31.12.10

பெருமைக்குரியவர்கள்


ஒரு ஆண்டு முடிவதிலும் மறு ஆண்டு துவங்குவதிலும் அதற்காகவே காத்திருந்து குலுக்கோ குலுக்கென்று கையை சுளுக்கும்வரை குலுக்கிக் கொள்வதிலும் ஆர்வமில்லை.

கொண்டாட்டங்களில் மிகுதியாய் ஆர்வம் இருந்தாலும் ஏனோ ஆங்கிலப் புத்தாண்டின் மீது ஒரு கட்ட்ட்டுப்பு.

ஆங்கிலேயனின் கணக்கைப் பின்தொடரும் எரிச்சல்.

அவனுக்குமுன் வானசாஸ்திரத்திலும் அரசியலிலும் நம்மிடம் ஆர்யபட்டரும் சாணக்கியரும் இருந்தாலும் நாம் இந்தக் கணக்கைத் தலையில் வைத்துக் கூத்தாடுகிறோம்.

நம் தமிழ் மாதங்கள் சித்திரையில் தொடங்கிப் பங்குனியில் முடிவது- இன்றையக் குழந்தைகளை விடுங்கள்-இளைஞர்களுக்கே தெரியாது.

அஸ்வினி தொடங்கி ரேவதி வரை முடியும் நட்சத்திரங்களின் பின்னணி தெரியாது.

சந்திரன் வளர்வதையும் தேய்வதையும் கொண்டும் சூரிய உதயத்தைக் கொண்டும் திதி என்றும் பட்சம் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது என்பதையோ-

ஆங்கில நாட்காட்டியைப் போல நமக்கு வேறுவழியில்லாமல் நான்கு வருஷத்துக்கு ஒருதடவை மிஞ்சிப் போன நான்கு கால் நாட்களையும் ஒன்றாக்கி லீஃப் என்கிற சமாளித்தல் கிடையாது என்பதையோ மூச்சு வாங்கினாலும் சொல்லியே ஆக வேண்டும்.

நம்முடைய நாழிகையின் அளவு உலகின் எல்லா கால அளவுகளையும் விட மிகத் துல்லியமானது என்றும் நம் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாய்த் தாண்டுபவர்களுக்கு ஏஷியாநெட்டின் சந்தன குங்குமப் பொட்டுடன் ஏதோ ஒரு நம்பூதிரியின் புத்தாண்டுப் பலன் சொல்லும் பதிவு என்று மிரள்வதற்குச் சாத்தியம் இருப்பதால் இது பற்றி நம் பெருமை பற்றி விரிவான ஒரு பதிவு எழுதுவேன்.

சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிடாமல் சொல்லியாகவேண்டும்.

நான் எல்லா வலைப்பூக்களையும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். பலரின் பின்னூட்டங்களும் பலரின் பதிவுகளும் என்னைக் கூர் தீட்டிக்கொள்ளவும் என் எழுத்தைச் செறிவாக்கிக் கொள்ளவும் மிகவும் உதவியிருக்கின்றன. பெயர்களற்ற யார் யார் மூலமெல்லாம் இதை நான் பெற்றேனோ அவர்களுக்கெல்லாம் என் அன்பும் நன்றியும்.

குறிப்பாக இன்றைய இளம் எழுத்துக்கள் என்னில் பெரும் மாறுதலை ஏற்படுத்திவருகின்றன. இவர்களில் சிலர் வயதினால் இளையவர்களாகவும் சிலர் எழுதும் உற்சாகத்தால் இளையவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஏற்கெனவே எல்லோராலும் அறியப் பட்டு பின்னிப் பெடெலெக்கும் பலருக்கு நான் அறிமுகம் தரப் போவதில்லை.

எவ்வளவு எழுதியிருக்கிறார்கள் என்பதோ அவர்கள் பின்னணி என்ன என்பதையோ விட இவர்கள் தொடர்ந்து எழுதினால் தமிழின் பெரிய ஆளுமைகளாக வரக்கூடும் என்றும் சொல்ல விரும்புகிறேன்.

இவர்களை நான் பார்த்ததோ பழகியதோ இல்லை. இவர்களின் எழுத்துக்கள்தான் இவர்களின் அடையாளம்.இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன். என் தேடல் இன்னும் விடுபட்டவர்களைத் தேடித் தொடர்கிறது.

படிக்கத் தவறியவர்கள் அவசியம் படிக்க இவர்களை சிபாரிசு செய்கிறேன்.

இவர்கள் அடுக்கப்பட்ட வரிசைப்படி இல்லாமல் எழுத்தின் வீச்சிற்கேற்பவும் தொடர்ந்து எழுதுவதன் மூலமும் தங்கள் இடத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

உலகமே இந்தப் புத்தாண்டைப் பாராட்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த இரவின் கரங்களில் நாம் இவர்களைப் பாராட்டுவோம்.

30.12.10

எப்போ வருவாயோ?


அம்மாவின் வருகை
இருமணிகள் தாமதிக்க
அப்பாவுக்கோ இன்னும்
வரும்நேரம் தெரியவில்லை.

வீட்டின் கதவுகளைத்
திறந்து வைக்க யாருமில்லை.
சாப்பிட்டாயா எனக் கேட்க
என்னெதிரில் யாருமில்லை.

இருண்டிருக்கும் வீட்டிற்குள்ளே
என்னையன்றி யாருமில்லை.
சிலிண்டர் மாற்றிடவோ
இன்னும் நான் கற்கவில்லை.

சூடாய்ச் சாப்பிடவும்
என்றுமே வாய்த்ததில்லை.
ஹோம்ஒர்க் குழப்பங்களோ
தீர்த்துவைக்க வழியுமில்லை.

வகுப்பில் நடந்த சாகசங்கள்
கேட்க இங்கே யாருமில்லை.
பள்ளி விட்டுத் திரும்பிடவே
ஒருநாளும் பிடிக்கவில்லை.

ஞாயிறன்றி வேறொருநாள்
வாரத்திலே விருப்பமில்லை.
அப்பாவோ அம்மாவோ
எப்போது வருவாயோ?
எங்கும் இனிப் போகாமல்
என்னோடே இருப்பாயோ?

29.12.10

காலம்I
இழந்தவன்
இன்றை மறக்கிறான்.
நாளையை நினைக்கிறான்.

இருப்பவன்
இன்றை நினைக்கிறான்.
நாளையை மறக்கிறான்.

நிலைப்பவன்
நேற்றை மறக்கிறான்.
நாளையைத் துறக்கிறான்.
இன்றில் வாழ்கிறான்
என்றும்.


II
சில நேரம் கோபப்பட
வேண்டியதிருக்கிறது.
சில நேரம் கடந்து செல்ல
வேண்டியதிருக்கிறது.
கோடைகாலத்து வெயிலையும்
குளிர்காலத்து மழையையும் போல.


III
நிழலின் அருமை வெயிலிலும்
வெயிலின் அருமை மழையிலும்
மழையின் அருமை வெயிலிலும் என
இருப்பதிலிருந்து இல்லாததிற்கும்
இல்லாததிலிருந்து இருப்பதற்கும்
பாய்ந்தபடியிருக்கிறது
வாழ்க்கை.

25.12.10

கடவுளின் குழந்தைகள்.


குழந்தைகள் எதையுமே யோசிக்காமலோ காரணமில்லாமலோ சொல்வதோ செய்வதோ இல்லை.

அவர்கள் கையில் எந்த நிர்ப்பந்தமும் இல்லையாதலால் அநேகமாக அவர்கள் சொல்வது கவிதையாகவோ உண்மையாகவோ இருக்கிறது.

ஒரு பொய்யை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையுண்டு.உண்மையை மறந்து விடலாம் என்பதையே குழந்தைகளை நினைவில் வைத்துச் சொன்ன வாக்கியமாக இருக்குமோ தெரியவில்லை.

இன்று தஞ்சாவூர்க்கவிராயர் தொலைபேசியில் ஒரு கவிதை வாசித்துக் காட்டினார்.

வானத்தில் வசிப்பது
யார் என்று
கேட்ட குழந்தையிடம்
கடவுள் என்றேன்.
இல்லை
காகம் என்று
திருத்தியது குழந்தை.

இது அவருக்கும் அவரின் இரண்டு வயதுப் பேரனுக்கும் நடுவில் நடந்த சம்பாஷணையில் பிறந்த கவிதை. இதே தஞ்சாவூர்க்கவிராயருக்கு இருபத்திஐந்து வருடங்களுக்கு முன்னால் மகன் பிறந்தபோது அவன் அவரிடம் கேட்ட கேள்வியும் இன்னும் என்னிடம் இருக்கிறது. “அப்பா! தண்ணீலயே நீஞ்சிக்கிட்டு இருக்கே இந்த மீன்லாம் ராத்திரீல எப்படீப்பா தூங்கும்?”

ஸென் தத்துவம் சொல்வதும் இதைத்தான்- “எது அநுபவமோ அது கவிதை.”

குழந்தைகளின் கண்களைப் பாருங்கள். அவை பொய் சொல்வதில்லை. அன்பைப் பூசுகின்றன. அவற்றில் கர்வமோ அகம்பாவமோ அலட்சியமோ இல்லை. இவையெல்லாம் ஒரு குழந்தை யோசிக்கத் துவங்கும் வரைதான். அது கண்ணெதிரே ஒரு கடவுளைப் பார்க்கும் போது கடவுளையும் காட்டுமிராண்டியைப் பார்க்கும்போது காட்டுமிராண்டியையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இருக்கிறது.

தினமும் செய்தித்தாள் வாசிப்பவனின் குழந்தைக்கு அந்தப் பழக்கம் தானாய் வந்து அதன்பிறகு தகப்பனால் சுடச்சுட செய்தித்தாள் வாசிக்க முடிவதில்லை என்று சந்தோஷமாய் அலுத்துக் கொள்ள முடிகிறது.புத்தகக் கண்காட்சிக்குப் போகத் துவங்குகிறது.

ஓவியம் தீட்டவும் பாட்டுக்கள் பாடவும் தெரிந்தவளின் குழந்தைக்குத் தொற்றுவியாதி போலத் தானாய்த் தொற்றிக்கொள்கிறது. பாட்டி சொடுகு போட்டபடி இருப்பதைக் காணும் பேத்தி சொடுகுவின் நுணுக்கங்களை இயல்பாய்க் கற்கிறாள்.

அதே போல அப்பாவின் பேச்சு ஒரு வீட்டில் எல்லோரையும் ஆட்டுவித்தால் அதே பாணியில் பேசவும் நகலெடுக்கவும் அந்தக் குழந்தை கற்றுக்கொள்கிறது. விரும்புகிறது. தாயைப் போலப் பிள்ளையும் நூலைப் போலச் சேலையும்.

எழுதிக்கொண்டிருக்கும்போது ஒஷோ சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஆசிரியை வகுப்பின் குழந்தைகளிடம் ஏசுவின் படத்தை வரையச் சொல்ல எல்லாக் குழந்தைகளும் தங்கள் மனதிலுள்ள ஏசுவை வரைந்துகொண்டிருக்க என்னைப் போலிருந்த ஒரு குழந்தை மட்டும் விமானத்தின் படத்தை வரைந்து மூன்று இருக்கைகளுடன் முடித்தது. ஆசிரியை என்னமுயன்றும் குழந்தையின் மனதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் கேட்க குழந்தை சொன்னது:

”முதல் இருக்கையில் ஏசு. இரண்டாவது இருக்கையில் அவருடைய அம்மா.”
”சரி. மூன்றாவது இருக்கை காலியாக இருக்கிறதே அதில் யார்?”
“அதுதான் பைலட்டுக்கு. அவரில்லேன்னா ப்ளேன் கீழ விழுந்துடும்ல”

ஆக குழந்தைகளின் மனது தர்க்கங்களுக்கு விடையை நேரடியாகச் சொல்வதாகவும் மற்றொரு பார்வையில் மிக எளிமையானதாகவும் இருக்கிறது.

குழந்தைகள் பூட்டாத கதவுகளுக்குச் சாவியைத் தேடுவதில்லை. தேவையற்ற இடங்களில் நம்பிக்கை கொள்வதிலை. தேவையான இடங்களில் சந்தேகம் கொள்வதில்லை. ஒரு ஊதுவத்தியின் சுழலும் நறுமணப்புகை போல-வெற்றிடங்களையெல்லாம் நிரப்பும் ஒப்பில்லாத இசை போல- இருக்குமிடங்களை தெய்வீகமானதாய் சுகந்தமானதாய் மாற்றுகிறார்கள்.

என்றும் உங்களின் உற்சாகத்தையும் இளமையையும் காத்துக் கொள்ள இரண்டு காயகல்பங்கள் உள்ளன. அதில் ஒன்று குழந்தைகளின் சகவாசம். கரைந்து
போய்விட்ட என் குழந்தைமையைத் தேடியலைகிறேன் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தையின் பின்னும்.

24.12.10

ரேணிகுண்டா


(ஜூடு இளங்கோவின் சேட்டையப் பாருங்க. ஃப்ரான்ஸ் பக்கத்துல காஞ்சிட்டு இருக்கேண்டா மக்கா. மறுவாதியா என்னோட ஸ்டைலுக்கு வராம ஒரே கண்ராவியா எளுதி சாவடிச்சேன்னா மவனே ஓம் ப்ளாக்குக்கு நாட்டுவெடி குண்டு வெச்சுருவேன்னு நடுராத்திரி மிரட்ட நானும் அவனும் ரெண்டு மாசம் முன்னால ரேணிகுண்டா போய் பேய் சங்கீதத்தால நொந்து நூடுல்ஸ் ஆன கதைய எழுதிட்டேங்க. மக்கா படிப்பதானலே)

ரேணிகுண்டா ரயிலுக்குப் போவோம்டா மணியாச்சு
ராணியுண்டா ராஜாஉண்டா சங்கரனின் - போணியுண்டா
என்றெல்லாம் சார்ட்டில் தேடும்வரை தலைவலிதான்
தென்றலுக்கு இல்லை வழி.

ஏறி உட்கார்ந்தேன் இளைப்பாற வழி தேடி
சாரிசார் என் பெர்த்தென்று வந்தானே - மாரிமுத்து
பத்துஇட்லி வடைசகிதம் ஐபோடும் சேர்ந்தலற
செத்துச் சுண்ணாம்பாய் நான் .

தாளமும் தலையாட்டும் ராத்திரி சிவராத்திரிதான்
நாளம்சூடேற நரம்புதடதடக்க தண்ட - வாளத்து
இடியோசை தோற்றதப்பா என்தூக்கம் போச்சுதப்பா
மடிப்பிச்சை போடப்பா மாரி.

”சங்கீதம் இல்லாத ராத்திரியே எனக்கில்லை.
இங்கீ பிங்கீ பாங்கீயுடன் சோதிப்போம் - சங்கீ
நான் மாரி” என்று சுற்றிவந்துபார்த்தும் மிஸ்டர்
பீனாய் மாட்டினேன் போ.

ராவெல்லாம் பெருங்கூத்து கண்ணெல்லாம் சிவப்பாச்சு
நோவெல்லாம் வந்தாச்சு இனி - ஓவென்றழுதாலும்
பிள்ளையோ பெண்ணோ அவள்தான் பெறவேண்டும்
முள்ளை முள்ளால் எடு.

ரேணிகுண்டா ஒச்சிந்தி ரேணிகுண்டா ஒச்சிந்தியென
சாணி மிதிக்க வந்தானோ சுமைதூக்கி- போணியென்று
தாவியேறி தடுக்கிவிழுந்து பெரியபையின் பிடியிழுத்து
கூவியே கெடுத்தாய் குடி.

23.12.10

சித்தர்கள் யார்?


தமிழின் பழைமைக்கு ஈடாக சொல்லக் கூடிய ஒரு விஷயம் இருக்குமானால் சித்தர்களின் இருப்பைச் சொல்லலாம். இவர்களின் தொன்மை நமது கலாச்சாரம், நம் தத்துவ விசாரம் குறித்த அறிவு, மருத்துவத் துறையில் மேதைமை, பல புதிய ஆராய்ச்சிகள் ஆகியவற்றோடு தொடர்புள்ளதாகவும் இருக்கிறது.

அவர்களின் இருப்பு, கடவுள் குறித்த தத்துவங்களையும், நமக்கு அருகிலேயே இருக்கும் மூலிகைகளைக் கொண்டு எத்தனையோ வியாதிகளைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவ முறைகளைப் பற்றியும் ரசவாதம் எனப்படுகிற இரும்பைத் தங்கமாக மாற்றும் ஆராய்ச்சிகளையும், வெளிப்படையான தன்மை குறித்தும் தொடர்புடையதாக இருக்கிறது.

வழக்கமான வாழ்க்கைமுறையைத் துறந்து தன்னை அறியும் தேடலில் அமைந்திருக்கிறது சித்தர்களின் வாழ்க்கை. இவர்களின் பார்வையும் பாதையும் அறிவால் அறியப்படும் பகுத்தறிவிற்கும் உணர்வால் உணரப்படும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட யாரும் அதிகம் பயணிக்க முயலாத வனங்களில் செல்கிறது.

இந்து மத சன்யாசிகளைப் போல் தோற்றம் தரப்பட்டாலும் இஸ்லாமிய சூஃபித் தத்துவங்களின் நிழலும் சமண புத்த மதத் தாக்கங்களும் இவர்களின் கருத்துக்களில் தெரிகிறது.

இன்னும் சொல்லப்போனால் சித்தர்களில் மிகவும் பிரபலமான போகர் சீனாவைச் சேர்ந்தவர் என்ற ஆராய்ச்சிக்குட்பட்ட கருத்தும் உண்டு.

சித்தர்களின் இடைவிடாத ஆராயும் மனம் பல நாட்டின் அறிவுஜீவிகளுக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைமுறையாகவும் நம் நாட்டு மக்களுக்கு அபோரிஜின்ஸ் என்று ஒதுக்கக் கூடிய காட்டுமிராண்டி வாழ்க்கை முறையாகவும் தெரிவதில் வியப்பில்லை.

இன்றும் சித்த வைத்தியம் என்றவுடன் பழனி காளிமுத்து என்கிற டாக்டரை மையப்படுத்திய ஜோக்குகளுடன் ஒவ்வொரு ஊரிலும் எந்தெந்த லாட்ஜ்களில் அவர் தங்குகிறார் என்பதும் விடாமல் எப்படி இவர் ஊர் ஊராகச் சுற்றுகிறார் என்றும் கவலைப் படுவதுடனும் நம் சித்த வைத்திய ஆராய்ச்சி முடிவுறுகிறது.

இந்தச் சித்தர்களின் கருத்துக்களின் தாக்கம் ஹிப்பி இயக்கங்களிலும் தென்பட்டது. சித்தர்களுக்கு மரணமில்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்வது சாத்தியம் என்றும் அவர்களின் ஆராய்ச்சியில் குறிப்பிடுகிறார்கள்.

சித்தர்களின் கடும் உழைப்பால் கிடைத்த வாத வித்தையே இன்று பலவித
அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. உலோகங்கள்,
பாஷாணங்கள், உப்பு, வேர்கள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை,கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவற்றின் குணங்களை இவர்கள்தான் முதன் முதலில் வெளியே சொன்னவர்கள்.

காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் பல கடினமான ஆராய்ச்சிகளையும் ”இதென்ன பெரீய்ய ஜுஜ்ஜுபி” என்று சவடால் விடாமல்
ஜஸ்ட் லைக் தேட் சாதித்திருக்கிறார்கள். என்றோ செய்து முடித்த இவர்களின் பல ஆராய்ச்சிகளின் வாசலுக்கு வந்து இன்றைய விஞ்ஞானம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

திருமூலர், போகர், கருவூரார், புலிப்பாணிச் சித்தர், கொங்கணர், அகப்பேய்ச் சித்தர், சட்டைமுனி சித்தர், சுந்தரானந்தர், அகத்தியர், தேரையர் சித்தர், கோரக்கர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர், உரோமமுனி, காகபுசுண்டர், இடைக்காட்டுச் சித்தர், குதம்பைச் சித்தர், பதஞ்சலி முனிவர் இப்பிடி ஒரு பதினெட்டுப் பேரும் ஒரு கலக்குக் கலக்கியிருக்காங்க.

”பால் மாறினா மாறிக்கோ. ஒழுக்கம் மட்டும் மாறக்கூடாதுபா” என்கிறார்கள் சித்தர்கள். சொன்னா நம்பமாட்டீங்க. பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் இதெல்லாம் மட்டும் வுட்டுட்டீங்கன்னா ரொம்ப நாளைக்கி வாழ முடியும். யோகப் பயிற்சி அதுக்கு உதவும்னும் சித்தர்கள் பல பாடல்கள் மூலமாச் சொல்லியிருக்காங்க.

இவர்கள் தமிழுக்கும் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும் கிடைத்த..... என்ன சொல்லலாம்... ம் பெருங்கொடை. இவங்க தமிழ் ஆர்வமும் மெய்யறிவு தேடியலஞ்ச பயணமும் இன்னிக்கும் புதுசாவும் செறிவாவும் அதோட சிலிர்க்கவும் செய்யுதுங்கோ.

இவர்கள் பாடல்களின் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தன்மையையும், பாடலில் இவர்கள் கையாண்ட பல்வேறு சமாச்சாரங்களையும் நீங்கள் இப்போதே கொட்டாவி விடுவதால் மற்றுமொரு பதிவில்.

19.12.10

இலக்கு.


இது ஒருகை எழுப்பும் ஓசையில்லை.

இது தலைவர் அழைக்கிறார் வாரீர் வாரீர் என்று கூவும் பேரணியோ மாநாட்டுக்கான அழைப்போ இல்லை.

செய்யும் தொழிலை விட்டுவிட்டு வீட்டைத் துறந்து நாம் இதுவரை ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களைத் துறந்து குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்தும் யோசனை இல்லை.

நமது எண்ணங்கள் நிகழ்த்த இருக்கிற மாற்றங்கள்தான் இதன் அடிப்படை.
நான் உள்ளிட்ட நம் ஒவ்வொரு தனி மனிதனிடமும் மாற வேண்டிய குணங்களைக் குறித்து இது கவலைப்படும் இயக்கமாக எண்ணுகிறேன்.

அடுத்த வீட்டின் மீதான அன்பும் அக்கறையும் அடுத்த தெருவுக்கும் ஊருக்குமாய் விரிவாகட்டும். தெருக்களில் காறி உமிழ்வதையும் குப்பை கொட்டுவதையும் பொதுக்குழாயில் வடியும் நீரை நிறுத்தவும் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கவும் தெரு ஓரங்களில் மலம் கழிப்பதையும் வீட்டை அழகு படுத்தத் தெருக்களை அசுத்தப் படுத்துவதையும் நிறுத்துவோம். பிறரையும் அறிவுறுத்துவோம்.

"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்" என்று ஔவையார் பாடியது விவசாயத்தை மட்டும் பார்த்த பார்வையாக எனக்குத் தோன்றவில்லை. சிறிய அடுக்கடுக்கான ஒழுங்கான சீரான படிகளில் வளர்ச்சி இருக்கிறது என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது. சிறிய மாறுதல்களிலிருந்து பெரும் அசுர மாற்றத்திற்கு இந்தப் பாதை செல்லும்.

யோசித்துப்பாருங்கள்.

கல்வி-விவசாயம்-மருத்துவம்-தொழில் முனைப்பு-பாதுகாப்பு-உள்நாட்டு நிர்வாகம்-வெளியுறவு-நிதி-ராணுவம்-விளையாட்டு-கேளிக்கைகள்-சமயம்-நீதி-சட்டம் ஒழுங்கு-தத்துவம் போன்ற ஒரு நாட்டை அடையாளம் காட்டக் கூடிய எல்லாத் துறைகளிலும் நம் நாட்டின் நிலை எத்தனை சீரழிந்து மாற்றத்துக்காக ஏங்குகிறது என்பதை நேர்மையாய் யோசிக்கிற எல்லோராலும் உணரமுடியும்.

எல்லாத் துறைகளிலும் நாம் விவாதிக்க மாறுதல் ஏற்படுத்த நிறைய விஷயங்கள் உள்ளன. நூறு வருஷத்துக்குப் பிந்தைய விதிகளை அல்லது ஒவ்வொரு முறையும் முட்டிக்கொள்ளும் போதும் அப்போதைக்கு சரி செய்துகொள்வது போன்ற ஒட்டுப்போட்ட ட்யூபில் எத்தனை நாள் வண்டியையோட்டுவது? ஒரு நெடிய பயணத்துக்கான புதிய தடம் அவசியம் தேவை.

கொஞ்சம் பொறுமையாய் இருந்து பார்க்கலாம்-அவசரப் படுகிறீர்களோ என்று தோன்றுகிறது என அனுபவத்திலும் முதிர்விலும் நான் மதிக்கும் பலரும் ஆலோசனை சொன்னபோது அதை ஏற்க எனக்குத் தோன்றவில்லை.

எதையெல்லாம் நம்பினோமோ அதையெல்லாம் இழக்க நேரிடும்போதும்- கைப்பற்றியிருந்த பிடியை நழுவவிடும்போதும் நமக்கு நேரும் அதே நிலையில் நாமிப்போது இருக்கிறோம்.

”பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப் பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவியிரண்டும் கலந்தே குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான் இது செய்யுமுன்னே முடியேன்” என்ற திரௌபதியின் இடத்தில் நாமிருக்கும்போது பொறுப்பதற்கும் இழப்பதற்கும் என்ன இருக்கிறதினி மீதி? இனிப்பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வாவென்றல்லவா நம் அழைப்பு இருக்கவேண்டும்?

நல்ல மாறுதலைக் கொண்டு வருவார்கள் என்றெதிர்பார்த்த தலைவர்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் எந்த மாறுதல்களும் உண்டாகவில்லை. பிரபலமாகிவிட்ட பின் பலரையும் பல விஷயங்களையும் யோசித்து பின் நமக்கென்ன? நம் காலம் முடிந்தது. பின்னால் வருபவர்கள் மாற்றுவார்கள் அல்லது காலச்சக்கரம் சுழலும் என்ற சால்ஜாப்போடு நாட்கள் நழுவிச் செல்வதை நாம் பார்த்துக் கைபிசைந்து நிற்கிறோம்.

ஏன் இந்த அவல நிலை?

இதை நிவர்த்திப்பதற்கு ஒவ்வொரு கட்டமாக இதைக் கொண்டு செல்வோம். முதலில் சிந்தனையை உறுதிப் படுத்திக் கொள்வோம். இந்த மாற்றம் சாத்தியம் என நான் நம்புகிறேன்.

இந்த நொடியே என்னையே நேரில் பார்த்துப் பழகாதவர்களும் பேசாதவர்களும் எப்படி இதைச் செய்வது? எது இலக்கு? என்றெல்லாம் ரொம்பவும் பெரிதாய்க் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

யார் எந்தத் துறையில் என்ன என்ன மாறுதல் கொண்டு வரலாம் என எண்ணுகிறார்களோ அவர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிரலாம். கூடிய விரைவில் ஒரு பொது வலைத்தளம் உருவாக்கி அந்தத் தளத்தில் நம் விவாதங்களைத் தொடர்வோம்.

விவாதங்களின் பொதுக் கருத்து நம்மை இணைக்கட்டும். அதன் பின் சந்திப்பதும் அடுத்த கட்டத்துக்குச் செல்வதையும் முடிவு செய்வோம். துவக்கம் எல்லாச் செயல்களையும் போலவே நிறையப் பேரிடம் சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விதைக்கும்.

தொடர்ந்து எழுதும்போதும் ஒரே திசையில் யோசித்துக் கொண்டிருக்கும் போதும் எல்லாம் சரியாகிவிடும். நல்ல நோக்கத்தை நம்புபவர்கள் இந்தப் புனிதப் பயணத்தில் இணைவார்கள்.

பொய்மையிலிருந்து வாய்மைக்கு-
இருளிலிருந்து ஒளிக்கு-
இறப்பிலிருந்து அமரத்வத்திற்கு -
எடுத்துச் செல்லட்டும் நம்மை இந்தப் பயணம்.

தொடர்ந்து எழுதுவேன்.

18.12.10

எது அரசியல்?-III


நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

யாரின் பின்னும் இனிச்செல்லாது நாமே முன்னின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக்காலங்களிலோ அவரவர் ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையுடன் லாபநோக்கற்ற சுயநலமற்ற நெடுந்தூரப் பயணத்திற்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

மதம் மொழி ஜாதி இனம் இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

நம் கவனம் இனி திசைதிருப்பல்களூக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் இந்தச் சுடரைத் தமிழகத்திலிருந்து ஏற்றுவோம்.

பிற மாநிலங்களூக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

முதலடி எடுத்து வைக்க முனைவோம். நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம். அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

காத்திருக்கிறேன்.

மேலே எழுதப் பட்ட கடிதம் கடந்த ஆறு மாதங்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த சலனங்களின் வெளிப்பாடு.

இதை நேற்று எழுதி வலைப்பூக்களில் என் பார்வைக்குட்பட்ட சார்பற்றவர்களாய்த் தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பினேன். சிலரிடமிருந்து இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து உடனடி பதில் கிடைத்தது.

சிலரிடமிருந்து அழைப்புக்களும் சிலரிடமிருந்து வாழ்த்துக்களும் சிலரிடமிருந்து ஒப்புதல்களும் சிலரிடமிருந்து யோசிப்பதற்குக் கால அவகாசம் கோரியும் இருந்தன எதிர்வினைகள்.

சரி. இதற்கான தயக்கங்கள் என் இலக்கையோ முடிவையோ மாற்றப்போவதில்லை. என் எழுத்துக்கள் தொடர்ந்து என் எண்ணங்களைச் சொல்லும். இப்போது சில விளக்கங்களும் சில யோசனைகளும்.

உங்களுக்கு மிக உயர்வான ஒரு பொருள் நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையில் விழுந்து விடுகிறது. அந்தப் பொருள் கண்ணெதிரே அவ்வளவு எளிதில் விட்டுவிடக்கூடிய ஒன்றல்ல. என்ன செய்வோம்?

அதே நிலையில்தான் நம் தேசம் சாக்கடைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. யார் எப்படிப் போனால் என்ன? நம் கதையைப் பார்த்துக் கொள்வோம் என்கிற சுயநலம் விஷ விருட்சம் போல் அடர்ந்து பரவ நாம் அனுமதித்துவிட்டோம்.

நம் தேசம் நம் உரிமை என்பதையெல்லாம் உதறி அதை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டு நடக்கும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் தட்டிக் கேட்கத் திராணியின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லது முடிந்தால் கவிதையோ கட்டுரையோ கதையோ எழுதி முடித்துக் கொண்டு விடுகிறோம்.

இப்படியே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முற்றிலும் பழுதடைந்து போன ஒரு கட்டமைப்புக்கு ஓட்டுப் போட்டுவிட்டு மாறுதல் வரும் என்று அதீதமாய் நம் பங்கு எதையும் கொடுக்காமல் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களையும் செய்தித் தாட்களில் வரும் அக்கிரமங்களையும் நமக்குத் தெரிந்த வட்டத்துக்குள் விவாதித்துவிட்டு மாறுதலுக்காக காத்திருக்கிறோம்.

எதுவுமே யாருமே முயலாத போது மாறுதல் என்ன மந்திரவாதியின் கையிலிருந்து வரும் கிளியா?

நாம் முதல் அடி எடுத்துவைக்காத வரை இந்த அடர் வனம் திகைப்பூட்டுவதாய்த்தான் இருக்கும். இதற்குள் உயிரைக் குடிக்கும் கருநாகங்களும் இரைக்காகக் காத்திருக்கும் கொடும் விலங்குகளும் காத்திருக்கும் என்பது குறித்து எந்த சந்தேகமுமில்லை. அவற்றோடு பழகி அவற்றிற்கு நம்முடைய மொழியைப் புரியவைக்கமுடியும் என்ற அசையாத நம்பிக்கை இருக்கிறது. நிலத்திற்கேற்ப நீரின் இயல்பு. நிலம் மாறும் போது நீரும் மாறும். மாற்றுவோம்.

மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வழிகாட்டல் நமக்கு பெரிய நம்பிக்கை.
தென் ஆப்பிரிக்காவில் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட பின் அவரின் பாதையில் மற்றொரு வீழ்ச்சி இல்லை. அசைக்கமுடியாத நம்பிக்கையும் செயலிலும் சிந்தனையிலும் தெளிவும் அவரை இன்னும் பல காலங்களுக்கு வழிகாட்டியாய் நிறுத்தும். உண்மை-நேர்மை-பிறரிடம் அன்பு-பொறுமை-சகிப்புத்தன்மை-சொல்லும் செயலும் ஒன்றென வாழ்தல் இவையெல்லாம் அவரின் ஆயுதங்கள். இவையே இன்றைக்கும் கேடுகளை வீழ்த்தப் போதுமான
ஆயுதங்களாக நமக்கும் கை கொடுக்கும்.

அடுத்து இந்த இயக்கத்துக்கான வழித்தடம் வலையின் மூலமாகவும் தொலைபேசியின் மூலமாகவும் தேவைப்படும் நேரங்களில் வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலமாகவும் நம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம். போன நூற்றாண்டுக்குக் கிடைக்காத அறிவியலை நம் விரைவான பரிவர்த்தனைக்கும் ஆலோசனைக்கும் பயன்படுத்திக்கொள்வோம். நாம் யாருக்கும் கேடு நினைக்காத போது நம் சிந்தனைக்குத் தேவையான ஆன்ம பலம் நமக்குக் கிட்டும். தெய்வத்தின் அல்லது இயற்கையின் துணை வழி நடத்தும்.

இன்று ஒரு தென்னை மரம் நட மண்ணைத் தேர்வு செய்து பண்படுத்தி கன்றை நட்டுப் பராமரிப்போம். இயல்பாய் அது வளர உரமிட்டு நீர் பாய்ச்சிப் பாதுகாப்போம். ஐந்து வருடங்கள் கழித்து அதன் முதல் இளநீரைப் பருகுவோம். தென்னைக்குக் காத்திருக்கும் நம்மால் தேசத்திற்குக் காத்திருத்தல் கூடாது போகுமோ?

நான் நாமாகக் காத்திருக்கிறேன்.

நிறைய மறுபடியும் எழுதுவேன்.

16.12.10

எது அரசியல்?-II


ஒரு குடியசுத் தலைவரின் மாளிகைக்கும்-
ஒரு உப குடியரசுத் தலைவரின்
மாளிகைக்கும்-
தோராயமாக முப்பது
ஆளுநர் மாளிகைகளுக்கும் -
முதல்வர் மந்திரி பரிவாரங்கள்
அவர்கள் சுற்றம் கொற்றம் என்று
பெருங்கூட்டம்
இவர்களுக்கான மாளிகைகளுக்கும்-
எப்போதெல்லாம் ஆட்சி
மாறுமோ
அப்போதெல்லாம் புதிய மோஸ்தரில்
மறு நிர்மாணத்திற்கும்-
அவர்களின்
கிலோமீட்டர்கள் கணக்குகளில்லாத
பயணத்துக்கான இலவச எரிபொருளுக்கும்-
ஸெட்-ஒய்-எக்ஸ் என்ற பாதுகாப்பு
வளையங்களுக்கும் அவர்கள் பின்தொடரும்
வாகனங்களின் எரிபொருளுக்கும்-
திடீர் உடல் நலமின்மையைச் சமாளிக்கப்
பின் தொடரும் மருத்துவர்களின் எரிபொருளுக்கும்-
அவர்களின் மாளிகைகளில் உள்ள
பெயர் தெரியாத பூச்செடிகளுக்கும்-
நாய் வகைகளுக்கும்-
வெண்மை மாறாத சலவைகளுக்கும்-
மன அழுத்தம் ஏற்படுகையில்
இளைப்பாற
தன் செலவில் தங்கி
இளைப்பாறும் பொதுஜனத்தைத்
துரத்தியடித்து இளைப்பாறும்
விருந்தினர் மாளிகைகளுக்கும்-
அவர்களின் “அலுவல்” நேரத்தில்
குடும்பத்தினர் காரோட்டி
பொருத்தப்பட்ட வாகனங்களில்
சவாரி செய்து கடைகண்ணிகளுக்குச்
சென்று மகிழ்வதற்கும் -
கணக்கற்ற வெளிநாட்டுப் பயணத்தின்
செலவுகளுக்கும்-
உள்நாட்டில் வான் தரை நீர் மார்க்கமாக
எங்கும் எப்போதும் ஓசியில் பயணிப்பதற்கும்
கிழிக்கிற கிழிப்புக்கான
ஐந்திலக்கச் சம்பளம் அலவன்ஸ் வகைகளுக்கும்-
வெளிநாட்டின் உயர்தர
அறுவை சிகிச்சைகளுக்கும்-
ஓய்வுக்குப் பின் ஓய்வூதியத்துக்கும்
செத்த பின்
அரசு மரியாதையுடன்
சவத்தைப் புதைக்கவோ
எரிக்கவோ ஆகும் செலவுக்கும்
வருடத்தின் முந்நூத்து அறுபது நாளும்
காக்கைகளின் கழிவறையாய் மட்டும்
உபயோகமும்
போக்குவரத்து நெரிசலுக்கு
இடைஞ்சலாகவும் வெட்டியாய்
நிற்கும் ஆயிரக்கணக்கான
கற்சிலைகளின் பிறந்த நாள்
செத்த நாள் கருமாந்தரங்களுக்கு
மேடை அமைக்கவும்-
கேமிராவின் திசையில்
மாலையிட்டபடி சிரிக்கவும்
ஷாமியானா சர்வ மத
பிரார்த்தனைகளுக்கான
செலவினங்களுக்கும்-
முக்கியமான மக்களின்
பிரச்சனைகளுக்காக
எப்போதாவது உண்ணாவிரதம்
இருக்க நேரின் அதற்கான
திடீர் மேடை கழிவறை செலவுக்கும்-
மேற்சொன்ன சொல்லாமல்விட்ட
உங்களின் எல்லா இலவசங்களுக்கும்-
காப்பீடு செய்யத் தேவையில்லாத
இருபது வருஷப் புராதன
டிவிஎஸ் 50க்கு பெட்ரோல் போடுவதன்
மூலம் தெரியாமலே வரிகட்டும்
கோடிக்கணக்கான சாமான்யர்களின்
தலையில் மேலும் மூணு ரூபாய்
ஏற்ற உங்களுக்கு வெட்கமாயில்லை?
அம்பானிக்கும் ஒரே விலை
பெயரில்லா எனக்கும் ஒரே விலை.
நல்ல பொருளாதார சிந்தனை
உங்களது.
தான் போதித்த படி வாழ்ந்துகாட்டி
வாழ்வின் இறுதிநாட்களில்
மன வருத்தத்துடன்
உயிர் துறந்த மஹாத்மா
மோகன் தாஸின் எளிமை -
அவரின் சிலையின் கீழ்
நின்று எளிமை குறித்து
போதிக்கும் உங்களில்
ஒருவரையுமா
அந்த ஆன்மா ஊடுருவவில்லை?
ஆண்டு பூராவும் கூவுகிறீர்களே
ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் என்று
அந்த இழப்புக்குச் சமமாய்
தண்ணீராய்ச் செலவிடும்
நாட்டின் வரிப்பணம்
நீங்கள் கட்டாமல் ஏமாற்றுவது
போலல்ல.
நாங்கள் ஒவ்வொரு முறை
செலவிடும் போதும்
ஒவ்வொரு முறை
சம்பாதிக்கும் போதும்
ஒவ்வொரு முறை
சேமிக்கும் போதும்
ஒவ்வொரு முறை
சேமித்ததும் திவாலாகாமல்
திரும்பப் பெறும்போதும்
கட்டும் வரிப்பணமய்யா அது.
எம் கண்களில்
பெருத்த அலையின்
எழுச்சி
பார்வைக்குத் தப்பிய
தொலைவில் எழுகிறது.
எம் சிந்தையில்
புது மாற்றங்கள் தரவுள்ள
நவ இளைஞர்களின்
வரவைக் கட்டியம்
சொல்கிறான் கால தேவன்.
உங்களின் இருப்பும்
இல்லாமையும்
தீர்மானிக்கப் பட இருக்கிறது.
உங்களின்
சுவடும் கபடும்
நசுக்கப் படவும் பொசுக்கப்படவும்
இருக்கிறதென
எச்சரிக்கிறது காட்டுச்சுடராய்
என் எழுத்து.

15.12.10

எது அரசியல்?-I


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

1977ல் எனக்குப் பன்னிரண்டு வயது. இந்திரா தோற்றது நள்ளிரவில் செய்தியாக வெளியாகிறது. பகலிரவாக செய்திகள் ஆகாசவாணியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

ஒரு கோமாளியை நினைவுபடுத்தும்-உ.பி.யைத் தவிர இந்தியாவில் யாருக்கும் அறிமுகம் இல்லாத ராஜ்நாராயண் இந்திராவைப் படுதோல்வி அடையச் செய்த நிமிடத்தை அதிர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது இந்தியா. அந்த முடிவு உடனே வெளியிடப்படவில்லை.

அன்றைக்கு ஆகாசவாணியைத் தவிர அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு எதுவுமில்லை. எமெர்ஜென்ஸியின் மிச்சமாக செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. பத்திரிகைகள் தணிக்கை செய்யப் பட்டு வெளிவந்தன. ராம்நாத் கோயங்கா-கரஞ்சியா-குல்தீப் நய்யார்-சோ போன்ற சிலரே மக்களின் குரலைப் பிரதிபலித்தார்கள். மற்றெல்லோரும் பின் சென்றனர்.

முழுமையாய் காங்கிரஸ் தோற்று ஜனதா அமோகமாய் வெற்றி பெற்று ஜெயப்ரகாஷ்நாராயணன் கிருபளானி ஆகியோரின் வழிகாட்டுதலில் மோரார்ஜி தேசாய் தலைமையில் அடல் பீஹாரி வாஜ்பாய்- ஹெ.என்.பகுகுணா- ஜெகஜீவன்ராம்- சரண்சிங்-மது லிமாயி-மது தண்டவதே- ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் போன்ற எளிய பின்னணி கொண்ட இந்திராவின் அடக்குமுறைக்கு ஆளான தலைவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியமைக்கிறார்கள்.

சர்வாதிகாரத்தையும் படாடோபத்தையும் கண்டு சலித்த மக்களுக்கு இந்தத் தலைவர்களின் எளிய அணுகுமுறையும் மக்களுக்கு நெருங்கிய முடிவுகளை அதனதன் மதிப்பீட்டில் தீர்மானித்த வேகம் எல்லாம் புதுமையாக இருக்கிறது. ஆட்சியில் இருந்த குறுகிய நாட்களில் ரேஷன் முறையை ஒழித்து வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தார்கள்.ஒவ்வொரு சாதாரண மக்களிடமும் நாட்டுக்கு மறுமுறை சுதந்திரம் கிடைத்ததான சந்தோஷம் கரைபுரள்கிறது.

நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போனது. அத்தியாவசியமான சேவைகள் முறையாக நடைபெறவில்லை. குற்றங்களின் எண்ணிக்கை கட்டுங்கடங்காது போயிற்று என்று தான்தோன்றித் தனமான முதிர்ச்சியற்ற சரியான வழிகாட்டுதலற்ற ஒரு முடிவை எடுத்து அவசர நிலைச் சட்டத்தைப் பிரகடனப் படுத்தி எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களையும் விசாரணையின்றி சிறையிலடைத்து இருபது அம்சத் திட்டம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத்தனமான மிகவும் பொருந்தாத திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்தார்.
ஜனார்த்தன் பூஜாரி நிதிமந்திரியாய் காங்கிரஸ்காரர்களுக்கெல்லாம் வங்கிகள் உடனடிக் கடன் கேள்விகள் ஏதுமின்றிக் கொடுக்க லோன் மேளாக்களால் உதவினார். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உழுதுகொண்டிருந்த விவசாயிகளை செயற்கை உர உபயோகத்துக்கு மாற ஊக்குவித்ததைப் பசுமைப் புரட்சி என்றும் பால் உற்பத்தியில் குஜராத்தை ஈயடிச்சான் காப்பியடித்து அமுல் பாணியில் எல்லா மாநிலங்களிலும் வெண்மைப் புரட்சிக்கு முயன்றதும் இன்றைய சீரழிவின் துவக்கங்கள். நீர் ஆதாரங்கள் குறித்தும் அவற்றை எப்படி அடுத்த பல தலைமுறைகளுக்கு உபயோகமாகப் பயன்படுத்துவது பற்றியும் திட்டமிடவில்லை. பல பகுதிகளில் வெள்ளச் சாவுகளும் பல பகுதிகளில் வறட்சியால் சாவுகளும்- வெந்ததைத் தின்று விதிவந்தால் செத்த படி.

பஞ்சாபில் லோங்கோவாலை சமாளிக்க பிந்தரன்வாலேயை ஊக்குவித்ததும், என்ன செய்கிறோம் என்று தெரியாது ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற முரட்டு நடவடிக்கையால் சீக்கியர்களின் மதநம்பிக்கைகளுக்கு எதிர்திசையில் நின்றதையும், அதே பிந்தரன்வாலே இந்திராவுக்கெதிராய்த் திரும்பியதையும் காலம் கவனித்துக் கொண்டிருந்தது.

மக்களின் சம்மதமில்லாத போதே கட்டாயப்படுத்தி குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் ஏராளமான ஆண்களுக்கு வாஸெக்டமி செய்து சாதனை படைக்க அவரின் அருமந்த புத்திரன் சஞ்சய் முன்னிலை வகித்தார். இந்திராவின் மற்றொரு மகன் ராஜீவ் சோனியாவைக் காதலித்தபடி விமானம் ஓட்டிக்கொண்டிருந்தார்.

இங்கே தமிழ்நாட்டில் இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்ற வசனத்தைக் கிளிப்பிள்ளை போல் உளறிக்கொண்டிருந்த தி.மு.க. ஆட்சி ஊழலைக்காரணம் காட்டி 356பிரிவின் படிக் கலைக்கப்பட்டது. எமெர்ஜென்ஸியின் போது தி.மு.க.வுக்கு எதிரான அத்துமீறலகளுக்கு மதுரைக்கு வந்த இந்திரா மீது கொலைவெறித் தாக்குதலில் தி.மு.க.வினர் ஈடுபட்டபோது பழ.நெடுமாறன், சித்தன் போன்றோரால் ரத்தம் சிந்திக் காப்பாற்றப் பட்டார். மறுபடியும் அரசியலின் கூச்சங்கள் ஏதுமின்றி நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக ப்ளீஸ் என்று கெஞ்ச இந்திராவும் தன் மீது ஏவப்பட்ட தாக்குதலையும் ஊழலாட்சி என்ற மத்திய ஆட்சியில் தன்னால் பரிந்துரைக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டதையும் மறந்து ஆயிரம் நாட்களுக்குள் அதே தி.மு.க.வுடன் கூட்டுச் சேரத் தயாரானதும் மக்களைக் கடைந்தெடுத்த மடையர்களாக நினைத்ததன்றி வேறென்ன? பாவம் நெடுமாறனும் சித்தனும்.

சொல்லித் தீரவில்லை. சொல்வேன் இன்னும்.

13.12.10

இது காற்றடைத்த பையடா.


ஸ்டோனத் தாண்டி வந்துட்டோம். வலிக்கு ஸ்டோன்தான் முதல்படியும் கடைசிப்படியும். அதாவது ஒரே படிதான்.

இந்த ஸ்டோன் நீங்க தினம் சாப்பிட்ற கீரையில, முட்டைக்கோஸ்ல, கன்னாபின்னா மினரல் வாட்டர்ல, சாக்லெட்ல, பால்ல இருந்து எடுக்கற க்ரீம்ல, பால்ல, வெயில்ல ஸ்டைலா ஸ்ட்ரா போட்டு உறிஞ்சற எளநீர்ல இப்பிடி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். தேவையான அளவு தண்ணி குடிச்சாலும் அளவுக்கு அதிகமாக் குடிச்சாலும் ஸ்டோன் உருவாகலாம்.

அதுல இருக்கற கால்ஷியம் கொஞ்சம் கொஞ்சமா படிய ஆரம்பிச்சு மெதுவா சின்னக் கற்களா மாற ஆரம்பிச்சு சிறுநீர்ப் பையிலிருந்து அது வெளியேறும் துவாரம் வரை மெல்ல நகரும் போதோ அல்லது சிறுநீரை வெளியேற்ற விடாமல் தடுக்கத் துவங்கும்போதோ நரக வேதனை ரைட் அண்ட் லெஃப்ட் ஆரம்பிக்கும்.

வயத்தப் பிரட்டும் ஆனா வாந்தி வராது. தொண்டைல முடி மாட்டிக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு இருக்கும். ஆனா அப்பிடி எதுவும் இருக்காது. ஒரே நேரத்துல உட்காரணும் போலவும் படுக்கணும் போலவும் நிக்கணும் போலவும் தோணும். சாப்பிடப் பிடிக்காது. ஆனா பசிக்கும். தூங்கணும் போல இருக்கும். ஆனாத் தூங்க முடியாது. சிறுநீர் கழிக்க விரும்புவீர்கள். ஆனால் கழிக்கும் போது படும் அவஸ்தைக்கு கழிக்காமலே இருக்கலாம் போலத் தோன்றும்.

சுருக்கமாச் சொன்னா யாரையோ காதலிக்கும்போது ஏற்படக்கூடிய உணர்வுகள் கிட்டத்தட்ட ஏற்படும். படுக்கையில் படுத்து தூங்கியதாக பாவனை செய்து விட்டுக் காலையில் படுக்கையிலிருந்து எழ- கால் மணி நேரமோ அல்லது வலி தாங்கும் சக்தியைப் பொறுத்துக் கூடவோ நேரம் ஆகலாம்.

சட்டென்று நீங்கள் எழ முடியாமல் ஸ்லோ மோஷனில் முக்கி முனகி எழுவதைக் கவனிக்கும் விவரம் புரியாத ஒருவர் நீங்கள் புஜங்காசனத்திலிருந்து மயூராசனம் ட்ரை பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளப் படும் அபாயமும் இந்த ஸ்டோனில் இருக்கிறது.

கூட்டமாக ”இவ்வளவு அக்கிரமங்களுக்கும் காரணமான ஸ்டோனை ஒழிக்க வழியே இல்லையா?” ன்னு நீங்கள் ஆவேசமாகக் கர்ஜிப்பது எமது காதுகளைத் தொடுகிறது. பொறுமை. பொறுமை.

வைத்தியம் மற்றெல்லா முறைகளையும் விட ஒரு கீரையை மண்ணிலிருந்து பிடுங்கும் அளவு ஹோமியோபதியில் எளிதாக இருக்கிறது.

சரிதான். இப்பப் புரிஞ்சு போச்சு. சுந்தர்ஜியோட தாத்தாவோ அல்லது அப்பாவோ ஈயோட்டிக்கொண்டிருக்கும் ஒரு ஆதிகாலத்து ஹோமியோபதி டாக்டர் என்றும் சுந்தர்ஜியின் இடுகைகளைப் படித்து ஸ்டோனுக்காக எல்லோரையும் ட்ரீட்மெண்டுக்காக பாண்டிச்சேரிக்கு மடக்கிக் கொண்டு சென்று கடகடவென சம்பாதித்து விடவும் ஏற்பாடு நடக்கிறது என்று உங்களுக்குத் தோணலாம்.

ஒரு துண்டு குடுங்க. ஆங். இந்தோ தாண்டிட்டேங்க. சத்தியமா அப்பிடில்லாம் இல்லை.

என்னடா இவன் தொல்லை தாங்கலை. ரெண்டு நாளா ஸ்டோன் ஸ்டோன்னு இப்பிடி பயமுறுத்தறானே ஒருவேளை இவனே ஒரு ரகசிய வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸாகவோ முன்னாபாய் எம்பிபிஎஸ்ஸாகவோ அல்லது சங்கர்தாதா எம்பிபிஎஸ்ஸாகவோ இருக்கலாமோ? (எப்பிடி மூணு படத்தையும் புடிச்சுட்டேன் பாத்தீங்களா?)

யாருகிட்டயோ தன்னை டாக்டர்னு சொல்லி ஏமாத்தறத்துக்காகவோ அல்லது வேறேதோ ஒரு வெப் சைட்டிலிருந்தோ மேட்டரக் காப்பியடிச்சுக் கலக்கிக்கிட்டுருக்கான்னோ நீங்க அடுத்தபடியா நினைக்கலாம். மனுஷனுக்கு சந்தேகம்னு வந்துட்டா அது சுந்தர்ஜியப் பாக்குமா இல்ல பந்தர்ஜியப் (சிலரின் சந்தோஷத்துக்காக ஹிந்தியில் பந்தர் என்றால் குரங்கு) பாக்குமா?

சரி. நேரே மேட்டருக்கு வர்றேன். ஏங்க ஒரு ஜெயிலப் பத்தி போலீஸுக்கு மட்டும்தான் தெரியுமா?
யா. நான் ஒரு திருடன். சாரி. நான் ஒரு ஸ்டோனை அனுபவித்த ஒரு நோயாளி. அதுனால ஸ்டோனப் பத்தி எனக்கு வைத்தியம் பாத்த டாக்டர விட எனக்கு நல்லாவே தெரியும். அவர் என்னோட ஸ்கேன்ல கல்லைப் பாத்தாரு. ஆனா நான் கல்லோடய ஸ்கேனை பாத்தேன்.

முடிவா சொல்றேங்க. ஸ்டோனோட வலியை ஹோமியோபதில குணப்படுத்தற மாதிரி வேறெதுலயும் இத்தனை எளிமையா குணப்படுத்த முடியாதுங்க. ஒரு ஸ்கேன் ஒரு கோர்ஸ் மருந்து. செலவும் குறைவு. வலியும் மறைவு.

இங்க பாருங்க கையையும் காலையும் வீசி வீசி பாசமலர் சிவாஜி மாதிரி கைவீசம்மா கைவீசுன்னு எப்பிடி ஜம்முனு நடந்து போறேன் பாருங்களேன்.

ஸ்டோன் குணமான பின் நான் எப்படி இருக்கிறேன் என்று பார்க்க விரும்புபவர்களுக்காக மேலே பாசமலர் சிவாஜியின் படம். என்னுடையது டவுன்லோடாகவில்லை.

இன்னிக்குத் தப்பிச்சீங்க. பொழச்சிப் போங்க.

12.12.10

காயமே இது பொய்யடா.


இருபத்தி நான்கு பெண்களும் ஒரு பெரியவரும் பேண்ட் சட்டையுடன் செல்லும் ஒரு பையனும் எதை இத்தனை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

தெரியலைல்ல. கடைசீல சொல்றேன்.

உடனே கடைசிக்குப் போனீங்கன்னா சொர்க்கத்துல உங்களுக்கு இடம் கிடைக்காது. படிச்சுட்டுக் கடைசிக்குப் போங்க.

நம்ம மருத்துவம் பத்தி இந்த இடுகை.

சரி-சரி. கொட்டாவி விட்டுக்கிட்டே விட்டத்தையும் சுற்றுகிற மின்விசிறியின் வண்ணத்தையும் பார்க்க வேண்டாம்.

எத்தனை தடவை நீங்க இந்த 2010ல் நோய்வந்து படுத்திருப்பீங்க? பதில ஒங்களுக்குள்ளேயே சொல்லிக்குங்க.

இதுல வெறும் ஜலதோஷம், இருமல், தலைவலி போன்ற சாதாரண சமாச்சாரங்களுக்கு டாக்டரப் பாக்கப் போனவங்க மட்டும் கை தூக்குங்க.

ஏயப்பா! இத்தன பேரா?

ஏன் எல்லாரும்- குறிப்பா ஆர்வம் இல்லாதவங்களும் கூட லட்சம் லட்சமாக் கொட்டி டாக்டராகத் துடிக்கிறாங்கன்னு இதுலேருந்தே புரிஞ்சுக்கலாம்.

இன்னும் கையக் கீழ போடலியா? உஸ்ஸப்பா. கீழ போடுங்க ஸார்.

பொதுவா எந்த ஒரு வியாதியும் நமக்குத் தெரியாம நம்ம கிட்ட வரவாய்ப்பில்லை.

தலைவலி ஜலதோஷம் இருமல் இப்பிடி எல்லாமே கொஞ்சம் நேத்தைய தினத்தை உத்துப் பாத்தா கண்டுபிடிச்சுடலாம்.

ஒரு ஐஸ்க்ரீம் அல்லது வெயில்ல அலைச்சல்-ஏசி ஓடாத த்யேட்டர்ல அளவுக்கதிகமா விசிலடிச்சது-நல்ல மழைல பீச்சுல மொளகா பஜ்ஜி அல்லது மாங்கா பத்தைய விளாசினது-நண்பன் ஊற்றிக்கொடுத்த ஓசித் தண்ணி-இப்பிடி ஏதோ ஒண்ணு-சிலருக்கு எல்லாமோ-காரணமா இருக்கும்.

இதையெல்லாம் யோசிக்காம நேரே ஓடு டாக்டர் கிட்ட. அதுவும் அவர் காத்து வாங்கற டாக்டரா இருந்தா அவமானம்.

போனாக் கொறஞ்சது மூணு மணிநேரமாவது காத்திருந்து ரிஸப்ஷன்ல சகல விதமான போஸ்களில் வியாதியோடு குழப்பமாக முனகியபடி உட்கார்ந்திருக்கும் எல்லோரையும் வெறுப்பாய் அவ்வப்போது பார்த்துக்கொண்டு கழுத்து சுளுக்கும் உயரத்தில் சொன்னதையே பத்தாவது தடவை சொல்லும் ஏதோ தண்ட ந்யூஸ் சேனலைப் பாத்தபடியே இருக்க நூத்திப்பத்து ஸாரி ஸாரி ”ஹண்ட்ரடன் டென் வாங்க” என்று சவுண்ட் கொடுக்கும்போது என்ன வியாதிக்காய் நாம் வந்தோம் என்பதே மறந்துபோய் லேசாய் சூடா ஏதாவது சாப்பிடலாமா எனத் தோன்றும் போது ”ஏங்க காதுல வுழலை ஹண்ட்ரடன் டென் வாங்கன்னு ஹண்ட்ரடன் டென் டைமாக் கூப்பிடறேன். யாருங்க அது?” என்று மிரட்டியபின் ந்யூஸ் சேனல்-சாப்பிடும் நப்பாசை எல்லாத்தையும் உதறி எழ ”நீங்கதானா? டாக்டரப் பாத்துட்டு அப்பிடியே ஈ.என்.டி. டாக்டரையும் பாருங்க. காது சுத்தமா இந்த வயசுலயே ஔட்டு” என்று ’குண்டூசி கீழ விழுந்தாக் கூட உங்களுக்குக் காதுல விழற அளவுக்கு பாம்புச் செவி’ என்று மனைவி பெருமையோடு மெச்சிக்கொள்ளும் அதே இரண்டு காதுகளிலும் விழும்படி அட்வைஸ் கொடுக்கும் போது தலைவலிக்காக இந்த டாக்டரப் பாக்க வந்ததுக்கு இது தேவைதான் என்று எப்போதோ வலித்த தலையில் ரெண்டு போட்டுக்கொள்வீர்கள்.

அடுத்து கொஞ்சம் சீரியஸா முகத்தை வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்காரே அந்த நீலக் கலர்ல கோடு போட்ட சட்டையும் நிறைய ப்ளீட்ஸ் வெச்ச பேண்டுமா ஓரத்துல.

அவருக்கென்ன வியாதி தெரியுமா?

கிட்னி ஸ்டோன்ங்க.

ஸிட்னி ஷெல்ட்டனும் ஸில்வெஸ்டெர் ஸ்டாலோனும் கலந்தா மாதிரி இருக்கேன்னு நீங்க யோசிக்கலாம்.

சிறுநீரகப் பையில கல்லு.

இதுவும் ஒரு தமிழ்ப் படத்தோட தலைப்பாப் பதிவு பண்ணியிருக்கறதா சேம்பருக்கு அன்னிக்குப் போயிருந்தப்ப பேசிக்கிட்டிருந்தாங்க. சரி விடுங்க.

இது வீடு கட்டும் போது ’ஹை!யார் மண்டைலயும் விழாம எப்பிடி இப்பிடி லாவகமா செங்கல்லத் தூக்கி மேலே வீசறாம் பாரு’ என்று வேலைவெட்டியில்லாமல் கீழ நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கறவங்களுக்கு வர்ற வியாதி மாதிரி ஒரு ஜாடைக்குத் தெரியலாங்க.

ஆனா அப்பிடி ஒரு எண்ணமிருந்தா அதை மாத்திக்குங்க.

இது சுண்ணாம்புச் சத்து அதிகமா இருக்குற உணவு அல்லது நீர் என்று ஏதோ ஒரு வகையில் அளவுக்கதிகமாயோ குறைவாயோ உட்கொள்வதால் வெண்பொங்கலில் மிளகு போல சிறுநீர்ப் பையில் உருவாகி உயிரை உலுக்கும் கற்கள். இதைப் பின்னாடி இன்னொரு தடவை விரிவாவாவாவாப் பாக்கலாம்.

அவர் நெளியும்போது பாக்கக் கஷ்டமாத்தாங்க இருக்கு. ஆனா அவருக்கு கன்ஸல்டேஷன் ஸ்கேன் லேசர் ட்ரீட்மெண்ட் பெட் சார்ஜ் அட்டெண்டெண்ட் சார்ஜ்னு மறுவாரம் பில்ல நீட்டும்போது நெளிவார் பாருங்க அதுக்கு முன்னாடி இது பிஸ்கோத்துங்க.

அடுத்த சீனைப் பாருங்க.

நம்ம நீலக் கலர் சட்டைக்கார ஸ்டோன்மேன் தள்ளாடியபடியே மெடிகல் ஸ்டோர் போய் இருபது மாத்திரை இருபது நாள் நாலு தடவை” னு எழுதின ப்ரிஸ்க்ரிப்ஷனைக் கொடுக்க அவன் ஒரு பெரிய டப்பாவில் ரெண்டு பேராச் சேர்ந்து தூக்கிட்டு வந்து மருந்தக் குடுத்துட்டு ’பாவம் வீட்டுல எல்லாருக்கும் ஒரே நேரத்துல இப்பிடி கிட்னி ஸ்டோன் வந்தா மனுஷன் என்னதான் பண்ணுவான்’ என்கிற உசுப்பேற்றும் வசனத்துக்கும் சேர்த்து துட்டை அழுதுவிட்டு தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு போவதை ரெண்டு கண்ணாலும் பாத்தேன்.

வேடிக்கை போதும். அடுத்தவங்க வலியும் வேதனையும் ஒங்களுக்கு விளையாட்டா இருக்கான்னு தமிழ்நாடு கிட்னிஸ்டோன் அவஸ்தையாளர் சங்கத்து பொதுக்குழு உறுப்பினர்கள் என் வீட்டெதிரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் காவல்துறை அனுமதியோடு நோட்டீஸ் விட்டுவிடக்கூடும் என்கிற ஆபத்தை சடுதியில் உணர்ந்த நான்.......

ரூட்ட மாத்தே.
(தொடரும்)

(மஹாபலிபுரத்தில் இந்த இடுகையை அர்ச்சுனன் தபசு என்கிற பாறையில் ஒட்டி வைத்து சிற்பங்களை ஆர்வமுடன் கவனிக்கிறார்களா இல்லை சுந்தர்ஜியின் இடுகையைப் படிக்கிறார்களா என்று பின்னால் கேமெராவுடன் பதுங்கியிருந்த போது அனைவருமே இடுகையைப் படிப்பது கண்டு அசந்து போய் எடுத்த புகைப்படம். அந்தக் கூட்டத்துக்கு முன்னால் என் இடுகை ஒட்டப்பட்டிருப்பதை அந்தப் பெரியவர் வருவோர் போவோருக்கெல்லாம் விளக்கும் காட்சி. )

10.12.10

வீடென்று எதனைச் சொல்வீர்?


முக்கி முனகி கொஞ்சம் கோணலாக ஒரு ப்ளாட் வாங்கி அதுல தினம் சாப்பிடாமக் கொள்ளாம என்ஜீனீயரோட மல்லுக்கட்டி மேஸ்திரிய தாஜா பண்ணி கொத்தனார் சித்தாள் வரைக்கும் சந்தோஷமா வெச்சுக்கிட்டு ஆசாரி,ப்ளம்பர்,எலெக்ட்ரீஷியன்,பெயிண்டர் வரைக்கும் ஒவ்வொருத்தரையும் உருவி-

அதுக்கும்முன்னாடி ப்ளானிங் டிபார்ட்மெண்ட்ல அப்ரூவல் வாங்கி மின்துறை ஒப்புதல் குடிநீர் வாரியத்திடம் மல்லுக்கட்டி ரோடு பள்ளந்தோண்ட அனுமதி வாங்கி வீடு கட்ட ஏதோ ஒரு வங்கில வாங்கின கடன் சரியான நேரத்துக்கு வராம-

அடுத்த பக்கம் சிமெண்ட்-மணல்-செங்கல்-ஜல்லி வர்றதில உள்ள தாமதம்-லோடு மண்ணை சம்பந்தமில்லாத நேரத்துல சம்பந்தமில்லாத இடத்துல கொட்டி அதை மறுபடி அள்ளி நம்ம வீட்டு வாசல்ல கொட்டி

தளம் போடும் நாளில் எல்லாரும் வந்த போதும் என்ஜினீயரின் ஒண்ணு விட்ட பெரியப்பா வேறெதையும் விடமுடியாத உயிர விட அவரோட அடக்கம் மற்றும் மறுநாள் பால்+அஸ்தி கரைப்பு, எல்லாம் ப்ளான் படி கட்டிவரும் வேளையில் இதை இப்படி மாற்றினால் நன்றாக இருக்குமே என்று குழப்ப ஒரு நபர் கிளம்பி வர அதை மாற்றி இடித்துக்கட்ட மறுநாள் வாஸ்து புருஷன் ஒருவர் வந்து ”ஸார் இது அக்னிமூலை இங்கன போயி பெட்ரூமை ப்ளான் பண்ணியிருக்கீஹளே” என்று மற்றுமொரு ஈவிரக்கமில்லாத யோசனையுடன் நாற்பது பேர் சாப்பிடத்தேவையான புளிக்குழம்புக்குக் கரைக்கக் கூடிய புளியை நம் ஒரே வயிற்றில் கரைக்க நம்மைச் சற்று முறைத்துக்கொண்டே சித்தாள் கடப்பாறையுடன் நம் தலையில் போட வருவது போல வந்து இடத்தை மாற்றி இடிக்கத்தொடங்க-

நிலை பூஜைக்கு முதல் நாள் லிஸ்ட்படி எல்லாம் வாங்கிட்டீங்களா என்ற குரலுக்கு சம்மன் இல்லாமல் மேஸ்திரி ஆஜராகி எல்லாருக்கும் புதுத் துணி எடுத்துக்கொடுக்கணும் சார். வாங்கிட்டீங்கதானே? என்று புது சந்தேகம் எழுப்ப வசதியுள்ளவங்க மோதிரமே போடலாம். ஆனா எங்களுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு சார். துணி மட்டும் போதும் என்று பசும்பால் வார்க்க நிலை வைத்து-

அடுத்துப் பொருத்தமான மார்பிளுக்கோ டைலுக்கோ லோலோ என்று அலைய அங்கு உங்களுக்காக ஒருவர் கடவுளால் அனுப்பப்பட்டு ”சார்.மார்பிள்னு பாத்தீங்கன்னா ராஜஸ்தான்ல நேரடியா வாங்கறதுதான் சீப். ஒரு லாரில கொண்டுவந்தா வேல முடிஞ்சுடும்” என்று ஏதோ அடுத்த தெரு நாடார் கடையில் குட்டிகுரா பௌடர்டின் வாங்குவதுபோல் கன்யாகுமரிக்கும் ராஜஸ்தானுக்கும் பாலம் போட்டு நம்மைத் திசை திருப்ப அவரிடம் கட்டுவது தாஜ்மஹல் இல்லை ஜெண்டில்மேன்.ஜஸ்ட் ஒரு ஆயிரத்துஐநூறு சதுரத்துல அதிகம் போனா ’வீடாப்பா இது கண்ட்ட்ரிப்ரூட்’ என்று ஒரு ஐம்பது வருடத்தில் பேரனால் இடிக்கப்பட்டு ஒரு அபார்ட்மெண்ட்டாகவோ அரிசிமண்டியாகவோ மாறப்போகிற சாதாரணக் குடில் என்பதைத் தெரிவித்ததால் அவர் மற்றொரு தாஜ்மஹலைத் தேடி நகர, தோராயமாய் வீட்டிலுள்ள எல்லோருக்கும் பிடிக்காத ஒரு பாடாவதி டிசைனில் மார்பிள் செலெக்ட் பண்ணி அது லோரியில் (மலையாள ட்ரைவர்) வந்திறங்கியவுடன் பாத்ரூமுக்கு யாராவது மார்பிள் இந்தக் கலர்ல போடுவாங்களா? என்ற கேள்வியில் தொடங்கி மலையாளம் மட்டுமே தெரிந்த ட்ரைவருக்கும் புரியும்படியான திட்டுக்களை வாங்கி அவருக்கு லோரி வாடகையுடன் மானத்தையும் சேர்த்து வழங்க-

வீட்டுக்கு என்ன வண்ணம் பூசலாம் என்று யோசித்த வண்ணம் பொருத்தமாயிருக்காதோ என்ற குழப்பத்தோடு அதற்குப் பொருத்தமான மின்விசிறிகளையும் மாட்டிக்கொண்டிருக்கையில் ஹே!தண்ணி வந்திருச்சே என்று கூவிக்கொண்டே ஓடும் மகனை விசித்ரமாகப் பார்த்தபடியே கைப்பள்ளத்தில் குழாய்நீரை ஏந்திப் பருகும்போது இத்தனை நாள் அலைச்சலின் தாகமும் தீர்ந்ததாய் உணர்ந்து-

எல்லோருக்கும் புதுத்துணி-ரசனை போல் அழைப்பிதழ்-குறை சொல்ல முடியாத ஆஸ்தான சமையல்காரருக்கு ஏற்பாடு- நாளைக் காலை நாடே தூங்கும் ப்ரும்ம்முகூர்த்தத்தில் என் வீட்டு க்ருஹப் ப்ரவேசம்- மாவிலைத் தோரணம்-வாழைமரம்-செம்மண்கரையோடு மாக்கோலம்-இளம் பசுங்கன்றின் முதல் ப்ரவேசம்-வீடெல்லாம் சுழன்று வந்த ஹோமப்புகையுடன் கலந்த மல்லிகையின் மயக்கும் சுகந்தத்தை மனைவியின் புடைவைத் தலைப்பில் முகர்ந்தபடி மிதக்கையில் மறுபடியும்

“ஸார்வாள். இந்தப் ப்ளாட்ட வாங்கும்போது பக்கத்துல ஓடற சாக்கடைக்கால்வாயைப் பாக்கத் தவறிட்டீஹளோ?”ன்னு அப்பாவின் நண்பர் தாணுமாலயனும் ”ஏன் சமையல் மேடை இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாமோ ரமா? நீ அவர்ட்ட இதப் பத்திப் பேசலியோ?- என்று என் மனைவியின் தோழி நந்தினியும் “கல்கண்டு பாத் ஓக்கே. ஆனா இட்லிக்கு சட்னி சாம்பார்தான் நீடில்கான்னு நினைக்கிறேன்”- ன்னு என் வம்புக்கார அத்தையும் “ஜன்னல்லாம் ஏண்டா இத்தன பெருசா வெச்சுருக்கேன்னு கேட்டா ஃப்ரென்ச் விண்டோன்னா அப்பிடித்தான் இருக்கும்ப்பா. நல்ல வெளிச்சம் வரும்கறான். திருடனும்தான்னேன் நான்”- என்று அப்பாவும் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்க கேள்விகளெல்லாம் ஹீனஸ்வரத்தில் என் காதுகளை வருடிக்கொண்டிருந்தது.
( ஒரே வரீல எப்பிடி நம்ம வீட்டைக் கட்டினோம்னு சொல்லுப்பா என்ற என் மகளின் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டேன்.)

8.12.10

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்


அ) பாலில் தேயிலையைப் போட்டு நன்றாகக் கொதிக்கும்போது நான்கு புதினா இலையைப் போட்டு பின் வடிகட்டி குடித்துப் பார்த்தால் புதினா இலை சற்று சுருங்கியிருக்கும்.

ஆ) எந்த சட்னியைத் தாளிக்கும்போதும் ஒரு சிட்டிகை பெ.தூள் போட்டுத் தாளித்தால் பெருங்காயம், மூட்டுவலி முதலானவை காலியாகும்.

இ) கொத்துமல்லியை ரசம் சாம்பாருக்கு குணசித்திர வேடங்களுக்கு மட்டுமே டெல்லிகணேஷ் போல உபயோகப்படுத்துவோம். மாறுதலாக மற்ற கீரைக்கூட்டுக்கள் செய்வது (தெரியாதவர்கள் விலகவும்) போல கொத்துமல்லியையும் கூட்டு செய்தால் வீட்டில் எல்லோரும் ஹையா என்று குதித்துக்கொண்டே சாப்பிட சிலர் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவார்கள்.

ஈ) கொய்யா இலையை துளிராகப் பறித்து தேவையான மிளகாய், புளி, உப்பு, உளுத்தம்பருப்புடன் தங்க நிறமாக வறுத்து அரைத்துச் சாப்பிட மறுப்பவர்களுக்குக் கொய்யாப்பழம் காய்த்தவுடன் தரமுடியாது என்று சொல்லி மிரட்டி சாப்பிட வைக்கலாம்.

உ) நன்கு சிவந்த ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரில் போட்டுக்குடித்துவர புத்துணர்ச்சியுடன் ( கவிதைகள் எழுதுபவர்களுக்கு) வருத்தமும் உண்டாகும்.

ஊ) பாலில் மஞ்சள் தூள், பனைவெல்லம், மிளகுத்தூள் போட்டுக்காய்ச்சிக் குடித்தால் சளி இருமல் சரியாகி பாட்டுப்பாடத் தோன்றும். கேட்பவர்களுக்கு ஓடத் தோன்றும்.அப்படியும் சரியாகாவிட்டால் சித்தரத்தை மற்றும் அதிமதுரம் (இவங்க ரெண்டு பேரும் ஒண்ணுவிட்ட அத்தை இல்லீங்க. நாட்டு மருந்துக்கடைல கிடைப்பாங்க) வாங்கி நன்கு தட்டி நீருடன் கொதிக்கவைத்து கண்ணையும் மூக்கையும் மூடி வாயைமட்டும் திறந்து குடிக்கவும். என் இருப்பிடம் தெரிந்துகொண்டு நேரில் வந்து அடிக்கவும்.

எ) ஓடும் மூக்குள்ள போது ( அதாங்க ரன்னிங் நோஸ் அல்லது மூக்கொழுக்கு) தலையணையை ட்ராக்‌ஷன் கொடுத்து தலையை உயர்த்தவும். ஓடும் மூக்கு சரியாகி மறுநாள் லேசாகக் கழுத்துவலிக்கும்.

ஏ) தலைவலியா? தலைவலிக்குப் பல காரணங்கள் உண்டு. தொடர்ந்து பேசுவதால்-தண்ணீர் தேவையான அளவு பருகாததால்-இரவு தூக்கமின்மையால்-மழையில் நனைந்ததால்-வெயிலில் காய்ந்ததால்-கோபத்தால்-ஒலியால்-ஒளியால்-பயணத்தால்-இந்த மாதிரி எழுத்தைப் படித்ததால் என்று. எதனால் தலைவலி என்று யோசித்துப் பார்த்து விடை கிடைக்கும்போது தலைவலி போயிருக்கும்.

ஐ) தயிரால் செய்யப்படும் அவியல், மோர்க்குழம்பு, சேனைக் கிழங்கு எரிசேரி(தெரியாதவர்களுக்கு அப்றம் சொல்றேன்) போன்றவற்றிற்குத் தாளிக்கும்போது தேங்காய் எண்ணையை உபயோகிக்க கூடுதல் மணமும் குறைவாகத் திட்டும் கிடைக்கும்.

ஒ) தொண்டை கரகரப்பாக இருந்தால் தண்ணீரில் சீரகம் போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கவும். வயிற்றுச் சூட்டுக்கு வெந்தயம் உள்ளங்கையளவு வாயில் போட்டு மோருடன் விழுங்க நீண்ட நாட்களாக உபயோகிக்காமல் இருந்த இவ்விரண்டு அஞ்சறைப் பெட்டி (இது இப்போ இருக்கா?) சாமான்களும் காலியாகும்.

ஓ) சர்க்கரைக்கு எறும்பு வரும். அது அதோட உரிமை. அதில் நீங்கள் தலையிட விரும்பினால் ரெண்டு கிராம்பை சர்க்கரை டப்பாவில் போட்டுவைக்கவும். ஓஹோ இவங்களும் நமக்கு இது பிடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டாங்களா என்ற கடுப்புடன் பக்கத்திலிருக்கும் கடலைமாவுக்கு தன் ரூட்டை மாற்றும். விட்டுடுங்க போயிட்டுப் போவுது.

ஔ) ஓ வரைக்கும் எழுதிட்டு ஔ எழுதாமப் போனா எப்படின்னு ஔ போட்டுட்டேன். ஆனா ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குது மறதில. அதுக்குக் கூட வல்லாரைக்கீரை இருக்குல்ல அதக் கூட்டோ பொரியலோ பண்ணிச் சாப்பிட்டால் ஔ போட்டுவிட்டு என்ன எழுதுவது என்று மறக்காது.

இன்னைக்கு இது போதும்னு நினைக்கிறேன்.
ஒரு ஸ்வாரஸ்யத்துக்காக கொஞ்சம் வில்லங்கமா எழுதிட்டேன்.
ஆ)மட்டும் பொய். மூட்டுவலி குணமாகாது.
எல்லாமே உபயோகத்துக்குட்பட்டதுதான்.
நான் பயன்படுத்தி அனுபவித்த விஷயங்கள்தான்.
ட்ரை பண்ணுங்க நீங்களும்.
(படத்துக்கான விளக்கம்: அட்றா சக்க! எப்படில்லாம் படுத்தறாண்டா இந்த சுந்தர்ஜி என்று பக்கத்துவீட்டுத் தாத்தா மூக்கின் மேல் விரலை வைத்தபோது ஓடிப்போய் ரகசியமாக எடுத்தது.)

7.12.10

ஜுடுக்கு மற்றுமொரு கவிதை


”லேய் மக்கா. இந்தப் பின்னூட்டம்லாம் எனக்குப் போட வராதுலே. ஆனா நீ எழுதுனதுலியே இதாம் மாப்ள நச்சுனு இருக்கு. இன்னோண்ணு இது மாதிரி எழுதுலே”- ஜூடு இளங்கோ.

இவன் நக்கலடிக்கிறானா நெஜம் சொல்றானான்னு ஒரு முடிவுக்கு வரமுடீல. ஆனா பாவம் ஊரெல்லாம் சுத்திட்டு ஓஞ்சுபோய் வந்திருக்கானேன்னு ”கடைசிக் கடைசியா இது. இனிமேக் கிடையாது மக்கா”-நான்.

பொண்ணு பார்க்கக் கிளம்பும் இரு நண்பர்களின் கதையிது.

போடா பொழப்பத்தவனே ஓடிப்போய் வாங்கியாவொரு
சோடா புளிச்சேப்பம் தாங்காம ஜர்தா- பீடாவும்
ஒண்ணு அரைச்சு முழுங்கிட்டேன் என்னசெய்ய
பொண்ணு பாக்கப்போகணும் நான்.
வண்டி என்னாச்சு பாத்துட்டுவா பரமசிவம்
கிண்டிக்கு ரயில்ல தொத்திக்கிட்டுப் போயிருப்பேன்
சண்டிக் குதிரையா ஆயிடுச்சு ஏம்பொளப்பு
விண்விண்னு தெறிக்குதே தலை.
பைக்கு ரெடியண்ணா பளபளன்னு புதுசாட்டம்
கைக்கு வரவே மணிநாலாச்சு - மைக்கு
மண்டையன் கிட்ட விடாதேயினி சர்வீஸு
சண்டையான சண்டை போ.
ஏறி ஒக்காரு படுவெரசாப் பறந்திடலாம்
நாறிப்போச்சு ராகுகாலம் வந்திடுமோன்னு - சீறிப்
பாஞ்சேன் மதுரவீரன் எம்ஜியாரா ஹைவேல
மாஞ்சாவப் பாக்காம ஐயோ.
தலமேல இருந்த ஹெல்மெட்டுத் தரைமோத
மல போல வந்த சாவு கடுகாச்சு- கலகலத்து
ரத்த பூமில மறுபடியும் நாம் பொறந்திருக்கேன்
சத்தங்காட்டாமப் போ.

(பி.கு(1):அப்புறம் அவன் பொண்ணு பாக்கப் போனானா போவலியாலே என்றான் ஜூடு. நான் விடு ஜூட் என்று பறந்துவிட்டேன்.)
(பி.கு(2): இந்த பைக்தான் அண்ணனும் பரமசிவமும் ஓட்டியது. விபத்துக்கு முன் பெண் பார்க்க விரையும் முன் எடுத்த படம். அண்ணன் முகம் தெரியாத அளவு பேண்டேஜ். பரமசிவமும் சத்தங்காட்டாமல் போனதால் படம் கிடைக்கவில்லை.)

6.12.10

ஜுடுக்கு ஒரு கவிதை


”எப்பவும் ஒரே மாதிரி எளுதிகிட்டு. கொஞ்சம் வேறமாதிரி ஏதாவது எளுதுடா மக்கா” என்றான் மரைன் இஞ்சினியராய் உலகத்துக் கடலெல்லாம் (தமிழே) பேசாமல் வறுபடும் என் கன்யாகுமரி நண்பன் ஜூடு இளங்கோ (jude ilango). அவனுக்காக இது.

வழக்கமாய் ரிக்‌ஷாவில் போய்த் திரும்பும் பிஸ்தா ஒருவர்(படத்தில் இருப்பவர் பிஸ்தாதான்.நம்பவும்.) ஆட்டோவில் போய் வீடு திரும்பி நொந்துபோய் தலைவலியோடும் தன் மனைவியோடும் புலம்பத் தொடங்கும் வேளை.

ஆட்டோவில் போனாலே பொல்லாத தலைவலிதான்
பாட்டோடு பேச்சும் லொடலொடக்க - கேட்டோரம்
போட்டானே மணி நேரம் போகவளி தெரியாது
கேட்டேனே பாட்டெல்லாம் குத்து.

சொன்னபடி கேட்டிருந்தா சொகமா போயிருப்ப
தின்னசோத்துக்கு தண்டனையா சூடான - பன்ன
கவ்விக்கிட்டு முளிக்கிற புள்ளயாட்டம்
தவ்விப் பொலம்பாமத் தூங்கு.

நெனச்சாலே வந்துருமா தூக்கம் ஏபுள்ள
கனச்சுக்கிட்டே இருக்க களுத கணக்கா- நனச்சு
முடி துணியெல்லாம் மள இப்போ விட்டுருச்சு
அடிச்சுப் போடுவேன் ஆமா.

அடிப்ப மிதிப்ப வேறென்ன பொளப்பொனக்கு
குடிப்ப கண்ணுமண்ணு தெரியாம- கடிப்ப
கருவாடோ மீனோ என்ன கருமாந்தரமோ
ஒருபாவம் அறியேன் நான்.

சும்மா ஒருஜாலிக்கு ஒன்ன வம்பிளுத்தா
அம்மா ஐயோன்னு பொலம்பாத பேசாம- கம்மாக்
கர மீங்கொளம்பும் சுடுசோறும் இட்டாந்தா
பரக்காம திம்போம் இப்போ.

(தாங்கமுடியாது போனால் ஜூடு இளங்கோவை சபித்துவிட்டு அடுத்த பதிவுக்குக் காத்திருக்கவும். எலே மக்கா ஜூடு எங்கலே ஓடுத. கொஞ்சம் நில்லுடே. வாரேன். நில்லு நில்லு.)

தூரிகையின் மௌனம்-II


தூரிகையின் மௌனம்- I ன்தொடர்ச்சி-

கிட்டத்தட்ட நீங்கள் விலகி தனித்துப் போய்விட்டீர்களா?
-இல்லை. அப்படி நான் தனித்துப் போய்விடவில்லை. நானே தனிமையாகிவிட்டேன்.

இப்படி எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்?
-தில்லிக்கு நான் வந்தது முதல்.

எப்போது அது?
-1972ல்.

அப்போது முதலே இப்படித்தானா?
-ஆம்.1972ல் இருந்து. ஆனால் ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக கண்காட்சிகளுக்கும் கூட்டங்களுக்கும் போய்க்கொண்டிருந்தேன். என் உடல்நிலையை அது மோசமாகப் பாதிக்கத் தொடங்கியது. அது முதல் எங்கேயும் போவதைக் கட்டுப்படுத்தி கொள்ள முடிவெடுத்தேன். நிசப்தம் என்னைக் கவர்ந்துகொண்டது அப்போதுதான்.

ஆனால் மௌனம் என்பது சிருஷ்டியின் இறுதிப்படி இல்லையே? மௌனத்திற்கும் அதற்கேயுரிய கலாப்பூர்வமான மொழி உண்டுதானே?
-ஆமாம்.ஆனால் பரிபூர்ண மௌனத்தின் போதுதானே தவிர ஒருவன் தன் வாயை மூடிக்கொள்ள விரும்புவதால் ஏற்படும் மௌனத்தால் அல்ல. ஒரு படைப்பில் அது வெளிப்படும் நேரத்தில் மௌனத்துக்கு சிருஷ்டிப்பூர்வமான ஒரு பரிமாணம் இருக்க வேண்டும். ஒரு கலாப்பூர்வமான ப்ரகடனத்தை அந்த மௌனம்தான் உருவாக்குகிறது. அங்கே நீங்கள் பேசத்தேவையில்லை. ஒரு சிறு வார்த்தையைக்கூட நீங்கள் உதிர்க்கத் தேவையிருக்காது.அந்த மௌனத்தை உங்கள் சிருஷ்ட்டியில் உருவாக்கிவிடமுடியும். என் நிசப்தம் வேறுவகையானது.

உங்கள் சிருஷ்ட்டியின் மூலம் உங்களின் நிசப்த மொழியை உங்களால் பேச முடியாதா? படைப்பிலிருந்து முழுமையாய் விலகியிருப்பதை விட அது நல்ல வழியில்லையா?
-மௌனம் என்பது ஒன்றுதான். வடிவம்தான் வேறு வேறு.

ஒரு ஓவியனால் நிசப்தத்தைக் கலாபூர்வமாக மொழிபெயர்ப்பது சாத்தியமா?
-வலிந்து அது சாத்தியமில்லை. ஒரு கான்வாஸில் வலிந்து ப்ரக்ஞையுடன் வெளிப்படுத்த சாத்தியமேயில்லை. ஆனால் ஒரு ஓவியத்தைப் பார்க்கும்போது உங்களால் நிசப்தத்தை உணர முடியும். தங்கள் மௌனத்தை அற்புதமான தொடர்பை உண்டுபண்ணும் கவிதைகளில் சாதித்த தாமஸ் மெர்ட்டன் போன்ற வாய் திறவாத துறவிகளும் இருந்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பேசுவதில்லை. ஒரு போதும் பேசாதவர்கள். நான் பேசுவேன். நான் பரிபூர்ணமாகத் தனித்துப் போனவனில்லை. நான் மக்களைச் சந்திப்பதுண்டு. பேசுவதுண்டு. நான் ஒரு போதும் வெளியே போவதில்லையே தவிர என்னை பார்க்க வருபவர்களிடம் பேசுபவன். ஒருவேளை நிறையப் பேசாமலிருக்கலாம். அது பேசாமலிருப்பதைப் போன்றதல்ல. மக்களிடம் நான் பேசுகிறேன். அரசியல் சினிமா போன்றவற்றை ஒருபோதும் விவாதிப்பதில்லை. ஆனாலும் பேசுவேன். அவ்வப்போது என்னைப் பார்க்க வருபவர்களிடம் பேசுவேன். நான் பேசுவதற்கு அதிகமாக எதுவுமில்லை என்பதும் எனக்குத் தெரியும். என்னை நம்புங்கள்-நிஜமாகவே நான் சொல்வதற்கு அதிகமாக எதுவுமில்லை. அதனாலேயே நிசப்தத்தில் அமிழ்வதை நான் அனுபவிக்கிறேன். இன்னொருவருடன் நீண்ட நேரத்திற்கு மௌனமாக ஒரு வார்த்தை கூட உதிர்க்கும் அவசியத்தை உணராது இருக்க என்னால் முடியும். ஒருவருக்கொருவர் மற்றவரின் மௌனத்தை அனுபவித்தபடி இருக்க முடியும்.

நீங்கள் கடைசியாக ஒரு முழு ஓவியத்தை வரைந்தது எப்போது?
- எல்லா கான்வாஸ்களும் எல்லை நிர்ணயத்துக்குட்பட்டவை. ஒவ்வொரு பிரச்சனையும் வெவ்வேறானவை. ஒவ்வொரு ஓவியமும் வெவ்வேறான ஓவியங்கள்.

ஆனால் நீங்கள் கடைசியாக வரைந்தது எப்போது?
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என நினைக்கிறேன். கூடவும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்?

அதன் பின்னே எதுவும் ஓவியங்கள்?
- கொஞ்சம் செய்தேன். ஆனால் எதுவும் இங்கில்லை. எல்லாம் விலைபோய் விட்டன.இங்கே எதுவுமில்லை. நீங்களே பாருங்கள் என் அறையின் வெறுமையை.

இந்த ஓவியங்கள் சொல்வது அல்லது தேடுவது எதை?
- இயக்கத்தை-லயம் நிறைந்த இயக்கத்தை.

இயக்கத்தை வெறுக்கும் நீங்கள் உங்கள் ஓவியங்களில் ஏன் இயக்கத்தை நாடுகிறீர்கள்? அல்லது நீங்கள் நேரடியாக நிறைவேற்ற விரும்பாத உங்கள் தேவைகளை உங்கள் ஓவியங்கள் நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?
-ஆமாம். வாழ்க்கையை இப்படித்தான் சமாளிக்கமுடியுமென நான் நினைக்கிறேன்.

(தொடரும்)

5.12.10

அதனதன் இடம்


அதனதன் இடம் அதனதற்கு.
இசைக்குக் காற்று.
அமைதிக்கு மலை.
புதிருக்கு வனம்.
நகர்வுக்கு நதி
என்பதே போல்-
துளிர்த்தெழ மன்னிப்பும்
மன்னிக்க ஞானமும்
ஞானத்திற்குப் பணிவும்
பணிவுக்கு எளிமையும்

எளிமைக்குத் துறப்பும்
துறப்புக்குத் தெளிவும்
தெளிவுக்குத் திறப்பும். 

காப்பதற்கு மெய்யும்
அழிப்பதற்குப் பொய்யும்
பொறுப்பதற்கு பூமியும்.
நெடுவழி கடக்க
நாணயமும் நேர்மையும்-
நெடுதுயில் ஆழ்ந்தபின்
நிலைப்பதற்குக் கொடையும்.

3.12.10

உருமாற்றம்


இன்றும் நினைவில் நிற்கும் சில மொழிபெயர்ப்பு நாவல்கள் பற்றி என் நினைவு ஓடுகிறது.

இந்த நாவல்கள் என்னில் என்ன மாறுதலை ஏற்படுத்தியிருக்கின்றன என்றெண்ணும் போது அடைபட்டிருந்த இருண்ட மாளிகையின் ஒவ்வொரு சாளரமாகத் திறக்கும் காட்சி கண்முன் தோன்றுகிறது.

மற்ற மொழியில் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறியவும் இது அளவுகோலாக இருக்கிறது.

குறிப்பாக க.நா.சு. மொழிபெயர்ப்புக்கீடாக இன்னொரு மொழிபெயர்ப்பைச் சொல்லமுடியுமா தெரியவில்லை.

அத்தனையும் அமிர்தம். அவர் மொழிபெயர்த்த மதகுரு, பசி மற்றும் நிலவளம் இன்றைக்கும் ஆனந்தச்சுரங்கம்.

ஒவ்வொரு நாவலாக அவற்றின் கதைச் சுருக்கம் சொல்லலாம் என்று முதலில் தோன்றியது.

பிறகு படிக்கும் ஆர்வத்தை அது தூண்டாது மாறாக தாண்டிச்செல்லும் சௌகர்யத்தை உண்டாக்கிவிடும் என்று பட்டதால் அந்த நினைப்பைக் கைவிட்டுவிட்டேன்.

வாசிக்கும் வெறிபிடித்தவர்கள் நிச்சயம் தவற விடக்கூடாத பொக்கிஷங்கள் இவை.

ஒவ்வொன்றையும் குறைந்தது எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று சொல்லத்தெரியவில்லை.

அவை உங்களின் குணம் மேன்மையுறவும் உங்களில் கடவுள்த்தன்மை குடிபுகவும் உதவுமென்று சத்தியம் பண்ணுவேன்.

அந்தப் பட்டியல்:

கறையான்-சிர்ஷேந்து முகோபாத்யாய்-வங்காளம்
வெண்ணிற இரவுகள்-தாஸ்தயேவ்ஸ்கி-ருஷ்யா
குற்றமும் தண்டனையும்-தாஸ்தயேவ்ஸ்கி-ருஷ்யா
என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது-வைக்கம் பஷீர்-மலையாளம்
தந்தையும் தனயர்களும்-இவான் துர்கேனிவ்-ருஷ்யா
நிலவளம்-நட் ஹாம்சன் - நார்வீஜியன்
பசி-நட் ஹாம்ஸன் - நார்வீஜியன்
சித்தார்த்தா-ஹெர்மென் ஹெஸ்ஸே-ஜெர்மன்
நீலகண்டப் பறவையைத் தேடி-அதின் பந்தோபாத்யாய் - வங்காளம்
இலட்சிய இந்து ஹோட்டல்-விபூதிபூஷண் பந்தோபாத்யாய்-வங்காளம்
சம்ஸ்காரா-யு.ஆர்.அனந்தமூர்த்தி-கன்னடம்
செம்மீன் -தகழி சிவசங்கரப்பிள்ளை-மலையாளம்
ரஸவாதி-பாவ்லோ கோய்லோ- பிரேசில்
தாய்-மாக்ஸிம் கார்க்கி-ருஷ்யா
கினு கோனார் சந்து-சந்தோஷ்குமார் கோஷ்-வங்காளம்
மதகுரு-ஸெல்மா லாகர்லேவ்-ஸ்வீடிஷ்
முதியவனும் கடலும்-ஹெமிங்வே- அமெரிக்கா
வங்காள இரவுகள்-மிர்ச்சா எலியாதே-ருமேனியா. (இது நான் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பது-மூலம் ஆங்கிலத்தில் கிடைத்தால் படியுங்கள்.புதுப் புத்தகம் கிடைக்காது)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...