24.9.13

ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழிகள் - சுபாஷிதம் 17.


கைக்கெட்டும் தொலைவில் இருந்த ஸ்ரீ. அரவிந்தரை நான் உணர இத்தனை நாட்கள் கடந்திருக்கின்றன.

போன வருடத்தின் ஆவணி மாத மழைநாளின் மங்கலான ஒரு முழு இரவு என்னுள் முழு நிலவு உதயமாகக் காரணமாக இருந்தது.

அரவிந்தரைப் படிக்க ஆரம்பித்தேன். நள்ளிரவு கடந்த நிசப்தத்தில் அரவிந்தர் என் அருகே அமர்ந்திருப்பதாய் உணர்ந்தேன். மொழியின் துணையால் சில இடங்களையும், ஆன்மாவின் துணையால் பல இடங்களையும் நதியில் மிதக்கும் கட்டுமரமாய்க் கடந்து கொண்டிருந்தேன்.

நான் தேடிக்கொண்டிருந்த பல கேள்விகளை எந்த நிரூபணங்களின் உதவியுமின்றித் தகர்ந்தெறிந்து கொண்டிருந்தது அந்த ஞானியின் வார்த்தைகள்.

இதற்கு முன் அரவிந்தரின் நூல்களைப் படிக்காதோருக்கு “மேற்கின் அழிபாடுகளில் இருந்து - இந்தியாவின் மறுபிறப்பு” என்ற நூலைச் சிபாரிசு செய்கிறேன். [ஆங்கிலத்தில் “Out of the ruins of the West" - Sri Aurobindo Published by Mira Aditi, Mysore] 

இன்றைக்கு "On Thoughts and Aphorisms" நூலில் இருந்து சில சிந்தனைகள்: தமிழில் திரு. ஜெகந்நாத் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். சில இடங்களில் சின்னச் சின்ன திருத்தங்களைச் செய்தேன். 

விவேகானந்தர்  விட்டுச் சென்ற இடத்திலிருந்து அரவிந்தர் தொடர்வதாகவே நான் உணர்கிறேன். பளிச்சென்ற அந்த மொழிகள் உங்களுக்காக - சுபாஷிதம் 17ல். 

###################################
321.
Late, I learned that when reason died thenWisdom was born; before that liberation, I had only knowledge.

பகுத்தறிவு இறக்கும்போதுதான் ஞானம் பிறக்கிறது என்பதை நான் தாமதித்துத்தான் புரிந்து கொண்டேன். அம் முக்திக்கு முன் நான் அறிவினை மட்டுமே பெற்று இருந்தேன்.

322.What men call knowledge is the reasoned acceptance of false appearances.Wisdom looks behind the veil and sees.

அறிவு பொய்த் தோற்றங்களை ஆய்ந்து, அனுமானித்து ஏற்கிறது. ஞானமோ திரைக்குப்பின் நோக்கி, காட்சியைப் பெறுகிறது. 

323.
Reason divides, fixes details and contrasts them; Wisdom unifies, marries contrasts in a single harmony.

பகுத்தறிவு பிரிக்கின்றது. விவரங்களை வரையறுத்து அவற்றிடையே வேற்றுமையை நிறுவுகின்றது. ஞானமோ ஒன்றுபடுத்துகின்றது. வேற்றுமைகளை ஒரே இசைவினுள் இணைக்கின்றது.

324.
The sign of dawning Knowledge is to feel that as yet I know little or nothing; and yet, if I could only know my knowledge, I already possess everything.

இதுவரை நான் அறிந்துள்ளது சிறிதளவே அல்லது அதுவுமில்லை என்று நான் உணர்வதே என்னுள் உதிக்கும் ஞானத்தின் அறிகுறியாகும்; எனினும், அந்தச் சிறிதளவையும் நான் மெய்யாகவே அறிவேன் எனில், நான் அனைத்தையும் ஏற்கெனவே உடையவனாக இருப்பேன்.

325.
A thought is an arrow shot at the truth; it can hit a point, but not cover the whole target. But the archer is too well satisfied with his success to ask anything farther.

எண்ணம் என்பது உண்மையை நோக்கி எய்யப்படும் ஓர் அம்பு. தன் இலக்கின்  புள்ளியை மட்டுமே அதனால் தொட இயலும்; முழு இலக்கையும் அதனால் அடைய இயலாது. ஆனால் எய்தவனோ தான் வெற்றி  பெற்று விட்டதாய்க் கருதி, இன்னுமென்ன வேண்டும் என்ற பெருந் திருப்தியுடன் இருக்கிறான்.

326.
They proved to me by convincing reasons that God did not exist, and I believed them. Afterwards I saw God, for He came and embraced me. And now which am I to believe, the reasonings of others or my own experience?

உறுதியூட்டும் சான்றுகள் காட்டிக் கடவுள் இல்லையென்று எனக்கு நிரூபித்தனர். நானும் அவர்களை நம்பினேன். பின் நான் கடவுளைக் கண்டேன். அவர் வந்தென்னை அரவணைத்தார். இப்போது எதை நான் நம்புவது? பிறரின் வாதங்களையா? என் அனுபவத்தையா?

327.
Distrust the man who has never failed and suffered; follow not his fortunes, fight not under his banner.

துன்பத்தையோ, தோல்வியையோ கண்டிராதவனை நம்பாதே. அவன் விதியைப் பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ்ப் போரிடாதே.

328.
There are times when action is unwise or impossible; then go into 'Tapasya' in some physical solitude or in the retreats of thy soul and await whatever divine word or manifestation.

சமயங்களில் செயலாற்றுவது இயலாததாக, செயலாற்றாமல் இருப்பது விவேகமாக இருக்கலாம்; அப்போது ஆன்மாவின் தவத்தில் ஆழ்ந்து விடு. தெய்வத்தின் சொல்லை எதிர் நோக்கியிரு.

329.
The mediaeval ascetics hated women and thought they were created by God for the temptation of monks. One may be allowed to think more nobly both of God and of woman.

இடைக்காலத் துறவிகள் பெண்களை வெறுத்தனர்; துறவிகளைச் சோதிப்பதற்கே கடவுள் பெண்களைப் படைத்தார் என நினைத்தனர்; கடவுளையும், பெண்களையும் பற்றிய கருத்து இதை விடக் கண்ணியமாக இருந்திருக்கலாம்.

330.
If when thou sittest alone, still and voiceless on the mountain-top, thou canst perceive the revolutions thou art conducting, then hast thou the divine vision and art freed from appearances.

நீ மலையுச்சியில் தனித்து அசைவற்று மௌனமாக அமர்ந்திருக்கும் அதே சமயத்தில், நீ வழி நடத்தும் புரட்சிகளை உன்னால் காண முடிந்தால், நீ தோற்றங்களிலிருந்து விடுபட்டவனாவாய்; தெய்வீகப் பார்வை பெற்றவனாவாய்.

331.
Three times God laughed at Shankara, first, when he returned to burn the corpse of his mother, again, when he commented on the Isha Upanishad and the third time when he stormed about India preaching inaction.

இறைவன் மும்முறை சங்கரைப் பார்த்து நகைத்தான்; முதலில் தன தாயின் சடலத்தை எரிக்க வீடு திரும்பிய போது; இரண்டாவதாக ஈசா உபநிடதத்திற்கு உரை எழுதியபோது; மூன்றாம் முறை செயலின்மையைக் கற்பிக்க பாரதம் முழுமையையும் புயலாய் வலம் வந்த போது.
    
332.
Someone was laying down that God must be this or that or He would not be God. But it seemed to me that I can only know what God is and I do not see how I can tell Him what He ought to be. For what is the standard by which we can judge Him? These judgments are the
follies of our egoism.

இறைவன் இப்படியிருக்க வேண்டும், அப்படியிருக்க வேண்டும்; இல்லையெனில் அவன் இறைவன் அல்லன் என்று எவரோ விதி விதித்தார். ஆனால் எனக்கோ, 'இறைவன் எத்தகையவன் என்பதைத்தான் என்னால் அறிய முடியும். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று எவ்வாறு நான் அவனுக்குக் கூற முடியும்?' என்றுதான் தோன்றியது. இறைவனை நாம் மதிப்பிடக் கூடிய அளவைதான் ஏது? இம் மதிப்பீடுகள் எல்லாம் நம் அகங்காரத்தின் மடமைகளே.      

333.
Science talks and behaves as if it had conquered all knowledge. Wisdom, as she walks, hears her solitary tread echoing on the margin of immeasurable Oceans.

எல்லா அறிவையும் தான் வெற்றி கொண்டு விட்டதைப் போல் விஞ்ஞானம் பேசுகிறது; நடந்து கொள்கின்றது. தனித்துச் செல்லும் விவேகமோ, அளவற்ற ஞானக் கடல்களின் விளிம்புகளில் எதிரொலிக்கும் தன் காலடியோசையைக் கேட்டவாறே நடையிடுகின்றாள்.

334.
Governments, societies, kings, police, judges, institutions, churches, laws, customs, armies are temporary necessities imposed on us for a few groups of centuries because God has concealed His face from us. When it appears to us again in its truth and beauty, then in that
light they will vanish.

அரசுகள், சமூகங்கள், அரசர்கள், காவலர், நீதிபதிகள், நிறுவனங்கள், கோயில்கள், சட்டங்கள், மரபுகள், ராணுவப் படைகள், இவையெல்லாம் சில நூற்றாண்டுக் காலங்களுக்கு நம் மீது சுமத்தப்படும் தற்காலிகத் தேவைகளே. இறைவன் நம்மிடமிருந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டிருப்பதே இத் தேவைக்குக் காரணமாகும். அம்முகம் தன் எழிலிலும், மெய்ம்மையிலும் மீண்டும் நமக்குத் தெரியும் போது,  ஒளியில் இவையெல்லாம் மறைந்து போகும்.   

335.
Watch the too indignantly righteous. Before long you will find them committing or condoning the very offence which they have so fiercely censured.

தாம் ஒழுக்கசீலர் என்பதால் பிறர் மீது சீற்றமடையத் தமக்கு உரிமையுண்டு என்று கருதுவோரைக் கவனி. எந்தக் குற்றத்தைச் சீற்றத்துடன் கண்டனம் செய்தனரோ, அதே குற்றத்தைக் குறுகிய காலத்தினுள் அவர்களே செய்வதை அல்லது அனுமதிப்பதைக் காண்பாய்.

336.
When Wisdom comes, her first lesson is, “There is no such thing as knowledge; there are only aperçus of the Infinite Deity.”

ஞானம் நம்முள் அடியெடுத்து வைக்கும்போது அவள் அளிக்கும் முதற்பாடம் இதுவே- “ அறிவென்பது ஏதுமில்லை; வரம்பற்ற இறைவனைச் சுட்டிக்காட்டும் குறிப்புகள் மட்டுமே உண்டு”.

337.
I cannot give to the barbarous comfort and encumbered ostentation of European life the name of civilisation. Men who are not free in their souls and nobly rhythmical in their appointments are not civilised.

ஐரோப்பிய வாழ்வின் அநாகரிக சௌகரியங்களுக்கும் தளைப்படுத்தும் பகட்டுகளுக்கும் நாகரிகம் என்னும் பெயரைக் கொடுக்க என்னால் முடியாது. தம் அகத்தே சுதந்திரமாக இல்லாதோர், தம் செயல்களில் கண்ணியமான இசைவினைக் காணாதோர், நாகரிகமுடையவர் அல்லர்.

338.
The doctor aims a drug at a disease; sometimes it hits, sometimes misses. The misses are left out of account, the hits treasured up, reckoned and systematised into a science.

மருத்துவன் நோயைக் குணப்படுத்த ஒரு மருந்தைக் கொடுக்கிறான். சில சமயங்களில் பயன் கிட்டுகிறது. சில சமயங்களில் தவறுகிறது. தவறுதல்கள் கணக்கில் சேர்வதில்லை; குணமான தருணங்கள் போற்றிக் காக்கப்பட்டு, கணக்கிடப்பட்டு, ஒரு விஞ்ஞானமாக ஒழுங்கமைக்கப் படுகின்றன.

339.
Health protected by twenty thousand precautions is the gospel of the doctor; but it is not God’s evangel for the body, nor Nature’s.

இருபதாயிரம் முன்னெச்சரிக்கைகளால் காக்கப்படும் ஆரோக்கியமே நவீன மருத்துவன் நமக்களிக்கும் சாத்திரமாகும். ஆனால் நம் உடலைக் காக்கக் கடவுள் வழங்கியுள்ள சாத்திரம் இதுவன்று. இயற்கை வழங்கியுள்ள சாத்திரமும் இதுவன்று.

340.
To fear God really is to remove oneself to a distance from Him, but to fear Him in play gives an edge to utter delightfulness.

கடவுளுக்கு உண்மையாகவே அஞ்சுவது அவரிடமிருந்து நம்மைத் தொலைவு படுத்துகிறது. ஆனால் அவரிடம் விளையாட்டுத் தனத்துடன் அஞ்சுவது பரமானந்தத்துக்கு மேலும் சுவையூட்டுகிறது.

22.9.13

கத்திச் சண்டை

தூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதாவது எடுத்துப் புரட்டுவது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை.

நெடுநாட்களுக்குப் பின் இந்தக் கதையை நேற்றிரவு வாசித்தேன். நெடுநாட்கள் என்பது பதினைந்து வருடங்கள். இப்போது வாசிக்கையில் அந்தக் கதை மனதுக்கு மிகப் புதியதாக, நெருக்கமாக இருந்தது. படித்த பின்னும் தூங்க முடியாது போனது.   

நான் ரசித்த மிக அற்புதமான கதை இப்போது உங்கள் வாசிப்புக்கு அல்லது மறுவாசிப்புக்கு.

########

மார்கழி மாசத்து நாலாம் வாரம். அதாவது, குளிர் ஜாஸ்தி. அதிலும், வேதபுரம் கடற்கரைப் பட்டினம். குளிர் மிகவும் ஜாஸ்தி. ஒரு நாள் ராத்திரி நான் குளிருக்குப் பயந்து சுகாதார சாஸ்திரத்தைக் கூடப் பொருட்டாக்காமல், என் அறைக்குள் நாலு ஜன்னல்களையும் சாத்தி, முத்திரை வைத்து விட்டுப் படுத்துக் கொண்டிருந்தேன்.

விடிய இரண்டு ஜாமம் இருக்கும்போது விழித்துக்கொண்டேன். அதற்கும் குளிர்தான் காரணம். வாடை குளு குளுவென்று வீசுகிறது. வடபுறத்து ஜன்னலின் கதவுகள் காற்றில் தாமாகவே திறந்து கொண்டன. எழுந்து போய் ஜன்னலை நேராக்குவோமென்று யோசித்தால் அதற்கும் சோம்பராக இருந்தது. போர்வையை நீக்கிவிட்டு இந்தக் குளிரில் எவன் எழுந்துபோய் ஜன்னலைச் சாத்துவான்? என்ன செய்வோம் என்று சங்கடப்பட்டுக் கொண்டே படுத்திருந்தேன். மழை இதற்குள்ளே பெரிதாக வந்துவிட்டது. மழை களகளவென்று கொட்டுகிறது. வாடைக் காற்று வந்து பல்லைக் கட்டுகிறது.

உயிரை வெறுத்து தைரியத்துடன் எழுந்து போய் ஜன்னலைச் சாத்துவோம் என்று சொல்லி யெழுந்தேன்.

அப்போது ஒரு பண்டாரம் சங்கூதிச் சேகண்டி யடித்துப் பாடிக்கொண்டு வந்தான். மார்கழி மாசத்தில் வருஷந்தோறும் ஒரு வள்ளுவன் வந்து பாதி ராத்திரி நேரத்திலேயே வேதபுரத்து வீதிகளில் எல்லாம் திருவாசகம் பாடிக் கொண்டு சங்கூதிக் கொண்டு சேகண்டி யடித்துக் கொண்டு சுற்றுவது வழக்கம். அவன்தான் இந்த வருஷமும் வந்துகொண்டிருப்பானென்றெண்ணி நான் ஆரம்பத்தில் ஒரு நிமிஷம் கவனியாமல் இருந்தேன். பிறகு கணீர் என்ற பாட்டுச் சத்தம் காதில் வந்து மதுரமாக விழுந்தது. அடா இது பழைய வள்ளுவனுடைய குரலில்லை. இது ஏதோ புதிய குரலாக இருக்கிறதென் றெண்ணி நான் குளிரையும் கவனியாமல் ஜன்னல் ஓரத்திலே கொஞ்சம் நின்றேன். மழை கொட்டுகிறது. அறைக்குள்ளே எனக்குக் கைகால் விறையலெடுக்கிறது.

அந்தப் பண்டாரம் வஸந்த காலத்தில், மாலை நேரத்தில், பூஞ்சோலையில் ராஜகுமாரன் ஒருவன் காற்று வாங்கிக் கொண்டு ஒய்யாரமாக நடப்பதுபோல (அந்தப் பண்டாரம்) அந்த மழையில் நடந்து செல்லுகிறான். பிரமானந்தமாகத் திருவாசகம் பாடுகிறான்:

"பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறை போலும் காணேடி."

இந்தப் பாட்டை அவன் பாடின ராகம் என் மனதை விட்டு இப்போதுகூட நீங்கவில்லை. மனுஷ்ய கானம் போலில்லை. தேவகானம் போலே யிருந்தது. "ஹே! யாரப்பா பண்டாரம் நில்லு!" என்று சொல்லிக் கூவினேன்.

அவன் நின்றான். "நீ போன வருஷம் திருப்பள்ளி யெழுச்சி பாடி வந்தவனாகத் தோன்றவில்லையே? நீ யார்?" என்று கேட்டேன். "நான் போன வருஷம் பாடினவனுடைய மகன். நான் பாடினது திருச்சாழல்" என்றான். இவன் அதிக பிரசங்கி என்று தெரிந்துகொண்டு, "உன் பெயரென்ன?" என்று கேட்டேன். "என் பெயர் நெட்டைமாடன்" என்று சொன்னான். "சரி போ" என்று சொன்னேன். அவன் இரண்டடி முன்னே போய் மறுபடி திரும்பி வந்து, "ஐயரே, உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டான்.

"என் பெயர் காளிதாசன்" என்று சொன்னேன்.

"ஓஹோ! பத்திரிகைக்குக் கதைகள் எழுதுகிறாரே, அந்தக் காளிதாசன் நீர்தானோ?" என்றான்.

"ஓஹோ! இவன் பத்திரிகை படிக்கிறானா" என்றெண்ணி வியப்புற்று, நான் அவனிடம் "தம்பி. நெட்டைமாடா; உனக்குச் சங்கீதம் யார் கற்றுக் கொடுத்தார்கள்? நீ இதுவரை எந்த ஊரிலே வளர்ந்தாய்?" என்று கேட்டேன். அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்:

"ஏ, ஐயரே, நான் மழையில் நிற்கிறேன். நீ அறைக்குள் நின்று கொண்டு என்னிடம் நீண்ட கதை பேசுகிறாயே. மேல் தளத்திலிருந்து கீழே இறங்கிவா; வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசலாம். நானும் உன்னிடத்தில் பல கேள்விகள் கேட்க வேண்டுமென்று நெடுநாளாக யோசனை பண்ணிக்கொண்டிருந்தேன், இறங்கி வருவீரா?" என்று கேட்டான்.

"இவன் என்னடா! வெகு விசேஷத்தனாகத் தெரிகிறதே!" என்று நான் ஆச்சரியப்பட்டுக் கீழே இறங்கி வருவதாக ஒப்புக் கொண்டேன். அவன் வாசல்படி யேறித் திண்ணையில் உட்கார்ந்தான். நான் கீழே போகையில் ஒரு மழை லாந்தர் கொளுத்திக் கொண்டு போனேன். அவன் கையிலும் ஒரு மழை லாந்தர் கொண்டு வந்திருந்தான். திண்ணையில் போய் உட்கார்ந்த உடனே நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டோம்.


அவன் தலை சுத்த மொட்டை; உடம்பு ஒற்றைநாடி; சதைபற்றுக் கிடையாது. ஆனால் உறுதியான உடம்பு; மேலே துணி கிடையாது. இடுப்பில் மாத்திரம் ஒரு துணி கட்டிக் கொண்டிருந்தான். மேலெல்லாம் மழைத் தண்ணீர் ஓடுவதை அவன் துடைக்கவில்லை. குளிரினால் அவன் முகம் விகாரப்படவில்லை. அவனைப் பார்த்தவுடனே எதனாலேயோ ஹம்ஸ பக்ஷியின் ஞாபகம் வந்தது. 

ஹாம்! ஆமாம்! அவன் முன்பு நடந்து செல்லக் கண்டபோது நான் என் மனதில், "இவன் என்னடா. அன்ன நடை நடக்கிறான்!" என்று நினைத்துக் கொண்டேன். மேலும் இவன் ஆசாமியைப் பார்த்தால் கோயில் அன்ன வாகனம் எத்தனை பொறுமையும் இனிமையுமாகத் தோன்றுமோ அத்தனை பொறுமையும் இனிமையுமான முக வசீகர முடையவனாக இருந்தான்.

நான் அப்போது அவனை நோக்கி: "என்னிடம் ஏதோ கேள்விகள் கேட்க வேண்டுமென்று நெடுங்காலம் யோசனை செய்து கொண்டிருந்ததாகச் சொன்னாயே, கேள்" என்றேன்.

அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்:

"உன்னிடம் கேள்விகள் கேட்க வேண்டுமென்ற விருப்பமிருந்ததாக நான் தெரிவிக்க வில்லை. உன்னிடம் சம்பாஷணை செய்ய வேண்டுமென்ற விருப்ப மிருந்ததாகச் சொன்னேன். நீ ஏதாவது கேள்வி கேள். நான் ஜவாப் சொல்லுகிறேன். அதுதான் எனக்குகந்த சம்பாஷணை" என்றான். "இதென்ன சங்கடம்" என்று யோசித்து, நான் இவனிடம் முன் கேட்ட கேள்விகளைத் திரும்பவும் கேட்டேன். "நீ சங்கீதம் எங்கே படித்தாய்? இத்தனை காலம் எந்த ஊரில் இருந்தாய்?" என்று வினவினேன்.

நெட்டை மாடன் சொல்லுகிறான்: "அறிவூர் வீணை ரகுநாத பட்டர் மகன் அஞ்ஜனேய பட்டரிடம் நான் சங்கீதம் வாசித்தேன். இதுவரை அந்த ஊரிலே தான் வாசம் செய்தேன்" என்றான்.

அப்போது நான் கேட்டேன்: "தம்பி, நெட்டைமாடா, நீ ஜாதியில் வள்ளுவனாயிற்றே! ரகுநாத பட்டர், அஞ்ஜனேய பட்டர் என்ற பெயர்களைப் பார்த்தால் அவர்கள் பிராமணராகத் தோன்றுகிறதே! உங்கள் ஜாதியார் பிராமணருக்குச் சமீபத்தில் வந்தால்கூட தீண்டல் தோஷம் என்று சொல்லுவது வழக்கமாயிற்றே. அப்படி யிருக்க நீ அவர்களிடம் சங்கீதம் எப்படிப் படித்தாய்?" என்றேன்.

அதற்கு நெட்டை மாடன் சொல்லுகிறான்: "நீ கேட்ட கேள்விக்கு ஜவாப் சொல்ல வேண்டுமானால் என்னுடைய கதையை ஆரம்பத்திலிருந்தே தொடங்கிச் சொல்ல வேண்டும். அவ்வளவு தூரம் பொறுமையுடன் கேட்பாயா?" என்றான்.

"கேட்கிறேன்" என்று சொல்லி உடன்பாடு தெரிவித்தேன். அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்:

"நான் வேதபுரத்தில் இருபத்தாறு வருஷங்களுக்கு முன் பிறந்தேன். என் தகப்பனார் சோற்றுக் கில்லாமல் நான் நாலு வயதுப் பையனாக இருக்கும்போது ஒரு சர்க்கஸ் கம்பெனியாருக்கு என்னை விற்று விட்டார். அந்தக் கம்பெனியில் சூராதி சூரத்தனமான வேலைகள் செய்து மிகுந்த கீர்த்தி சம்பாதித்தேன். பன்னிரண்டு வயதாக இருக்கும்போது அறிவூருக்குப் போனேன். அந்தக் கம்பெனித் தலைவரான மகாராஷ்டிரப் பிராமணருக்கு என்னிடம் மிகுந்த அபிமானம். 

அறிவூர் என்பது மலை நாட்டில் ஒரு பெரிய ஜமீந்தாருடைய ராஜதானி நகரம். அந்த ஊரில் சர்க்கஸ் இரண்டு மாசம் ஆடிற்று. அப்போது என்னுடைய எஜமானனாகிய ராயருக்கு வயதாய் விட்டபடியால் சீக்கிரத்தில் கம்பெனியைக் கலைத்து விட்டுப் பண்டரிபுரத்துக்குப் போய் அங்கு வீடு வாங்கித் தனது முதுமைப் பருவத்தை ஹரி பக்தியில் செலவிட வேண்டுமென்ற யோசனை பண்ணிக் கொண்டிருந்தார்.

அவருக்கும் ஜமீந்தாருக்கும் மிகுந்த நட்புண்டாயிற்று. ஜமீந்தார் கத்திச் சண்டையில் கெட்டிக் காரனாகவும் வயதில் குறைந்தவனாகவும் தனக்கொரு பக்கச் சேவகன் வேண்டுமென்று விரும்பினார். என்னுடைய எஜமானனாகிய ராயர் என்னைச் சிபார்சு பண்ணினார். இதற்கிடையே எனது தகப்பனாருக்கும் எஜமான் ராயருக்கும் அடிக்கடி கடிதப் போக்குவரவு நடந்துகொண்டு வந்தது. எனது தகப்பனாரும் என்னை அடிக்கடி பல ஊர்களில் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அறிவூர் ஜமீந்தார் எனக்கு அரண்மனையிலே சோறு போட்டு மகன் போலே வளர்த்தார். சங்கீதம் அந்த சமஸ்தானத்து பாகவதராகிய அஞ்சனேய பட்டரிடம் படித்தேன். யோகாப்பியாசம் பண்ணி யிருக்கிறேன். கத்திச் சண்டையிலே பேர் வாங்கி யிருக்கிறேன். ஆறு பாஷை பேசுவேன், பாடுவேன், நாட்டிய மாடுவேன், மிருதங்க மடிப்பேன். ஆனை யேற்றம், குதிரை யேற்றம், கழைக் கூத்து, மல் வித்தைகள் - எனக்குப் பல தொழிலும் தெரியும்" என்று சொன்னான்.

இதற்குள் பொழுது விடிந்து விட்டது. நல்ல சூரியோதயத்தில் அவன் முகத்தைப் பார்க்கும்போது நல்ல சுந்தர ரூபமுடையவனாக இருந்தான்.

அப்போது நான் அவனை நோக்கி: "நீ இன்று நம்முடைய வீட்டிலேயே காலை நேரம் போஜனம் செய்துகொள். உன்னுடைய கத்தி சுற்றும் திறமையை எனக்குக் கொஞ்சம் காண்பி" என்றேன். 'சரி'யென்று சம்மதப்பட்டான். பின்பு சொல்லுகிறான்: "எனக்குச் சரியாகக் கத்தி சுழற்றக் கூடியவர்கள் இந்த ஊரில் ஒரே மனுஷ்யன் தான் இருக்கிறார். நான் போய் என் வீட்டிலிருந்து கத்திகளை யெடுத்துக் கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு போய், மறுபடி ஐந்து மணியிருக்கும்போது வந்தான்.

இவன் பட்டாக் கத்தி, உண்மையான சண்டைக் கத்திகள் கொண்டு வருவானென்று நான் நினைத்திருந்தேன். இரண்டு மொண்ணைவாள் - வெண்ணெயை வெட்டும் சர்க்கஸ் கத்திகள் கொண்டு வந்தான். தனக்கு எதிர் நின்று சண்டை போடக் கூடிய வீராதி வீரனை என்னிடம் அழைத்து வருவதாக அவன் வாக்குக் கொடுத்தபடி அந்த மனிதனைத் தேடிப் பார்த்ததாகவும், அகப்படவில்லை என்றும் மற்றொரு நாள் கூட்டி வருவதாகவும் இன்று தான் மாத்திரம் தனியே கத்தி வீசிக் காண்பிப்பதாகவும் சொன்னான். 

'சரி' யென்று சொல்லி நான் அவனுக்கு முதலாவது காபியும், இட்டிலியும் கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் சொன்னேன். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது குள்ளச்சாமியார் என்ற யோகீசுரர் அங்கே வந்தார். அவரைக் கண்டவுடன் நெட்டைமாடன் எழுந்து ஸலாம் பண்ணி, 'ஜராம், ராம், மகாராஜ்!' என்றான். அவரும் இவனைக் கண்டவுடன். 'ராம், ராம்', என்றார். பிறகு நெடுநேரம் இருவரும் மலையாள பாஷையில் பேசிக் கொண்டார்கள்.

எனக்கு மலையாளம் அர்த்தமாகாத படியால் நான் அவர்களுடைய சம்பாஷணையைக் கவனிக்க வில்லை. குள்ளச்சாமியாரை நான் குருவென்று நம்பியிருக்கிறபடியால் அவருக்கும் கடையிலிருந்து வாழைப்பழம், வாங்கிக் கொண்டு வந்து பாலும் பழமும் கொடுத்தேன். இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்தார்கள். கீழ்த் தளத்தில் சாப்பிட்டார்கள். 

பிறகு நான் வெற்றிலைத் தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு மேல்மாடியில் பூஜா மண்டபத்துக்குப் போகலாம் என்று கூறி அழைத்து வந்தேன். இருவரும் மேல் மாடிக்கு வந்தார்கள். நான் ஊஞ்சலின் மீது அவர்கள் இருவரையும் வீற்றிருக்கும்படி செய்து தாம்பூலம் கொடுத்தேன். இருவரும் தாம்பூலம் போட்டுக் கொண்டார்கள். பிறகு ஒரு க்ஷணத்துக்குள்ளே நெட்டை மாடன் வெளி முற்றத்திலிருந்து ஒரு நாற்காலி யெடுத்துக் கொண்டுவந்தான்.

அதன் மேலே ஏறிக்கொண்டு ஊஞ்சல் சங்கிலிகளைக் கழற்றினான். அடுத்த க்ஷணத்துக்குள் ஊஞ்சலையும் கழற்றினான். அடுத்த க்ஷணத்துக்குள் ஊஞ்சலையும், சங்கிலிகளையும் கொண்டு சுவரோரத்தில் போட்டு விட்டான். பிறகு நெட்டை மாடன் என்னை நோக்கி "எனக்குச் சமானமாகக் கத்தி வீசத் தெரிந்தவர் இந்த ஊரில் ஒருவர் தானுண்டு என்று சொன்னேனே! அவர் யாரெனில் இந்தச் சாமியார் தான்" என்று குள்ளச் சாமியாரைக் காட்டினான். நான் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்தவனாய் விட்டேன்.

ஒரு க்ஷணத்துக்குள் அந்த இருவரும் தலைக்கொரு கத்தியாக எடுத்துக் கொண்டு வீசத் தொடங்கி விட்டார்கள். நெடுநேரம் அவர்களுக்குள்ளே கத்திச் சண்டை நடந்தது. அதைப் பார்த்து நான் பிரமித்துப்போய் விட்டேன். அத்தனை ஆச்சரியமாக அவ்விருவரும் கத்தி சுழற்றினார்கள். ஒருவருக்கும் காயமில்லை. ஆனால் நடுவே நடுவே இவன் தலை போய் விடுமோ! அவர் தலை போய் விடுமோ! என்று எனது நெஞ்சு படக்குப் படக்கென்று புடைத்துக் கொண்டிருந்தது.

பிறகு இருவரும் கத்தியைக் கீழே வைத்து விட்டுக் கொஞ்சமேனும் ஆயாசமில்லாமல் மறுபடியும் மலையாளத்தில் சம்பாஷணை செய்யத் தொடங்கி விட்டார்கள். கொஞ்சம் பொழுது கழிந்த பின்பு நெட்டை மாடன் போய் விட்டான். குள்ளச் சாமியார் என்னை நோக்கிச் சொல்லுகிறார்: "தம்பி, காளிதாஸா, இந்த நெட்டை மாடன் ராஜயோகத்தினால் சித்தத்தைக் கட்டினவன். இவனுக்கு ஈசன் யோகசித்திக்கு வாட்போரை வழியாகக் காண்பித்தான். இவனுக்கு நிகராக வாள் சுழற்றுவோர் இந்தப் பூமண்டலத்தில் யாரும் கிடையாது. 

ஆனால் இவன் தன்னைக் கொல்ல வந்த பாம்பையும் கொல்லக் கூடாதென்று அஹிம்ஸா விரதத்தைக் கைக்கொண்ட மகா யோகியாதலால், கொலைத் தொழிலுக்குரியதான கூர்வாளை இவன் கையினால் தீண்டுவது கிடையாது. உடம்பு நன்றாக வசமாக்கும்படி செய்கிற ஹடயோக வித்தைகளில் ஒன்றாக அதை நினைத்து உன் போன்ற அபிமானிகளுக்கு மாத்திரம் தனது திறமையை சர்க்கஸ் கத்தி வைத்துக் கொண்டு காண்பிப்பான். 

வள்ளுவர் குலத்தில் நம் ஊரிலேயே இப்படி ஒரு மகான் இருப்பது உனக்கு ஆச்சர்யமாகத் தோன்றலாம். இனிமேல் இதற்கெல்லாம் ஆச்சரியப்படாதே. ஹிந்துஸ்தானத்துப் பரதேசி பண்டாரங்களை யெல்லாம் மிகுந்த மதிப்புடன் போற்று. பரதேசி வேஷத்தைக் கண்டால் கும்பிடு போடு. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ? உனக்கு மேன்மேலும் மகான்கள் தரிசனம் தருவார்கள்" என்றார்.

நான் ஹிந்துஸ்தானத்தின் மகிமையை நினைத்து வந்தே மாதரம் என்று வாழ்த்திக் குள்ளச்சாமியாரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். அவர் "ஜீவ" என்று வாழ்த்தி விட்டு, விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

( பாரதியின் "கத்திச் சண்டை" தான் நீங்கள் இப்போது வாசித்த கதை.) 

20.9.13

சுபாஷிதம் - 16


301.
ரவிரபி ந தஹதி தாத்ருக் யாத்ருக் ஸந்தஹதி வாலுகானிகர:
அன்யஸ்மால்லப்தபதோ நீச: ப்ராயேண து:ஸஹோ பவதி

பாலை மணல் நம் பாதங்களைப் பொசுக்குவது போல அதற்குக் காரணமான சூரியன் கூடப் பொசுக்குவதில்லை. அதுபோல் பிறரால் புகழடையும் கீழ்மக்களின் ஆரவாரங்களும் அப்படித்தான்.

302.
சோசந்தி ஜாமயோ யத்ர விநச்யத்யாசு தத்குலம்
யத்ரைதாஸ்த்து ந சோசந்தி வர்ததே தத்தி ஸர்வதா

பெண்கள் துயர் உற்றிருக்கும் குடும்பம்/வீடு சீக்கிரம் அழிவைச் சந்திக்கும். பெண்கள் மகிழ்ச்சியுற்றிருக்கும் குடும்பம் வளமுற்றிருக்கும்.

303.
அப்ரகடீக்ருதசக்தி: சக்தோபி ஜனஸ்திரஸ்க்ரியாம் லப்தே
நிவசன்னந்தர்தாருணி லங்க்யோ வநஹிர் ன து ஜ்வலித:

வலியவனின் வலிமை அறியாதோருக்கு வெளிப்படுத்தப்படாது போனால் அது மறக்கப்பட்டுவிடும். விறகில் மறைந்திருக்கும் சக்தியை, அது எரியாத வரை யாரும் லட்சியம் செய்வதில்லை. 

304.
யதா வாயும் ஸமாச்ரித்ய வர்த்தந்தே ஸர்வஜந்தவ: 
ததா க்ருஹஸ்தமாச்ரித்ய வர்த்தந்தே ஸர்வ ஆச்ரமா:
-மநு

உலகின் உயிரினங்கள் எல்லாம் எப்படிக் காற்றை நம்பி வாழ்கின்றனவோ, அதுபோல வாழ்வின் எல்லா தர்மங்களும் இல்லற தர்மத்தைச் சார்ந்தே அமைகின்றன.

305.
அதீத்ய சதுரோ வேதான் ஸர்வசாஸ்த்ராண்யநேகச:
ப்ரம்ஹதத்வம் ந ஜானாதி தர்வீ ஸூபரஸம் யதா

நான்கு வேதங்களையும், சகல சாத்திரங்களையும் திரும்பத் திரும்ப வாசிப்பதால் மெய்ஞானத்தை அடைய முடியாது. சட்டுவம் கறிச்சுவை அறியாது.

306.
யஸ்ய சிந்தம் நிர்விஷயம் ஹ்ருதயம் யஸ்ய சீதளம்
தஸ்ய மித்ரம் ஜகத்ஸர்வம் தஸ்ய முக்தி: கரஸ்திதா

யாரின் சித்தம் விஷயப் பற்றற்று இருக்குமோ, மனம் தண்மையாய் இருக்குமோ, அவனுக்கு அகில உலகமும் நட்பு பாராட்டும். வீடுபேறு கை வசப்படும்.

307.
க்ஷமா சஸ்த்ரம் கரே யஸ்ய துர்ஜன: கிம் கரிஷ்யதி
அத்ருணே பதிதோ வன்ஹி: ஸ்வயமேவோபசாம்யதி

மன்னிப்பு என்னும் ஆயுதத்தின் முன்னே தீயோரால் என்ன செய்ய இயலும்? புற்களற்ற தரையில் நெருப்பு பரவாது.

308.
புதாக்ரே ந குணான் ப்ரூயாத் ஸாது வேத்தி யத: ஸ்வயம்
மூர்க்காக்ரேபி ச ந ப்ரூயாத் தத்ப்ரோக்தம் ந வேத்தி ஸ:  

உன் நற்குணத்தைச் சான்றோரிடம் சொல்லாதே; அவர்களே சுயமாய் அறிந்து கொள்வார்கள். மூர்க்கர்களிடம் சொல்லாதே; அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

309.
ந காலோ தண்டமுதம்ய சிர: க்ருந்ததி கஸ்யசித்
காலஸ்ய பலமேதாவத் விபரீதார்த்ததர்சனம்
-மஹாபாரத்

காலம் ஒருவன் தலையை ஆயுதங்களால் கொய்வதில்லை; ஆனால் சிந்தையைக் கெடுத்து விபரீதமான முடிவுகளை எடுக்கச் செய்து தவறான பாதைக்குத் தள்ளுவது அதன் வலிமை.

310.
மாத்வீ வ மன்யதே பாலோ யாவத் பாபம் ந பச்யதே
யதா ச பச்யதே பாபம் துக்கம் சாத் நிகச்சதி
-தம்மபதம்

செய்த வினை பழுக்காத வரை அறியாத மூடனுக்குத் தேனாய் இனிக்கிறது. பழுத்த பின், அதன் கசப்பை அவன் சுவைக்கத்தான் வேண்டும்.

311.
தாவஜ்ஜிதேந்த்ரியோ ந ஸ்யாத் விஜிதான்யேந்த்ரிய: புமான்
ந ஜயேத் ரஸனம் யாவத் ஜிதம் ஸர்வம் ஜிதே ரஸே
ஸ்ரீமத் பாகவதம்

நாவடக்கம் இல்லாத ஒருவனைப் புலன்களை வென்றவனாகக் கருத முடியாது; உணவின் மீதான இச்சையற்றவனே எல்லாப் புலன்களையும் வென்றவனாகிறான்.  

312.
யோ யமர்த்தம் ப்ரார்த்தயதே யதர்த்தம் கடதேபி ச
அவச்யம் ததவாப்னோதி ந சேச்ச்ராந்தோ நிவர்த்ததே

ஏதொன்றையோ விரும்பும் ஒருவன், அதையடைய அயர்வின்றி விடாது முயல்வானேயானால் சந்தேகமின்றி அதை அடைவான்.

313.
யதர்ஜிதம் ப்ராணஹரை: பரிச்ரமை: ம்ருதஸ்ய தத் வை விபஜந்தி ரிக்தின:
க்ருதம் ச யத் துஷ்க்ருதமர்த்தலிப்ஸயா ததேவ தோஷாபகதஸ்ய கௌதுகம்
-கருடபுராண்

ஒருவன் கடும் உழைப்பினால் அடைந்த செல்வத்தை, இறந்த பின் அவன் சந்ததி பங்கிட்டுக் கொள்கிறது. செல்வத்தை அபகரிக்கச் செய்த தீவினைகளின் பயன்களை, இறந்தவன் தன்னுடன் எடுத்துச் செல்கிறான்.

314.
த்யஜேத் க்ஷுதார்த்தா ஜனனீ ஸ்வபுத்ரம்
காதேத் க்ஷுதார்த்தா புஜகீ ஸ்வமண்டம்
புபுக்ஷித: கிம் ந கரோதி பாபம்
க்ஷீணா ஜனா நிஷ்கருணா பவந்தி
-சாணக்ய

பஞ்சத்தில் வாடும் தாய் மகனையே கைவிட்டு விடுவாள்; கொடும் பட்டினியால் வாடும் பாம்பு தன் முட்டைகளையே உண்ணும்;
வாழ்வா சாவா எனும் விளிம்பு நிலையில், எந்தப் பாவத்தைத்தான் செய்ய மக்கள் தயங்குவார்கள்?

315.
யத்ர நார்ய: து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
யத்ர ஏதா: து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அ ஃ பலா: க்ரியா:
-மநு

எங்கு பெண்கள் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரியவர்களாய்க் கருதப் படுகிறார்களோ அங்கு இறைவன் உறைகிறான்; பெண்கள் போற்றப் படாத இடங்களில் எதுவும் உருப்படுவதில்லை.

316.
கதோதோ தோததே தாவதே பவன்னோதயதே சசீ
உதிதே து சஹஸ்ராம்சௌ ந கதோதோ ந சந்த்ரமா:

நிலவு மலராத இரவுகளில் மின்மினிப்பூச்சி ஒளிர்கிறது; ஆயிரம் கரங்களுடன் கதிரவன் உதயமான பின் மின்மினிப் பூச்சியோ, நிலவோ இருக்குமிடம் தெரிவதில்லை. 

317.
ஸ்வபாவம் ந ஜஹாத்யேவ ஸாதுராபத்கதோபி ஸன்
கற்பூர: பாவகஸ்ப்ருஷ்ட: ஸௌரபம் லப்தேதராம்

கற்பூரம் நெருப்பால் சுடப்படுகையிலும் நறுமணத்தையே உமிழ்வது போல்,
பேரிடர்களிலும் சான்றோர் தம் சுபாவத்திலிருந்து பிறழ்வதில்லை; 

318.
ச்ரமேண துக்கம் யத்கிஞ்சித்கார்யகாலேநுபூயதே
காலேன ஸ்மர்யமாணாம் தத் ப்ரமோத்

கடின உழைப்புக்கிடையே இடர்பாடுகளால் உண்டாகும் மனச் சோர்வுடன் முழுமையுற்ற செயலை, எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கையில் மனநிறைவளிக்கும்.

319.
ஆஸ்தே பக ஆஸீனஸ்ய ஊர்த்வம் திஷ்டதி திஷ்டத:
சேதே நிஷதமானஸ்ய சரதி சரதோ பக:

அதிர்ஷ்டம் அமர்ந்திருப்பவனுடன் அமர்ந்தபடியும், நிற்பவனுடன் நின்று கொண்டும், உறங்குபவனுடன் உறங்கிக் கொண்டும், நடப்பவனுடன் நடந்த படியும் இருக்கிறது.

320.
யாவத் ப்ரியதே  ஜடரம் தாவத் ஸத்வம் ஹி தேஹீனாம்
அதிகம் யோபிமன்யேத ஸ ஸ்தேனோ தண்டமர்ஹதி
மஹாபாரத் / மநு

தன் தேவைகளுக்கேற்ப ஒருவன் செல்வத்தை ஆளலாம்; தேவைக்கு அதிகமாய் செல்வத்துக்கு உரிமை கொள்பவன் கள்வன்; தண்டனைக்குரியவன். 

14.9.13

சுபாஷிதம் 15

281.
னோ துகரோ மேகோ மத்யபோ த்குணோ ருத்
மா தோ ர்க்கடோ த்ஸ்யோ மகாரா தச சஞ்சலா:

மனம், தேனீ, மேகம், குடிகாரன், மூட்டைபூச்சி, காற்று, செல்வம், வெறி, குரங்கு, மீன் என்ற இந்தப் பத்தும் அலையும் குணம் கொண்டவை.

(சமஸ்க்ருதத்தில் 'ம' என்னும் வர்க்கத்தில் துவக்க எழுத்துக் கொண்ட பத்துச் சொற்கள் இவை)

282.
யதிதம் மனஸா வாசா சக்ஷுப்யாம் ச்ரவணாதிபி:
நச்வரம் க்ருஹ்யமாணம் ச வித்தி மாயாமனோமயம்
-ஸ்ரீ உத்தவ கீதை - 7:7

மனம், வாக்கு, கண்கள், செவி என்னும் புலன்களால் எவையெல்லாம் கிரகிக்கப்படுகின்றனவோ, அவையெல்லாம் அழியும் தன்மை உடையவை; மாயையால் மனதில் தோன்றுபவை என்றும் அறிவாய்.

283.
வைத்யராஜ நமஸ்துப்யம் யமராஜ சஹோதர
யமோ ஹரதி ப்ராணான் வை வைத்ய: ப்ராணான் தனானி ச

மருத்துவரே! காலதேவனின் சகோதரா! உமக்கு வணக்கம். உமது சகோதரர் உயிரை எடுத்துச் செல்கிறார். நீரோ உயிருடன் செல்வத்தையும் எடுத்துச் செல்கிறீர்.

284.
விஷயேஷ்வாவிசந் யோகீ நாநாதர்மேஷு ஸர்வத:
குணதோஷவ்யபேதாத்மா ந விஷஜ்ஜேத வாயுவத்
-ஸ்ரீ உத்தவ கீதை - 7:40

காற்று எல்லா இடங்களிலும் வீசிக் கொண்டிருப்பினும், எதனுடனும் ஒட்டுறவு கொள்ளாது, எப்பொருளின் மணத்தையும் தக்க வைத்துக் கொள்ளாதிருப்பதைப் போல, ஒரு யோகி எங்கும் பலவகையான விஷயங்களிலும் உட்புகுந்து பார்ப்பவனாயினும் அவற்றின் குண தோஷங்களினால் பற்றப்படாது இருக்க வேண்டும்.

285.
சிதாம் ப்ரஜ்வலிதாம் த்ருஷ்ட்வா வைத்ய: விஸ்மயமாகத:
நாஹம் கதஹ ந மய ப்ராதா கஸ்யேதம் ஹஸ்தலாகவம்

எரிந்து கொண்டிருக்கும் சிதையைக் கண்ட மருத்துவரின் எண்ண ஓட்டம்: 'நானோ, என் தம்பியோ இவருக்கு மருத்துவம் பார்க்கவில்லை. இது யாரின் வேலையாய் இருக்கும்?'

286.
தேஜஸ்வீ தபஸா தீப்தோ துர்தர்ஷோதரபாஜந:
ஸர்வபக்ஷோபி யுக்தாத்மா நாதத்தே மலமக்நிவத்
-ஸ்ரீ உத்தவ கீதை - 7:45

அக்னி நல்லது கெட்டது என்ற பேதமற்று இட்ட எதையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது. எதையும் ஒதுக்காத ஞானியின் தவச்சுடரிலும் எல்லாமே சுட்டெரிக்கப்படுகின்றன.

287.
பாலஸ்யாபி ரவே: பாதா: பதந்த்யுபரி பூப்ருதாம்
தேஜஸா ஸஹ ஜாதானாம் வய: குத்ரோபயுஜ்யதே

இளஞ் சூரியனின் பாதங்களால் இமயத்தின் சிகரங்கள் எட்டப்பட்டு விடுகையில், சாதனைக்கும் வயதுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

288.
குணைர் குணாநுபாதத்தே யதா காலம் விமுஞ்சதி
ந தேஷு யஜ்யதே யோகீ கோபிர் கா இவ கோபதி:
-ஸ்ரீ உத்தவ கீதை - 7:50

சூரியன் தண்ணீரை உறிஞ்சி மழையாகப் பொழிவது போல, ஒரு யோகி பொருளைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் பற்றுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.

289.
ஸர்வத்ர தேசே குணவான் சோபதே ப்ரதித: நர:
மணி: சீர்சே கலே பாஹௌ யத்ர குத்ர அபி சோபதே

சிரத்திலோ கழுத்திலோ கரத்திலோ எங்கு அணிந்தாலும் முத்து அழகுதான். குணவான்களும் ஒரு நாட்டின் எல்லா இடங்களிலும் கொண்டாடப் படுகிறார்கள்.

290.
அணுப்ப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்ய: குசலோ நர:
ஸர்வத: ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத:
-ஸ்ரீ உத்தவ கீதை - 8:10

தேனீ, மலர்களை நாசம் செய்யாமல் மலர்களின் சாரமான தேனைப் பருகுவது போல், அறிவாளி சிறிய பெரிய சாத்திரங்களில் இருந்து அதன் சாரங்களை மட்டும் கிரகித்துக் கொள்ள வேண்டும்.

291.
கிந்து மத்யம் ஸ்வபாவேன யதௌஷதம் ததா ஸ்ம்ருதம்
அயுக்தியுக்தம் ரோகாய யுக்தியுக்தம் ததா ஸ்ம்ருதம்

பயன்பாடு சரியானதாய் இருப்பின் மதுவும் மருந்தாகும்; அல்லாது போனால் அதுவே நோயாகும்.

292.
ஸாமிஷம் குரரம் ஜக்நுர் பலிநோ யே நிராமிஷா:
ததாமிஷம் பரித்யஜ்ய ஸ ஸுகம் ஸமவிந்தத
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:2

மாமிசத் துண்டு கிடைத்த ஒரு குர்ரப் பறவையை, அது கிடைக்காத பிற பறவைகள் தாக்கின. குர்ரப் பறவை (கவ்வியிருந்த) மாமிசத் துண்டைக் கைவிட்டதும் அது சுகத்தை அடைந்தது.

293.
ப்ரத்யக்ஷ கவிகாவ்யம் ச ரூபம் ச குலயோஷித:
க்ருஹவைத்யஸ்ய வித்யா ச கஸ்யைசித்  யதிரோசதே

கவிஞன் வடிக்கும் காவியமும், குலப்பெண்ணின் வனப்பும், குடும்ப மருத்துவனின் வித்தையும் கண்ணெதிரே தென்பட்டாலும் கவனம் பெறுவதில்லை.

294.
த்வாவேவ சிந்தயா முக்தௌ பரமாநந்த ஆப்லுதௌ
யோ விமுக்தோ ஜடோ பாலோ யோ குணேப்ய: பரம் கத:
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:4

உலகத்தின் கவலைகள் ஏதுமின்றி, எப்போதும் பரம இன்பத்தில் மூழ்கியிருக்கும் இருவர், சூதுவாது அறியாத, வேற்றுமை உணர்வு தோன்றாத, இன்பத்துக்குக் காரணம் தேடாத குழந்தையும், குணங்களை எல்லாம் கடந்த ஞானியும் மட்டுமே.

295.
அல்பகார்யகரா: ஸந்தி யே நரா பஹுபாஷிண:
சரத்காலின மேகாஸ்த்தே நூனம் கர்ஜந்தி கேவலம்

இலையுதிர்கால இடிமுழக்கம் மழையைத் தருவிப்பதில்லை; அதுபோல அதிகம் பேசுபவர்கள் செயல்வன்மை அற்றவராய் இருப்பார்.

296.
க்ருஹாரம்போஹி து:காய விபலச்சாத்ருவாத்மந:
ஸர்ப்ப: பரக்ருதம் வேச்ம ப்ரவிச்ய ஸுகமேததே
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:15

திட்டமிட்டுப் பெரிய வீடு கட்டுவது துக்கத்தின் தொடக்கம். பயனற்றது. பிற உயிரினங்களால் உருவாக்கப்பட்ட புற்றில்தான் பாம்பு புகுந்து சுகமாக வாழ்கிறது.

297.
கல்பத்ரும: கல்பிதமேவ ஸூதே ஸா காமதுக் காமிதமேவ தோக்தி
சிந்தாமணிஸ்சிந்திதமேவ தத்தே ஸதாம் து ஸங்க: ஸகலம் ப்ரஸூதே

கற்பக மரம் நினைத்ததை மட்டும் தரும்; காமதேனு தேவையானதை மட்டும் தரும். சிந்தாமணி சிந்தித்ததை மட்டும் தரும். நல்லோரின் நட்போ எல்லாவற்றையும் தரும்.

298.
யதோர்ணநாபிர் ஹ்ருதயாதூர்ணாம் ஸந்தத்ய வக்த்ரத:
தயா விஹ்ருத்ய பூயஸ்தாம் க்ரஸத்யேவம் மகேச்வர:
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:21

சிலந்தி தன் உள்ளிருந்து, தன் வாய் வழியே நூலைக் கொண்டு வலையைப் பின்னுகிறது. பின் அதுவே தனக்குள்ளே அதை இழுத்துக் கொள்கிறது. உலகத்தைப் படைத்த இறைவனும் இப்படித்தான் செய்கிறார்.

299.
குருசுச்ரூஷயா வித்யா புஷ்கலேன தனேன வா
அத வா வித்யயா வித்யா சதுர்த்தோ ந உபலப்யதே

குரு சேவையாலோ, செல்வத்தாலோ, அறிவுப் பரிமாற்றத்தாலோ கல்வி பெறலாம். இவையன்றி நான்காவதாய் வேறேதும் வழியில்லை.

300.
யத்ர யத்ர மநோ தேஹீ தாரயேத் ஸகலம் தியா
ஸ்நேஹாத் த்வேஷாத் பயாத் வாபி யாதி தத்தத் ஸவரூபதாம்
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:22

உடலை எடுத்தவன், மனதால் எதை எதைப் பற்றி - அன்பினாலோ, வெறுப்பினாலோ, அச்சத்தினலோ - சிந்தனை செய்கிறானோ, அவன் அந்தந்த உருவத்தையே அடைகிறான்.

12.9.13

சுபாஷிதம் -14

261.
அபிகம்யக்ருதே தானம் த்ரேதாஸ்வாஹூயதீயதே
த்வாபரே யாசமானாய ஸேவயா தீயதே கலௌ
-பராசர ஸ்ம்ருதி 1-28

க்ருத யுகத்தில் கொடுப்பவன் யாசிப்பவனை அடைந்தும்,
த்ரேதா யுகத்தில் யாசிப்பவனை வரவழைத்தும், த்வாபரத்தில்
தன்னிடம் வந்து யாசிப்பவனுக்கும், கலியுகத்தில் செய்த சேவைக்கு
ஈடாகவும் தானம் செய்யப்படுகிறது.

262.
அபிகம்யோத்தமம் தானமாஹூயைவ து மத்யமம்
அதமம் யாசமானாய ஸேவாதானம் து நிஷ்பலம்
-பராசர ஸ்ம்ருதி 1-29

தானே அளிக்கும் தானம் உயர்ந்தது; யாசகனை வரவழைத்துக்
கொடுப்பது நடுத்தரமானது; தன்னிடம் வந்து யாசிப்பவனுக்குக்
கொடுத்தல் கீழானது; சேவைக்கு ஈடாய் தானமளிப்பது ஒரு பலனுமற்றது.

263.
ஜிதோ தர்மோ ஹ்யதர்மேண ஸத்யம் சைவாந்ருதேன ச
ஜிதாச்சோரைஸ்ச ராஜாந: ஸ்த்ரீபிஸ்ச புருஷா: கலௌ
ஸீதந்தி சாக்னிஹோத்ராணி குருபூஜா ப்ரணச்யதி
குமார்யாஸ்ச ப்ரஸூயந்தே தஸ்மின் கலியுகே ஸதா
-பராசர ஸ்ம்ருதி 1-30, 31.

கலியுகத்தில் அதர்மத்தால் தர்மமும், பொய்மையால் வாய்மையும் வெல்லப்படும். கள்வர்களால் அரசனும், பெண்களால் ஆண்களும் வெல்லப்படுவார்கள். வேள்விகள் குறையும்; குருவணக்கம் தேயும்; குமரிகள் தாயாவார்கள்; கலியுகத்தின் குணநலன்கள் இவ்வாறே அமையும்.

264.
ஸுக்ஷேத்ரே வாபயேத்பீஜம் ஸுபாத்ரே நிக்ஷிபேத் தனம்
ஸுக்ஷேத்ரே ச ஸுபாத்ரே ச ஹ்யுப்தம் தத்தம் ந நச்யதி
-பராசர ஸ்ம்ருதி 2-47

நல்ல பூமியில் விதை விதைக்கப்படட்டும்; பாத்திரம் அறிந்து தானம்
வழங்கப் படட்டும். நல்ல பூமியில் விதைக்கப்பட்டதும், பாத்திரமறிந்து
வழங்கப்பட்ட தானமும் வீணாவதில்லை.

265.
துக் மே ஸிம்ரன் ஸப் கரே ஸுக் மே கரே ந கோயே
ஜோ ஸுக் மே ஸிம்ரன் கரே தோ துக் கஹே கோ ஹோயே
-கபீர்

துன்பத்தில் உழல்கையில் ப்ரார்த்திப்பவர்கள் இன்பத்தில் திளைக்கையில்
துதிப்பதில்லை; இன்பத்திலும் ப்ரார்த்திக்கக் கற்றவனுக்குத் துன்பம் எங்கிருந்து வரும்?

266.
அகத் கஹாநீ ப்ரேம் கீ குச் கஹீ ந ஜாய்
கூங்கே கேரீ ஸர்க்கரா பைடே முஸ்க்காய்
-கபீர்

அன்பின் கதை சொல்ல மொழி ஏதுமில்லை. இனிப்பைச் சுவைத்த
ஊமையின் புன்னகையை மொழி பெயர்த்தல் கூடுமோ?

267.
கபீரா கர்வ் ந கீஜீயே ஊஞ்ச்சா தேக் ஆவாஸ்
கால் பரௌன் புங்யி லேட்னா ஊபர் ஜம்ஸி காஸ்
-கபீர்

கபீர் சொல்வதைக் கேள்: வானுயர்ந்த உன் மாளிகையைக் கண்டு
கர்வங் கொள்ளாதே; காலன் உன்னைக் கட்டாந்தரையில் படுக்கச்
செய்வான்; உன் மீது புல் முளைக்கும்.

268.
ஜ்யோன் நைனோம் மே புத்லீ த்யோன் மாலிக் கட் மாஹிம்
மூரக் லோக் ந ஜானஹின் பாஹிர் தூதன் ஜாஹின்
-கபீர்

கண்ணிற்குள் மணியாய் உள்ளுறைவான் இறைவன்;
அறியா மூடர் அவனை வெளியே தேடி அலைவார்.

269.
ஜப் தூ ஆயா ஜகத் மே லோக் ஹன்ஸே தூ ரோயே
ஐஸீ கர்னீ ந கரீ பாச்சே ஹன்ஸே ஸப் கோயே
-கபீர்

பிறக்கும்போது எல்லோரும் சிரிக்க நீ அழுதாய்;
நீ விடைபெறும்போதும் மீண்டும் எல்லோரும் சிரிக்காதிருக்கட்டும்.

270.
ந ப்ரஹ்ருஷ்யதி ஸன்மானே நாபமானே ச குப்யதி
ந க்ருத்த: பருஷம் ப்ரூயாத் ஸ வை ஸாதூத்தம: ஸ்ம்ருத:
-மனு ஸ்ம்ருதி

சன்மானத்தாலும் அவமானத்தாலும் நிலைகுலையாதவரும்,
சினமுற்ற போதும் பிறரைப் புண்படுத்தாதோருமே சான்றோர்.

271.
ஹர்ஷஸ்த்தான ஸஹஸ்ராணி பயஸ்த்தான சதானி ச
திவஸே திவஸே மூடம் ஆவிசந்தி ந பண்டிதம்

முட்டாளுக்கு தினந்தினம் மகிழ ஆயிரம் விஷயங்களும், அஞ்ச நூறு
விஷயங்களும் இருக்கும். நிலைபெற்றவனின் மனதுக்கோ இரு நிலைகளுமில்லை.

272.
தீர்க்கோ வை ஜாக்ரதோ ராத்ரி: தீர்க்க ச்ராந்தஸ்ய யோஜனம்
தீர்க்கோ பாலானாம் ஸம்ஸார: ஸத்தர்மம் அவிஜாநதாம்

உறங்காதவனுக்கு இரவு நீள்கிறது; களைத்தவனுக்கு அண்மையும் தொலைவாகிறது. தர்மநெறி உணராத சிறியோருக்கு வாழ்வு நீள்கிறது.

273.
த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோபிஜாயதே
-பகவத் கீதா - 2.62

புலன்களை ஈர்ப்பவை பற்றிச் சிந்திப்பவனுக்கு அவற்றில் பற்று உண்டாகிறது; பற்றிலிருந்து ஆசையும், ஆசையிலிருந்து சினமும் உருவாகின்றன.

274.
நாத்யந்த குணவத் கிஞ்சித் ந சாப்யத்யந்தநிர்குணம்
உபயம் ஸர்வகார்யேஷு த்ருச்யதே ஸாத்வஸாது வா

எந்த ஒரு செயலிலும் முழுமையாய் நன்மை, தீமையென்று எதுவுமில்லை.
எல்லாச் செயலிலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும்.

275.
ஸுகமாபதிதம் ஸேவ்யம் துக்கமாபதிதம் ததா
சக்ரவத் பரிவர்த்தந்தே துக்கானி ச ஸுகானி ச
-மஹாபாரத்

இன்பத்தை நுகர்வது போலவே வாழ்வின் துன்பத்தையும் சமமாய் ஏற்கவேண்டும்; சக்கரத்தின் சுழற்சி போல இன்பமும் துன்பமும் மாற்றத்துக்குரியவை.

276.
உபாப்யாமேவ பக்ஷாப்யாம் சதா கே பக்ஷிணாம் கதி:
ததைவ ஞானகர்மப்யாம் ஜாயதே பரம் பதம்
-யோக வாசிஷ்டம்

வானில் இறக்கைகள் இரண்டின் உபாயத்தால் பறவைகளின் போக்கு
அமைவது போல, வீடுபேற்றை அடையும் வழி அறிவு மற்றும் செயல்
இரண்டாலும் அமைகிறது.

277.
ஏகேன அபி ஸுபுத்ரேண சிம்ஹீ ஸ்வபிதி நிர்பயம்
ஸஹ ஏவ தசபி: புத்ரை: பாரம் வஹதி கர்தபீ

ஒரு குட்டியை ஈன்ற பெண் சிங்கம் அச்சமின்றி உறங்கும். ஆனால்
பத்துக் குட்டிகளை ஈன்றாலும் தன் பாரத்தைத் தானே சுமக்கும் கழுதை.

278.
ஸுகம் சேதே ஸத்யவக்தா ஸுகம் சேதே மிதவ்யயீ
ஹிதபுக் மிதபுக் சைவ ததைவ விஜிதேந்த்ரிய:

உண்மையைப் பேசுபவனாலும், குறைவாய்ச் செலவழிப்பவனாலும்,
சத்தான உணவைக் குறைவாய் உண்பவனாலும், புலன்களை வென்றவனாலும் அமைதியாய்த் துயில முடியும்.

279.
தாதவ்யம் போக்தவ்யம் தனவிஷயே சஞ்சயோ ந கர்தவ்ய:
பச்யேஹ மதுகரீணாம் ஸஞ்சிதார்த்தம் ஹரந்த்யன்யே

செல்வம் கொடுக்கவோ அனுபவிக்கப்படவோ வேண்டுமேயன்றி
சேமித்து வைப்பது கூடாது; நெடுநாட்கள் தேனீக்களால் சேமிக்கப்படும்
தேன் பிறரால் அபகரிக்கப்படுகிறது.

280.
பஹ்வீமபி ஸம்ஹிதாம் பாஷமாண: ந தத்கரோ பவதி நர: ப்ரமத்த:
கோப இவ கா கணயன் பரேஷாம் ந பாக்யவான் ச்ராமண்யஸ்ய பவதி
-தம்மபதம்

ஏராளமான சாத்திரங்களைக் கற்றும் அதன்படி நில்லாது போனவன்,
இன்னொருவனின் மாடுகளை தினமும் எண்ணிப் பார்க்கும் மேய்ப்பவனுக்குச் சமமாவான்.

11.9.13

பாரதிக்குத் திதி

இன்றைக்கு பாரதியின் நினைவு நாள். எல்லா நேரமும் அவன் நம்முள் கலந்திருக்கையில் பிறப்பேது இறப்பேது பாரதிக்கு. 

பாரதியின் எழுத்துக்களில் இருக்கும் அடிப்படைச சீர்திருத்தங்கள் கூட இன்னமும் கண்முன்னே காண இயலாது, நினைவு நாளில் அவர் கழுத்தில் சுமத்தப்படும் மாலைகள் சுமையாகவே தெரிகின்றன. 

தினமும் பாரதியை, அவனின் காலத்துக்கு முந்தைய சிந்தனைகளைச்  செயலாயக் காணும் திறனின்று, பாரதியின் சிலைகளுக்கும் படங்களுக்கும் முன்னே இன்றைக்குப் பிதற்றப்பட இருக்கும் உதிர்ந்த சொற்களைக் கொண்டு என்ன செய்யப்போகிறோம் நாம்? 

சிக்கனம் குறித்துப் பேசியபின், 20 கார்களில் சாலைகளில் செல்லும் அரசியல்வாதிகளை நினைவு படுத்தும் செயல் இல்லையா இது? அது புதிதாய் எந்தப் பாதைக்கு நம்மை இட்டுச் சென்று விடும்? யாருக்கு நினைவு நாளையும் பிறந்த நாளையும் நினைவு படுத்த ஆசைப்படுகிறோம்?

இரண்டு நினைப்புகள் தோன்றுகிறது. 

மக்கள் இந்தச் சடங்குகளின் ஜுரத்தில் இருந்து இன்னமும் மீளாதிருப்பது நம் மரபு சார்ந்த மரபு. இந்த அழுகல்களிலிருந்துதான் புதிய விதை முளைக்க இருக்கிறது. 

தன்னளவில் பாரதியின் சிந்தனைகளைச் சொல்லிலும் செயலிலும் சுமப்பவன் இந்த நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நாட்டை விட முக்கியமானவன்.

9.9.13

சுபாஷிதம் -13


241.
ஸிம்ஹாதேகம் பகாதேகம் சிக்ஷேச்சத்வாரி குக்குடாத்
வாயஸாத்பஞ்ச்சசிக்ஷேச்ச ஷட் சுனஸ்த்ரீணி கர்தபாத்

சிங்கத்திடமும் கொக்கிடமும் இருந்து ஒன்றும், சேவலிடமிருந்து நான்கும், காக்கையிடமிருந்து ஐந்தும், நாயிடமிருந்து ஆறும், கழுதையிடமிருந்து மூன்றும் என குணங்களை நாம் கற்க வேண்டும்.

242.
ப்ரவ்ருத்தம் கார்யமல்ப்பம் வா யோ நர: கர்த்துமிச்சதி
ஸர்வாரம்பேண தத்கார்யம் ஸிம்ஹாதேகம் ப்ரசிக்ஷதே

சிறிதோ, பெரிதோ செய்யத்துவங்கிய செயலில் இறங்கியபின் அது முழுமையடைய அதிகபட்ச முயற்சியைக் கொடுக்கும் குணத்தை சிங்கத்திடமிருந்து கற்க வேண்டும்.

243.
இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத்பண்டிதோ நர:
தேசகாலபலம் ஞாத்வா ஸர்வகார்யாணி ஸாதயேத்

இடம், காலம், வலிமை, புலனடக்கத்துடன் செயலாற்ற ஒரு கொக்கிடமிருந்து கற்க வேண்டும்.

244.
ப்ராகுத்தானஞ்ச்ச யுத்தஞ்ச ஸம்விபாகச்ச பந்துஷு
ஸ்வயமாக்ரம்யபுக்திச்ச சிக்ஷேச்சத்வாரி குக்குடாத்

அதிகாலை எழுதல், சண்டையிடல், சுற்றத்துடன் உணவைப் பகிர்தல், தன் காலில் நிற்கும் முனைப்பு இந் நான்கையும் சேவலிடம் கற்க வேண்டும்.

245.
கூதமைதுனதீரத்வம் காலே காலே ச ஸங்க்ரஹம்
அப்ரமத்தமவிஷ்வாசம் பஞ்ச்ச சிக்ஷேச்ச வாயஸாத்

ரகசியக் கலவி, தீரம், வருங்காலத்துக்காக உணவைப் பாதுகாத்தல், நேரந்தவறாமை, யாரையும் நம்பாமை எனும் ஐந்து குணங்களையும் காக்கையிடம் கற்க வேண்டும்.

246.
பக்வாசி ஸ்வல்பஸந்துஷ்ட: ஸுனித்ரோ லகுசேதன:
ஸ்வாமிபக்திச்ச சூரத்வம் ஷடேதே ச்வானதோ குணா:

உற்றபோது அதிகமாயும், அற்றபோது கிடைப்பதையும் உண்ணல், ஆழ்ந்துறங்குதல், நொடியில் எழல், உரியவனிடம் விசுவாசம், வீரம் இந்த ஆறும் நாயிடம் கற்க வேண்டியவை.

247.
ஸுஷ்ராந்தோபி வஹேதாரம் சீதோஷ்ணோ ந ச பச்யதி
ஸந்துஷ்டச்சரதே நித்யம் த்ரீணி சிக்ஷேச்ச கர்தபாத்

தட்பவெப்பம் பற்றிக் கவலையற்றிருத்தல், சோர்வுற்ற போதும் சுமத்தல், நிறைவுற்ற மனது இம் மூன்றையும் கழுதையிடம் கற்க வேண்டும்.

248.
ய ஏதான விம்சதிகுணானாசரிஷ்யதி மானவ:
கார்யாவஸ்த்தாஸு ஸர்வாஸு விஜயீ ஸம்பவிஷ்யதி

மேற்சொன்ன இருபது குணங்களையும் கற்ற ஒருவன் எடுத்த காரியம் யாவினும் வெல்வான்.

249.
லப்தவித்யோ குரும் த்வேஷ்டி லப்தபார்யஸ்து மாதரம்
லப்தபுத்ரா பதிம் நாரீ லப்தாரோக்யஸ் சிகித்ஸகம்

கற்ற பின் குருவை மாணவனும், மணம் உற்ற பின் தாயை மகனும், பிள்ளை பெற்ற பின் உற்றவனைப் பெண்ணும், நோயற்ற பின் மருத்துவரை சிகிச்சை பெற்றவனும் பொருட்படுத்துவதில்லை.

250.
அக்ஷரம் விப்ரஹஸ்த்தேன மாத்ருஹஸ்த்தேன போஜனம்
பார்யாஹஸ்த்தேன தாம்பூலம் ராஜஹஸ்த்தேன கங்கணம்

அறிவாளியின் கரத்தால் அட்சரத்தையும், அன்னையின் கரத்தால் உணவையும், மனைவியின் கரத்தால் தாம்பூலத்தையும், அரசனின் கரத்தால் பரிசையும் பெற வேண்டும்.

251.
வஸ்த்ரதானபலம் ராஜ்யம் பாதுகாப்யாம் ச வாஹனம்
தாம்பூலாத்போகமாப்னோதி அன்னதானாத்பலத்ரயம்

உடையைத் தானமளிக்க அரசும், காலணியைத் தானமளிக்க வாகனமும், தாம்பூலத்தைத் தானமளிக்க இன்பமும் வாய்க்கும். ஏழைக்கு அன்னதானமளிக்க முந்தைய எல்லாப் பலன்களும் ஒருங்கே கிட்டும்.

252.
தீரே தீரே ரே மனா தீரே ஸப் குச் ஹோயே
மாலீ ஸீஞ்ச்சே ஸௌ கடா ருது ஆயே பல் ஹோயே
-கபீர்

ஓ மனமே! தோட்டக்காரன் நூறு குட நீர் வார்த்தாலும், அததற்குரிய நிதானத்துடனேயே, அதற்குரிய பருவத்திலேயே பழங்கள் கனியும்.

253.
படா ஹுவா தோ க்யா ஹுவா ஜைஸே பேட் கஜூர்
பந்தீ கோ சாயா நஹீ பல் லாகே அதிதூர்
-கபீர்

பிரபலமாக இருப்பதால் என்ன பயன்? பேரீச்சை மரத்தின் கீழ் இளைப்பாற நிழலோ, கையெட்டும் தொலைவில் பழமோ இருப்பதில்லை.

254.
விரலா ஜானந்த்தி குணான் விரலா: குர்வந்த்தி நிர்தனே ஸ்நேகம் 
விரலா: பரகார்யரதா: பரதுக்கேனாபி துக்கிதா விரலா:

பிறரின் குணங்களைப் பாராட்டுவோரும், வறியோரிடம் நட்புக் கொள்வோரும், பிறரின் வேலையில் அக்கறை கொள்வோரும்,  பிறரின் துயரில் துயருறுவோரும்  வெகு சிலரே.

255.
யோஜனானாம் ஸஹஸ்ரம் து சனைர்கச்சேத் பிபீலிகா 
அகச்சன் வைனதேயோபி பதமேகம் ந கச்சதி 

விடாமுயற்சி ஓர் எறும்பை ஆயிரம் மைல்களாலானாலும் கடக்கச் செய்யும். முயற்சியின்மை ஓர் கழுகை ஓரடி கூட நகர்த்தாது.

256.
கன்யா வரயதே ரூபம் மாதா வித்தம் பிதா ஸ்ருதம் 
பாந்தவா: குலமிச்சந்தி மிஷ்ட்டான்னே இதரேஜனா:

வரனின் உருவத்தில் கன்னியும், வளத்தில் அவள் தாயும், அறிவில் தந்தையும், குலப் பின்னணியில் சகோதரர்களும் கவனம் செலுத்த, பிறர் அருமையான ஒரு விருந்துக்கு ஆர்வமாய் இருக்கிறார்கள். 

257.
ஆஷா நாம் மனுஷ்யாணாம் காசிதாச்சர்யச்ருங்கலா 
யயா பத்தா: ப்ரதாவந்தி முக்தாஸ்திஷ்டந்தி பங்குவத் 

ஆசை என்பது ஒரு ஆச்சர்யமான சங்கிலி. இச்சங்கிலியில் கட்டுற்றவர்கள் ஏதொன்றின் பொருட்டோ சதா அலைந்து திரிகிறார்கள். கட்டுறாதவர்கள் 
ஊனமுற்றோனைப் போல எதனிலும் பற்றற்று இருக்குமிடத்திலேயே இருக்கிறார்கள்.

258.
உஷ்ட்ராணாம் ச விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா:
பரஸ்பரம் ப்ரசம்ஸந்தி அஹோ ரூபமஹோ த்வனி:

ஒட்டகங்களின் திருமணத்தில் கழுதைகள் பாட்டிசைத்தன. "அடடா என்ன அழகு?" என்று கழுதைகள் மயங்க, "ஆஹா என்ன குரல்?" என்று வியந்தன ஒட்டகங்கள்.  

259.
மனஸா சிந்திதம்கர்மம் வசஸா ந ப்ரகாசயேத் 
அன்யலக்ஷிதகார்யஸ்ய யத: ஸித்திர்ந ஜாயதே 

மனதில் தீட்டிய திட்டத்தைப் பிறரிடம் பகிர வேண்டாம். அப்படிப் பகிரப்பட்ட லட்சியம் வெற்றியடையாது.

260.
கதேர்பங்க: ஸ்வரே ஹீனோ காத்ரே ஸ்வேதோ மஹத்பயம் 
மரணே யானி சிஹ்னானி தானி சின்ஹானி யாசகே 

நடை தடுமாறுதல், குரல் உடைதல், வியர்த்தல், அச்சம் இவையெல்லாம் மரணத்தினது போலவே யாசகனின் அடையாளங்களும்.

7.9.13

ஊதுவத்திக் கவிதைகள்


1.

’அருகில் நீயில்லை
எனும்போதுதான்
தெரிந்தது 
அருகில் நீ இருந்தது’
என்றேன்.

’இல்லாத போது
இருந்ததைச் சுமக்கிறாய்;
இருக்கும்போது 
இல்லாததைச் சுமக்கிறாய்’
என்றான்.

2.

வழக்கமாய் 
'உன்னிடத்தில் 
நான் இருந்திருந்தால் 
அந்தத் தவறைச் 
செய்திருக்க மாட்டேன்' 
என்பவன்- 

'என்னிடத்தில் 

நீ இருந்திருந்தால் 
அந்தத் தவறைச் 
செய்திருக்க மாட்டாய்' 
என்றான்.

பதிலுக்கு 

'உன்னிடத்தில் 
நான் இருந்திருந்தால் 
உன்னை 
மன்னித்திருக்க மாட்டேன்'
என்பவள்-

'என்னிடத்தில் 

நீ இருந்திருந்தால் 
அந்தத் தவறை 
மன்னித்திருப்பாய்'  
என்றாள்.

6.9.13

சுபாஷிதம் - 12


221.
ஜலபிந்துநிபாதேன க்ரமச: பூர்யதே கட:
ததா ஹி ஸர்வவித்யானாம் கர்மஸ்ய ச தனஸ்ய

எப்படித் தொடர்ச்சியாய்க் கசியும் நீர்த்துளிகள் ஒரு பானையை நிரப்புமோ, அதுபோல கல்வி, வினை, செல்வம் இம்மூன்றும் சிறுகச்சிறுக நிறையும்.

222.
உபார்ஜிதானாம் வித்தானாம் த்யாக ஏவ ஹி ரக்ஷணம் 
தடாகோதரஸம்ஸ்தானாம் பரீவாஹ இவாம்பஸாம் 

நிரம்பிய ஏரியைத் திறந்து விடுதல் ஏரியைத் தூய்மையாக்கிக் காப்பது போல, அடைந்த செல்வத்தைக் காக்கும் ஒரே உபாயம் பிறர்க்கு அதைக் கொடுப்பதுதான்.

223.
துர்லபம் த்ரயமேவைதத் தேவானுக்ரஹஹேதுகம் 
மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷஸ்ஸ்ரய:

பிறப்பு, வீடுபேறு, மாமனிதர்களின் நட்பு இம்மூன்றும் தெய்வத்தின் கட்டளையின்றி நிகழாது.


224.
கலஹாந்தனி ஹர்ம்யாணி குவாக்யானாம் ச சௌஹ்ருதம் 
குராஜாந்தானி ராஷ்ட்ராணி குகர்மாந்தம் யசோ ந்ருணாம் 

பிணக்கு குடும்பத்தையும், கடுஞ்சொல் நட்பையும், மோசமான அரசு நாட்டையும், விதைத்தவனைத் தீவினையும் அழித்து விடும்.

225.
ஸுகார்த்தீ த்யஜதே வித்யாம் வித்யார்த்தீ த்யஜதே ஸுகம் 
ஸுகார்த்தின: குதோ வித்யா குதோ வித்யார்த்தின: ஸுகம்

இன்பத்தின் பின்னே செல்பவன் கல்வியையும், கல்வியின் பின்னே செல்பவன் இன்பத்தையும் துறக்கிறான். சுகமுற்றோனுக்குக் கல்வியும், கற்றோனுக்குச் சுகமும் எப்போது கிட்டும்?

226.
தானம் போகோ நாச: திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய 
யோ ந ததாதி ந புங்க்தே தஸ்ய த்ருதியா கதிர்பவதி 

ஆக்கும், காக்கும், அழியும் என்பவை செல்வத்தின் முக்குணங்கள். ஆக்கவோ, காக்கவோ பயன்படா செல்வம் அழியும்.

227.
யாத்ருசை: ஸன்னிவிசதே யாத்ருசாஞ்ச்சோபஸேவதே   
யாத்ருகிச்சேச்ச பவிதும் தாத்ருக்பவதி புருஷ:

யாருடன் பழகுகிறோமோ, சேவை செய்கிறோமோ, யாரை ஒற்றெடுக்க விழைகிறோமோ அவர் போலவே ஆகி விடுகிறோம்.


228.
குணீ  குணம் வேத்தி ந வேத்தி நிர்குணோ பலீ பலம் வேத்தி ந வேத்தி நிர்பல:
பிகோ வஸந்தஸ்ய குணம் ந வாயஸ: கரீ ச ஸிம்ஹஸ்ய பலம் ந மூஷக:

குணவானைக் குணமற்றோன் அறியான். வலியோனை எளியோன் அறியான். வசந்தத்தின் குணத்தைக் குயிலன்றிக் காகமறியாது. சிங்கத்தின் பலத்தை யானையன்றி மூஞ்சூறு அறியாது.

229.  
பதாஹதம் ஸதுத்தாய மூர்க்கானமதிரோஹதி 
ஸ்வஸ்தாதேவாபமானேபி தேஹினஸ்வத்ரம் ரஜ:

மோசமாக அவமானமுற்றும் சொரணையற்று அமர்ந்திருப்பவனைக் காட்டிலும், எடுத்து வைத்த காலடிக்கு அவமதித்ததாய் எண்ணி மூர்க்கமாய் எழும் தூசி மேலானது.  

230.
அதாதா புருஷஸ்த்யாகீ தனம் ஸம்த்யஜ்ய கச்சதி
தாதாரம் க்ருபணம் மன்யே ம்ருதோப்யர்த்தம் ந முஞ்சதி

இறக்கும் போது, கருமி தன் செல்வங்களை எல்லாம் விட்டுவிட்டு வெறுங்கையுடன் செல்வதால் அவனே கொடையாளி. கொடையாளி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுத் தன்னுடன் கொடையின் பலன்களை எடுத்துச் செல்வதால் அவனே கருமி.      

231.
அப்யாஸாத் தார்யதே வித்யா குலம் சீலேன தார்யதே 
குணேன ஞாயதே த்வார்ய: கோபோ நேத்ரேண கம்யதே 
-சாணக்யநீதிஸார் 

பயிற்சியால் கல்வியையும், நடத்தையால் குலத்தையும், தர்மத்தால் குணத்தையும், கண்களால் சினத்தையும் கண்டுகொள்ளலாம்.

232.
கஸ்யைகாந்தம் ஸுகம் உபனதம் துக்கம் ஏகாந்ததோ வா 
நீசைர் கச்சதி உபரி ச தசா சக்ரனேமிக்ரமேண 
-மேகதூத் (காளிதாஸ்)

சுழலும் சக்கரத்தின் ஒரு புள்ளி மேலும் கீழும் சென்று வருதல் போல இடைவிடாது இன்புறுவோருமில்லை; துயருறுவோருமில்லை. 

233.
ப்ரத்யஹம் ப்ரத்யவேஷேத நரஸ்ச்சரிதமாத்மான:
கின்னு மே பசுபிஸ்துல்யம் கின்னு ஸத்புருஷைரிதி 

மிருகங்களிலும், மேன்மையானோரிலும் ப்ரதிபலிக்கும் தன் குணங்கள் எவை எவையென ஒவ்வொரு தினமும் ஒருவன் ஆராய வேண்டும்.

234.
அவ்யாகரணமதீதம் பின்னத்ரோணயா தரகிணீதரணம் 
பேஷஜமபத்யஸகிதம் த்ரயமிதம்க்ருதம் வரம் ந க்ரதம் 

இலக்கணமறியாக் கல்வி, துளையுற்ற படகு, பத்தியமற்ற மருந்து இம்மூன்றாலும் பயனின்மை அதிகம். தவிர்த்தல் வரம். 

235.
சைலே சைலே ந மாணிக்யம் மௌக்திகம் ந கஜே கஜே 
ஸாதவோ ந ஹி ஸர்வத்ர சந்தனம் ந வனே வனே 
-ஹிதோபதேச 

மாணிக்கம் எல்லா மலைகளிலும், ஆணிமுத்து எல்லா யானைகளிலும், சந்தனம் எல்லா வனங்களிலும் எப்படிக் கிடைப்பதில்லையோ அதுபோலத்தான் நன்மக்களும்.

236.
ஸர்வம் பரவசம் துக்கம் ஸர்வம் ஆத்மவசம் ஸுகம் 
ஏதத் வித்யாத் ஸமாஸேன லக்ஷணம் ஸுகதுக்கயோ:

துயருக்கான காரணங்கள் பிறர் கட்டுப்பாட்டில்; சுகத்துக்கான காரணங்கள் நம் கட்டுப்பாட்டில். இன்ப துன்பத்தின் குணாதிசயம் இவ்வளவுதான்.


237.
ஆலஸ்ய குதோ வித்யா அவித்யஸ்ய குதோ தனம் 
அதனஸ்ய குதோ மித்ரம் அமித்ரஸ்ய குதோ ஸுகம் 

சோம்பேறிக்கு ஏது கல்வி? கல்லானுக்கு ஏது செல்வம்? வறியோனுக்கு ஏது நட்பு? நட்பற்றோனுக்கு ஏது சுகம்?

238.
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் 
ஸர்வதேவநமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி.

வானிலிருந்து வீழும் மழை நதிகளில் கலந்து கடலை அடைகிறது. எல்லா தெய்வங்களுக்கும் செலுத்தும் வணக்கங்கள் அத்தனையும் கேசவனை அடைகின்றன.

239.
அனேகசாஸ்த்ரம் பஹுவேதிதவ்யம் அல்பஸ்ச்ச காலோ பகவஸ்ச்ச விக்னா:
யத் ஸாரபூதம் ததுபாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்புமத்யாத் 

பயிலவேண்டிய சாத்திரங்கள் ஏராளம்; காலம் உருகுகிறது. தடைகள் பெருகுகிறது. நீரோடு கலந்த பாலை அன்னம் பிரித்துப் பருகுதல் போல் சாரத்தையும் சக்கையையும் பிரித்தறிந்து பயில வேண்டும்.    

240.
திவஸேனைவ தத் குர்யாத் யேன ராத்ரௌ ஸுகம் வஸேத் 
யாவஜ்ஜீவம் ச தத்குர்யாத் யேன ப்ரேத்ய ஸுகம் வஸேத் 
-விதுர நீதி 

இரவில் அமைதியாய் உறங்க வைக்கும் செயலை நாள் முழுதும் செய்; இறந்த பின் அமைதியாய் வாழ வைக்கும் செயலை ஆயுளெல்லாம் செய்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...