30.4.10

கவரிதாமரையும் அல்லியும் பூத்துக்கெடந்த அந்தியில
தாபத்தோட காதலோட காத்திருந்தேன் கொளத்தருக.
தாமதமா வந்து நீயும் தயங்காம சொல்லிப்புட்ட
கெடைக்காத சம்மதத்த புள்ளத்தாச்சி சாகும்படி.
ஊருசனம் வாறித்தூத்த ஒபகாரம் செஞ்சுபுட்ட.
மீறி நான் என்ன செய்ய ஆயிப்புட்டேன் ஈருயிரா.
எத்தனையோ சொல்லிச்சொல்லி இறுமாந்து போயிருந்தேன்.
அத்தனையும் பொய்யாச்சே அய்யோ நா என்ன செய்வேன்?
ஆதரவா யாரிருக்கா அழுவாதன்னு சொல்லுதக்கு.
அரளியோ கயிறோ கெணறோ புரியலியே .
நாளக்கி நீ வானத்துல நல்லவனாப் பறந்திருப்ப.
நாதி கெட்ட மூதேவி மண்ணுல நா எறந்திருப்பே(ன்).

29.4.10

யூகம்என் வாகனத்தைப் பழுது பார்த்தபோது
நீ மல்லிகை மொட்டுக்கள் வாங்கியபடி இருந்திருக்கலாம்.
பரபரக்கும் சாலையைத் தட்டுத் தடுமாறி
வசவுகள் வாங்கிக் கடக்கையில்
நம் மகன்களிடம் உன் இளம்பருவக் குறும்புகளை
விவரித்துக்கொண்டிருந்திருக்கலாம்.
பொழுது சாய்ந்தபின்னும் திரும்பமுடியாது வழி மறந்து
தேடிக்கொண்டிருக்கையில்
என்னை நீயும் தேடத்துவங்கியிருக்கலாம்.
ஒரு கனரக ஊர்தியின் சக்கரங்களுக்கு இடையே
மெல்ல மெல்ல அறைபட்டதைக்
கேள்வியுற நேர்கையில்
நான் பார்த்திராத கண்ணீரை நீ வடித்திருக்கலாம்.

28.4.10

நிசிமலர்நிசியின் மலர் மொட்டவிழ
மறைந்திருக்கிறாய் ஒரு திருடியாய்.
கனவின் உடை துறந்து மெல்ல
வெளிப்படுகிறேன் கள்வன் நான்.
என் கோப்பையின் தளும்பி வழியும்
நிலவின் மதுவூட்டத் திளைக்கிறாய்.
யாருக்கும் கேட்காத உன்னத இசையை
இசைக்கிறேன் உன் தின்பண்டச் செவிகளில்.
வெட்கம் சொட்டும் விரல்களால்
வரைகிறாய் உன் மழலை மொழி.
இறுதியாய்க் காற்றென ஒவ்வொரு
இதழாய் மெல்லத் திறக்கையில்
மயங்கிச் சரிகிறாய் பூம்பாரமாய்.
எப்போதுதான் பார்க்க இருக்கிறாய்
மொட்டவிழும் ஒரு மலரை?

10.4.10

மாந்தோப்பில் ஓர் இரவு-I


தஞ்சாவூர்க்கவிராயரைச்(த.க.) சந்திக்க,கும்பகோணத்தில் துளிர் வெற்றிலை அரைக் கவுளி,வாசனை சீவல், சுண்ணாம்பு,ஒரு கண்ணாடிப் போத்தலில் குடிநீர் சகிதம் தஞ்சாவூர் பேருந்தில் ஓட்டுநரின் இருக்கையின் பக்கவாட்டுத் தனி இருக்கையில் உட்கார்ந்தேன். த.க.விடமிருந்து தொடர்ச்சியாகத் தொலைபேசி அழைப்புகள்.சாப்பிட்டாயா?பஸ் ஏறிவிட்டாயா?எங்கு இறங்க வேண்டும்?இறங்குமிடத்தில் நான் காத்திருப்பேன் என அன்பின் இழை கலந்து அடர்த்தியாக நெய்து தள்ளினார்.பேருந்து முனகியபடியே ஓடிச்சென்றது.

ஒவ்வொரு திருப்பத்திலும் ஒவ்வொரு சம்பவத்தின் வழிபடல்.ஒரு தூணின் பின்னே தஞ்சாவூர் பெரியகோயிலில் நாடக இயக்குநர் ராமானுஜம் என்னையும்,ப்ரகாஷையும் இணைத்து ஒரு நாடக ஒத்திகைக் காட்சி நினைவில் அசைந்தது.

ப்ரகாஷுடன் மாக்ஸ் ம்யுல்லர் பவன் நடத்திய ஜெர்மன் மொழி வகுப்புகளுக்கு வாரம் இருமுறை தஞ்சையிலிருந்து திருச்சி சென்ற பயணங்கள்-வங்காள ஆசிரியர் நடராஜன் போதித்த வங்காள மொழி வகுப்புகளுக்கு மாணவர்களாகப் ப்ரகாஷுடன் சென்ற நாட்கள்-ஓஷோவின் தத்துவங்கள் எங்களை ஈர்த்து பல இரவுகளை விழுங்கிய எண்ணங்கள்.

திருச்சி ஜாஃபர்ஷா தெருவில் மறைமுகமாக தடை செய்யப்பட்ட ஓஷோவின் புத்தகங்கள் வாங்கிய அனுபவங்கள்-கும்பகோணத்தில் கரிச்சான்குஞ்சு-எம்விவி- ஸ்வாமி சாது.பொன் நடேசன் இவர்களைச் சந்திக்கச் சென்று கரைந்த பல நாட்கள்-க்ருஷாங்கினி,நாகராஜன் வீட்டில் தொடரும் அரட்டைகள்-மதுரை நிஜ நாடக விழாவிற்கு மு.இராமசாமியின் அழைப்பின் பேரில் சென்று ராஜமார்த்தாண்டன் உள்ளிட்ட பல நண்பர்களோடு செலவிட்ட இரவுகள்.

பள்ளி அக்ரஹாரம் தாண்டியபோது த.க.வின் அழைப்பு.பதிலளித்து விட்டுத் தஞ்சாவூரை நெருங்கும் பரபரப்பு.ஒவ்வொரு முனையிலும் ஒரு வேளை தாடியை நீவிவிட்டபடி ப்ரகாஷ் காத்திருக்கக் கூடும் என்று தேடினேன்.எல்லா வாய்க்கால்களும் மனித மனங்களைப் போல வறண்டு கிடந்தன.மண்ணிலும் ஒரு செழிப்பு இல்லை.வறட்சியை பறைசாற்றும் காட்டுச் செடிகள்-புதர்கள்-இளைத்த நாய்கள்-தஞ்சாவூர்.

இன்னும் அன்பு பால் நிலையத்தில் கல்கண்டுப்பாலும்,லெஸ்ஸியும் அருந்திவிட்டு ஓடிப்போய் பஸ் ஏறும் மக்கள் கண்ணில் பட்டனர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இருந்த இடத்தில் எத்தனை நாட்கள் மோகனை மையப்படுத்தி ப்ரகாஷுடன் பேசித்தீர்த்திருப்போம்?

மாவட்ட மைய நூலகம் எந்த மாற்றமுமின்றி அழுதபடியே இருந்தது.ராஜராஜ சோழனின் வாள் உரையிலேயே இருந்தது.வெளிநாட்டுப் பயணிகள் பிரமிப்புடன் கோயிலை அண்ணாந்து பார்க்க அவர்களை பிரமிப்புடன் உற்றுப் பார்த்து தங்கள் இங்கிலீஷைத் தூசி தட்டி மிரட்டிய உள்ளூர் கைடுகள்-நிறைய மேம்பாலங்கள் முளைத்துவிட்டன.

தாண்டித்தாண்டிப் போகையில் மதியம் இரண்டு மணிக்குக் குழந்தை ஏசு ஆலயத்தில் ஓர் இளைஞன் கைலியுடன் மண்டியிட்டுச் செலுத்திய பிரார்த்தனை என்னவாக இருக்கும்?ஞாயிற்றுக்கிழமையின் நிழல் சாலையெங்கும் பரந்து விரிந்தது.

புதிய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறினேன்.ஏழு ரூபாய்த் தொலைவில் இருந்தது மேல உளூர் என்னும் த.க.வின் இளம்பிராயத்துக் கிராமம். அருகில் இருந்த நண்பரிடம் உங்களுக்கு எந்த ஊர்?என்றேன்.சரியாகக் காதில் வாங்காத பாவனையுடன் அவர் தூங்க ஆரம்பிக்க உரையாடல் பதில் கிடைக்காமல் முடிவுக்கு வந்தது.

சிவாஜிகணேசனின் சூரக்கோட்டையைத் தாண்டியது.எங்கு பார்த்தாலும் நெடுஞ்சாலை விரிவாக்கம்.யாரும் யாருடனும் பேசவில்லை. ஆனால் குறைந்தது இருபது பேராவது தொலைபேசியில் பேசியபடியும்,இருபத்திஐந்து பேராவது தொலைபேசியை நோண்டியபடியும் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள்.

முடிக்கற்றைகளை மீண்டும் மீண்டும் சரி செய்தபடியும், தன்னை யார் கவனிக்கிறார்கள் என்று ஓரக்கண்ணால் பார்த்தபடியும் அமர்ந்திருந்த என் முன் இருக்கைப் பெண்ணை ரசித்தேன்.நடத்துனர் ஓட்டுனருடன் ஆடி வெள்ளி அன்று அம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றிய வைபவத்தை விலாவாரியாகக் கதைத்து வந்தார்.

எனது வலது கைப்புற இருக்கையின் பயணி மதிய உணவுக்குப் பின்னான மயக்கும் உறக்கத்துடன் ஆடியபடி வந்தார்.ஒரு பிரேக்குக்கு முன்புறக் கம்பியில் நெற்றியை ஓங்கி இடித்துக்கொண்டு மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பித் தூக்கம் தொடர்ந்தார்.

இரண்டாம் முறை சற்று பலமாக மோதிக்கொண்டபோது வலி சுள்ளென்று உரைக்க ஒரு கையால் கோட்டுவாயைத் துடைத்தபடி மறு கையால் நெற்றியைத் தடவியபடியே தன்னை யாரும் கவனித்துவிட்டார்களா?என்று பரக்கப் பரக்கப் பார்த்தார்.

சிறிது நேரம் சென்றது.அவரை மீண்டும் பார்க்க நேர்கையில் அரைகோள வடிவில் வாயைத் திறந்தபடித் தூங்க ஆரம்பித்திருந்தார்.டிரைவர் இன்னொரு பிரேக் போடும்முன்பாக மேல உளூர் வந்து சேர்ந்தேன்.

அடர்ந்த பழுப்பு நிற Tஷர்ட்டோடும்,அதே நிற லுங்கியோடும் த.க. கைகளை வீச இறங்கி நடந்து கைகுலுக்கினேன்.மனது மகிழ்ச்சி அடைந்தது.
ஒரு பெட்டிக்கடையின் கருப்புக்கலர் வாங்கிப் பருகிவிட்டு த.க. கைகாட்டியபடி தன் இளம்பிராய நினைவுகளை காட்சிப்படுத்தியபடிக்கு வந்தார்.அவர் சிறுவனாய் ஓடிமறைந்த ஓடை நீரின்றிக் காய்ந்து கிடந்தது.

அவரின் நண்பர் பரஞ்ஜோதிவேலின் வீட்டை அடைந்தோம்.வீடெல்லாம் சாணமிட்டு மெழுகிய காட்சி-வெட்டிவைக்கப்பட்ட இளநீர்கள்-தொட்டி-வாளி நிரம்பிய நீர்-வானம் மறைத்த நீண்ட தென்னையின் கீற்றுகள்.

சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நண்பர் பரஞ்ஜோதிவேலை த.க. இப்போதுதான் சந்திக்கிறார்.பரஸ்பர அறிமுகங்கள் நிறைவுற்றன.பரஞ்ஜோதிக்கு த.க.வின் சகோதரியின் வயது.இருவருக்கும் இடையே கிணறு போல ஆழமான நட்பு.ஆனாலும் மரியாதை கலந்த நட்பு ததும்பி வழிந்தது.

(தொடரும்)

5.4.10

ஊடகம்

I
கொஞ்சம் கொஞ்சமாய்
உங்களுக்கே தெரியாது
உங்களின் சமையலறை
களவாடப்பட்டது.
உங்கள் ருசி-
உங்கள் மொழி
அதல பாதாளப்
படுகுழியில் தள்ளப்
பட்டதும்-நுனிநாக்குத்
தமிழ் பரவியதும்
கொஞ்சம் கொஞ்சமாய்
வேர்கள் உருவப்பட்டதும்
எல்லாமே இழந்ததும்
கல்லறையின் நிசப்தமாய்
என்னை உலுக்குகிறது.
II
சமையலறை அழிந்து
மெல்ல மெல்லப்
படுக்கைஅறையும்
சுவர்களை இழந்தன.
வெட்கம் பிடுங்கும்
அருவெறுப்போடு
கைகளில் சுமக்கும்
ரிமோட்களைத் துரக்க
மனமின்றி வரவேற்பறைக்கு
படுக்கை அறையை
அனுமதித்து
அங்கலாய்க்கிறீர்கள்.
III
மாறுதலைத் தவிர
எதுவுமே மாறாதது
என்றாலும்-
எது மாறியதோ
அது மாற்றப்பட்டது.
எது மாறாதிருக்கிறதோ
அது மாற்றமுடியாதது.
எது மாற்றப்பட்டபோதும்
மாற்றமடையாதிருப்பது
தீர்மானிக்கும்
என் வார்த்தைகளை.

3.4.10

சீதனம்
விட்டுச் செல்கிறேன் நிலத்தடிநீர் கொன்ற பாவத்தை
தணியாத தாகத்தை- ஈரமில்லா மனங்களை-
நெல்மணம் மறந்த வீடு முளைத்த வயல்வெளியை-

விட்டுச் செல்கிறேன் பிஸ்கட் தேனீருடன்
விவாதித்து ஒழியும் அமர்வுகளை-
நிசப்தம் கொல்லும் சதா பேச்சுக்களை-

விட்டுச் செல்கிறேன்-
அசுத்தமான புற்பரப்பை பாலிதீன் மண்வெளியை-
மாசு படுத்திய காற்றை- மாசு பட்ட அரசியலை-
மதிப்பில்லா எண்கள் தரும் மந்தைக் கல்வியை-

விட்டுச் செல்கிறேன் தாய்ப்பால் அற்றுக்
கதறும் என் தமிழை.

சரித்திரத்தின் சவுக்கடி வாங்கக் காத்திருக்கும்
மந்தையின் ஒரு ஆடாய் குற்ற உணர்வுடன்
விட்டுச் செல்கிறேன் கைகளில் கனக்கும்
இந்தக் கவிதையை.

1.4.10

கொடும் பிரிவு
காத்திருக்கிறேன் காரணங்களும்
சூழ்நிலைகளும் நிசப்தமாய்த் தொடரத்
தவிக்கிறது நமக்கான பொழுது.
உப்பில் ஊறிய நாளின் நெருக்கடிகளை-
கடக்கும் பாதையின் நெரிசல்களை- நன்கறிவேன்.
எப்படியும் நீ வந்து விடுவாய்.
இசைக்காத பியானோவின்
பெரும் அமைதியாய்ச் சொட்டுகிறது
நீயற்ற பொழுதின் அனல்.
காரணமற்ற தாமதம் தொடரத்தொடர
விபத்துக்களின் கருஞ்சாயம் பூசித்
துயருற்றது என் நண்பகல்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...