30.11.11

சாகாத கனா (அல்லது) ஒரு ஆறரை நிமிஷங்கள் ப்ளீஸ்


கனவு காண்பது கடினமானதல்ல. அது மெய்ப்படுவதுதான் மிகக் கடினமானது. அபூர்வமானது. இதற்கான விலையும் வலியும் மிக மிக அதிகம். கனவுகளை அடைந்தவர்கள் இதற்கான வலியையும் சேர்த்து அடைந்தவர்களாயும் அந்த வலியை ரசித்து உண்டவர்களாயும்தான் இருக்கமுடியும். 

வாழ்வென்பதும் மரணமென்பதும் இரு எல்லைகளாய் நிற்க இடைப்பட்ட வெளியில் நாம் உதைத்துச் செல்லும் உதைபந்தாய் இப்படிப்பட்ட கனாக்கள். அந்தப் பந்து நிச்சயம் அதன் இலக்கைத் தொடும் என்பவர்களால் மட்டுமே விளையாடப்படும் அபூர்வமான ஆட்டம் அது. அப்துல் கலாமின் வார்த்தைகளில் தூங்கும்போது வருவதல்ல. தூங்கவிடாமல் செய்வதே கனா. 

எனக்குள் குமிழியிடும் 
அந்தக் கனா 
இன்றில்லை 
ன்றாலும் 
நாளை மலரும். 
என் சிகை 
நரைத்து விடலாம். 
என் கன்னங்களில் 
குழி விழுந்துவிடலாம். 
நான் போகும் பாதை 
மூடப்பட்டு விடலாம். 
ஆனாலும் 
வெற்றி தோல்வி 
எனும் 
அடையாளங்களை 
உதிர்த்த என் கனா 
எட்டப்பட்டிருக்கும். 
என் பெயரசையும்
வண்ணக்கொடி
அங்கே 
கட்டப்பட்டிருக்கும் 

என்கிற விதமாய் வரையப்படுகிறது கனவு குறித்த இந்த ஓவியம். 

சேர்ந்திசை (கோரஸ் என்று எதற்கும் எழுதிவிடுகிறேன்) என்கிற வடிவத்தை ஆகாஷ்வாணியைப் போல அதன் பின்னால் தூர்தர்ஷனைப் போல வேறு யாரும் பயன்படுத்தியதில்லை. உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்று பல முதல்களைச் செய்துவிட்டு சப்தமில்லாமல் இருப்பது பற்றி இரைச்சலையும் எல்லா நேரத்திலும் கொஞ்சியும் வழியும் இந்தச் செயற்கைக் கலை வியாபாரிகளுக்கு ( புதிய தலைமுறை மற்றும் மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக) யாராவது பொட்டில் அடித்தாற் போல சொன்னால் தேவலை.

தமிழில் பல நல்ல சேர்ந்திசைப் பாடல்களை காலத்தால் மறக்கமுடியாத எம்.பி. ஸ்ரீனிவாசன் தந்ததோடு போயிற்று இந்த வடிவம். ஒரு நல்ல செயல் நிகழும் போது நம் கண்ணுக்குப் புலப்படாத முப்பத்துமுக்கோடி தேவர்களும் வானிலிருந்து ததாஸ்து-அப்படியே ஆகட்டும் என ஆசீர்வதிப்பார்கள் என்பது இந்திய நம்பிக்கை. அந்த வகை இந்த சேர்ந்திசைப்பாடல்கள். அற்புதமான சத்தியமான இந்த வரிகளை உரத்த குரலில் சேர்ந்திசையாகக் கேட்கும்போது தேவர்களின் வாழ்தொலி போலக் கேட்பதாய் உணர்கிறேன். 

தமிழின் எல்லா நல்ல இசையமைப்பாளர்களும் கோரஸ் வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவை அத்தனையும் வெற்றிப்பாடல்கள்தான். ரெஹ்மான் மெட்ராஸ் கோரஸ் குழுவினரைக் கொண்டு இந்த ஆர்கெஸ்ட்ரைசேஷனை மிகச் சிறப்பான ஹார்மனியைக் (ஒத்திசைவு?) கொண்டு வந்திருக்கிறார். 

சூரியனின் கால் படாத புலரிக் கடல்மணலில் மெல்லக் கால் பதித்துக் கண்டெடுத்த சிப்பியை போல சின்ன நடுக்கத்துடனும் மென்மையுடனும் துவக்குகிற சித்ராவின் குரல் அப்புதையலை வெளிக்கொணர அதன்பின் 1.07ம் நிமிடத்தில் தொடங்கி 2.45 வரை இசைக்கப்படும் இசைக்கோர்வையைக் கேளுங்கள். அது தேவாமிர்தம்.

2.56ல் இருந்து 3.20 வரை -சித்ரா கண்ட கனவு ரெஹ்மானின் கைகளுக்கு மாற தான் மட்டுமே முதன்முதலில் கண்டெடுத்ததாயும் தனக்கே மறுபடியும் ஊர்ஜிதப்படித்திக்கொள்கிற ரகஸ்யமானதுமான ரெஹ்மானின் கீழ்ஸ்தாயிக் குரல் அற்புதமாய் அடுத்துத் தொட இருக்கிற உச்சத்தைக் கோடி காட்டிவிடுகிறது. பின் தனியாய் ஒரு சுடர் போல 3.23 முதல் 4.07 வரை அசைந்தெழும் அந்தக் குரல் கூட்டணியின் சங்கமத்தில் 4.30 முதல் சுட்டெரிக்காத பெரும் ஜ்வாலையாய் பீறிட்டுக் கிளம்புகிறது. முழுதும் கண்களை மூடிக்கேட்டு முடித்தபின் உங்களால் அடுத்த பத்து நிமிடத்துக்கு வேறெதுவும் செய்ய முடியாது. இது சத்தியம்.

மேற்கத்திய உருவத்தில் இந்த வரிகளை நனைத்த சித்ராவுக்கும் ரெஹ்மானுக்கும் எழுதிய வைரமுத்துவுக்கும் நன்றிச் சொல்லுக்கு மாற்றாக எந்த வார்த்தைகளை நான் உபயோகப்படுத்த முடியும்? ஒரு தடவை உன்னதமான உங்கள் குரலில் பாடிப்பாருங்கள். 

ஒரே கனா என் வாழ்விலே 
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்.
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன். 
வானே என் மேல் சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன். 
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன். 

வேண்டுமானால் கடைசி இரு வரிகளை 
- கொஞ்சலும் நிலா வாங்கலும் தேவைப்படாதவர்கள்- 
”வானும் மண்ணும் தேயும்வரை
வாழ்ந்து காட்டுவேன்” 
என்று இப்படி மாற்றிக்கொள்ளலாம். வைரமுத்துவிடம் நான் சொல்லிவிடுகிறேன். 

28.11.11

இன் தினோ தில் மேரா

LIFE IN A METRO.

அநுராக் பாசுவால் 2007ல் இயக்கப்பட்ட இந்தப் படம் [ ஈயடிச்சான் காப்பியாக இருந்தாலும் ] வழக்கமான படங்களிலிருந்து விலகி சிக்கலான உறவுகள் குறித்துப் பேசியது. ஆனால் நான் எழுத நினைப்பது அந்தப்படத்தைப் பற்றியல்ல. 

தோராயமாக 1500 நாட்களுக்கு முன்னால் ப்ரீதம் சக்ரபொர்த்தியால் (தமிழில் சக்கரவர்த்தி) இசையமைக்கப்பட்டு சய்யீத் காதிரி எழுதிய இன் தினோ பாடலைப் பற்றித்தான் மிகவும் சுறுசுறுப்பாய் இந்த வியாக்யானம். 

இடைவெளிகளை மாற்றி மாற்றி நிரப்பும் கிடாரின் குழைவும் மௌத் ஆர்கனின் நெளிவுகளும் நிரம்பிய மென்மையான ராக் வடிவப் பாடலான இப்பாடலை சோஹம் சக்ரபொர்த்தி பாட நமக்கு சந்தோஷம் வருகிறது. உற்சாகம் வருகிறது. யாருடைய தவறையும் மன்னிக்க வைக்கிறது. யாரிடமும் மன்னிப்புக் கோர வைக்கிறது.மொத்தத்தில் ஈகோவை விரட்டி போகோ பார்க்கும் குழந்தையாய்க் கிடத்தி விடுகிறது. நல்ல இசையும் எழுத்தும் செய்யும் மாயம் இவை. காலையில் காதில் பட்டுவிட்டால் குளியலறையிலோ சாலையின் போக்குவரத்து நிறுத்தத்திலோ அந்த நாள் முழுதும் முணுமுணுக்கவைக்கும் உத்தரவாதம் கொண்டது. 

பாடலின் நடுவே வரும் மெல்லிய குறும்புகள் கொண்ட உரையாடலுக்கு மொழிபெயர்ப்புத் தேவையில்லை. இருந்தாலும் பெயர்க்காமல் இருக்கமுடியவில்லை.

ஆ: நானும் ஒன்னோட இன்னிக்கி அந்தேரிக்கு வர்றேன்.போலாமா?
பெ: ம்ம். ஆனா நா லேடீஸ் கம்ப்பார்ட்மெண்ட்ல போறேன்.
ஆ: நோ ப்ராப்ளம்.
பெ: என்ன நோ ப்ராப்ளம்? அதுல வரணும்னா நீ பொண்ணா மாறணும்.
ஆ: ஆனா ஜெனரல் கம்ப்பார்ட்மெண்ட்ல வர்றதுக்கு நீ ஆணா மாற வேண்டியதில்ல.

வழமை போல முழுமையாய் ரசிக்க என்னாலான வரைக்கும் மொழிபெயர்த்திருக்கிறேன்.

in dinodil meramujhse hai keh raha
இப்போதெல்லாம் என் மனது சொல்கிறது

Tu khwaab sajatu ji le jaradesign
கனவு காணவும் நேர்த்தியாய் வாழவும். 

Hai tujhe bhi ijaazatkarle tu bhi mohabbat
உனக்காக நீ காதலிக்கவேண்டும் 
அதற்குரிமையுண்டு உனக்கு

Berang si hai badi zindagikuch rang toh bharoon
என் வாழ்க்கை வெளிறிப்போய்விட்டது
அவற்றை ஏதோ வண்ணங்களால் நிரப்புகிறேன்

Main apni tanahaayi ke waaste ab kuchh toh karoon 
என் தனிமைக்கும் ஏதாவது செய்யவேண்டும்

jab mile thodi fursat , khud se karle mohabbat 
நேரம் வாய்க்கையில் உன்னை நீ நேசி

Hai tujhe bhi izaazatkarle tu bhi mohabbat 
உனக்காக நீ காதலிக்கவேண்டும் 
அதற்குரிமையுண்டு உனக்கு

Usko chhupaakar main sabse kabhi le chaloon kahin door
அவளை ஒளித்துவைத்து எங்காவது 
தொலைதூரத்துக்குக்
கொண்டுசெல்ல வேண்டும்

Aankhon ke pyaalon se pita rahoon uske chehre ka noor
என் பார்வையால் அவளின் வசீகரத்தைப் பருக விரும்புகிறேன்

Is zamaane se chhupakar , puri karloon main hasrat
இந்த சமூகத்திலிருந்து மறைந்து என் துயரத்தைத்
தணிக்க விரும்புகிறேன்.

Hai tujhe bhi ijaazatkarle tu bhi muhabbat
உனக்காக நீ காதலிக்கவேண்டும் 
அதற்குரிமையுண்டு உனக்கு.

பிடித்தவர்களுக்கு மறுபடியும் கேட்கத் தோன்றும் .
பிடிக்காதவர்களுக்கும்தான்.

27.11.11

மழைக் கவிதை


இந்த வரிகளில்
பெய்து கொண்டிருக்கும்
அதே மழை

கடைத்தெரு
வண்டிக்காரர்கள்
தீர்க்க வேண்டிய
கடன் வாக்குறுதிகளில்
இரக்கமின்றிப்
பொத்தல் இட்டு
உள்ளே நுழைகிறது

வரவேற்க விரும்பாத
வீடற்றவர்களின்
முகவரிகளையும்
பசியாற்றும்
அடுப்புக்களின்
நெருப்பையும்
கொஞ்சமும் தயவின்றி
அழித்துச் செல்கிறது

இரை தேடித் தவிக்கும்
பறவைகளின்
சிறகுகளை நனையவும்
பசியால் காயவும்
வைத்து
கூடுகளின் வாயிலில்
விருந்தாளி போல
எட்டிப் பார்க்கிறது

நோயாளிகளின்
விடாத இருமலாயும்
அரைகுறை
மருத்துவனின்
கல்லாப்பெட்டி
நாணயங்களாயும்
ஒரே சமயத்தில்
ஒலிக்கும் மழை

இதெல்லாம் போக
எப்போதாவது
காகிதக் கப்பல்களைச்
சுமந்தாலும்.
தவறாமல்
எல்லா நேரமும்
இப்படியான
கவிதைகளைச் சுமக்கிறது.

26.11.11

போறாளே பொன்னுத்தாயி

ஒவ்வொரு முறையும் என்னைக் கலங்க வைக்கும் இந்தக் குரலையும் வரிக
ளையும் என் வட்டத்தில் பேச முடிந்த எல்லோரிடமும் பேசித் தீர்த்தாயிற்று. இன்னும் தீரவில்லை இதன் மூச்சுமுட்ட வைக்கும் துயரம். இனி இப்படி ஒரு பாடலைப் பாட ஸ்வர்ணலதா வரமாட்டார். வைரமுத்துவாலும் இப்படி ஒரு பாட்டை எழுதமுடியாது. அதேதான் ரெஹ்மானுக்கும்.

அந்தப் பாடலின் ஆறு நிமிடங்களும் கடப்பதற்குள் ஒரு முழு வாழ்வையே கடப்பது போல் எத்தனை அனுபவங்கள்? கிராமத்து அப்பாவிப் பெண்ணொருத்தி.மனதின் கட்டளைக்குப் பலியாகி ஒருவனைக் காதலித்து அவன் விட்டுச் சென்ற மீளாக் காயத்தைக் கடைபரப்புகிறாள். புகைந்தபின்னும் மணத்தை விட்டுச் செல்லும் ஊதுவத்தியைப் போல இந்தப் பாடலின் குரல் முடிந்த பின்னும் நம் புலன்களின் ஆணிவேர் வரை அசைத்தெடுத்து விடுகிறது. 
ரெஹ்மானின் இசையில் ரெஹமானும் நஸ்ரத் ஃபடே அலி ஃகானும்  ஹிந்தியில் கொடுத்த சந்தா சூரஜ் பாடலின் அனுபவமும் ஸ்வர்ணலதாவின் உயிரைத் துளைக்கும் குரலும் கவிதையாய் மிளிரும் வைரமுத்துவின் வார்த்தைகளும் உர்து மொழியில் மட்டுமே கிடைக்கும் கஸல் அனுபவமும் வேறுவேறு ரஸானுபவங்கள்..

பாடலுக்கு ஏற்ற வரிகளும் வார்த்தைகளும் ஒரு பாடலை உன்னதமான கவிதையாக்கி விடுகின்றன.

போறாளே பொன்னுத்தாயி 
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறுந் தந்த 
மண்ண விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழிய விட்டு
போறாளே பொட்டப் புள்ள 
ஊர விட்டு

சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா 

எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சீவன்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்ட போல

நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில் 
ஊமையும் ஊமையும்
பேசிய பாசையடி
தெக்கத்திக் காத்து 

தெச மாறி வீச
ஒண்ணான மேகம் 
ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒண்ணு 
வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது 
சாதிக்கு ஆனதடி

நெஞ்சுக்குழி காஞ்சு 
நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர் 
வீட்டுக்குங் காட்டுக்குங் 
கூட்டுக்குள் இழுக்குதம்மா
சேமிச்ச காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு 
பாரமம்மா பாரமம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் 
தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு 
ஏழைக்கும் வாழைக்கும்
நாளைக்கு நன்மையம்மா

பழகின மண்ணை விட்டு நிர்பந்தங்களுக்காகத் தொலைதூரம் போகும் எல்லாக் கருத்தம்மாக்களுக்கும் கருத்தப்பன்களுக்கும் எழுதப்பட்டுப் பாடப்பட்ட ஒரு உன்னதமான வெள்ளை மலரையொத்த பாடல் இது. [இதற்குச் சமமான மற்றொரு பாடலான விடைகொடு எங்கள் நாடே வேறொரு மனதை உலுக்கும் ரகம். அது வேறொரு இடுகையில் எழுதுவேன்.]

தண்ணீருஞ் சோறுந் தந்த மண்ணோடு பால் பீய்ச்சும் மாட்டையும் பஞ்சாரத்துக் கோழியையும் அஞ்சாறு சீவனையும் விட்டுப் பிரிய நேர்ந்தால் அவைகளும் கூடத்தான் கண்ணீர் சிந்தியிருக்கும். 

கருத்தம்மாவுக்குத் தெரிந்த உயர்ந்த ஜாதிப்பூ சாமந்திப்பூவும் ஊமத்தம்பூவுமே. அதில் தான் எந்தப் பூவோ எனக் கவிதை கேட்க நேரும்போது ரோஜாக்களும் மல்லிகையும் கூட கருத்தமாவுக்காக இரண்டு சொட்டுக் கண்ணீரை உதிர்க்கும். பொதிமாட்டு வண்டியில் எல்லா பாரமும் ஏற்றி முடித்தான பின் இடமிருந்தால் அதன் மேலே போனால் போகிறது என்று போட்டுவைக்கிற வண்டியோட்டியின் மூட்டை போலிருக்கும் அவள் வாழ்க்கைக்கு வேறேது பொருத்தமான உவமையாய் இருந்துவிடும்?

ஊமையும் ஊமையும் பேசிய பாஷை போல பூசப்பட்ட நேசமும் பாசமும் ஆகிப்போகும் போது காற்றால் திசைமாறிய மேகத்தின் கிட்டாத உயிர்த்துளிக்காய் வாடி நிற்கும் நாற்றாகி விடுகிறது.                                                                            
                                              
ஒருவருக்காகக் காத்து நின்ற ஓர் உயிர்த்தவிப்பு யாருக்காகவோ எனும்போது அவளின் காதல். எத்தனை உருக்கமான கற்பனை?  ஆனால் அந்த வரியை வைரமுத்துவிடம் அனுமதி கேட்டுக்கொண்டு இப்படித்தான் பாடுவேன் நான். கடைசியில் சாமிக்கு நேர்ந்தது பூசாரிக்கு ஆனதடி. முகமில்லாத சாதியை விட முகம் தெரிந்த தனக்கு விருப்பமில்லா ஒரு பூசாரிக்குப் போனதன் துயரம் இன்னும் ஆழமான வடுவாய் மனதின் சுவர்களில்.           
                                                                                                               
மூட்டை மூட்டையாய் சேமித்த அத்தனையும் பொழுதுவிடியும் போது கலைந்த கனவு போல செல்லாக்காசாய் மாறும் சோகம் இழப்பவனுக்கு மட்டுமே நேரும் தீராக் காயமானாலும் அது நம்முடைய சேமிப்பையும் அல்லவா செல்லாக்காசாகிப் போனதுபோல உலுக்குகிறது? 

கன்னங்களில் வடிந்து காய்ந்து போன உவர்நீர்க்கோலங்களாய் வாழ்க்கை தீய்ந்து போனதாய் முடிக்கும் போதும் பொறு பொறு நாளை உனக்கான வாழ்க்கை ஒரு வாழையைப்போல அதன் கீழுள்ள கன்று போல நன்மை செய்யக் காத்திருக்கிறது என்று நம்பிக்கையை அவள் தனக்கே தனக்காய் சொல்லிக்கொள்ளும் போது அந்தக் கவிதை உன்னதமான ஒரு காவியமாய் நம் மனதில் அசைகிறது.

இந்தப் பாடல் தந்த அனுபவம் நான் பெற்ற பேறு. சாகும் வரையும் செத்த பின்னும் என்னை விடாது. தேசிய விருதுகள் இதுபோன்ற பாடல்களால் பெருமை அடைகிறது என்றாலும் உலகத் தரத்தை அனாயாசமாகத் தொட்ட பாடல். ரெஹ்மானுக்கும் ஸ்வர்ணலதாவுக்கும் வைரமுத்துவுக்கும் நன்றிகள் சொல்லி மிகுந்த மனநிறைவுடன் எழுதிமுடித்த பின்னும் இன்னும் அந்தக் குரல் சயனைட் போலத் தொடர்கிறது. என்ன செய்ய?

25.11.11

முடியாத பயணம்


வீட்டைப் பிரிந்து
நள்ளிரவு ரயிலில்
அழுதுவடியும்
வெளிச்சத்தில்
ஆளற்ற ஊர்களைக்
கடக்கும்
உறக்கமற்ற இரவுகளை
நீங்கள் பெற்றதுண்டா?
குருதி வடியும்
காயங்கள் அவை.

நீரற்ற நதிப்பாலங்களை
பெருத்த இரைச்சலோடு
கடக்கும்போது
தடதடவென அதிர்கிறது
மனது என்றும்

மலையடிவாரங்களில்
ஆடுகள் மேயும்
தரிசு நிலங்களை
ஊளையிடும் காற்றோடு
கடக்கும் போது
சுமைதாங்காது
அழுதுவிடலாம் என்றும்

அவிழும் காற்சட்டையைப்
பிடித்துக்கொண்டே
கையசைத்தபடி
ரயிலோடு ஓடிவரும்
சிறுவர்களின் தனிமையும்
பின் தொடரும் வெறுமையும்
மீளாத் துயரம்தான்
என்று எழுதிவிடலாம்
இந்த வரிகளை.

என்றாலும்
மனதின் சுவர்களில்
தெறிக்கும்
துயரத்தின் சாறு
கடக்கும் காட்சிகளால்
அல்ல
ஓரிடத்தை
அடைய
மற்றோரிடத்தை
விட்டுச் செல்வதில்தான்
என்றுணர்த்த
நீள்கின்றன
பயணங்கள் முடிவுறாது.

23.11.11

மன்னிக்க வேண்டுகிறேன்.


காலங்களைக்
கடந்து நிற்பவை
எல்லாம் கடவுள்.
மதங்களின் எல்லைகள்
அற்றவை கடவுள்.
யாரும் எளிதில்
பின்பற்றமுடியாத
எளிமைதான் கடவுள்.
நேர்மை அன்பு
அர்ப்பணிப்பு-
இவையெல்லாம்
கடவுள்.
நம்பிக்கையும்
தோல்வியும்
கடவுள்.
அறியாமையும் குழந்தையும்
பெண்மையும் கடவுள்.
எல்லாவற்றையும்
விட்டுக்கொடுத்தல் கடவுள்.
பொறுத்து மறப்பது கடவுள்.
இவையெல்லாம்
உங்களிடமிருந்தால்
நீங்களே நீக்கமற
நிறைந்திருக்கும் கடவுள்.
உன்னத இசை கடவுள்.
நற்பண்பெல்லாம் கடவுள்.
மன்னிப்புக் கோருபவரும்
மன்னிப்பவரும் கடவுள்.
எதிரில் இருப்பதை
இல்லாத பொருளில்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும்
நிரூபணங்கள் தேடுகிறோம்.
சந்தேகங்கள் எல்லாம்
அற்ற பின்போ அறாமலோ
இயற்கையின் மடியில்
மரிக்கிறோம்.


நேற்று தொலைபேசியில் அப்துல்லா என்கிற ஒரு நண்பர் போன வருடம் செப்டம்பரில் எழுதியிருந்த இந்தக் கவிதையைப் படித்திருந்ததாகவும் அவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்துக்குத் தீர்வு காணவும் இந்தக் கவிதை உதவியது என்றும் சொல்லி நன்றி பாராட்டியபோது என் கண்கள் கண்ணீரில் கசிந்திருந்தன. 


எழுதினால் பெரிதாய் என்ன கிடைக்கும்? படித்தால் என்ன கிடைத்துவிடும்? என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு என் கண்களிலிருந்து சொட்டிய துளிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அவரின் உரையாடலும் அவர் பற்றிய தகவல்களும் எல்லோருடனும் பகிர்வதற்கானதல்ல. பகிர்வது நாகரீகமும் இல்லை. ஆனால் அந்த உரையாடல் மூலம் எனக்குத் தோன்றிய எண்ணங்கள் இந்த இடுகையில். இந்த இடுகையின் பின்னணியில் என்னுடன் உரையாடிய அப்துல்லாவின் தழுதழுக்கும் குரலை நான் உணர்கிறேன்.

வாழ்க்கையின் துவக்கம் தெரிவது போல் முடிவு தெரியாத ஒரு நாடகத்தில் நாம் வாழப் பணிக்கப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. பொங்கிவழியும் இன்பத்தை வாரி வாரி அளித்த நாட்கள் மறைந்து போய்விடுவதும், எதிர்பாராத கடுமையான சோதனைகளையும் துன்பங்களையும் வழங்கி வாழ்க்கையின் மீதான பிடிப்பையும் நம்பிக்கையையும் தளர்த்தி சஞ்சலத்தையும் சந்தேகத்தையுமே ஆதார எண்ணங்களில் புகுத்தி ஒவ்வொரு நாளையும் நரகமாக மாற்றிவிடுவதும் சுண்டிய நாணயத்தின் இரு பக்கங்களாய் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஒவ்வொரு மனிதனும் தன்னை வேறுவேறுவிதமாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் போலவே நாமும் தெரிந்தும் தெரியாமலும் தவறுகள் இழைக்கும் சுபாவம் உள்ளவர்களாகவே இருக்கிறோம். ஆனால் நம் குற்றத்தை மிகச் சுலபமாக ஒதுக்கிவிட்டு நகர்வதைப் போல பிறரின் தவறுகளை நாம் ஒதுக்கிவிடுவதில்லை. ஏதிலார் குற்றம் போலத் தம் குற்றம் பார்ப்பதில்லை. அதை எத்தனை காலம் முடியுமோ அத்தனை காலம் சுமந்து நமக்கும் பிறருக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறோம். மிகச் சுலபமான ஒரு வடிகால் நம்மிடம் இருந்தாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவே. மன்னிப்புத்தான் அந்த வடிகால்.

தவறிழைத்த ஒருவரை நாம் மன்னிக்கும்போது அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையை விட மன்னிப்பவர் அடையும் நன்மையே அதிகம்.ஒருவர் செய்த தவறை மட்டுமே நாம் எண்ணும் போதும் அதையே சதா நினைத்துப் பெரிதுபடுத்தும்போதும் அவர் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்படுகிறது. ஆனால் அவரும் மனிதர்தான். தவறுகள் செய்வது சகஜம்தான் என நினைத்து அத்தவறை உடனே மன்னித்துவிடும்போது நமது மனமும் முகமும் சாந்தமாகிவிடுகிறது. நமது இறுக்கமான முகம் நிறைவான புன்னகையுடன் பிறரை வசீகரிக்கிறது. நாம் மன்னிக்கும் போது மன்னிப்பை வழங்க மறுக்கிற ஒருவரை விட அதிகமான நிம்மதியையும் வளங்களையும் பெறுகிறோம்.

நாம் மிகவும் கோபமாகவும் பிடிவாதமாகவும் கடுமையான கொள்கைகளுடனும் இருக்கும் காலங்களில் நம் முகத்திலும் மனதிலும் எழும் எண்ணங்கள் உண்டாக்கும் அதிர்வுகள் நம்மைச் சுற்றி உள்ளவர்களை நம்மிடம் நெருங்க அனுமதி மறுக்கிறது. ஆனால் அந்தத் தவறை மன்னித்து நமது சுமையைக் குறைத்துக்கொள்ளும் போது நம் மனம் எப்போதும் போல மகிழ்வையும் அதிலிருந்து பரவும் சுகந்ததையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அளித்து காரணம் இல்லாமலேயே எல்லோரும் மிக விரும்பக்கூடிய மனிதராக, குணமுள்ளவராக நாம் மாறிவிடுகிறோம்.  

வெறுப்பும் கோபமும் வீண் சந்தேகங்களும் இத்தகைய சாதகமான இனிமையான குணங்களை ஒருபோதும் தருவதில்லை. என்றோ நடந்துமுடிந்த தவறிழைத்தவரே மறக்க நினைக்கிற ஒரு தவறை நாம் சுமக்கும் போது நம் மனதில் அதிர்ச்சியும் மனக்குமுறலும் தொடர்ந்து நம்மையும் பாதிக்கிறது. மாறாக தவறிழைத்தவர் மன்னிப்புக்கோரினாலும் கோராவிட்டாலும் நாமே முன்வந்து மன்னிக்கும் மனதோடு திகழும் போது மன்னிப்புக்கோருபவரை அன்பால் தண்டித்துவிடுகிறோம்.

உங்களில் பாவம் இழைக்கதவர்கள் முதல் கல்லை வீசி எறியுங்கள் என்கிற  பைபிள் சொல்லுகிற பாடம் மன்னிப்புத்தான். மன்னித்து மறந்துவிடும்போது நமது துன்பமும் முடிவுக்குவந்து விடுகிறது.நடந்துமுடிந்த சம்பவத்தை அல்லது தவறை ஒரு பாடமாக நாம் பார்க்கும் முதிர்ச்சியை அடையும் போதுதான் அடுத்த கட்டத்துக்கு நாம் செல்ல முடியும்.நடந்துமுடிந்த ஒரு சம்பவத்தை மாற்ற முடியாது. ஆனால் அதையும் தாண்டிய மகத்தான ஒரு செயல்தான் மன்னிப்பு.

யார் தவறிழைத்தாலும் அவரிடம் அத் தவறால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் அடைந்த துன்பங்களையும் இனி அந்தத் தவறு அடுத்தமுறையும் நடைபெறாதிருக்கவும் மன்னிப்பதாய்ச் சொல்லி மன்னிப்போம். குறைகளும் தவறுகளும் தோல்விகளும் மனித வாழ்க்கையின் மற்றொரு அங்கம் என்பதால் குறைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனதை மாற்றிக்கொள்வோம்.

எந்த நிபந்தனையுமின்றி மன்னிப்புக்கேட்கவும் மன்னிக்கவும் பழகிக்கொள்வோம்.இந்தத் தலைமுறையில் மறைந்துவரும் இந்தப் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கும் நாம் சொல்லிக் கொடுப்போம். சொல்லிக் கொடுத்தலின் சிறந்த போதனை நாமே அந்தப் பழக்கத்தை முன்மாதிரியாகச் செய்து காண்பிப்பதுதானே?


நாம் அநேகமாய்
நினைக்க வேண்டியதை
மறக்கவும்
மறக்கவேண்டியதை
நினைக்கவும்
செய்கிறோம்.
மறக்க வேண்டியவற்றை
மறந்தும்
மறக்கக் கூடாததை
நினைத்தும்
வாழ்ந்து காட்டுவோம்
கடவுளாய்.

20.11.11

உலை


ஓடிக்கொண்டிருந்த
அவர்கள் சொன்ன 
அதிர்ச்சியான தகவல்.
’கிருஸ்துவுக்கு 
முன்பிருந்து
ஓடிக் கொண்டிருந்த 
அந்த நதியைக்
காணவில்லை’.

அப்படியா?
நீங்கள் சொல்வது
புரியவில்லை.
இன்று கூட
எங்கள் குழாய்களில்
தண்ணீர் நிற்காது
வந்து கொண்டிருக்கிறது.

யாரும் பொருட்படுத்தாது
வீசிக்கொண்டிருந்த 
மலைக்காற்று
நாளையிலிருந்து
வீசப்போவதில்லை.

தாமதமான முடிவு.
கதவுகளையும்
ஜன்னல்களையும்
மூடப் பழகி
எத்தனையோ
நாட்களாயிற்று.
வாங்காத காற்று
வீசினால் என்ன?
ஒழிந்தால் என்ன?

நாள்தவறாது 
உதித்துக்கொண்டிருக்கும்
சூரியனின் முடிவும்
-ஓரிருநாள்
தாமதமாகலாம்-
அதுவேதான்.

அதனாலென்ன?
பயமுறுத்துகிறீர்கள்
பெரிதாய்?
செடி கொடிகளுக்கும்
மரங்களுக்குத்தான்
சூரியன்.
எங்களுக்கான 
சூரியனை
நாங்கள்
உருவாக்கிக்கொள்வோம்.

சாக்கடைகளிலும்
உவர்நீரிலும்
விடப்பட்ட 
உபரி மழைநீரும்
இனி
தரை தொடுவதாய்
உத்தேசமில்லை.

கடல்நீர் இருக்கிறது
குடிநீராய்ப்பயன்பட
இன்னும் 
நூறு வருஷங்களுக்கு.
நீர்வேட்கையைக்
குறைக்கவும் 
நீரின் மாற்றையும்
ஆராய்ந்து வருகிறோம்.
மிரட்ட வேண்டாமெனச்
சொல்லிவைய்யுங்கள்
மழையிடம்.

அபாயம்.எச்சரிக்கை.
உங்களின் வாழ்வே
அஸ்தமிக்க இருக்கிறது
இவ்வருடத்துடன்.
வாழ்ந்து 
தீர்த்துக்கொள்ளுங்கள்..

சலம்பல் வேண்டாம்.
இருக்கவே இருக்கிறார்கள்
எங்கள்
ஆட்சியாளர்களும்
கூடங்குளத்து
விஞ்ஞானிகளும்.
அவர்கள் 
பார்த்துக்கொள்வார்கள்
மிச்ச சொச்சத்தை.

19.11.11

சேருமிடம்


சேருமிடத்துக்கு
வழிகேட்டேன்.

மிக அருகில் 
வந்துவிட்டாய்.
இன்னும் சிறிது
நடந்தால்
சேருமிடம்
என்றார்
அந்தப் பெரியவர்.

சிறிது தொலைவுக்குப்
பின் குழம்பி
மீண்டும்
விசாரித்தேன்

அந்த இடத்துக்கு
நடந்தா?
இப்போதைக்குப்
போகமுடியாது.
வாகனம்
அமர்த்திக்
கொள்ளுங்கள்
என்றான் 
மறு இளைஞன்.

சேருமிடம்
அங்கேயே இருக்க
நானிருக்கும் இடம்
மட்டும்
மாறியபடி இருக்க

வெகுநாட்களாக
நடந்து கொண்டிருக்கிறேன்
சேருமிடம் நோக்கி.

16.11.11

இரண்டு வெளியீடுகள்1.
போன வாரத்தில் ஒரு மாலை. சர். பிட்டி தியாகராயா கலையரங்கத்தில் பேராசிரியர். கு. ஞானசம்பந்தனின் நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். மனுஷ்யபுத்திரனுக்கு அருகில் உட்கார்ந்திருந்தும் பேச வழியில்லாததால் பொருள் பொதிந்த சிரிப்போடு கழிந்தது நேரம்.

மாலன் தன் தலைமையுரையில் தனக்கும் கமலுக்குமான நீண்ட நாள் நட்பையும் கமலுக்குள் இருக்கும் கவிஞனை மிக நேசிப்பதாகவும் பேசினார்.அதே போலத் தமிழில் பேச முடிந்த இடங்களிலும் ஆங்கிலத்தின் பண்பில்லாத உபயோகம் குறித்தும் மேடைகளின் பேச்சுத்தரம் உயர கு.ஞா.வின் பங்கு குறித்தும் பேசினார். கமலைச் சூரியனுக்கும் கு.ஞா.வைச் சந்திரனுக்கும் ஒப்பிட்டுப் பேசினார். அடர் நீலநிற முழுக்கைச் சட்டையுடனும் அதற்கு மேல் கருநிற கையற்ற வெய்ஸ்ட் கோட்டுடனும் வந்திருந்தார் மாலன். அவர் பேசத் தொடங்குமுன் மாலன் செம ஸ்டைலுடா மச்சி என்றார் பின்னால் இருந்த மற்றொரு மச்சி.


வழக்கம்போல கமல் ரசிகர்களின் அடையாளம் நிகழ்ச்சி முழுவதும் கூக்குரல்களால் விதவிதமான கோஷங்களால் நிகழ்ச்சியின் ரசனையைக் கோணலாக்கியது. மேடையின் திரை உயர்ந்ததும் உதடுகளில் ஆள்காட்டிவிரல் பதித்து உஷ் என்ற பாவனையை விழா துவங்கியதுமே வெளிப்படுத்தினார் கமல்.

அரைக்கை கருப்பு நிற T ஷர்ட்டுடன் தன் புஜம் தெரியும் கோணத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு அடிக்கடி சேஷ்டைகள் செய்தபடி இருந்தது அவருக்குத் தன் உடல்பொலிவு குறித்து இருக்கும் கர்வம் தெரிந்தது. 57 வயதில் அவரின் உடலை இளமையாய்ப் பேணுவது குறித்த வியப்பு எனக்கும் இருந்தது.நடுவில் ஒரு ரசிகனின் குரல்.” தலைவா! ஆர்ம்ஸ் சூப்பர்”.குரலெழுப்ப அதில் புளகாங்கிதம் அடைந்தார் கமல். இப்படியே விழா முழுவதும் கமலுக்கும் அவரின் ரசிகர்களுக்குமிடையிலான உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது.


பாக்கியம் ராமசாமி பேச்சு இயல்பாய் இருந்தது. மேடைக்கான எந்தத் தயாரிப்பும் முஸ்தீபுகளும் இல்லை. தொலைக்காட்சித் தமிழ்- அவற்றின் தரம் -அப்படியே ஒரு ரவுண்ட் போய்விட்டு வழக்கமான நையாண்டியுடன் ஆஸ்திக நாஸ்திகச் சம்பாஷணையைத் துவக்கிவைத்தார். நாஸ்திகர்களுக்கு எது கிடைக்குமோ அதை விட ஆஸ்திகர்களுக்கு ஒரு பத்து சதம் அதிகம் கிடைக்கும் என்றார் கமலை நோக்கி.

எல்லோராலுமே கமலின் பன்முகத் திறமை குறித்துத் தொடாமல் நேரடியாக கு.ஞா.வின் புத்தகங்கள் குறித்துப் பேசமுடியவில்லை. கு.ஞா.வின் புத்தகங்கள் குறித்து நன்கு அவற்றை வாசித்தவர்களை விட்டுப் பேச விட்டிருக்கலாம். பெரும்பாலும் பேசியவர்கள் யாத்தவரின் புகழையும் கமலின் திறனையும் பேசிய அளவுக்கீடாக புத்தகங்களின் வாசிப்பனுபவத்தைக் குறித்துப் பேசவில்லை.


புத்தகங்களை வெளியிட்டு கமல் பேச வந்தவுடன் ஆழ்வார்பேட்டை ஆண்டவா! என்ற வாடிக்கையான குரல் வந்தது. இனி வரும் கூட்டங்களில் அதை லட்சியம் செய்யாமல் இருக்கலாம். எப்போதும் போல தான் கறுப்புச் சட்டை அணிந்துவந்தும் இதற்கு என்ன சொல்ல என்று அலுத்துக்கொண்டே பேச்சைத் துவங்கினார். தனக்கும் கு.ஞா.வுக்கும் இடையிலான நட்பு குறித்தும் பொதுவாய்த் தான் இம்மாதிரியான இலக்கியவாதிகளுடன் தொடர்பு வைப்பது தனக்குத் தமிழின் பாலுள்ள சுயநலமே என்றும் சொன்னார்.

கைகள் இரண்டையும் நடிக்கும்போது எப்படி வைத்துக்கொள்வது என்று ஷண்முகம் அண்ணாச்சியிடம் கேட்டபோது எப்போது நீ நடிக்கத் துவங்கிவிட்டாயோ அப்போதிலிருந்து அக்கேள்வி உன்னில் எழாது என்று பதில் சொன்னார் என்றும் சொன்ன விதம் ஸென் குருவுக்கும் சிஷயனுக்குமான உரையாடல் போல செறிவாய் இருந்தது. அதேபோல வி.கே.ராமசாமி அவரின் கைகள் குறித்த ப்ரக்ஞை இல்லாமலே நடிப்பது தனக்குப் பெரிய ஆச்சர்யம் என்றார்.தவிர வி.கே.ஆர். ஒரு நல்ல எழுத்தாளர் என்ற தகவலையும் சொன்னார்.

பேசி முடிக்கும்போது நான் பல வேடங்களில் நடிக்கிறேன். குள்ளனாக உயரமானவனாக பக்தனாக. உண்மையில் நான் குள்ளன் கிடையாது என்று முடித்தார். தான் யார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிற பரிதாபம் கமலுக்கும் கருணாநிதிக்கும் மட்டுமே தொடர்கதையாய் இருக்கிறது. ஒரு கடவுள் மறுப்பாளன் கடவுளை ஏற்பவனை விட அதிகமாகக் கடவுளை நினைக்கவேண்டியிருப்பது வேடிக்கையான முரண். 
விழி பேசாமல் விட்டதை மொழியால் பேசினார் பாண்டியராஜன். புத்தகத்திலிருந்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நீங்கள் புத்தகத்தை வாங்கமாட்டீர்கள் என்று மிரட்டிவிட்டு நிழல் நிஜமாகிறது ரிலீஸாகும்போது கிருஷ்ணவேணியில் சட்டையைக் கிழித்துக்கொண்டு அடித்துப்பிடித்துப் பார்த்த அதே கமலுடன் ஒரே வரிசையில் உட்கார்ந்திருப்பது பெருமை என்றார் பாண்டியராஜன்.


ஏற்புரையாற்றிய கு.ஞா.வின் பேச்சில் அரங்கமே குலுங்கியது. அதே போல விழா முழுவதும் தன் குடும்பத்தினரின் பங்கையும் உபயோகப்ப்டுத்தியிருந்தார். யாரின் பெயரும் விடுபடாமல் எல்லோரின் பங்கையும் கௌரவப் படுத்தியிருந்தார். பெயர் தெரியாத தன்னைச் சார்ந்த பலரையும் மேடையில் அறிமுகப்படுத்தினார். கு.ஞா.வுக்கு உதவியாக இருக்கும் கால்கள் ஊனமுற்ற ஒரு மாணவரைப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கும்போது கமலும் அவருக்குச் சமமாக மண்டியிட்டு உட்கார்ந்து அவரின் தோளில் கைபோட்டுக் கொண்ட மனிதம் நெகிழ வைத்தது.

அந்த விழா முழுவதையும் தொகுத்துக் கொடுத்த தஞ்சை இனியனின் தொகுப்பும் அத்தனை சுவாரஸ்யமாகவும் அடுத்து என்ன பேசுவார் என்று யூகிக்கவும் வைத்தது. ஒரு தடுமாற்றம் இல்லாத அருமையான தெளிவான நல்ல உச்சரிப்போடு தமிழ். சமயோசிதமாக கமல் நடித்த அத்தனை திரைப்படங்களின் தலைப்பையும் வைத்து இவர் உருவாக்கிய அறிமுகச் சித்திரம் சபையின் பாராட்டைப் பெற்றது. அதற்கெழுந்த நீண்ட கரவொலிதான் அந்த விழாவின் ப்ரதான பாராட்டுக்களின் கரவொலி.

2.

மற்றொரு விழா மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில். வாலியின் நினைவுநாடாக்கள் மற்றும் பட்டத்து யானையின் பவனி ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா.

நல்லி குப்புசாமி செட்டியார்- முக்தா சீனிவாசன்- பாலகுமாரன்- இயக்குனர் மகேந்திரன்- பாடலாசிரியர் முத்துலிங்கம்- இயக்குனர் கரு.பழனியப்பன்-கலைப்புலி தாணு- மை.பா.நாராயணன்- சுதாங்கன்- பாரதிபாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.

சரியான நேரத்தில் துவங்கிய விழாவுக்கு மிக அருமையான இறைவணக்கப்பாடலைப் பாடிய ஸ்மித்தா மாதவ் நூல் வெளியீட்டு விழாவுக்குப் பொருத்தமாகக் கலைவாணியின் மீது பாடினார் அழகான ஒரு பாடலை. என்ன அற்புதமான குரலும் தமிழ் உச்சரிப்பும் ராக பாவமும். சபாஷ்.சபாஷ். ஸ்மித்தா ஒரு பரதக் கலைஞரும் கூட.நிச்சயமாக எதிர்கால இசை மற்றும் நாட்டியத் துறைக்கான முக்கியமான இடம் ஸ்மித்தாவுக்கு உண்டு. அவரைப் பற்றித் தனியாய் ஒரு இடுகை பின்னால் எழுதுவேன்.


முதலில் பேசிய முக்தா சீனிவாசன் நெடுநாட்களுக்குப் பின் பேசுவதாலோ என்னவோ! நெடுநேரம் பேசினார். நடுநடுவில் லொடலொடன்னு நான் பேசறதா நீங்க நினைக்காதபடிக்குச் சட்டுன்னு முடிச்சுக்கறேன் என்று சொல்லியபடியே நெடுநேரம் பேசினார். இலக்கியவாதிகளை அரசுகள் கௌரவிப்பதில்லை என்று ஆதங்கப்பட்டார். வாலியை அறிமுகப்படுத்திய நாட்களிலிருந்து தனக்கும் வாலிக்குமான தொடர்புகளைக் குறித்து அவர் பேச்சு இருந்தது.வாலியை ஒரு விசிஷ்டாத்வைதி என்றார்.


இயக்குனர் மகேந்திரன் கொஞ்ச நேரம் பேசினார். வாலியை மஹாபுருஷன் என்று வாழ்த்தினார். வாலியின் பெயர்க்காரணத்தில் தொடங்கி சாதனையாளர்களின் பெயர்கள் தனித்துவமானவை. பிறக்கும்போதே அப்படிப்பட்ட பெயர்களுடன் அந்தச் சாதனையாளர்கள் பிறந்துவிடுகிறார்கள். ஷேக்ஸ்பியர்-ப்ராட்மேன் -தெண்டுல்கர்- பாரதி- ஹுஸைன் போல்ட்-பீலி-இவர்களுடைய பெயரைப் போல அதே இன்னொரு பெயர் அந்தத் துறையில் வருவதில்லை என்றார்.


பாலகுமாரன் பேசும்போது பெரியவாள்ளாம் மன்னிக்கணும். வாலி ஒரு அத்வைதி என்றார். அவர் சாதாரணமான நபர் இல்லை. வாலியின் பார்வையில் பட்டவர்கள் எல்லாருமே பேரும் புகழும் அடைந்தவர்கள். அவரின் தொடுதல் பட்டவர்களும் அப்படித்தான். தன்னுடைய காலத்துக்குள் அவர் கடோபனிஷத் பற்றிய விளக்கத்துடன் ஒரு நூல் எழுத வேண்டும் என்றார்.


கவிஞர் முத்துலிங்கம் வாலி அவதார புருஷன் எழுதப்பட்ட பின்னரே இலக்கியவாதியாக அடையாளம் காணப்பட்டார் என்று தீர்ப்பு வழங்கிவிட்டு அவருக்கும் தனக்குமான உறவுச்சங்கிலியின் கண்ணிகளை நினைவு கூர்ந்துவிட்டு வாலிக்கான இடம் யாரோடு என்று சொல்வதற்காக மூச்சு விடாமல் 99 தமிழ்ப்புலவர்களின் பெயரை மனப்பாடமாகச் சொல்லி இவர்களோடு வாலியையும் சேர்க்கலாம் என்று முடித்தபின் அரங்கத்தில் நீண்ட கரவொலி எழுந்து அடங்க நேரம் பிடித்தது. பக்கத்திலிருந்தவர் இப்படித்தான் சிவக்குமார் 99 பூக்களின் பெயர்களை நினைவிலிருந்து சொன்னதை நினைவுபடுத்தினார். மறதிக்குப் பெயர்போன எனக்கு இந்த சாகசங்கள் உடம்பை உதற வைத்தன.


விழாவுக்குத் தாமதமாய் வந்ததற்கு ஒரு குட்டிக்கதை சொல்லி சமாளித்த கரு.பழனியப்பன் பரபரப்பாய் இருந்தார். மூச்சுவிடாமல் பேசினார்.வாலி தன் படங்களுக்கு இதுவரை பாடல்கள் எழுதியதில்லை. இனிமேல் கண்டிப்பாய் எனக்கு அவர் பாடல் எழுதவேண்டுமென்றார். நடுநடுவே பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்துக்கொண்டார். மனுஷன் அந்தக்கால க்ரிக்கெட் ஆட்டக்காரர் ஸ்ரீக்காந்த் க்ரீஸில் நிற்கும் போது எப்படி ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பாரோ அதேபோல பரபரப்பு. வாலியை இனிமேல் தலைவரே என்றழைக்கப்போவதாகவும் எல்லோரையும் அவர் வெளிப்படையாய்ப் பாராட்டுவதே அவரின் புகழுக்கும் இளமைக்கும் காரணம் என்று போட்டார் ஒரு போடு. பழனியப்பனின் படபடப்பும் பேச்சும் ரசிக்கும்படி இருந்தது அவரது இடது காதில் தொங்கிய வளையத்தைப் போல.

விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய நெல்லை ஜெயந்தா பல இடங்களில் வாலியின் வார்த்தைகளை வைத்தே பொருத்தமாய்த் தொகுத்தமை சமயோசிதமாய்த் தென்பட்டது. வாலியையும் ஜெயந்தாவையும் பிரித்துப் பார்க்கமுடியாதது போல ஒரு ஒருங்கிணைப்பு இருவருக்குள்ளும்.

ஏற்புரை வழங்கிய வாலி நல்லி செட்டியாரில் தொடங்கிக் கடைசியாக வாழ்த்துரை வழங்கிய பாரதி பாஸ்கர் வரையிலும் எல்லோருக்கும் நன்றிகளுடன் அவர்களுடனான தொடர்பையும் பேசினார். தனக்கு அன்று முதல் இன்று வரை உதவியவர்களின் பெயர்களை அடிக்கடிச் சொல்லியபடி இருந்தார். அறிமுகமில்லாத தன் புதிய நண்பர்களை மேடையில் ஏற்றிக் கௌரவித்தார்.

தன் சமகாலத்தில் தன்னோடு பாடல்கள் எழுதிய புலமைப்பித்தனை அவரின் இலக்கண அறிவை பலதடவை பாராட்டிப் பேசினார். அதே போல இலக்கியம் சம்பந்தமான தன் படைப்புக்களை முத்துலிங்கத்திடம் காண்பிக்காமல் பதிப்புக்கு அனுப்புவதில்லை என்றார்.திமுக வின் திருச்சி சிவா -பழைய அமைச்சர் வேழவேந்தன்- பாடலாசிரியர் பழநிபாரதி- ஹிந்துவிலிருந்து மாலதி ரங்கராஜன் -வாலியின் குடும்ப மருத்துவர் என்று எல்லோரும் கலவையாய் பேதமின்றி வந்திருந்தது ஒரு ஆச்சர்யம். எல்லோரையும் தக்க அளவில் மதிக்கும் இந்தப் பண்புதான் வாலியின் அடையாளம் என்று தோன்றியது. அன்று மிக உற்சாகமாக இருந்தார் வாலி.

3.

1. இரு வெளியீட்டு விழாக்களிலும் ஏற்புரையின் போது நூல் ஆசிரியர்கள் வாழ்த்தியவர்களைப் பதிலுக்கு வாழ்த்தாமல் வெளியிடப்பட்ட புத்தகங்களின் உருவாக்கம் அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள் இம்மாதிரி விஷயங்களுக்கு அதிகம் இடம் கொடுத்திருந்தால் இன்னும் அழகான விழாவாய் அவை அமைந்திருக்கும்.

2. விழா மேடையில் கமலுக்கு பசியோ தாகமோ தெரியவில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட பானத்தை சுற்றியிருப்பவர்களைப் பற்றிக் கவலையின்றி ஒரே மடக். ஆனால் அதற்கு மாறாக மாலன் தனக்கு இரண்டாவதாகக் கோப்பை நீட்டப்பட்டபோது மேடையில் உள்ள எல்லோருக்கும் கொடுக்க அறிவுறுத்தி அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட பிறகே தான் பருகியது மேன்மையான மென்மையான காட்சி.

3. கரு.பழனியப்பனின் திரைப்படங்கள் மற்றவர்களின் படங்களில் இருந்து வித்யாசமானவை. அவரின் ரசிகன் நான். அதனால் அவரின் அடுத்த படத்துக்குக் காசு வாங்காமல் பாடல் எழுதப் போவதாகச் சொன்னார் வாலி. இதைக் கேட்ட நெல்லை ஜெயந்தா கரு.பழனியப்பனிடம் என்னை மறந்துடாதீங்க சார் என்றார்.

4. இரு விழா மேடைகளிலும் குறைந்தது 100 பொன்னாடைகளாவது போர்த்தித் தள்ளப்பட்டிருக்கும். மூச்சுமுட்டியது அந்தக் கலாச்சாரம். அதை விடக் கொடுமை அவை போர்த்தப்படும் அடுத்த நொடியே உதவியாளர்களால் பின்னால் இருந்து உருவப்பட்டு மடித்துவைக்கப்பட்டது. குளிரில் நடுங்குவதாய் நினைத்து பேகன் மயிலுக்குப் போர்த்திய போர்வையின் தொடர்ச்சி பொன்னாடையாய் உருமாறியதோ? என்றைக்கு இந்தக் கலாச்சாரம் ஓய்வு பெறுமோ?

5. அதைவிடப் பரிதாபம் இரு மேடைகளிலும் அந்த விழா நாயகர்களுக்காகத் தங்கள் சொந்த செலவில் பொன்னாடைகளுடன் மேடையேறிய ஒன்றிரண்டு ரசிகர்கள் மேடையை நிர்வகித்தவர்களால் முரட்டுத்தனமாக அனுமதி மறுக்கப்பட்டனர்.

போர்த்தப்பட்டு
மடித்துவைக்கப்பட்ட
அந்தப்
பொன்னாடைகளை விட
பிரிக்கப்படாமல்
திருப்பி
எடுத்துச்செல்லப்பட்ட
பொன்னாடைகளில்
கசிந்திருந்தது
அந்த ரசிகர்களுக்கு
மறுக்கப்பட்ட அன்பு.

என்ன சொல்ல?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...