5.12.10

அதனதன் இடம்


அதனதன் இடம் அதனதற்கு.
இசைக்குக் காற்று.
அமைதிக்கு மலை.
புதிருக்கு வனம்.
நகர்வுக்கு நதி
என்பதே போல்-
துளிர்த்தெழ மன்னிப்பும்
மன்னிக்க ஞானமும்
ஞானத்திற்குப் பணிவும்
பணிவுக்கு எளிமையும்

எளிமைக்குத் துறப்பும்
துறப்புக்குத் தெளிவும்
தெளிவுக்குத் திறப்பும். 

காப்பதற்கு மெய்யும்
அழிப்பதற்குப் பொய்யும்
பொறுப்பதற்கு பூமியும்.
நெடுவழி கடக்க
நாணயமும் நேர்மையும்-
நெடுதுயில் ஆழ்ந்தபின்
நிலைப்பதற்குக் கொடையும்.

12 கருத்துகள்:

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

//நடுவழி கடக்க
நாணயமும் நேர்மையும்
நெடுதுயில் ஆழ்ந்தபின்
நிலைப்பதற்குக் கொடையும்//

அற்புதமான வரிகள்..படத்தேர்வு அருமை

ரிஷபன் சொன்னது…

அதனதன் இடத்தில் அழகாய்.. இயல்பாய்.. பொருந்தி நிற்கின்றன.

நிலாமகள் சொன்னது…

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தேர்ந்தவர் ஜி நீங்கள்!

ஹ ர ணி சொன்னது…

நடுவழி கடக்க நாணயமும் நேர்மையும்...மனித வாழ்வின் தகுதியான வரிகள். பலருக்கு விட்டுப் போயிருக்கும் இந்தப் பண்புகளை மீட்டெடுத்து பந்தி பரிமாறியிருக்கிறீர்கள். நநன்றி.

santhanakrishnan சொன்னது…

பிறப்பிற்கும்,இறப்பிற்குமான
நடுவழி கடக்க நாணயமும்,நேர்மையும்
என்பதெனில் அற்புதம் ஜி.

ஹேமா சொன்னது…

அது அது அந்தந்த இடத்தில் இருந்தால்தான் அழகு.
இல்லாவிட்டால் எங்களைப்போல அகதிகள்தானே !

சுந்தர்ஜி சொன்னது…

அருமையான ரசனை திருநாவுக்கரசு பழனிசாமி.

படத் தேர்வில் உங்களை மிஞ்சமுடியுமா?

சுந்தர்ஜி சொன்னது…

சுருங்கச் சொன்னாலே புரிந்து கொள்வதுதான் கடினம்.

உங்களின் தரம் அப்படிப்பட்டது நிலாமகள்.

சுந்தர்ஜி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி ரிஷபன்.

எப்போதும் நேர்த்தியான விமர்சனம் உங்களது.

சுந்தர்ஜி சொன்னது…

நம்மைப் போல் சிலரிடம் இது வண்டலாய் என்றும் தங்கியிருக்கும் ஹரணி.

உயர்வான பண்புக்கும் அதை மதிப்பதற்கும் என் நன்றி ஹரணி.

சுந்தர்ஜி சொன்னது…

அதேதான் மது.

அதிலென்ன சந்தேகம்?

அதுதானே அருமருந்து.

சுந்தர்ஜி சொன்னது…

எப்போதுமே உங்களின் எல்லா எழுத்துக்களின் அடியில் இந்தச் சோகம் தடவப்பட்டிருக்கிறது ஹேமா.

தாய் மண்ணை இழந்த சோகம் வேறொன்றால் நிரப்பமுடியாதது.

உங்களின் ஆறாத வடுவுக்கு எது மருந்தாகமுடியும்?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...