31.10.10

புராதனம்


என் காதிடுக்குகளில்
சிகரங்களின் துகள்.

கரைத்ததென்னை
ஆதிகாலத்தின் மாமழை.

வீட்டு முற்றமெங்கும்
மூடுகிறது
நேற்றின் வான்வெளி.

மேலே படர்கிறது
யுகங்களின் காற்றுண்ட
நாளையின் ஊழிச்சுடர்.

கடந்து செல்கிறேன்
நொடியில்

மிகப் புராதனக் கோப்பையில்
காலம் பருகியபடி.

28.10.10

ஹரித்வார்-I


மாபெரும் காமன்வெல்த் ஊழலுக்கான ஆயத்தங்களில் தன்னைக் கூர்படுத்தியபடி சோம்பேறியின் மெத்தனத்தோடு தயாரானபடியிருந்தது போன வருஷம் புது தில்லி-நான் என் அக்டோபரைச் செலவழித்தபோது.

அங்கங்கு இஷ்டப்படி பள்ளம்தோண்டி இஷ்டப்படி பாலம் கட்டி இஷ்டப்படி செலவுக்கணக்கு எழுத பிஹாரித் தொழிலாளர்கள் உதவினார்கள் கல்மாடி தொடங்கி மொட்டைமாடி வரைக்கும்.
ஒரு சின்னத் தூறலுக்கே ’நசநச’ என்ற வார்த்தையை இந்த இடத்தில் உபயோகிக்க வேண்டியிருந்தது.
எல்லா இடங்களிலும் போலியான பரபரப்போடு பாதுகாப்புக் காவலர்கள் இயங்க ஜனாதிபதி மாளிகை ஆழ்ந்த உறக்கத்தில் வீழ்ந்திருந்தது.
தண்ணீர்ப் பிரச்சனை தலைக்கு மேல் விஸ்வரூபமெடுத்திருக்க யாரும் அதைப்பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் அழுக்குத் துணியால் துடைத்த தட்டில் சப்பாத்தியையும் ருசி கெட்ட தாலையும் வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
பூங்காக்களின் ஓரங்களில் வெட்டிய கொய்யாப்பழம்-வறுத்த கடலை-பொய்ங் பொய்ங் என்று எதையோ அமுக்கி சத்தமெழுப்பும் பொம்மை என்று வியாபாரிகள் சில்லறை பார்த்துக்கொண்டிருந்தபோது ஜனாதிபதியைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் ஹரித்வார் போகும் பாதையில் பயணம் தொடங்கினேன்.
வழியெங்கும் கனரக வாகனங்கள் பாதையின் எல்லா இடங்களையும் ஆக்ரமித்தபடி உறுமிக்கொண்டிருந்தன. உத்தர்ப்ரதேஷை உடைத்து உத்தராஞ்சலைத் துவங்கி முதலீடு செய்பவர்களை வரிச்சலுகை கொடுத்து கூவியழைத்துக்கொண்டிருந்ததால் சகல முதலாளிகளும் மற்ற ப்ரதேசங்களை விட்டுவிட்டு உத்தராஞ்சலுக்கு சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ ட்ரக்குகளை அனுப்பியிருந்ததால் சாலையோரத்தில் அங்கங்கே எத்தனை பேர் குளிக்காமல் சாயா குடித்துக்கொண்டிருந்தார்கள் என்றெண்ண முடிந்தது.
ஒரு பானையில் தயிரை எடுத்துப்போனால் ஹரித்வாரில் இறங்கும் போது வெண்ணையெடுத்து விடுமளவுக்கு பல்லாங்குழியைத் தோற்கடிக்கும் நெடுஞ்சாலைப் பள்ளங்கள். குலுங்கிக் குலுங்கி (சிரிக்கவில்லை) சிரமப்பட்டோம். தில்லியின் வறட்சியைத் தாண்டி வழியெங்கும் கங்கையின் செழிப்புக்கூறும் கரும்புக்கொல்லைகள்.வேர்க்கடலைப் பயிர்கள்-கொழுத்த மாடுகள்-பால் வியாபாரம்-திரும்பிய இடமெல்லாம் முள்ளங்கி சாகுபடி.முரட்டு மனிதர்கள்-பசுஞ்சோலை நிறைந்த சூழல்.கரும்பை கிலோமீட்டருக்கு ஒரு ஆலை என்ற வகையில் பிழிந்து பாகு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள்.விவசாயத்தைத் தவிர வேறெதுவும் தெரியாததால் விவசாயத்தை எல்லாரும் ரசித்துச் செய்து கொண்டிருந்தது தெரிந்தது.
பாபா ராம்தேவ் ஒரு பெரிய விளம்பரத்தில் சட்டென்று புரியாத கோணத்தில் சிரமமின்றி ஒரு ஆசனத்தைப் போட்டபடி என்னையும் கற்றுக்கொள்ள அழைத்தார்.நேரமில்லை என்று சொல்லி அந்த விளம்பரப்பலகையைத் தாண்டிச்சென்றேன். தில்லியிலிருந்து ஆறு மணி நேரம் செலவழித்து மெல்ல நிமிர்கையில் ஹரித்வாரின் பெரும்பாலம் கண்முன் விரிந்தது.
(முடியல.நாளைக்கு மிச்சம்)

27.10.10

குணா


குணா வந்த போது நான் சென்னை திருவல்லிக்கேணி வாசி.
விடாத மழை ஒரு வாரமும்.

தூக்கமாத்திரை சாப்பிட்டும் தூக்கம் தொலைத்த வியாதிக்காரனாய் குணா பார்த்துத் தூக்கமிழந்த நாட்கள் ஒரு ஊதுவத்தியின் சுழலும் புகையாய்.

தினமும் குடையுடன் தேவியில் ஒருவாரம் விடாது என் நெருக்கமான 5 நண்பர்களும் குணாவை அருந்தினோம்.

ஒவ்வொரு நாளும் காட்சி முடிந்து அண்ணாசாலையிலிருந்து திருவல்லிக்கேணி அக்பர்சாஹிப் தெரு அறை வரையிலும் கனத்த மௌனத்துடனும் கண்களில் வடிந்து காய்ந்த கண்ணீருடனும் படுக்கையில் விழுந்தும் உறங்காத இரவுகள்.

முதல் நாள் காட்சி முடிந்து திரும்புகையில் இறுதிக்காட்சியை விமர்சித்த என் நண்பன் செல்வராஜை கன்னத்தில் அறைந்தது நினைவிலாடுகிறது.அடித்ததன் வலியை விட நான் அடிப்பேன் என்று கொஞ்சமும் நம்பாத அதிர்ச்சியில் அவன் உறைந்தது இன்னமும் எனக்கு வலிக்கிறது.

அன்று தொடங்கி இன்று வரையிலான என் பயணத்தில் இன்று வரை குறையெதுவும் காண முடியாத அல்லது விரும்பாத சிலவற்றில் குணாவுக்கு முக்கிய இடமுண்டு.

பாலகுமாரன் தன்னை அடையாளம் சொல்ல குணாவை மட்டுமே சொல்லிக்கொள்ளலாம்.

கமலும் இளையராஜாவும் அடுத்த தளத்துக்கு நுழைந்தது இப்படத்துக்குப் பின்தான் என யூகிப்பேன்.

அதே போல் என் நண்பர்களுக்குள் எந்த விவாதத்தையோ அலசலையோ ஏற்படுத்தாது ஒரு பேரமைதியில் உறைந்த அதிர்வையும், ஆனந்தத்தையும் ஒன்றாய்க் கொடுத்த அனுபவம் குணா.

ஏனிப்படி உணர்ச்சிவசப்படுகிறேன் என்றும் எனக்குள் ஏதோ ஆகிக் கொண்டிருக்கிறேன் என்றும் தோன்றுகையில் நீ எழுதுவதும் இப்படிப் பைத்தியமாய் இருப்பதும் பார்க்கப் பிடித்திருக்கிறது என்கிறாள் அபிராமி.

என் வாழ்வின் எல்லா முக்கியத் தருணங்களிலும் என்னை நனைத்து ஆசீர்வதிக்கும் மழைப்பெண்ணும் என்னுடன் கைகோர்த்து குணாவை ஒருவாரமும் ரசித்தது என் பாக்யமன்றி வேறென்ன?

எனக்குள் அணையாது எரிந்து கொண்டிருக்கிறது குணாவின் அணையாத சுடர். நிறைவாயிருக்கிறேன்.

26.10.10

மெய்I
உன்னைப் பற்றி நானும்
நம்மைப் பற்றி அவர்களும்
அவர்களைப் பற்றி எல்லோரும்
எனப் பரவுகிறது
புரளியின் சுடர்.

தலைகள் உருண்டபின்னோ
புதிய புரளி பிறந்த பின்னோ
முகமூடியை அவிழ்த்து
உயிர் பெறுகிறது யாரும் காணாத
மெய்.

II

போகிறார்கள் சிலர்
வருகிறேன் என்று.
வருகிறார்கள் சிலர்
போக விரும்பாமல்.
போகிறவர்களும்
வருகிறவர்களும்
உணர்வதில்லை
தங்கள் வசிப்பிடங்களை.

24.10.10

மேய்ப்பன்


ஒரு மேய்ப்பனாய்க்
கற்றுக்கொண்டு விட்டேன்
என் கால்நடைகளின்
மொழி குறித்தும்-
மௌனம்-
வருத்தம் குறித்தும்.

பசியும் 
அதன் துள்ளலின் திசையும்
அறிவேன்.

பயணம் எந்தத் தடம்-
இளைப்பாறுதல்
எந்த மரநிழல்-
பூரணமாகத் தெரியும்
என் கைரேகை போல்.

அவற்றின் கலவி
யாரோடு எந்த நாளில்
என்பதும் எனக்கு வெளிச்சம்.

என் போலவே
அவற்றிற்கும் தெரியும்
கழுத்தின் மேலசையும்
கசாப்புக்கத்தி குறித்தும்
நெருங்கும் இறுதிநாள்
குறித்தும்.

இருந்தும்
ஒருபோதும்
கற்றுக்கொள்ள
முடியவில்லை
-மேய்ப்பன் என்னால்-
மரணத்தின் துயர்நிழல்
பூசிக்கொள்ளாத
அதன் ஞானத்தை.

23.10.10

என் ஆணவம்


ஒரு பெரிய இறுதிநாள் தெரியாத நாட்காட்டியில் தினசரித் தாட்கள் உதிர்ந்தபடி இருக்கின்றன.

என் கடந்த பாதையை உற்று நோக்கும் போது எத்தனை தவறுகளையும்-அகங்காரமான செய்கைகளையும்-செய்திருக்கிறேன் என்று புரிகிறது.

எத்தனை விஷயங்கள் தெரிந்து கொண்டுவிட்டோம் என்று நினைக்கும்போது இன்றும் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் என் அகங்காரத்தின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறது.

பாலோ கோய்லோ சொல்வது போல் ஒரு விஷயம் நமக்குத் தெரியாது என்கிற போது நாம் எத்தனை தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்- இது தெரியாது நாமிருக்கிறோம் என்ற கூச்சத்துடன்.

ஆக நான் தினமும் கற்றுக்கொள்ள ஏராளமானவை இருக்கும்போது, என் இறுதி நாளிலும் கற்றுக்கொள்ளக் கைவராத இயலாமையுடன் தான் நான் விடைபெறுகிறேன் எனும்போது இயற்கையின் முன் நான் எத்தனை சிறியவன் என்ற அனுபவம் வாய்க்கிறது.

எனக்குத் தெரியாத- தெரிந்து கொள்ள முடியாத எத்தனை விஷயங்களின் மீது நான் சிறிதும் தயக்கமின்றி அபிப்பிராயம் சொல்கிறேன்? எத்தனை ஆணவத்துடன் எனக்குத் தெரியாததில்லை என்று மார்தட்டுகிறேன்?

ஆக நாளையும் கற்றுக்கொள்வதற்கு நான் தயாராகிறேன் எனும்போது ஆணவமற்ற ஒரு இலையின் மிதப்பு எனக்கு வாய்க்கிறது.

நினைத்துப் பார்ப்பதை விட எல்லோரும் அறிய எழுதிப்பார்ப்பது உயரியது. என் ஆணவத்தை ஒரு பறவையின் சிறகைப் போல் உதிர்க்க விரும்பும் இந்த நாள் என் இனிய நாள்.

21.10.10

வரவேற்கிறேன்

என் பழைய வீட்டிலிருந்து கூப்பிடு தூரமுள்ள புதிய வீட்டில் உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்.

புதிய வீடு-புதிய சௌகர்யங்கள்-புதிய அனுபவங்கள்-

இந்த இடமாற்றம் உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்திற்கு என் வருத்தங்கள்.

இந்தத் தளத்தில் என்னைத் தொடரும் கேஜெட்டையும் இணைத்திருக்கிறேன். நீண்ட நாள் இயலாமை அது. நிவர்த்தியாகிவிட்டது.இனி என்னையும் தொடரலாம்.

பயணத்தைத் தொடர்வோம்.

நன்றி.

19.10.10

நிராகரிப்பின் மலர்


என்றோ ஒருநாள்
ஒருவேளை சந்திக்க
நேர்கையில்


பரிமாறிக்கொள்ள
என்னிடம் மன்னிப்புக்களும் -
உன்னிடம் அவற்றை
நிராகரிக்கும் பெருந்தன்மையும் -
இருக்கலாம்.

இத்தனை நாள்
திறவாத தாழின் துரு
உன் மென் திருப்பலில் உதிர்ந்து
சேருமிடம் காட்டும்
புதிய தடம் மலரலாம்.

என் வயோதிகக் கண்களின்
விழிநீரைத் துடைக்க
நடுங்கும் உன் கைகள்
உயரலாம்.

மன்றாடி ஓய்ந்தடங்கிய
மனதின் அடுக்குகள்
அரவணைப்பின் களிம்பு
பூசத் தவிக்கலாம்.

யூகங்களும் பரிதவிப்பும்
நிரம்பித் தள்ளாடும்
இப்படியான என் இறுதிநாள்-

நிகழாத அந்தச் சந்திப்பிலும் -
அளிக்கப்படாத மன்னிப்பின்
கூரான கொக்கியிலும் சிக்கி -
நிராதரவின் வாயிலில்
கொண்டு நிறுத்த-

நிராகரிப்பின் இறுதிக்கவிதை
எழுதப்படாதே முடிந்திருக்கலாம்.

18.10.10

பெயரும் பழியும்I
சிலர் பெயரை
விட்டுச் செல்கிறார்கள்.
சிலர் பழியை
விட்டுச் செல்கிறார்கள்.
நற்பெயரைச் சுமக்கிறது காலம்.
பழியைச் சுமக்கின்றன தலைமுறைகள்.

II
பெயரில் என்ன
இருக்கிறது என்கிறான்
உறவுகள் உள்ளவன்.
பெயரில்லா வலியைச்
சுமக்கிறான் யாருமற்றவன்.

III
உன் பெயரென்ன
என்கிற கேள்விக்கு
சில சமயங்களில் சொல்ல
விருப்பமாயிருக்கிறது.
சொல்லத் தோன்றாது
போகிறது வேறு சில சமயங்களில்.
சொல்லத்தேவையில்லாது
போகிறது அபூர்வமாய்.
அத்தனை எளிதில்லை
நம் பெயர் சொல்வது.

IV
நினைவுறுத்துகின்றன
கதவுகளற்ற கல்லறைத் தோட்டத்தைப்
பழியும்-
திறந்தே கிடக்கும் தேவாலயத்தின் கதவுகளை
நற்பெயரும்.

14.10.10

அன்-பூ


அது காப்பீட்டுத் துறையை என் மதம் போல பாவித்து
உறங்கும்போதும் அதே நினைவுடன் வாழ்ந்த காலம்.
புதுப் புது உத்திகள்.யாரும் நுழையாத பகுதிகள்.
மிகவும் கடுமையான பரிகசிப்பும் ஏமாற்றங்களும்
நிறைந்த துறை. காப்பீட்டு முகவர்கள்
சினிமாக்களிலும் கதைகளிலும் வாழ்க்கையிலும்
கிண்டலாக விமர்சிக்கப்பட்டார்கள்.
ஒரு வணிகம் முடிய ஐம்பது தடவைகள்
ஒருவரை வெவ்வேறு இடங்களில்
வெவ்வேறு காலங்களில்
சந்தித்து வெற்றி கொண்ட அனுபவங்கள் எல்லாம்
ஜாடியில் ஊற வைத்த ஊறுகாய் போல
என் நினைவுகளில் அசைகிறது.
எல்லா மூடிய கதவுகளையும்
விடாது தட்டிக்கொண்டே இருப்பவர்களான
காப்பீட்டு மனிதர்களுடன்
உறவாடிய காலங்களில்
என்னை வசீகரித்த
அல்லது உருகவைத்த
அன்பின் அருமை சொல்லி
என் கண்ணீர் சிந்த வைத்த
வீடியோக்களின் இணைப்புகள்
உங்களுக்காகவும்.

ஒரு விளம்பரம்
ஒரு குறுகிய காலத்தில்
எல்லோரையும்
சென்றடையமுடியும்
என்று முகத்தில் அடித்தது
போல சொல்லும் காட்சிகள்.
இரண்டரை மணி நேர சினிமாவில்
முக்கி முக்கி கோடிக்கணக்கில்
வியாபாரம் செய்யும் முதலாளிகளுக்கு
இந்தக் காட்சிகளை அர்ப்பணிக்கிறேன்.

இவற்றிற்கு வியாக்கியானம் அளித்து இதன் உன்னதத்தைக் குலைக்க என் மனம் ஒப்பவில்லை.
அவசியம் ஒருமுறை தயவு செய்து பாருங்கள்.
எத்தனை பேரிடம் முடியுமோ பகிருங்கள்.
என்றென்றைக்குமான அன்பு மலரட்டும்.
கசியும் கண்ணீரை அது துடைக்கட்டும்.


(மேலுள்ள இணைப்புகளின் மேல் க்ளிக் செய்யுங்கள்.விளம்பரங்கள் விரியும்)

12.10.10

அதனதன் தன்மை

உன்னதமானவை உருவமற்றவை
காற்றையும் கடவுளையும் போல.

எல்லையில்லாதவை
கொடையளிப்பவை
கடலையும் அன்பையும் போல.

பயனற்றதால் பலனற்றவை 
கடல்நீரையும் 
கருமியின் செல்வத்தையும் போல.

செயற்கரியவை ஓசையற்றவை
சூரியனையும் நிலவையும்போல.

பொறுமையானவை நிரந்தரமானவை
மலையையும் மண்ணையும் போல.

சீற்றம் மிக்கவை 
அழிவு நிறைந்தவை
நெருப்பையும் நீரையும் போல.

பற்றுதலுக்கு அலைபவை 
நிலையில்லாதவை 
மேகங்களையும் வாழ்க்கையையும் போல.

8.10.10

சுவடுகளின் திசைஇப்போது
புரிந்துகொள்ள எளிதாயிருக்கிறது
பேச்சைக்காட்டிலும்
நிசப்தம்.

எழுதப்பட்ட மொழியின்
இடுக்குகளில் இருந்து
எழுத இருப்பவை.

பதிந்த சுவடுகளின்
நிழலிலிருந்து
யாத்திரையின் திசை.

தோய்க்கப்படும் தூரிகையின்
வண்ணங்களிலிருந்து
வரைய இருக்கிற
சித்திரத்தின் உயிர்.

கடவுளின் மூடியிருக்கும் கைகளில்
பொதிந்திருக்கும் ரகசியமாய்
உதிப்பிற்கும் உதிர்விற்கும்
நடுவிலான நிலை.

7.10.10

அழிசக்தி


கலவரத்தில்
உடைபட்ட கண்ணாடியின்
வழியாய் வழிகிறது
என் தேசத்தின் குருதி.
எரியும் பேருந்துகளில்
வேகிறது நாளைய
தலைமுறைக்கான
சவுக்கின் விளார்.
தகர்க்கப்படும்
பாலங்களிலும்
இருப்புப்பாதைகளிலும்
பொசுங்குகிறது
முகமற்ற குழந்தைகளின்
முதிராத கனவு.
வெட்டி வீழ்த்தப்படும்
மரங்களில் சொட்டுகிறது
பறவைகளுக்கும்
மனிதர்களுக்குமான
நிழல் தோய்ந்த பிசுபிசுப்பு.
ஆக்க காக்க அழிக்கக்
கடவுள்கள்.
அழிக்க அழிக்க அழிக்க
மனிதர்கள்.

6.10.10

உடைமுள்


நினைக்க மறந்தேன்
துவக்கத்தின் இருளில்.
மறக்க நினைத்தேன்
இடைவெளியின் சுடரில்.
நினைத்தது மறந்தும்
மறந்தது நினைத்தும்
சுற்றித் திரிகிறேன்
அந்தியின் நிழலில்.
நிரந்தரமாய்
உயிர் குடிக்கிறது
நினைவும் மறதியும்
வேர்விட்ட வாழ்வின் உடைமுள்.

3.10.10

இடைவெளி
I
நீயும் தட்டவில்லை.
நானும் திறக்கவில்லை.
நடுவில் இருந்தது கதவு.

II
பேச இயலாதவனை விடப்
பேச முடியாதவனும்
சொல்ல நினைப்பவனை விட
சொல்ல முடியாதவனும்
இருக்கும் வரை தீராது
வாழ்வின் துயரம்.

III
இயலாதவனின் கண்ணீருக்கும்
இயன்றவனின் செருக்குக்கும்
நடுவே அறைபடுகின்றன
நாட்கள்.

IV
எல்லோரையும்
நம்புபவனுக்கும்
எல்லோரையும்
சந்தேகிப்பவனுக்கும்
இடையே
சிக்கித் தவிக்கிறது மாயமான்.

V
மறுப்பவனுக்கும் ஏற்பவனுக்கும்
நடுவே பரவுகிறது
உருவமற்றவனின் சுகந்தம்.  
மெதுவாய் உயரும் திரைக்குப்
பின்னே தேடியலைந்த நிழல்.

2.10.10

இருப்புகோணத்தைப் பொருத்துச்
சுருங்கி விரியும் நிழல் போல

இருக்கும் இடத்தைப் பொருத்ததே
உயரத்தை அடைவதும்
பள்ளத்தில் வீழ்வதும்.

உதிர்க்கும் சொல்லைப் பொருத்ததே
திறந்தவை மூடுவதும்
மூடியவை திறப்பதும்.

வீசும் பார்வையைப் பொருத்ததே
மலர்ந்தவை வாடுவதும்
வாடியவை மலர்வதும்.

மலரும் கொடையைப் பொருத்ததே
இருக்கையில் மறைவதும்
மறைந்த பின் நிலைப்பதும்.

1.10.10

ராட்டினம்நிரம்பி வழிகிறது
சூதுகள் ததும்பும்
உபாயங்களின் கோப்பை.
மூடிக் கிடக்கிறது
ராஜா ராணி கோமாளியுடன்
முடிவுகள் பதுக்கப்பட்ட
ரகசியக் கோட்டை.
இற்ற கயிற்றில் தொங்குகிறது
நம்பிக்கையின் மண்கலயம்.
கரைந்தோடுகிறது
காலத்தின் கம்பளங்களில்
சந்தர்ப்பங்களின் உப்பு.
தூவப்படுகிறது
தோற்றவனின் கண்களில்
உபாயங்களின் பொடியும்,
வென்றவனின் பாதையில்
வியூகங்களின் மலர்களும். 
புன்னகைக்கிறான் கோமாளி
வென்றவன் தோற்றவன் பேதமின்றி
ராட்டினத்தின் சாறு பருகியபடி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...