டு கோலங்களையும் இங்கு காணலாம்அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகனுக்கு மாசிமகத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது.

ப்ரஹாரத்தில் இருக்கும் கங்கை தீர்த்தத்தின் மூலம் யாருக்கும் தெரியாத தானாய்த் தோன்றிய அபூர்வம்சிவஅம்சமான வீரபத்திரருக்கும் சன்னதி இருக்கிறதுஇவருக்கு எதிரே நந்தி உள்ளதுஅருகில் ஒரே கல்லில் செய்யப்பட்ட சகடவிநாயகர் கையில் ருத்ராட்ச மாலையுடன் பார்க்க அத்தனை அழகு.
தக்ஷிணாமூர்த்திக்கென்று தனியே உற்சவர் இருக்கிறார்.இவரது பீடத்திலேயே நான்கு சீடர்களும் இருக்கின்றனர்ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று இவர், தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறார்.  காலபைரவர்சனீஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளனகார்த்திகை முதல் நாளில் பைரவருக்கு, “ஏகாதச ருத்ரபாராயணம்” நடக்கிறது. 63நாயன்மார்களுக்கும் குருபூஜை உண்டுநாகர் சன்னதியும் உள்ளது

ஆடிப்பெருக்கன்று வல்வில் ஓரிக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ பூஜைகளும் செய்யப்படுகின்றனகோயில் கட்டிய மன்னருக்காக இவ்வாறு விசேஷ வழிபாடு நடத்தப்படுவது சிறப்புசித்திரையில் பிரம்மோத்ஸவம்வைகாசி விசாகம்,தைப்பூசம்மாசிமகம்பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடக்கின்றன.  
இத் தகவல்களையெல்லாம் சேகரித்து முடித்த பின் ஓரி நடமாடிய இடத்தின் காலத்தின் சுவடுகளைத் தேடியபடியே மூடப்பட இருந்த நுழைவாயில் கதவுகளைத் துறந்து வெளியேறினேன்.
என்ன எங்கே எப்படி எனும் கேள்விகளை எழுப்புபவர்களுக்காக இந்தக் கடைசிப் பத்தி.
காலை மணி-12 மணி வரைமாலை 4.30மணி-இரவு 8.30 மணி வரை திறந்திருக்கிறது நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...