நண்பர் எஸ்.வி.வேணுகோபாலன் ஒரு குறும்படத்தைச் சிலாகித்து எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் பிரதி ஒன்றை எனக்கும் அனுப்பியிருந்தது தெரியாமல் என் பயணத்தில் உறங்கிக்கொண்டிருந்தேன். மின்னஞ்சலில் உறங்கிக்கொண்டிருந்தது என்னை உலுக்கிஎழுப்பும் வல்லமை கொண்ட அந்தக் குறும்படம்.
இன்று காலைதான் அதைக் காணும் வாய்ப்பு அமைந்தது.
https://www.youtube.com/watch?v=bl9cxwhYuuA
இந்தக் ஆறு நிமிடக் குறும்படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட வழக்கம்போல் நல்ல சிருஷ்டிகளைக் கண்டபின் உண்டாகும் அதே நேரம் பிடித்தது.
இந்தக் குறும்படம் தன்னுடைய பவித்ரா என்ற சிறுகதையினை அடிப்படையாய் அமைத்து எடுக்கப்பட்டது என்ற தகவலைக் கூட வெளிப்படுத்தாத முதல் பரிசு குறித்த அவரது இடுகையில் தெரியும் அ.முத்துலிங்கத்தின் அடக்கம் அவர் எழுத்தைப் போல அத்தனை உயர்வானதும் காணக்கிடைக்காததும்.
இதை இயக்கிய விக்னேஷ்வரன் விஜயன் - பாலுமகேந்திராவின் மாணவர்-, கதை கொடுக்கும் வாசிப்பனுபவத்தையும் கடந்து உணர்வுகளை உலுக்கும் விதமாக இந்தக் குறும்படத்தை இயக்கியிருப்பது அவரின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இப்படிச் சொல்வது அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களின் மீதான முழு மரியாதையுடனும், விக்னேஷ்வரன் விஜய னைப் பாராட்டும் விதமாகவும்தான் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒரே சிருஷ்டி வெவ்வேறு வடிவங்களில் வெளியாகும்போது மூலத்தையும் மிஞ்சும் விதமாக உருக்கொள்ள முடியும் என்பதற்கான சாட்சி இந்தக் குறும்படம். இதற்கு மூலத்திலிருந்து சாரத்தை உறிஞ்சிக்கொள்ளத் தெரிந்த மற்றுமொரு கலைஞனின் சாகஸமேயன்றி வேறில்லை.
கோடிகளைக்கொட்டி வீணடிக்கும் இயக்குனர்களும் நடிகர்களும் கொடுக்காத அனுபவத்தை அ.மு.வின் சிறுகதையும், சித்ரா என்ற குறும்படமும் அநாயசமாய் அள்ளித்தந்துவிடுகிறது.
இந்தச் சிறுகதையும் குறும்படமும் சொல்லிவிடாததை நான் சொல்லி என் எழுத்தை நிரூபிக்க விரும்பும் மனநிலையில் இல்லை.
இந்த இடுகைக்கான ஊற்றுக்கண்ணான நண்பர் எஸ்.வி.வி.யின் வார்த்தைகளோடு இதை முடிக்க ஆசைப்படுகிறேன்.
”சிக்கல் இல்லாமல் கதையை அவர் நகர்த்த ஆரம்பிக்கிறார்...பார்வையாளரை அவர்கள் நம்பும் திசையில் செல்ல அனுமதிக்கிறார். அவர்களுக்கான அதிர்ச்சிகளை அடுத்தடுத்து வழங்கி முடிக்கையில் ஓர் உலுக்கு உலுக்கிவிடுகிறார்.”
நன்றி எஸ்.வி.வி. நல்ல அனுபவத்துக்கு.
பல நல்ல குறும்படங்களை உள்ளடக்கிய சிறுகதைகள் பலவற்றை எழுதிய எழுதவிருக்கிற என் ஆதர்ச எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கும், அ.மு. சொன்னதுபோல வருங்காலத்தில் அனைவரின் வாயிலும் புகுந்து புறப்பட இருக்கிற விக்னேஷ்வரன் விஜயனுக்கும் தித்திக்கும் ஆனந்தத்துடன் பாராட்டுக்கள்.

